'ஒருவனுக்கு ஒருத்தி ' என்பது ஒரு போலியான கற்பிதம். சமூகத்தில் நிகழும் பல்வேறு விதமான பாலியல் சிக்கல்களுக்கு இந்த சித்தாந்தமும் ஒரு முக்கியமான காரணம். இதனாலும் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். 'ஒருவனுக்கு ஒருத்தி ' என்று சொல்லி பெண்களை கட்டுப்படுத்தும் சமூகம் ஆண்களை எதுவும் சொல்வதில்லை. ஆணிற்கும் , பெண்ணிற்கும் மறைமுக கட்டுபாட்டையும் , நெருக்கடியையும், சுதந்திரமின்மையையும் இந்த 'ஒருவனுக்கு ஒருத்தி ' என்பது உருவாக்குகிறது.
இதழாசிரியர் மணிகண்டன் - 9976122445.
இதழ் குறித்த உங்களின் பின்னூட்டங்கள் மற்றும் படைப்புகளை
kurimagazine@gmail.com
என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் .
திருமணம் என்பதே, இனி இந்த ஆணும் இந்த பெண்ணும் 'ஒருவனுக்கு ஒருத்தி'யாக வாழப் போகிறார்கள் என்பதை எல்லோருக்கும் அறிவிக்கும் ஒரு நிகழ்வாகவே இருக்கிறது.அதன் பிறகு மீறல் நிகழாமல் இருக்கும் வகையில் அவர்களை சமூகம் கண்காணிக்கிறது. ஆனாலும் அங்கே மீறல்கள் நிகழ்கின்றன. மனப்பொருத்தம் இல்லாதவர்கள் சேர்ந்து வாழவே முடியாது. ஆனால் யதார்த்தத்தில் பெரும்பாலும் தங்களை தாங்களே ஏமாற்றிக் கொண்டு 'ஒருவனுக்கு ஒருத்தி'யாக வாழ்வதே நடக்கிறது. பெற்றோர்களால் நிச்சயக்கப்படும் திருமணங்கள் பெரும்பாலும் புறக்காரணங்களை வைத்தே நிர்ணயிக்கப்படுகின்றன.திருமணத் திற்கு பிறகு புரிதல்களால் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொள்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள். மற்றவர்கள் நிர்பந்தத்தால் சிக்கித் தவிக்கிறார்கள். நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் தான் இப்படி என்றால் காதலிலும் , காதல் திருமணங்களிலும் இந்த 'ஒருவனுக்கு ஒருத்தி ' என்ற மனநிலை பாதிப்பை உருவாக்குகிறது.இது காதலித்தவரையே கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற மனநிலையை உருவாக்குகிறது. காதலிப்பதே கல்யாணம் பண்ணுவதற்கு தான் என்றே பலரும் நினைக்கிறார்கள். ஒரு மனிதரின் சுயரூபம் எப்போது வெளிப்படும் என்று சொல்ல முடியாது. காதலிப்பவர் நமக்கு பொருந்தமாட்டார் என உணர்ந்த பிறகும் கல்யாணம் செய்து கொள்வது முட்டாள்தனம்.
எந்த உறவாக இருந்தாலும் ஆதிக்கம் செலுத்தப்படும் உறவு ஆரோக்கியமான உறவாக இருக்காது. பொதுவாகவே ஏதோ ஒரு காரணத்தின் பேரில் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தவே மனித மனம் விரும்புகிறது. இந்த ஆதிக்க மனநிலை மட்டும் இல்லாமல் இருந்தால் மனிதர்களுக்குள் இவ்வளவு சண்டைகள் , சச்சரவுகள் இருக்காது.ஆனால் அவ்வளவு எளிதாக ஆதிக்க மனநிலையைக் கைவிட மனித இனம் தயாராக இல்லை. அன்பின் பெயரால் ' நான் உன் மீது அன்பு வைத்திருக்கிறேன். அதனால் எனக்கு நீ அடங்கி போ ' என்று ஆதிக்கம் செலுத்துவதும் வன்முறை தான். இந்த வன்முறை காதலிலும் , குடும்பங்களிலும் அதிகம் இருக்கிறது. குடும்பம் என்ற அமைப்பே இந்த வன்முறையால் தான் பலவீனமாகிறது. காதலாக இருந்தாலும் , குடும்பமாக இருந்நாலும் ஒருவர் மீது ஒருவர் ஆதிக்கம் செலுத்துவதைக் கைவிட வேண்டும்.
ஒவ்வொரு மனிதரும் தன்னை ஒரு சுதந்திரமான மனிதராக உணர்ந்து வாழ எந்த அமைப்பு உதவுகிறதோ அதுவே சரியான அமைப்பாகும்.
நாம் ஒருவர் மீது செலுத்தும் அன்பைவிட அவருக்கு கொடுக்கும் மரியாதையே முக்கியமானது என்கிறார்கள். அது முற்றிலும் உண்மை. ஒரு காதல் வெற்றி பெறுவதற்கும் , ஒரு திருமணம் வெற்றி பெறுவதற்கும் இந்த பரஸ்பர மரியாதை அவசியமாகிறது. இந்த இரண்டின் மீது நம்பிக்கை இல்லாதவர்களின் தேர்வாக 'சேர்ந்து வாழ்தல் ( Living Together)' இருக்கிறது. பிடித்திருந்தால் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் சேர்ந்து வாழ்வோம் தேவைப்பட்டால் திருமணமும் செய்து கொள்ளலாம் , பிடிக்காவிட்டால் எப்போது வேண்டுமானாலும் விலகி விடலாம். ஆனால் தங்களின் பிள்ளைகள் இப்படியான வாழ்க்கை முறையைத் தேர்வு செய்ய இந்தியக் குடும்பங்கள் அனுமதிப்பதில்லை. அரிதாகவே சில குடும்பங்கள் அனுமதிக்கின்றன. 'சேர்ந்து வாழ்தல் ' வாழ்க்கை முறையை கடைபிடிப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஒவ்வொருவரையும் பலருடன் வாழச் சொல்வதற்காக 'ஒருவனுக்கு ஒருத்தி ' என்ற சித்தாந்தம் தவறு என்று சொல்லவில்லை. தங்களுக்கு பிடித்தவருடன் வாழ இந்த கற்பிதம் அனுமதிக்கவில்லை என்பது தான் இங்கே பிரச்சனை. மேற்கத்திய நாடுகளில் எந்த முறையில் திருமணம் செய்தாலும் , சேர்ந்து வாழ்ந்தாலும் பிடிக்கவில்லை என்றால் பிரிதல் என்பது எந்த வயதிலும் சாத்தியமாகிறது.அதே போல எந்த வயதிலும் இன்னொரு இணையை தேடிக்கொள்ள முடிகிறது. அதை சமூகமும் அனுமதிக்கிறது. இங்கே பிரிதல் கூட கொஞ்சம் மெனக்கெட்டால் சாத்தியம். மறுதுணையை தேர்வு செய்வது ஆணிற்கு மிக எளிதாக இருக்கிறது எந்த வயதிலும். அதே நேரம் பெண்ணிற்கு மறுதுணையை தேர்வு செய்வது என்பது எந்த வயதிலும் எளிதாக இல்லை.அதிலும் பலருக்கு சாத்தியமேயில்லை. இப்படி ஆண் , பெண் உறவில் பல பாதிப்புகளை உருவாக்குவதால் தான் ' ஒருவனுக்கு ஒருத்தி ' என்ற மனநிலை தவறானது கூற வேண்டியுள்ளது. மற்றபடி பிடித்திருந்து ஆயுள் முழுவதும் ஒருவனுக்கு ஒருத்தியாக வாழ்வதில் எந்தப் பிழையும் இல்லை.
'கற்பு ' என்பது பெண்ணடிமையின் குறியீடாக இருக்கிறது. ஆணின் கற்பு பற்றி சமூகத்தின் எந்த அமைப்பும் கேள்வி கேட்பதில்லை. ஆனால் பெண்ணின் கற்பு பற்றி சகலமும் கேள்வி கேட்கிறது. ஒரு பெண்ணையே இன்னொரு பெண்ணின் கற்பு குறித்து பேச வைக்கிறது. ஒரு பெண் கல்யாணத்திற்கு முன்போ அல்லது பின்போ மற்ற ஆண்களுடன் உறவு கொள்ளாமல் இருப்பதையே கற்பு என்கிறார்கள். இதையே ஆணுக்கு வரையறுப்பதில்லை.ஒரு குடும்பத்தின் மானம் , கௌரவம் , மரியாதை, லொட்டு , லொசுக்கு என எல்லாம் பெண்ணின் கற்பில் தான் உள்ளது என நம்பவைக்கப்பட்டுள்ளது. இதற்கு வரலாற்றிலிருந்தும் தரவுகள் தருகிறார்கள். அதே நேரம் ஆண் கற்பில்லாமல் நடந்து கொண்டார்கள் என்பதற்கும் வரலாற்று தரவுகள் இருக்கின்றன. இதிலிருந்து பெண்ணை அடிமைப்படுத்துவதற்கு தான் கற்பு என்பது பயன்படுகிறது என்பதை அறிய முடியும்.
எல்லாவற்றையும் ஆணிற்கும் , பெண்ணிற்கும் பொதுவில் வைக்கும் போது கற்பையும் பொதுவில் வைப்பது தானே நியாயமாக இருக்கும். ஆணிற்கு கற்பு தேவையில்லை என்றால் அதே கற்பு பெண்ணிற்கும் தேவையில்லை. அவரவர் உடல் அவரவருக்கே சொந்தம் . அதில் இன்னொரு மனிதர் தலையிட எந்த உரிமையும் இல்லை. 'என் உடல், என் உரிமை ' என்று சொல்வதற்கு எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஒவ்வொரு மனிதரும் தன் வாழ்நாள் முழுவதும் தூக்கி அலைவது அந்த உடலைத் தான். என்ன உணவு உண்ண வேண்டும் , எந்த ஆடை உடுத்த வேண்டும் , என்ன வேலை செய்ய வேண்டும் , எப்போது எழுந்திருக்க வேண்டும் , எப்போது தூங்க வேண்டும் , யாருடன் உறவு கொள்ள வேண்டும் என தன் உடல் மீதான இறுதி முடிவு எடுப்பவர் அந்த மனிதர் தான். எவ்வளவு நெருங்கிய சொந்தமாக இருந்தாலும் மற்ற மனிதர்களெல்லாம் பார்வையாளர்கள் தான்.
விதவை , கைம்பெண் என விதவிதமான பெயர்களில் பெண்களின் மீதான ஒடுக்குமுறை தான் இந்தியாவெங்கும் உள்ளது. இன்று வரை விதவை மறுமணங்களின் எண்ணிக்கை நம்பிக்கை அளிக்கும் வகையில் உயரவில்லை. ஆணிற்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லை. ' இன்னொருத்தன் தொட்டவள எப்படி கல்யாணம் செய்து கொள்வது ' என்பது தான் பெண்ணை உடலாகவே பார்த்து பழக்கப்பட்ட ஆண்களின் மனநிலை. ஆண் என்று வரும்போது ' இன்னொருத்தி தொட்டவன எப்படி கல்யாணம் செய்து கொள்வது ' என்று கேட்கும் உரிமை பெண்களிடம் இல்லை. இப்படி பலவற்றிலும் கற்பு என்று அடையாளப்படுத்துவதன் பாதிப்புகள் உள்ளன. கற்பு உண்டென்றால் இருவருக்கும் உண்டு , இல்லையென்றால் இருவருக்கும் இல்லை என்பது தான் சரியாக இருக்கும்.
'தாய்மை' என்பது இங்கே மிகவும் அதிகமாக புனிதப்படுத்தப்பட்டுள்ளது. தாய்மையில் புனிதப்படுத்த எதுவும் இல்லை. அது ஒரு உயிரினச் செயல்பாடு. உலகிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் தாய்மை உண்டு. மனித இனம் தான் அதிலும் தமிழினம் தான் தாய்மை குறித்து அதிகம் பெருமிதம் கொள்வது போல் தெரிகிறது. எல்லா உயிரினங்களுமே தங்களின் அடுத்த தலைமுறையை வளர்த்தெடுக்க அதிகம் மெனக்கெடவே செய்கின்றன. விலங்குகள் , பறவைகள் என எல்லாவற்றிலும் நடப்பது இது தான். தனது குட்டிகளுக்கோ , குஞ்சுகளுக்கோ எப்படியாவது இரையைத் தேடிக் கொடுத்து வளர்த்து விடுகின்றன. அவற்றுக்கு ஏதேனும் ஆபத்து நேரும் போது தங்களின் உயிரைக் கொடுத்தாவது காப்பாற்ற முயற்சி செய்கின்றன. இவற்றை விடவா மனித இனத்தில் தாய்மை செய்து விடுகிறது. அதே விலங்குகள் , பறவைகள் தங்களின் குட்டிகள் , குஞ்சுகள் பெரிதானவுடன் அதாவது அவை தானாக இரையைத் தேட கற்றுக்கொண்ட பிறகு அவற்றை விரட்டி விடுகின்றன. இந்திய , தமிழ் சமூகத்தில் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆனவுடன் மேற்கத்திய நாடுகளைப் போல தனித்து இயங்க அனுமதிப்பதில்லை.இந்தியக் குடும்பங்கள் அவர்களை அதிகமான கற்பனை மற்றும் எதிர்பார்ப்புகளுடன் பொத்தி பொத்தி வளர்க்கின்றன. குழந்தைகளை வளர்ப்பதை முதலீடு போலவே நினைத்துச் செயல்படுகிறார்கள்.இந்த மனநிலை மாறாதவரை இந்திய சமூகம் முன்னேற்றமடையாது.
தாய்மை என்பதும் பெண்ணை பலவீனப்படுத்தும் ஒரு செயல் தான். ஒரு பக்கம் தாய்மை , தெய்வம் , கடவுள் என்று சொல்லிக்கொண்டே இன்னொரு பக்கம் யாரோ ஒருவருக்கு தாயாக இருக்கிற அல்லது எதிர்காலத்தில் தாயாகப் போகிற பெண்கள் மீது தொடர்ச்சியான வன்முறைகளை ஏவிக்கொண்டே இருக்கிறது ஆணாதிக்க சமூகம். தாய்மை , தாய்மை என்று சொல்லியே பெண்களின் சுதந்திரத்தையும் , தனித்துவத்தையும் அழித்து சிறைக்குள் பூட்டி விடுகின்றனர்.
குழந்தைகள் பிறப்பதற்கு ஆண் , பெண் இருவருமே தான் காரணம். ஆனால் இங்கே குழந்தைகள் பெண்களின் உடைமைகளாகவே பார்க்கப்படுகின்றனர். குழந்தைகள் வளர்ப்பில் ஆண்களின் முக்கியத்துவம் தட்டிக்கழிக்கப்படுகிறது. குழந்தைகள் என்றாலே பெண்கள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது பொது விதியாகிப் போனது. தாய்மை உணர்வை அடையாத அதாவது ஏதோ ஒரு காரணத்தால் குழந்தை பெற்றுக்கொள்ளாத பெண்கள் படும் பாடுகள் இன்றும் சற்றும் குறையவில்லை. சமுதாயத்தின் அனைத்து மட்டங்களிலும் இதே நிலை தான்.
குழந்தைகள் பிறப்பதற்கு ஆண் , பெண் இருவருமே தான் காரணம். ஆனால் இங்கே குழந்தைகள் பெண்களின் உடைமைகளாகவே பார்க்கப்படுகின்றனர். குழந்தைகள் வளர்ப்பில் ஆண்களின் முக்கியத்துவம் தட்டிக்கழிக்கப்படுகிறது. குழந்தைகள் என்றாலே பெண்கள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது பொது விதியாகிப் போனது. தாய்மை உணர்வை அடையாத அதாவது ஏதோ ஒரு காரணத்தால் குழந்தை பெற்றுக்கொள்ளாத பெண்கள் படும் பாடுகள் இன்றும் சற்றும் குறையவில்லை. சமுதாயத்தின் அனைத்து மட்டங்களிலும் இதே நிலை தான்.
குழந்தை பிறப்பதற்கு ஆண் , பெண் இருவரது உடலும் ஒத்துழைக்க வேண்டும். யாராவது ஒருவர் உடலில் குறைபாடு இருந்தாலும் பெண் தான் குற்றவாளியாக்கப்படுகிறார். நாளுக்கு நாள் குழந்தையின்மை என்பது பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. கல்யாண வயது , வேலைச்சூழல் , உணவு , ஜீன்கள் எனப் பலவும் குழந்தையின்மைக்கு காரணங்களாக இருக்கின்றன. குழந்தையின்மையை நீக்குவதற்கான சிகிச்சை என்பது பெரும் வணிகமாக மாறியுள்ளது. எப்படியாவது குடும்பத்திற்கு ஒரு வாரிசு வேண்டும் என்று ஒவ்வொரு குடும்பமும் நினைக்கிறது. சமூக அழுத்தமும் முக்கிய காரணம். இதை வைத்து அழகாக காசு பார்க்கிறார்கள். திருமணமானவரைப் பார்த்து 'உங்களுக்கு எத்தனை குழந்தைகள் ?' என்று கேட்பதே வன்முறை என்கிறார்கள் , மனநல மருத்துவர்கள். குழந்தையின்மை அந்த அளவிற்கு மனிதர்களை முடக்கிப்போடும் வல்லமை உடையது. உயிரினங்களின் பிறவிப்பயனே இனப்பெருக்கம் என இருக்கும் போது அதற்காக மெனக்கெடுவதில் தவறில்லை. ஆனால் அதற்காக அவர்களை குற்றவாளிகளாக்கி அழகு பார்க்கக்கூடாது.
தாய்மை என்ற பெயரில் பெண்களை ஒடுக்கும் இன்னொரு விசயம் குழந்தைகள் இருந்தால் மறுமணம் செய்ய அனுமதிக்காதது. ஏதோ ஒரு காரணத்தால் கணவனை இழந்தோ அல்லது பிரிந்தோ வாழும் பெண்களை மறுமணம் செய்ய நம் சமூகம் விடுவதில்லை. குழந்தைகளுக்காக மறுமணம் செய்யாமல் அவர்களுக்காகவே அந்தப் பெண் தனியாகவே உழைத்து ஓடாய் தேய்ந்து போக வேண்டும். அப்படி அவர்களை வளர்த்து கரை சேர்த்தால் ஒற்றை ஆளாய் எல்லாம் செய்து முடித்து விட்டாள் என்று உச்சி முகரும். ஆனால் அவளது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தோ , விருப்பு , வெறுப்புகள் குறித்தோ இந்த சமூகத்திற்கு எந்தக் கவலையும் இல்லை. மற்றவர்களிடம் தியாகி பட்டம் வாங்குவதற்காக தன்னை அழித்துக் கொள்வது தான் இதில் நடக்கிறது. இதை தெரிந்து கொள்ளவோ , சரியான விதத்தில் அணுகவோ ஆண் சமூகம் தயாராகயில்லை. ஒரு விதவையை , கணவரை பிரிந்தவரை மறுமணம் செய்வது என்பது புரட்சி என்று மட்டுமே ஆண்களின் மனதில் பதிந்துள்ளது. தாய்மை உணர்வு இருக்க வேண்டியது அவசியம். ஆனால் அதை புனிதப்படுத்த வேண்டியதில்லை. இதை முதலில் பெண்கள் உணர வேண்டும்.
ஆண் , பெண் சமத்துவம் நிகழ பொருளாதார சமத்துவம் ஏற்பட வேண்டியது அவசியமாகிறது. அப்படியே அமைய வாய்ப்பு இருந்தாலும் அந்த சமத்துவத்தை தர இந்திய குடும்பங்களும் , ஆண்களும் தயாராகயில்லை. வாசிப்பு பழக்கம் உள்ளவர்கள் பெரும்பாலும் பெண்களுக்கு மரியாதை தருகிறவர்களாக இருக்கிறார்கள். வாசிப்பு பழக்கம் மட்டுமே ஒருவரை சுத்தப்படுத்தி விடாது என்பதற்கும் உதாரணங்கள் உள்ளன. தற்போதைய சூழலில் இலக்கியத்தின் உச்சத்தில் இருப்பவர்களாக சொல்லப்படுபவர்கள் கூட பெண் சுதந்திரத்திற்கு எதிரானவர்களாக இருக்கிறார்கள். பொதுமக்களை உள்ளடக்கிய தொடர்ச்சியான செயல்பாடுகள் மூலம் தான் சிறிய அளவிலான மாற்றங்களையாவது சமூகத்தில் உருவாக்க முடியும். வாசிப்பு அதற்கு முதல்படியாக இருக்கும் என நம்பலாம். வாசிப்பை பெரிய அளவில் கொண்டு போக வேண்டிய கடமை தற்போதைய தலைமுறைக்கு இருக்கிறது.காட்சி ஊடகங்கள் அதாவது சினிமா , தொலைகாட்சி மூலமாக மக்களைச் சென்றடைவது எளிது. ஆனால் இங்கே சினிமாவும் , தொலைக்காட்சியும் ஆணாதிக்கத்தையும் , மூடநம்பிக்கைகளையும் தண்ணீர் ஊற்றி வளர்த்து வருகின்றன. அப்புறம் எங்கே சமத்துவத்தையும் , சமூக நீதியையும் பேசப் போகின்றன. பெரிய அளவிளான இயக்கங்கள் உருவாக வேணடும். உருவாகும் என நம்புவோமாக..!
பாலியல் பேசுவோம்....
தொடர்புக்கு :
குறி சிற்றிதழ் ,
9/3 , யூசுப் நகர் ,
மாரம்பாடி சாலை,
வேடசந்தூர் -624710,
திண்டுக்கல் மாவட்டம் .
சந்தாதாரர் ஆக:
குறி சிற்றிதழ் ,
9/3 , யூசுப் நகர் ,
மாரம்பாடி சாலை,
வேடசந்தூர் -624710,
திண்டுக்கல் மாவட்டம் .
சந்தாதாரர் ஆக:
குறி தனி இதழ் ரூபாய் .30
பத்து இதழ் சந்தா ரூபாய்.300
சந்தா SBI வங்கி மூலம் செலுத்தலாம்
P.MANIKANDAN
A/C NO. 30677840505.
VEDASANDUR
IFS CODE : SBIN0011941
இதழாசிரியர் மணிகண்டன் - 9976122445.
இதழ் குறித்த உங்களின் பின்னூட்டங்கள் மற்றும் படைப்புகளை
kurimagazine@gmail.com
என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் .
மேலும் படிக்க :
நல்ல பதிவு. இவ்வாறான ஆரோக்கியமான உரையாடல்கள் நிச்சயம் சமூக மாற்றத்தை உருவாக்கும். உங்கள் பதிவு எங்கள் தளத்தில்....
ReplyDeleteசிகரம் : மானிடன் | கட்டுரை | இதிலென்ன இருக்கு பேசுவோம் -6 !
மிக்க மகிழ்ச்சி தோழர். மிக்க நன்றி !
Delete