Thursday, June 11, 2015

காக்கா முட்டை - ஒரு வாழ்வனுபவம் !


 " உண்மையில் வாழ்க்கை மிகவும் எளிதானது , ஆனால் நாம் வலியுறுத்தி அதனை சிக்கலானதாக மாற்றுகின்றோம் " - கன்பூசியஸ்.

இணையத்தின் உதவியால் உலக சினிமா ஓரளவிற்கு பரிச்சயமான சூழலிலும் தமிழ் சினிமா, இன்னமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வகையான காதல்களைச் சொல்வதிலும் , டூயட் பாடுவதிலும் ,ஓப்பனிங் சாங் வைப்பதிலும் , பஞ்ச் டயலாக் பேசுவதிலும் ,ஒரே அடியில் ஒன்பது பேரை காற்றில் பறக்க விடுவதிலும் , காமெடி என்ற பெயரில் கழுத்தை அறுப்பதிலும் , திரைக்கதையில் கவனம் செலுத்தாமலும் , முக்கியமாக கதையே இல்லாமல் படமெடுப்பதிலும் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் சூழலில் ' காக்கா முட்டை' திரைப்படம் பலவிதமான விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது.

 தமிழ் சினிமா மீது பல வருடங்களாகவே இரு விசயங்கள் மீது கோபம் இருந்து கொண்டே இருக்கிறது. ஒன்று சிறுவர்களை சிறுவர்களாக திரையில் காண்பிக்காதது. மற்றொன்று திரையில் பெண்களுக்கு முக்கியத்துவமே கொடுக்காமல் இருப்பது. கருப்பு வெள்ளை திரைப்படங்களில் சிறுவர்களுக்கும் , பெண்களுக்கும் ஓரளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். பல திரைப்படங்களில் முக்கிய திருப்பங்கள், சிறுவர் / சிறுமிகளால் ஏற்படும் வகையில் திரைக்கதை பின்னப்பட்டிருக்கும்.  வண்ணப்படங்களின் வருகைக்குப் பிறகு இந்த இரு பிரிவினரும் முக்கியத்துவத்தை இழந்ததன் காரணம் பிடிபடவில்லை . எவ்வளவோ வளர்ந்து விட்டதாகவும் , உலகத் தொழிற்நுட்பங்களை எல்லாம் இங்கே பயன்படுத்துவதாகவும் சொல்லிக் கொண்டாலும் இந்த நிலை இன்னமும் மாறவில்லை.  சிறுவர் படங்கள் என்ற பெயரில் பெரிவர்கள் நடிக்க வேண்டிய கதாப்பாத்திரங்களில் சிறுவர்களை நடிக்க வைத்து காதலையும் , வன்முறையையும் திணித்த கொடுமையும் சமீப காலங்களில் இங்கே நடந்தது.!சிறுவர்களை ஓரளவிற்கு சிறுவர்களாக காதலில் , வன்முறையில் ஈடுபடாதவர்களாக  காட்டியதற்காகவே ' காக்கா முட்டை ' யை கொண்டாடலாம். ஏதோ ஒரு திரைப்படத்தின் பாதிப்பாக இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டிருக்காலாம். ஆனாலும் எடுக்கப்பட்ட விதம் வெகு இயல்பு. ஒரு தமிழ்படத்தைத் திரையரங்கில் பார்த்துவிட்டு வெளியே வரும் போது முதன் முதலாக மிக லேசாக உணரவைத்தது இந்த காக்கா முட்டை . எல்லா விசயங்களையும் நேர்மறையாகவே காட்சிப்படுத்திய விதம் சிறப்பு .

போகிற போக்கில் கடந்து செல்கிற அதிகம் கவனம் பெறாத எளிய மக்களின் வாழ்க்கை இத்திரைப்படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக மக்கள் மட்டுமல்லாமல் பெரும்பாலான சென்னைவாசிகளே கவனிக்காத வாழ்க்கை. முதல் இரண்டு காட்சிகளே இது  வழக்கமான தமிழ் சினிமா இல்லை என்பதைச் சொல்லி விடுகிறது. பெரும்பாலான வீடுகளில் தவறாமல் இடம்பெறும் பருப்பு சாம்பாரை அந்தக் கரண்டியில் எடுத்து தட்டில் ஊற்றுவது அவ்வளவு அழகு. சிறிய காட்சி என்றாலும் இது போல யதார்தத்தைக் காண்பிக்க வேண்டும். சிறுவனுக்கு படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருப்பதும் அதன் மூலம் குடுப்பதினரால் லேசாக கேலி செய்யப்படுவதும் , காலப் போக்கில் இந்தப் பழக்கம் மாறிவிடுவதும் இயல்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சிற்றூரில் பிறந்து வளர்ந்திருந்தாலும் காக்காவின் முட்டையைப் பார்த்ததில்லை ; இந்தத் திரைப்படத்தில் பார்க்க முடிந்தது. படத்திற்கு காக்கா முட்டை என்று ஏன் பெயர் வைத்தார்கள் என்பதை தொடக்கத்திலேயே சொல்லி விடுவதால் படத்துடன் எளிதாக ஒன்றிவிட முடிகிறது. சரக்கு ரயிலிருந்து சிதறி தண்டவாளங்களில்  விழுந்த நிலக்கரித்துண்டுகளை சேகரித்து பழைய இரும்பு கடையில் எடைக்குப் போடும் பழக்கம் இருப்பதை இத்திரைப்படம் பதிவு செய்கிறது. இத்திரைப்படம் முழுவதுமே நாம் கடந்து போகிற எளிதில் கவனம் பெறாத நிறைய விசயங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தங்களின் எளிமையான வாழ்க்கையில் மகிழ்ச்சி , துன்பம் , துயரம் என்று எல்லாவற்றையுமே  இயல்பாக கடந்து போய்க்கொண்டே இருக்கிறார்கள். அந்தச் சிறவர்களின் அப்பா ஜெயிலுக்கு போனதற்காக யாரும் இவர்களின் குடும்பத்தை ஒதுக்கி வைக்கவில்லை.  அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடும் இந்த மக்களையும் சுரண்டி பிழைக்கும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதையும் இயக்குநர் காட்சிப்படுத்துகிறார். சிறுவர்கள் இருவரும் வெறும் கால்களுடன் படம் முழுக்கவே மேடு , பள்ளம் , குப்பை , கூவம் , ரயிலடி , சாலை என்று நடந்து கொண்டே இருக்கிறார்கள். இவர்களுடன் சேர்ந்து நாமும் நடக்கிறோம். இவர்களின் வாழ்வைப் போலவே திரைப்படமும்  எந்த இடத்திலும் தேங்கவேயில்லை. சினிமா ஒரு காட்சி ஊடகம் என்பதை புரிந்து கொண்டு காட்சிகளின் மூலமே நிறைய விசயங்களை வெளிப்படுத்துகிறார். இந்த சிறுவர்கள் அணியும் பொருத்தமில்லாத வெளுத்துப்போன ஆடைகள் , அன்றாட வாழ்வில் இந்த மக்கள் பயன்படுத்தும் பொருட்கள் என்று நிறையவே உண்மைக்கு நெருக்கமாக பதிவுசெய்யப்படுகின்றன.

ஏழ்மையான சூழலில் வாழ்ந்தாலும் தங்களின் சுயமரியாதையை இழக்காமல் வாழும் இந்த மக்களின் ( சிறுவர்களின் ) மீது மரியாதையை வரவழைக்கும் வகையில் சித்தரிக்கப்பட்டுள்ள விதம் பாராட்டுக்குரியது. திரைப்படக் காட்சிகள் வெகு இயல்பாக கட்டமைக்கப்பட்டிருந்தாலும் நுட்பமாக அரசியல் பேசுகின்றன. அவரவர் புரிதலுக்கு ஏற்ப இதைப் புரிந்து கொள்ளலாம். உலக வணிகமயமாக்கலின் தாக்கம் பிட்சாவை குறியீடாக வைத்து விவரிக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய சூழலில் பிறந்து வளர்ந்தவர்கள் அவ்வளவு எளிதாக வணிகமயமாக்கல் முன் வைக்கும் நவீன வாழ்விற்கு நகர்ந்து விட முடியாது என்பதையே இத்திரைப்படத்தின் கடைசி வசனம் " பிட்சா நல்லாவே இல்லடா , ஆயா சுட்ட தோசையே நல்லா இருந்துச்சு " உணர்த்துகிறது. விவசாய சூழலில் பிறந்து வளர்ந்த ஒருவர் இன்றைய வாழ்வு முன் வைக்கும் முதன்மை வேலையான குளுகுளு அறையில் இருந்த இடத்திலிருந்தே வேலை பார்க்கும் மென்பொறியாளர் பணியை மிகுந்த உழைப்பிற்கு , சிரமங்களுக்கு பிறகு அடைந்த பிறகு "சே ! இதுக்கு விவசாயமே பார்க்கலாம் " என்று நினைக்கிறார்கள் .நினைப்பதோடு மட்டுமல்லாமல் சமீப காலங்களில் கணிசமான எண்ணிக்கையில்  'இயற்கை விவசாயம் ' பார்க்க கிளம்பிக் கொண்டே இருக்கிறார்கள். நாகரிக வாழ்க்கை என்று சொல்லிக் கொண்டு தீண்டாமையை கைவிடாமல் தொடர்ந்து கடைபிடித்து வருவதை இத்திரைப்படம் அழுத்தமாக பதிவு செய்கிறது . பாரம்பரிய உடை என்று சொல்லிக் கொள்ளும் வேட்டியை கூட எல்லா இடங்களிலும் கட்டிக் கொள்ளும் உரிமையை ஒரு போராட்டத்திற்கு பிறகு தான் பெற முடிந்தது. போராடாமல் யாருக்கும் எதுவும் கிடைக்காது போல.

சில்ரன் ஆப் கெவன் உள்ளிட்ட சில திரைப்படங்களை நினைவுபடுத்தினாலும் இது ஒரு யதார்த்த சினிமா . இத்திரைப்படம் உலக சினிமாவா ? தெரியாது . ஆனால் , அசலான இந்திய சினிமா.  உலகின் வேறுபகுதிகளில் வசிப்பவர்கள் இத்திரைப்படத்தைப் பார்க்கும் போது இந்திய முகத்தைத் தெரிந்து கொள்ளலாம்.  நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் பொருளாதார தீண்டாமைக்கு உலக நாடுகள் என்ன பதில் வைத்திருக்கின்றன. தெரியவில்லை.

ஒரு வாழ்வனுபவம் அழகாக நேர்மறையாக அசலாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms