Pages

Monday, September 2, 2024

மாமனிதர் - விஜயகாந்த் ❤️


சிகரெட் பிடித்தல், மதுக்குடித்தல் போன்ற தீய பழக்கங்கள் நமது பால்ய காலங்களிலேயே நமக்குப் பழக்கமானவையாக இருக்கின்றன. ஆனால் எனது பால்ய காலங்களில் என்னை, தீய பழக்கங்களிலிருந்து எனக்குத் தெரியாமலேயே காப்பாற்றிவர், விஜயகாந்த் தான். அதை இப்போது நினைத்துப் பார்க்கும்போது தான் உணர முடிகிறது. அப்போது தீவிரமான விஜயகாந்த் ரசிகன். விஜயகாந்த் தனது திரைப்படங்களில் மதுக்குடிப்பதையோ, சிகரெட் பிடிப்பதையோ நியாப்படுத்தியிருக்கமாட்டார். அதனால் தானோ என்னவோ அவரைப் பின்பற்றிய நாங்களும் அப்பழக்கங்களை கடைபிடிக்கவில்லை. விஜயகாந்திற்கு பதிலாக ரஜினி அல்லது கமல் ரசிகராக இருந்திருந்தால் நிச்சயம் ஏதாவது ஒரு தீயபழக்கத்தைப் பழகியிருப்போம். 


'காந்தி பிறந்த மண் ' என்ற திரைப்படத்திற்குப் பிறகு விஜயகாந்த் ரசிகராக இருக்கவில்லை. என்ன காரணம் என்றும் நினைவில்லை. அதன் பிறகு யாருடைய ரசிகராகவும் இல்லை. அதே சமயம் விஜயகாந்த் என்ற மனிதரின் மீதான மதிப்பு எப்போதும் குறைந்ததில்லை. அவரது கடைசி கால இஸ்லாமிய தீவிரவாத ஒழிப்பு திரைப்படங்களுக்கு முன்பு வரை அவர் தேர்ந்தெடுத்த நடித்த கதாப்பாத்திரங்கள் கண்ணியம் மிக்கவை. நிறைய திரைப்படங்களில் வெள்ளந்தியான பாத்திரங்களில் நடித்திருக்கிறார். 


விஜயகாந்த் எப்போதும் மக்களின் கலைஞன். ரஜினி, கமல் போன்றவர்கள் கவனமாக தவிர்த்த விளிம்பு நிலை மக்களின் கதாப்பாத்திரங்களில் தொடர்ந்து நடித்தவர். மக்களோடு ஒருவராகவே தன்னை அடையாளப்படுத்தியவர். நிஜ வாழ்விலும் அப்படித்தான் இருந்திருக்கிறார். அவர் பேசிய அரசியல் மேடைகளிலும் ஒலித்தது சாமானிய மக்களின் குரல்தான். இப்போது வேண்டுமானாலும் அவர் பேசியதை கேட்டுப் பாருங்கள் உண்மை புரியும். திரையில் செங்கொடியோடு தோன்றியவர் அவர் மட்டும்தான். மக்களில் ஒருவராக , மக்களின் தலைவனாக திரையில் தோன்றினார்.


எம்.ஜி.ஆர்.-ன் அரசியல் செயல்பாடுகள் கடுமையான விமர்சனங்களுக்கு உட்பட்டவை. ஆனால் அவரது திரைப்படங்களிலும், திரையிசைப் பாடல்களிலும் சமதர்ம , பொதுவுடைமை கருத்துகள் நிறைந்திருக்கும். அதே போல மதுக்குடிக்கும், சிகரெட் பிடிக்கும் காட்சிகளை தவிர்த்திருப்பார். தனது திரைப்படங்களிலும் இதே பாணியை விஜயகாந்த் கடைபிடித்தார். இன்று வரை நடித்த நடிகர்களில் அதிக காட்சிகளில் தமிழர்களின் ஆடையான வேட்டி சட்டையுடன் தோன்றியவர், விஜயகாந்த் மட்டுமே. தமிழன் என்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா ! என்ற முழக்கத்தை முன்வைத்தவர்.


ஈழத் தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர். ஈழத் தமிழர்களுக்கு ஏராளமான உதவிகளைச் செய்தவர். மற்ற உச்ச நடசத்திரங்கள் என்று சொல்லப்படும் எவரும் வெறும் குரல் கூட கொடுத்ததில்லை. ஈழத் தமிழர்கள் விடுதலை பெறும் வரை தனது பிறந்தநாளை கொண்டாட மாட்டேன் என்ற உறுதியோடு இருந்தார். அரசியல் கட்சி தொடங்கும் வரை அதை கடைபிடித்தார். யார் சமரசம் செய்தார்கள் என்று தெரியவில்லை, அரசியல் கட்சி தொடங்கிய பிறகு அவரது பிறந்தநாள் ' வறுமை ஒழிப்புத் தினமாக ' கொண்டாடப்பட்டது. 


நாடகங்கள் ஆதிக்கம் செலுத்திய ஆரம்ப காலத்தில் பார்ப்பனர்களுக்கு தனியாகவும்,அவர்கள் சாப்பிட்ட பிறகே மற்றவர்களுக்கு தனியாகவும் உணவு பரிமாறப்பட்டது. இதை முதன் முதலில் உடைத்தவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். தனது நாடகங்களில் எல்லோருக்கும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியாக உணவு பரிமாறப்பட்டது. இதை தனது வாழ்நாளின் கடைசி வரை கடைபிடித்தார். அவரது குடும்ப விழாக்களில் கூட பிரபலமாக இருந்தாலும் அனைவருக்கும் ஒரே மாதிரியாகவே உணவு பரிமாறப்பட்டது. அதே போல தன்னை தேடி வந்தவர்கள் அனைவருக்கும் உணவளித்தார். யார் என்றே தெரியாத முகமறியாதவர்களுக்கும் அதிகளவில் உதவிகள் செய்தார். இதை எம்.ஜி.ஆரும் பிறகு விஜயகாந்தும் கடைபிடித்தனர். ஆனால் என்.எஸ்.கிருஷ்ணன் அளவிற்கு உதவிகள் செய்தனரா என்று தெரியவில்லை. தமிழக சூழலில் இன்னமும் அதிகம் கொண்டாடப்பட வேண்டியவர், என்.எஸ்.கிருஷ்ணன்.


உணவு சார்ந்த விசயத்தில் விஜயகாந்த் செய்தவை அனைத்தும் தற்போது கொண்டாப்படுகின்றன. திரைப்பட படப்பிடிப்பில் அனைவருக்கும் சமமான உணவு என்பது மிகப்பெரிய விசயம். இன்றும் எத்தனை பேர் இதைக் கடைபிடிக்கின்றனர் என்று தெரியவில்லை. விஜயகாந்த் கல்யாண மண்டபம் போனால் வேண்டிய உணவு நிச்சயம் கிடைக்கும் என்பது திரைத்துறையில், விளிம்புநிலையில் இருக்கும் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. பலரின் பசி போக்கிய அப்படியான அன்ன சத்திரத்தை இடித்து தள்ளியது , அரசியல். உணவு விசயத்தில் மட்டுமல்ல திரைப்படத்தில் பங்கெடுத்த அனைவருக்கும் ஊதியம் முதற்கொண்டு எல்லாமும் சரியாக கிடைத்திருக்கிறதா என்பதையும் உறுதி செய்திருக்கிறார். இதனாலேயே இவருக்கு ' கேப்டன் ' என்ற பெயர் பொருத்தமாக இருக்கிறது.


தேமுதிக வின் கொள்கை என்பது ' மக்களுக்கு நல்லது செய்யனும்' என்பது மட்டும் தான். சூழ்ச்சிகளும், சுயநலமும், துரோகங்களும், பதவி வெறியும், ஆதிக்கத் திமிரும் நிறைந்திருந்த அரசியல் களத்தில் நீடித்திருக்க அது மட்டும் போதவில்லை. விஜயகாந்தைப் போலவே அவரது தொண்டர்களும் தங்களது சொந்தப் பணத்தை செலவு செய்து தேர்தலில் களம் கண்டார்கள். விஜயகாந்தைப் போலவே அவரது தொண்டர்களுக்கும் பொருளாதார அளவில் இழப்பு தான். பலர் வேறு கட்சிகளுக்கு தாவி விட்டனர். இப்போது தேமுதிக திக்கற்ற நிலையில் நிற்கிறது. ஆதாயத்திற்காக வெகுமக்களுக்கு எதிரான பாஜகவுடன் கூட்டணியில் இருக்கிறது. தேமுதிகவைத் தாங்கியது விஜயகாந்த் என்ற ஒற்றைப் பெயர் தான். தற்போது தேமுதிக, கேப்டன் இல்லாத கப்பல். 


அஞ்சா நெஞ்சனாக , நியாயத்திற்கு குரல் கொடுப்பவராக, மனம் முழுவதும் அன்பு நிறைந்தவராக இருந்தவரின் கடைசி காலங்கள் மிகுந்த துயர் மிகுந்ததாக மாறிப்போனது. மீளாத் துயரிலிருந்து அந்த உடல் விடுதலை பெற்றுவிட்டது. அவரது மனம் இங்கேயேதான் இருக்கும். வெறும் வார்த்தைக்காக இல்லை. விஜயகாந்த் செய்த செயல்கள் நீண்ட காலத்திற்கு நினைவில் இருக்கும். அவர் செய்த செயல்களில் வெறும் ஒரு சதவீத்தை செய்யக்கூட நாம் தயாராக இல்லை என்பது தான் கள யதார்த்தம். 


திரையில் மக்களுக்காக குரல் கொடுத்த நடிகன் !


நிஜத்தில் மக்களுக்காக குரல் கொடுத்த அரசியல்வாதி !


மக்களுக்காகவே வாழ்ந்த மக்களின் தலைவன் !


No comments:

Post a Comment