அலை ஓசை திரைப்படத்தில் இடம்பெற்ற ' போராடடா ஒரு வாள் ஏந்தடா... ' என்ற இந்தப் பாடலைத்தான் திரைப்படமாக மாரி செல்வராஜ் உருவாக்கி இருக்கிறார் என்று ஒரு முகநூல் நண்பர் ஏதோ ஒரு பதிவில் எழுதியதை வாசிக்க நேர்ந்தது. அது முற்றிலும் உண்மை என்றே தோன்றுகிறது. 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்திலும் இப்படாலின் வரிகள் இடம்பெற்று இருக்கும். 'கர்ணன் ' திரைப்படத்தில் தனுஷ், யானை மீது அமர்ந்து வரும் போது இப்பாடல் இசைக்கருவிகள் மூலமாக ஒலிக்கும்.
'போராடடா' திரைப்படம் முழுக்க தனுஷ் உரிமைக்காக போராடுகிறார். 'வாள் ஏந்தடா' வரிக்கு ஏற்றவாறு வாள் கதாநாயகன் வந்துவிடுகிறது. இப்படி இந்தப் பாடலை விரித்து இத்திரைப்படத்துடன் ஒப்பிட்டுக்கொண்டே போக முடியும். 90களில் அங்கங்கே நடந்த விசயங்களை கொடியன்குளம் கலவரத்துடன் சேர்த்து உருவாக்கியுள்ளார், இயக்குநர். படத்தின் உருவாக்கத்தில் தனித்து தெரிகிறார், மாரி செல்வராஜ். மிகவும் மெனக்கெட்டு ஒவ்வொரு காட்சியையும் அழகுணர்ச்சியுடன் உருவாக்கியுள்ளார். இந்த பூமி மனிதர்களுக்கு மட்டும் சொந்தமல்ல என்பதை பல்வேறு விதமான உயிரினங்களை திரையில் காட்டுவதன் முலம் சொல்லிக் காட்டுகிறார். தனுஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் சூழலில் கூட இத்திரைப்படம் மாரி செல்வராஜின் படமாக கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்தத் திரைப்படத்தைப் பற்றி பேச வேண்டுமென்றால் பேசிக்கொண்டே இருக்கலாம்.கொடியன்குளம் கலவரம் பற்றி இந்தத் திரைப்படம் வந்த பிறகே நிறைய பேருக்குத் தெரிந்திருக்கும். ஏன் அந்த கலவரம் நடந்தபோது 1995ல் முதல்வராக இருந்த ஜெயலலிதாவிற்கே அப்போது தெரியவில்லை. கலவரம் முடிந்த பிறகுதான் அவருக்கு தெரிய வந்திருக்கிறது. தெரிய வந்தும் பயனில்லை. மனிதத்தன்மையற்ற போலிஸ் வெறியாட்டத்தில் ஒரு ஊரே சிதைக்கப்பட்ட சூழலிலும் கூட எந்த போலிஸூம் தண்டிக்கப்படவில்லை. அதன் பிறகு வந்த கருணாநிதியின் ஆட்சியிலும் யாரும் தண்டிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
சாதி விசயத்தில் அதிமுக, திமுக இரண்டுமே ஒன்றுதான். என்ன ஒன்று அதிமுகவின் சாதி சார்பு வெளிப்படையாகத் தெரியும், திமுகவின் சாதி சார்பு வெளிப்படையாக தெரியாது அவ்வளவுதான் வித்தியாசம். பேரறிஞர் அண்ணா சாதி ஒழிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து செயல்படுத்தவும் தொடங்கினார்.கலைஞர் கருணாநிதி அவர்களுக்கும் அந்த விருப்பம் இருந்தாலும் அவரை முழுமையாக செயல்படவிடாமல் ஏதோ தடுத்திருக்கிறது. எந்த அரசாக இருந்தாலும் எவ்வளவு பெரிய குற்றங்கள் செய்தாலும் போலிஸைக் காப்பாற்றுவதில் கவனமாக இருந்திருக்கின்றன, இருக்கின்றன, இருக்கும். 'சட்டத்தின் முன் அனைவரும் சமம் ' என்பது போலிஸூக்கு பொருந்தாது போல.
இதுவரை ' கொடியன்குளம் கலவரம்' பற்றி தெரிந்து கொள்ளாதவர்கள் தேடித் தெரிந்து கொள்ளுங்கள். சாதி ரீதியான, மத ரீதியான, ஆதிக்க உணர்வு எல்லா இடங்களிலும் இருப்பது போல காவல்துறையிலும் இருக்கிறது. ஆணாதிக்க உணர்வும் காவல்துறையில் மேலோங்கியே உள்ளது. மற்ற பணியிடங்களைப் போலவே காவல்துறையிலும் பெண்கள் பல்வேறு விதமான இன்னல்களைச் சந்திக்கிறார்கள். சமூகத்தின் ஒரு அலகுதான் காவல்துறை, சமூகத்தைப் போலவேதான் காவல்துறை இருக்கும் என்றாலும் சமூகத்தில் நிகழும், மீறல்களுக்கு, குற்றங்களுக்கு முதலில் மக்களாகிய நாம் காவல்துறையைத்தானே அணுகுகிறோம். முதலில் அணுகும் ஒரு அமைப்பே அதிகாரத்திற்கும், ஆதிக்கத்திற்கும் துணை போவதுடன் அதே அதிகாரத்தையும், ஆதிக்கத்தையும் மக்கள் மீது செலுத்துவதை எப்படி ஏற்க முடியும். அதிகாரத்தாலும், ஆதிக்கத்தாலும் நிகழும் குற்றங்கள் குறைய வேண்டுமெனில் காவல்துறைதான் பெரும் பங்காற்ற வேண்டியிருக்கிறது. வெறும் தண்டனைகள் மட்டும் குற்றங்களைக் குறைத்துவிடாது. என்று காவல்துறை குற்றத்தை குற்றமாக மட்டுமே பார்க்கிறதோ அன்றிலிருந்துதான் மாற்றங்கள் நிகழும். குற்றம் யார் செய்தது? என்பதைப் பொறுத்தே காவல்துறை செயல்படும் எனில் எந்த மாற்றமும் நிகழாது.
"எத்தனையோ ரத்த வரிகளை
எங்கள் முதுகினில் தந்தவரே
அத்தனையும் வட்டி முதலுடன்
உங்கள் கரங்களில் தந்திடுவோம்" என்று தனது கலையின் மூலமாக வட்டி முதலுடன் இத்திரைப்படத்தைத் தந்திருக்கிறார்,இயக்குநர், மாரி செல்வராஜ். இத்திரைப்படத்தில் காட்டப்பட்டதை விட மிகக் கொடூரமான வன்முறை நிஜத்தில் காவல்துறையால் நிகழத்தப்பட்டிருக்கிறது. நீண்ட அந்த கலவரக் காட்சிகளை திரைப்படத்தில் கூட நம்மால் பாரக்க முடியவில்லை. நிஜத்தில் எவ்வளவு வலிகளை அந்த ஊர் மக்கள் அனுபவித்து இருப்பார்கள். இறுதிவரை அம்மக்களுக்கு எந்த நீதியும் கிடைக்கவில்லை.
இத்திரைப்படத்தின் மூலம் விவாதப் பொருளாக மாறி இருக்க வேண்டியது 'சாதிய ரீதியிலான காவல்துறையின் அணுகுமுறை '. ஆனால் திமுக, அதிமுக என்று உருட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அதிகாரத் திமிரும் , ஆதிக்க உணர்வும் அழிந்து போகட்டும்!
மேலும் படிக்க :
No comments:
Post a Comment