படம் - ரவி பேலட்
வளர்ந்தவர்களை மலக்குழியில் தள்ளி கொல்கிறோம். வளராதவர்களை ஆழ்துளை கிணற்றில் தள்ளி கொல்கிறோம். எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் கடந்து போகவே பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம். மலக்குழி மரணங்கள் இன்று வரை விவாதப் பொருளாக ஆனதேயில்லை. ஆழ்துளை கிணறு மரணங்கள் விவாதப் பொருளாக மாறுவதற்கு இரண்டு வயது பிஞ்சுவின் மரணம் தேவையாய் இருக்கிறது. இரண்டுக்குமே முறையான இயந்திரங்களோ, பாதுகாப்பு வசதிகளோ இல்லை.
முதலில் இந்தியாவில் குழந்தைகள், குழந்தைகளாக நடத்தப்படுவதேயில்லை. குடும்பம், சமூகம், அரசு என மூன்றுமே குழந்தைகளின் மனநிலைகளையும், அவர்களைக் காத்து சரியாக வழி நடத்துவது எவ்வளவு முக்கியம் என்பதையும் உணர்ந்ததேயில்லை. இன்றைய குழந்தைகள் தானே நாளைய எதிர்காலம் என்ற உணர்வு இந்திய நாட்டில் யாருக்கும் இல்லை. இந்தியாவில் கலை, இலக்கியம் கூட குழந்தைகளை கைவிட்டு விட்டன. அரிதாகவே கலையும், இலக்கியமும் குழந்தைகளை பதிவு செய்கிறது.
பேரிடர் மேலண்மை என்பது தமிழகத்தில் சுத்தமாக இல்லை. பேரிடர் மேலாண்மை குறித்த படிப்பும் குறிப்பிடும்படியாக எந்தப் பல்கலைக்கழகத்திலும் இல்லை. பேரிடர் மேலண்மையில் முக்கியமாக தேவைப்படுவது சூழியல் அறிவு. இதுவரை நடந்த பேரிடர்களின் போது இவர்கள் செயல்பட்ட விதத்தைப் பார்க்கும் போது சூழியல் அறிவு என்பது யாருக்கும் இல்லை என தெளிவாகத் தெரிகிறது. கடலில் எண்ணெய் கொட்டினால் வாளியில் அள்ளுவது, திடீர் வெள்ளம் வந்தால் எப்படி எதிர் கொள்வது என்று தெரியாமல் முழிப்பது, நில அமைப்பு எப்படி இருக்கிறது என்ற புரிதல் இல்லாமல் இருப்பது, ஒக்கி புயலின் போதும், கஜா புயலின் போதும் சரியான நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது என சொல்லிக்கொண்டே போக முடியும். ஒக்கிப் புயலின் போது மீனவர்களை சாகவிட்டு வேடிக்கை பார்த்தவர்கள் தானே நாம். சூழியல் அறிவா ? அப்படியென்றால் என்ன ? என்று கேட்கும் நிலையே அரசிடம் இருக்கிறது. ஆவியாவதை தடுக்க தெர்மாகோல் அட்டையை விரித்தவர்கள் தானே அவர்கள்.
கல்பாக்கம், கூடங்குளம் என ஒன்றுக்கு இரண்டு அணுமின் நிலையங்கள் இருக்கின்றன. சிறு விபத்து ஏற்பட்டாலும் பேச கூட நேரம் இருக்காது. செத்து மடிந்து விடுவோம். நினைக்கவே அச்சமாக இருக்கிறது. டெல்டா மாவட்டங்களில் எண்ணை எடுக்கும் குழாய்களில் வெடிப்பு ஏற்பட்டால் ? பேரிடர்களை சமாளிக்கும் தகுதியே இல்லாமல் கார்பரேட்காரர்களுக்காக நாசகார திட்டங்களை தமிழகத்தில் எதற்காக அனுமதிக்கிறீர்கள் ? இரண்டு அரசுகளும் சேர்ந்து தான் அவ்வளவு எதிர்ப்புகளுக்கு இடையிலும் கூடங்குளம் அணுமின்நிலையத்தை அமைத்தன. இப்போது நியூட்ரினோ ஆய்வு மையத்தை அமைக்கத் துடிக்கிறார்கள், கொலைகாரர்கள்.
அறிவியல் , வளர்ச்சி என்பதெல்லாம் யாருக்கானது ? எல்லாமே மக்களுக்கானது. இதை பெரும்பாலான அரசுகள் உணரவேயில்லை. அரசு என்பது மக்களால், மக்களின் வரிப்பணத்தில் தான் நடக்கிறது என்பதே அரசு எப்போதும் நினைவில் வைப்பதேயில்லை.அரசுக்குத் துணையாக மக்களும் இதை மறந்துவிடுகிறார்கள். மக்களை கொத்து கொத்தாக கொல்வதற்கு, இயற்கை வளங்களை அழிப்பதற்கு ஓராயிரம் கருவிகள் இருக்கின்றன. கழிவுகளின் அடைப்பை சரிசெய்யவோ, ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறு உயிரைக் காப்பாற்றவோ நம்மிடம் முறையான கருவிகள் இல்லை. நிலவிற்கு ராக்கெட் அனுப்பியதற்கு பெருமிதம் அடைந்தவர்களே உங்கள் முகத்தில் நீங்களே காறி உமிழ்ந்து கொள்ளுங்கள்.
பெரிய அளவிலான உளவியல் பாதிப்புகளை நமக்கு ஏற்படுத்தி இருக்கிறது இந்நிகழ்வு. இரண்டு, மூன்று வயது குழந்தைகளை பார்க்கும் போது இவர்களைப் போற்றவன் தானே சுஜித்தும் என்ற எண்ணம் தான் முதலில் வருகிறது. யாராலும் இயல்பாக தங்களின் அன்றாட வேலைகளை கவனிக்க முடியவில்லை. '5 அடி, 10 அடி ' என எங்காவது வாசிக்க நேர்ந்தால் கூட சுஜித் தான் முதலில் நினைவிற்கு வருகிறான். என்ன செய்தும் , நம்மை நோக்கி கையசைந்த அந்த பிஞ்சை காப்பாற்ற முடியவில்லையே என்ற குற்ற உணர்வை ஒருபோதும் நம்மால் நீக்கிவிட முடியாது. நம்மை நம்பிய அந்த உயிரை குழிக்குள் வைத்தே கொன்று விட்டோம். நாமெல்லாம் கொலைகாரர்களே.
கடைசி நாளில் என்ன அயோக்கியத்தனம் செய்ய வேண்டுமோ அதை பிசக்காமல் செய்து முடித்திருக்கிறார்கள்.குழந்தையின் கைகளில் அசைவில்லை, குழந்தை மீது ஒரு அடி வரை மண் விழுந்துவிட்டது, உள்ளிருந்து துர்நாற்றம் வீசுகிறது, குழந்தை இறந்துவிட்டது என்று படிப்படியாக சொல்லி குழந்தையை அழுகிய நிலையில் மீட்டோம் என்று சொல்லி முடிவிற்கு கொண்டு வந்து விட்டார்கள். மீட்டது உண்மையிலேயே சுஜித் உடல் தானா ? என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கிறது. போஸ்ட்மார்ட்டம் அறிக்கை என்று எதை காண்பிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. முழுமையான விளக்கம் தேவை. அரசு இயந்திரத்திற்கு மனசாட்சி , குற்றவுணர்ச்சி என்றெல்லாம் எதுவும் இல்லை என்பது பல முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
இயற்கையின் மீது கைவைக்கும் போது கவனமாக செயல்பட வேண்டும் என்று பல முறை நமக்கு படிப்பினைகளை இயற்கை கொடுத்திருக்கிறது. ஆனாலும் நமது செயல்பாடுகளில் துளியும் மாற்றமில்லை. தனிப்பட்ட முறையிலும்,அரசு மற்றும் கார்பரேட் நிறுவனங்களாலும் இயற்கை வளங்கள் பெருமளவு பாதிப்புகளைச் சந்திக்கின்றன. இதற்கெல்லாம் சேர்த்து இயற்கை பதிலடி தரும் போது நம்மால் எதிர்கொள்ள முடிவதில்லை. இயற்கைக்கு கருணையே கிடையாதா ? ஆம், இயற்கைக்கு கருணை என்பது எப்போதும் இல்லை. ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு நிமிடமும் தன்னைச் சமநிலைப்படுத்திக் கொண்டே தான் இருக்கும். ஏற்கனவே இருப்பது அழிவது பற்றியோ, புதிதாக உருவாவது பற்றியோ எப்போதும் கவலைப்படாது. சமநிலை, சமநிலை அது மட்டுமே இலக்கு.
மனித இனத்தைத் தவிர மற்ற உயிரினங்கள் இயற்கையின் சமநிலையை பாதிப்பது இல்லை. இயற்கையுடன் இணைந்த வாழ்வையே அமைத்துக் கொள்கின்றன. மனித இனம் தான் இயற்கையின் சமநிலையை ஒவ்வொரு நிமிடமும் சிதைக்கிறது. அதற்கான பலனை அனுபவித்தாலும் திருந்தவேயில்லை. இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறை மட்டுமே நம்மை மீட்கும்.