Friday, September 29, 2017

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !

(இந்த தொடர் வாசக மனநிலையில் தான்  எழுதப்படுகிறது. அதனால் குறைபாடுகள் இருக்கலாம். மன உளவியல் நிபுணர் ஷாலினி அவர்களின் தாக்கம் அதிகமாகவே இருக்கும்.  பாலியல் சிக்கல்கள் குறித்தான விவாதங்களை முன்னெடுப்பதே இதன் நோக்கம் )

மனிதக்குழந்தை 1 1/2   வயதில் தான் முழுவளர்ச்சியை எட்டுகிறது. அதாவது ஆடு, மாடு போன்ற உயிரினங்களின் குட்டிகள் பிறக்கும்போதே பெற்றிருக்கும் வளர்ச்சி அது. அதனாலேயே குழந்தைகளை இந்த ஒன்றரை வயது வரை மிக கவனமாக கையாள வேண்டிய சூழல் உருவாகிறது. இன்றைய சூழலில் குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் சவாலானதாக உள்ளது. அளவில்லாத பொறுமையும் , கவனமும், நேரமும் தேவைப்படுகிறது. கூட்டுக்குடும்ப அமைப்பு சிதைவடைந்த நிலையில்  தனிக்குடித்தனங்களில் இது இன்னும் சவாலானது.

இயற்கையின் நியதிப்படி   குழந்தைகள் பிறப்பதற்கு நாம் வெறும் கருவிதான். நமக்கு பிறந்ததாலேயே நமது அடிமைகள் போல படிப்படியாக நமது விருப்பங்களை, கனவுகளைத் திணிக்கிறோம். குழந்தைகளை அதன் போக்கில் வளர அனுமதித்தாலே போதும் அவர்கள் அடைய வேண்டிய இலக்கை அடைந்து விடுவார்கள்.

வளர வளர குழந்தைகளின் சிறகுகளை வெட்டிக்கொண்டே இருக்கிறோம். அப்புறம் என் குழந்தைக்கு பறக்கவே தெரியவில்லை என்று குறைபட்டுக் கொள்கிறோம். இன்றைய குழந்தைகளின் விளையாடும் நேரம்  அவர்களிடமிருந்து பிடுங்கப்பட்டிருக்கிறது. முதலில் அவர்கள் விளையாடுவதற்கான வெளி இல்லை. குழந்தைகள் மட்டுமல்ல இளைஞர்கள் , பெண்கள் , முதியவர்கள் என யாருக்குமே அவர்களுக்கான வெளிகள் இல்லை. என்ன தான் பார்த்து பார்த்து கட்டினாலும் வீடு ஒரு கூண்டுதான். கூண்டுக்குள் இருந்து கொண்டு சுதந்திரத்தைப் பற்றி பேச முடியுமா ? முன்பு வீட்டிற்கு வெளியே அமைக்கப்பட்ட திண்ணைகள் ஒரு பொது வெளியை உண்டாக்கின. ஆயிரம் பேருக்கு ஒரு விளையாட்டு அரங்கத்தையும் , ஒரு நூலகத்தையும் உறுதி செய்யுங்கள் சமூகத்தில் குற்றங்கள் பெருமளவு குறைந்து விடும். ஒரு ஆரோக்கிய சமூகம் உருவாகும்.

கதைகள். நமது தாத்தாக்களும் , பாட்டிகளும் ஏன் நமது அப்பாக்களும் , அம்மாக்களும் கூட படிக்காதவர்களாக இருக்கலாம்.  ஆனால் இரவில் கதைகள் சொல்லாத நாட்களே இருந்ததில்லை. எல்லாவற்றுக்கும் கதைகள் இருந்தன. இக்கதைகள் நமது கற்பனை குதிரைகளை ஓட விட்டன. அக்கதைகளின் வாயிலாக நாம் பெற்றவை ஏராளம். பெரும்பாலான கதைகளில் ராஜாவும் , அரக்கனும் தவறாமல் இடம்பெறுவார்கள். அப்புறம் மனிதர்களின் பேராசை குறித்து நிறைய கதைகள் சொல்லப்பட்டன. உண்மையையும் , நேர்மையையும் , நீதியையும் , தர்மத்தையும் வலியுறுத்தியே நிறைய கதைகள் சொல்லப்பட்டன. இக்கதைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது நம் கடமை. இரவு இருட்டிற்கானது. இங்கே நிலவிற்கும் , நட்சத்திரங்களுக்கும் மட்டுமே இடமுண்டு. வேறு ஒளிகளுக்கு இடமில்லை. அப்படியான இரவுகளில் நட்சத்திரங்களின் ஊடாக கதைகள் கேட்ட தருணங்கள் அற்புதமானவை. கடைசியாக எப்போது நட்சத்திரங்களைப் பார்த்தீர்கள் ?

வானம் பார்த்தல் என்பது அவ்வளவு அலாதியானது. சூரிய உதயம் ,  சூரிய மறைவு , வெவ்வேறு நிறங்களாலான,  வடிவங்களையுடைய மேகங்கள், வளர்பிறை நிலவு , தேய்பிறை நிலவு, பறவைகள்  என அவ்வளவு இருக்கின்றன. எதற்கும் நேரமில்லாமலேயே நமது பயணம் இருக்கிறது. நாமே பார்க்காத போது நமது பிள்ளைகளுக்காச் சொல்லிக் கொடுக்கப்போகிறோம் ? குழந்தைப் பருவத்தில் கேட்கும் கதைகளுக்கும் , அதன் பிறகான வாழ்விற்கும் தொடர்பிருப்பதாகச் சொல்கிறார்கள். விளையாடத்தான் அனுப்ப மாட்டேங்கிறோம். குறைந்தபட்சம் கதைகளாவது சொல்வோம். அதற்கு முதலில் நாம் கதைகள் படிக்கத் தொடங்க வேண்டும். தேடினால உள்ளூர் கதைகள் முதல் உலக கதைகள் வரை கிடைக்கக்கூடிய காலகட்டத்தில் தான் வாழ்கிறோம்.

அறிவியல்படி 14 வயதுவரை பிள்ளைகளை குழந்தைகள் என்றே வகைப்படுத்த வேண்டும் என்கிறார்கள். 14 வயதுவரை குழந்தைகள் பெற்றோர்களின் தொடுதலையும் , அரவணைப்பையும் எதிர்ப்பார்க்கிறார்கள். அவ்வாறு கிடைக்காத போது ஏங்குகிறார்கள். உண்மையில் குழந்தை வளர்ப்பு என்ற பெயரில் வன்முறை தான் குழந்தைகள் மீது ஏவப்படுகிறது. மூன்று வயதிலேயே தனக்கு வேண்டியதை தானே செய்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

சிறிய வயதிலேயே அறிவாகவும் தெளிவாகவும் பேசுகிறார்கள் தான். அதற்காக எல்லா வேலைகளையும் அவர்களே செய்து கொள்ள வேண்டும் , எல்லாவற்றையும் புரிந்து கொள்ள வேண்டும் , தவறுகளே செய்யக்கூடாது என எதிர்பார்ப்பது முட்டாள்தனம். ஆனால் இதைப் படிப்படியாக பேசித்தான் அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். 14 வயதிற்குள்ளாக ஆணாக இருந்தாலும் , பெண்ணாக இருந்தாலும் அவர்களுடைய பணிகளை அவர்களே செய்து கொள்ளும் வகையில் பழக்க வேண்டும். ஆனால் ஒவ்வொன்றாக. வீட்டு வேலைகள் உட்பட. இன்று வரை வீட்டு வேலைகள் ஆண் வேலைகள் , பெண் வேலைகள் என்று பிரிந்தேதான் கிடக்கின்றன. இதில் முதலில் மாற்றம் நிகழ வேண்டும். வீட்டு வேலைகளில் பேதங்கள் ஏதும் இல்லை. எல்லா வேலைகளையும் எல்லோரும் பகிர்ந்து செய்ய வேண்டும். ஆண் குழந்தைகளுக்கும் சமையல் கற்றுத்தர வேண்டும் , பெண் குழந்தைகளையும் பொருட்கள் வாங்க கடைகளுக்கு அனுப்ப வேண்டும். இன்றைய பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளிடம் பேசுவதற்கு கூட நேரம் ஒதுக்க முடியாத பரபரப்பில் இருக்கிறார்கள். ஆனாலும் நேரம் ஒதுக்கித்தான் ஆக வேண்டும். குழந்தைகளிடம் படிச்சயா ? சாப்பிட்டயா ? இதை தவிர நாம் அதிகம் பேசுவதேயில்லை. இதை தாண்டியும் அவர்களிடம் பேச வேண்டும். அந்தந்த வயதில் உருவாகும் சிக்கல்களை, பிரச்சனைகளை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

கேள்விகள். குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு உரிய பதில்களை அளிக்க வேண்டும். தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேள்விகள் கேட்டுக்கொண்டே இருப்பது தான் அவர்கள் இயல்பு. மற்ற கேள்விகளுக்கு கொடுக்கும் மரியாதையை அவர்களின் உடல் சார்ந்த கேள்விகளுக்கும் தர வேண்டும்.குழந்தைக்கு கண், காது, மூக்கு பற்றி சொல்லித்தரும் போதே பால் உறுப்புகள் பற்றியும் எளிய மொழியில் சொல்லித்தர வேண்டும். இது அசிங்கம் இதை தொடக்கூடாது என விரட்டாமல் , ' இந்த உறுப்பு இதற்காக உள்ளது.  கண் , காது போல இதுவும் ஒரு உறுப்பு தான். நீ தொடக் கூடாது. ஏதேனும் பிரச்சனை னா அம்மா கிட்ட தான் சொல்லனும். அம்மா தொடலாம் ; மத்தவங்க தொடக்கூடாது ' என்று புரிய வைக்க வேண்டும். ஆண் குழந்தை , பெண் பாலுறுப்பை பற்றி கேள்வி கேட்பதும் , பெண் குழந்தை , ஆண் பாலுறுப்பை பற்றி கேள்வி கேட்பதும் ( நான் உச்சா போறது இப்படி இருக்கு , என் பிரண்டுக்கு மட்டும் அப்படி இருக்கு ?) இயல்பு. நாம் தான், நீ ஆண் , அவள் பெண் , நீ பெண் , அவன் ஆண் அப்படி தான் இருக்கும் என்று சொல்லித்தர வேண்டும்.  அதைவிட்டு விட்டு மூனு இலை விடலை கேட்கிற கேள்விய பாரு ? என முடக்க கூடாது. யாராக இருந்தாலும்  தானாக கற்றுக்கொள்வது முதலில் தவறாகவே இருக்கும்.  அதன் பிறகு தான் எது சரி என்று தெரிய வரும். சரியான வழிகாட்டி இருந்தால் ஆரம்ப தவறுகளுக்கு இடமிருக்காது. நாம் தான் நம் பிள்ளைகளுக்கு வழிகாட்டிகள்.

உடைகள். உடைகள் விசயத்தில் நாம் பெரும் தவறு செய்கிறோம்.பாலின சமத்துவம் வேண்டும் என கொடி பிடிக்கிறோம். ஆனால் நாம் அணிகின்ற உடைகள் கூட சமமாக இல்லை. ஆண்களுக்கும் , பெண்களுக்கும் பாலுறுப்பில் மட்டுமே வேறுபாடு.ஆனால் உடைகளில் எதற்கு இவ்வளவு வேறுபாடு ? நமது சமூகத்திலும் சில நூற்றாண்டுகளுக்கு முன்புவரை கூட ஆண் , பெண் இருபாலரும் பொதுவான ஒரே மாதிரியான உடைகளையே அணிந்திருக்கிருக்கிறார்கள். இப்போதும் பழங்குடி சமூகங்கள் , பல மேற்கத்திய நாடுகளில் ஆண் , பெண் உடைகளில் வேறுபாடுகள் இல்லை. அப்புறம் ஏன் இந்தியாவில் மட்டும் இவ்வளவு வேறுபாடுகள் ? அரசியல் இருக்கிறது. அதை நீங்கள் தான் கண்டறிய வேண்டும். பொதுவான உடைகள் அணிவதை நோக்கி நகர வேண்டும். இதேயேதான் பெரியார் அப்போதே சொல்லியிருக்கிறார். இன்றைய ஆண்களுக்கான ஆடைகள் ,  குழந்தைகளானாலும் பெரியவர்களானாலும் உடலை மறைக்கும் வகையிலும் , அணிவதற்கு எளிதாகவும் , சவுகரியமாகவும் இருக்கிறது. அதே சமயம் பெண்களுக்கான ஆடைகள் உடலை வெளிக்காட்டும் வகையிலும் , அணிவதற்கு சிரமமாகவும் , சவுகரியமற்றதாகவும் இருக்கிறது.  காரணமென்ன?  தேடுங்கள் . அதிலும் பெண் குழந்தைகளுக்கென தயாரிக்கப்படும் ஆடைகள் அவர்களின் உடலை முழுதாக மறைப்பதேயில்லை. ஆண் , பெண் சமத்துவத்தை போதிப்பதாக நம்பப்படும் பள்ளிகள் , கல்லூரிகளில் கூட ஆண்கள் , பெண்களுக்கு தனித்தனி உடைகள் தான். ஆண்களுக்கும் , பெண்களுக்கும் தனித்தனி பள்ளிகளும் , கல்லூரிகளும் நடத்தப்படும் சூழலில் இதெல்லாம் சாதாரணம் என்கிறீர்களா ? அதுவும் சரிதான். அப்புறம் எப்படி புரிதலை உண்டாக்குவது ? நண்பர்களே முடிந்தவரை பொதுவான உடைகளுக்கு மாறுவோம் !

சாதி , மதம்.சாதியின் பெயரிலும் , மதத்தின் பெயரிலும் பள்ளி , கல்லூரிகளின் பெயர்களை வைத்துக்கொண்டு நாம் படிப்பின் மூலம் சாதியையும் , மதத்தையும் ஒழிக்க நினைக்கிறோம். கடவுள் இருக்காரா ? இல்லையா ? என்ற புரிதல் நமக்கே இல்லாத நிலையில் மதத்தை குழந்தைகளுக்கு திணிப்பது மிகப்பெரிய வன்முறை. மதம் வேண்டுமா ? வேண்டாமா ? என்பதை அவர்களே முடிவு செய்து கொள்ளட்டும். இன்றைய சூழலில் சாதியை கடப்பது தான் நமது முதல் இலக்காக இருக்கிறது. எக்காரணத்தைக் கொண்டும் குழந்தைகளின் மனங்களில் சாதியை  விதைக்காதீர்கள் , வளர்க்காதீர்கள். மற்ற நாடுகள் புதிய கண்டுபிடிப்புகள் , சாதனைகள் என நகர்ந்து கொண்டிருக்கும் சூழலில் இன்னமும் சாதியையும் , மதத்தையும் பிடித்துக்கொண்டு அலைகிறோம். பிடித்துக்கொண்டு அலைவதோடு நில்லாமல் அது சார்ந்த வன்முறைகள் மிகவும் அச்சம் தருவதாக இருக்கின்றன. இவ்வளவு நீதி நூல்கள் , அற நூல்கள் , தொன்மையான மொழி , அறிவு எல்லாம் இருந்து என்ன பயன் ? எவ்வளவோ மனிதர்கள் தங்களின் வாழ்க்கையின் மூலம் எவ்வளவோ படிப்பினைகளை கொடுத்துவிட்டு போயிருக்கிறார்கள். துளியும் மாற்றமில்லை. காட்டுமிராண்டிகளை விட கேவலமாக நடந்து கொள்கிறோம். சாதியையும் , மதத்தையும் வைத்து இன்னொருவரை ஒடுக்க நினைக்கும் , வன்முறையை ஏவும் எவருமே மனிதரில்லை.

இயற்கை. இயற்கையை புரிந்து கொள்வதன் மூலமே வேறுபாடுகளை எளிதாக கடக்கும் பக்குவம் உண்டாகும். தான் யார் என்பதை உணர வைத்தல் மூலமே பாதி மாற்றத்தைக் கொண்டு வந்து விட முடியும் . உலகில் வாழும் கோடிக்கணக்கான உயிரினங்களில் தானும் ஒரு சாதாரண விலங்கு ( பல நேரங்களில் தானும்  ஒரு மிருகம் தான் என்பதை மனிதன் மறந்து விடுகிறான் ) இனம் தான் என்பதையும் , இயற்கையின் ஒரு சிறு பகுதி தான் மனிதர்கள் என்பதையும் , மரங்கள் ,பறவைகள் ,விலங்குகள் என்று இயற்கையின் பங்களிப்பில்லாமல் நம்மால் வாழவே முடியாது என்பதையும்  உணர வைக்க வேண்டும்.

இப்படி இந்த 14 வயதிற்குள் நமது பிள்ளைகளுக்குச் சொல்லித்தர வேண்டியது நிறைய இருக்கிறது. இந்த 14 வயதிற்கு பிறகுதான் வயதிற்கு வருதல் நிகழ்கிறது.

பேசுவோம் ...

தொடர்புக்கு :

குறி சிற்றிதழ் ,

9/3 , யூசுப் நகர் ,
மாரம்பாடி  சாலை,
வேடசந்தூர் -624710,
திண்டுக்கல் மாவட்டம் .

சந்தாதாரர் ஆக:
குறி தனி இதழ் ரூபாய் .20 
பத்து இதழ் சந்தா ரூபாய்.200
சந்தா SBI வங்கி மூலம் செலுத்தலாம்
P.MANIKANDAN
A/C NO. 30677840505.
VEDASANDUR
IFS CODE : SBIN0011941

இதழாசிரியர்  மணிகண்டன் - 9976122445.

இதழ் குறித்த உங்களின் பின்னூட்டங்கள் மற்றும் படைப்புகளை

kurimagazine@gmail.com 

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் . 

மேலும் படிக்க :



..................................................................................................................................................

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms