Showing posts with label K.A.தங்கவேலு. Show all posts
Showing posts with label K.A.தங்கவேலு. Show all posts

Wednesday, January 22, 2014

K.A.தங்கவேலுவின் நகைச்சுவை !

 
தமிழ் திரைப்பட வரலாற்றில் அன்று முதல் இன்று வரை  கதாநாயகனுக்கு நண்பனாக ஒரு நகைச்சுவை நடிகர் தான் நடிக்கிறார் .ஏன்? தெரியவில்லை . கதாநாயகனை ஒப்பந்தம் செய்தவுடன் நகைச்சுவை நடிகரைத் தான் ஒப்பந்தம் செய்கிறார்கள் .ஜெமினி கணேசனின் நண்பனாக பல படங்களில் தங்கவேலு நடித்துள்ளார். 


அம்பிகாபதி -தங்கவேலு , நகைச்சுவை நடிகர் கருணாநிதியுடன் ( வெங்காய புலவர் ) இணைந்து நாய் வாலை நிமிர்த்த முயற்சி செய்யும் நகைச்சுவை அசரடிக்கும்.முழுப் படத்தையும் பார்க்க.


கல்யாண பரிசு - " மன்னார் அன் கம்பெனி " யை மறக்க முடியுமா ? மன்னார் அன் கம்பெனியின் மேனேஜர் என்று பொய் சொல்லிக் கொண்டு இவர் பண்ணும் அலப்பரை அருமை .K.A.தங்கவேலுவிற்குப் பெரும்புகழைப் பெற்றுத் தந்த படம் .




 
கைதி கண்ணாயிரம்-இந்தப் படத்தில் இரண்டாவது கதாநாயகன் அளவிற்கு முக்கியமான வேடம் .கவுண்டமணி பிற்காலத்தில் இந்தத் தலையா ! அந்தத் தலையா! என்று சொல்வதற்கு முன்பே தங்கவேலு இந்தப்பயலே! அந்தப் பயலே! (பணாதப் பயலே, ஊசிப் பயலே,கொரங்குப் பயலே,மூஞ்சூருப் பயலே ..) என்று சொல்லியிருக்கிறார். இந்தப்படத்தில் தங்கவேலுவிற்கு ஜோடிப் பாடலும் உண்டு.




இரும்புத்திரை - தங்கவேலுவின் வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவைக் காட்சிகள் நிறைந்த படம் .ஒரு தொழிலாளியாக தங்கவேலுவின் நடிப்பு அபாரம் . "கையில வாங்கினேன் பையில போடல காசு போன இடம் தெரியல.." இன்றும் இந்தப் பாடல் பாட்டாளி மக்களின் நிலையைப் பிரதிபளிக்கிறது . பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களால் எழுதப்பட்ட அற்புதமான பாடலிது.நான் நீண்ட நாட்களாக தேடிக் கொண்டிருக்கும் படம் இது தான்.


அடுத்த வீட்டுப்பெண் - தன் மனைவி சரோஜாவுடன் இணைந்து கலக்கிய படம் ." கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே..!" கதாநாயகன் பாடுவது போல அமைந்த பாடலை அறைக்கு உள்ளிருந்து தங்கவேலு பாடுவார்.

அறிவாளி - முற்போக்கான பத்திரிகை எழுத்தாளராக நடித்திருப்பார் நம் சக்ரவர்த்தி .  படிப்பறிவில்லாத கிராமத்துப் பெண்ணை கலப்பு திருமணம் செய்து கொண்டு அவர் படும்பாடு அட்டகாச நகைச்சுவை .


ரம்பையின் காதல் - தங்கவேலு கதாநாயகனாக நடித்த படம் .இந்தப் படத்தின் கதாநாயகி பானுமதி . இந்தப் படத்தைத் தழுவித்தான் வடிவெலு நடித்த "இந்திரலோகத்தில் நா.அழகப்பன் " படம் எடுக்கப்பட்டது .டி.எஸ்.பாலையா எமனாக நடித்திருப்பார் .எமன் வேசத்தில் பாலையாவைப் பார்க்கும் போதே சிரிப்பு வந்துவிடும் .அலட்டிக்காமல் சிரிக்க வைக்கும் திறமை பாலையாவிற்கு உண்டு .

தங்கவேலுவின் மேலும்  சில நகைச்சுவைக் காட்சிகள் :

 
 
 
 
 
 
 
 
 
 
 
மேலும் படிக்க :                                                                                                                       
                                                     
 
 
.....................................................................................................................................................................
 
                                                            
 
 

Thursday, November 14, 2013

K.A.தங்கவேலு நடித்த பாடல்கள் !

தமிழ் சினிமாவின் தலை சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான தங்கவேலு நிறைய பாடல் காட்சிகளில் நடித்துள்ளார் . எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத நடிப்புக்குச் சொந்தக்காரர் தான் நம் தங்கவேலு . அவர் நடித்த பாடல் காட்சிகளைக் காண்பது இன்னும் சுவாரசியம் நிரம்பியதாகவே இருக்கிறது .பாட்டாளி மக்களின் சாமானிய குரலை பிரதிபளிப்பது போலவே நிறைய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார் . அவர் நடித்த பெரும்பாலான பாடல் காட்சிகள் எளிமையான முறையிலேயே படமாக்கப்பட்டுள்ளன . பாடல் வரிகளும் மிகவும் எளிமையாகவே உள்ளன . இந்த மாபெரும் கலைஞனின் சில பாடல்கள் .

பார்த்தீரா ஐயா  பார்த்தீரா ...


உல்லாச உலகம் உனக்கே சொந்தம் ...


புள்ளி வைக்கிறான் பொடியன் சொக்குறான் ...


கண்ணாலே பேசி பேசிக் கொள்ளாதே...


சாலா மிஸ்திரி பருப்பு பிஸ்தா பருப்பு ....


கண்ணு தெரிஞ்சு நடக்கணும்...


அத்தானும் நான் தானே....



சாஞ்சா சாயர பக்கமே ஆடுர செம்மறி ஆடுகளா...


அங்கமிது அங்கமிது...


அச்சா பகத் அச்சா...


அதோ கீர்த்தனா ஆரம்பத்திலே...




கண்டாலும் கண்டேனே...



காதல் உண்டாகும் கட்டழகி உன்னைக் கண்டாலே...


 மேலும் படிக்க :

 K.A.தங்கவேலு - நகைச்சுவைச் சக்கரவர்த்தி !

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

M.R.ராதாவின் சிறந்த பேச்சு !
.................................................................................................................................................................... 

Tuesday, July 30, 2013

K.A.தங்கவேலு - நகைச்சுவைச் சக்கரவர்த்தி !

K.A.தங்கவேலு , தமிழ் சினிமாவின் ஈடு இணையற்ற நகைச்சுவை நடிகர் ; நல்ல குரல்வளம் உடையவர் . தான் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையையும் நகைச்சுவையாக்கும் கலை அவருக்கு மட்டுமே வாய்த்தது .ஆபாச வசனங்களைப் பேசாத அற்புதக் கலைஞர் என்றும் அவருடைய குரலின் ஏற்ற இறக்கமே காட்சிக்கும் வசனத்திற்கும் தனி பலத்தைத் தந்துவிடும் என்றும் சொல்கிறார்கள். அவருக்கு பின்னால் வந்த ஏராளமான நகைச்சுவை நடிகர்களுக்கு முன்மாதிரியாக இருந்தவர் .கடைசி காலம் வரை நாடகங்கள் நடத்தியவர் .ஜாடிக்கு ஏத்த மூடி போல இவருக்கு மனைவியாக வந்தவர் , எம்.சரோஜா .சரோஜாவும் நகைச்சுவை நடிகை தான் . இருவரும் சேர்ந்து நடித்த நகைச்சுவைக் காட்சிகளெல்லாம் நமக்கு இரட்டைக் கொண்டாட்டம் .

தங்கவேலுவின் நலினமான பேச்சுத் திறமை வேறு எவருக்கும் வாய்க்கவில்லை . அவர் பேசுவதை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்;பார்க்கக் கூட வேண்டியதில்லை;சலிக்கவே சலிக்காது .உடல்மொழியில் சிரிக்க வைக்க பலர் இருந்தாலும் ,குரல் மொழியில் சிரிக்க வைக்க இவர் மட்டுமே இருந்தார்;இருக்கிறார் ;இருப்பார் .தங்கவேலு  பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையும் என்னைச் சிரிக்கவைத்துவிடும் . இவருக்கு அடுத்ததாக குரல் மொழியில் சிரிக்க வைத்தவர் ,வி.கே.ராமசமி .

23-01-1983 , ஆனந்த விகடன் பேட்டியில் தங்கவேலு ,  " ஆரம்ப காலத்துலே சினிமாவிலே நடிக்க சான்ஸ் கேட்டு கம்பெனி கம்பெனியா படியேறி இறங்கினவன் நான் . ' பாடத் தெரியுமா ?'னு கேட்பாங்க ;'நீஞ்சத் தெரியுமா ?'னு கேட்பாங்க . சிமென்ட் தரையிலே நெஞ்சு தேய நீஞ்சிக் காட்டியிருக்கேன் . எனக்குப் பொன்னாடை போர்த்த யாரையும் நான் அனுமதிக்கறதில்லே. வேணுமானா துப்பட்டியைக் கையிலே கொடுத்துடுங்கன்னு சொல்லி வாங்கிக்கிடுவேன் . ஏன்னா , ஒருத்தருக்குப் பொன்னாடை போர்த்தறாங்கன்னு சொன்னா , அந்த ஆள் அவுட்னு அர்த்தம் ! பாலையா அண்ணே கடைசி வரைக்கும் பொன்னாடை போர்த்திக்கலையே...!" என்று சொல்லியிருக்கிறார் .

பாலையா ஒரு பேட்டியில் " நான் பார்த்த அளவில் என்.எஸ்.கிருஷ்ணனுகுப் பிறகு சிறந்த நகைச்சுவை நடிகர் தங்கவேலு தான் " என்று சொல்லியிருகிறார்.
நம் நகைச்சுவைச் சக்கரவர்த்தி, காரைக்கால் (பாண்டிச்சேரி) பகுதியில் உள்ள திருமலராஜன்பட்டினத்தில் பிறந்ததாக விக்கிப்பீடியா சொல்கிறது .1950 முதல் 1970 வரை நிறைய படங்களில் நடித்துள்ளார். சிங்காரி (1951) அமரகவி (1952) கலியுகம் (1952) பணம் (1952) அன்பு (1952) திரும்பி பார் (1952) பணக்காரி (1953) இல்லற ஜோதி (1954) சுகம் எங்கே (1954) நண்பன் (1954) பணம் படுத்தும் பாடு (1954) பொன் வயல் (1954) போன மச்சான் திரும்பி வந்தான் (1954) விளையாட்டு பிள்ளை (1954) வைர மாலை (1954) உலகம் பலவிதம் (1955) எல்லாம் இன்பமயம் (1955) கதாநாயகி (1955) குலேபகாவலி (1955) கோடீஸ்வரன் (1955) கோமதியின் காதலன் (1955) செல்ல பிள்ளை (1955) மகேஸ்வரி (1955) மங்கையர் திலகம் (1955) மேதாவிகள் (1955) மிஸ்ஸியம்மா (1955) அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1955) அமர தீபம் (1956) காலம் மாறிப்போச்சு (1956) குடும்ப விளக்கு (1956) நல்ல வீடு (1956) நாக பஞ்சமி (1956) மர்ம வீரன் (1956) மாதர்குல மாணிக்கம் (1956) அலாவுதீனும் அற்புத விளக்கும் (1957) அம்பிகாபதி (1957) எங்க வீட்டு மகாலக்ஷ்மி (1957) கற்புக்கரசி (1957) சக்ரவர்த்தி திருமகள் (1957) சௌபாக்கியவதி (1957) நீலமலை திருடன் (1957) பக்த மார்க்கண்டேயா (1957) பாக்யவதி (1957) மல்லிகா (1957) மாயா பஜார் (1957) வனங்காமுடி (1957) உத்தம புத்திரன் (1958) கடன் வாங்கி கல்யாணம் (1958) கன்னியின் சபதம் (1958) காத்தவராயன் (1958) செஞ்சுலக்ஷ்மி (1958) நீலாவுக்கு நிறஞ்ச மனசு (1958) பூலோக ரம்பை (1958) மனமுள்ள மறுதரம் (1958) மாங்கல்ய பாக்கியம் (1958) வஞ்சிக்கோட்டை வாலிபன் (1958) கல்யாண பரிசு (1959) தாய் மகளுக்கு கட்டிய தாலி (1959) நான் சொல்லும் ரகசியம் (1959) மஞ்சள் மகிமை (1959) அடுத்த வீட்டு பெண் (1960) அன்பிற்கோர் அண்ணி (1960) இரும்புத்திரை (1960) கடவுளின் குழந்தை (1960) கைதி கண்ணாயிரம் (1960)  கைராசி (1960) தங்கம் மனசு தங்கம் (1960) தங்கரத்தினம் (1960) தெய்வ பிறவி (1960) நான் கண்ட சொர்க்கம் (1960)  பாட்டாளியின் வெற்றி (1960) புதிய பாதை (1960) மீண்ட சொர்க்கம் (1960) அரசிளங்குமாரி (1961) திருடாதே (1961) பாசமலர் (1961) எங்க வீட்டு பெண் (1965) Konte pilla (1967) உயிர் மேல் ஆசை (1967) ராஜாத்தி (1967) தில்லானா மோகனாம்பாள் (1968) நம் நாடு (1969) வியட்நாம் வீடு (1970) . 1970 -குப் பிறகும் படங்களில் நடித்தார்.இவரைப் பற்றிய முழுவிவரம் தெரியவில்லை .

ரம்பையின் காதல் ,நான் கண்ட சொர்க்கம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.நிறைய படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் ,சில படங்களில் வில்லன் வேடத்திலும் நடித்துள்ளார். பல்வேறு வேடங்களில் நடித்திருந்தாலும் நகைச்சுவை நடிப்பில் ஒரு சிறந்த கலைஞன் .மேலே கொடுத்த படங்கள் உதாரணங்கள் தான் . இந்தக் கலைஞனை பற்றி மேலும் அறிந்து கொள்ள அவரது மற்ற படங்களையும் பார்க்க வேண்டும்.சிரிப்புக்கு உத்திரவாதம் தரும் இந்த மாபெரும் கலைஞனுக்கு நாம் செய்தது என்ன?

எந்த வருடம் பிறந்தார் என்றும் தெரியவில்லை .இறந்த நாள் 28-செப்டம்பர் -1994 என்று விக்கிப்பீடியா சொல்கிறது . மொத்தம் எத்தனை படங்களில் நடித்தார் என்றும் தெரியவில்லை .தனது கடைசி காலம் வரை நாடகம் நடத்தியிருக்கிறார் .எந்தக் கலைஞனையும் வாழும் காலத்தில் தமிழகம் கொண்டாடியதில்லை .அதற்கு இவரும் விதிவிலக்கில்லை .இவரையும் கடைசி காலத்தில் யாரும் கண்டுகொள்ளவில்லை.

1971-ல் ஆனந்த விகடனில் வந்த பேட்டி

கேள்வி- " நீங்கள் இருவரும்  இப்போதெல்லாம் படங்களில் ஏன் நடிப்பதில்லை ? நீங்களாக ஒதுங்கிவிட்டீர்களா? அல்லது திரையுலகம் உங்களை ஒதுக்கி விட்டதா?"

பதில் - " ரொம்பச் சங்கடமான கேள்வியைக் கேட்டுட்டீங்களே.." என்று தனக்கே உரித்தான ஒரு குரலுடன் நம்மைப் பார்த்துப் புன்னகைத்தார் தங்கவேலு .
" நானாகவும் ஒதுங்கலை;அவங்களாவும் ஒதுக்கிடலை.என்னமோ தெரியலே ,ஒரு 'பிரேக்' வந்துடுச்சி . இந்த  'பிரேக்' வந்து பத்து வருசம் ஆகப்போவுது . நான் நடிச்சுக்கிட்டிருந்த போது ஒரு கணிசமான தொகையை வாங்கிக்கிட்டு இருந்தேன். அப்போ திடீர்னு சில பேர் வந்து குறைந்த தொகையை வாங்கிக்கிட்டு நடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. 'குறைந்த தொகை'யை மனசிலே வச்சுக்கிட்டு எல்லோரும் அந்தப் பக்கம் போயிட்டங்க .நானும் சரோஜாவும் மட்டும் இந்தப் பக்கம் தனியா நின்னுட்டோம். அவ்வளவுதாங்க விசயம்..."

கேள்வி - "இப்போ உங்க வாழ்க்கை வசதி எல்லாம் எப்படி?"

பதில் - " கலைவாணர் ஆசியாலே நான் அப்போ இருந்த மாதிரியே இப்போதும் ஸ்டெடியா,செளக்கியமா இருந்துக்கிட்டு வர்றேன். அதுலே பாருங்க, ஒரு விசேஷம்... நாங்க வெளியூருக்கு நாடகம் நடத்தப் போனா, அங்கே பார்க்கிறவங்க எல்லாம் நான் கல்யாண பரிசிலே சொன்ன டயலாகையே திருப்பி என்னைப் பார்த்துச் சொல்றாங்க. ' தங்கவேலு அண்ணாச்சி, உங்களைப் பார்த்து ரொம்ப நாளாச்சி ! ' அப்படீன்னு கேட்கிறாங்க . இதுக்கு என்னங்க சொல்றது...!"  என்று சிரிக்கிறார் தங்கவேலு .

 தங்கவேலுவைப் பற்றி யாராவது புத்தகம் எழுதியிருக்கிறார்களா ? தெரியவில்லை .அவரைப்  பற்றிய புத்தகம் கண்ணில் பட்டால் எனக்குச் சொல்லுங்கள் . இவரை வைத்து ஒரு டாகுமென்ட்ரி படமே எடுக்கலாம் .
கைதி கண்ணாயிரம் படத்தில் மனோகர் ,தங்கவேலுவைப் பார்த்துக் கேட்பார்
"சிங்காரம் (தங்கவேலு )செத்தவனைக் கூட நீ சிரிக்க வச்சுருவியேப்பா ". உண்மை தான். யாரையும் நோக வைக்காமல் எல்லொரையும் சிரிக்க வைத்தவருக்குக் கிடைத்த அங்கிகாரம் இந்த வசனம் .

இந்தக் கலைஞனுக்கு நன்றி சொல்வோம் !

இந்தக் கலைஞனைக் கொண்டாடுவோம் !

நன்றி : ஆனந்த விகடன் ,விக்கிப்பீடியா.

மேலும் படிக்க :

நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி !

ஜம்புலிங்கமே ஜடாதரா ...!

எங்கே தேடுவேன் ? எங்கே தேடுவேன் ?
..................................................................................................................................................................

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms