Pages

Tuesday, November 23, 2021

ஜெய்பீம் -அறத்தின் குரல் !



ஜெய்பீம் அறம் என்ற நெருப்பை பற்ற வைத்திருக்கிறது. அந்த நெருப்பு, பற்றி எரிவதும் புகைந்து போவதும் நம் கைகளில் தான் இருக்கிறது. சமீப காலங்களில் மற்ற மொழி திரைப்படங்களையே அதிகம் கொண்டாடி இருக்கிறோம். தமிழ் திரைப்படங்கள் இன்றும் மிகவும் பின்தங்கியே இருக்கின்றன. மிகவும் பிற்போக்கான விசயங்களையே தொடர்ந்து முன்னிலைப்படுத்துகின்றன. நாயகத்துதிபாடல் இன்னமும் ஒழிந்தபாடில்லை. யதார்த்தமின்மையும், லாஜிக் மீறல்களும் அதிகம் உள்ளதாகவே தமிழ்திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. இப்படியான சூழலில்தான் ஜெய்பீம் ஒரு முழுமையான படைப்பாக வெளியாகியிருக்கிறது. ஒட்டு மொத்த இந்தியாவும் 'ஜெய்பீம் ' திரைப்படத்தை கொண்டாடுவது கண்டு பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

உண்மை, நீதி ,நியாயம், நேர்மை போன்றவற்றின் மீதான நம்பிக்கையை 90களுக்கு பிறகு உலகவணியமயமாக்கலால் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறார்கள். ' சுயநலம் ' என்ற ஒன்றை மட்டுமே உலகவணியமயமாக்கல் நமக்குப் போதிக்கிறது. இன்று, இவற்றையெல்லாம் முன்நிறுத்தி பேசுபவர்களை பைத்தியக்காரர்கள் என்றே மக்கள் நினைக்கவைக்கப்படுகிறார்கள். இதனாலேயே கம்யூனிஸ்ட்கள் என்றால் கார்பரேட்கள் அஞ்சுகிறார்கள். பொதுமக்கள் மத்தியிலும் கம்யூனிசம் மற்றும் கம்யூனிஸ்ட்கள் பற்றிய ஒவ்வாமை இருக்கிறது. நேரடியாக பயனடைந்தவர்களைத் தவிர மற்றவர்களுக்கு கம்யூனிஸ்ட்களின் செயல்பாடுகள் சென்று சேராதவாறு மறைக்கப்படுகின்றன. இதனாலேயே நாம் ஜெய்பீம் திரைப்படத்தை வெகுவாக கொண்டாடவேண்டியுள்ளது.

" நீங்க பேசறதெல்லாம் பேச்சுக்குத்தான் சரிபட்டு வரும். நடைமுறைக்கு சரிப்பட்டு வராது " என்றே அறத்தின் பக்கம் நின்று பேசுபவர்கள் விமர்சிக்கப்படுகிறார்கள். எல்லா இடங்களிலும் ஏற்றத்தாழ்வுகள் இருக்க வேண்டும் என்றே வலதுசாரி மனம் விரும்புகிறது. அதனாலேயே இப்போது இருப்பது அப்படியே தொடர வேண்டும் என்று விரும்புகிறது. இதனாலேயே சமத்துவம் பேசுபவர்களைக் கண்டால் இவர்களுக்கு பிடிப்பதில்லை. இப்படி பெரும்பான்மை மக்களால் ஒதுக்கப்படுவர்களுக்கு இத்திரைப்படம் பெரும் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது.

அழுவாச்சி திரைப்படமாக மாறுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருந்தும் நேர்த்தியான திரைக்கதையால் ஒரு சுவாரசியமான அதே நேரம் மிக அழுத்தமான படைப்பாக வெளிவந்திருக்கிறது. நிறைய மக்களின் ஏன் ஆளும் கட்சியின் மனசாட்சியையும் சேர்த்தே இத்திரைப்படம் உலுக்கியிருக்கிறது. கொஞ்சமேனும் மனதில் ஈரமுள்ள எவராலும் உடனே கடந்த போக முடியாத படைப்பு இது.

மக்களின் ரசனைக்கு மதிப்பு கொடுத்து ஒவ்வொரு காட்சியும் மிக கவனமாக உருவாக்கியிருக்கிறார்கள். பொதுவாக பெரும்பாலான தமிழ்த்திரைப்பட இயக்குநர்கள், மக்களின் உணர்வுகளுக்கோ, ரசனைகளுக்கோ எப்போதும் மதிப்பளிப்பதில்லை. " நாம எதைப் படம் பிடித்து போட்டாலும் பார்ப்பாங்க.." என்றே நினைக்கிறார்கள். மக்களின் உணர்வுகளுக்கு உரிய மரியாதை கொடுத்து இத்திரைப்படம் உருவாகியிருக்கிறது. சூர்யாவிற்கென்று , கதாநாயகிக்கென்று ஒருசில காட்சிகள் உருவாக்கப்பட்டிருந்தாலும் இது இயக்குநரின் திரைப்படமாகவே இருக்கிறது.

பெரும்பாலான யூடியூப் சேனல்கள் மிக அதிகளவில் இத்திரைப்படத்தை பற்றி பேசுவதின் மூலம் இத்திரைப்படம் சொல்ல வரும் அரசியலை திசைமாற்றப் பார்க்கின்றன. தோழர் ரபீக் ராஜா சொல்வது போல இத்திரைப்படம் ராசகண்ணு வழக்கு மூலம் சொல்ல வருவது 'அதிகார எதிர்ப்பு '. ஆனால் பேசு பொருளாக சூர்யா மட்டுமே இருக்கிறார். இப்படியான ஒரு படைப்பை உருவாக்க உதவியதற்கு சூர்யாவை நாம் கண்டிப்பாக பாராட்ட வேண்டும். ஆனால் பேசு பொருளாக அதிகார எதிர்ப்பே இருக்க வேண்டும். அதிகாரத்தில் இருப்பவர்களால்தான் எல்லோருக்கும் கிடைக்க வேண்டிய நீதி கிடைக்காமலேயே போகிறது. எல்லா வழக்குகளுக்கும் சந்துருவும் , பெருமாள்சாமியும் கிடைத்துவிட மாட்டார்கள். சமத்துவத்திற்கு எதிரானது 'அதிகாரம் '. மக்கள் மீது செலுத்தப்படும் அனைத்துவிதமான அதிகாரங்களும் முடிவிற்கு வர வேண்டும். அதிகாரத்தில் இருப்பவர்களால் மட்டுமே இந்தபூமி சுழலவில்லை. உழைக்கும் மக்களாலேயே இந்த பூமி சுழலுகிறது.

இத்திரைப்படத்தில் ஒவ்வொரு காட்சியும் விவரிக்கப்படும் விதம் அவ்வளவு அழகு. ஏகப்பட்ட குறியுடுகள் திரைப்படம் முழுக்க இருக்கின்றன. அசலான மனிதர்கள், அசலான பேச்சு வழக்கு, அசலான வாழ்க்கை என அப்படியை பதிவாகியிருக்கிறது. மற்ற திரைப்படங்களைப் போல பின்னணி இசை எந்த இடத்திலும் உறுத்தவில்லை. அதே போல பாடல்களும் திரைப்படத்திலிருந்து விலகிச் செல்லவில்லை. தேர்ந்த அரசியலறிவும் ,சினிமா பற்றிய சரியான புரிதலும் உள்ள ஒருவராலேயே இப்படியான ஒரு திரைப்படத்தை உருவாக்க முடியும். அந்த வகையில் இயக்குநர் ஞானவேல்❤ கொண்டாடப்பட வேண்டியவர். அறத்தின் பக்கம் நின்று அறத்தின் குரலை மிக வலுவாக கொண்டு சேர்த்திருக்கிறார். நிச்சயம் நல்ல மாற்றங்கள் நிகழும் என நம்புவோம்.

"ஜெய்பீம் என்றால் ஒளி...
ஜெய்பீம் என்றால் அன்பு...
ஜெய்பீம் என்றால் இருளிலிருந்து
வெளிச்சத்தை நோக்கிய பயணம்...
ஜெய்பீம் என்றால் பலகோடி
மக்களின் கண்ணீர்த்துளி...
"
என்ற மராத்திய கவிதையை திரைப்படத்தின் இறுதியில் காட்டுவதன் மூலம் எதற்காக இத்திரைப்படத்திற்கு ' ஜெய்பீம் ' என பெயரிடப்பட்டது என்பதை சொல்லாமல் சொல்கிறார், இயக்குநர். மிகப்பொருத்தமான தலைப்பு. இந்தத் திரைப்படத்திற்கும் இந்தக் கவிதைக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது.

ஜெய்பீம் பற்ற வைத்திருக்கும் இந்த அறம் என்ற நெருப்பை அணையாமல் காப்பது நம் கடமையாகும் !

மேலும் படிக்க :

No comments:

Post a Comment