Pages

Wednesday, December 7, 2011

மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி !

பூமியை அழிக்க யாராவது வேறு கிரகத்தில் இருந்து வந்தால் மட்டும் தான் பூமியர்கள் ( மனிதர்கள் ) அனைவரும் ஒன்றுபடுவார்கள் போல . அதுவரை எங்கேயும் எப்போதும் அடிதடி தான் . நாடு ,மாநிலம் ,மாவட்டம் ,ஊர்,கிராமம் ,தெரு ,சந்து ,பக்கத்து வீடு , குடும்பம் என்று பிரிவினைகளின் எண்ணிக்கையை அதிகமாக்குவது தான் ஒரு நாகரிக சமூகத்தின் வளர்ச்சியா ?

ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு எதிரி நாடு உள்ளது . நான் இந்த நாட்டுக்காரன் ,நான் அந்த நாட்டுக்காரன் என்று ஓயாத பெருமை வேறு . நாட்டுக்காரன் பெருமையெல்லாம் மாநிலம் என்று வரும்போது உடைந்து விடுகிறது . நான் இந்த மாநிலத்துக்காரன் , நான் இந்த மாவட்டத்துக்காரன் ,நான் இந்த ஊர்க்காரன் , நான் இந்த தெருக்காரன் ,நான் இந்த குடும்பத்துக்காரன் என்று பெருமை பேசி சதா சண்டைக்கு போவது தான் நம் வேலையா ?

இவற்றையெல்லாம் விட பெரிய பிரிவினைகள் இனம் ,மதம் ,மொழி ,ஜாதி ,கட்சி சார்ந்த பிரிவினைகள் தான் . இனம் இனம் என்று மேடையில் பேசுவார்கள் ,இறங்கி வந்ததும் ஜாதி பற்றியும் , கட்சி பற்றியும் மட்டுமே சிந்தனை செய்வார்கள் . மனிதர்களை ஒரு குறிப்பிட்ட எல்லை தாண்டி சிந்திக்கவிடாமல் செய்வதே இந்த பிரிவினைகளின் நோக்கம் . உரக்க உரக்க பேசியே நம்மை  இந்தப் பிரிவினைகளின் ( நம் இனம் ,நம் மொழி ,நம் ஜாதி ,நம் கட்சி )கூண்டுக்குள் அடைத்துவிடுவார்கள் .

நம்மைச் சுயநலவாதிகளாக மாற்றுவது தான் இந்த பிரிவினைவாதிகளின் நோக்கம் . அப்போதுதான் நம்மை வைத்து அவர்கள் குளிர்காய முடியும் . இவை எல்லாவற்றுக்கும் பின்னால் அரசியல் மட்டுமே இருக்கிறது . எல்லாப் பிரிவினைகளிலும் அரசியல் கலப்பதால் தான் மற்றவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படுகிறது . அரசியல் கலக்காதவரை பிரிவினைகளால் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை .

ஒரு சில வளர்ந்த நாடுகள் ,வளராத நாடுகளுக்கிடையே பிரிவினைகளை உருவாக்கி ஆயுதங்களை விற்கின்றன . ஆயுதங்கள் விற்பனையை மட்டும் தடை செய்துவிட்டால் ஒரு சில வளர்ந்த நாடுகள் ஒரே நாளில் வளரும் நாடுகளின் பட்டியலில் இணைந்துவிடும் .

மாநிலங்களைப் பொருத்தவரை  எல்லா மாநிலங்களும் கண்டிப்பாக ஒற்றுமையுடன் இருக்கக் கூடாது என்பதுதான் நாட்டை ஆட்சி செய்பவர்களின் நோக்கம் . ஒரு வேளை எல்லா மாநிலங்களிலும் ஒற்றுமையாக செயல்பட்டால் , நாட்டை ஆளும் அரசு மற்றவர்கள் மீது அதிகாரம் பண்ண முடியாது ,ஊழல் பண்ண முடியாது ,மாநில ஆட்சியைக் கைப்பற்ற முடியாது ,நம்மை வெளிநாடுகளுக்கு விலை பேசி விற்கமுடியாது . அதனால் மாநிலங்களுக்கிடையே  பிரிவினைகள் அவசியம் என்பதில் மத்திய அரசு தெளிவாக உள்ளது .ஏமாளிகள் நாம் மட்டுமே .

மற்ற பிரிவினைகளை விட கட்சி சார்ந்த பிரிவினைகள் தான் நாளுக்குநாள் அதிகமாகிறது . தான் பின்பற்றும் அரசியல் கட்சி எவ்வளவு அட்டூழியங்கள் செய்தாலும் வீம்புக்கென்று அந்த அரசியல் கட்சியை தொடர்ந்து ஆதரிப்பது முட்டாள்தனமல்லவா . இந்த முட்டாள்தனத்தை மூலதனமாக வைத்துதான் யார் ஆட்சிக்கு வந்தாலும் கூச்சமே இல்லாமல் தொடர்ந்து கொள்ளை அடிக்கிறார்கள்  . கட்சியையும் ,கட்சித் தலைவரையும் தொடர்ந்து கொண்டாடும் வரை நமக்கு எந்த நல்லதும் நடக்காது .

இனம் , மொழி, மதம், ஜாதி சார்ந்த பிரிவினைகளை வளரவிடக்கூடாது . இவற்றை வைத்துதான் அரசியலே நடக்கிறது .நாம் , பிரிவினைவாதக் கூண்டுக்குள் இருந்து வெளியே வராதவாறு கவனமாக பார்த்துக் கொள்வதுதான் அரசியல்வாதிகளின் வேலை . எல்லோரும் மனிதர்கள் தான் , இன்னும் சொல்லப்போனால் எல்லோரும் தாவர ,விலங்குகளைப் போல   சாதாரண உயிரினங்கள் தான் என்ற எண்ணம் வளராதவரை நமக்கு வளர்ச்சி என்பதே கிடையாது .

நாமெல்லாம் இயற்கையின் குழந்தைகள் !

மேலும் படிக்க :

கட்சி அரசியலை வேரறுப்போம் ! 
 .................................................................................................................................

2 comments:

  1. மனிதர்களிடம் மனிதநேயம், வள்ளலார் சொன்ன உயிர்களிடத்து அன்பு கொள்ளல், இல்லாத வரை ஒற்றுமை என்பது,சாத்தியமில்லை! நல்ல நோக்கம் கொண்ட பதிவுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete