Pages

Monday, August 5, 2019

கஷ்மீர் மக்களை வாழ விடுங்கள் !


இந்தியா, ஒரு சிற்றரசுகளின் கூட்டமைப்பு என்பதை உணராத யாராலும் கஷ்மீர் மக்களின் மனநிலையை புரிந்துகொள்ளவே முடியாது. கஷ்மீர் என்றால் தீவிரவாதம், தீவிரவாதிகள், வன்முறை, குண்டு வெடிப்பு, பாகிஸ்தான்,சீனா எல்லை பிரச்சனைகள் என்பதையே நம் தலையில் கட்டுகிறார்கள். இதையெல்லாம் தாண்டி இருக்கும் நிஜமான கஷ்மீரின் முகம் நம் கண்களுக்கு தெரிவதேயில்லை. நாம் தெரிந்து கொள்ளவும் விரும்புவது இல்லை.

கஷ்மீர் பெற்றிருக்கும் சிறப்பு அந்தஸ்தால் அந்த மாநிலத்திற்கு எந்த நன்மையும் நடக்கவில்லை. அந்த சிறப்பு அந்தஸ்தை காரணம் காட்டி கஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க மட்டுமே அந்த சிறப்பு அந்தஸ்து பயன்பட்டிருக்கிறது. உண்மையிலேயே அது சிறப்பு அந்தஸ்தாக இருந்திருக்குமானால் இந்திய அளவில் முதன்மையான மாநிலமாக கஷ்மீர் தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் உண்மையில் கஷ்மீர் மற்ற இந்திய மாநிலங்களை விட 30 வருடங்கள் பின்தங்கியே இருக்கிறது. சாலை வசதி, கல்வி , மருத்துவம், விவசாயம், வேலைவாய்ப்பு என எல்லாமே மோசமான நிலையில் தான் இருக்கின்றன. படித்த பிறகு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களை தீவிரவாத அமைப்புகள் குறி வைக்கின்றன. இது வரை வந்த அரசுகள் கஷ்மீர் மக்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்திருந்தால் அவர்கள் முழுமையாக இந்தியாவை ஆதரித்து இருப்பார்கள்.

கஷ்மீர் மாநிலம் வளர்ச்சியில் பின்தங்கி இருப்பதில் இருக்கும் மிகப்பெரிய நன்மை கஷ்மீரின் சொக்க வைக்கும் இயற்கை வளங்கள் குன்றாமல் அப்படியே இருப்பது தான். அப்படிப்பட்ட அழகிய கஷ்மீரின் இயற்கை வளங்கள் இனி என்னாகும் என்பதே பெரிய கவலை. கார்பரேட்கள் கஷ்மீருக்குள் நூழைந்தால் நிச்சயம் இயற்கை வளங்கள் அழிவைச் சந்திக்கும்.

ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்ற போதும் கஷ்மீர் மக்கள் இந்தியாவையோ, பாகிஸ்தானையோ ஆதரிக்கவில்லை. இப்போதும் பெரும்பாலான கஷ்மீர் மக்கள் இந்தியாவையோ, பாகிஸ்தானையோ ஆதரிக்கவில்லை. ராணுவத்திற்கோ, காவல்துறைக்கோ அதிகபட்ச அதிகாரம் கொடுத்தால் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதற்கு கஷ்மீரும் ஒரு உதாரணம். ஈழத்தில் காணாமல் ஆக்கப்பட்ட ஆண்களைப் போலவே கஷ்மீரிலும் காணாமல் ஆக்கப்பட்ட ஆண்களின் பட்டியல் என்பது மிகவும் நீளம். பெண்கள் அடைந்து வரும் துன்பங்களும் அதிகம். எந்த அரசாங்கமும் ராணுவத்தின் குற்றங்களை நியாயமாக்கவே முயற்சிக்கும். அதற்கு இந்திய அரசாங்கமும் விதிவிலக்கல்ல.

கஷ்மீர், மாநிலத்தை யூனியன் பிரதேசங்களாக மாற்றுவதால் கஷ்மீர் மக்களுக்கு எந்தவித நன்மையும் நடக்கப் போவதில்லை. மாநிலமாக இருந்த போதும் அவர்கள் எந்தப் பலனையும் அனுபவிக்கவில்லை. இந்தியாவுடன் சேர்ந்தால் இந்த உரிமைகள் கிடைக்கும் என்று சொல்லப்பட்ட சொற்ப உரிமைகளையும் இழக்கப் போகிறார்கள். பாசிச பார்ப்பன பாஜக அரசு எப்போதும் கார்பரேட்களுக்காகவே சிந்தித்து அவர்களுக்காகவே உழைக்கும் ஒரு அரசு. அந்த வகையில் இந்த மாற்றம் என்பது நிச்சயம் கார்பரேட்களுக்கு உதவும்.

தீவிரவாதம் என்பது நிச்சயம் கஷ்மீர் பகுதியில் இருக்கிறது தான் அதற்காக ஒட்டு மொத்த கஷ்மீர் மக்களையும் தீவிரவாதிகளை சித்தரிப்பதை பொது சமூகம் கைவிட வேண்டும். உலகிலுள்ள எல்லா மக்களையும் போலவே கஷ்மீர் மக்களும் வாழப் பிறந்தவர்கள் தான். அவர்களை வாழ அனுமதியுங்கள்.



1 comment:

  1. மதிப்புமிக்க பதவிக்கு நன்றி ஐயா.இது எனக்கு மிகவும் உதவுகிறது. நீங்கள் எங்களுக்கு இன்னும் ஏதாவது பரிசளிப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் புதிய தலைப்புகளுக்கு நாங்கள் காத்திருக்கிறோம்.
    தமிழ் சூடான கதை

    ReplyDelete