ஒரே ஒரு படத்தால் ஒரு இயக்குனர் நீண்ட காலத்திற்கு பிறகும் கொண்டாடப்படுவாரா ? ஆம் கொண்டாடப்படுவார். ஆறுமுகம் என்ற இயற்பெயர் கொண்ட ருத்ரய்யாவை அப்படித்தான் கொண்டாடுகிறோம். இன்று ருத்ரய்யா நம்முடன் இல்லை . சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த ருத்ரய்யா தனது 67வது வயதில் உடல்நலக் குறைவால் கடந்த நவம்பர் 18 அன்று நம்மை விட்டு பிரிந்தார்.
அவள் அப்படி தான் - தமிழ் சினிமா வரலாற்றின் முற்றிலும் மாறுபட்ட திரைப்படம் . இந்தத் திரைப்படத்தின் இயக்குனர் தான் ருத்ரய்யா . இந்தத் திரைப்படம் குறித்து முன்பு எழுதிய பதிவு -
.
சினிமாத்துறையில் இருந்து கொண்டு கடைசிவரை சமரசமில்லாமல் வாழ்ந்த படைப்பாளி. இவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 20-11-14 தமிழ் 'தி இந்து ' நாளிதழ் ஒரு முழு நடுப்பக்கத்தை ஒதுக்கியுள்ளது ,பாராட்டத்தக்கது. இந்த நடுப்பக்கத்தில் அவர் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி 'காதுள்ளவர்கள் கேட்பார்களாக' எனும் தலைப்பில் கட்டுரையாக வெளியிடப்பட்டது.
ருத்ரய்யா இரண்டு கட்டுரைகள் எழுதியிருக்கிறார். வண்ணநிலவன், மா. அரங்கநாதன் ஆகிய இரண்டு எழுத்தாளர்களைப் பற்றியவைதான் அந்தக் கட்டுரைகள். ருத்ரய்யாவுக்குள் தேர்ந்த எழுத்தாளர் ஒருவரும், சமூக விமர்சகர் ஒருவரும் இருந்ததை இந்தக் கட்டுரைகள் மூலம் அறிய முடிகிறது. மா. அரங்கநாதனைப் பற்றி ருத்ரய்யா எழுதிய கட்டுரையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள் இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன.
தமிழில் வந்துள்ள பெரும்பாலான படைப்புகள் தமிழ் சினிமாக்களைப் போன்றே மொக்கையானவை. அப்படிப்பட்ட சூழலில், சினிமாக்காரனான என்னைப் போய், “அரங்கநாதன் படைப்புகளைப் பற்றி என்னிடம் சொன்னதை ஒரு கட்டுரையாக எழுதுங் களேன்’’ என்று நண்பர் ரவிசுப்பிரமணியன் சொன்ன போது, எனக்குக் கூச்சமே ஏற்பட்டது. இதே மாதிரியான ஒரு கூச்சத்தை நான் அரங்க நாதனிடமும் கண்டேன். அதுதான் அவரை ஒதுங்கியிருக்கும்படி செய்திருக்க வேண்டும். ஒதுக்கியதே இன்னொரு கோணத்தில் அவரை ஆக்கியதும் என்று எனக்குப் புரிந்தது. வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்பது எழுத்துலகத் துக்கும் பொருந்தும் இந்த நாளில், பாவப்பட்ட ஊமைப் பிள்ளைகள் என்ன செய்ய முடியும்?
மா. அரங்கநாதன் என்ற பெயரே எனக்கு அறிமுகமானது மிகச் சமீபத்தில்தான். நண்பர் ரவிசுப்பிரமணியன் அவரைப் பற்றி ஆர்ப்பாட்ட மில்லாமல் எளிமையாக எடுத்திருந்த ஒரு ஆவணப்படத்தின் வழியாகவே அவரைப் பற்றி அறிந்தேன். தமிழ் வாசிப்பு என்பது எனக்கு நண்பர் வண்ணநிலவன் கொடுத்த கொடை. அப்படி நடக்காதிருந்தால் வெறும் கச்சடாக்களிலேயே என் காலம் முழுவதும் கழிந்திருக்கும்.
நேர்மையான கேள்விகள்
ஸ்வீடிஷ் இயக்குநர் இங்மார் பெர்க்மென் ஒரு தேவாலயப் போதகரின் மகன். வீட்டிலும் தேவாலயத்திலும் பைபிளின் வாசகங்களைவிட, அவரது தந்தையின் போதனை வாசகங்களும் கண்டிப்பும் கனக்குரலும் ஏச்சும் பேச்சுமே நிறைந்திருப்பதாக உணர்கிறார் பெர்க்மென். இதனால் கடும் பாதிப்படைந்த அவர் நாத்திகராகிறார். ஆனால், அவர் எடுத்த படங் களெல்லாம் கிறிஸ்துவத்தைப் பற்றியது. மதத்தின் மேன்மையை அதன் அற்புதத்தை அவருடைய படங்கள் விளக்குகின்றன என்று எல்லோரும் பிறழ விளங்கிக்கொண்டு அவரைக் கொண்டாட, அவரோ மிகமிக நுட்பமாக, கிறிஸ்துவ மதத்தில் சொல்லப்பட்டிருக்கும் காதல், மரணம், சாத்தான், சொர்க்கம், நரகம் பற்றித் தன் படைப்புகளின் வழியாக நேர்மையான, கரிசனம் நிறைந்த கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருந்தார். மதம் குறித்த அவரது தீராத சந்தேகங்கள் காதுள்ளவர்களுக்கு இன்றும் கேட்கத்தான் செய்கின்றன.
தீர்மானிக்க இயலாத பிறப்பால், சைவப் பிள்ளையாகப் பிறந்த அரங்கநாதனுக்கு பெர்க்மென் போன்ற வாழ்வே இளமையில் லபித்திருக்கும்போல. சைவம் என்கிற அப்சஷன், மறைநூல்கள், தேவார-திருவாசக-திருமந்திரங்கள் அவரைப் பாடாய்ப் படுத்தி யிருக்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. ஆச்சார அனுஷ்டானம் மிளிர, பயபக்தியோடு வாழ்ந்த அரைபிராமண வாழ்வோடு, அவரால் ஒட்ட முடியவில்லை என்பதைத்தான் அவருடைய படைப்புகள் சொல்கின்றன.
பொது எல்லாம் பொது
இது தமிழ்நாட்டுக்கோ இந்தியாவுக்கோ மட்டுமேயான பிரத்யேகமான விஷயம் இல்லை. இதில் மேலை, கீழை என்ற எந்தப் பகுப்பும் இல்லை. மனிதகுலத்துக்கே பொதுவான உணர்வு இது. மனித வரலாற்றில் தமிழன் காட்டுமிராண்டியாய் வாழ்ந்தான் என்றால், வெள்ளைத்தோல் ஆங்கிலேயனும் வாழ்ந்திருப்பான், ஆப்பிரிக்கனும் வாழ்ந் திருப்பான். நர மாமிசம் ஒருவன் சாப்பிட்டால், எல்லோரும் சாப்பிட்டிருப்பார்கள், விவசாயம் ஒருவன் பண்ணத் துவங்கியிருந்தால், எல்லோரும் செய்திருப்பார்கள் இல்லையா?
வளர்ச்சியின் ஒவ்வொரு படிநிலையையும் தாண்டியே ஒவ்வொரு இனமும் வந்திருக்க முடியும். சிலசில சிறு வேறுபாடுகள் இருந் திருக்கலாம். அதனால், இதில் மேலை, கீழை என்று எதுவும் இல்லை. எல்லா மனிதர் களும் ஒன்றுதான். எல்லோரும் ஒரு வகையில் தொப்புள் கொடிவழியே ஜனித்தவர்கள்தான். இதைத்தானே வேறு கோணத்தில் இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னான நம் சங்கத் தமிழ்ப் பாட்டன் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ - என்று சொன்னான். இதனை இந்தியர்கள் - குறிப்பாகத் தமிழர்கள் உணர வேண்டும். மலட்டு ஆய்வாளர்களின் சுயநலத்தால், அறிவு குறுகிய அறிவுஜீவிகளின் அருள்வாக்குகளைச் சிந்திக்காமல் கேட்டு, சாமி யாடிக்கொண்டிருக்கிற வரையில் நாம் நம் சிந்தனையின் எல்லைகளை விரிவுபடுத்த முடியாது. சகிக்க முடியாத வெற்று சென்டிமெண்ட்களெல்லாம், அந்த ஈரோட்டுக் கிழவன் போக்கப் போராடிய மூடத்தனத்தில்தான் நம்மை மறுபடி கொண்டுபோய் நிறுத்தும். இறந்த காலத்திலேயே இருந்துகொண்டு, அதிலேயே கனவுகண்டு களிப்பதில் நம் தமிழர்கள் சமர்த்தர்கள். அப்படியே இருக்க விரும்பினால், அவர்கள் உலகப் பொருளா தாரம் பற்றிப் பேசக் கூடாது.
கார் வேண்டும், கணிப்பொறி வேண்டும், ரோபோ வேண்டும், மங்காணி வேண்டும்; ஆனால் அவன் கலாச் சாரம் மட்டும் வேண்டா மென்றால் உங்களை விடுமா கருப்பு? இது போன்ற மாயைகளைக் கேள்விகேட்டு உடைப்பவனே மனித குலத்தின் மேல் அக்கறை கொண்ட படைப்பாளி. ‘தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அதற்கோர் குணமுண்டு’ எல்லாம் சரி; எல்லோருக்கும் அது உண்டு இல்லையா! அதை வரலாறு சொல்லும்போது ஏற்கத் தவறினால், நாமல்லவா காணாமல் போவோம். அதற்காக, நான் பழையதை மறுக்கவில்லை; மறுதலிக்கவும் இல்லை. எல்லோருக்கும் அது உண்டு என்கிறேன். ஒரு வகையில் நாம் எல்லோரும் ஒன்று என்கிறேன். ஒன்றை மறந்துவிடாதீர்கள், அது வளர்ச்சியின் ஒரு அங்கம். அதுவும் சேர்ந்ததுதான் வளர்ச்சி. வரப்போகும் தலை முறை நீங்கள் பேசுவது போலவே உங்களைப் பற்றிப் பேசக் காத்திருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்!
தொகுப்பு: ஷங்கர்
கலைஞனுக்கு என்றுமே அழிவில்லை. அவர்கள் தங்களின் படைப்புகள் மூலம் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள் .ருத்ரய்யா, அவள் அப்படித்தான் இருக்கும் வரை இவரும் இருப்பார்; ஸ்ரீபிரியாவும் இருப்பார். நிறைய படங்களில் நடித்திருந்தாலும் இந்த ஒரு படத்திற்காகவே ஸ்ரீபிரியா இன்னும் ரொம்ப நாட்களுக்கு நினைவில் இருப்பார். எல்லோரும் ஸ்ரீதேவியின் நடிப்பையும்,அழகையும் ரசித்த காலத்திலேயே நாங்கள் ஸ்ரீபிரியாவை ரசித்தோம். அவள் அப்படித்தான் பார்த்த பிறகு ஸ்ரீபிரியாவை இன்னும் அதிகமாகப் பிடிக்கிறது. லட்சுமியும் சிறந்த நடிகை. நடிப்பதற்கு லட்சுமிக்கு கிடைத்த வாய்ப்புகள் கூட ஸ்ரீபிரியாவிற்கு கிடைக்கவில்லை அ.அ. தவிர.
நன்றி - ருத்ரய்யா , தி இந்து .
...................................................................