Saturday, August 20, 2016

சிவப்பு மல்லியும் ஜோக்கரும் !


ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இவ்விரு திரைப்படங்களும் வெளிப்படுத்துகின்றன. அடுத்தடுத்த நாட்களில் இத்திரைப்படங்களை பார்க்க நேர்ந்ததால் ஒப்பிட்டு எழுதவேண்டியதாகி விட்டது. கம்யூனிச கோட்பாடுகள் நிறைந்த மக்களின் உரிமைகளுக்கான போராட்டம் தான் சிவப்பு மல்லியிலும் ஜோக்கரிலும் முன்னிலை வகிக்கிறது. தலைவர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள் இரண்டு திரைப்படங்களிலும் இமிடேட் செய்யப்படுகின்றனர். இரண்டு திரைப்படங்களின் இறுதிக்காட்சியிலும் மல்லிகை வாங்கி வரும் கதாபாத்திரம் கொல்லப்படுகிறது. ஆச்சரிய ஒற்றுமையாக இவ்விரு திரைப்படங்களும் ஒரே நாளில் ( ஆகஸ்ட் 12 ) வெளியிடப்பட்டுள்ளன.

சிவப்பு மல்லி :

சிவப்பு மல்லி திரைப்படத்தில் முதலில் கவர்ந்த விசயம் , திரைப்படம் முழுவதும் விஜயகாந்த் ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரம் பறையுடன் வருவது தான். இதற்கு முன் பார்த்த திரைப்படங்களில் எந்தக் கதாபாத்திரமும் இது போல சித்தரிக்கப்படவில்லை.

கம்யூனிச கொடி படம் முழுக்க காட்டப்படுகிறது. விதவை மறுமணம் சீர்திருத்த திருமணமாக நடைபெறுகிறது. உழைக்கும் வர்க்கத்தையே சட்டையே செய்யாத முதலாளி வர்க்கம் காட்சிப்படுத்தப்படுகிறது. போராட்டங்கள் சீர்குலைக்கப்படுகின்றன. "எரிமலை எப்படி பொறுக்கும்... " , "ரெண்டு கண்ணம் சந்தனகிண்ணம் " ஆகிய பாடல்கள் சங்கர் கணேஷ் இசையமைப்பில் இடம்பெற்றுள்ளன.

விஜயகாந்த் -ன் தொடக்க கால திரைப்படமான இதிலேயே சண்டைக்காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார் , கூடவே அவரின் கண்கள் சிவக்கும் காட்சியும் உண்டு.குழந்தைகள் கற்பதன் அவசியம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.   ஆனால் வலுவில்லாத சினிமாத்தனமான காட்சிகளால் திரைப்படம் பலவீனமாகிவிடுகிறது. இராம நாராயணன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். 1981 ஆம் வெளியான இத்திரைப்படம் ஈரமல்லி என்ற தெலுங்கு திரைப்படத்தின் மறுஆக்கமாம்.

ஜோக்கர் :

அரசியல்வாதிகளுக்கும் , அதிகாரத்தில் இருப்பவர்களையும் மிக துணிச்சலான சாட்டையடி வசனங்களால் இத்திரைப்படம் கேள்வி கேட்கிறது. நிஜ உலகில் ஆற்றாமையில் , விரக்தியில் , கோபத்தில் , அக்கறையில் நாம் பேசும் வசனங்களை நமக்குப்பதில் மற்றொருவர் திரையில் பேசுவது போல அமைந்துள்ளது. செழியனின் கோணத்தில் கிராமத்து காட்சிகள் மிக இயல்பாகவும் எதார்த்தமாகவும் படம்பிடிக்கப்பட்டுள்ளன.

மெல்லிய காதல் காட்சிகள் ரசிக்கும்படி உள்ளன. நல்ல குரல் , திருத்தமான வசன உச்சரிப்பு , இயல்பான உடல்மொழி என பவா செல்லத்துரையின் கதாப்பாத்திரம் மனம் கவர்கிறது. "நமக்கு பிச்சவங்க அன்புக்கு சமானமா இந்த உலகத்துல ஒண்ணுமே இல்ல " , " கொடுக்கலைனா எடுத்துக்கணும் டா ! அதான் பவர் "  எனும் பவாவின் குரல் இன்னும் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

ஆலேலுயா பாடலின் போது திரையரங்கில் எல்லோரின் கண்களிலும் கண்ணீர் கசிந்தது. " ஒரு கழிப்பறை கட்ட நினைச்சது குற்றமாடா ! அதுக்கு இப்படி ஒரு நிலைமையாடா ! " என்று ஆழ்மனசு கதறுகிறது. இந்தக் காட்சிக்குப் பிறகு காட்சிகள் மிகவும் சோகமயமாகவும் , நாடகத்தனமாகவும் மாறுவதால் படத்துடன் ஒன்ற முடியவில்லை. இல்லையென்றால் இன்னும் நல்ல அனுபவம் கிடைத்திருக்கும்.

ஒரு எழுத்தாளின் பார்வையில் உருவாக்கப்பட்டதால்  மற்ற திரைப்படங்களை விட இத்திரைப்படம் நிறைய இடங்களில் மாறுபட்டிருக்கிறது. நிறைய காட்சிகளில் சமுக அக்கறை வெளிப்படுகிறது. அந்த வகையில் ராஜூமுருகனை நாம் பாராட்ட வேண்டும். போதாமைகள் இருந்தாலும் இம்மாதிரியான படைப்புகளுக்கான தேவை நம் சூழலில் அதிகமாகவே இருக்கிறது.

"இதுக்கு பஜாரில் லாட்ஜ் எடுத்து பிராத்தல் பண்ணிப் பிழைக்கலாம் " எனும் வசனம் இத்திரைப்படத்தின் இறுதிக்காட்சியில் இடம்பெறுகிறது. ஆணாதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடு தானே இது.அதுவும் ஒரு எழுத்தாளர் இயக்கிய திரைப்படத்தில் இடம்பெற்ற இவ்வசனம் அதிர்ச்சியையும் , நெருடலையும் ஏற்படுத்தியது. இவ்வசனத்திற்காக ராஜூமுருகனுக்கு நாம் கண்டனம் தெரிவிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

தமிழ் திரையுலகம் இன்னமும் பெண்களைக் கேவலமாகவே சித்தரித்து வருகிறது.திரைகளில் பிகரு , பீசு என்றே அழைக்கப்படுகின்றனர். இந்த மனநிலை மாற வேண்டும். பெண்களை சக மனுஷியாக மதித்தாலே போதும் , நாம் எதிர்பார்க்கும் சமூக மாற்றம் தானாகவே நிகழ ஆரம்பித்துவிடும்.

சிவப்பு மல்லியும் ஜோக்கரும் !

................................................................................................................................................................

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms