Friday, May 29, 2015

கதாநாயகத் துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் !


சினிமா , அரசியல் ,ஆன்மீகம் இந்த மூன்றும் தான் கதாநாயக துதிபாடலை அதிகம் வளர்க்கின்றன . சினிமாக்காரர்களையும் ,அரசியல்வாதிகளையும் ,ஆன்மீகவாதிகளையும் பிடிக்கும் என்பதற்கும் அவர்களைத் தலைவர்களாகக் கொண்டாடுவதற்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது .ஜாதி ,மதம் ,அரசியல்,சினிமா என  ஒவ்வொரு விசயத்திலும் பிரிவினைவாதம்  இந்த கதாநாயகத் துதிபாடல் மூலம் தான் வளர்க்கப்படுகிறது . தாங்கள் தலைவனாக ஏற்றுக்கொண்டவர் என்ன சொன்னாலும் ,என்ன செய்தாலும் சரி என்று தான் வாதிடுவது தான் துதிபாடிகளின் பொதுக்குணமாக உள்ளது . இது எவ்வளவு  பெரிய முட்டாள்தனம் என்பதை ஒரு போதும் அறிய மாட்டார்கள் . 

சினிமாக்காரர்கள் ரசிகர் மன்றங்கள் முலமாகவும் , அரசியல்வாதிகள் கட்சிக் கிளைகள் மூலமாகவும் , ஆன்மீகவாதிகள் மடக் கிளைகள் மூலமாகவும் தொடர்ந்து துதிபாடப்படுகிறார்கள். ஒவ்வொரு ரசிகர் மன்றமும் , கட்சிக் கிளையும் , மடக் கிளையும் குறிபிடத்தக்க அளவு அங்கத்தினரைக் கொண்டு செயல்பட்டு கதாநாயக துதிபாடல் வற்றிப்போய்விடாமல் வளர்க்கப்படுகிறது. சமூக அளவில் பெரும் குற்றமாக கருதப்படுவதையோ , சமூக அளவில் மிகக்கேவலமாக மதிப்பிடப்படுவதையோ இந்தத் தலைவர்களாக கொண்டாடப்படுபவர்கள் செய்யும் போது இவர்களை இந்தத்துதிபாடிகள் குற்றவாளிகளாக ஏற்றுக் கொள்வதில்லை.  இவர்கள் செய்த குற்றத்திற்கு , கேவலமான செயலுக்கு வரிந்து கட்டிக் கொண்டு வக்காலத்து வாங்குவார்கள். இந்த இடத்தில் தான் துதிபாடிகள் அடிமைகளாக மாறுகிறார்கள்.

 தனிமனித துதிபாடல் எங்கெல்லாம் வளர்க்கப்படுகிறதோ அங்கெல்லாம் எதிர்நிலைகள் தொடர்ந்து இயங்குகின்றன.  ஒரு அரசியல்வாதிக்கு மாற்றாக மற்றொரு அரசியல்வாதி , ஒரு சினிமாக்காரருக்கு மாற்றாக மற்றொரு சினிமாக்காரர் ,ஒரு ஆன்மீகவாதிக்கு மாற்றாக மற்றொரு ஆன்மீகவாதி , ஒரு கலைஞருக்கு மாற்றாக மற்றொரு கலைஞர் , ஒரு விளையாட்டு வீரருக்கு மாற்றாக மற்றொரு விளையாட்டு வீரர் என்று எதிர்நிலைகள் எல்லா இடங்களிலும் இருக்கின்றன. எதிர்நிலைகள் காரணமாக இருபிரிவினருக்கும் இடையே மோதல்கள் உருவாகின்றன. தான் தலைவனாக நினைத்து துதிபாடும் ஒரு மனிதனை , இன்னொரு மனிதன் தரக்குறைவாக பேசும் போது அவனிடம் பெருங்கோபம் உண்டாகிறது. இந்தக் கோபம் மோதலுக்கு வழிவகுக்கிறது.

இந்தத் தனிமனித துதிபாடல் ஒரு மனிதனின் சுயத்தை அழித்து ஒரு சார்புநிலையை உருவாக்கிவிடுகிறது. தான் துதிபாடும் ஒருவர் எது செய்தாலும் சரிதான் என்ற மூடத்தனத்தை இந்த சார்புநிலை உருவாக்குகிறது. இந்தச் சார்புநிலை தான் ஆபத்தானது. பெரும் பாதிப்புகளை உருவாக்கக்கூடியது . அவ்வளவு எளிதாக தான் துதிபாடும் ஒருவரை மாற்றமாட்டார்கள் இந்தத் துதிபாடிகள். தனிமனித துதிபாடலில் முகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சினிமாக்காரர்களின் , அரசியல்வாதிகளின் , ஆன்மீகவாதிகளின் விதவிதமான கோணங்களில் படம்பிடிக்கப்பட்ட முகங்கள் மீண்டும் மீண்டும் ஏதோ ஒரு விதத்தில் காட்டப்படுவதன் மூலம் இந்தத் துதிபாடல் அறுபடாமல் தொடர்ந்து பேணப்படுகிறது. இந்த முகங்களைக் காட்டி துதிபாடலை வளர்ப்பதில் ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பத்திரிகைகளும் , தொலைக்காட்சிகளும் தான் அதிகளவில் முகங்களைத் தொடர்ந்து காட்டி துதிபாடலை வளர்க்கின்றன.

சினிமாவையும் சினிமாக்காரர்களையும் தவிர்த்து தமிழ்நாட்டில் எதுவும் இல்லையா தொ(ல்)லைக்காட்சிகளே ?உலகவணிகமயமாக்கலின் முக்கிய கருவி இந்தத் தொ(ல்)லைக்காட்சிகள் தான். இந்தத் தொ(ல்)லைக்காட்சிகள் யாரையும் சுயமாக சிந்திக்க அனுமதிப்பதே இல்லை. எதை ஒளிபரப்பறாங்களோ அதைப் பார்க்க வைக்கணும், எதை விளம்பரப்படுத்துறாங்களோ அதை வாங்கத் தூண்டனும் இதைத் தான் எல்லாத் தொ.கா.களும் செய்கின்றன. நமது வீடுகளில் நமக்குப் பயன்படாத நிறைய பொருட்கள் அடைந்து கிடப்பதற்கும், நமது மூளையில் எதற்கும் பயன்தராத தகவல்கள் குவிந்துகிடப்பதற்கும் இந்த தொல்லைக்காட்சிகள் தான் முக்கிய காரணம்.சினிமா சார்ந்த நிகழ்ச்சிகள் அதிகளவிலும் , அரசியல் ஆன்மீக அடுத்தடுத்த அளவிலும் இடம்பெறுகின்றன.

 ஒவ்வொரு சாதியும் சங்கம் வைத்திருக்கிறது. அந்த சாதியைச் சார்ந்தவர்களில் யார் சமுகத்தில் உயர்ந்த நிலையை அடைந்திருக்கிறார்களோ அவர்களை முன்நிறுத்தி அடுத்த தலைமுறைக்கும் சாதியை எளிதாக கடத்துகிறார்கள். இவர்களால் முன்னிறுத்தப்படும் சாதித் தலைவர்களில் பெரும்பான்மையோர் ஒட்டு மொத்த சமூகத்தின் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் பாடுபட்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் அந்தத் தலைவர்களை சாதித் தலைவர்களாக சுருக்கி விடுகிறார்கள்.   சமீப காலங்களில் பெயருக்குப் பின்னால் சாதி பெயர் சேர்ப்பதும் தங்களின் வாகனங்களில் சாதிப் பெயரை எழுதுவதும் அதிகரித்து வருகிறது. இது நல்ல அறிகுறி அல்ல. சாதியை ஒழிக்க வேண்டிய கல்விக்கூடங்களான பள்ளிகள் , கல்லூரிகளின் பெயர்களே வெளிப்படையான சாதிப் பெயர்களாகவும் மதப் பெயர்களாகவும் இருப்பது தான் கொடுமையிலும் கொடுமை. சாதியின் ஆணிவேரைக் கண்டடைந்து  வேரறுக்க வேண்டியது நம் சமூகத்தின் கடமை. பெரியார் அளவிற்கு மற்றவர்கள் செயல்படாதது தான் இன்றைய நிலைமைக்கு காரணம்.

எந்த மனிதரும் எந்த மனிதரையும் துதிபாடலாம் , கொண்டாடலாம் . தவறில்லை.  அது அவரவர் தனிப்பட்ட விருப்பம்.ஆனால் இந்தத் துதிபாடலால் சமூகத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும். நடைமுறையில் இந்தத் துதிபாடலால் நடைபெறும் செயல்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும், பிரிவினைவாதத்தை தொடர்ந்து முன்நிறுத்துவதாகவும் மட்டுமே இருக்கின்றன.  சார்புநிலையை விட்டு வெளியே வந்து தான் துதிபாடும் ஒருவர் தப்பு செய்தால் தப்பு தான் என்று கூறும் நடுநிலையான மனநிலையையே இப்போதைய தேவை. இந்தத் துதிபாடல்களாலும் , எதிர்நிலைகளாலும் , சார்புநிலைகளாலும் நமக்கு நியாயமாக கிடைக்க வேண்டியவை கிடைக்காமலே போகின்றன. ஒரு சிறுவிசயத்திற்கு கூட காத்துக்கிடக்க வேண்டியுள்ளது. இந்தத் துதிபாடல்கள் காரணமாக செயல்படாதவர்கள் கூட தொடர்ந்து தலைவர்கள்களாக இருக்கிறார்கள். செயல்படும் தலைவர்கள் தான் இன்றைய தேவை. நாம் சுயமாக சிந்திப்பதற்கு இந்தத் துதிபாடல் சார்ந்த சார்புநிலை தடையாக இருக்கிறது.

 துதிபாடாமைக்கு துதிபாடுங்கள் !

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms