Pages

Friday, November 11, 2022

நட்சத்திரம் நகர்கிறது - மாற்றத்தின் முதல் அடி ! !


எல்லாவற்றிலும் அரசியல் இருக்கிறது. காதலிலும் அரசியல் இருக்கிறது. அந்த அரசியலை இந்த 'நட்சத்திரம் நகர்கிறது' பேசியிருக்கிது. கதைக்களமாக   நாடக மேடையைத் தேர்ந்தெடுத்ததால் இயக்குனர், ரஞ்சித்தால் மிகவும் சுதந்திரமாக எழுத முடிந்திருக்கிறது. ஏறக்குறைய எல்லாக் கதாப்பாத்திரங்களும் முற்போக்காகவும் அடுத்தவர்களையும், அவர்களின் உணர்வுகளை மதிப்பதாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது நல்ல விசயம். கிடைக்கும் சிறிய வாய்ப்பில் கூட அரசியல் பேசியிருக்கிறார். இது ரொம்பவும் முக்கியமானது. 


இங்கே முற்போக்காக காட்டிக் கொள்பவர்களின் திரைப்படங்களில் கூட பொதுப்புத்திக்கு தீனி போடும் காட்சிகளே அதிகம் இருக்கும். பெண் கதாப்பாத்திரத்தை மிகவும் பலவீனமானதாக சித்தரித்து இருப்பார்கள். எவ்வளவோ முற்போக்கான விசயங்களை சேர்க்க வாய்ப்பிருக்கும். ஆனால் சேர்த்திருக்க மாட்டார்கள். ஆனால் ரஞ்சித் இத்திரைப்படத்தின் மூலம் 'ரெனே' எனும் பெண் கதாப்பாத்திரத்தை பேசுபொருளாக மாற்றியிருக்கிறார். நிறைய பேருக்கு 'அவள் அப்படித்தான்' திரைப்படத்தின் 'மஞ்சு' கதாப்பாத்திரம் நினைவிற்கு வந்திருக்கிறது. அதுவுமில்லாமல் கிடைக்கிற வாய்ப்பில் எல்லாம் அரசியல்தான். உடை அரசியல், உணவு அரசியல், பாலின அரசியல், சாதி அரசியல் என்று போய்க்கொண்டே இருக்கிறது.


இத்திரைப்படம் நம்மை உரையாடலுக்கு அழைக்கிறது. வாங்க எல்லாத்தையும் பேசுவோம் ;எல்லாத்தையும் சரி செய்வோம் என்கிறது. நாலைந்து படங்களில் மிக அழுத்தமாக சொல்ல வேண்டிய விசயங்களை இந்த ஒரே படத்தில் சொல்ல முயற்சித்து இருப்பதால் அழுத்தமான காட்சிகள் குறைவாக இருக்கின்றன. ஆனால் அனைத்தும் பேசப்பட வேண்டியவை. ' வர்க்கம் ஒழிந்தால் சாதி ஒழியும்' என்பது இடதுசாரிகளின் பார்வையாக இருக்கிறது. இதை ரஞ்சித் மறுக்கிறார். 'வர்க்கம் ஒழிந்தால் சாதி ஒழியாது' என்கிறார். இதற்கு இடதுசாரிகள் விளக்கம் சொல்லலாம். ஆனால் இப்படி சொல்லவே (எதிர் கருத்தே) கூடாது என்பது பாசிசம். 


அர்ஜுன் கதாப்பாத்திரத்தின் ஊர் என்று சேலம் குறிப்பிடப்படுகிறது. அந்தக் கிராமத்து காட்சியில் அந்த ஊர் வட்டார மொழியைப் பேசாமல் சென்னைத்தமிழ் பேசப்படுவது நெருடலாக இருந்தது. அந்தக் காட்சிகள் வட்டார மொழியில் இருந்திருந்தால்  இன்னும் நெருக்கமாக இருந்திருக்கும். 


 ரஞ்சித்தின் இந்தத் திரைப்படமாவது வன்முறை இல்லாமல் இருக்கிறதே என்று பார்த்தால் படத்தின் இறுதியில் வன்முறைக்காடசியைக் கொண்டு வந்து விட்டார். ஏன் ரஞ்சித்தால் வன்முறை இல்லாமல் சொல்ல வேண்டியதை சொல்லவே முடியாதா ? இறுதிக்காட்சி மட்டும் வன்முறை இல்லாமல் நம்முடன் உரையாடுவது போல அமைந்திருந்தால் இன்னும் நல்ல அனுபவமாக இருந்திருக்கும். ஆக்கப்பூர்வமான நிறைய விசயங்களை இத்திரைப்படம் பேசியிருக்கிறது. இத்திரைப்படமும் இதன் பேசுபொருளும் பரவலாக விவாதிக்கப்பட வேண்டும். தற்பொழுது நெட்பிளிக்சில் ( Netflix) காணக்கிடைக்கிறது.


நட்சத்திரம் என்பதை சாதியாக உருவகப்படுத்தலாம். சாதி பழைய கெட்டித்தட்டிப்போன இடத்திலிருந்து நகர ஆரம்பித்து இருக்கிறது. இனியும் நகரும் !

மேலும் படிக்க :

JANA GANA MANA - பாசிச எதிர்ப்பு சினிமா !

சர்தார் உத்தம் (SARDAR UDHAM)- உலகத்தரம் !

ஜெய்பீம் -அறத்தின் குரல் !


No comments:

Post a Comment