Pages

Monday, September 24, 2012

" இந்தியா " - சர்வாதிகாரிகளின் தேசம் !

எத்தனையோ விதமான சர்வாதிகாரிகள் வாழ்ந்ததாக வரலாறு சொல்கிறது . உலகில் இருந்து இன்னும் சர்வாதிகாரிகள் முற்றிலும் அழிந்துவிடவில்லை . காலத்துக்கேற்ற மாற்றம் பெற்று முன்னை விட வலுவாகவே வாழ்ந்து வருகிறார்கள் . உலகமயமாக்கம் சர்வாதிகாரத்திற்கு துணை போகிறது .இன்று சர்வாதிகாரிகளுக்குத்தான் மரியாதை . அரசாங்கத்தை விலைக்கு வாங்கி தான் நினைத்ததையெல்லாம் நடத்திக் காட்டுகிறார்கள் ,நவீன சர்வாதிகாரிகள் .

நாம் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தடுத்த உறுப்பினர் முதல் அரசாங்க அதிகாரிகள் ,ஆட்சியாளர்கள் வரை எல்லோரும் சர்வாதிகாரிகளாகத்தான் செயல்படுகிறார்கள் . யாரைப் பற்றியும் எந்தவிதக் கவலையும் இல்லாமல் ,தன் சுயநலத்திற்காக தான் நினைத்ததை செய்து காட்டும் குணமுடைய அனைவரும் சர்வாதிகாரிகள் தான் .நம் குடும்ப உறுப்பினராக இருக்கலாம் ,முதல்வராக இருக்கலாம் ,பதவியில் இருக்கும் பொம்மைகளாகக்கூட இருக்கலாம் , அவரவர் இருக்கும் இடத்தைப் பொருத்து சர்வாதிகாரத்தின் பாதிப்பு இருக்கும் . முதல்வரோ ,பிரதமரோ ,பிரதமர் போல செயல்படும் பொம்மையோ சர்வாதிகாரப் போக்குடன் நடந்து கொண்டால் பாதிப்பு மிகப்பெரியதாக இருக்கும் .

சமீபத்தில் இந்தியாவில் நடந்து வரும் நிகழ்வுகள் ,விதவிதமான ஊழல்கள் பற்றி நம்மவர்கள் கொடுக்கும் பேட்டியின் மூலம் அவர்களது சர்வாதிகாரம் வெளிப்படுவதை வெளிப்படையாகக் காணலாம் .மக்களாட்சித் தத்துவம் மறைந்தே விட்டது . புதிய தத்துவம் தான் இன்று ஆட்சியாளர்களால் கடைபிடிக்கப்படுகிறது .அது ," பணக்காரர்களுக்காக பணக்காரார்களால் நடத்தப்படும் பணக்காரர்களின் அரசு " என்பதாகும் . ஒரு ஊழலை மறைக்க இன்னொரு ஊழல் ,அதை மறைக்க மக்கள் மீது பொருளாதார அடி .காந்தி தேசம் என்று சொல்லிக்கொள்ளும் நாட்டில் காந்திய வழிப் போராட்டத்திற்கு எந்தவித மதிப்பும் ,கவனமும் ஆளும் அரசுகளால் கொடுக்கப் படுவதில்லை .

மக்களின் போராட்டம் அனைத்து இடங்களிலும் முடக்கப்படுகிறது ,ஊடகங்களால்  மறைக்கப்படுகிறது .பணக்காரர்களுக்கு வேண்டிய அனைத்தும் தாராளமாகச் செய்யப்படுகிறது .அவர்களுக்கு இயற்கை வளங்கள் தாரைவார்க்கப்படுகிறது .அவர்களுக்காக பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது .காரணம் ,நாட்டின் வளர்ச்சிக்கு அவர்களும் அவர்களின் பகாசுர நிறுவனங்களும் தேவையாம் . கிராமத்தில் 28 ரூபாயும் ,நகரத்தில் 32 ரூபாயும் சம்பாதிப்பவர்கள் தேவையில்லை . அவர்களுக்கு கடனும் கிடைக்காது .மக்களின் நிலை பற்றி துளியும் கவலைகொள்ளாத ஆட்சியாளர்களை நம் காலத்தின் அவலம் . " மக்கள் தொடர்ந்து ஊழல்களை சகிப்பார்கள் " என்று அரசியல்வாதிகள் நம்பினால் இழப்பு அவர்களுக்குத்தான் . இந்நிலை தொடர்ந்தால் லிபியா ,எகிப்து ,துனிசியா ,ஏமன் போல இந்தியாவிலும் புரட்சி வெடிக்கும் சூழல் உருவாகும் . அப்படி ஒரு நிலை வராமல் தடுக்க வேண்டியது இன்றைய ஆட்சியாளர்களின் கடமை .

பணக்காரர்களிடம் பணத்தை வாங்கி தேர்தலின் போது மட்டும் மக்களுக்கு கொடுத்து ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று எல்லா ஆட்சியாளர்களும் நினைக்கிறார்கள் . மக்களை ரொம்ப நாட்களுக்கு ஏமாற்ற முடியாது . ஆட்சியாளர்களின் மோசமான செயல்பாடுகளால் மக்கள் மிகுந்த கோபத்தில் இருக்கிறார்கள் . சிறு நெருப்பு அவர்களை உசுப்பேத்திவிடும் . மக்களின் அறவழிப் போராட்டம் தொடர்ந்து ஒடுக்கப்படுமானால் நிச்சயம் ஒரு நாள் புரட்சி வெடிக்கும் .

எல்லோருக்கும் ஒரு உயிர் ,ஒரு வாழ்க்கை தான் இருக்கிறது .பூமி எல்லோருக்கும் சொந்தம் !  



மேலும் படிக்க :

 சிரிப்பு வருது ! சிரிப்பு வருது ! 

...................................................................................................................................................
    

1 comment: