Tuesday, November 23, 2021

சர்தார் உத்தம் (Sardar Udham)- உலகத்தரம் !

 


உலகத்தரம் வாய்ந்த உருவாக்கம். இந்திய அளவில் ஒரு பீரியட் திரைப்படம் (Period Movie ) இவ்வளவு கச்சிதமாக, பிசிறில்லாமல் படமாக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என நினைக்கிறேன். ஒவ்வொரு காட்சியிலும் கலை இயக்குநரே கண்முன் தெரிந்தார். அந்த அளவிற்கு கடந்த காலத்தை அப்படியே காட்ட உழைத்திருக்கிறார்கள். மன்ஷி மேத்தா ( Mansi Mehta ) என்ற இந்திய கலை இயக்குநரும், டிமிட்ரி மாலிஷ் ( Dmitriy Malich ) என்ற சர்வதேச கலை இயக்குநரும் சேர்ந்து இத்திரைப்படத்திற்கு கலைவடிவம் கொடுத்திருக்கிறார்கள். இருவருமே பாராட்டப்பட வேண்டியவர்கள். 

திரைப்படம் பார்த்த பிறகு இயக்குநர் யார் என்று தேடிய போது சூஜித் சிர்கார் ( Shoojit Sircar ) என்ற இந்திய இயக்குநர் என தெரிய வந்த போது ஆச்சரியமாக இருந்தது. இந்த திரைப்படத்தை 1990 லே படமாக்க நினைத்திருக்கிறார், சூஜித். அடுத்த தலைமுறைக்கு உத்தம் சிங்கின் வரலாற்றை முறையாக கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக இருபது ஆண்டுகள் அவரைப் பற்றி ஆய்வு (இடையில் வேறு படங்கள் இயக்கினாலும் ) செய்து , திரைப்படமாக இப்போது வெளியிட்டு இருக்கிறார். அவரின் இருபது வருட உழைப்பு வீண் போகவில்லை. தவறு நேர்ந்துவிடாதவாறு மிகக் கவனமாக ஒவ்வொரு காட்சியும் படமாக்கி இருக்கிறார், இயக்குநர் . சூஜித் இயக்கும் முதல் பீரியட் திரைப்படம் என்பதால் நிறைய வெளிநாட்டு திரைப்படங்களையும், ஆவணப்படங்களையும் பார்த்து அவற்றை முன்மாதிரியாகக் கொண்டு இத்திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார். 

முதலில் இர்பான் கான் நடிப்பதாக இருந்திருக்கிறது. உடல்நல பிரச்சனை காரணமாக அவர் விலக வேண்டி வந்ததால் விக்கி கௌஷல் உத்தம் சிங்காக மாறியிருக்கிறார். நான் லினியர் ( Non linear ) பாணி கதை சொல்லும் முறை திரைப்படத்திற்கு கூடுதல் சுவாரசியத்தைத் தருகிறது. தமிழில் தற்போது வெளிவந்து கவனம் பெற்றிருக்கும் ' ஜெய்பீம் ' திரைப்படமும் Non linear பாணியில் அமைந்ததுதான். நமக்கெல்லாம் பகத்சிங் பற்றி தெரிந்த அளவிற்கு அவரது நண்பரான உத்தம் சிங் பற்றி தெரிந்திருக்கவில்லை. இத்திரைப்படம் உத்தம் சிங்கை நமக்கு தெரிய வைத்திருக்கிறது. அந்த அளவில் இயக்குநரின் எண்ணம் நிறைவேறியிருக்கிறது. 

கலை என்ன செய்யும்? கலை என்ன வேண்டுமானாலும் செய்யும்.இத்திரைப்படத்தின் மூலமாக ஒரு போராளியை நம் கண்முன் நிறுத்தியிருக்கிறது.1000 பேர்களுக்கும் மேல் கொன்று குவிக்கப்பட்ட ஜாலியன் வாலாபாக் படுகொலை (1919 ஏப்ரல் 13) என்பது வரலாற்றுத் துயரம். இந்நிகழ்வை இரத்தமும் சதையுமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இந்த நிகழ்வே உத்தம் சிங் எனும் போராளி உருவாகக் காரணம். இந்நிகழ்வு நடந்து 100 ஆண்டுகளுக்கு பிறகே அதாவது 2019ல்தான் பிரிட்டன் அரசு இந்த நிகழ்விற்கு மன்னிப்பு கோரியிருக்கிறது. 

பழிக்குப்பழி என்பது எதற்குமே தீர்வாகாது என்றாலும் கூட இப்படியான கொடூரமான நிகழ்வை நடத்தி காட்டியவருக்கு அரசு எந்தவித தண்டனையும் அளிக்காத போது மக்களின் சார்பாக, உத்தம் சிங் மூலமாக அளிக்கப்பட்ட தண்டனைதான் ஜெனரல் ஓ டயரின் மரணம். திரைப்பட விரும்பிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம். உலகத்தரத்தில் ஒரு இந்திய சினிமா !

மேலும் படிக்க:

ஜெய்பீம் - அறத்தின் குரல் !


0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms