Sunday, April 3, 2011

தோனி வாங்கிய சச்சின் உலககோப்பை !

ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடி களிக்க வேண்டிய தருணமிது . 1983 கு பிறகு இப்ப வாங்கும் அப்ப வாங்கும்னு எல்லா உலககோப்பை போட்டிகளையும் பசியை மறந்து , தூக்கத்தை தொலைத்து பார்த்துக்கொண்டே இருந்தோம் . 28 வருட ஏக்கம் முடிவுக்கு வந்துவிட்டது . இப்பொழுது  உலககோப்பையை வென்றே விட்டோம் . ஆனால் , இந்த உலககோப்பை சாதாரணமாக கிடைக்க வில்லை . ஒரு நீண்ட போராட்டத்திற்கு பிறகு தான் நம் கைகளை அடைந்துள்ளது . 

இந்த ஒரு உலககோப்பையை வெல்ல நாம் மூன்று இறுதிப் போட்டிகளில் வெல்ல வேண்டி இருந்தது . முதலாவது இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவையும் ( காலிறுதி ), இரண்டாவது இறுதிப் போட்டியில் பாகிஸ்தானையும் (அரையிறுதி ) , மூன்றாவது இறுதிப் போட்டியில் இலங்கையையும் (இறுதி ) வீழ்த்தித் தான் உலக கோப்பையை வென்றோம் . மூன்றுமே கடினமான போட்டிகள் தான் ,ஆனால் ,ஆஸ்திரேலியாவுடனான போட்டி தான் மிகக் கடினமாக இருந்தது . இந்த உலககோப்பை வெல்வதற்கு எந்த தனிப்பட்ட வீரரும் காரணமாக இல்லை . எல்லா வீரர்களுக்குமே வெற்றியில் பங்கு உண்டு . உலககோப்பை வெல்ல ஒரே காரணம் " அணியின் ஒற்றுமை " தான் .

மிகச் சிறப்பான பந்து வீச்சுடன் ஆட்டத்தை துவக்கிய இந்தியா , மிக மோசமான பந்து வீச்சுடன் முதல் 50 ஓவர்களை நிறைவு செய்தது . 274 ரன்களை எடுத்து விட்டு ஆனந்த கூத்தாடியது , இலங்கை .எப்படியும் இந்தியாவை வீழ்த்தி விடலாம் என்று தான் நினைத்திருப்பார்கள் .ஆனால் , அவகளின் ஆனந்தம் ,சேவாகையும் , சச்சினையும் ஆட்டமிழக்கச் செய்யும் வரையே நீடித்தது . அதன்  பிறகு ஆட்டம் இந்தியாவின் கைகளில் வந்தது . காம்பிர் மிகச் சிறப்பாக , துணிச்சலுடன் விளையாடினார் . சதத்துக்காக விளையாடாமல் அணியின் வெற்றிக்காக விளையாடினார் . அவருக்கு கோலி நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார் . பிறகு ஆட்டத்தை நம் அணித்தலைவர் , தோனி கையில் எடுத்துக்கொண்டார் . இந்த உலககோப்பையில் தனது சிறந்த ஆட்டத்தை மிக முக்கியமான போட்டியில் வெளிப்படுத்தி உள்ளார் . இறுதிப் போட்டியில் நாம் வெல்வதற்கு தோனியும் முக்கிய காரணம் . 

1983 ல் இருந்த நிலை வேறு . அன்று மிகச் சாதாரண அணியாக பங்கு பெற்று கோப்பை வென்றது இந்தியா . அது மிகச் சிறப்பான வெற்றி . அந்த போட்டியையும் இந்தப் போட்டியையும் ஒப்பிட வேண்டாம் . இந்தியாவின் மிகச் சிறந்த அணித்தலைவர் தோனி தான் . இவரது தலைமையில் இந்தியா பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது . 2007 ல் முதலாவது 20-20  உலககோப்பையை வென்று காட்டினார் . இவரது சிறந்த தலைமையால்  டெஸ்ட் போட்டிகளில் இந்தியா முதலிடத்தைப் பெற்றுள்ளது . இப்பொழுது 28 வருடங்களுக்கு அப்புறம் ஒரு நாள் உலக கோப்பையை வென்று , ஒரு நாள் போட்டி தரவரிசையிலும் இந்தியாவை முதல் இடத்தில் உட்கார வைத்துள்ளார் . இதை விட என்ன வேண்டும் .

எல்லோரையும் விட ஒருவர் மகிழ்ச்சி துள்ளலில் ஆனந்த கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார் . பேட்டிங் சாதனைகளின் ஒட்டு மொத்த குத்தகைதாரர் . அவர் , சச்சின் தெண்டுல்கர் . ஆறு உலக கோப்பை போட்டிகளில் விளையாடி , இந்த முறை மட்டுமே கோப்பையை வெல்ல முடித்திருக்கிறது . இப்போது மட்டும் வெல்லாமல் போயிருந்தால் அவரது சாதனைகளுக்கு ஒரு அர்த்தமே இருந்திருக்காது . இது அவருக்கு மிகச் சிறந்த தருணம் . 

 இதைப் பற்றி சச்சின் கூறியது  "இதை விட மேலான ஒன்றை என்னால் கேட்கவே முடியாது. உலகக் கோப்பையை வென்றது தான், எனது வாழ்வின் பெருமைமிகு தருணம். சக அணி வீரர்களுக்கு நன்றி. அவர்கள் இல்லையென்றால் எதுவும் சாத்தியமில்லை. எனது ஆனந்தக் கண்ணீரை நிறுத்த முடியவில்லை. உலகக் கோப்பையை வென்றுள்ள இந்த இந்திய அணியில் இடம்பெற்றிருப்பது மிகப் பெரிய கெளரவம். கேரி, பாடி உப்டன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி." 

எப்படியோ உலககோப்பையை வென்று விட்டோம் . இதை வென்று கொடுத்த தோனி மற்றும் நம் அணி வீரர்கள் அனைவரையும் பாராட்டுவோம் . 

எல்லோரும் கொண்டாடுவோம் !


........................... 

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms