Pages

Sunday, September 1, 2024

Fandry - மனதிற்கு நெருக்கமான படைப்பு !


நாகராஜ் மஞ்சுலேவின் Sairat திரைப்படம் பார்த்த போதே இந்த Fandry திரைப்படத்தையும் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. அப்போது தேடிய போது பார்க்கக் கிடைக்கவில்லை. 'அயலி' பார்ப்பதற்காக Zee5 செயலிக்கு சந்தா செலுத்தும் போது நாகராஜ் மஞ்சுலேவின் நிறைய திரைப்படங்கள் Zee5 தளத்தில் இருப்பது தெரிய வந்தது கூடவே Fandry -யும். அப்போதே அயலி பார்த்தாலும் இப்போது தான் Fandry பார்க்க முடிந்திருக்கிறது. காத்திருப்பு வீண் போகவில்லை.


திரைப்படத்தின் தொடக்கம் முதல் முடிவு வரை தேர்ந்த கதை சொல்லல். சாதிய பாகுபாடுகள் காட்சிகளாக மட்டுமே விரிகின்றன. எந்த இடத்திலும் பிரச்சார நெடி இல்லை. ஒடுக்கப்பட்ட சாதியிலிருந்து கல்வி கற்க வரும் ஒரு மாணவனின் அக உணர்வுகளையே இத்திரைப்படம் விவரிக்கிறது. குறியீடுகள் திரைப்படமெங்கும் நிறைந்திருக்கின்றன.கதையில் இடம்பெற்ற மனிதர்கள் வாழும் நிலப்பரப்பை நெருக்கமாக உணர வைக்கிறது, ஒளிப்பதிவு. இந்தத் திரைப்படத்தில் மிகவும் ரசித்த விசயம், பின்னணி இசை❤️. Alokananda Dasgupta , மிகவும் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார். தேவையான இடங்களில் மட்டுமே சேர்க்கப்பட்டிருக்கும் இசை அவ்வளவு இதமாக இருக்கிறது. 


"நாகராஜ் மஞ்சுலேவின் திரைப்படங்களில் அரசியலை விட அழகியலே அதிகம் இருக்கிறது " என்பது அவர் மீதான விமர்சனமாக இருக்கிறது. இது மிகவும் அபத்தமான வாதம். அரசியலுடன் அழகியலும் சேரும் போதுதான் ஒரு படைப்பு முழுமையடைகிறது. அப்படியே அழகியல் இல்லாமல் 100 சதவீத அரசியல் படம் எடுத்தா மட்டும் உடனே அந்த அரசியலை எல்லோரும் ஏற்றுக் கொள்ளவா போறாங்க‌? இல்லையே. மாற்றம் மெதுவாகவே நிகழும்.


நாகராஜ் மஞ்சுலேவின் கதை சொல்லும் பாணி மிகவும் பிடித்திருக்கிறது. இனி அவரது மற்ற திரைப்படங்களையும் சந்தா முடியும் முன் பார்க்க வேண்டும். 

மேலும் படிக்க :

சேத்துமான் !

கர்ணன் - போராடடா ஒரு வாள் ஏந்தடா !





No comments:

Post a Comment