Pages

Monday, June 30, 2014

ரிமோட் கன்ரோல் வாழ்க்கை !

ரிமோட் கன்ரோல் செயல்பாடு மனித வாழ்வில் பெரும் பாதிப்பை உண்டு பண்ணியுள்ளது . இந்தப் பாதிப்பு நாம் உணரா வண்ணம் நிகழ்ந்துள்ளது. ரிமோட் கன்ரோலைப் பயன்படுத்தாமலே   தொலைக்காட்சி பார்த்தோம், கார் ஓட்டினோம் , வீட்டில் வாழ்ந்தோம் இன்னும் பல வேலைகள் செய்தோம் . அப்போதும் ஒரு வாழ்க்கை வாழ்ந்தோம் . ரிமோட் கன்ரோலைப் பல்வேறு விதங்களில் பயன்படுத்திக் கொண்டும் ஒரு வாழ்க்கை வாழ்கிறோம் .என்ன வித்தியாசம் ?

நாம் இயக்க நினைக்கும் பொருட்களை தொலைவிலிருந்தே உடனடியாக இயக்க ரிமோட் கன்ரோல் பயன்படுகிறது. நமது நேரத்தை மிச்சப்படுத்திய ஒரு கண்டுபிடிப்பாக இருந்தாலும் ஒரு விதத்தில் நம்மை சோம்பேறியாகவும் மாற்றிவிட்டது . விசயம் அதுவல்ல. இந்த ரிமோட் கன்ரோல் செயல்பாடு நம் வாழ்வை எவ்வாறு பாதித்துள்ளது என்பது சற்றே அதிர்ச்சி தரும் விசயம்.

நாம் பயன்படுத்தும் பலவிதமான ரிமோட்களில் அதிகம் பயன்படுத்தப்படுவது தொலைக்காட்சி ரிமோட் தான். தொலைக்காட்சி ரிமோட்டால் சண்டை வராத வீடுகளே இல்லை. ரிமோட் என்ன செய்கிறது ,நாம் அமுக்கிய பட்டனுக்கு உரிய வேலையை எந்தக் கேள்வியும் கேட்காமல் செய்து முடிக்கிறது. ரிமோட்டின் இந்த கேள்வி கேட்காத தன்மை நமக்கு மிகவும் பிடித்திருககிறது. பொதுவாகவே  தனது செயல் குறித்து மற்றவர்கள் கேள்வி கேட்பதை மனிதன் விரும்புவதில்லை. ஆகவே நமக்கு ரிமோட் மிகவும் பிடித்த பொருளாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை . இதில் பிரச்சனை எங்கு ஆரம்பிக்கிறது என்றால் ரிமோட் கன்ட்ரோல் மூலம் பொருட்கள் இயங்குவது போல் சக மனிதர்களும் எந்தக் கேள்வியும் கேட்காமல் தன் சொல்படி இயங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறபோதுதான்.

 தான் சொல்லும் வேலையைச் செய்யாதவர்கள் மீது எரிந்து விழுகிறோம் . தான் கொடுத்த வேலை குறித்து கேள்விகள்  கேட்பதும் பிடிப்பதில்லை. தான் சொல்லும் வேலையை எந்தக் கேள்வியும் கேட்காமல் மற்றவர்கள் செய்து முடிக்க வேண்டும் என்ற மனநிலை சமூகத்தின் அனைத்து தளத்திலும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது . அரசுகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், குடும்பங்கள் அனைத்திலும் இந்த ரிமோட் கன்ரோல் மனநிலை பெருகியுள்ளது. குறிப்பாக குடும்பங்களில் கணவன் மனைவியையோ அல்லது மனைவி கணவனையோ ரிமோட் போல இயக்க நினைப்பதாலேயே நிறைய பிரச்சனைகள் வெடிக்கின்றன.

இந்த ரிமோட் கன்ரோல் மனநிலை நம்மை நாமே அழித்துக் கொள்ள மிகச் சிறந்த வழி . " தி கிரேட் டிக்டேட்டர் " திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் சார்லி சாப்ளின் மேடையில் பேசும் பேச்சு , நாம் இயந்திரத்திற்கு எவ்வளவு மரியாதை தர வேண்டும் ,மனிதர்களுக்கு எவ்வளவு மரியாதை தர வேண்டும் என்பதை மிக தெளிவாக எடுத்துக் கூறியது . இயந்திரங்கள் எப்போதும் இயந்திரங்களே , அவற்றுக்கு மனிதத்தன்மை கிடையாது . எப்போதும் மனிதனை இயந்திரத்தோடு ஒப்பீடு செய்யக்கூடாது . சாப்ளின் தனது " மாடர்ன் டைம்ஸ் " திரைப்படத்தில் இயந்திரங்களின் செயல்பாட்டை அழுத்தமாக பகடி செய்திருப்பார் . ஒவ்வொரு நொடியும் இயந்திரங்களுடனே வாழ வேண்டிய சூழலில் நமது மனதிலும் இயந்திரத்தன்மை அதிகரித்தபடியே இருக்கிறது . மனிதத்தன்மை குறைய குறைய மனித இனத்திற்கு அழிவு தான் .

ரிமோட் கன்ரோல் மனநிலையையும் ,இயந்திரத்தன்மையையும் தொலைவில் வைப்போம் .மனிதத்தன்மையை மனதில் வைப்போம் !

மேலும் படிக்க :

மெதுவான எளிய வாழ்க்கை !

வாழ்க்கை ஒரு போராட்டம் !
............................................................

2 comments:

  1. technology valara valara manithargal lazyness aga marivitargal

    https://eagleflyweb.com/

    ReplyDelete