Pages

Saturday, September 17, 2022

தெய்வம் என்பதோர்... - தொ.பரமசிவன் !



" ஆளும் வர்க்கம், மக்களின் மனோபாவங்களை மாற்றி, சிந்தனைகளை மழுங்கடித்து அவர்களை ஆளும் அனுமதியைப் பெற்று விடுகிறது. ஆளும் வர்க்கத்தின் பலம் அரசு இயந்திரங்களான நிர்வாகம், சட்டம், அதிகாரம் முதலிய அரசு இயந்திரங்களை இயக்குவதில் மட்டும் அல்ல பண்பாட்டுத் தளத்திலும் பத்திரமாக இருக்கிறது. எனவே ஆளும் வர்க்கத்தை எதிர்த்துப் போராட வேண்டியவர்கள் பண்பாட்டுத் தளத்திலும் போராட வேண்டியிருக்கிறது"

- அண்டோனியோ கிராம்ஷி

உலகெங்கிலும் வாழும் பல்வேறு விதமான மனித இனக்குழுக்கள் பல்வேறு விதமான பண்பாடுகளைக் கடைப்பிடிக்கின்றன. உலகவணிகமயமாக்கல் உலகெங்கும் கால்பதிக்கத் தொடங்கிய பிறகு ஒவ்வொரு இனக்குழுவும் கடைபிடித்து வந்த, தனித்த அடையாளங்களை உடைய பண்பாடுகளில் மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தன. உணவு, உடை, இருப்பிடம் போன்றவற்றில் பெருமளவில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. நமது சூழலுக்கு பொருந்தாத பலவற்றையும் ஏற்றுக்கொண்டு வாழ்ந்து வருகிறோம். இப்படியான மாற்றங்களில் அதிகம் பயனடைவது பெருமுதலாளிகள்தான்.

நியாயப்படி பார்த்தால் உலகமயமாக்கல் மூலம் எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நிகழவில்லை. ஏழைக்கும் பணக்காரருக்கும் இருக்கும் இடைவெளி முன்பை விட மிகவும் அதிகரித்திருக்கிறது. 'இலாபம்' என்ற ஒன்றை மட்டுமே இலக்காக கொண்டு செயல்படும் அடிப்படை அறமற்ற நிறுவனங்களை வளர்த்துவிட்டு வேடிக்கை பார்க்கிறோம். அவ்வளவு எளிதில் மீண்டும் உருவாக்க முடியாத இயற்கை வளங்களை போகிற போக்கில் அழித்து பணமாக்கி வருகிறார்கள். இயற்கைக்கு தெரிந்ததெல்லாம் ஒன்றுதான், அது 'சமநிலை'யை நிலைநிறுத்துவது. தனது சமநிலையை ஏதோ ஒரு விதத்தில் இயற்கை தக்கவைத்துக் கொள்ளும். ஆனால் அந்த இயற்கையின் சமநிலைப்படுத்துதல் என்பது மனித இனத்தின் மீதான தாக்குதலாகவே இருக்கும். இதை எதையும் கவனத்தில் கொள்ளாமல் ஓடிக்கொண்டே இருக்கிறோம்.

எந்த இனக்குழு கடைபிடிக்கும் பண்பாடாக இருந்தாலும் அங்கே கடவுள் வழிபாடு என்பது நிச்சயம் இருக்கும். நிறுவனமயப்படுத்தப்பட்ட மதங்கள் உருவான பிறகு மற்றைய வழிபாட்டு முறைகள் ஆட்டம் காண ஆரம்பித்தன. ஒவ்வொரு நிறுவன மதமும் சிறிய அளவிலான வழிபாட்டு முறைகளை கடைபிடிக்கும் இனக்குழுக்களை ஓட ஓட விரட்டுகின்றன. அவர்கள் மீது வன்முறையை ஏவி விடுகின்றன. மதப் பிரிவினைவாதத்தை உருவாக்கி உலக மக்களைப் பிரிப்பதில் நிறுவன மதங்கள் தீவிரமாக செயல்படுகின்றன. ஒரு நாட்டில் வாழும் மக்களை பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் என்று பிரிப்பது என்பது பெரும்பாலும் மதத்தை மையப்படுத்தியே அமைக்கிறது. ஒரு நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் மதம், இன்னொரு நாட்டில் சிறுபான்மையாக இருக்கிறது. ஆனால் சொல்லி வைத்தார்போல் ஒவ்வொரு நாட்டிலும் பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் மீது வெறுப்புகளைக் கக்கி அவர்களை நசுக்குகின்றனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை இந்து மதம் என்பது பெரும்பான்மை மதமாக இருக்கிறது.ஆனால் 'இந்து' என்ற சொல்லே ஆய்விற்கு உரியதாக இருக்கிறது.

' வங்காளத்தில் நீதித்துறையை ஒழுங்குபடுத்தும் முயற்சியில் சர்.வில்லியம் ஜோன்ஸ் ஈடுபட்டார்.உள்நாட்டு நீதிமுறைகளை அவர் தொகுத்துத் திரட்டி அதற்கு இந்துச் சட்டம் ( Hindu Law) எனப் பெயரிட்டார். கிறித்தவரல்லாத, இசுலாமியரல்லாத பெருந்திரளான மக்களைக் குறிக்க ஐரோப்பியர் வழங்கிய ' இந்து' என்னும் சொல் முதன்முதலாக அதிகார அங்கீகாரம் பெற்றது '

1800களின் தொடக்கத்தில் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. அதன் பிறகு இந்தச் சொல்லைக் கெட்டியாக பிடித்துக்கொண்ட ஸ்மார்த்த பார்ப்பனர்கள், இன்று ' இந்தியா இந்துக்களுக்கேச் சொந்தம் ' என்று கூவுகின்ற நிலைக்கு வந்திருக்கிறார்கள். உண்மையில் இந்து மதம் என்பது பல்வேறு விதமான சமயங்களையும், பண்பாடுகளையும் அழித்து அவற்றையெல்லாம் உள்வாங்கி, தனதாக்கிய மதம் என்றுதான் வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இன்றும் இந்து மதம் என்ற போர்வையில் ஆதிக்கம் செலுத்துபவர்களாக ஸ்மார்த்த பார்ப்பனர்களே இருக்கிறார்கள்.

இந்திய வரலாற்றில் பார்ப்பனியத்தை ஆரம்ப காலம் முதலே எதிர்த்த நிலமாக தமிழ் நிலம் இருந்திருக்கிறது.

'1921இல் தமிழ்நாட்டில் நீதிக்கட்சி ஆட்சிப் பொறுப்பேற்று, அறநிலையப் பாதுகாப்பிற்கான சட்டமுன்வரைவு 1924இல் வெளிவந்தது. இந்தச் சட்டமுன்வரைவில் இருந்த 'இந்து' என்ற சொல்லைத் தமிழ்நாட்டுச் சைவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். 1924ஆம் ஆண்டு டிசம்பர் 'செந்தமிழ்ச் செல்வி' இதழில் பின்னிணைப்பாக இந்தச் சட்ட முன்வரைவு விமர்சனம் செய்யப்படுள்ளது. 'இந்து' என்ற சொல் எந்தவொரு சமயத்தையும் குறிப்பதாகாது. இந்து என்று சொல்லப்படும் பிரிவில் சைவம், வைணவம், லிங்காதயம், ஸ்மார்த்தம் என்று பல பிரிவுகள் உள்ளன. எனவே இந்த முன்வரைவு ஒவ்வொரு சமயத்தைப் பற்றியும் தனித்தனியாகக் கணக்கிட வேண்டும். இந்து என்ற சொல் ஸ்மார்த்தர்களுடையது என்பதே அந்த விமர்சனத்தின் சாரம்'.

எதிர்ப்புகளுக்கு இடையிலும் ' இந்து அறநிலையம் ' என்ற சொல்லே சட்டச் சொல்லாகியிருக்கிறது. அதுவே இன்றுவரை தொடர்கிறது.

நீண்ட வரலாறுடைய தமிழ்ப் பண்பாட்டிலும் கடவுள் வழிபாடு என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. ஏற்கனவே இங்கே இருந்த வழிபாட்டு முறைகளை, வழிபட்ட தெய்வங்களை இந்து மதம் தனக்குள் சேர்ந்துக் கொண்டாலும் கூட நாட்டார் தெய்வ வழிபாட்டிற்கும், நிறுவன தெய்வ வழிபாட்டிற்கும் இடையே மிகப் பெரிய அளவில் வித்தியாசங்கள் இருப்பதை தனது ஆய்வுகள் மூலம் தொ.ப. விளக்குகிறார். 'பண்பாடு குறித்த ஆய்வுத்துறையில் தமிழ்நாடு இன்னும் தொடக்க நிலையிலேயே உள்ளது' என்றுதான் இந்த கட்டுரை நூலையே தொ.ப. தொடங்கியிருக்கிறார். தமிழ்நாட்டில் அதிகளவில் பண்பாட்டாய்வுகள் செய்யப்பட வேண்டிய கட்டாயமும் தற்போது உருவாகியிருக்கிறது.

மற்ற தொன்மையான பண்பாடுகளைப் போல தமிழ்ப் பண்பாட்டிலும், முதன்மையான வழிபாடான 'தாய்த் தெய்வ வழிபாடு' எவ்வாறு இருந்தது; இருக்கிறது என்பதை ஒரு நீண்ட கட்டுரை மூலம் விளக்குகிறார். தெய்வ வழிபாட்டின் போது நாம் கவனிக்க மறந்த விசயங்களை ஆய்வுகள் மூலம் விளக்குகிறார். வியப்பூட்டும் நிறைய விசயங்கள் 'தாய்த் தெய்வம்' என்ற கட்டுரையில் இடம்பெற்றிருக்கின்றன.

' பழந்தமிழர்களின் தாய்த் தெய்வக் கோயில்களான அம்மன் கோயில்கள் 99 விழுக்காடு வடக்கு நோக்கியே அமைந்துள்ளன என்பதையும் நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டும். கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தில் முப்புறமும் கடல் சூழ்ந்த நாடாகவே ( அதாவது இன்றைய கேரளத்தை உள்ளிட்டு) தமிழகம் இருந்துள்ளது. எனவே பகைப்படை வடதிசையிலிருந்து மட்டுமே வரமுடியும். தெய்வம் வடக்குத் திசை நோக்கித் தன் மக்களைக் காக்க ஆயுதம் ஏந்தி நிற்கின்றது என்பதே தொல் வரலாற்று உண்மையாகும்'.

இப்படி நிறைய தகவல்கள் இக்கட்டுரையின் வாயிலாக நமக்குக் கிடைக்கின்றன. பெருந்தெய்வ கோயில்களில் ஆண் தெய்வத்திற்கு அருகிலிருக்கும் பெண் தெய்வங்கள் கைகளில் மலர்களை ஏந்தியிருக்கும் என்றும், ஆனால் தாய்த் தெய்வங்களோ பெரும்பாலும் சிங்கத்தின் மீது அமர்ந்து கைகளில் ஆயுதங்களுடன் போருக்கு ஆயத்தமான நிலையில் இருக்கும் என்றும், இவை இரத்தப்பலி பெறுகின்ற தெய்வங்கள் என்றும் தொ.ப.குறிப்பிடுகிறார். சங்க இலக்கியத்திலிருந்தும் , கல்வெட்டுகள் மூலமாகவும் , சடங்குகள் மூலமாகவும் தமிழகத்தில் இருக்கும் தாய்த் தெய்வ வழிபாடு பற்றி தெளிவாக விளக்குகிறார்.

' தாங்கள் வணங்குகின்ற பகவதியம்மன் ஒரு சமணத் தெய்வமென்பதும் முனீஸ்வரர் என்ற பெயரால் அறியப்படும் தீர்த்தங்கரர் சமண மதத்தவர் என்பதும் வழிபடுகின்ற "இந்து" மக்களுக்குத் தெரியவே தெரியாது' என்கிறார், தொ.ப.

' உலக வரலாறு நெடுகிலும் ஒரு பிரிவின் வழிபாட்டுத்தலத்தை மற்றவர் இடிப்பதும் அழிப்பதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வருகின்றன. அரசியல் என்பது மத அடிப்படைவாத அரசியலாக மாறிக்கொண்டிருக்கும் காலமிது. அடுத்தவர் வழிபாட்டிடத்தை இடிப்பதும் அழிப்பதும் அரசர்களும் அமைச்சர்களும் அதிகாரிகளும் செய்கின்ற வேலை என்பதே அன்றும் இன்றும் வரலாறு ஆகும். சனநாயக உணர்வுள்ள எளிய மக்கள் அதனை ஒருபோதும் செய்ய மாட்டார்கள்.'

வள்ளலார் பற்றிய கட்டுரையில் எப்படியான சூழலில் வள்ளலார் வடலூரில் சத்தியஞான சபையை நிறுவினார் என்பதை சான்றுகளுடன் விளக்குகிறார். சமய வழிபாட்டு முறைகளில் இருந்த மூடநம்பிக்கைகளை எதிர்த்ததுடன் , அங்கே கடைபிடிக்கப்பட்டு வந்த சாதிய பாகுபாடுகளையும் கடுமையாக எதிர்த்திருக்கிறார். 'அடியவருக்கு உணவளித்தல் என்ற கோயில் நடைமுறையினையும் சாதி, மதம் கடந்து ஏழை, எளியவர்களுக்கு உணவளித்தல் என்ற நடைமுறையாக மாற்றிக் காட்டினார்,வள்ளலார் ' என்கிறார், தொ.ப.

'ஆழ்வார் பாடல்களும் கண்ணன் பாட்டும்' கட்டுரையில் இராம, கிருஷ்ண அவதாரங்களில் தமிழ்நாட்டு வைணவம் கிருஷ்ண அவதாரத்தையே பெரிதும் கொண்டாடியது. கிருஷ்ணன் என்னும் கண்ணனுக்கு மகிழிணையாக வடநாட்டு இலக்கிய மரபுகள் ராதையைக் கொண்டாடியது போலத் தமிழிலக்கியங்கள் நப்பினையைக் கொண்டாடின, என்று தொ.ப. கூறுகிறார்.

கம்பராமாயணம் இங்கு செல்வாக்கு பெற்றிருந்தாலும் கூட ராமன் செல்வாக்கு பெறவில்லை. கம்பரின் கவித்திறமையை வெளிப்படுத்துவதாகவே கம்பராமாயணம் இங்கே பார்க்கப்படுகிறது. ஒரு வேளை இங்கே கண்ணனுக்கு பதில் ராமன் செல்வாக்கு அடைந்திருந்தால் தற்போது ஆளும் பாஜக அரசிற்கு அது வசதியாகப் போயிருக்கும்.

' கண்ணனைக் குழந்தையாகவும் நாயகனாகவும் தெய்வமாகவும் மட்டுமே ஆழ்வார்கள் பார்க்க பாரதியோ, தாயாகவும் தோழனாகவும் சற்குருவாகவும் ஆண்டானாகவும் அடிமையாகவும் நாயகியாகவும் பார்க்கிறான்.'

' பாரதி முழுமையான விடுதலையினை யாசித்த ஒரு கவிஞர். ' வேண்டுமடி எப்போதும் விடுதலை' என்று மீண்டும் அடிமைத்தளையில் சிக்க மறுக்கின்ற கவிஞர். பாரதியின் விடுதலை உணர்வு அரசியல் தளத்தில் மட்டுமல்லாது கலைத் தளத்திலும் பரவிநிற்கின்றது. அதிகாரம் சார்ந்த எல்லா வகையான ஒழுங்கு முறைகளையும் மீற விரும்புவது கவிஞரின் மனமாகும்.'

வைணவக் குடும்பத்தில் பிறக்காத பாரதியார், வைணவ கடவுளாகப் பார்க்கப்படும் கண்ணனை முன் வைத்து எழுதிய 'கண்ணன் பாட்டு ' என்ற கலைப் படைப்பைக் கண்டு தொ.ப.வியக்கிறார்.

பன்னிரு ஆழ்வார்களில் ஆண்டாளும், பெரியாழ்வாரும் ( ஆண்டாளின் தந்தை ) பார்ப்பனரல்லாத மக்கள் திரளின் வாழ்வினையும், உணர்வுகளையும் உள்வாங்கி பாடியுள்ளார்கள் என்பதை தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் 'பண்பாட்டுக் கலப்பு ' எனும் கட்டுரையின் வாயிலாக விளக்குகிறார்.

' நாட்டார் தெய்வங்கள் எவையும் 'முன்னே வந்து' வரம் தரும் தெய்வங்கள் அல்ல; 'பின்னே நின்று' பாதுகாப்புத் தரக்கூடியன. அவை அழிக்கும் ஆற்றல் அற்றவை. மாறாக வயல் களத்திலும், அறுவடைக் காலத்திலும், கண்மாய்க் கரையிலும், ஊர் மந்தையிலும், ஊர் எல்லையிலும் தூங்காமல் நின்று காவல் காக்கக்கூடியன. '

'நாட்டார் தெய்வங்களில் 90%க்கு மேல் பெண் தெய்வங்கள் என்பதையும் நாம் நினைவில்கொள்ள வேண்டும். நாட்டார் தெய்வக் கோயில்களில் மட்டுமே தெய்வத்தைத் தன்மேல் நிறுத்திச் சாமியாடவும் குறி (அருள்வாக்கு) சொல்லவும் அடியவர்களுக்குத் திருநீறு வழங்கி அருள் பாலிக்கவும் பெண்களுக்கு உரிமை இருக்கின்றது. இது மேல் சாதி மரபில் பெருந்தெய்வக் கோயில்களில் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்ட ஒன்று என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. '

நாட்டார் தெய்வங்களை வழிபடும் எல்லா மனிதர்களையும் தெய்வ நம்பிக்கையிலிருந்து விடுதலை செய்ய முடியாது. ஆனால் அவர்கள் மதம் என்ற அதிகார அமைப்பிற்குள் சிக்குவதை தடுக்க நாம் நாட்டார் தெய்வங்களை ஆதரிக்க வேண்டும் என்கிறார் தொ.ப.

பக்தி இலக்கியங்கள் சார்ந்த ஆய்வுகள் மிகவும் குறைவாக இருப்பதை வருத்தத்துடன் பதிவு செய்கிறார். இத்தகைய ஆய்வுகளின் முக்கியத்துவத்தை கா.சிவத்தம்பியின் ஆய்வுகள் மூலமாக விளக்குகிறார்.

'வேதத்தை மட்டுமே கடவுளாகக் கொண்ட ஸ்மார்த்தர்கள், ஆகமங்களையும் கோயில் வழிபாட்டையும் முன்னிறுத்தும் சைவ வைணவர்கள், இந்த இரண்டு நெறிகளுக்குள்ளும் அடங்காத தொல்பழஞ் சமயக் கூறுகளையுடைய பெருவாரியான மக்கள் திரள் இவர்கள் அனைவரையும் 'இந்துக்கள்' என்ற கட்டுக்குள் அடக்க முயலுவதையே நாம் சமய ஆதிக்க உணர்வு என்கிறோம். இந்திய அரசியல் சட்டப் பிரிவுகள் 'இந்து' என்ற மேலைச் சொல்லாடலுக்கு நேரிடையான வரைவிலக்கணம் எதனையும் தரவில்லை என்பது இந்துத்துவவாதிகளுக்கு வசதியாகப் போய்விட்டது. அந்தச் சொல் பல்வேறு சமயங்களையும் நம்பிக்கை சார்ந்த வழிபாட்டு நெறிகளையும் குறிக்கும் சொல் என்பதால் வெவ்வேறு சமயங்களுக்குமான வரம்புகளை முறைப்படுத்திச் சட்டமாக்க வேண்டும் '

'இந்து' என்ற சொல்லுக்கான அரசியல் சட்ட வரைவிலக்கணம் உருவாக்கபட வேண்டும் என்பதே தொ.ப.வின் விருப்பமாகும்.

'தெய்வம் என்பதோர்...' என்ற தலைப்பு 'தெய்வமென்பதோர் சித்தமுண்டாகி' என்னும் திருவாசக அடியிலிருந்து பெறப்பட்டதாக தொ.ப. என மக்களால் அன்பாக அழைக்கப்படும் தொ.பரமசிவன் குறிப்பிடுகிறார். 'காலச்சுவடு' பதிப்பகம் இந்நூலைப் பதிப்பித்துள்ளது. உண்மையிலேயே தெய்வ வழிபாடு குறித்தான தட்டையான பார்வையை இப்புத்தகம் மாற்றியிருக்கிறது

இக்கட்டுரை திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரிலிருந்து வெளிவரும் 'குறி' எனும் சிற்றிதழில் வெளிவந்துள்ளது. 

தொடர்புக்கு :
குறி சிற்றிதழ் ,
9/3 , யூசுப் நகர் ,
மாரம்பாடி  சாலை,
வேடசந்தூர் -624710,
திண்டுக்கல் மாவட்டம் .

சந்தாதாரர் ஆக:
குறி தனி இதழ் ரூபாய் .50
பத்து இதழ் சந்தா ரூபாய்.500
சந்தா SBI வங்கி மூலம் செலுத்தலாம்
P.MANIKANDAN
A/C NO. 30677840505.
VEDASANDUR
IFS CODE : SBIN0011941

இதழாசிரியர்  மணிகண்டன் - 9976122445.

இதழ் குறித்த உங்களின் பின்னூட்டங்கள் மற்றும் படைப்புகளை

kurimagazine@gmail.com 

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்

மேலும் படிக்க :


No comments:

Post a Comment