
நாம் வாழும் பூமி மிகப்பெரிய அற்புதங்களையும் ஆச்சரியங்களையும் உள்ளடக்கி அழகாகச் சுற்றி வருகின்றது. கோடிக்கணக்கான உயிரினங்கள் இந்த பூமி எங்கும் வாழ்ந்து வருகின்றன. இயற்கை எனும் சக்தி இந்த உலகத்தையே ஒன்றிணைகிறது. நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்சபூதங்கள் அனைத்து விதமான உயிரினங்களின் வாழ்க்கையிலும் பங்குபெறுகின்றன.
நம் கண்ணால் பார்க்கமுடியாத உயிரினங்கள் கோடிக்கணக்கில் இந்த உலகத்தில் வாழ்கின்றன. இந்த உயிரினங்கள் மட்டும் இல்லாவிட்டால் இந்த பூமியே ஒரு குப்பைமேடாகதான் இருக்கும். அழுகிப்போன, இறந்துபோன உடல்கள் ஆகியவற்றை மட்கச் செய்வதிலிருந்து , பாலை தயிர் ஆக மாற்றுவது வரை...