Pages

Monday, December 19, 2011

மலேசியா வாசுதேவன் - உன்னத குரலோன் !

உலகெங்கும் வாழும் தமிழர்களின் வாழ்விடங்களில்  கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஒலித்து கொண்டிருக்கும் குரல் மலேசியா வாசுதேவனுடையது .  தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் வாசுதேவனின் குரலும் ஜானகியின்  குரலும் கேட்டுக்கொண்டே இருக்கின்றன . தமிழிசையோடு கலந்துவிட்ட குரல்கள் அவை . வாசுதேவன் பாடிய உயிரோட்டமான  பாடல்கள் , நமக்கு மகிழ்ச்சியையும் ,சோகத்தையும் , மனதிற்கு இதத்தையும் ,கொண்டாட்டத்தையும் , ஆறுதலையும் ,வாழ்வதற்கான நம்பிக்கையையும் தரக்கூடியவை .

மலேசியாவில் பிறந்து வளர்ந்த ஒருவருக்கு தமிழக கிராமிய பாணியிலான பாடும் முறை எப்படி வாய்த்தது ? இளையராஜா முக்கிய காரணமாக இருக்ககூடும் .வாசுதேவன் , வார்த்தை உச்சரிப்பில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார் . எல்லாவிதமான பாடல்களிலும் மிகத் தெளிவான வார்த்தை உச்சரிப்பு . கிராமிய பாடல்களில் கிராமத்தான் போன்ற உச்சரிப்பு அவரது காலத்தில் இவரால் மட்டுமே முடிந்திருக்கிறது . எந்த மாதிரியான படாலாக இருந்தாலும் அதற்கேற்றவாறு தன்னை முற்றிலும் மாற்றிக்கொண்டு அந்தக் குறிப்பிட்ட பாடலுக்கு உயிரோட்டத்தைக் கொடுத்துள்ளார் .

அவர் பாடிய எந்தப்பாடலாக இருந்தாலும் முதல் இரண்டு வார்த்தைகளைக் கவனித்துப் பாருங்கள் . முதல் இரண்டு வார்த்தைகளிலேயே  அந்தப்பாடலுக்குள் நம்மை அழைத்துச் சென்று விடுகிறார் .அதன் பிறகு, பாடல் முடியும் வரை நாம் அந்தக்குரலின் கட்டுப்பாட்டில் தான் இருப்போம் . தெரிந்தோ தெரியாமலோ சினிமாவில் பாடுவதில் சமத்துவத்தைக் கொண்டுவந்தவர் , வாசுதேவன் அவர்கள் . ஆம் , அவர் கதாநாயகர்களுக்கு மட்டும் குரல் கொடுக்கவில்லை , துண்டு துக்கடா வேடங்களில் நடிப்பவர்கள் ,குணச்சித்திர நடிகர்கள் மற்றும்  நகைச்சுவை நடிகர்களின் குரலாகவும் அவரது குரல் ஒலிக்கிறது . அதிகமான திருவிழாப் பாடல்கள் பாடியவர் இவராகத் தான் இருப்பார் . 80 ,90 களில் வெளிவந்த பாடல்களில் கோவில் முன்பு ஒரு குழு ஆடத் தயாரானாலே நாம் முடிவு செய்து விடலாம் அடுத்து ஒலிக்கும் குரல் வாசுதேவன் குரலாகவே இருக்கும் .

நடிகரின் பெயராலோ , இசையமைப்பாளரின் பெயராலோ , படத்தின் பெயராலோ மட்டுமே அவரது அநேக பாடல்கள் கேட்கப்படுகின்றன . மலேசியா வாசுதேவன் பற்றி இசை விமர்சகர் ஷாஜி எழுதிய கட்டுரை அந்தப்போக்கை மாற்றியமைத்தது என்றே சொல்லலாம் . மிகச்சிறப்பாக எழுதப்பட்ட கட்டுரை அது . அந்த ஒரு கட்டுரைக்காக நிறைய உழைத்திருக்கிறார் . அந்தக்கட்டுரை - மலேசியா வாசுதேவன்: மகத்தான திரைப்பாடகன் . எல்லோரும் அவரை மறந்திருந்த வேளையில் வாசுதேவன் பற்றி மிக விரிவாக எழுதப்பட்ட கட்டுரையிது . உயிர்மையில் வெளிவந்த இந்தக்கட்டுரை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது . அவரை முற்றிலுமாக மறந்திருந்த திரையுலகமும் சற்றே திரும்பிப் பார்த்துவிட்டு மீண்டும் முகத்தைத் திரும்பிக்கொண்டது .

ஷாஜி ," இசையின் தனிமை " - என்ற தனது புத்தக கலந்துரையாடல் மூலமாக மலேசியா வாசுதேவனைப் பாராட்டி மகிழ்ந்தார் . அரிதாக அந்த நிகழ்வில் பங்குபெறும் பாக்கியம் எனக்கும் கிடைத்தது . அந்த நிகழ்வு பற்றி நான் ஷாஜிக்கு  எழுதிய மின்னஞ்சலை அவரது வலைப்பதிவில் பிரசுரித்தார் . அந்தப் பதிவு - வாழ்வில் மறக்க முடியாத நிமிடங்கள்  . அன்று பேசிய மலேசியா வாசுதேவன் " புகழ் நிலையற்றது "  என்று கூறினார் . இதற்கு அவரது வாழ்க்கையே மிகச் சிறந்த உதாரணம் .

 2010 டிசம்பர் மாதம் பொதிகை தொலைக்காட்சியில் அவரது பேட்டி ஒளிபரப்பானது . அந்தப் பேட்டியில் பாதியை மட்டுமே பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது .அந்தப் பேட்டியில் அவர்,
" நாம் கலைஞர்களை உருவாக்க வேண்டும் , இளையராஜா என்னை உருவாக்கியதைப்போல, இன்று புதுப் பாடகர்களுக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை , இரண்டு மூன்று பாடல்கள் மட்டுமே பாட வாய்ப்புக் கிடைக்கின்றன. எல்லா வகையான (சோகம் ,தத்துவம் )  பாடல்களைப்  பாட வாய்ப்பு கிடைப்பதில்லை . சோகம் ,தத்துவம் நிறைந்த பாடல்கள் இன்றைய படங்களில் இல்லை . சோகப்பாடல்கள் மட்டுமே மனிதனின் உணர்வுகளை ஊடுருவும் . புதுப் பாடகர்கள் எந்த மொழியில்  பாடினாலும்  வார்த்தைகளை தெளிவாக உச்சரிக்க வேண்டும். இந்த  மாதிரியான  தொலைக்காட்சியில் பேசக் கிடைக்கும் வாய்ப்புகள் எனது ஆதங்கத்தை
வெளிப்படுத்தஉதவுகின்றன. ஒரு பாடல் மட்டும் பாடினால் போதும் என்று
தான் சென்னை வந்தேன் . 5000 பாடல்கள் பாடிவிட்டேன்  இதற்குமேல்  என்ன வேண்டும் " என்று கூறினார் .

20-02-2011 அன்று  மலேசியா வாசுதேவன் மரணமடைந்தபோது கூட பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை . அவரது மரணம் ரசிகன் என்ற முறையில் என்னை மிகவும் பாதித்தது . இவ்வளவு சீக்கிரத்தில் அவருக்கு மரணம் வரும் என்று நான் எதிர்பார்க்க வில்லை. திரையுலகின் அன்பும் , ஆதரவும் அவருக்கு கிடைத்திருந்தால் நிச்சயம் இன்னும் கொஞ்ச நாள் உயிருடன் இருந்திருப்பார் . திரையுலகம் செய்யாததை ஷாஜி செய்தார் .ஷாஜியின் அன்பு அவருக்கு நிச்சயம் ஆறுதலாய் இருந்து இருக்கும் . மலேசியா வாசுதேவன் 
பற்றிய  ஷாஜியின் கட்டுரையின் அதிர்வுகள் இன்னும் என்னுள்  ஒலித்துக்கொண்டே இருக்கின்றன .

ஆனந்த விகடன் இதழில் ஒரு ஓரத்தில் வெறும் ஒரு பக்கத்தில் மட்டுமே மலேசியா வாசுதேவன் மரணம் பற்றிய குறிப்பு இருந்தது . உண்மையில் அவரது மரணத்தை விட அதிகமாக வலித்தது . ஒரு உன்னதமான இசைக்கலைஞனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை  இவ்வளவுதானா ?. இதே ஆனந்த விகடனில் ஒன்னுக்கும் உருப்படாத விசயங்கள்  எல்லாம்  பக்கத்தை நிரப்பும் போது வாசுதேவன் அவர்களுக்காக ஒரு மூனு பக்கம் கூட ஒதுக்க முடியவில்லை .எந்த மாதிரியான உலகத்தில் வாழ்கிறோம் நாம் ? வெறும் வணிகம் மட்டும் தான் வாழ்க்கையா ? மற்ற இதழ்களில் அந்த ஒரு பக்கமும் இடம் பெறவில்லை என்றே நினைக்கிறேன் .

நான் பார்த்த வரையில்  பொதிகை தொலைக்காட்சி மட்டுமே வாசுதேவன் பற்றிய சிறப்பு நிகழ்ச்சியை இரவு 10 . 15 க்கு என்றும் இனிமை பகுதியில் ஒளிபரப்பியது . ஆனால் , அவரது பாடல்களால் பயன் பெரும் அனைவரும் அவரை மறந்து விட்டனர் . அவரது இறப்பை விட வருத்தமான விசயம் ,
 இறந்த பின்பும் அவரை  புறக்கணிக்கும் இந்த உலகம் தான் .

வரலாற்றில் , தனித்துவம் மிக்கவர்களுக்கு எப்போது  முக்கியத்துவம் 
கொடுத்துள்ளோம் ? அவர்கள் வாழ்ந்த  காலத்திற்கு பிறகு தான் அவர்களைக்  கொண்டாடி வந்துள்ளோம்  . வாசுதேவன் அவர்களின் மரணச் செய்தியைக் கேட்ட போது எனக்கு மகாகவி பாரதி தான் நினைவுக்கு வந்தார் . அவரை எப்படிப்  புறக்கணித்தார்களோ , அது போலவே வாசுதேவன் அவர்களையும் புறக்கணித்து உள்ளோம் . இன்று எப்படிப்  பாரதியை இந்த உலகம் கொண்டடுதோ , அதுபோலவே  நாளை வாசுதேவன் அவர்களையும் இந்த உலகம் கொண்டாடத்தான் போகிறது .

பூங்காற்று திரும்பத் தான் போகிறது . அதை நாம் பார்க்கத்தான் போகிறோம் . எனக்கு தெரிந்த வரையில் தமிழ் மண்ணோடு கலந்துவிட்ட  இரண்டு  ஆண்  குரல்கள் ஒன்று T.M.சவுந்தர்ராஜன்,  இன்னொன்று மலேசியா வாசுதேவன் .தமிழ், இயல் , இசை , நாடகம்  என்னும்  மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது . 
இசைத்தமிழில் இவர்கள் இருவருக்கும் நிச்சயம் இடம் இருக்கும் . காலத்தால் அழிக்க முடியாத குரல்கள் . இவர்களுக்கு யாருமே மாற்று இல்லை .  மரணம், வாசுதேவன் அவர்களின் உடலுக்குத்தான் .   
அவரது பாடல்களுக்கு இல்லை .

கலைஞனுக்கு என்றுமே அழிவில்லை !

அவர்கள் ஏதோ ஒரு வடிவத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள் ! 

மேலும் படிக்க :

முகப்பு பக்கம் 
..................................................................................................................................................................... 

3 comments:

  1. இவரின் குரல் திருச்சி லோகநாதன் அவர்களின் குரலை போலவே இருப்பதாக பலரும் சொல்ல கேள்விப்பட்டு இருக்கிறேன். இவரின் பூங்காற்று திரும்புமா எப்போதும் நான் விரும்பி கேட்கும் பாடல். பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. மாமனிதர்கள் எப்போதுமே மறக்கடிக்கபடுவார்கள்

    ReplyDelete
  3. tamilarkal eppothu tamilarkalai mathithaarkal...

    ReplyDelete