Showing posts with label கிரிக்கெட். Show all posts
Showing posts with label கிரிக்கெட். Show all posts

Tuesday, July 16, 2019

யோகத்தால் உலகக்கோப்பையை வென்றது இங்கிலாந்து !


இப்படியான ஒரு இறுதிப்போட்டி இனி நடைபெற வாய்ப்பில்லை எனச் சொல்லும் அளவிற்கு மிகவும் சுவாரசியமான, பரபரப்பான போட்டியாக 2019 உலககோப்பையின் இறுதிப்போட்டி அமைந்தது. ஆனால் போட்டியின் முடிவு எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அமையவில்லை.

அரையிறுதிக்கான தகுதிச்சுற்றில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் அரையிறுதியிலேயே வெளியேற்றப்பட்டுவிட்டன. தகுதிச்சுற்றில் முதலிடத்திலிருந்து தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோற்றதால் நான்காம் இடம் பிடித்து தட்டுத்தடுமாறி தான் நியூஸிலாந்து அரையிறுதி வாய்ப்பைப் பெற்றது. இங்கிலாந்து அணிக்கோ கடைசி இரண்டு முதல் சுற்று போட்டிகளையும் வென்றால் மட்டுமே அரையிறுதியில் நுழைய முடியும் என்ற நிலைமை. அந்த கடைசி இரண்டு போட்டிகளும் இந்தியாவிற்கும், நியூஸிலாந்திற்கும் எதிரானதாக இருந்தது. இந்தியாவுடனான போட்டியில் இந்தியா வெல்ல வாய்ப்பிருந்த போதும் மெத்தனமாக விளையாடி தோற்றது. கடைசி போட்டியில் நியூஸிலாந்தை எளிதாக வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது, இங்கிலாந்து.

முதல் அரையிறுதியில் இந்தியாவும் , நியூசிலாந்தும் மோதின. சமியை ஆடும் 11 ல் சேர்க்காதது, தொடர்ந்து வாய்ப்புக் கொடுக்கப்படாத தினேஷ் கார்த்திக்கை நெருக்கடியான சூழலில் நான்காவதாக இறக்கியது, தோனியை முன்பாகவே களமிறக்காதது போன்ற வியூக தவறுகளால் இந்திய அணி தோல்வியடைந்து வெளியேறியது. இலங்கைக்கு எதிரான போட்டியைப் போல நியூஸிலாந்து நிர்ணயித்த சுலப இலக்கை எளிதாக எட்டி விடலாம் என்ற இந்திய அணியின் கணக்கு தவறாகிப் போனது. இரண்டாவது அரையிறுதியில் ஜந்து முறை கோப்பையை வென்ற, இத்தனையாண்டு காலமும் அரையிறுதியில் தோல்வியையே சந்திக்காத ஆஸ்திரேலிய அணியை எளிதாக தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது, இங்கிலாந்து அணி.

இங்கிலாந்தின் இந்த தொடர் வெற்றிக்கு அந்த அணி மேற்கொண்ட ஒரு முக்கிய மாற்றமும் ஒரு காரணம். இரண்டாவது சுழற்பந்து வீச்சாளரான மோயின் அலியை நீக்கிவிட்டு மித வேகப்பந்து ஆல் ரவுண்டரான லியாம் பிளங்கட்டை அணியில் சேர்த்தது தான். இங்கிலாந்து பெற்ற தொடச்சியான வெற்றிகளில் பிளங்கட்டின் பங்களிப்பு அதிகம். நியூஸிலாந்து அணியும் இரண்டாவது சுழற்பந்து வீச்சாளரைச் சேர்க்காமல் மிதவேகப்பந்த ஆல்ரவுண்டரையே தொடர்ந்து தேர்வு செய்தது. இந்திய அணி ஒன்று மட்டுமே தொடர்ந்து இரண்டு முதன்மையான சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது. சமி மிகவும் சிறப்பாக செயல்பட்டும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இந்திய அணியும் சாகல் மற்றும் குல்தீப்பை நீக்கி விட்டு ஜடேஜா, சமி, பும்ரா, புவனேஸ்வர் ,பாண்டியா என விளையாடி இருந்தால் நியூஸிலாந்து இவ்வளவு ரன்களை சேகரித்து இருக்காது. நியூஸிலாந்து 239 எடுத்த நிலையில் சாகல் பத்து ஓவர்களில் 63 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தி இருந்தார். இவருக்கு பதில் சமி இறக்கப்பட்டிருந்தால் நிச்சயம் இவ்வளவு ரன்களை கொடுத்து இருக்க மாட்டார், இரண்டு மூன்று விக்கெட்டுகளையும் எடுத்து இருப்பார். இனிமேலாவது சாகல் மற்றும் குல்தீப்பை கண்மூடித்தனமாக நம்புவதை இந்திய அணி கைவிட வேண்டும்.

இறுதிப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து 241 ரன்களை மிகவும் கடினப்பட்டே திரட்டியது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது அரையிறுதி போல இங்கிலாந்து அணி இந்த இலக்கை எளிதாக எட்டிவிடும் என்றே பலரும் நினைத்திருப்பார்கள். ஆனால் முதல் அரையிறுதியில் இந்தியாவிற்கு அதிர்ச்சியளித்தது போலவே நியூஸிலாந்து அணி, இங்கிலாந்து அணிக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்தது. இங்கிலாந்து எளிதாக ரன்களை எடுக்க முடியவில்லை. மறுபக்கம் விக்கெட்கள் விழுந்த வண்ணம் இருந்தன. பென் ஸ்டோக்ஸூம், ஜோஸ் பட்லரும் அணியை சரிவிலிருந்து மீட்டனர். ஆனால் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை. பட்லர் ஆட்டமிழந்த பிறகு ஸ்டோக்ஸ் தனியாளாக போராடினார். இவர் தனியாளாக போராடுவது இந்த தொடரில் மூன்றாவது முறை. இலங்கைக்கு எதிராகவும், ஆஸ்திரேலியாவிற்கு எதிராகவும் இப்படித்தான் தனியாளாக போராடினார். இந்த வகையில் இவரை இங்கிலாந்து தோனி என குறிப்பிடலாம் போல.

ஜேம்ஸ் நிஷாம் வீசிய 49வது ஓவரில் பென் ஸ்டோக்ஸ் அவுட் ஆகியிருக்க வேண்டியது. ஸ்டோக்ஸ் தூக்கியடித்த பந்தை போல்ட் நன்றாக கேட்ச் செய்தார். ஆனால் எப்படியும் பவுண்டரி கயிறில் கால் வைக்காமல் சமாளித்து விடலாம் என்ற அதீத நம்பிக்கை தவறாகி போனது. பவுண்டரி கயிறில் கால் வைத்துவிட்டதால் சிக்ஸாக மாறியது. கேட்ச் பிடித்தவுடனேயே அருகிலிருந்த குப்திலிடம் தூக்கிப் போட்டிருந்தால் சிறப்பான கேட்சாக இருந்திருக்கும். நியூஸிலாந்து நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும். பவுண்டரி கயிறில் கால் வைத்த பிறகே குப்திலிடம் தூக்கிப் போட்டதால் சிக்ஸாகிப் போனது. இந்த கணத்திலிருந்து நியூஸிலாந்தின் வெற்றியை தீர்மானிக்கும் பொறுப்பு இவர்கள் இருவரிடமே வந்து சேர்ந்தது.

இங்கிலாந்து வெற்றி பெற 15 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆட்டத்தின் இறுதி ஓவரை போல்ட் வீசினார். முதலிரண்டு பந்துகளில் ரன்கள் எடுக்கப்படவில்லை. மூன்றாவது பந்து சிக்ஸராக மாறியது. 3 பந்துகளில் 9 ரன்கள் தேவை என்ற நிலையில் மூன்றாவது பந்தை குப்திலிடம் அடித்துவிட்டு இரண்டாவது ரன்னுக்கு ஓடினார், ஸ்டோக்ஸ். குப்தில் பீல்டிங் செய்து கீப்பரை நோக்கி எறிந்த பந்து ரன்அவுட்டிலிருந்து தப்ப டைவ் அடித்த ஸ்டோக்ஸின் பேட்டில் பட்டு பவுண்டரியாக மாறியது. விதிப்படி அந்த பந்துக்கு 5 ரன்கள் தான் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் நடுவர்கள் தவறுதலாக 6 என கொடுத்துவிட்டனர். அதனால் 2 பந்துகளில் 3 ரன்கள் என்ற எளிதான இலக்காக மாறியது. 5வது பந்தில் ஒரு ரன் எடுத்த நிலையில் இரண்டாவது ரன்னிற்கு ஓடிய போது ரஷீத் ரன்அவுட் ஆனார். கடைசி 1 பந்தில் இரண்டு ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டது, மார்க்வுட் ரன் அவுட் ஆனார், இங்கிலாந்து ஆல்அவுட் ஆனது. போட்டி சமனில் முடிந்தது.

அந்த குப்திலின் ஓவர் துரோவிற்கு கொடுக்கப்பட்ட ரன்கள் போட்டி சமனில் முடிய காரணமாகிவிட்டது. எதிரணி பேட்ஸ்மேன் மீது பந்து படாத நிலையில் ஓவர் துரோவிற்கு ரன்கள் கொடுப்பது நியாயமானது. துரோவின் போது எதிரணி பேட்ஸ்மேன் மீது பட்ட நிலையில் ஒவர் தரோவாக மாறும் போது அதற்கு ரன்கள் கொடுப்பது நியாயமற்றது. இந்த விதியும் திருத்தப்பட வேண்டும்.

நியூஸிலாந்திற்கான சூப்பர் ஓவரை போல்ட் வீசமாட்டார் என நினைந்த சூழலில் மீண்டும் போல்ட்டே வீசினார். இங்கிலாந்து சார்பாக ஸ்டோக்ஸூம், பட்லரும் களமிறங்கினார்கள். மொத்தம் 15 ரன்கள் எடுத்தார்கள். அதுவும் சரியான களத்தடுப்பு அமைக்கப்பட்டிருந்தால் கடைசி பந்தில் அடிக்கப்பட்ட பவுண்டரி தடுக்கப்பட்டிருக்கும். 16 ரன்கள் இலக்காக நியூஸிலாந்து களமிறங்கியது. ஜேம்ஸ் நிஷாமும், மார்ட்டின் குப்திலும் களமிறங்கினார்கள். குப்திலின் திறமையை சந்தேகிக்க முடியாது என்றாலும் இந்த தொடரில் சரியாக ஆடாத நிலையில் அவரை தேர்வு செய்தது தவறானதாகும். இங்கிலாந்து சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர் பந்து வீசினார். நிஷாம் மிகவும் நன்றாக விளையாடினார்.கடைசி 3 பந்துகளில் 5 ரன்கள் தேவை. நான்காவது பந்தில் இரண்டு ரன்கள் எடுக்கப்பட்டது. 2 பந்துகளில் 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஐந்தாவது பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டது. முதல் 5 பந்துகளையுமே நிஷாமே சந்தித்து 14 ரன்கள் எடுத்தார். கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் அந்த பந்தை எதிர்கொண்ட குப்தில் பந்தை ஜேசன் ராயிடம் அடித்துவிட்டு முதல் ரன் எடுத்த பிறகு இரண்டாவது ரன்னுக்காக ஓடும் போது ஜேசன் ராய் பந்தை, கீப்பரான பட்லரிடம் எறிய குப்தில், பட்லரால் ரன் அவுட் செய்யப்பட்டார். 50 ஓவர் போட்டி சமனில் முடிந்தது போல, சூப்பர் ஓவரும் சமனில் முடிந்தது. இப்படி இனி எப்போது நடக்கும் என்று தெரியவில்லை. இங்கிலாந்து இந்த நிலையை அடைய ஸ்டோக்ஸூம், பட்லருமே முக்கிய காரணம். போட்டியின் போது அடிக்கப்பட்ட பவுண்டரிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இரு அணிகளும் 50 ஓவர்களிலும், சூப்பர் ஓவரிலும் சமமான ரன்கள் எடுத்த பிறகும், வெற்றியை பவுண்டரிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் தீர்மானித்தது விளையாட்டு உணர்விற்கு எதிரானது. ஏற்கனவே உள்ள விதி தான் என்றாலும் இனி கட்டாயம் இந்த விதி திருத்தப்பட வேண்டும். இது போன்ற சூழல் முன்பு அமையாததால் இந்த விதி குறித்தான விமர்சனங்கள் எழவில்லை. ஆனால் இப்போது கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இனிமேலாவது இந்த விதியைத் திருத்த வேண்டும். உலகக்கோப்பை இறுதிப்போட்டி என்பதால் வெற்றியை இன்னொரு சூப்பர் ஓவரின் மூலம் தீர்மானித்து இருக்கலாம்.

இறுதிப்போட்டியில் இரு அணிகளும் வெல்லாத சூழலில் இப்போதைக்கு கோப்பை இங்கிலாந்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. அவ்வளவு தான். இறுதிப்போட்டியில் எந்த அணியும் தோற்கவில்லை. எல்லோரும் எதிர்பார்த்தது போல இந்தியாவும், இங்கிலாந்தும் இறுதிப்போட்டியில் மோதியிருந்தால் கூட ஆட்டம் இவ்வளவு சுவாரசியமாக இருந்திருக்குமா ? தெரியாது. உண்மையிலேயே முடிவைத் தவிர, மிகவும் சிறந்த இறுதிப்போட்டி இது தான்.

இங்கிலாந்து அணியை இங்கிலாந்து அணி மட்டுமே என மதிப்பிட்டுவிட முடியாது. தற்போதைய இங்கிலாந்து அணியின் கேப்டனாக இருக்கும் மோர்கன் கூட அயர்லாந்துகாரர் தான். அயர்லாந்து கிரிக்கெட் அணிக்காக 23 போட்டிகளில் விளையாடியவர் தான். இங்கிலாந்து கவுண்டி அணிக்காக விளையாடியதில் கவனம் பெற்று இங்கிலாந்து அணியில் நுழைந்து ,இங்கிலாந்து அணியின் கேப்டனாக மாறி அந்த அணிக்கு உலகக்கோப்பையையும் பெற்றுக்கொடுத்துவிட்டார். இதே போல பென் ஸ்டோக்ஸ் நியூஸிலாந்தில் பிறந்தவர், ஜோப்ரா ஆர்ச்சர் மேற்கு இந்திய தீவுகளில் பிறந்தவர், ஜேசன் ராய் தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர். இப்படியாக பல்வேறு காரணங்களுக்காக இங்கிலாந்தில் குடிபெயர்ந்தவர்களால் திறமை இருக்கும்பட்சத்தில் இங்கிலாந்து அணியில் இடம்பெற முடிகிறது.

திராவிட மண், பெரியார் மண் என்று சொல்லிக்கொண்டிருக்கும் தமிழகத்தில் இருந்து இன்று வரை பார்ப்பனர் அல்லாத ஒருவர் இந்திய அணிக்காக விளையாடவே இல்லை. பெரும் பாலும் இந்திய கிரிக்கெட் அணியில் பார்ப்பனர்களே அதிகம் இடம் பெறுகின்றனர். சாதி ஆதிக்கம் அதிகம் நிலவும் இடமாக இந்திய கிரிக்கெட் இருக்கிறது. இங்கே திறமையெல்லாம் இரண்டாம்பட்சம் தான். இந்த வாழ்வு தரும் நெருக்கடிகளிலிருந்து தப்பிக்க கிரிக்கெட் பார்ப்பது என்பது உதவுகிறது. பேதங்களை மறந்து இந்தியர்களை ரசிகர்கள் என்ற அளவில் கிரிக்கெட் ஒன்றிணைக்கிறது. பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்கள் எந்த அணி விளையாண்டாலும் பார்க்கக்கூடியவர்களாகவே இருக்கின்றனர்.

ஓவர் துரோ விதியும், பவுண்டரிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் வெற்றியைத் தீர்மானிக்கும் விதியும் திருத்தப்பட வேண்டும்.

கிரிக்கெட் வாழ்க !


மேலும் படிக்க :

Thursday, July 11, 2019

வெளியேறியது இந்திய கிரிக்கெட் அணி !


பெரும் நம்பிக்கையை உருவாக்கிய இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்திடம் வீழ்ந்துவிட்டது. கோலியின் தவறான வியூகங்களே தோல்விக்கு காரணமாக இருந்துவிட்டது. தோனி அணித்தலைவராக இருந்த போது தோற்றாலும், வென்றாலும் பெரும்பாலும் ஆடும் 11 வீரர்களை மாற்றவே மாட்டார். இப்படி வீர்களை மாற்றாமலேயே விளையாடியது எல்லாப் போட்டிகளிலும் தோனிக்கு கைகொடுக்கவில்லை.இதனாலேயே தோனியின் அணித்தலைமை விமர்சிக்கப்பட்டது. கோலி பெரும்பாலும் ஆடும் 11 வீரர்களை மாற்றிக்கொண்டே இருந்தார். இந்த மனநிலை நிறைய போட்டிகளில் கைகொடுத்தாலும் பெரிய அளவிலான தொடர்களில் கோலிக்கு கைகொடுக்கவில்லை.

சாகல் , குல்தீப் மற்றும் ராகுலை அளவிற்கு அதிகமாக கோலி நம்புகிறார். இவர்களை விட திறமையானவர்கள் வெளியே நிறைய இருக்கிறார்கள். அணியிலுள்ள மற்ற வீரர்களின் திறமையான ஆட்டத்தால் இவர்களின் குறைகள் வெளியே தெரியவில்லை. வெளியே தெரிந்தாலும் கோலி இவர்களை நீக்க தயக்கம் காட்டுகிறார். இன்னும் ஒரு நாள் போட்டிகளில் விளையாட தகுதி இருந்தும் அஸ்வின் ஓரம் கட்டப்பட்டார். இந்த உலககோப்பை தொடங்கும் போதும் நாலாவது வீரராக தினேஷ் கார்த்திக்கை இறக்காமல் ராகுலையே நான்காவதாக இறக்கினார். தவான் காயம், ராகுல் தொடக்கவிரராக மாறினார். விஜய் சங்கர் நான்காவதாக இறக்கப்பட்டார். விஜய் சங்கர் காயம், தினேஷ் கார்த்திக்கை நான்காவதாக இறக்குவதற்கு பதிலாக ரிசப் பான்டை நான்காவதாக இறக்கி மீண்டும் தவறு செய்தார்.

ராகுலை விட ரகானே அந்த இடத்திற்கு பொறுத்தமான வீரராக இருந்திருப்பார். பான்ட் நான்காவது இடத்திற்கு பொருத்தமான ஆட்டக்காரர் இல்லை. மணிஷ் பாண்டே நான்காவது இடத்திற்கு பொருத்தமாக இருந்திருப்பார். ஆனால் அவருக்கு கேதர் ஜாதவ் அளவிற்கு வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. வெளிநாடுகளில் விளையாடும் போட்டிகளிலும் இரண்டு முதன்மையான  சுழற்பந்து வீச்சாளர்களை களமிறக்குவது சரியான அணுகுமுறையல்ல.

சிறப்பாக விளையாடிய பிறகும் முகமது சமியை வெளியே உட்கார வைத்தது பெரும் தவறு. தொடர்ந்து சமி விளையாடி இருக்க வேண்டும். கண்டிப்பாக சாகல், குல்தீப்பை விட சமி சிறப்பாகவே விளையாடியிருப்பார். உலககோப்பை முழுவதுமே பந்துவீச்சில் ஓரளவு சமாளித்து விட்டார்கள். இந்தியா பெற்ற இரண்டு தோல்விகளும் சேசிங் குறைபாட்டால் நிகழ்ந்தது. இத்தனைக்கும் இரண்டுமே சேசிங் செய்திருக்க வேண்டியவை. தேவையில்லாத போதும் பேட்டிங் ஆர்டரை மாற்றியதாலேயே இரண்டு தோல்விகளும் கிடைத்திருக்கின்றன.

பாண்டியாவை முன்கூட்டியே இறக்க வேண்டிய தேவை இல்லாத போதும் மீண்டும், மீண்டும் முன்கூட்டியே இறக்கப்படுகிறார். நியூஸிலாந்திற்கு எதிரான போட்டியிலும் பாண்டியா இறங்கிய இடத்தில் (எப்போதும் தோனி இறங்கும் இடம் ) தோனி இறங்கியிருந்தால் நிச்சயம் இந்தியா வென்றிருக்கும். இனிமேலாவது பேட்டிங் ஆர்டரை தேவையில்லாத போதும் மாற்றும் மனநிலையை கோலி, கைவிட வேண்டும். கோலி தனது பேட்டிங் ஆர்டரை மட்டும் எப்போதும் மாற்றுவதேயில்லை. 48 வது ஓவரில் முதல் விக்கெட் விழுந்தாலும் கோலியே இறங்குகிறார். அப்போது பாண்டியாவை இறக்குவது பற்றி கோலி சிந்திப்பதில்லை. அணி தோற்றால் மட்டும் கேப்டனை விமர்சிக்கிறார்கள் என பொத்தாம் பொதுவாக சொல்லிவிட முடியாது. நியூஸிலாந்திற்கு எதிரான போட்டியில் பேட்டிங் ஆர்டர் எப்போதும் போல் இருந்திருந்து தோற்று இருந்தால் கோலியை விமர்சனம் செய்ய வேண்டிய தேவை இருந்திருக்காது.

ஜடேஜா முந்தைய தொடரில் தனது திறமையை நிரூபித்ததாலேயே உலக கோப்பை அணியில் இடம் பெற்றார். சாகலும், குல்தீப்பும் கோலியின் கண்களை மறைத்ததால் ஜடேஜா இடம்பெறவில்லை. இடம் பெற்ற இரண்டு ஆட்டங்களில் 41 ரன்களை களத்தடுப்பின் மூலம் தனது அணிக்காக சேமித்து இருக்கிறார். 9 போட்டிகளில் விளையாடியவர்கள் கூட இவ்வளவு ரன்களை சேமிக்கவில்லை. பந்துவீச்சிலும் நாற்பது ரன்களுக்கும் குறைவாகவே விட்டுக்கொடுத்து விக்கெட்களும் வீழ்த்தியிருக்கிறார். பேட்டிங்கில் கிடைத்த ஒரு வாய்ப்பும் நெருக்கடியாக (92-6 ) அமைந்தாலும் அணியை வெற்றிக்கு அருகில் (208-7  இலக்கு 240) கொண்டு வந்த பிறகே ஆட்டமிழந்தார். பாண்டியா போல ஜடேஜாவையும் மூன்று விதமான போட்டிகளிலும் களமிறக்க முடியும். இதே போல அஸ்வினுக்கும் உலக கோப்பை தொடருக்கு முன்பாக வாய்ப்பளித்திருக்க வேண்டும்.

எல்லா கால கட்டத்திலும் அணித்தேர்வில் கேப்டன்களின் தலையீடு இருக்கவே செய்யும். அதே போல யார் கேப்டனாக இருந்தாலும் குறிப்பிட்ட வீரர்களை மட்டும் தேர்ந்தெடுத்து ஆதரிக்கும் மனநிலையும் தொடர்ந்து இருந்து வருகிறது. ஆனால் ஒரு அணியாக கூட்டாக இணைந்து விளையாடுவதில் கோலியின் அணியே முன் நிற்கிறது. அணி வீரர்களை தேர்ந்தெடுப்பதிலும், பேட்டிங் ஆர்டரை மாற்றுவதிலும் கோலி கவனம் செலுத்த வேண்டும்.

தோனியின் தலைமைப்பண்பை விமர்சிக்க முடியும். ஆனால் அவரது விக்கெட் கீப்பிங் மற்றும் அவரது பேட்டிங்கை நாம் விமர்சிக்கவே முடியாது. இந்திய கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ஒரு கேப்டனாக குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்ற பிறகும் சாதாரண வீரராக அணியில் தொடர்வது என்பது தோனியால் மட்டுமே சாத்தியமாகியிருக்கிறது. தோனி களத்தில் இருக்கும் வரை வெற்றி நம்மிடம் இல்லை என்பது தான் இன்று வரை எதிரணிகளின் மனநிலை. இதை தனது கடைசி கட்டம் வரை தக்க வைத்திருப்பது தான் தோனியின் சாதனை. ஒரு கேப்டனாகவும் , ஒரு விக்கெட் கீப்பராகவும், ஒரு பேட்ஸ்மேனாகவும் தோனியின் சாதனை மிகவும் பெரியது. சொந்த சாதனைகளுக்காக விளையாடிய எத்தனையோ பேர் இருக்கலாம், ஆனால், காலமெல்லாம் அணியின் வெற்றிக்காக மட்டுமே உழைத்தது தோனி மட்டுமே. தோனி ஒரு சகாப்தம்.

கோலி அடுத்த உலக கோப்பை வரை கேப்டனாக தொடர்வரா ? தெரியவில்லை. ஆனால் ஒரு வீரராக நிச்சயம் விளையாடுவார். காத்திருப்போம் 2023 வரை ! 

மேலும் படிக்க :

தோனி வாங்கிய சச்சின் உலககோப்பை !

சினிமா - கிரிக்கெட் - இந்தியா !

கிரிக்கெட் !

Friday, March 31, 2017

சவாலான வெற்றி !



இந்திய கிரிக்கெட் அணி எப்போதுமே டெஸ்ட் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடியது . டெஸ்ட் போட்டிகளுக்கென்று தனிப்பட்ட திறமையாளர்கள் தொடந்து உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள். 90 களுக்குப் பிறகு டிராவிட் , கும்ளே , லக்ஷ்மன் , ஹர்பஜன் , புஜாரா , அஸ்வின் என டெஸ்ட் போட்டிகளுக்கான தனித்த திறமையாளர்கள் தொடர்ந்து உருவாகிறார்கள். இவர்கள் , மற்ற வடிவ கிரிக்கெட் போட்டிகளில் பங்கெடுத்தாலும் டெஸ்ட் போட்டிகளாலேயே நினைவுகூறப்படுகிறார்கள். காரணம் , இவர்கள் , டெஸ்ட் போட்டிகளில்  நீடித்த திறமையை வெளிபடுத்துவது தான். இவர்களுக்கு மற்ற வீரர்கள் ஓரளவிற்கு ஒத்துழைப்பு கொடுத்தாலே போதும் போட்டிகளில் எளிதாக வென்று விடலாம்.

ஆஸ்திரேலிய தொடருக்கு முன்பு இங்கிலாந்து தொடர் தான் கடினமானது என நினைத்துக் கொண்டிருந்தோம் . இங்கிலாந்து தொடர் கடினமாக இருந்தாலும் தொடரை இந்திய அணி முழுமையாக கைபற்றியது. ஆஸ்திரேலிய தொடரின் ஆரம்பமே இந்திய அணிக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. இரண்டு இன்னிங்ஸ்களிலுமே நூத்திச் சொச்ச ரன்களுக்கு ஆட்டமிழந்து முதல் டெஸ்ட்ல் மோசமான தோல்வியைச் சந்தித்தது. சமீபத்திய தொடர்களில் முதன் முறையாக பேட்ஸ்மென்கள் , இரண்டு இன்னிங்ஸ்களிலும் சரியாக ஆடவில்லை. அதனாலேயே மோசமான தோல்வியைச் சந்தித்தது.

நம்பர் 1 அணியாக இருக்கும் இந்திய அணிக்கு இத்தொடர் கௌரவப் பிரச்சனையாக மாறியது. எப்படியாவது இந்த தொடரை வெனறால் மட்டுமே இதுவரை பெற்ற வெற்றிகளுக்கு பெருமை என்ற நிலை உருவாகியது. ஆஸ்திரேலியாவும் இந்த எதிர்பாராத வெற்றியின் மூலம் பெருமகிழ்ச்சி அடைந்தது. இந்தியாவில் தொடரை வெல்ல நல்ல வாய்ப்பாக இந்த தொடரை மாற்ற வேண்டும் என நினைத்தது. இதனால் இந்த தொடர் இரண்டு அணிகளுக்கும் முக்கியமானதாக மாறியது.

பொதுவாகவே ஒரு டெஸ்ட் தொடரில் 0-1 என பின்தங்கிய நிலையில் அடுத்த டெஸ்டில் விளையாடுவது சவாலானது. மனஉறுதிடன் விளையாடினால் மட்டுமே வெற்றி கிடைக்கும். முதல் இன்னிங்ஸ்ல் நூறு ரன்களுக்கும் மேலாக பின்தங்கியிருந்து டெஸ்ட் போட்டியை வெல்வது எப்போதும் நிகழாது. இந்த தொடரின் முக்கிய திருப்புமுனை இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸ்ல் நிகழ்ந்தது. புஜாரா - ரகானே இணைந்து சேர்த்த ரன்கள் முக்கியமானதாக மாறியது. 188 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதற்கு இந்திய அணியின் மனஉறுதியே காரணம். இரண்டு போட்டிகள் முடிவில் தொடர் 1-1 என சமநிலையடைந்தது.

இந்நிலையில் தொடங்கிய மூன்றாவது டெஸ்டிலும் திருப்பங்கள் நிகழ்ந்தன. முதல் இன்னிங்ஸ்ல் ஸ்மித் , மேக்ஸ்வெல் சதங்களால் 450 ரன்களுக்கு மேல் எடுத்தது. மேக்ஸ்வெல் அதிக பந்துகளுக்கு தாக்குப்பிடித்த முதல் போட்டியாக இது அமைந்தது. அடுத்து ஆடிய இந்திய அணி புஜாரா -சகா இணைந்து சேர்த்த ரன்களின் உதவியுடன் 603 ரன்கள் எடுத்தது. புஜாரா இரட்டை சதமடித்தார். அடுத்து 152 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி ஒரு கட்டத்தில் 63 /4 என தத்தளித்தது. ஷான் மார்ஷும் , கேன்ட்ஸ்கோம்ப் ம் ஆஸ்திரேலிய அணியை தோல்வியிலிருந்து காப்பாற்றினர். மூன்றாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது. மூன்று போட்டிகள் முடிவிலும் தொடர் 1-1 என்றே தொடர்ந்தது.

சமீப காலங்களில் ஒரு டெஸ்ட் தொடர் இந்த அளவிற்கு கவனம் பெற்றது இந்த தொடரில் தான்.
ஒவ்வொரு நாளும் , ஒவ்வொரு செசனும் நீயா ? நானா ? என்றே தொடர்ந்தது. விராட் கோலியைச் சுற்றி சரச்சைகளும் தொடர்ந்தன. காயம் காரணமாக கோலி விலகிய நிலையில் ரகானே தலைமையில் இந்திய அணி களமிறங்கியது. தொடரின் வெற்றியை தீர்மானிக்கக்கூடிய நான்காவது டெஸ்டில் டாஸில் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 300 ரன்கள் எடுத்தது. இடது கை சைனா மேன் பந்துவீச்சாளராக களமிறங்கிய குல்தீப் யாதவ் 4 விக்கெட்கள் கைப்பற்றி ஆஸ்திரேலிய அணியின் ரன்குவிப்பைக் கட்டுப்படுத்தினார். அடுத்து களமிறங்கிய இந்திய அணி ஜடேஜாவின் கடைசி நேர அதிரடியால் 30 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்றது. அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. குறிப்பாக ஸிமிதை புவனேஸ்வர் குமார் போல்டாக்கியது திருப்புமுனையானது. ஸிமித் மட்டும் போல்டாகவில்லை. அந்த இடத்திலிருந்து ஒட்டு மொத்த ஆஸ்திரேலிய அணியே போல்டானது போல 137 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை 2-1 என கைபற்றியது.

கடந்த தொடர்களில் பெருமளவு ரன்களைக் குவித்த கோலியின் பங்களிப்பு இல்லாமலேயே இந்த தொடரை இந்திய அணி வென்றிருப்பது தான் சாதனை. அதே நேரத்தில் ரன் குவிப்பிற்கு ஸிமிதை மட்டுமே ஆஸ்திரேலிய அணி நம்பியிருப்பதும் தெளிவாக தெரிந்தது. இந்திய அணியின் இந்த தொடர் வெற்றிகளுக்கு காரணம் , வீரர்களின் கூட்டு முயற்சி தான். சுதந்திரமாக ஒருகிணைந்து விளையாடி வருவதன் மூலமே வீரர்களின் தனிப்பட்ட திறன்கள் வெளிப்படுகின்றன. ஒருவர் சரியாக விளையாடா விட்டாலும் மற்றொருவர் அதை சரிசெய்து அணியை சமநிலைக்கு கொண்டு வந்து விடுகிறார். அதனாலேயே நான்காவது டெஸ்ட்டில்  அணித்தலைவராக ரகானேவால் சிறப்பாக செயல்பட முடிந்தது.

இந்த தொடரில்  ராகுல் , புஜாரா , ஜடேஜா , உமேஷ் யாதவ் ஆகியோர் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டனர். அஸ்வின் , விஜய் , ரகானே , சகா ஆகியோர் அவர்களுக்கு உறுதுணையாக செயல்பட்டனர். அதிலும் ஜடேஜாவிடம் நல்ல முதிர்ச்சி தெரிந்தது. இந்த தொடருக்கு முன்பு வரை பேட்டிங்கில் அவ்வளவாக பங்களிப்பு செய்யாத ஜடேஜா இந்த தொடரில் முக்கியமான கட்டங்களில் சிறப்பான பங்களிப்பைச் செய்தார். அதுவுமில்லாமல் இந்த தொடரில் அதிக விக்கெட்களை கைபற்றியதும் அவர் தான். ராகுல், தொடக்க வீரராக தொடர் முழுவதுமே சிறப்பாக விளையாடினார். புஜாரா, இரண்டு டெஸ்களில் பல பேர் வேலைகளை ஒற்றை ஆளாகச் செய்தார். இந்த தொடரில் வென்றதற்கு புஜாராவின் நேர்த்தியான ஆட்டம் முக்கிய காரணம்.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு முன்பை விட சிறப்பாக மேம்பட்டிருக்கிறது. இந்த தொடர் முழுவதுமே ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அதிலும் உமேஷ் யாதவ் ன் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் திணறினர். இந்த தொடரில் உமேஷ் யாதவ் ன் பங்களிப்பும் முக்கியமானது. விக்கெட் கீப்பர் சகாவும் முக்கியமான கட்டங்களில் சிறப்பாக ஆடினார்.

மானப்பிரச்சனையாக மாறிப்போன இந்த தொடரில் வென்றதன் மூலம் உலகின் நம்பர் 1 அணி என்ற கௌரவத்தை தக்கவைத்துக் கொண்டது. கடந்த தொடர் வெற்றிகளை விட இந்த தொடர் வெற்றியே சவாலானது.

இந்த மாதிரியான தொடர்களே  டெஸ்ட் போட்டிகளை உயிர்ப்புடன் வைத்திருக்கும் !
   

Wednesday, February 19, 2014

தோனியின் மனோபாவமும் இந்தியக் கிரிக்கெட் அணியும் !

இந்திய கிரிக்கெட் வரலாறு இரண்டு இடங்களில் தோனியின் பெயரை அழுத்தமாக பதிவு செய்யும் . ஒன்று , அனைத்து சர்வதேச கோப்பைகளையும் வென்ற இந்தியாவின் சிறந்த அணித்தலைவர் .இரண்டு ,தனி ஒரு நாட்டுக்கு எதிரான வெளிநாட்டுப் பயணங்களில் மோசமான தோல்விகளை அதிகளவு  சந்தித்த இந்தியாவின் அணித்தலைவர் . இந்திய கிரிக்கெட் அணி , 1970 களில் கத்துக்குட்டி அணியாக சர்வதேச போட்டிகளில்  விளையாடி மோசமான தோல்விகளை சந்தித்த போது  அப்போது யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை . வளரும் அணி தொடர்ந்து தோற்பதை ஏற்றுக் கொள்ள முடிகிறது . அந்த அணி வெற்றி பெற முயற்சிப்பதே சாதனையாக பார்க்கப் படுகிறது . ஒரு நாள் போட்டியில் சாம்பியன் , டெஸ்ட் மற்றும் 20-20 போட்டிகளில் உலகத்  தரவரிசையில் இரண்டாம் இடம் பெற்றுள்ள ஒரு அணி தொடர்ந்து மோசமாக தோற்பது தான் இந்திய ரசிகர்களால்  மட்டுமல்ல உலக கிரிக்கெட் ரசிகர்களாலும் ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது.

கிரிக்கெட் என்பது குழு விளையாட்டு என்றாலும் வெற்றி, தோல்வி இரண்டுக்கும் அணித்தலைவரே பொறுப்பேற்கிறார் . வெற்றிகளை குவித்த போது தோனியைத்  தலையில் வைத்து கொண்டாடினோம் .தற்போது அதே தோனி தொடர் தோல்விகளை சந்திக்கும் போது நமது உதடுகள்  அவரை ஏசுகின்றன . இந்த நிலை விரைவில் மாறி இந்திய அணி வெற்றிகளைக் குவிக்கும் போது நாம் மீண்டும் தோனியைப் புகழ ஆரம்பித்து விடுவோம் . முன்பு இங்கிலாந்திலும் ,ஆஸ்திரேலியாவிலும் அடைந்த மோசமான தோல்விகளுக்கு ( இரண்டு நாடுகளிலும் நான்கு டெஸ்டிலும் தோல்வி ) நன்றாக செயல்படாத வீரர்களை பழைய சாதனைகளுக்காக தொடர்ந்து தேர்ந்தெடுத்த தேர்வுக்குழுவினர் தான் காரணம் . அடுத்ததாக நடந்த சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பைக்கு முற்றிலும் புதிய அணியை  ( IPL போட்டிகளில் சிறப்பாக விளையாடியவர்கள் ) தேர்வு குழு தேர்ந்தெடுத்தது. அதன் விளைவாக சாம்பியன்ஸ் கோப்பையை அசத்தலாக வென்றது . நான் இதுவரை பார்த்த கிரிக்கெட் தொடர்களில் ,ஒரு தொடர் முழுவதும் இந்தியா சிறப்பாக பந்துவீசியது கடந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் மட்டுமே .20 ஓவராக குறைக்கப்பட்ட இறுதிப் போட்டியில் ( இலக்கு 126 )கூட பந்துவீச்சால் தான் இந்தியா வென்றது . அதன் பிறகு இந்தியாவில் நடந்த போட்டிகளில் ஆஸ்திரேலியாவை நான்கு டெஸ்ட்களிலும் தோற்கடித்தது . பிறகு நடந்த  7 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலும் ஆஸ்திரேலியாவை வென்றது . சச்சினுக்காக தென்னாப்பிரிக்கத்  தொடரைச்  சிதைத்து மேற்கு இந்தியத் தீவுகள் உடனான டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர் திடீரென்று உருவாக்கப்பட்டது . அதிலும் இந்தியா வென்றது . போதிய பயிற்சியும் , அனுபவமும் இல்லாததால் தென்னாப்பிரிக்கத் தொடரில் மோசமான தோல்விகளை இந்தியா சந்தித்தது .

நியுசிலாந்தில் இவ்வளவு மோசமான தோல்விகள் எதிர்பார்க்காதது தான் . தோல்விகளுக்கு 11 பேர் கொண்ட அணித்தேர்வும் ,தோனியின் தற்காப்பு மனோபாவமும் ஒரு காரணம் . 5 ஒரு நாள் போட்டிகள் 2 டெஸ்ட் அனைத்திலும் டாஸ் வென்றாலும் ஒரு  போட்டியைத் தவிர மற்ற அனைத்திலும் முதலில் பந்துவீச்சையே தேர்வு செய்தார் . இந்த அணுகுமுறை வெற்றி தராதபோதும் மீண்டும் மீண்டும் பந்துவீச்சையே ஏன் தேர்வு செய்தார் என்று தெரியவில்லை? தோனிக்கு ,மட்டையாளர்கள் ,பந்துவீச்சாளர்கள் யார் மீது நம்பிக்கை இல்லை அல்லது  யாரை அதிகம் நம்புகிறார் குழப்பமாக இருக்கிறது .திறமை இருந்தாலும் புதிய வீரர்களைக்  களமிறக்குவதில் தோனி மிகவும் அதிகப்படியான தயக்கம் காட்டுகிறார் . கடந்த IPL தொடரிலும் இதையே செய்தார் . பத்ரிநாத் சிறப்பாக விளையாடாத போதும் இறுதிப் போட்டி வரை தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தார் . பாப் டு பிளிசிஸ் ,பாபா அபராஜித் போன்ற வீரர்களுக்கு ஒரு வாய்ப்பு கூட கொடுக்கவில்லை . இந்த ஆண்டும் இந்த இரண்டு வீரர்களையும் சென்னை வாங்கியுள்ளது . முதலில் சென்னை அணி இந்த IPL ல் பங்கேற்பதே கேள்விக்குறி தான். கோடிகளிலே புரண்டாலும் சூது கவ்வத்தான் செய்கிறது .இது சூதின் குணமா அல்லது மனிதனின் பேராசையா !அதிகாரத்திற்கும் நீதிக்கும் இடையேயான போட்டியில் எது வெல்லும் என்று தெரியவில்லை . ராஜஸ்தான் அணியின் அணுகுமுறை தான் கோடிகள் புரண்டாலும்   IPL போட்டிகளை அர்த்தப்படுத்துகிறது . ரஹானே ,ஸ்டுவர்ட் பின்னி , சஞ்சு சாம்சன்  ,தாம்பே என்று வயது வித்தியாசம் பார்க்காமல் திறமைக்கு மதிப்புக் கொடுக்கிறது . ரகானே ,ஸ்டுவர்ட் பின்னி இந்திய அணியில் இடம்பெற்று விட்டனர் .  விரைவில் சஞ்சு சாம்சனும் இடம் பெறுவார் .

பந்து வீச்சாளர்களைப்  பயன்படுத்துவதிலும் தோனியின் அணுகுமுறை பெரும்பாலும் வெற்றி தருவதில்லை . கடந்த இரண்டு ,மூன்று தொடர்களிலும்  இந்தியப்  பந்துவீச்சு எதிரணிக்கு ஏந்தவித நெருக்கடியையும் தரவில்லை . அனுபவமின்மை ஒரு காரணமாக  இருந்தாலும் தோனியின் அணுகுமுறையும் ஒரு காரணம் . சுழற்பந்து எடுபடும் மைதானங்களிலும் வேகப்பந்து வீச்சிற்கே முன்னுரிமை கொடுக்கிறார் .பகுதிநேரப் பந்துவீச்சாளர்களைப் பெரும் தயக்கத்துடன் தான் பந்து வீச அழைக்கிறார். அவர்கள் சிறப்பாகவே பந்து வீசினாலும் முழுமையாக பயன்படுத்துவதில்லை.கள வியூகம் அமைப்பதிலும் தோனி பின்தங்கியே உள்ளார். இவ்வளவிற்கு பிறகும் இந்தியா பெற்ற வெற்றிகளுக்கு தோனி, வீரர்களிடம் வைத்திருக்கும் அதிகப்படியான நம்பிக்கை தான் காரணம் . இதற்கு முந்தைய அணித்தலைவர்கள் தோனி அளவிற்கு வீரர்களை நம்பியதில்லை . தோனியின் இந்த நம்பிக்கை தான், அவருக்கு  இவ்வளவு வெற்றிகளையும் , பேரையும் ,புகழையும் பெற்றுத்தந்துள்ளது .t20 இறுதிப்போட்டியில் கடைசி ஓவரை வேறு அணித்தலைவராக இருந்த்திருந்தால் ஜோகிந்தர் சர்மாவை கண்டிப்பாக பந்துவீச அழைத்திருக்க மாட்டார் . ஆனால் ,தோனியின் நம்பிக்கை வென்றது .
தோனிக்கு பெரிய வெற்றிகளைப் பெற்றுத்தந்த இந்த அதிகப்படியான நம்பிக்கை தான் தற்போது தோல்விகளையும் பெற்றுத்தருகிறது. குறைவான திறமை உள்ளவர்களிடமிருந்தும் அதிகப்படியான திறமையை எதிர்பார்த்து ஏமாந்து போகிறார்.

அணித்தேர்வு :

கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவிலிருந்து 15 பேரைத் தேர்வு செய்வது மிகவும் சவாலானது. தேர்வுக்குழு இந்தப்பணியைத் திறம்படவே செய்கிறது . உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடுபவர்கள் தேசிய அணியில் இடம்பெறுகின்றனர். முன்பை விட தற்போது அணித்தேர்வில் வெளிப்படைத்தன்மை தெரிகிறது.

11 பேர் தேர்வு :

களமிறங்கும் 11பேரைத் தேர்ந்தெடுப்பதில் கடந்த இரண்டு , மூன்று தொடர்களாக தோனி சொதப்பி வருகிறார்.சரியான 11 பேரை தேர்வு செய்து விட்டாலே அணித்தலைவரின் பாதிப்பணி முடிந்துவிடும். வெற்றி பெற்றாலோ,  தோல்வி அடைந்தாலோ முதலில் தீர்மானித்த அணி தான் தொடர் முழுவதும் விளையாடுகிறது. நியுசிலாந்து தொடர் ஆரம்பிக்கும் போதே தோனி சொல்கிறார் " பரிசோதனை முயற்சிகளில் இறங்க மாட்டோம் " .சரி, அப்படி பரிசோதனை முயற்சி எதுவும் செய்யாததால் நியுசிலாந்து தொடரில் இந்தியா பெற்றது என்ன ? தோல்விகள் மட்டும் தான் . அதே வேளையில் நியுசிலாந்து அணி தொடர் முழுவதும் பரிசோதனை முயற்சிகளில் இறங்கியது . ஒவ்வொரு போட்டிக்கும் அணி வீரர்களை தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருந்தது . இந்தியா ஒரு போதும் இவ்வாறு செயல்படாது . குறைபாடுகள் அதிகம் இருந்தாலும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால் அந்த அணியை மாற்றவே மாட்டார்கள் . 50 ஓவர்கள் விளையாடும் போட்டியில் கூட ஜடேஜாவுடன்  சேர்த்து 5 பந்து வீச்சாளர்கள் இடம்பெறுகிறார்கள் . 200 முதல் 300 ஓவர்கள் பந்துவீச வேண்டிய டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவுடன்  சேர்த்து 4 பந்து வீச்சாளர்கள் மட்டுமே ஆடும் அணியில் இடம்பெறுகிறார்கள் . டெஸ்ட் அணிக்கு முற்றிலும் பொருந்தாத வீரராக ஜடேஜா இருந்தும் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது .டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள்  தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அஸ்வினுக்கு இரண்டு டெஸ்ட்களிலும் வாய்ப்பளிக்கவில்லை .ஜடேஜாவை விட அஸ்வின் சிறந்த ஆல்ரவுண்டர் . அமித் மிஸ்ரா தொடர்ந்து இரண்டு தொடர்களாக  புறக்கணிக்கப்பட்டுள்ளார் . ஈஸ்வர் பாண்டேவுக்கு வாய்ப்பளிக்கவில்லை .பேருக்கு ஒரு போட்டியில் மட்டும் ஸ்டுவர்ட் பின்னிக்கு வாய்ப்பு . அடுத்து ஆசியக் கண்டத்தில் நடைபெறும் போட்டிகளில் என்ன செய்யப் போகிறார்களோ .

பந்துவீச்சு : 

இந்தியக் கிரிக்கெட் அணியா ! வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டது ; பந்து வீச்சு சுமார் தான் , எப்பவாவது சிறப்பாக பந்து வீசுவார்கள் .இந்தக் கதையைத் தான் நாம் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்த ஆரம்பித்த காலத்தில் இருந்துu சொல்கிறார்கள் . மற்ற நாடுகளில்  சிறந்த பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து தோன்றிக் கொண்டே இருக்கிறார்கள் . உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர் யாரும் தற்போது இந்திய அணியில் இல்லை .முன்பாவது இந்தியச் சுழற்பந்து வீச்சாளர்களுக்கென்று ஒரு தனித்துவம் இருந்தது . மற்ற அனைத்து அணிகளும் இந்தியச் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள அஞ்சும் . தற்போது அந்த நிலையும் இல்லை . அனைத்து அணிகளும் மிக எளிதாக இந்தியச் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்கின்றன . இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு விக்கட் வீழ்த்தும் தகுதியுள்ள பவுன்சர் பந்துகளை வீசத் தெரிவதே இல்லை . பேருக்கு பவுன்சர் போடுகிறோம் என்று வீசுகிறார்கள், அது 6 ஆகவோ 4 ஆகவோ மாறிவிடுகிறது . இந்தியப் பந்துவீச்சில் நிலைப்புத்தன்மை என்பதே எப்போதும் இல்லை .எப்ப நன்றாக பந்து வீசுவார்கள் ,எப்ப மோசமாக பந்து வீசுவார்கள் என்று அவர்களுக்கே தெரியாது . இப்போது இந்தியக் கிரிக்கெட் அணியின் இடத்தைத் தக்கவைக்க தரமான பந்து வீச்சாளர்களைக் கண்டடைவது அவசியம் .

மட்டைவீச்சு :

 இந்திய அணியின் மட்டைவீச்சு எப்போதும் கொஞ்சம் அதிகமான திறனுடன் தான் இருக்கிறது. அந்த திறனை முழுதாக பயன்படுத்த தவறிவிடுகிறார்கள் .பொதுவாகவே இந்திய வீரர்களிடம் மனோபலம் சற்று குறைவாகவே உள்ளது. கடினமான போட்டியில் ஒரு அளவிற்கு மேல் வெற்றி பெற போராடுவதே இல்லை. மட்டைவீச்சாளர்கள் போராட்ட குணத்துடன் செயல்பட்டால் இன்னும் அதிகமான போட்டிகளில் வெற்றி பெறலாம்.

களவியூகம் :

இந்திய அணி களவியூகம் அமைப்பதில் அனைத்துவிதமான போட்டிகளிலும் அழகாக சொதப்புகிறது. பார்மில் இல்லாத வீரர்கள் கூட இந்தியாவிற்கு எதிராக அட்டகாசமாக ஆடுகிறார்கள் . பந்துவீச்சாளர்கள் சிறப்பாகவே பந்து வீசினாலும் பார்ட்னர்சிப்பை பிரிக்கும் வகையில் கள வியூகம் அமைக்கப்படுவதில்லை. எதிரணி வீரர்கள் அடித்து ஆடாவிட்டாலும்  களத்தடுப்பாளர்களை எல்லைக்கோட்டிலேயே நிறுத்துகிறார், தோனி. மோசமான கள வியூகத்தால் இந்திய அணிக்கு எதிராக விளையாடும் அணிகள் ஒரு நாள் போட்டிகளில் எளிதாக 300 ரன்களுக்கு மேல் எடுத்துவிடுகிறார்கள். சமீபத்திய தோல்விகளுக்கு மோசமான கள வியூகமும் ஒரு காரணம். தோனி இதைப்புரிந்து கொள்ள வேண்டும் .

தோனி , வெளிநாடுகளில் தனியொரு நாட்டிற்கு எதிரான தொடர்களில் பெரிய தோல்விகளைச் சந்தித்தாலும் ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகள் பங்கு பெறும் கிரிக்கெட் தொடர்களில் பெரிய வெற்றிகளைப் பெற்று இருக்கிறார். அடுத்த தொடர்களில் என்ன நடக்குமோ தெரியவில்லை . பலவீனங்கள் இருந்தாலும் இந்தியா தரவரிசையில் தொடர்ந்து நல்ல நிலையிலேயே இருக்கிறது. இதைத் தக்கவைக்குமா என்பதுதான் தெரியவில்லை.

மேலும் படிக்க :

தோனி வாங்கிய சச்சின் உலககோப்பை !

சினிமா - கிரிக்கெட் - இந்தியா !
....................................................................................................................................................................

Wednesday, October 23, 2013

சினிமா - கிரிக்கெட் - இந்தியா !

 
இந்தியாவில் ,உங்களின் பொழுதுபோக்கு என்ன ? என்ற கேள்வியைக் கேட்டால் பெருவாரியான இளைஞர்களின் பதில் ஒன்று கிரிக்கெட் அல்லது சினிமாவாகத்தான் இருக்கும் .கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவே இவை மாறிவிட்டன .அதிலும் சினிமாவின் தாக்கம் மிகவும் அதிகம் .டேப் ரெக்கார்டர் ,தொலைக்காட்சி ,கணிப்பொறி , செல்போன் ,இணையம் பரவாத சினிமாவின் ஆரம்ப காலத்திலிருந்து இன்று வரை சினிமாவின் தாக்கம் நம் வாழ்வியல் சூழலுடன் கலந்துள்ளது .டேப் ரெக்கார்டர் ,
தொலைக்காட்சி ,கணிப்பொறி , செல்போன் ,இணையம் போன்றவை
 மற்ற நாடுகளில் எதற்காக அதிகம் பயன்படுகிறதோ தெரியாது ,இந்தியாவில் இவை சினிமா சார்ந்தே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன .

டேப் ரெக்கார்டர் மூலம் மற்ற நாட்டுக்காரர்கள் , ஆல்பமாக வெளியிடப்படும் பாப் பாடல்களைக் கேட்டார்கள் . நாம் சினிமாப் பாடல்களைக் கேட்டோம் .அதோடு நில்லாமல் பாடியவர்,இசையமைத்தவர் மற்றும் எழுதியவரைப் புகழாமல் வாயசைத்த நடிகர்களை தலைவனாக கொண்டாடினோம் .டேப் ரெக்கார்டரின் பயன்பாடு முடிவுக்கு வந்துவிட்டது .ஆனால் , நடிகர்களை தலைவனாக கொண்டாடுவது இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை .மற்றவர்களின் பெரும் உழைப்பிற்கு வடிவம் கொடுப்பவர்கள் தான் நடிகர்கள் . ஒரு படத்தின் வெற்றிக்கு நடிகர் மட்டுமே காரணமல்ல . அதே சமயம் நன்றாக நடிப்பவர்களை ஊக்குவித்து பாராட்ட வேண்டும் ;துதி பாடக்கூடாது .ஒரு பாடல் வெற்றி பெற எத்தனையோ பேர்  உழைத்திருந்தாலும் அந்தப்புகழ் வாயசைத்த நடிகரை மையமாக வைத்து இது எம்.ஜி.யார்.பாட்டு ,இது கமல் பாட்டு ,இது விமல் பாட்டு என்று சொல்வது எவ்வளவு அபத்தம் .சமீப காலமாக இந்த நிலை கொஞ்சம் மாறி வருகிறது .தற்போது ஒரு பாடல் வெற்றி பெறும்போது  பாடகர்கள் ,இசையமைப்பாளர்கள் ,பாடலாசிரியர்கள் குறித்து சிறிதேனும் தெரிந்து கொள்கிறோம் .அதே போல இன்றைய சூழலில் ஒரு படம் வெற்றிபெறும் போது  கதாநாயகன் தாண்டியும் மற்ற காரணங்கள் விவாதிக்கப்படுகின்றன . தங்களைத்  துதி பாட விரும்புபவர்களையும்  , துதிபாடிகளையும் கடந்த   இந்த ஆரோக்கியமான நிலை தொடர வேண்டும் .
 
தமிழ்ச் சூழலில் சின்னத்திரை என்று அழைக்கப்படும் தொலைக்காட்சி சினிமாவையும் ,சினிமாக்காரர்களையும்  பெரிதும் சார்ந்துள்ளது . திரைப்படங்கள்,பாடல்கள் , நகைச்சுவைக் காட்சிகள் என்று சினிமாவை நம்பியே  தமிழ்த்  தொலைக்காட்சிகள்  உலா வருகின்றன . சினிமா தொடர்பான  நிகழ்ச்சியை ஒளிபரப்பாத தமிழ்த் தொலைக்காட்சியே இல்லை எனலாம் . மற்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டாலும் சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளுக்கே தொடர்ந்து முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது .
அதுவும் பண்டிகை காலங்களில் சொல்லவே வேண்டாம் .காலை முதல் மாலை வரை சினிமா நடிக நடிகர்களின் பேட்டிகள் இடம்பெறும் ;சினிமாவில் சாதித்தவர்கள் பேட்டிகள் இடம் பெறாது .விதவிதமான விளம்பரங்கள் மூலம்  மக்களைப்  பொருள் சார்ந்த வாழ்க்கை வாழப் பழக்கிய பெரும் சாதனைக்கு சொந்தக்காரர்கள் நம் தொலைக்காட்சிக்காரர்கள் .
 
தொலைக்காட்சி ,கணிப்பொறி , செல்போன் ,இணையம் போன்றவை சினிமா சார்ந்த விசயங்களுக்காகவே மக்களால் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன . அதிலும் தற்போது இலவசமாக கொடுக்கப்பட்ட மடிக்கணினி பாடல்கள் கேட்கவும் ,படம் பார்க்கவும் மட்டுமே பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன .
இருந்தாலும் கணினி மீதிருந்த பெரும் மதிப்பை தவிடு பொடியாக்கிய பெருமை ,இலவச மடிக்கணினிகளையே சேரும் .நம் வரிப்பணத்தை நாமே நேரடியாக நம் வீட்டில்வைத்து பயன்படுத்துவதில் ஒரு ஆனந்தம் இருக்கவே செய்கிறது . முன்பு,  மிதிவண்டி , தொலைக்காட்சி , தற்போது ஆடு ,மாடு,
மின்விசிறி ,மிக்சி ,கிரைன்டர் மற்றும் மடிக்கணினி . அதிகாரத்தை எல்லோரும் அடைய வேண்டும் என்று விரும்புவது போல, பொருள்களை அடையும் உரிமையும் எல்லோருக்கும் உண்டு . அதற்கு நம் வரிப்பணம் உதவுகிறது அவ்வளவுதான் .
 
சினிமாவின் தாக்கம் நம் சூழலில் மிகவும் அதிகம் . சினிமாவின் பிரதிபளிப்பு வேண்டுமானால் சமூகத்தில் இருக்கலாம் . ஆனால்,சமுகத்தின் பிரதிபளிப்பு தான் சினிமா என்று சொல்லமுடியாது . சமுகத்தில் 70 சதவீத மக்கள் விவசாயத்தையும் ,விவசாயம் சார்ந்த தொழில்களையும் செய்கின்றனர் .சமுகத்தின் பிரதிபளிப்பு தான் சினிமா என்றால் திரைக்கு வரும் படங்களில் 70 சதவீதம் விவசாயிகளின் வாழ்க்கை பற்றியும்  , விவசாயத்தைச்  சார்ந்து இருப்பவர்களின் வாழ்க்கை பற்றியும் மட்டுமே இருக்க வேண்டும் .ஆனால் ,நிலைமை அப்படி இல்லை . திரைப்படங்களில் காட்டப்படும் காட்சிகளின் வாயிலாக சமுகத்தில் நிறைய பழக்கங்கள் தொடர்ந்து நிலைநிறுத்தப்படுகின்றன . பெண்கள் குறித்த தவறான புரிதல்களை சமூகத்தில் பரவவிடும் சாதனையை சினிமா தொடர்ந்து நிகழ்த்தி வருகிறது.நல்ல வாசிப்பு உள்ளவர்கள் இயக்குநர்களாக மாறும் போது இந்த நிலை மாறக்கூடும் .இன்னும் எத்தனை நாளைக்குத் தான் காதல் ,காதல் என்று ரக ரகமான காதல் காட்சிகளையும் ,அபத்தமான நகைச்சுவைக் காட்சிகளையும் ,விதவிதமான பாடல் காட்சிகளையும் திரைப்படங்களில் அங்கங்கே சொருகி கதையைப் பற்றி எந்தக் கவலையும் கொள்ளாமல், திரைக்கதையையும் சொதப்பி நம் உயிரை வாங்குவார்களோ ? ஆங்கிலப் படங்கள் பெரும் வெற்றி பெறுவதற்கு அவர்களின் அசத்தலான திரைக்கதை தான் காரணமாக இருக்கிறது .அங்கே ,இரண்டு ,மூன்று பேர் சேர்ந்து ஒரு படத்திற்கு திரைக்கதை எழுதுகிறார்கள் .எப்படிப்பார்த்தாலும் எல்லோருக்குமான பெரிய பொழுதுபோக்கு சினிமா தான் இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.இனி மாற்றம் நிகழவேண்டியது சினிமா முன்னிறுத்தும் குறியீடுகளில் தான் .


இரண்டாவது பொழுதுபோக்கு கிரிக்கெட் என்னும் மட்டைப்பந்தாட்டம் தான் .இந்தியா மிகவும் மோசமாக விளையாடிய காலகட்டத்திலேயே வெறி கொண்டு கிரிக்கெட் பார்த்தவர்கள் நாம் .தோனியின் காலமான தற்போது கேட்கவா வேண்டும் . தோனியின் வரவு, முன்பு கிரிக்கெட் வெறியர்களாக இருந்து இந்திய அணியின் மோசமான ஆட்டத்தால் கிரிக்கெட் பார்ப்பதை விட்டவர்களை மீண்டும் கிரிக்கெட் வெறியர்களாக மாற்றியது . 22 முட்டாள்கள் விளையாடும் விளையாட்டை கோடிக்கணக்கான முட்டாள்கள் பார்க்கிறார்கள் என்று விமர்சனம் செய்யப்பட்டாலும் இந்தியா போன்ற நாடுகளில் நாளுக்கு நாள் கிரிக்கெட் பார்ப்பவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே தான் போகிறது .  இன்றைய இயந்திர வாழ்க்கை நம்மை பெரும் நெருக்கடியை நோக்கி தினமும் தள்ளுகிறது . இதிலிருந்து விடுபட ஏதாவது ஒரு வடிகால் தேவைப்படுகிறது .பெரும்பாலானோருக்கு அந்த வடிகாலாக கிரிக்கெட் இருக்கிறது .ஒரு சிலருக்கு அரசியல் சார்ந்த விசயங்கள் வடிகாலாக இருக்கிறது .

கிரிக்கெட் ஒரு தியானம் போல நம் தினசரி நெருக்கடிகளை மறக்கச் செய்து ஒரு ஆனந்தத்தை நம்முள் பரவச்செய்கிறது . பள்ளிச் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை இந்த ஆனந்தத்திற்கு அடிமை . அதுவும் கிரிக்கெட் நடைபெறும் நேரங்களில் அணியின் நிலவரத்தை (ஸ்கோர் )தெரிந்துகொள்ள நம் ஆட்கள் படும்பாடு இருக்கிறதே அட அட .. . தொலைக்காட்சி ,தொலைக்காட்சி விற்பனையகங்கள் , செல்போன் , பண்பலை ,இணையம் ,தேநீர் விடுதி இவையனைத்தும் ஸ்கோரை தெரிந்து கொள்ள மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது போல கொண்டாடுவார்கள் . கிரிக்கெட் நடைபெறும் நேரங்களில் நம் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் சற்று குறைவாக இருக்கும் .

தொலைக்காட்சிகளில்  நாடகங்கள் ஒளிபரப்பாகும் நேரங்களில் கிரிக்கெட்டும் ஒளிபரப்பப்பட்டால் வீட்டிலுள்ள ஆண்கள் படும்பாடு இருக்கிறதே ,அதனால் தான் முடிந்தவரை கிரிக்கெட் பார்க்க வீட்டைத் தவிர மற்ற இடங்களையே ஆண்கள் பெரிதும் தேர்வு செய்கிறார்கள் .விளையாட்டு தொலைக்காட்சிகளில் மீண்டும் ஒளிபரப்பப்படும் பழைய போட்டிகளையும் வெறிகொண்டு பார்க்கும் ஆட்கள் நிறையவே நம்மிடம் இருக்கிறார்கள். எங்கள் பகுதியில் ஒரு மருத்துவர் இருக்கிறார்,நாம் எப்போது போனாலும்  அவரது அறையில் இருக்கும் தொலைக்காட்சியில் கிரிக்கெட் மட்டுமே எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் சத்தமில்லாமல் . செய்தித்தாளை எடுத்தவுடன் பெரும்பாலான ஆண்கள் படிப்பது விளையாட்டு பகுதியில் இருக்கும் கிரிக்கெட் செய்திகளைத் தான் . அதுவும் தேநீர் விடுதிகளில் காலை நேரங்களில் கிரிக்கெட்  செய்தி உள்ள செய்திதாளுக்கு பெரும் போட்டி இருக்கும் ,காத்திருந்துதான் படிக்க முடியும் . மற்ற நாட்களில்  என்னப்பா கிரிக்கெட் செய்தியே போடல என்று அரசியலையும் ,சினிமாவையும் ஒரு மேய் மேய்ந்துவிட்டு இடத்தை காலி செய்வார்கள் .

கிரிக்கெட் வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல , அது ஒற்றுமையின் அடையாளம் . நாடு ,ஜாதி , மதம் , மொழி , கட்சி , பணக்காரன் ,ஏழை என்ற வேறுபாடுகள் களைந்து எல்லோரும் ஒன்றுபடுவது இந்த விசயத்தில் தான் . அதனால் கிரிக்கெட்டை ஒதுக்க வேண்டிய அவசியமில்லை . எத்தனையோ நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்பவர்களுக்கான இளைப்பாறுதலும் , உற்சாகமும் ,மகிழ்ச்சியும் தருவது கிரிக்கெட் தான் . அதனால் கிரிக்கெட்டைக் கொண்டாடுவதில் தவறில்லை . வாழ்க்கையே ஒரு கொண்டாட்டம் தானே .
 
 சினிமாக்காரர்களும் கிரிக்கெட் வீரர்களும் மட்டுமே அதிக விளம்பரங்களில் தோன்றுகின்றனர் .கோடிக்கணக்கான மக்களை தங்கள் பிடியில் வைத்திருக்கும் சினிமாவும் கிரிக்கெட்டும் வணிகம் சார்ந்தவையாக இருப்பதில் எந்தவித  ஆச்சரியமும் இல்லை .யாருக்காகவும் கொடி பிடிக்காமல் ,துதி பாடாமல் ,தோரணம் கட்டாமல் நல்ல சினிமாவை தவறு தவறு  ,நல்ல சினிமா ,கெட்ட சினிமா என்று எதுவும் இல்லை , நமக்குப்பிடித்த சினிமாவையும்  , நேரம் கிடைக்கையில் பார்க்கும் கிரிக்கெட்டையும் பார்த்து ரசித்து பேரானந்தம் கொள்வோமாக !

மேலும் படிக்க :

தோனி வாங்கிய சச்சின் உலககோப்பை !

ஆஸ்திரேலியாவின் 16 ஆண்டு கால ஆதிக்கத்தை நொறுக்கியது இந்தியா !

....................................................................................................................................................................

Sunday, April 3, 2011

தோனி வாங்கிய சச்சின் உலககோப்பை !

ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடி களிக்க வேண்டிய தருணமிது . 1983 கு பிறகு இப்ப வாங்கும் அப்ப வாங்கும்னு எல்லா உலககோப்பை போட்டிகளையும் பசியை மறந்து , தூக்கத்தை தொலைத்து பார்த்துக்கொண்டே இருந்தோம் . 28 வருட ஏக்கம் முடிவுக்கு வந்துவிட்டது . இப்பொழுது  உலககோப்பையை வென்றே விட்டோம் . ஆனால் , இந்த உலககோப்பை சாதாரணமாக கிடைக்க வில்லை . ஒரு நீண்ட போராட்டத்திற்கு பிறகு தான் நம் கைகளை அடைந்துள்ளது . 

இந்த ஒரு உலககோப்பையை வெல்ல நாம் மூன்று இறுதிப் போட்டிகளில் வெல்ல வேண்டி இருந்தது . முதலாவது இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவையும் ( காலிறுதி ), இரண்டாவது இறுதிப் போட்டியில் பாகிஸ்தானையும் (அரையிறுதி ) , மூன்றாவது இறுதிப் போட்டியில் இலங்கையையும் (இறுதி ) வீழ்த்தித் தான் உலக கோப்பையை வென்றோம் . மூன்றுமே கடினமான போட்டிகள் தான் ,ஆனால் ,ஆஸ்திரேலியாவுடனான போட்டி தான் மிகக் கடினமாக இருந்தது . இந்த உலககோப்பை வெல்வதற்கு எந்த தனிப்பட்ட வீரரும் காரணமாக இல்லை . எல்லா வீரர்களுக்குமே வெற்றியில் பங்கு உண்டு . உலககோப்பை வெல்ல ஒரே காரணம் " அணியின் ஒற்றுமை " தான் .

மிகச் சிறப்பான பந்து வீச்சுடன் ஆட்டத்தை துவக்கிய இந்தியா , மிக மோசமான பந்து வீச்சுடன் முதல் 50 ஓவர்களை நிறைவு செய்தது . 274 ரன்களை எடுத்து விட்டு ஆனந்த கூத்தாடியது , இலங்கை .எப்படியும் இந்தியாவை வீழ்த்தி விடலாம் என்று தான் நினைத்திருப்பார்கள் .ஆனால் , அவகளின் ஆனந்தம் ,சேவாகையும் , சச்சினையும் ஆட்டமிழக்கச் செய்யும் வரையே நீடித்தது . அதன்  பிறகு ஆட்டம் இந்தியாவின் கைகளில் வந்தது . காம்பிர் மிகச் சிறப்பாக , துணிச்சலுடன் விளையாடினார் . சதத்துக்காக விளையாடாமல் அணியின் வெற்றிக்காக விளையாடினார் . அவருக்கு கோலி நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார் . பிறகு ஆட்டத்தை நம் அணித்தலைவர் , தோனி கையில் எடுத்துக்கொண்டார் . இந்த உலககோப்பையில் தனது சிறந்த ஆட்டத்தை மிக முக்கியமான போட்டியில் வெளிப்படுத்தி உள்ளார் . இறுதிப் போட்டியில் நாம் வெல்வதற்கு தோனியும் முக்கிய காரணம் . 

1983 ல் இருந்த நிலை வேறு . அன்று மிகச் சாதாரண அணியாக பங்கு பெற்று கோப்பை வென்றது இந்தியா . அது மிகச் சிறப்பான வெற்றி . அந்த போட்டியையும் இந்தப் போட்டியையும் ஒப்பிட வேண்டாம் . இந்தியாவின் மிகச் சிறந்த அணித்தலைவர் தோனி தான் . இவரது தலைமையில் இந்தியா பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது . 2007 ல் முதலாவது 20-20  உலககோப்பையை வென்று காட்டினார் . இவரது சிறந்த தலைமையால்  டெஸ்ட் போட்டிகளில் இந்தியா முதலிடத்தைப் பெற்றுள்ளது . இப்பொழுது 28 வருடங்களுக்கு அப்புறம் ஒரு நாள் உலக கோப்பையை வென்று , ஒரு நாள் போட்டி தரவரிசையிலும் இந்தியாவை முதல் இடத்தில் உட்கார வைத்துள்ளார் . இதை விட என்ன வேண்டும் .

எல்லோரையும் விட ஒருவர் மகிழ்ச்சி துள்ளலில் ஆனந்த கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார் . பேட்டிங் சாதனைகளின் ஒட்டு மொத்த குத்தகைதாரர் . அவர் , சச்சின் தெண்டுல்கர் . ஆறு உலக கோப்பை போட்டிகளில் விளையாடி , இந்த முறை மட்டுமே கோப்பையை வெல்ல முடித்திருக்கிறது . இப்போது மட்டும் வெல்லாமல் போயிருந்தால் அவரது சாதனைகளுக்கு ஒரு அர்த்தமே இருந்திருக்காது . இது அவருக்கு மிகச் சிறந்த தருணம் . 

 இதைப் பற்றி சச்சின் கூறியது  "இதை விட மேலான ஒன்றை என்னால் கேட்கவே முடியாது. உலகக் கோப்பையை வென்றது தான், எனது வாழ்வின் பெருமைமிகு தருணம். சக அணி வீரர்களுக்கு நன்றி. அவர்கள் இல்லையென்றால் எதுவும் சாத்தியமில்லை. எனது ஆனந்தக் கண்ணீரை நிறுத்த முடியவில்லை. உலகக் கோப்பையை வென்றுள்ள இந்த இந்திய அணியில் இடம்பெற்றிருப்பது மிகப் பெரிய கெளரவம். கேரி, பாடி உப்டன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி." 

எப்படியோ உலககோப்பையை வென்று விட்டோம் . இதை வென்று கொடுத்த தோனி மற்றும் நம் அணி வீரர்கள் அனைவரையும் பாராட்டுவோம் . 

எல்லோரும் கொண்டாடுவோம் !


........................... 

Friday, April 1, 2011

மூன்றாவது இறுதிப்போட்டி !?

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு அணிகளுக்குமே  இது மூன்றாவது இறுதிப்போட்டி . இதற்கு முன் இரு அணிகளும் இரண்டு முறை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று ,ஒன்றில் வெற்றியும் ஒன்றில் தோல்வியும் பெற்றுள்ளன . இரண்டு அணிகளும்  இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுடனே தோல்வியை தழுவியுள்ளன . இம்முறை ஆஸ்திரேலியா இல்லை . ஆனால் , இரண்டில் ஒரு அணி தான் வெற்றி பெற முடியும் . அது எது என்பதில் தான் சுவாரசியம் இருக்கிறது . 

 இந்த உலகக்கோப்பையில் ஏறக்குறைய இந்தியா விளையாடிய அனைத்து போட்டிகளும் சவால் நிறைந்ததாகவே இருந்தது . அதிலும் ஆஸ்திரேலியாவுடன்  வெற்றி பெற கடுமையாக போராட வேண்டி இருந்தது . பாகிஸ்தான் உடனான போட்டியில் யாரும் எதிர் பார்க்காத வகையில் இந்தியா அணியின் பந்து வீச்சும் , களப்பணியும் மிகச் சிறப்பாக இருந்தன . உலககோப்பை தொடங்கிய போது இருந்ததை விட இப்பொழுது இந்தியா பலம் வாய்ந்ததாக இருக்கிறது . இதற்க்கெல்லாம் காரணம் " இந்திய அணியின் ஒற்றுமை " . அனைத்து வீரர்களும் பொறுப்பை உணர்ந்து விளையாடுகிறார்கள் ,நம் தோனியைத் தவிர . ஆனால் , அணித்தலைவர் பொறுப்பில் மிகச் சிறப்பாக செயல் படுவதால் அவரது ஆட்டத்தை நாம் விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை . 

இந்தியா , இந்த தொடரில் அதிக முறை முதலில் பேட்டிங் செய்து வெற்றி பெற்றுள்ளது . அதே சமயம் இலங்கை அதிக முறை இரண்டாவதாக பேட்டிங் செய்து வெற்றி பெற்றுள்ளது . அதனால் , இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தாலும் அது நமக்குச்  சாதகம் என்று சொல்லிவிட முடியாது . முதலில் பேட்டிங்கோ , பந்துவீச்சோ  இறுதி வரை போராடினால் மட்டுமே இறுதிப் போட்டியில் வெல்ல முடியும் .

முரளிதரனுக்காக இலங்கை ஆடுகிறது , தெண்டுல்கருக்காக இந்தியா ஆடுகிறது .  இருவருமே அடுத்த உலகக்கோப்பை போட்டியில் ஆடப்போவதில்லை . இலங்கை  1996 ல்  உலகக்கோப்பை வென்ற போது முரளிதரன் அந்த அணியில் இடம் பெற்று இருந்தார் . ஆனால் , இவ்வளவு சாதனைகள் செய்த பிறகும்  தெண்டுல்கருக்கு  இதுவரை அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை . இம்முறை , சொந்த மண்ணில் , சொந்த ஊரில்  நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது .  

இரண்டு அணிகளின் பயிற்சியாளர்களும் இந்த உலகக்கோப்பையுடன் அணியை விட்டு விலகப் போகிறார்கள் . கிறிஸ்டன் பதவி ஏற்ற பிறகு இந்தியா அதிக வெற்றிகளை பெற்றுள்ளது . ஜான்ரைட்- கங்குலி ஜோடியால் இந்தியா  2003 ஆம் ஆண்டு இறுதிப்போட்டி வரை சென்றது . கிறிஸ்டன் -தோனி ஜோடி 2011 ல் கோப்பையை வெல்லப் போகிறது !? 

1983 ல் கபில் தேவ் !

2011 ல் தோனி !? 

மேலும் படிக்க :



முகப்பு பக்கம் 

.......................................
 
 

Thursday, March 31, 2011

தொட்டுவிடும் தூரத்தில் உலகக் கோப்பை !



"தெண்டுல்கரை சதம் அடிக்க விட மாட்டோம் , யுவராஜை விரைவாக ஆட்டமிழக்கச் செய்வோம் " என்றெல்லாம் சபதம் விட்ட அப்ரிடி இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறுவோம் என்று சொல்ல மறந்து விட்டார் .  தெண்டுல்கரை சதம் அடிக்க விடவில்லை , யுவராஜையும் ஒரே பந்தில் ஆட்டம் இழக்கச் செய்து விட்டனர் , ஆனால் , இந்தியா வெற்றி பெற்று விட்டது . கடந்த போட்டி முடிந்த பிறகு பாண்டிங் ," இதற்கு முன்பு இந்தியா இப்படி இணைந்து விளையாடி நான் பார்த்ததில்லை " என்று குறிப்பிட்டார் . இந்த தொடரில் இந்தியா பெற்ற அனைத்து வெற்றியும் எந்தத்  தனி வீரரையும் சார்ந்து இல்லை , எல்லா வெற்றியும் அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி . பாகிஸ்தானுக்கு எதிராக கிடைத்த வெற்றியும் அப்படிப்பட்டதே .

இந்த உலககொப்பைத் தொடரில் பங்களாதேஷ் உடனான போட்டியைத் தவிர இந்தியா விளையாடிய அனைத்து போட்டிகளும் பரபரப்பான போட்டிகளாகவே இருந்தன .  நெதர்லாந்து மற்றும் அயர்லாந்து எதிரான போட்டிகள் கூட சவாலானதாகவே இருந்தன .ஒவ்வொரு போட்டியிலும் இந்தியாவின் பலம் அதிகரித்துக்கொண்டே வந்தது . அதனால் தான் , 260 ரன்கள் மட்டுமே அடித்திருந்தும்  பாகிஸ்தானை திறமையாக வெற்றிகொள்ள முடிந்தது .

கடந்த போட்டிக்கும் , இந்த போட்டிக்கும் ஒரு ஒற்றுமை உண்டு . அது என்னவென்றால் , கடந்த போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா இதே 260 ரன்களைத் தான் எடுத்தது . அதில் ஆஸ்திரேலியா நம்முடன் தோற்று விட்டது .ஆனால்,இந்தப் போட்டியில் நாம் அதே 260 ரன்களை வைத்து பாகிஸ்தானை வென்று விட்டோம் . அது தான் இந்தியாவின் பலம் .

சேவாகின் சரவெடியுடன் போட்டி தொடங்கியது . நன்றாக விளையாட வேண்டும் என்ற நெருக்கடி எல்லோரிடமும் இருந்தது . அதனால் தான் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர் . சேவாக் ஆட்டமிழந்த பிறகு போட்டி , பாகிஸ்தான் வசமே இருந்தது . ஒரு அற்புதமான பந்தில் யுவராஜ் ஆட்டமிழந்தார் . 30 ஓவரிலிருந்து 40 ஓவர் வரை இந்தியா 30 ரன்களை மட்டுமே எடுத்தது . இந்த போட்டியிலும் ஆபத்பாந்தவனாக வந்தவர் ரெய்னா தான் . ரெய்னாவின் பொறுப்பான ஆட்டம் தான் இந்தியா 260 ரன்கள் எடுக்க காரணம் .

பந்துவீச்சில் இந்தியா அசத்தி விட்டது . மூன்று வேகப் பந்து வீச்சாளர்களை களம் இறக்கிய தோனியின் அணுகுமுறை சிறந்த வெற்றியைக் கொடுத்தது .முதல் இரண்டு பேர் வேகப் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தனர். பின்பு , அடுத்தடுத்து இரண்டு பேரை ஆட்டமிழக்கச் செய்தார் யுவராஜ் . உமர் அக்மல் எல்லோருக்கும் பயத்தை உருவாக்கினார் .அவர் மட்டும் ஆட்டம் இழக்காமல் இருந்திருந்தால் பாகிஸ்தான் கண்டிப்பாக வெற்றி பெற்றிருக்கும் . தனது சிறப்பான பந்து வீச்சால் அவரை ஆட்டம் இழக்கச் செய்தார் ஹர்பஜன் . பிறகு அப்ரிடியையும் வீழ்த்தினார் . மிஸ்பா கடைசி கட்டத்தில் கொஞ்சம் போராடினார் . மொத்தத்தில் இந்தியாவின் பந்து வீச்சு மிகச் சிறப்பாக இருந்தது .  நீண்ட நாட்களுக்கு அப்புறம் 5 பந்து வீச்சாளர்கள் மட்டுமே 50 ஓவர்களையும் வீசியுள்ளனர் . பந்து வீசிய அனைவருக்கும் ஆளுக்கு 2 விக்கெட்கள்  கிடைத்தன . இது அபூர்வமாக நிகழக்கூடியது .  

பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவின் ஆதிக்கம் ( 5 போட்டிகளிலும் இந்தியா வெற்றி ) தொடர்கிறது . பாகிஸ்தான் உடனான நட்பை புதுப்பிக்கவும் இந்த போட்டி உதவியது . விளையாட்டின் சிறப்பே இது தான் .இன்னும் ஒரே ஒரு வெற்றியை மட்டும் பெற்றுவிட்டால் போதும் 1983 மற்றும் 2007 ன் நினைவுகள் பல்வேறு சிறப்புகளுடன் மீண்டும் கிடைக்கும் . 

தொட்டுவிடும் தூரத்தில் உலகக் கோப்பை !

மேலும் படிக்க :


முகப்பு பக்கம்
.......................................

Tuesday, March 29, 2011

இந்தியாவின் இரண்டாவது இறுதிப்போட்டி !?

இந்தியா தனது இரண்டாவது இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுடன் மோதுகிறது . முதல் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வென்றது நினைவிருக்கலாம் . சாதாரண போட்டியாக இருந்தாலே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதினால் பரபரப்பாக இருக்கும் . அதிலும் உலககோப்பை போட்டி என்றால் பரபரப்புகுச் சொல்லவா வேண்டும் . 

இரு அணிகளுக்கும் இடையிலான தனிப்பட்ட போட்டிகளில் பாகிஸ்தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது , உலக கோப்பைப் போட்டிகளில் இந்தியா ஆதிக்கம் வருகிறது . இந்த அணிகள் மோதும் போட்டியை கிரிக்கெட் உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கிறது . நிறைய பேர் விடுப்பு எடுக்கத் தயாராகி விட்டனர் . நான், நம் நாட்டின் பிரதமரைச் சொல்லவில்லை . அவருக்கு எப்போதுமே எந்த வேலையும் இருந்ததில்லை . அவர் கிரிக்கெட் பார்ப்பதும் ஒன்றுதான் , பாராளுமன்றம் போவதும் ஒன்றுதான் . நான் குறிப்பிட்டது சாதாரண வேலை செய்பவர்களை .

கிரிக்கெட் வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல , அது ஒற்றுமையின் அடையாளம் . நாடு ,ஜாதி , மதம் , மொழி , கட்சி , பணக்காரன் ,ஏழை என்ற வேறுபாடுகள் களைந்து எல்லோரும் ஒன்றுபடுவது இந்த விசயத்தில் தான் . அதனால் கிரிக்கெட்டை ஒதுக்க வேண்டிய அவசியமில்லை . எத்தனையோ நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்பவர்களுக்கான இளைப்பாறுதலும் , உற்சாகமும் ,மகிழ்ச்சியும் தருவது கிரிக்கெட் தான் . அதனால் கிரிக்கெட்டைக் கொண்டாடுவதில் தவறில்லை . வாழ்க்கையே ஒரு கொண்டாட்டம் தானே . 

இந்தியா எப்போது நன்றாக விளையாடாமல் போகும் என்றும் ,  பாகிஸ்தான் எப்போது நன்றாக விளையாடும் என்றும் எப்போதுமே கணிக்க முடியாது . புள்ளிவிவரங்களை வைத்து இந்த இரு அணிகள் விளையாடும் போட்டியின் முடிவைக் கணிக்க முடியாது . வீரர்களின் மன வலிமையைப் பொறுத்தே முடிவுகள் இருக்கும் . இதில் தோனியின் அணுகுமுறையும் , அப்ரிடியின் அணுகுமுறையும் முக்கியத்துவம் பெறும் . 

வீரர்களின் திறமையை பொறுத்தவரை இரு அணிகளுக்கும் பெரிய வித்தியாசமில்லை . இரு அணிகளுக்கும்  நெருக்கடிகள் உள்ளன . எந்த அணி நெருக்கடியை சிறப்பாகச் சமாளிக்கிறதோ அந்த அணி வெற்றி பெறும் .


வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் !

இதையும் படியுங்கள் :

...........................................

Friday, March 25, 2011

ஆஸ்திரேலியாவின் 16 ஆண்டு கால ஆதிக்கத்தை நொறுக்கியது இந்தியா !

தொடர்ந்து நான்கு முறை உலககோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறி ( 1996 ,1999,2003,2007 ) அதில் மூன்று முறை கோப்பையை  வென்று உலக கோப்பை போட்டிகளில் அசைக்க முடியாத அணியாக இருந்த  ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தது இந்தியா .2003  ஆம் ஆண்டு  இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்ததற்கு சரியான முறையில் பதிலடி கொடுத்தது . அஸ்வின் மற்றும் ரெய்னா வை அணியிலிருந்து நீக்காமல்  இருந்தது வெற்றிக்கு உதவியது . அஸ்வின் ஒரு வேகப்பந்து வீச்சாளர் போலவே செயல்படுகிறார் . துவக்கத்திலும் சரி , முடிவிலும் சரி சிறப்பாக பந்து வீசுகிறார் . நல்ல வேளை , தோனியின் மூளை சரியாக  வேளை செய்துள்ளது . இல்லையென்றால் " யாரை அணிக்கு எடுக்குறது  , யாரை தூக்குறதுனு எனக்குத் தெரியும்னு " சொல்லி சாவ்லாவையும் , நெக்ராவையும் மீண்டும் அணிக்கு தேர்வு செய்யாமல்  இருந்தாரே அதுவரை சந்தோசம் .

 ஆஸ்திரேலியாவை 260 ரன்னுக்குள் கட்டுப்படுத்தியது சிறப்பானது . யுவராஜ்  இந்தியாவின் முன்னனி பந்து வீச்சாளர் ஆகவே மாறிவிட்டார் . ஜாகிர் கான் , ஆட்டத்தின் நடுப்பகுதியில் திருப்பு முனையை ஏற்ப்படுத்துகிறார் ,  கடைசிக் கட்டத்திலும் சிறப்பாக பந்து வீசுகிறார் . காம்பீர் ஆட்டம் இழந்தவுடன் ஆபத்பாந்தவனாக வந்தவர் தோனி அல்ல , பிரெட் லீ . தோனி அவர்களை விரைவாக ஆட்டமிழக்கச் செய்து , அடுத்தடுத்த ஓவர்களில் ரன்களை அள்ளிக்கொடுத்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்து விட்டார் . யுவராஜ் மற்றும் ரெய்னாவின் ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது . பதட்டமான சூழ்நிலையைச்  சிறப்பாக கையாண்டனர் .இதுவரை இந்தியா விளையாடிய   ஏழு போட்டிகளில் நான்கில் ஆட்டநாயகன்  விருதை வென்று யுவராஜ் ,தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து விட்டார் . யுவராஜ் 50 அடித்தால் இந்தியா வென்று விடும் என்ற நம்பிக்கை தொடர்கிறது .

ஆஸ்திரேலியா வெளியேறியது , மற்ற அனைத்து அணிகளையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி இருக்கும் . அடுத்த போட்டியில் பாகிஸ்தானை சந்திக்கப்போகிறோம் . இந்திய அணி , இனி தனது இயல்பான ஆட்டத்தை தொடரும் என்று நம்புவோம் . உலகக்கோப்பையை  மூன்று முறை தொடர்ந்து வென்ற அணியை நாம் வீழ்த்தியது உலககோப்பை வென்றதுக்குச் சமம் . இனி கோப்பையே வாங்கினாலும் அது வெறும் பேருக்காகத்தான் .

.................

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms