Pages

Thursday, July 11, 2019

வெளியேறியது இந்திய கிரிக்கெட் அணி !


பெரும் நம்பிக்கையை உருவாக்கிய இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்திடம் வீழ்ந்துவிட்டது. கோலியின் தவறான வியூகங்களே தோல்விக்கு காரணமாக இருந்துவிட்டது. தோனி அணித்தலைவராக இருந்த போது தோற்றாலும், வென்றாலும் பெரும்பாலும் ஆடும் 11 வீரர்களை மாற்றவே மாட்டார். இப்படி வீர்களை மாற்றாமலேயே விளையாடியது எல்லாப் போட்டிகளிலும் தோனிக்கு கைகொடுக்கவில்லை.இதனாலேயே தோனியின் அணித்தலைமை விமர்சிக்கப்பட்டது. கோலி பெரும்பாலும் ஆடும் 11 வீரர்களை மாற்றிக்கொண்டே இருந்தார். இந்த மனநிலை நிறைய போட்டிகளில் கைகொடுத்தாலும் பெரிய அளவிலான தொடர்களில் கோலிக்கு கைகொடுக்கவில்லை.

சாகல் , குல்தீப் மற்றும் ராகுலை அளவிற்கு அதிகமாக கோலி நம்புகிறார். இவர்களை விட திறமையானவர்கள் வெளியே நிறைய இருக்கிறார்கள். அணியிலுள்ள மற்ற வீரர்களின் திறமையான ஆட்டத்தால் இவர்களின் குறைகள் வெளியே தெரியவில்லை. வெளியே தெரிந்தாலும் கோலி இவர்களை நீக்க தயக்கம் காட்டுகிறார். இன்னும் ஒரு நாள் போட்டிகளில் விளையாட தகுதி இருந்தும் அஸ்வின் ஓரம் கட்டப்பட்டார். இந்த உலககோப்பை தொடங்கும் போதும் நாலாவது வீரராக தினேஷ் கார்த்திக்கை இறக்காமல் ராகுலையே நான்காவதாக இறக்கினார். தவான் காயம், ராகுல் தொடக்கவிரராக மாறினார். விஜய் சங்கர் நான்காவதாக இறக்கப்பட்டார். விஜய் சங்கர் காயம், தினேஷ் கார்த்திக்கை நான்காவதாக இறக்குவதற்கு பதிலாக ரிசப் பான்டை நான்காவதாக இறக்கி மீண்டும் தவறு செய்தார்.

ராகுலை விட ரகானே அந்த இடத்திற்கு பொறுத்தமான வீரராக இருந்திருப்பார். பான்ட் நான்காவது இடத்திற்கு பொருத்தமான ஆட்டக்காரர் இல்லை. மணிஷ் பாண்டே நான்காவது இடத்திற்கு பொருத்தமாக இருந்திருப்பார். ஆனால் அவருக்கு கேதர் ஜாதவ் அளவிற்கு வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. வெளிநாடுகளில் விளையாடும் போட்டிகளிலும் இரண்டு முதன்மையான  சுழற்பந்து வீச்சாளர்களை களமிறக்குவது சரியான அணுகுமுறையல்ல.

சிறப்பாக விளையாடிய பிறகும் முகமது சமியை வெளியே உட்கார வைத்தது பெரும் தவறு. தொடர்ந்து சமி விளையாடி இருக்க வேண்டும். கண்டிப்பாக சாகல், குல்தீப்பை விட சமி சிறப்பாகவே விளையாடியிருப்பார். உலககோப்பை முழுவதுமே பந்துவீச்சில் ஓரளவு சமாளித்து விட்டார்கள். இந்தியா பெற்ற இரண்டு தோல்விகளும் சேசிங் குறைபாட்டால் நிகழ்ந்தது. இத்தனைக்கும் இரண்டுமே சேசிங் செய்திருக்க வேண்டியவை. தேவையில்லாத போதும் பேட்டிங் ஆர்டரை மாற்றியதாலேயே இரண்டு தோல்விகளும் கிடைத்திருக்கின்றன.

பாண்டியாவை முன்கூட்டியே இறக்க வேண்டிய தேவை இல்லாத போதும் மீண்டும், மீண்டும் முன்கூட்டியே இறக்கப்படுகிறார். நியூஸிலாந்திற்கு எதிரான போட்டியிலும் பாண்டியா இறங்கிய இடத்தில் (எப்போதும் தோனி இறங்கும் இடம் ) தோனி இறங்கியிருந்தால் நிச்சயம் இந்தியா வென்றிருக்கும். இனிமேலாவது பேட்டிங் ஆர்டரை தேவையில்லாத போதும் மாற்றும் மனநிலையை கோலி, கைவிட வேண்டும். கோலி தனது பேட்டிங் ஆர்டரை மட்டும் எப்போதும் மாற்றுவதேயில்லை. 48 வது ஓவரில் முதல் விக்கெட் விழுந்தாலும் கோலியே இறங்குகிறார். அப்போது பாண்டியாவை இறக்குவது பற்றி கோலி சிந்திப்பதில்லை. அணி தோற்றால் மட்டும் கேப்டனை விமர்சிக்கிறார்கள் என பொத்தாம் பொதுவாக சொல்லிவிட முடியாது. நியூஸிலாந்திற்கு எதிரான போட்டியில் பேட்டிங் ஆர்டர் எப்போதும் போல் இருந்திருந்து தோற்று இருந்தால் கோலியை விமர்சனம் செய்ய வேண்டிய தேவை இருந்திருக்காது.

ஜடேஜா முந்தைய தொடரில் தனது திறமையை நிரூபித்ததாலேயே உலக கோப்பை அணியில் இடம் பெற்றார். சாகலும், குல்தீப்பும் கோலியின் கண்களை மறைத்ததால் ஜடேஜா இடம்பெறவில்லை. இடம் பெற்ற இரண்டு ஆட்டங்களில் 41 ரன்களை களத்தடுப்பின் மூலம் தனது அணிக்காக சேமித்து இருக்கிறார். 9 போட்டிகளில் விளையாடியவர்கள் கூட இவ்வளவு ரன்களை சேமிக்கவில்லை. பந்துவீச்சிலும் நாற்பது ரன்களுக்கும் குறைவாகவே விட்டுக்கொடுத்து விக்கெட்களும் வீழ்த்தியிருக்கிறார். பேட்டிங்கில் கிடைத்த ஒரு வாய்ப்பும் நெருக்கடியாக (92-6 ) அமைந்தாலும் அணியை வெற்றிக்கு அருகில் (208-7  இலக்கு 240) கொண்டு வந்த பிறகே ஆட்டமிழந்தார். பாண்டியா போல ஜடேஜாவையும் மூன்று விதமான போட்டிகளிலும் களமிறக்க முடியும். இதே போல அஸ்வினுக்கும் உலக கோப்பை தொடருக்கு முன்பாக வாய்ப்பளித்திருக்க வேண்டும்.

எல்லா கால கட்டத்திலும் அணித்தேர்வில் கேப்டன்களின் தலையீடு இருக்கவே செய்யும். அதே போல யார் கேப்டனாக இருந்தாலும் குறிப்பிட்ட வீரர்களை மட்டும் தேர்ந்தெடுத்து ஆதரிக்கும் மனநிலையும் தொடர்ந்து இருந்து வருகிறது. ஆனால் ஒரு அணியாக கூட்டாக இணைந்து விளையாடுவதில் கோலியின் அணியே முன் நிற்கிறது. அணி வீரர்களை தேர்ந்தெடுப்பதிலும், பேட்டிங் ஆர்டரை மாற்றுவதிலும் கோலி கவனம் செலுத்த வேண்டும்.

தோனியின் தலைமைப்பண்பை விமர்சிக்க முடியும். ஆனால் அவரது விக்கெட் கீப்பிங் மற்றும் அவரது பேட்டிங்கை நாம் விமர்சிக்கவே முடியாது. இந்திய கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ஒரு கேப்டனாக குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்ற பிறகும் சாதாரண வீரராக அணியில் தொடர்வது என்பது தோனியால் மட்டுமே சாத்தியமாகியிருக்கிறது. தோனி களத்தில் இருக்கும் வரை வெற்றி நம்மிடம் இல்லை என்பது தான் இன்று வரை எதிரணிகளின் மனநிலை. இதை தனது கடைசி கட்டம் வரை தக்க வைத்திருப்பது தான் தோனியின் சாதனை. ஒரு கேப்டனாகவும் , ஒரு விக்கெட் கீப்பராகவும், ஒரு பேட்ஸ்மேனாகவும் தோனியின் சாதனை மிகவும் பெரியது. சொந்த சாதனைகளுக்காக விளையாடிய எத்தனையோ பேர் இருக்கலாம், ஆனால், காலமெல்லாம் அணியின் வெற்றிக்காக மட்டுமே உழைத்தது தோனி மட்டுமே. தோனி ஒரு சகாப்தம்.

கோலி அடுத்த உலக கோப்பை வரை கேப்டனாக தொடர்வரா ? தெரியவில்லை. ஆனால் ஒரு வீரராக நிச்சயம் விளையாடுவார். காத்திருப்போம் 2023 வரை ! 

மேலும் படிக்க :

தோனி வாங்கிய சச்சின் உலககோப்பை !

சினிமா - கிரிக்கெட் - இந்தியா !

கிரிக்கெட் !

2 comments:

  1. Very good. I don't know why I feel happy that India didn't win, even though I love my country.

    ReplyDelete
  2. //தோனி ஒரு சகாப்தம். //
    உண்மைதான், எந்த ஒரு இந்திய கிரிக்கெட் வீரரும் இவரின் நேர்மையின் கிட்டே நெருங்க கூட முடியாது. what a pleasant personality! எனக்கு பிடித்த ஒரே ஒரு இந்திய கிரிக்கெட் வீரர் தோனி மட்டுமே.

    ReplyDelete