Pages

Monday, December 3, 2018

இதிலென்ன இருக்கு பேசுவோம் -7 !காமம் என்ற வார்த்தையே இங்கு தவறாகத்தான் பார்க்கப்படுகிறது , தவறாகத்தான் புரிந்து கொள்ளப்படுகிறது. ஒதுக்கி ஒதுக்கியே காமத்தை இயல்பில்லாத ஒன்றாக நினைக்கப் பழகி விட்டோம். மற்ற உயிரினங்களில் எப்படியோ தெரியாது. ஆனால் மனித இனத்தில் காமம் முக்கிய பங்கு வகிக்கிறது. காமமே நம்மை வழிநடத்துகிறது.மனித இனத்தில் பெண் இல்லாத உலகமும் சாத்தியமில்லை , ஆண் இல்லாத உலகமும் சாத்தியமில்லை.அதே போல காமம் இல்லாத மனித இனமும் சாத்தியமில்லை.

காமத்தைப் பொறுத்தவரை எல்லா மனிதர்களும் சமமில்லை என்று தான் சொல்ல வேண்டியுள்ளது. கைரேகை போலவே ஒவ்வொருவரின் காமமும் தனித்துவமானது. அதுவே புரிந்து கொள்வதில் சிக்கலாகவும் மாறிவிடுகிறது. குழந்தைகளாக இருக்கும்போது பாலின பேதமில்லாமல் விளையாடுகிறோம். பாலுறுப்புகள் மூலம் ஆண் ,பெண் என்ற பேதம் தெரிய வருகிறது. பல்வேறுவிதமான விளையாட்டுகளின் ஊடே அப்பா -அம்மா விளையாட்டும் விளையாடப்படுகிறது. நான்கைந்து வயதுகளில் அந்த விளையாட்டு யாரோ ஒருவர் மூலம் எப்படியோ அறிமுகமாகிவிடுகிறது. ஒருத்தரை ஒருத்தர் கட்டிப்பிடிப்பது தான் நடக்கும். அதுவும் பெரியவர்கள் கவனத்திற்கு வந்த பிறகு நாலு சாத்து சாத்தி திருத்தப்படும். அப்புறம் குறிப்பிட்ட வயதிற்கு பிறகு பெண்களை ஆண்களுடன் விளையாட விடமாட்டார்கள். பதினான்கு ,பதினைந்து வயதுகளில் பாலியல் தொடர்பான சந்தேகங்கள் எழும்.நண்பர்களின் மூலம் பலான புத்தகங்கள் , பலான படங்கள் அறிமுகம் ஆனாலும் ஒரு தெளிவும் இருக்காது. குழந்தை எப்படி உருவாகிறது , எதன் வழி பிறக்கிறது என்பதேயே தாமதமாகத் தான் அறிந்து கொள்ள முடிந்தது. நிறைய தமிழ்த் திரைப்படங்கள் பெண்களின் கழுத்தில் முத்தம் வைத்தால் குழந்தை பிறக்கும் என்பது போன்ற பிம்பத்தையே உருவாக்கி வைத்திருந்தன. கதாநாயகனும் , கதாநாயகியும் கட்டிப்பிடிப்பதைக் கூட பொய்யென்று நம்பினோம். ரெண்டு பேரையும் தனித்தனியாக படமெடுத்து அப்புறம் இணைச்சு விட்டு கட்டிப்பிடிப்பது போல காண்பிக்கிறாங்க என்றே நினைத்தோம். இன்றைய ஆன்ட்ராய்டு வாழக்கையில் அந்த அளவிற்கு நிலமையில்லையென்றாலும் கூட பதின்பருவத்தினர் சரியாக வழிநடத்தப்படுவதில்லை. இருபாலர் பள்ளிகளில் படித்தவர்கள் எதிர் பாலினம் மீதான ஈர்ப்பை கொஞ்சம் நெருக்கமாகவே உணர்ந்திருப்பார்கள். பல்வேறு வகுப்புகளில் உடன்படித்த நம்மை வசீகரித்த பெண்களின்/ ஆண்களின் நினைவுகளில் இன்றும் நம்முள் நிச்சயம் இருக்கும். கிரஷ் (Crush) என்று சொல்வது எல்லா காலகட்டங்களிலும் எல்லோருக்கும் இருக்கும். காதல் கூட வராமல் போகலாம் கிரஷ் வராமல் போகவே போகாது.

பள்ளிப்படிப்பு முழுமையும் அரசுப்பள்ளி . ஒன்றாவதிலிருந்து ஐந்தாவது வரை இருபாலர் பள்ளி. ஆறிலிருந்து பனிரெண்டு வரை ஆண்கள் பள்ளி என்றாலும் பதினொன்று , பனிரெண்டாவதில் மட்டும் இருபாலர் பள்ளியாக அப்போது செயல்பட்டது. பெண்கள் பள்ளியில் இடவசதி பத்தாததால் பதினொன்றாவதும் , பனிரெண்டாவதும் ஆண்கள் பள்ளியில் செயல்பட்டது . இந்த காரணத்திற்காக பெண்களை அடுத்து படிக்க வைக்காதவர்களும் இருந்தார்கள். இதே காரணத்திற்காக வேறு பள்ளிக்கு தங்களின் பெண் பிள்ளைகளை மாற்றியவர்களும் இருந்தார்கள். ஒரே அறையில் மாணவர்களும் ,மாணவிகளும் நூறு பேர் நெருக்கியடித்துக் கொண்டு படித்தாலும் பள்ளியில் இருக்கும் போது மாணவ மாணவிகள் பேசிக்கொண்டதில்லை. ஓய்வு நேரத்தில் மாணவர்கள் ஒரு மரத்தடியிலும் , மாணவிகள் ஒரு மரத்தடியிலும் அமர்ந்திருப்பார்கள். வேதியியல் ஆசிரியர் , யாராவது ரெண்டு பசங்களைக் கூப்பிட்டு, " போய் பொண்ணுங்கள வரச்சொல்லுங்க " என்று சொல்லுவார். நாங்க போய் அவர்களின் முகம் பார்த்து சொல்வதற்கு பதிலாக மரத்தைப் பார்த்து கெமிஸ்ட்ரி சார் வரச்சொன்னார் என்று சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் வந்து விடுவோம். இப்படியான சூழல் தான் அப்போது நிலவியது.

இதுவரையிலான நமது வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட காலகட்டம் எந்தக்காலத்திலும் மறக்க முடியாத பொன்னான நினைவுகளைக் கொடுத்திருக்கும். எனது வாழ்க்கையில் அப்படியான காலகட்டம் இளங்கலை கல்லூரிக் காலம் தான். அதனுடன் எதனையும் பதிலீடு செய்ய முடியாது. கிராமத்து மாணவர்களுக்கு இயல்பிலேயே இருக்கக்கூடிய பயத்தை , தயக்கத்தை பெருமளவு உடைத்தது அந்த கல்லூரி வாழ்க்கை தான். இப்போதும் பயமும் தயக்கமும் இருக்கிறது தான் என்றாலும் அப்போதிருந்த அளவிற்கு இல்லை. பெண்களைப் பற்றி புரிந்து கொள்ள ஆரம்பித்ததும், ஏன் பேச ஆரம்பித்ததே அப்போது தான் என்று தான் சொல்ல வேண்டும். அது ஒரு கிறித்துவ கல்லூரி அங்கு பெண்களுடன் பேச எந்த தடையும் இல்லை. எப்போதும் எந்த இடத்திலும் பெண்களுடன் பேச முடியும்.கல்லூரி சென்ற முதல் நாளே வகுப்பறையில் பெண்கள் ஆண்கள் கலந்து தான் உட்காரவே வைக்கப்பட்டோம். பெண்களையும் ,பெண்களின் உணர்வுகளையும் மதிக்கக் கற்றுக்கொண்டதும் அப்போது தான்.

வகுப்பறையில் மாணவர்கள் , பெண்கள் பெஞ்சில் பெண்களுடன் அமர்ந்திருந்தாலும் வகுப்பெடுக்க வரும் விரிவுரையாளர்கள் மாறி உட்காரச் சொல்ல மாட்டார்கள். பாலின சமத்துவம் கல்லூரி எங்கும் இருந்தது. முழு சுதந்திரமும் இருந்தது. அதே நேரத்தில் எல்லைக்கோட்டைத் தாண்டாதவாறு கண்காணிக்கப்பட்டோம். நாங்களும் அதற்கேற்றவாறு நடந்து கொண்டோம். ஜூனியர் சீனியர் என்ற பேதமெல்லாம் பெரும்பாலும் இருந்ததில்லை. நண்பர்கள் எல்லோரும் மரத்தடியில் வட்டமாக அமர்ந்து மதிய உணவை பகிர்ந்து உண்போம். கல்லூரிக்குச் செல்லும் வரை எந்த மேடையும் ஏறாமல் இருந்த எனது மேடை பயத்தை போக்கியது அந்த கல்லூரிக் காலம் தான். எழுதுவதற்கும் அப்போதே ஊக்குவிக்கப்பட்டேன். நான்கு குழுவாக பிரிந்து விளையாடும் விளையாட்டு போட்டிகள் அனைத்திலும் பங்கு பெற்றேன். ஒவ்வொருவருக்கும் தங்களது திறமையை வளர்த்துக்கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டது. அவ்வப்போது கலந்தாய்வுகளும் நடக்கும். ஓசை காளிதாசன் ஒருமுறை கல்லூரிக்கு வந்திருந்த போது தான் புல்வெளிக்காடுகளின் முக்கியத்துவத்தை தெரிந்துகொள்ள முடிந்தது. வருடத்திற்கு ஒரு முறை அதுவும் ஒரு நாள் என்று மூன்று முறை தான் கல்லூரி பயணம் சென்றோம். அவ்வளவு அற்புதமான நாட்கள் அவை.

எங்கள் துறை மட்டுமல்லாமல் மற்ற துறைகளில் படிப்பவர்களும் பெருமளவில் நண்பர்களாக இருந்தார்கள். எல்லாத்துறை ஆசிரியர்களும் எல்லோருக்கும் ஏதோ ஒரு விதத்தில் அறிமுகமாகி விடுவார்கள். கல்லூரி முழுவதும் நட்பூக்கள் தான். இப்படி அந்தக் கல்லூரிக் காலம் குறித்து பேசிக்கொண்டே போகலாம். அந்தக் காலம் ஒருபோதும் திரும்பிவிடப் போவதில்லை. ஆனால் அந்த நினைவுகள் என்றும் மனதை விட்டு அகலாது. அதன் பிறகு முதுகலை படிப்பு தமிழகத்தின் பெரும்பாலான கல்லூரிகள் போலவே ஆண் -பெண் பேசுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் பேசிக் கொள்வோம் என்றாலும் இயல்பாக சுதந்திரமாக பேசிக் கொள்ளும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. எதிர் பாலினத்தை அதாவது ஆண்களை பெண்களும் , பெண்களை ஆண்களும் புரிந்து கொள்வதில், புரிந்து கொள்ள முயற்சிப்பதில் தான் எல்லாமும் இருக்கிறது.

பெண்கள் அறிமுகம் ஆகும் போது அவர்களுடன் உரையாடவே அதிகம் விரும்பியிருக்கிறேன். அவர்களை நேரில் பார்த்து தான் ஆக வேண்டும் என்றெல்லாம் யோசித்ததில்லை. நாம் சொல்வதை கேட்பதற்கு ஒரு ஆள் இருந்தால் போதும் என்று தான் தோன்றும். அதிலும் எதிர் பாலினமாக இருக்கும் போது இயல்பாகவே நமக்கு ஒரு ஈர்ப்பு உருவாகிவிடும். இப்படியான நட்பே அவ்வப்போது வந்து போய்க்கொண்டு தான் இருக்கிறது. ஏதோ ஒரு காரணத்தால் உரையாடல் தொடங்கும் , வளரும் அப்புறம் முடிந்துவிடும். அதன் பிறகு அவர்களை ஒருபோதும் தொந்தரவு செய்ததில்லை. பெரும்பாலும் எந்த பெண்ணாக இருந்தாலும் ஒரு ஆணிடம் நம்பிக்கை ஏற்படாமல் எந்த தகவலையும் பகிர மாட்டார்கள். ஏன் பேசவே முன்வர மாட்டார்கள். கவனமாக தவிர்த்து விடுவார்கள். தங்களுக்கு பிடிக்காத எதையும் எந்த எதிர்வினையும் ஆற்றாமல் தவிர்த்து விடுவதை பெண்களின் வலிமையான ஆயுதம். இதை சரியாக பயன்படுத்தினால் யாராலும் பெண்ணை நெருங்க முடியாது. பெண்களின் இயல்புகளை ஆண்களும் ஆண்களின் இயல்புகளை பெண்களும் புரிந்து கொள்ளாமல் இங்கு எதுவும் மாறாது. எவ்வளவு படித்திருந்தாலும் , எவ்வளவு பெரிய வேலை பார்த்தாலும் ,எவ்வளவு சம்பாதித்தாலும் ஒரு பயனும் இல்லை. பெண்களின் இயல்புகளை புரிந்து கொள்ள ஆண்களால் 'முயற்சி' மட்டுமே செய்ய முடியும் என்றாலும் அதையும் பெரும்பான்மையான ஆண்கள் செய்வதில்லை என்பது தான் பிரச்சனையே. ஆனால் ஆண்களின் உளவியலை பெண்கள் எளிதாக புரிந்து கொள்கிறார்கள்.

காமத்திற்கும் எதிர் பாலினத்தை புரிந்து கொள்வதற்கும் தொடர்பிருக்கிறதா ? நிச்சயம் தொடர்பிருக்கிறது.கல்லூரிக் காலங்களில் சைட் அடிக்கும் போது கூட பத்தாவது வரை படிக்கும் மாணவிகளை சைட் அடிக்கக்கூடாது என்று தீர்மானித்து இருந்தோம். பதினொன்னாவது , பனிரெண்டாவது படிக்கும் மாணவிகளை அவர்கள் அணியும் ரிப்பனின் நிறத்தைக் கொண்டு கண்டறிந்து சைட் அடித்தவர்கள் தான் நாங்கள். அப்படி இருக்கும் போது அவர்கள் எங்களுடன் பேச முயற்சித்தால் அதை கவனமாக தவிர்த்தோம். அதே நேரம் கல்லூரி மாணவிகள் என்றால் பேசத் தயாராகவே இருந்தோம். பெண்களை பெண்களாகவே பார்க்க பிடிக்கும். பேதங்கள் எப்போதும் பார்த்ததில்லை. நாம் எல்லாவற்றையும் மிகைப்படுத்துவதால் தான் இயல்பாக இருக்காமல் நடிக்கப் பழகிக் கொள்கிறோம்.

சமூக மதிப்பீடுகள் என்ற பெயரில் நிறைய அழுத்தங்கள் மனிதர்களுக்கு கொடுக்கப்படுகின்றன. குடும்பம் என்ற அமைப்பு தான் அதிக அழுத்தத்தைக் கொடுக்கிறது. பாலின சமத்துவத்தை குழந்தைப் பருவத்திலிருந்தே பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டும். 14 வயது வரை ஆண்பிள்ளைகளையும் , பெண்பிள்ளைகளையும் குழந்தைகளாகவே நடத்தி அவர்களுக்கு எதிரான வன்முறைகளிலிருந்து அவர்களை காக்க வேண்டியது நம் கடமையாகும். மற்ற வன்முறைகளை விடவும் குழந்தைக்களுக்கு எதிரான வன்முறைகள் நம்மை நிம்மதியிழக்கச் செய்கின்றன. கல்வியின் மூலமே எல்லா குழந்தைகளையும் சென்றடைய முடியும் என்றாலும் ஒரு சில கல்விக்கூடங்களில் பணிபுரியம் சில அயோக்கியர்களால் அங்கேயும் குழந்தைகள் மீதான வன்முறை நிகழ்கிறது. 14 வயதிற்கு பிறகு உடலில் நடக்கும் மாற்றங்களை தெளிய வைப்பதன் மூலம் எதிர் பாலினம் மீதான அதீத ஈர்ப்பு கட்டுப்படுத்தப்படும். தவறான பாதையில் செல்வதும் தடுக்கப்படும். எதிர் பாலினத்திடம் ஏமாறாமலும் இருக்க முடியும். ரெண்டும்கெட்டான் பருவத்தை சிக்கலில்லாமல் தாண்டவும் முடியும். பெண்களுக்கும் ,ஆண்களுக்கும் தனித்தனியே பள்ளிகள் , கல்லூரிகள் நடத்துவது தான் கொடுமையென்றால் இருபாலர் பள்ளிகள் ,கல்லூரிகளில் இருபாலரும் பேசிக்கொள்ளக்கூடாது என்று சொல்லுவது கொடுமையிலும் கொடுமை. பாலியல் கல்வி கொடுக்கப்பட வேண்டியதன் அவசியம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது.

ஆண்களையும் , பெண்களையும் குழந்தைப்பருவத்திலிருந்தே பிரித்தே வளர்த்து , படிக்க வைத்து, வேலைக்கும் அனுப்பிவிட்டு, கல்யாணம் என்று வரும்போது மட்டும் எதிர் பாலினத்தை தேர்வு செய்து ஒரு அறைக்குள் தள்ளி 'போங்க போய் மகிழ்ச்சியாக வாழுங்க' என்று அனுப்பி வைக்கிறார்கள். நட்பு வட்டத்தைப் பொறுத்தும் ,அவர்களின் சுய தேடலை பொருத்துமே எதிர் பாலினம் மீதான புரிதல் உருவாகும். புத்தக வாசிப்பு எதிர் பாலினம் மீதான நிறைய மனமாற்றங்களை நம்முள் ஏற்படுத்துகிறது. திரைப்படம் இன்னொரு சக்தி வாய்ந்த வழிவகையாக இருந்தாலும் தமிழ் திரைப்படங்கள் எதிர் பாலினம் மீதான தவறான புரிதலையே கட்டமைக்கின்றன. அதே நேரத்தில் உலகெங்கும் எடுக்கப்படும் நிறைய திரைப்படங்கள் நமது போலியான சமூக மதிப்பீடுகளை அடித்து நொறுக்குகின்றன. உலகத்திரைப்படங்கள் பார்க்காத வரை கற்பு , ஒருவனுக்கு ஒருத்தி,ஏதோ ஒரு காரணத்தால் பெண்களைத் தனிமைப்படுத்துவது, பெண் ,ஆண் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்பது போன்ற போலியான ஏற்பில்லாத கற்பிதங்களே நிரம்பியிருந்தன. அந்த மனநிலையிலிருந்து வெளியேறி ஒரு பொதுத்தளத்திலிருந்து ஆண்-பெண் உறவுகளை பார்க்க வைத்தது உலகத் திரைப்படங்கள் தான். கலையே மனிதர்களை மேம்படுத்தும், மனிதத்தை பரவச் செய்யும்.அதிலும் காட்சி ஊடகமே மிக வலிமையானதாகவும் அதிகம்பேரைச் சென்றடைவதாகவும் இருக்கிறது.

பெண்களை போகப் பொருளாக கட்டமைத்ததில் காட்சி ஊடகங்களின் பங்கு தான் முதன்மையானது. அதிலும் பெண்களின் மார்பகங்களை கவர்ச்சியின் உச்சமாக நிறுவியதும் அதே காட்சி ஊடகங்கள் தான். இயல்பாகவே ஒரு ஆண், பெண்ணை பார்க்கும் அவளது மாரபகத்தையும் பார்க்கவே செய்வான். மார்பகத்தை பாரக்காமல் கண்ணை மட்டும் பார்த்து பேசுபவர்கள் ஒன்றும் உத்தமர்கள் அல்ல. அதே நேரத்தில் மார்பகத்தை மட்டும் பார்த்துக்கொண்டே பேசுவதும் சரியான மனநிலையல்ல. மார்பகமும் ஒரு பாலியல் உறுப்புதான். ஒரு பெண் கருவுறுதலுக்கு தயாராக இருக்கிறாள் என்பதை ஆணிற்கு தெரிவிக்கும் சமிக்கையாகவே மார்பகங்கள் இருக்கின்றன. கலவியின் போது சுகத்தை அதிகப்படுத்தவும் , குழந்தை பிறந்த பிறகு பாலூட்டவும் பெண்களின் மார்பகங்கள் உதவுகின்றன. அதனால் இனவிருத்தியையே முதன்மையானதாக கருதும் இயற்கையின் விதிப்படி ஆண்கள் பெண்களின் மார்பகங்களை பார்க்கவே செய்வார்கள். பெண்களின் பின்புறத்தைப் பாரக்கவும் அதே இயற்கை தான் காரணமாக இருந்திருக்கிறது. நான்கு கால் விலங்கினமாக இருக்கும் போது பின்புறம் உப்பி சிவந்திருப்பதை பார்ப்பதன் மூலமே பெண் விலங்கு இனப்பெருக்கத்திற்கு தயாராக இருக்கிறது என்பதை ஆண் விலங்கு அறிந்து கொள்ளும். அதன் எச்சமே இன்றும் ஆண்கள் பெண்களின் பின்புறத்தைப் பார்ப்பதற்கு காரணமாக இருக்கிறது. மற்றபடி பெண்களின் மார்பகங்களையும் ,பின்புறத்தையும் கவர்ச்சி பொருளாக்கி காசு பார்ப்பது வணிகமாகிப் போய்விட்டது.

இயல்பாகவே ஆண்களும் பெண்களும் எதிர்பாலினத்தை ரசிப்பதையும் ,எதிர்பாலினத்தால் ரசிக்கப்படுவதையும் எப்போதுமே விரும்பக்கூடியவர்களாகத் தான் இருக்கிறார்கள் எந்த வயதிலும். விதிவிலக்குகள் (LGBT ) இருக்கின்றன. யோசித்து பாருங்கள் எதிர் பாலினம் இல்லையென்றால் உலகம் எப்படி இருக்கும் என்று. ரொம்பக் கொடூரமாக இருக்கும். ஒரு பேருந்தில் ஏறும் போது அந்தப் பேருந்தில் பெண்களே இல்லாமல் இருந்தால் ஏற்படும் மனநிலையை நினைத்துப் பாருங்கள். ஏதோ கொஞ்சம் தூரம் பயணிக்கப் போகிறோம். அங்கே பார்க்கும் பெண்களே மறுபடி சந்திப்போமா தெரியாது. ஆனால் மனம் அங்கே பெண்களின் இருப்பை விரும்புகிறது. அங்கே மட்டுமல்ல எங்கேயும் எதிர்பாலினத்தின் இருப்பு அவசியமாகிறது. முகநூலை எடுத்துக் கொள்ளுங்கள். வெறும் ஆண்நண்பர்களை மட்டும் சேர்த்திருக்கும் ஆண்களையோ , வெறும் பெண் நண்பர்களை மட்டும் சேர்த்திருக்கும் பெண்களையோ பார்த்திருக்கிறீர்களா ? பார்த்திருக்கவே மாட்டோம். நமது இருப்பை நியாயப்படுத்துவது எதிர்பாலினத்தின் இருப்பு தான்.

பெண் பொருளாக பார்க்கப்படுவதற்கு ஆண்களின் உளவியலும் காரணமாக இருக்கிறது. ஒரு பெண்ணிற்கு ஒரு ஆணை பார்த்தவுடனேயே அவன் மீது மோகம் வந்து விடாது. முடிந்தால் இன்னொரு முறை திரும்பிப் பார்ப்பார். அவ்வளவுதான். தொடர்ந்து பேசிப்பழகி நம்பிக்கை ஏற்பட்டவுடன் தான் மோகமும் வரும். அதையும் இந்தியச் சூழலில் வெளிப்படுத்த முடியாது. அதே நேரத்தில் ஒரு ஆணிற்கு பெண்ணை பார்த்தவுடனேயே மோகம் வந்துவிடும். பெண் என்று இல்லை பெண் போன்ற உருவமே அவனுக்கு கிளர்ச்சியை உண்டாக்கும். பெரும்பாலும் பெண்களை பார்ப்பதிலிருந்து தங்கள் கண்களை அவ்வளவு எளிதாக ஆண்களால் விலக்கிக்கொள்ள முடியாது. இது எல்லா வயது ஆண்களுக்குமே பொருந்தும். மற்ற ஆண்களை விட தான் எந்த விதத்தில் உசத்தி என்பதை வெளிப்படுத்தவே ஒவ்வொரு ஆணும் அதிகம் மெனக்கெடுகிறான் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். ஆண்களின் இந்த மனநிலையை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்தி உலகமயமாக்கல் மூலம் பணம் பண்ணுவதில் பன்னாட்டு நிறுவனங்கள் கருத்தாக செயல்படுகின்றன. ஆண்கள் பயன்படுத்தும் பொருள் கூட பெண்களின் மூலமே அறிமுகப்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் பெண்களையும் பொருளாகவே இருக்கும்படி செய்து பணமீட்டுகிறார்கள்.

பெண்கள் தங்களின் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை பயன்படுத்தும் அழகு சாதனங்களின் எண்ணிக்கையும் அதன் வணிகமும் மிகவும் பெரியது. தற்போது ஆண்களையும் சுவீகரிக்கத் தொடங்கியிருக்கிறது இந்தத் துறை. இதுவும் ஒரு அடிமைத்தனம் தான். இந்த அடிமைத்தனத்திலிருந்தும் பெண்கள் வெளியேற வேண்டும். ஆண்களும் தான். ஆண்கள் மற்றும் பெண்களின் உளவியல் எல்லா பெருநிறுவனங்கள் கையிலும் இருக்கின்றன. அதை அடிப்படையாகக் கொண்டே பெரும்பாலன பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன, விளம்பரப்படுத்தப்படுகின்றன , விற்கப்படுகின்றன. எப்படியிருந்தாலும் நாம் அழகு தான் என்ற மனநிலை எப்போதும் நமக்கு இருக்க வேண்டும். எப்போதும் எந்த வயதிலும் அழகாகத் தெரிய வேண்டும் என்பதையே மனித மனமும் விரும்புகிறது. அப்படி விரும்புவதில் தவறில்லை. ஆனால் அதற்காக கொடுக்கப்படும் கவனமும் ,நேரமும் ,பணமும் தனிப்பட்ட வாழ்க்கையை அதிகமும் பாதிக்கவே செய்கிறது.

இயற்கையும் பெண்ணும் ஒன்று தான். இயற்கையை ரசிப்பது போலவே பெண்களையும் ரசிக்கலாம். ஒவ்வொரு பெண்ணிற்கும் தனித்துவமான வாசனை இருக்கிறது. அந்த வாசனையை ஆண் உணரும் போது பித்துபிடித்தவன் போலாகி விடுகிறான். அதிலும் அவர்கள் சூடியிருக்கும் மலரின் மணமோடு , உடலின் வாசனையும் சேரும் போது கிறக்கமே உருவாகிவிடும். இதுவரை உலகெங்கிலும் தயாரிக்கப்பட்ட அனைத்துவிதமான வாசனைத் திரவியங்களும் பெண்ணின் உடலின் வாசனையின் முன்பு தோற்றுத்தான் போகும். ஆண்களுக்கும் அப்படியான உடலின் வாசனை இருக்குமென்றே நினைக்கிறேன். அந்த வாசனையின் குணத்தைப் பற்றி பெண்கள் தான் சொல்ல வேண்டும். இயற்கையைக் கொண்டாடுவது போலவே பெண்களையும் கொண்டாடலாம். இயற்கைக்கும் பெண்களுக்கும் மிக நெருங்கிய தொடர்பிருக்கிறது. இயற்கை இல்லாமல் இந்த பூமியில்லை. பெண் இல்லாமல் மனித இனமில்லை. ஆனாலும் இயற்கைக்கு உரிய மரியாதையையும் , பெண்ணிற்கு உரிய மரியாதையையும் மனித இனம் கொடுப்பதேயில்லை. நாள்தோறும் கொடுமைகளையே கொடுத்து வருகிறது. எவ்வளவு இன்னல்களைச் சந்தித்தாலும் ஒரு நாள் இயற்கை மீண்டு எழும். அதே போல பெண்ணும் மீண்டு எழுவாள். தன்னைத்தானே சமநிலைப்படுத்திக் கொள்ளும் சக்தி இயற்கைக்கும் இருக்கிறது , பெண்ணிற்கும் இருக்கிறது.

காதல் என்பதும் இங்கே கொஞ்சம் அதிகமாகவே புனிதப்படுத்தப்பட்டுள்ளது. எந்தவிதமான காதலாக இருந்தாலும் ஒருநாள் காமத்தில் கலந்தே ஆக வேண்டும். காதல் என்ற உணர்வு தரும் களிப்பை அனுபவிக்க வேண்டியது தான். அதற்காக காதலை புனிதப்படுத்த வேண்டியதில்லை. பலரும் காதலிடம் தங்களை முழுதாக ஒப்புக்கொடுப்பதில்லை. அப்படி முழுதாக ஒப்புக் கொடுத்தவர்கள் அந்தக் காதல் மீது எந்தவித அழுத்தமும் இல்லாமல் இருப்பார்கள். அந்தக் காதலால் சேர்ந்திருந்தாலோ பிரிந்திருந்தாலோ எந்த மாற்றமும் இருக்காது. அகமும் புறமும் சந்திக்கும் இடமாகவே காதலும் , காமமும் இருக்கிறது. ஒட்டுமொத்த பெண்களின் உருவமாகவே தன் காதலியை காதலனும் , ஒட்டுமொத்த ஆண்களின் உருவமாகவே காதலனை காதலியும் பார்க்கிறார்கள். "நீ எனக்கு மட்டும் தான் " என்ற மனநிலை காதலர்களிடம் சற்று அதிகமாகவே இருக்கிறது. காதலி இன்னொரு ஆணுடனோ , காதலன் இன்னொரு பெண்ணுடனோ பேசிச் சிரிப்பது கூட பொறுத்துக் கொள்ள முடியாததாக இருக்கிறது. இது கூட இல்லைனா அப்புறம் என்ன காதல் என்றாலும் கூட பிரிவு என்று வரும்போது அதிக அழுத்தத்தை ,நெருக்கடியை இம்மனநிலை கொடுக்கிறது. ஒரு நேரத்தில் ஒருவரைத் தான் காதலிக்கணுமா ? பலரைக் காதலித்தால் என்ன தவறு என்ற மனநிலை அதிகரித்து வரும் இன்றைய சூழலில் காதலையும் அதன் அடிப்படைவாதத்திடமிருந்து , புனிதத்தன்மையிடமிருந்து காப்பாற்ற வேண்டிய கடமையிருக்கிறது.

உலகெங்குமே பரவலாக கொண்டாப்படும் எந்த ஒரு படைப்பிலுமே காமம் தான் முதலிடம் பெறுகிறது. இது ஒரு நல்ல சிறுகதை , இது ஒரு நல்ல நாவல் ,இது ஒரு நல்ல திரைப்படம் என அறிமுகமாகும் அனைத்திலுமே காமமே ஓங்கி இருக்கிறது. இதிலிருந்து மனித மனதிற்கு எப்போதுமே காமம் பிடித்தமான ஒன்றாகவே இருக்கிறது என்பதை அறிய முடிகிறது. தமிழ் திரையிசைப் பாடல்களில் கருப்பு வெள்ளை காலங்களிலிருந்தே காமம் தூக்கலான பாடல்கள் தொடர்ந்து இடம்பெற்று வந்திருக்கின்றன. 70 களுக்கு முந்தைய பாடல்களைப் புரிந்து கொள்ளும் போது எவ்வளவு அருமையாக, பூடகமாக காமச்சுவையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என வியக்கத் தோன்றும்.வயது வந்தவர்களுக்கே அப்பாடல்கள் புரியும். 80களுக்கு பிறகான பாடல்களில் காதலன் காதலியை உறவிற்கு அழைப்பது போலவும் , அதற்கு காதலி திருமணத்தைக் காரணம் காட்டி மறுப்பது போலவுமே நிறைய எழுதப்பட்டிருக்கின்றன. அதிலும் ஒரு சுவை இருந்தது. 2000 க்கு பிறகான பாடல்களில் நேரடியான வரிகளில் எழுத ஆரம்பித்த பிறகு பாடல்களில் காமச்சுவை குறைந்துவிட்டது. இப்படி காமம் என்பது எப்போதும் நம்மைச் சூழ்ந்தேதான் இருந்து வருகிறது. முத்தக்காட்சி , படுக்கையறை காட்சிக்காக திரைப்படங்கள் கவனம் பெறுவதும் இதனால் தான்.

நம் வாழ்க்கையில் நாம் காமத்தைச் சந்தித்தே ஆக வேண்டும். யாரும் தப்பிக்க முடியாது. காமம் சார்ந்த நமது கற்பனைகளுக்கு எல்லையே கிடையாது. நடைமுறையில் எப்போதும் சாத்தியமில்லாததைக் கூட மனம் கற்பனையில் கண்டு களிப்புறும். காமத்தின் மீதான நம்பிக்கையில் தான் ' ஒரு கல்யாணம் பண்ணி வச்சுட்டா எல்லாம் சரியாகி விடும் ' என்ற மனநிலை. ஒரு விதத்தில் அது உண்மையும் கூட. காமத்திற்கு தங்களை ஒப்புக்கொடுத்தவர்களை காமம் மேலும் நெருக்கமடையவே செய்யும். பாலுறவு சரியாக நடைபெற்று வரும் தம்பதிகளிடையே சச்சரவுகள் சற்று குறைவாகவே இருக்கும். ஒரு குடும்பத்தின் ஆரோக்கியமும் , சமூகத்தின் ஆரோக்கியமும் காமத்தையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. சமூகத்தின் எந்த மட்டத்தில் பாலியல் சுதந்திரம் அதிகம் இருக்கிறதோ அவர்களே இந்த வாழ்வு தரும் அனைத்துவிதமான அழுத்தங்களிலிருந்தும் விடுபட்டு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதை அறிய முடியும். சமூகத்தின் உயர் மட்டத்தில் இருப்பவருக்கும் பிரச்சனையில்லை , கீழே இருப்பவருக்கும் பிரச்சனையில்லை நமக்குத் தான் பிரச்சனை என்றே பொது சமூகம் யோசிக்கிறது. நாம் நாகரிகம் என்று சொல்லிக்கொள்ளும் விசயங்கள் இன்னும் சென்றடையாத பழங்குடியின மக்களின் வாழ்வியலில் இது தான் காமம் என்பதை அறியாமலேயே காமத்தைக் கொண்டாடுகிறார்கள், கூடவே வாழ்க்கையையும். காமத்திற்கும் குற்றங்களுக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. சரியாக கிடைக்காத காமமே குற்றத்தை நோக்கித் தள்ளுகிறது. ஒரு சமூகம் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றால் அங்கே காமமும் சரியாக இருக்கிறது என்பதே மறைமுக அர்த்தம்.

இயற்கையின்படி , அறிவியலின்படி பாலுறவு கொள்ள விரும்பும் இருவரும் வயதிற்கு வந்திருக்க வேண்டும், இருவருக்கும் அதில் விருப்பம் இருக்க வேண்டும் என்பது மட்டும் தான். நாகரிக வாழ்வில் இது சாத்தியமில்லை. ஆனால் இன்றும் பல பழங்குடியினங்களில் இது சாத்தியம் தான். பல ஆயிரம் ஆண்டுகளாக மனித இனம் இப்படித்தான் இருந்திருக்கிறது. பாலியல் ஒழுக்கம் என்ற ஒன்று உருவான பிறகு தான் அதிகப்படியான சிக்கல்களும் உருவாகின. மனித இனம் குழுவாக வாழ்ந்த வரை, சொத்து பொதுவில் இருந்தவரை, குழந்தைகளை வளரப்பது குழுவின் கடமையாக இருந்தவரை பாலியல் சுதந்திரத்தில் எந்தச் சிக்கலும் உருவாகவில்லை. குடும்பமாக ,தனிச்சொத்தாக ,குழந்தை வளர்ப்பு குடும்பத்தின் கடமையாக ,குறிப்பாக தாயின் கடமையாக மாறிப்போனதால் பாலியல் சுதந்திரமும் கட்டுப்படுத்தப்பட்டது. இதை மீறும் போது பிரச்சனைகள் உருவாகின்றன.அனைத்து குழந்தைகளையும் அரசே தத்தெடுக்க முன்வந்தால் நிறைய பெண்களும் , ஆண்களும் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பத்தை விட்டு வெளியே வந்து விடுவார்கள். குழந்தைகளுக்காகத்தான் நிறைய குடும்பங்கள் தங்களைத் தாங்களே சாமாதனமும் ,சமரசமும் செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றன.

"இந்தியர்கள் எப்படி தங்கள் ஆடையைக் கூட முழுதாகக் களையாமல் உறவு கொள்கிறார்கள் " என ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தியாவைச் சுற்றிப் பார்த்த ஒரு ஆங்கிலேயர் சொன்னாராம். இன்றும் இந்த நிலையில் பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்காது என்றே நினைக்க வேண்டியிருக்கிறது. ஆணிற்கும் பெண்ணிற்குமான தனியிடம் என்பது இந்தியச் சூழலில் மிகவும் குறைவு. குடும்பத்தில் என்றாலும் வெளிநாடுகளைப் போல குழந்தைகள் தனியறைகளில் படுக்க வைக்கப்படுவதில்லை. ஆதலால் பாலுறவு என்பதே இருவருக்கும் விருப்பம் இருந்தாலும் குழந்தைகள் அனுமதித்தால் மட்டுமே நிகழக்கூடிய ஒன்றாக இருக்கிறது . அதிலும் குழந்தை பிறந்த பிறகு , குழந்தை வளர வளர குழந்தையைக் காரணம் காட்டி பாலுறவு மறுக்கப்படுவதும் நடக்கிறது. வயதிற்கும்
காமத்திற்கும் தொடர்பிருக்கிறது என்றாலும் உடல் காமத்தைத் தேடும் வரை காமத்தை உடலுக்கு அளிக்க வேண்டியதும் அவசியமாகிறது. தங்களுக்கு வேண்டிய காமம் குறித்து தம்பதிகளே தங்களுக்குள் வெளிப்படையாக பேசிக்கொள்வதில்லை. அன்பைப் போல , காதலைப் போல காமத்திலும் கொடுத்துப் பெறுதலே இன்பம், பேரின்பம். காதலில் கூட தனது விருப்பங்களை பேச இடம் கொடுக்கப்படுகிறது. பெரும்பாலும் காமத்தில் அப்படி இடம் கொடுக்கப்படுவதில்லை. 'ஆர்கசம் ' என்ற வார்த்தையே அறியாமல் பாலுறவில் ஈடுபடுபவர்கள் அதிகம் உள்ள நாடு தான் இந்தியா. ஆனால் இதற்கு மாறாக முந்தைய இந்தியாவில் வாழ்ந்தவர்கள் காமத்தை அவ்வளவு கொண்டாடி இருக்கிறார்கள். எவ்வளவு விதவிதமான நிலைகளில் அமைந்த சிற்பங்களை வடித்துவிட்டு போயிருக்கிறார்கள். காமம் அசிங்கம் என நம் முன்னோர்கள் நினைத்திருந்தால் தங்களின் வழிபாட்டுத் தளங்களில் இப்படி வடித்திருக்க மாட்டார்களே. அதுமட்டுமில்லாமல் வெளிப்படையாக குறி வழிபாட்டை உருவாக்கி அதை எல்லோரையும் வழிபட வைத்திருப்பதன் மூலம் எந்த அளவிற்கு காமத்தைக் கொண்டாடியிருக்கிறார்கள் என்பதை அறியலாம்.

காமத்திற்கு சரியான வடிகால் இல்லாமல் இருப்பது குற்றத்தில் போய் முடிகிறது. அதனால் தான் காமம் கிடைக்கச் சாத்தியமில்லா பதின்பருவத்திலேயே ஏதேனும் கலையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது நல்ல பலனை அளிக்கும் என்கிறார்கள். உரிய துணை கிடைக்கும் வரை உற்ற துணையாக கலையையே துணையாகக் கொள்வது நல்ல பலனை அளிக்கும். ஏனென்றால் காமம் தலைக்கேறிய நிலையில் மனிதர்கள் என்ன செய்வார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. சரியாக முறைப்படுத்தப்படாத காமமே இன்னொருவர் மீது நிகழ்த்தப்படும் குற்றத்திற்கு காரணமாக இருக்கிறது. பிரெஞ்சுத் திரைப்படங்கள் காமத்தின் ஊடாக காமத்தின் பல்வேறு சிக்கல்களை பல்வேறு கோணங்களில் பேசி வருகின்றன. பிரெஞ்சுத் திரைப்படங்களை தொடர்ந்து பார்த்து வரும் ஒருவர் தானாகவே காமத்தைக் கொண்டாட ஆரம்பித்து விடுவார், கூடவே வாழ்க்கையையும். ஆம், காமத்தைக் கொண்டாடாமல் வாழ்க்கையைக் கொண்டாடவே முடியாது!

பொறுப்பு துறப்பு :
ஒரு ஆணின் அரைகுறை மனநிலையில் எழுதப்பட்ட பதிவிது. ஏராளமான தர்க்கப்பிழைகள் இருக்கின்றன. முன்பே சொன்னது போலவே விவாதத்தை முன்னெடுப்பது தான் இந்தத் தொடரின் நோக்கமே தவிர யாருக்கும் எதையும் போதிப்பதல்ல. மற்றபடி கடுமையான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

பாலியல்  பேசுவோம்....  

தொடர்புக்கு :
குறி சிற்றிதழ் ,

9/3 , யூசுப் நகர் ,
மாரம்பாடி  சாலை,
வேடசந்தூர் -624710,
திண்டுக்கல் மாவட்டம் .

சந்தாதாரர் ஆக:
குறி தனி இதழ் ரூபாய் .30
பத்து இதழ் சந்தா ரூபாய்.300
சந்தா SBI வங்கி மூலம் செலுத்தலாம்
P.MANIKANDAN
A/C NO. 30677840505.
VEDASANDUR
IFS CODE : SBIN0011941

இதழாசிரியர்  மணிகண்டன் - 9976122445.

இதழ் குறித்த உங்களின் பின்னூட்டங்கள் மற்றும் படைப்புகளை

kurimagazine@gmail.com 

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் .

மேலும் படிக்க :


   

1 comment:

  1. வணக்கம் நண்பர்களே!, தங்கள் அருமையான பதிவுகளை TamilBM (https://bookmarking.tamilbm.com/register/) திரட்டியிலும் இணையுங்கள்.

    ReplyDelete