தமிழில் வெளிவந்த 'அனல் மேலே பனித்துளி ' திரைப்படம் இந்த Beauty and the Dogs -ஐ மையமாக வைத்தே எடுக்கப்பட்டுள்ளது. அனல் மேலே பனித்துளி-யே மிகவும் சிறப்பாக படமாக்கப்பட்டிருந்தது. 'Beauty and the Dogs' இன்னும் பல மடங்கு பதைபதைப்பை உருவாக்குகிறது.
போலீஸ் எல்லா ஊர்களிலும் 'போலீஸ்' தான். எல்லா நாடுகளிலும் அதிகாரத்தின் பெயரால் நிகழ்த்தப்படும் குற்றங்களை மூடி மறைக்கவே அரசுகள் விரும்புகின்றன. அதுவே குற்றத்தை நிகழ்த்தியது காவல்துறையாக இருக்கும் போது நீதிக்காக பல மடங்கு போராட வேண்டியுள்ளது. பாதிக்கப்பட்டது பெண்ணாக இருக்கும் போது அப்பெண்ணையே நிலைகுலைய செய்துவிடுகிறது. காவல்துறை தனது குற்றத்தை மறைக்க எந்த எல்லை வரை செல்லும் என்பதை சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளனர். அதே போல பெண்ணின் மனவலிமைக்கு முன் எந்த மிரட்டலும் ஒன்றும் செய்யாது என்பதையும் உணர வைக்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்திருக்கும் Mariam Al Ferjani , ஆரம்பத்தில் குதூகலத்துடன் அப்பாவிற்கு தெரியாமல் கேளிக்கை விருந்தில் கலந்து கொள்வது, பாதிக்கப்பட்ட பிறகு அடுத்து என்ன செய்வது என்பதை அறியாமல் திகைத்து நிற்பது, ஆண் நண்பரின் தொடர்ச்சியான வலியுறுத்தல்களுக்குப் பிறகு காவல் துறையை நாடுவது, காவல்துறையின் பல்வேறு விதமான மிரட்டல்களுக்கு அடிபணியாமல் தொடர்ந்து நீதிக்காக போராடுவது என உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தத் திரைப்படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திரைப்படத்தின் தொடக்க Party காட்சியில் ஒலிக்கும் பின்னணி இசை மிகவும் அட்டகாசமாக இருக்கிறது. மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது.
மேலும் படிக்க :
No comments:
Post a Comment