இப்படியான ஒரு இறுதிப்போட்டி இனி நடைபெற வாய்ப்பில்லை எனச் சொல்லும் அளவிற்கு மிகவும் சுவாரசியமான, பரபரப்பான போட்டியாக 2019 உலககோப்பையின் இறுதிப்போட்டி அமைந்தது. ஆனால் போட்டியின் முடிவு எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அமையவில்லை.
அரையிறுதிக்கான தகுதிச்சுற்றில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் அரையிறுதியிலேயே வெளியேற்றப்பட்டுவிட்டன. தகுதிச்சுற்றில் முதலிடத்திலிருந்து தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோற்றதால் நான்காம் இடம் பிடித்து தட்டுத்தடுமாறி தான் நியூஸிலாந்து அரையிறுதி வாய்ப்பைப் பெற்றது. இங்கிலாந்து அணிக்கோ கடைசி இரண்டு முதல் சுற்று போட்டிகளையும் வென்றால் மட்டுமே அரையிறுதியில் நுழைய முடியும் என்ற நிலைமை. அந்த கடைசி இரண்டு போட்டிகளும் இந்தியாவிற்கும், நியூஸிலாந்திற்கும் எதிரானதாக இருந்தது. இந்தியாவுடனான போட்டியில் இந்தியா வெல்ல வாய்ப்பிருந்த போதும் மெத்தனமாக விளையாடி தோற்றது. கடைசி போட்டியில் நியூஸிலாந்தை எளிதாக வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது, இங்கிலாந்து.
முதல் அரையிறுதியில் இந்தியாவும் , நியூசிலாந்தும் மோதின. சமியை ஆடும் 11 ல் சேர்க்காதது, தொடர்ந்து வாய்ப்புக் கொடுக்கப்படாத தினேஷ் கார்த்திக்கை நெருக்கடியான சூழலில் நான்காவதாக இறக்கியது, தோனியை முன்பாகவே களமிறக்காதது போன்ற வியூக தவறுகளால் இந்திய அணி தோல்வியடைந்து வெளியேறியது. இலங்கைக்கு எதிரான போட்டியைப் போல நியூஸிலாந்து நிர்ணயித்த சுலப இலக்கை எளிதாக எட்டி விடலாம் என்ற இந்திய அணியின் கணக்கு தவறாகிப் போனது. இரண்டாவது அரையிறுதியில் ஜந்து முறை கோப்பையை வென்ற, இத்தனையாண்டு காலமும் அரையிறுதியில் தோல்வியையே சந்திக்காத ஆஸ்திரேலிய அணியை எளிதாக தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது, இங்கிலாந்து அணி.
இங்கிலாந்தின் இந்த தொடர் வெற்றிக்கு அந்த அணி மேற்கொண்ட ஒரு முக்கிய மாற்றமும் ஒரு காரணம். இரண்டாவது சுழற்பந்து வீச்சாளரான மோயின் அலியை நீக்கிவிட்டு மித வேகப்பந்து ஆல் ரவுண்டரான லியாம் பிளங்கட்டை அணியில் சேர்த்தது தான். இங்கிலாந்து பெற்ற தொடச்சியான வெற்றிகளில் பிளங்கட்டின் பங்களிப்பு அதிகம். நியூஸிலாந்து அணியும் இரண்டாவது சுழற்பந்து வீச்சாளரைச் சேர்க்காமல் மிதவேகப்பந்த ஆல்ரவுண்டரையே தொடர்ந்து தேர்வு செய்தது. இந்திய அணி ஒன்று மட்டுமே தொடர்ந்து இரண்டு முதன்மையான சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது. சமி மிகவும் சிறப்பாக செயல்பட்டும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இந்திய அணியும் சாகல் மற்றும் குல்தீப்பை நீக்கி விட்டு ஜடேஜா, சமி, பும்ரா, புவனேஸ்வர் ,பாண்டியா என விளையாடி இருந்தால் நியூஸிலாந்து இவ்வளவு ரன்களை சேகரித்து இருக்காது. நியூஸிலாந்து 239 எடுத்த நிலையில் சாகல் பத்து ஓவர்களில் 63 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தி இருந்தார். இவருக்கு பதில் சமி இறக்கப்பட்டிருந்தால் நிச்சயம் இவ்வளவு ரன்களை கொடுத்து இருக்க மாட்டார், இரண்டு மூன்று விக்கெட்டுகளையும் எடுத்து இருப்பார். இனிமேலாவது சாகல் மற்றும் குல்தீப்பை கண்மூடித்தனமாக நம்புவதை இந்திய அணி கைவிட வேண்டும்.
இறுதிப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து 241 ரன்களை மிகவும் கடினப்பட்டே திரட்டியது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது அரையிறுதி போல இங்கிலாந்து அணி இந்த இலக்கை எளிதாக எட்டிவிடும் என்றே பலரும் நினைத்திருப்பார்கள். ஆனால் முதல் அரையிறுதியில் இந்தியாவிற்கு அதிர்ச்சியளித்தது போலவே நியூஸிலாந்து அணி, இங்கிலாந்து அணிக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்தது. இங்கிலாந்து எளிதாக ரன்களை எடுக்க முடியவில்லை. மறுபக்கம் விக்கெட்கள் விழுந்த வண்ணம் இருந்தன. பென் ஸ்டோக்ஸூம், ஜோஸ் பட்லரும் அணியை சரிவிலிருந்து மீட்டனர். ஆனால் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை. பட்லர் ஆட்டமிழந்த பிறகு ஸ்டோக்ஸ் தனியாளாக போராடினார். இவர் தனியாளாக போராடுவது இந்த தொடரில் மூன்றாவது முறை. இலங்கைக்கு எதிராகவும், ஆஸ்திரேலியாவிற்கு எதிராகவும் இப்படித்தான் தனியாளாக போராடினார். இந்த வகையில் இவரை இங்கிலாந்து தோனி என குறிப்பிடலாம் போல.
ஜேம்ஸ் நிஷாம் வீசிய 49வது ஓவரில் பென் ஸ்டோக்ஸ் அவுட் ஆகியிருக்க வேண்டியது. ஸ்டோக்ஸ் தூக்கியடித்த பந்தை போல்ட் நன்றாக கேட்ச் செய்தார். ஆனால் எப்படியும் பவுண்டரி கயிறில் கால் வைக்காமல் சமாளித்து விடலாம் என்ற அதீத நம்பிக்கை தவறாகி போனது. பவுண்டரி கயிறில் கால் வைத்துவிட்டதால் சிக்ஸாக மாறியது. கேட்ச் பிடித்தவுடனேயே அருகிலிருந்த குப்திலிடம் தூக்கிப் போட்டிருந்தால் சிறப்பான கேட்சாக இருந்திருக்கும். நியூஸிலாந்து நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும். பவுண்டரி கயிறில் கால் வைத்த பிறகே குப்திலிடம் தூக்கிப் போட்டதால் சிக்ஸாகிப் போனது. இந்த கணத்திலிருந்து நியூஸிலாந்தின் வெற்றியை தீர்மானிக்கும் பொறுப்பு இவர்கள் இருவரிடமே வந்து சேர்ந்தது.
இங்கிலாந்து வெற்றி பெற 15 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆட்டத்தின் இறுதி ஓவரை போல்ட் வீசினார். முதலிரண்டு பந்துகளில் ரன்கள் எடுக்கப்படவில்லை. மூன்றாவது பந்து சிக்ஸராக மாறியது. 3 பந்துகளில் 9 ரன்கள் தேவை என்ற நிலையில் மூன்றாவது பந்தை குப்திலிடம் அடித்துவிட்டு இரண்டாவது ரன்னுக்கு ஓடினார், ஸ்டோக்ஸ். குப்தில் பீல்டிங் செய்து கீப்பரை நோக்கி எறிந்த பந்து ரன்அவுட்டிலிருந்து தப்ப டைவ் அடித்த ஸ்டோக்ஸின் பேட்டில் பட்டு பவுண்டரியாக மாறியது. விதிப்படி அந்த பந்துக்கு 5 ரன்கள் தான் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் நடுவர்கள் தவறுதலாக 6 என கொடுத்துவிட்டனர். அதனால் 2 பந்துகளில் 3 ரன்கள் என்ற எளிதான இலக்காக மாறியது. 5வது பந்தில் ஒரு ரன் எடுத்த நிலையில் இரண்டாவது ரன்னிற்கு ஓடிய போது ரஷீத் ரன்அவுட் ஆனார். கடைசி 1 பந்தில் இரண்டு ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டது, மார்க்வுட் ரன் அவுட் ஆனார், இங்கிலாந்து ஆல்அவுட் ஆனது. போட்டி சமனில் முடிந்தது.
அந்த குப்திலின் ஓவர் துரோவிற்கு கொடுக்கப்பட்ட ரன்கள் போட்டி சமனில் முடிய காரணமாகிவிட்டது. எதிரணி பேட்ஸ்மேன் மீது பந்து படாத நிலையில் ஓவர் துரோவிற்கு ரன்கள் கொடுப்பது நியாயமானது. துரோவின் போது எதிரணி பேட்ஸ்மேன் மீது பட்ட நிலையில் ஒவர் தரோவாக மாறும் போது அதற்கு ரன்கள் கொடுப்பது நியாயமற்றது. இந்த விதியும் திருத்தப்பட வேண்டும்.
நியூஸிலாந்திற்கான சூப்பர் ஓவரை போல்ட் வீசமாட்டார் என நினைந்த சூழலில் மீண்டும் போல்ட்டே வீசினார். இங்கிலாந்து சார்பாக ஸ்டோக்ஸூம், பட்லரும் களமிறங்கினார்கள். மொத்தம் 15 ரன்கள் எடுத்தார்கள். அதுவும் சரியான களத்தடுப்பு அமைக்கப்பட்டிருந்தால் கடைசி பந்தில் அடிக்கப்பட்ட பவுண்டரி தடுக்கப்பட்டிருக்கும். 16 ரன்கள் இலக்காக நியூஸிலாந்து களமிறங்கியது. ஜேம்ஸ் நிஷாமும், மார்ட்டின் குப்திலும் களமிறங்கினார்கள். குப்திலின் திறமையை சந்தேகிக்க முடியாது என்றாலும் இந்த தொடரில் சரியாக ஆடாத நிலையில் அவரை தேர்வு செய்தது தவறானதாகும். இங்கிலாந்து சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர் பந்து வீசினார். நிஷாம் மிகவும் நன்றாக விளையாடினார்.கடைசி 3 பந்துகளில் 5 ரன்கள் தேவை. நான்காவது பந்தில் இரண்டு ரன்கள் எடுக்கப்பட்டது. 2 பந்துகளில் 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஐந்தாவது பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டது. முதல் 5 பந்துகளையுமே நிஷாமே சந்தித்து 14 ரன்கள் எடுத்தார். கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் அந்த பந்தை எதிர்கொண்ட குப்தில் பந்தை ஜேசன் ராயிடம் அடித்துவிட்டு முதல் ரன் எடுத்த பிறகு இரண்டாவது ரன்னுக்காக ஓடும் போது ஜேசன் ராய் பந்தை, கீப்பரான பட்லரிடம் எறிய குப்தில், பட்லரால் ரன் அவுட் செய்யப்பட்டார். 50 ஓவர் போட்டி சமனில் முடிந்தது போல, சூப்பர் ஓவரும் சமனில் முடிந்தது. இப்படி இனி எப்போது நடக்கும் என்று தெரியவில்லை. இங்கிலாந்து இந்த நிலையை அடைய ஸ்டோக்ஸூம், பட்லருமே முக்கிய காரணம். போட்டியின் போது அடிக்கப்பட்ட பவுண்டரிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இரு அணிகளும் 50 ஓவர்களிலும், சூப்பர் ஓவரிலும் சமமான ரன்கள் எடுத்த பிறகும், வெற்றியை பவுண்டரிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் தீர்மானித்தது விளையாட்டு உணர்விற்கு எதிரானது. ஏற்கனவே உள்ள விதி தான் என்றாலும் இனி கட்டாயம் இந்த விதி திருத்தப்பட வேண்டும். இது போன்ற சூழல் முன்பு அமையாததால் இந்த விதி குறித்தான விமர்சனங்கள் எழவில்லை. ஆனால் இப்போது கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இனிமேலாவது இந்த விதியைத் திருத்த வேண்டும். உலகக்கோப்பை இறுதிப்போட்டி என்பதால் வெற்றியை இன்னொரு சூப்பர் ஓவரின் மூலம் தீர்மானித்து இருக்கலாம்.
இறுதிப்போட்டியில் இரு அணிகளும் வெல்லாத சூழலில் இப்போதைக்கு கோப்பை இங்கிலாந்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. அவ்வளவு தான். இறுதிப்போட்டியில் எந்த அணியும் தோற்கவில்லை. எல்லோரும் எதிர்பார்த்தது போல இந்தியாவும், இங்கிலாந்தும் இறுதிப்போட்டியில் மோதியிருந்தால் கூட ஆட்டம் இவ்வளவு சுவாரசியமாக இருந்திருக்குமா ? தெரியாது. உண்மையிலேயே முடிவைத் தவிர, மிகவும் சிறந்த இறுதிப்போட்டி இது தான்.
இங்கிலாந்து அணியை இங்கிலாந்து அணி மட்டுமே என மதிப்பிட்டுவிட முடியாது. தற்போதைய இங்கிலாந்து அணியின் கேப்டனாக இருக்கும் மோர்கன் கூட அயர்லாந்துகாரர் தான். அயர்லாந்து கிரிக்கெட் அணிக்காக 23 போட்டிகளில் விளையாடியவர் தான். இங்கிலாந்து கவுண்டி அணிக்காக விளையாடியதில் கவனம் பெற்று இங்கிலாந்து அணியில் நுழைந்து ,இங்கிலாந்து அணியின் கேப்டனாக மாறி அந்த அணிக்கு உலகக்கோப்பையையும் பெற்றுக்கொடுத்துவிட்டார். இதே போல பென் ஸ்டோக்ஸ் நியூஸிலாந்தில் பிறந்தவர், ஜோப்ரா ஆர்ச்சர் மேற்கு இந்திய தீவுகளில் பிறந்தவர், ஜேசன் ராய் தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர். இப்படியாக பல்வேறு காரணங்களுக்காக இங்கிலாந்தில் குடிபெயர்ந்தவர்களால் திறமை இருக்கும்பட்சத்தில் இங்கிலாந்து அணியில் இடம்பெற முடிகிறது.
திராவிட மண், பெரியார் மண் என்று சொல்லிக்கொண்டிருக்கும் தமிழகத்தில் இருந்து இன்று வரை பார்ப்பனர் அல்லாத ஒருவர் இந்திய அணிக்காக விளையாடவே இல்லை. பெரும் பாலும் இந்திய கிரிக்கெட் அணியில் பார்ப்பனர்களே அதிகம் இடம் பெறுகின்றனர். சாதி ஆதிக்கம் அதிகம் நிலவும் இடமாக இந்திய கிரிக்கெட் இருக்கிறது. இங்கே திறமையெல்லாம் இரண்டாம்பட்சம் தான். இந்த வாழ்வு தரும் நெருக்கடிகளிலிருந்து தப்பிக்க கிரிக்கெட் பார்ப்பது என்பது உதவுகிறது. பேதங்களை மறந்து இந்தியர்களை ரசிகர்கள் என்ற அளவில் கிரிக்கெட் ஒன்றிணைக்கிறது. பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்கள் எந்த அணி விளையாண்டாலும் பார்க்கக்கூடியவர்களாகவே இருக்கின்றனர்.
ஓவர் துரோ விதியும், பவுண்டரிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் வெற்றியைத் தீர்மானிக்கும் விதியும் திருத்தப்பட வேண்டும்.
கிரிக்கெட் வாழ்க !
மேலும் படிக்க :
இலங்கை கிரிக்கெட் அணிக்கு பெரும் புகழ் சேர்த்த முத்தையா முரளிதரனும் ஏஞ்சலோ மெத்திவ்ஸும் இந்திய வம்சாவளி தமிழர்கள். உலகில் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் இவர்கள் இருவருக்கும் முக்கிய இடம் உண்டு. இதில் ஏஞ்சலோ மெத்திவ்ஸ் அணித்தலைவர் வரை முன்னேற எத்தனை சவால்களையும் தடைகளையும் எதிர்கொண்டார் என்பதை நான் தனிப்பட்ட ரீதியில் அறிவேன்.
ReplyDeleteதமிழ்நாட்டார் முதலில் வெந்ததை தின்று விதிவந்தால் சாகும் மெத்தன போக்கை கைவிட வேண்டும். எதற்கெடுத்தாலும் உணர்ச்சி வசபட்டு பதறி தற்கொலை செய்துகொள்ளாமல் நிதானமாக மனஉறுதியுடன் போராடி தங்கள் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும்.