திரைப்படங்களை தங்கள் வாழ்கையின் ஒரு பகுதியாக கருதும் சமூகத்தில் தான் நாம் வாழ்ந்து வருகிறோம் . திரைப்படங்களை அவ்வளவு எளிதில் நம்மிடமிருந்து பிரிக்க முடியாது . கடந்த இரண்டு வருடங்களாக நிறைய நல்ல தமிழ்ப்படங்களைப் பார்க்கும் வாய்ப்பைப் பெற்று வருகிறோம் . அந்த வகையில் " எங்கேயும் எப்போதும் " திரைப்படம் நம் திரையுலகை ஒரு புதிய உயரத்தை நோக்கி நகர்த்துகிறது .
"எங்கேயும் எப்போதும் " - மிகப்பெரிய உழைப்பின் வடிவம் . படம் தொடங்குவது முதல் படம் முடியும் வரை ஒவ்வொரு நொடியிலும் உழைப்பு தெரிகிறது . மிகச்சிறப்பான திரைக்கதை அமைப்பு ,நல்ல நடிப்பு , நல்ல நல்ல வசனங்கள் , நல்ல பாடல்கள் ,நல்ல ஒளிப்பதிவு ,நல்ல படத்தொகுப்பு என்று படத்தில் நிறைய ' நல்ல ' இருக்கிறது . படத்தின் சூழல் , சமூகத்தின் சூழலோடு மிகவும் நெருங்கி இருக்கிறது . சென்னை நகரம் அவ்வளவு அழகாக காட்டப்பட்டுள்ளது . சென்னையைப் பிடிக்காமல் சென்னையில் வாழ்ந்து வருபவர்களுக்கு , இனி சென்னையைப் பிடிக்கும் என நம்பலாம் .
அனன்யாவும் , அஞ்சலியும் (கொஞ்சம் முதிர்ச்சி தெரிந்தாலும் ) அவ்வளவு அழகு (நடிப்பிலும் ) . நாடோடிகள் படமும் , இந்தப்படமும் அனன்யாவின் சிறந்த நடிப்புக்கு உதாரணம் . கற்றது தமிழ் , அங்காடித்தெரு வரிசையில் அஞ்சலியின் மற்றுமொரு சிறந்த படம் இந்த " எங்கேயும் எப்போதும் " . தொடர்ந்து இந்த மாதிரியே நடிக்கலாமே அஞ்சலி ! இந்தப்படத்தில் அஞ்சலி பேசும் வசனங்களை இன்றைய காதலர்கள் கவனித்தால் நல்லது .
சர்வா ( " காதல்னா சும்மா இல்ல " படத்துல நடித்தவர் தானே ?) மற்றும் ஜெய் 'யும் சிறப்பாக நடித்துள்ளனர் . ஜெய் , இந்த மாதிரியான படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கலாம் . சின்ன சின்ன கதாப்பாத்திரங்களில் நடித்தவர்களும் சிறப்பாக நடித்துள்ளனர் . படத்தின் மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு . சென்னையைக் காட்டும் பொது நாமும் சென்னையில் இருப்பது போலவும் , திருச்சியைக் காட்டும் பொது நாமும் திருச்சியில் இருப்பது போலவும் , பேருந்தைக் காட்டும் பொது நாமும் பேருந்தில் இருப்பது போலவும் நம்மை உணர வைக்கிறது ஒளிப்பதிவும் , ஒலிப்பதிவும் . உயிரோட்டமான சூழ்நிலைகளுக்கு பின்னணி ஒலி சேர்க்க இசையமைப்பாளர் மிகவும் உழைத்திருக்கிறார் .அற்புதமான படத்தொகுப்பு , படத்திற்கு வேகம் கொடுக்கிறது .
உதவி இயக்குனர்களின் உழைப்பும் இந்தப்படத்தில் தனியாக தெரிகிறது . இயக்குனரை மீறி அவர்கள் தெரிவது அதிசயம் .கொஞ்சம் தவறினாலும் சோகமாக மாறிவிடக்கூடிய கதையை அவ்வளவு அழகாக , அதேசமயம் அழுத்தமாக படம்பிடித்துள்ளனர் . நல்ல கதைக்கரு ,தொய்வே இல்லாத திரைக்கதை , தற்போதைய சூழலுக்குப் பொருந்தும் எளிமை + இனிமை வசனங்கள் , சிறந்த இயக்கம் என்று முதல் படத்திலேயே முத்திரை பதித்து விட்டார் , இயக்குனர் சரவணன் , உங்களை வருக ! வருக ! என வரவேற்கிறோம் .
எங்கேயும் எப்போதும் , எதையாவது கற்றுக்கொள்ள நமக்கு வாய்ப்பு இருக்கிறது . இந்த "எங்கேயும் எப்போதும் " -விழும் நாம் (முக்கியமாக ஓட்டுநர்கள் ) கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது . வாகனத்தை ஓட்டும்போது அதிக வேகமும் , செல்போனும் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும் . செல்போனைக் கூட தவிர்த்து விடலாம் ? ஆனால் வேகத்தைத் தவிர்க்க முடியுமா ? தெரியவில்லை . இன்றைய அவசர வாழ்க்கையில் வேகத்தை கவனத்தில் கொண்டுதான் நாம் பேருந்திலேயே ஏறுகிறோம் . வேகத்தை மட்டுமே தேர்ந்தெடுத்தால் வேகமாக போய்ச் சேர வேண்டியது தான் , பாலிசி எடுக்க மறந்து விடாதீர்கள் ! ?
இயல் , இசை , நாடகம் மூன்றும் சேர்ந்தது தான் நமது தமிழ் மொழி . நாடகத்தின் மறுவடிவமான சினிமாவிற்கு கொடுக்கும் முக்கியத்துவம் இயல் மற்றும் இசைக்கு கொடுக்கப்படுவதில்லை . வாரயிதழ்களின் அட்டைப்படங்களை சினிமாக்காரர்களும் , அரசியல்வாதிகளும் மட்டுமே அலங்கரிக்கிறார்கள் . இலக்கியத்துறையில் ஒருவர் எவ்வளவு பெரிய விருது வாங்கினாலும் , பெரிய சாதனைகள் செய்தாலும் கவனிக்கப்படுவதேயில்லை . இசை என்றால் திரையிசை மட்டும் தான் என்ற அளவில் சுருங்கி விட்டது . எவ்வளவோ திரைப்படங்கள் எடுக்கப்படுவது போல் , எவ்வளவோ புத்தகங்கள் எழுதப்படுவது போல் இசையிலும் எவ்வளவோ செய்யலாம் . இயல் , இசை ,நாடகம் மூன்றையும் இதன் வரிசைப்படியே கொண்டாடலாம் . இந்த மூன்றின் வளர்ச்சியில் தான் அடங்கியுள்ளது நம் மொழியின் வளர்ச்சி .
வாழ்க வளமுடன் !
மேலும் படிக்க :
.......................................................................
0 comments:
Post a Comment