Tuesday, September 27, 2011

எங்கேயும் எப்போதும் !


திரைப்படங்களை  தங்கள்  வாழ்கையின்  ஒரு  பகுதியாக  கருதும்  சமூகத்தில்  தான்  நாம்  வாழ்ந்து   வருகிறோம் . திரைப்படங்களை  அவ்வளவு  எளிதில்  நம்மிடமிருந்து  பிரிக்க  முடியாது . கடந்த  இரண்டு  வருடங்களாக  நிறைய  நல்ல  தமிழ்ப்படங்களைப்  பார்க்கும்  வாய்ப்பைப்  பெற்று  வருகிறோம்  . அந்த  வகையில்  " எங்கேயும்  எப்போதும் " திரைப்படம்  நம்  திரையுலகை  ஒரு  புதிய  உயரத்தை  நோக்கி   நகர்த்துகிறது  .  

"எங்கேயும்  எப்போதும் " - மிகப்பெரிய  உழைப்பின்  வடிவம்  . படம்  தொடங்குவது  முதல்  படம்  முடியும்  வரை  ஒவ்வொரு நொடியிலும்  உழைப்பு  தெரிகிறது  . மிகச்சிறப்பான  திரைக்கதை  அமைப்பு  ,நல்ல  நடிப்பு , நல்ல  நல்ல  வசனங்கள்  , நல்ல  பாடல்கள்  ,நல்ல  ஒளிப்பதிவு  ,நல்ல படத்தொகுப்பு  என்று  படத்தில்  நிறைய  ' நல்ல  ' இருக்கிறது  . படத்தின்  சூழல் , சமூகத்தின்  சூழலோடு   மிகவும்  நெருங்கி  இருக்கிறது  . சென்னை நகரம்  அவ்வளவு  அழகாக  காட்டப்பட்டுள்ளது  . சென்னையைப்  பிடிக்காமல்  சென்னையில்  வாழ்ந்து  வருபவர்களுக்கு  , இனி  சென்னையைப்  பிடிக்கும் என நம்பலாம் .

அனன்யாவும்  , அஞ்சலியும்  (கொஞ்சம்  முதிர்ச்சி  தெரிந்தாலும்  ) அவ்வளவு  அழகு  (நடிப்பிலும் ) . நாடோடிகள்  படமும்  , இந்தப்படமும்  அனன்யாவின் சிறந்த  நடிப்புக்கு  உதாரணம்  . கற்றது  தமிழ்  , அங்காடித்தெரு  வரிசையில்  அஞ்சலியின்  மற்றுமொரு  சிறந்த  படம்  இந்த   " எங்கேயும்  எப்போதும்  " . தொடர்ந்து  இந்த  மாதிரியே  நடிக்கலாமே  அஞ்சலி ! இந்தப்படத்தில்  அஞ்சலி  பேசும்  வசனங்களை  இன்றைய  காதலர்கள்  கவனித்தால்  நல்லது  .

சர்வா ( " காதல்னா  சும்மா  இல்ல  " படத்துல  நடித்தவர்  தானே  ?) மற்றும்  ஜெய் 'யும்  சிறப்பாக  நடித்துள்ளனர் . ஜெய் , இந்த  மாதிரியான  படங்களை  தேர்ந்தெடுத்து  நடிக்கலாம் . சின்ன  சின்ன  கதாப்பாத்திரங்களில்  நடித்தவர்களும்  சிறப்பாக  நடித்துள்ளனர்  . படத்தின்  மிகப்பெரிய பலம்  ஒளிப்பதிவு  மற்றும்  படத்தொகுப்பு . சென்னையைக்  காட்டும்  பொது  நாமும்  சென்னையில்  இருப்பது  போலவும்  , திருச்சியைக்  காட்டும்  பொது  நாமும்  திருச்சியில்  இருப்பது  போலவும்  , பேருந்தைக்  காட்டும்  பொது  நாமும்  பேருந்தில்  இருப்பது  போலவும்  நம்மை  உணர  வைக்கிறது  ஒளிப்பதிவும்  , ஒலிப்பதிவும் . உயிரோட்டமான  சூழ்நிலைகளுக்கு   பின்னணி  ஒலி சேர்க்க  இசையமைப்பாளர்  மிகவும்  உழைத்திருக்கிறார்  .அற்புதமான படத்தொகுப்பு  , படத்திற்கு  வேகம்  கொடுக்கிறது .   

உதவி  இயக்குனர்களின்  உழைப்பும்  இந்தப்படத்தில்  தனியாக  தெரிகிறது  . இயக்குனரை  மீறி  அவர்கள்  தெரிவது  அதிசயம்  .கொஞ்சம்  தவறினாலும்  சோகமாக  மாறிவிடக்கூடிய  கதையை  அவ்வளவு   அழகாக , அதேசமயம்  அழுத்தமாக  படம்பிடித்துள்ளனர்  . நல்ல  கதைக்கரு  ,தொய்வே  இல்லாத  திரைக்கதை  , தற்போதைய  சூழலுக்குப்  பொருந்தும்  எளிமை  + இனிமை  வசனங்கள்  , சிறந்த  இயக்கம்  என்று  முதல்  படத்திலேயே  முத்திரை  பதித்து  விட்டார்  , இயக்குனர்  சரவணன்  , உங்களை  வருக  ! வருக  ! என  வரவேற்கிறோம்  .

எங்கேயும்  எப்போதும்  , எதையாவது  கற்றுக்கொள்ள  நமக்கு  வாய்ப்பு  இருக்கிறது  . இந்த   "எங்கேயும்  எப்போதும் " -விழும்   நாம்  (முக்கியமாக  ஓட்டுநர்கள் ) கற்றுக்கொள்ள  நிறைய   இருக்கிறது  . வாகனத்தை  ஓட்டும்போது   அதிக  வேகமும்  , செல்போனும்  கண்டிப்பாக  தவிர்க்கப்பட  வேண்டும்  . செல்போனைக்  கூட   தவிர்த்து  விடலாம் ? ஆனால்  வேகத்தைத்  தவிர்க்க  முடியுமா  ? தெரியவில்லை  . இன்றைய  அவசர  வாழ்க்கையில்  வேகத்தை  கவனத்தில்  கொண்டுதான்  நாம்  பேருந்திலேயே  ஏறுகிறோம்  . வேகத்தை  மட்டுமே  தேர்ந்தெடுத்தால்  வேகமாக  போய்ச்  சேர  வேண்டியது  தான்  , பாலிசி  எடுக்க  மறந்து  விடாதீர்கள் ! ?   

இயல்  , இசை  , நாடகம்  மூன்றும்  சேர்ந்தது  தான்  நமது  தமிழ்  மொழி . நாடகத்தின்  மறுவடிவமான  சினிமாவிற்கு  கொடுக்கும்  முக்கியத்துவம்  இயல்  மற்றும்  இசைக்கு  கொடுக்கப்படுவதில்லை . வாரயிதழ்களின்  அட்டைப்படங்களை  சினிமாக்காரர்களும்  , அரசியல்வாதிகளும்  மட்டுமே  அலங்கரிக்கிறார்கள் . இலக்கியத்துறையில்  ஒருவர்  எவ்வளவு  பெரிய  விருது  வாங்கினாலும்  , பெரிய  சாதனைகள்  செய்தாலும்  கவனிக்கப்படுவதேயில்லை  . இசை  என்றால்  திரையிசை  மட்டும்  தான்  என்ற  அளவில்  சுருங்கி  விட்டது  . எவ்வளவோ  திரைப்படங்கள்  எடுக்கப்படுவது  போல்  , எவ்வளவோ  புத்தகங்கள்  எழுதப்படுவது  போல்  இசையிலும்  எவ்வளவோ  செய்யலாம்  . இயல் , இசை  ,நாடகம்  மூன்றையும்   இதன்  வரிசைப்படியே  கொண்டாடலாம் . இந்த  மூன்றின்  வளர்ச்சியில்  தான்  அடங்கியுள்ளது  நம்  மொழியின்  வளர்ச்சி .

வாழ்க  வளமுடன் ! 

மேலும் படிக்க :


....................................................................... 

Monday, September 5, 2011

ஜப்பானும் தனிமனித ஒழுக்கமும் !

"திருடனாய்ப்  பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது .." , " தனியொரு மனிதன் திருந்திவிட்டால் சிறைச்சாலைகள் தேவையில்லை ..." இரண்டும் புகழ்பெற்ற பாடல் வரிகள் . நாம் எவ்வளவுதான் சட்டங்கள் போட்டாலும் இன்னும் நம்மால் நிறைய விசயங்களை மாற்றமுடியவில்லை . செயல்படுத்துபவர்களும் , பின்பற்றுபவர்களும் சரியாக இல்லாதவரை சட்டங்களால் என்ன செய்ய முடியும் ?

அண்ணா  ஹசாரே , சமீபத்தில் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர் . பாதிப்பேர் அவரை ஆதரிக்கிறார்கள் மீதிப்பேர் அவரையும் ,ஜன் லோக்பாலையும் எதிர்க்கிறார்கள் . அண்ணாவிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான் விசயம் "அகிம்சை " . அவரது போராட்டத்தின் போது யாருக்கும் எந்த இடையூறும் ,முக்கியமாக பொதுச்சொத்துக்கு எந்தவிதமான சேதமும் ஏற்ப்படவில்லை. மற்றவர்கள் நடத்திய , நடத்தும் போராட்டங்களில் இவை சாத்தியமில்லை .அகிம்சையின் சக்தியை தற்போது எல்லோராலும் உணர முடிந்திருக்கிறது . இவரை காந்தியுடன் ஒப்பிடவேண்டிய அவசியம் இல்லை .

 யாரும் எதுவும் செய்யமாட்டேன் என்கிறார்கள் , யாரவது எதாவது செய்யும் போது அவரை எதிர்க்க மட்டும் அணி திரண்டு விடுகிறார்கள் . இது ஒரு வகையான  நோய் . கிரிக்கெட்டில் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி வெற்றிப்பெறும்  போது அந்த அணி தோற்கவேண்டும் என்று எல்லோரும் வேண்டுகிறோம் . இது நம்மால் முடியாததை இன்னொருவன் செய்யும்போது ஏற்படும் ஆற்றாமையின் வெளிப்பாடு . நாமளும் எதுவும் செய்யக்கூடாது , அடுத்தவனும் எதுவும் செய்யக்கூடாது என்ற மனநிலையையே இதற்குக் காரணம் .

நாட்டில் ஊழலைவிடப் பெரிய பிரச்னைகள் இருக்கின்றன . அதில் கவனம் செலுத்தாத மக்கள் , "ஜன் லோக்பால்" மீது கவனம் செலுத்துவது நிறைய பேருக்குப் பிடிக்கவில்லை . உண்மையைச் சொல்லப்போனால் ஜன் லோக்பால் மூலமாக மற்ற பிரச்னைகளான இரோம் சர்மிளா , ஒரிசா போஸ்கோ , பழங்குடியினர் பிரச்னைகள் அதிக மக்களைச் சென்றடைந்திருக்கின்றன . மற்ற பிரச்னைகளை மக்கள் கவனிக்கவில்லை என்று சொல்பவர்கள் அதை அண்ணா ஹசாரே உண்ணாவிரத மேடையில் சொல்லியிருந்தால் அது எல்லோருக்கும் சென்று சேர்ந்திருக்குமே , அதைச் செய்யாமல் எல்லோரும் ஒவ்வொரு மூலையிலிருந்து எதிர்ப்புக் குரல் மட்டுமே கொடுத்தார்கள் .எப்போதும் போல்  எதையும் செயல் படுத்தாமல் பேசிக்கொண்டே இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டு விட்டார்களோ என்னவோ !


 நம் சமூகத்தின் அடிப்படைப் பிரச்னை "தனிமனித ஒழுக்கம்" தான் ,சட்டங்கள் அல்ல . தனிமனித ஒழுக்கம் இல்லாதவரையில் எந்தச் சட்டங்களாலும் எந்தப்பயனும் இல்லை .தனிமனித ஒழுக்கத்திற்கு சமீபத்திய மிகச் சிறந்த உதாரணம் , ஜப்பான் மக்கள் . ஜப்பான் மக்களைப் பார்த்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது . அவ்வளவு பெரிய பேரழிவு நிகழ்ந்தபோதும் அமைதியாக நேர்மையான வழியில் நடந்து கொண்டனர் . திறந்து கிடந்த கடையில் யாரும் திருடவில்லை , அமைதியாக வரிசையில் நின்று பொருட்கள் வாங்கினர் . சுனாமியால் பாதிக்கப்பட்ட இடங்களில்  கிடந்த பணத்தை எடுத்து தொடர்ந்து அரசுக்கு செலுத்தி வருகின்றனர் . இதுவரை 800 கோடிக்கும் அதிகமான பணம் அரசிடம் சேர்க்கப்பட்டிருக்கிறது . இவை எப்போதும் இந்தியாவில்  சாத்தியமில்லை . காரணம் ?

நாம் இன்று செய்ய வேண்டியது தனிமனித ஒழுக்கத்தை இந்தியச் சமூகத்தில் பரவச் செய்வது மட்டுமே . போராட்டத்தில் கலந்து கொள்ளும் எல்லோரும் எதோ ஒரு வகையில் லஞ்சத்திற்கும் , ஊழலுக்கும் துணை போனவர்கள் தான் .தனி மனிதனாக நாம் நிறைய விசயங்களிடம் தொடர்ந்து தோற்றுக்கொண்டே தான் இருக்கிறோம். பிளாஸ்டிக்கிடம் தோற்கிறோம் , காலத்திடம் தோற்கிறோம், இயற்கையை ரசிக்க மறக்கிறோம் , உடலிடம் தோற்கிறோம் , உணவிடம் தோற்கிறோம் . இவ்வளவு விசயங்களில் தோற்றாலும் மீண்டும் அவற்றை வெற்றிக்கொள்ள தொடர்ந்து போராட வேண்டியிள்ளது .

இந்தியாவில் இப்போது நடந்து கொண்டிருக்கும் போராட்டங்களின் மிகப் பெரிய எதிரி " உலகமயமாக்கல் " மட்டுமே . உலகமயமாக்கல் , நம்மை நாமாக பார்க்க அனுமதிக்காமல் மற்றவர்களுடன் பொருத்திப் (Comparison) பார்க்கவே செய்கிறது .மற்றவர்கள் போல் இருக்க நாம் தினமும் தூண்டப்படுகிறோம் . நம் சுயத்தை இழக்கிறோம் . நம்மை நினைத்து நாம் பெருமைப் படுவதற்குப் பதிலாக , மற்றவர்களைச் கவனிக்கச் செய்து நம்மை கவலைப்பட வைப்பது தான் உலகமயமாக்கலின் தந்திரம் . முக அழகு கிரீம் , முடி வளர , முடி கொட்டாமல் இருக்க,ஒல்லியாக ,குண்டாக  என்று விதவிதமான குப்பைகளை  நம் தலையில் கட்டுகிறார்கள் . நாம் உணவுக்குச்  செலவு செய்வதை விட நம் ஆடம்பரத்துக்கு அதிகம் செலவழிக்கிறோம் . கடன் வாங்கியாவது நம் ஆடம்பரத்தை நிலை நாட்டுகிறோம் .

பழங்குடியினர் பிரச்னை, ஒரிசா போஸ்கோ பிரச்னை என்று பல பிரச்னைகளுக்கு உலகமயமாக்கல் தான் காரணம் . உலகமயமாக்கலால் மற்ற நாடுகள்  சூடு பட்ட நிலையிலும் தற்போதைய காங்கிரஸ் அரசு , உலகமயமாக்கலின் உதவியுடன் இந்தியாவை மற்றவர்களின் அடிமை தேசமாக மாற்றவே தொடர்ந்து முயல்கிறது . 

 தொடர்ந்து பெரிய முதலாளிகளை வளர்ப்பது ,சிறிய முதலாளிகளைப் அழிப்பது , இயற்கை வளங்களை அழிப்பது , விவசாயத்தைக் கெடுப்பது , பூமியின் சுற்றுச்சூழலைப் பெருமளவு பாதிப்பது , பணத்தை ஒரே இடத்தில் சேர்ப்பது , பணக்காரனுக்கும் ஏழைக்கும் உள்ள வித்தியாசத்தை தாறுமாறாக உயர்த்துவது , ஒட்டுமொத்தப்  பொருளாதாரமே ஒருசிலரை நம்பி இருப்பது ,கலாச்சார அடையாளங்களை அழிப்பது ,எல்லோரையும் நோயாளிகளாக்குவது ,   இவை தான் உலகமயமாக்களின் சாதனைகள் .

தனிமனித ஒழுக்கமும், உலகமயமாக்கலும் தான் நமது பெரிய பிரச்னைகள் !

நமக்கு நடக்காத வரை எல்லாமும் வேடிக்கை தான் !

மேலும் படிக்க :


.......................................................................................


Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms