" பாலியல் தொழிலை அங்கிகரியுங்கள் என்று கேட்கவில்லை. எங்களுக்கு மரியாதை கொடுங்கள் என்று தான் கேட்கிறோம் "
- நளினி ஜமீலா
சக மனிதர்களிடமிருந்து மரியாதையை மட்டுமே நாம் அதிகம் எதிர்பார்க்கிறோம். "மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் " என்பதன்படியே இன்றும் வாழ்கிறோம். மரியாதை கொடுக்காத எந்த இடத்திற்கும் நாம் செல்வதில்லை. ஆனால் அதே சமயம் துப்புரவு பணியாளர்கள் , வீட்டு வேலை செய்பவர்கள் , பாலியல் தொழிலாளர்கள் , மாற்றுப்பாலினத்தவர்கள் , மூட்டை தூக்குபவர்கள் , கூலித் தொழிலாளர்கள் , சாலையோரத்தில் குடியிருப்பவர்கள் , பிச்சைக்காரர்கள் என்று நம்மிடையே வாழும் விளிம்புநிலை மனிதர்களுக்கு நாம் எந்த மரியாதையையும் கொடுப்பதில்லை. எவ்வளவு பணம் கொடுத்தாலும் அவர்கள் செய்யும் வேலையை நாம் செய்யப்போவதில்லை. ஆனால் அவர்களை மலினமான பார்வையாலும் , ஏச்சுக்களாலும் கடந்து போகிறோம். நாம் மதிக்காவிட்டாலும் நம்மைச் சார்ந்தே வாழும் துயரமான வாழ்க்கை அவர்களுடையது.ஆனால் நம்மை விட சிறந்த வாழ்க்கை.
நளினி ஜமீலா, இந்த நூலில் சொல்லப்பட்டவரை எந்த இடத்திலும் தான் ஒரு பாலியல் தொழிலாளி என்ற குற்ற உணர்வை அடையவேயில்லை. அவரது சூழ்நிலைகள் தான் எல்லாவற்றுக்கும் காரணமாக அமைகின்றன என்பதை மட்டுமே கூறியுள்ளார். தன்னுடைய மகளை 'இவள் நளினி மகள் ' என அழைக்கப்பட்டதையே பெருமையாக கருதுகிறார். யார் மீதும் எந்தக் குற்றச்சாட்டையும் வைக்கவில்லை.
எல்லாவிதமான மனிதர்களும் ஒரே மாதிரி தான் பிறக்கிறார்கள். அவரவர் பிறக்கின்ற இடத்தை வைத்து தான் பேதங்கள் கற்பிக்கப்படுகின்றன. சூழ்நிலைகளே நமது எல்லோருடைய வாழ்க்கையையும் நிர்ணயிக்கின்றன.
இவர்கள் இல்லாமல் பூமியில் வாழ்வே இல்லை. ஆனால் இவர்களுக்கு உண்டான மரியாதைக்காக போராடிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் பெண்களும் , விவசாயிகளும் !
மதிப்போம் மதிப்படைவோம் !
மேலும் படிக்க:
No comments:
Post a Comment