Thursday, May 31, 2012

இருக்கும் பொழுதை ரசிக்கணும் !


K.V.ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் , T.R.ராஜகோபால் இசையமைப்பில் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த " கண் திறந்தது " என்ற திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம்பெற்றுள்ளது .பட்டுக்கோட்டையாரின் எழுத்து வண்ணத்தில் உருவான இன்னுமொரு சிறந்த பாடலிது .

அந்தப் பாடல் :


பாடல் வரிகள் :

ஒருகுறையும் செய்யாமே
ஒலகத்திலே யாருமில்லே _ அப்படி
உத்தமனாய் வாழந்தவனை _ இந்த ஒலகம்
ஒதைக்காம விட்டதில்லை…

இருக்கும் பொழுதை ரசிக்கணும் _ அட
இன்பமாகக் கழிக்கணும்
எதிலும் துணிஞ்சு இறங்கணும் _ நீ
ஏங்கி எதுக்குத் துடிக்கணும்? (இருக்…)

நாளை நாளை என்று பொன்னான
நாளைக் கெடுப்பவன் குருடன்
நடந்து போனதை நெனச்சு ஒடம்பு
நலிஞ்சு போறவன் மடையன் _ சுத்த மடையன்
நம்மைப்போல கெடச்சதைத் தின்னு
நெனச்சதைச் செய்யிறவன் மனுஷன் (இருக்…)

ஆடி ஓடிப் பொருளைத் தேடி…
அவனும் திங்காமே பதுக்கி வைப்பான்…
அதிலே இதிலே பணத்தைச் சேத்து
வெளியிடப் பயந்து மறச்சு வைப்பான்;
அண்ணன் தம்பி பொண்டாட்டி புள்ளை
ஆருக்கும் சொல்லாமப் பொதச்சு வைப்பான்;
ஆகக் கடைசியில் குழியைத் தோண்டி
அவனையும் ஒருத்தன் பொதச்சு வைப்பான் _ ஆமா
பொதச்சு வைப்பான் (இருக்…)

நல்ல வழியிலே வாழ நெனச்சு
நாயா அலையாதே _ அது இந்த நாளில் முடியாதே
நரியைப் போலே எலியைப் போலே
நடக்கத் தெரிஞ்சுக்கணும் _ தம்பி
உடம்பு அழுக்கு; உடையும் அழுக்கு!
உள்ளம் அழுக்குங்க _ அதுலேதான் உலகம் கிடக்குங்க _ இது
உமக்கும் எமக்கும் கழுதைக்கும் தெரியும்
ஒண்ணும் சுத்தமில்லை _ உள்ளதைச்
சொன்னாக் குத்தமில்லை… (இருக்…)

அட ஆமாங்க  "இருக்கும் பொழுதை ரசிக்கணும் , இன்பமாகக் கழிக்கணும் "!

நன்றி :  http://www.pattukkottaiyar.com/site/ .

மேலும் படிக்க :

திண்ணைப் பேச்சு வீரரிடம் !  

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா ...!  

...................................................................................................................................................................

Saturday, May 26, 2012

சிரிப்பு வருது ! சிரிப்பு வருது !
சிரிப்பு  வருது  சிரிப்பு  வருது
சிரிக்க  சிரிக்க   சிரிப்பு  வருது

சின்ன  மனுஷன்  பெரிய  மனுஷன்
செயலைப்  பார்த்து  சிரிப்பு  வருது
சின்ன  மனுஷன்  பெரிய  மனுஷன்
செயலைப்  பார்த்து  சிரிப்பு  வருது...

மேடை  ஏறிப்  பேசும்  போது  ஆறு  போலப்  பேச்சு
மேடை  ஏறிப்  பேசும்  போது  ஆறு  போலப்  பேச்சு
கீழே  இறங்கிப்  போகும்  பொது  சொன்னதெல்லாம்  போச்சு
கீழே  இறங்கிப்  போகும்  பொது  சொன்னதெல்லாம்  போச்சு
பணத்தை  எடுத்து  நீட்டு  கழுதை  பாடும்  பாட்டு
ஆசை  வார்த்தை  காட்டு  உனக்கும்  கூட  வோட்டு...

உள்ளே  பணத்தைப்  புட்டி  வச்சி  வள்ளல்  வேஷம்  போடு
உள்ளே  பணத்தைப்  புட்டி  வச்சி  வள்ளல்  வேஷம்  போடு
ஒளிஞ்சி  மறைஞ்சி  ஆட்டம்  போட்டு  உத்தமன்  போல்  பேசு
ஒளிஞ்சி  மறைஞ்சி  ஆட்டம்  போட்டு  உத்தமன்  போல்  பேசு
நல்ல  கணக்கை  மாதி  கள்ளக்  கணக்கை  ஏத்தி
நல்ல  நேரம்  பாத்து  நண்பனையே  மாத்து...1964 ஆம் ஆண்டு M.S.விசுவநாதன் -ராமமூர்த்தி இசையமைப்பில் வெளிவந்த  " ஆண்டவன் கட்டளை " என்னும் திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம் பெற்றுள்ளது . இந்தப்பாடலை எழுதியவர் கண்ணதாசன் . பாடியவர் சொல்லித் தெரியவேண்டியதில்லை , காலத்தைக் கடந்தும் எல்லோராலும் ரசிக்கப்படும் குரலுக்குச் சொந்தக்காரரான சந்திரபாபு .

இந்தப்பாடல் எளிமையாக , வித்தியாசமாக அதே சமயம் மிக அழகாக படமாக்கப்பட்டுள்ளது . சந்திரபாபுவின் உடல்மொழி மிகவும் ரசிக்கப்படும் வகையில் அமைந்துள்ளது . இந்தப்பாடலின் வரிகள் அரசியல்வாதிகளையும் ,பொய்க்கணக்கு காட்டி அரசை ஏமாற்றும் பணமுதலைகளையும் நேரடியாக சாடுகின்றன . பெரிய மனுசன் என்னும் போர்வையில் இருந்துகொண்டு மிகக் கீழ்த்தரமான் செயல்களைச் செய்பவர்களையும் கேலி செய்கிறது இந்தப்பாடல் .

ஒரு அரசியல்வாதி ஒரு ஆண்டு முழுக்க கொடுத்த பேட்டிகளை ஒரு முறை தொகுத்து படித்துப்பாருங்கள் , உங்களுக்கு அவ்வளவு சிரிப்பு வரும் . நம்மை எவ்வளவு எளிதாக ஏமாற்றி உள்ளனர் என்பதும் புரியும் .

ஈழத்தமிழர்கள் அழிக்கப்படுவதற்கு காரணமாக இருந்துவிட்டு , தனி ஈழம் சாத்தியமில்லை என்று சொல்லியவர் தற்போது தனி ஈழம் அமைக்கப் பாடுபடுவேன் என்று சொல்லும் போது சிரிப்பு வருது !

ஒரு நாளைக்கு 28 ரூபாய் மேல் சம்பாதிப்பவர்கள் ஏழை அல்ல என்று சொல்லும் மத்திய அரசை நினைத்துச்  சிரிப்பு வருது !

இடைத்தேர்தலுக்கு முன்பு வரை கூடங்குளம் அணுமின்நிலையம் வேண்டாம் என்று சொல்லியவர் ,இடைத்தேர்தலுக்கு பின் கூடங்குளம் அணுமின்நிலையம் செயல்படும் ;தயாராகும் மின்சாரம் நிறைய வேண்டும் என்று சொல்லும்போது சிரிப்பு வருது !

நாட்டில் ,உலகில் ,பிரபஞ்சத்தில் எவ்வளவோ விசயங்கள் நடந்து இருக்கும் போது சம்பந்தமே இல்லாத விசயத்தை தலைப்பு செய்தியாக போடும் நாளிதழ்கள் மற்றும் வாரயிதழ்களைப் பார்க்கும் போது சிரிப்பு வருது !

தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்களைப் பார்க்கும் போது அவ்வளவு சிரிப்பு வருது ! புதிதாக சின்னத்திரை நடிகர் நடிகைகள் அசத்தும் புதிய விளம்பரங்களான " சென்னைக்கு மிக அருகில் ...." என்று ஆரம்பிக்கும் ரியல் எஸ்டேட் விளம்பரங்கள் வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கின்றன. 1980 களில் வெளிவந்த ஒரு திரைப்படத்தில் ஒரு காட்டுப்பகுதியை பார்த்து கவுண்டமணி பேசும் வசனம் " இங்க இப்படி ஒரு இடம் இருக்கா , எங்க ஆளுகளுக்குத் தெரிஞ்சா " சென்னைக்கு மிக அருகில் " னு பிளாட் போட்டு வித்துருவாய்ங்க " . 30 வருடங்களுக்குப் பிறகும் நாம் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறோம் !

இதற்கு முன்பு வரை இந்திய ஜனாதிபதி பதவி ஒன்றுக்கும் உதவாத ரப்பர் ஸ்டாம்ப் பதவி என்று தான் நினைத்தேன் . இப்போது தான் தெரிகிறது 200 கோடி ரூபாய் வரை மக்கள் பணத்தில் ஊர் சுற்றும் உரிமை உள்ள பதவி என்று . இங்கு ஒரு விசயம் கவனிக்க வேண்டும் " 28 ரூபாய் சம்பாதிப்பவர் ஏழை அல்ல " அதே சமயம் எந்த அதிகாரமும் இல்லாத நாட்டின் முதல் குடிமகன்/ குடிமகள் 200 கோடி வரை செலவு செய்யலாம் . சிரிப்பு வருது !

டாஸ்மாக் வருமானத்தில் இலவசங்கள் கொடுக்கும் அரசுகளை நினைக்கும்போது  சிரிப்பு வருது ! இதில் புதிய வகை மதுவுக்கு செயல் விளக்கப் பயிற்சி வேறு கொடுக்கப்படுகிறதாம் .ஒசத்தியான சரக்கு விக்க எலைட் பார் வேறு வருதாம் .அப்படியே ஒவ்வொரு டாஸ்மாக் பக்கத்திலையும் ஒவ்வொரு  காவல் நிலையம் கொண்டு வந்தா பொதுமக்கள் கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம் . மாதக் கடைசியில் காவலர்கள் வழக்கு பதிவு செய்ய சந்து சந்தாக நிக்க வேண்டிய நிலைமையும் வராது . 

இதையெல்லாம் நினைக்கும் போது என்னை நினைத்து எனக்கே சிரிப்பு வருது !உலகத்த விட்டுடுவோம் . நீங்க கடைசியா எப்ப வாய் விட்டு சிரிச்சீங்க ??? ( நான் "கலகலப்பு" படம் பார்க்கும் போது வாய் விட்டு கண்ணில் நீர் வரச் சிரித்தேன் )  வாய் விட்டு  சிரிக்கும் தருணங்கள் குறைந்து வருகின்றன . வாய் விட்டு  சிரிக்கும் தருணங்களை அதிகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்  . எளிமையான மனதைப் பெற்றால் மட்டுமே நம்மால் வாய் விட்டு சிரிக்க முடியும் .

சிரிப்பு வருது !
      
மேலும் படிக்க :


உண்மையான கொண்டாட்டம் !

Friday, May 18, 2012

விகடன் வரவேற்பறையில் !

கடந்த 4 வருடங்களாக ஆனந்த விகடனை தொடர்ந்து படித்து வருகிறேன் . நிறைய விசயங்களை ஆக்கப்பூர்வமாக பதிவு செய்கிறது . விகடன் மூலம் நான் பெற்றவை அதிகம் . ஏன் ப்ளாக் (வலைப்பூ ) எழுதுவது கூட விகடனிடம் இருந்து பெற்றது தான் . 2009 ஆண்டே வலைப்பூ எழுத தொடங்கி பிறகு  நிறுத்திவிட்டேன் . மீண்டும் வலைப்பூ எழுத காரணம் விகடன் . விகடனின் எனர்ஜி பக்கங்களில் வலைப்பூ பற்றிய தெளிவான கட்டுரை படித்த பிறகு தான் மீண்டும் வலைப்பூ எழுத ஆரம்பித்தேன் . Blog aggregator பற்றி விகடன் கட்டுரை மூலம் தான் தெரியும் .ஓவ்வொரு முறையும் விகடன் வரவேற்பறை பார்க்கும் போது நமது வலைப்பூ  இதில் இடம் பெறாதா என்று ஏங்கியதுண்டு .இப்பொழுது விகடன் (16-05-12) வரவேற்பறையில் எனது வலைப்பூ வந்தது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கிறது . "  மரம் வெட்டுங்கள் " கட்டுரை  என் சொந்த கட்டுரை அல்ல . விகடனின்  பாராட்டு  அந்தக்  கட்டுரையை எழுதியவருக்குப் போய் சேரட்டும் .
இதில் சிறு வருத்தம் என்னவென்றால் கடந்த இரண்டு மாதங்களாக நான் விகடன் வாங்குவதில்லை .அதனால் எனது blog விகடனில் வந்தது 14-05-12 அன்று தான் தெரியும் .தற்போது " வட்டியும் முதலும் " பகுதி மட்டுமே பயனுள்ளதாக உள்ளது . எப்படியும் " வட்டியும் முதலும் "  தனிப் புத்தகமாக வந்துவிடும் அப்போது படித்துக் கொள்ளலாம் என்று இப்போது விகடன் வாங்குவதில்லை . அட்டைப்படத்தில் சினிமா நடிகர் நடிகைளைப் பார்க்கும் போது எனக்கு அவ்வளவு கோபம் வருகிறது . சினிமா , அரசியல் தவிர்த்து வாழ்க்கையே இல்லையா . முன்பை விட இப்பொழுது அதிக சினிமா ,அரசியல் செய்திகளை விகடன் வெளியிடுகிறது . அரசியல் , சினிமா பற்றி எழுதுவதில் தவறில்லை . சினிமாக்காரர்கள் பற்றியும் , அரசியல்வாதிகள் பற்றியும் அதிக செய்திகள் வருவது தான் நெருடலாக உள்ளது . சினிமாக்காரர்கள், அரசியல்வாதிகள் பேட்டிகள் இடம் பெறாத வார இதழ்கள் இல்லவே இல்லை . இன்பாக்ஸ் , வலைபாயுதே என்று எங்கு பார்த்தாலும் அரசியல் ,சினிமா தலைகள் தான் தெரிகின்றன .  தயவு செய்து சினிமா மற்றும் அரசியல் சார்ந்தவர்களை மட்டும் அட்டைப்படத்தில் போடாதீர்கள் . சமூகத்தில் வாழும்  அனைவருக்கும் வாய்ப்பு  கொடுங்கள் . அரசியல் அல்லது  சினிமாவுக்கு வந்தால் மட்டுமே புகழ் பெறலாம் என்ற மாயத் தோற்றத்தை ஊடகங்கள் தொடர்ந்து உருவாக்குகின்றன .

நன்றி - விகடன் .

மேலும் படிக்க :

 ஊடகங்களும் அரசியல் முதலாளிகளும் ! 
..................................................................................................................................................................Friday, May 11, 2012

ஊடகங்களும் அரசியல் முதலாளிகளும் !

ஊடகங்கள் அரசின் கைப்பிள்ளையாகவே செயல்படுகிறது . அரசிற்கு சாதகமான விசயங்களில் மட்டுமே அநேக ஊடகங்கள் கவனம் செலுத்துகின்றன . ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்பதெல்லாம் சும்மா . எந்த முக்கியத்துவம் வாய்ந்த விசயத்தையும் மக்களை எளிதில் மறக்கச் செய்யும் வேலையை ஊடகங்கள் சரியாகச் செய்கின்றன .ஒரு பத்து நாளைக்கு தொழில் செய்ய ஊடகங்களுக்கு எதாவது விசயம் தேவை அவ்வளவு தான் .

அலெக்ஸ் பால் மேனன் கடத்தப்பட்டதை வைத்து நிறைய பேர் விளம்பரம் தேடிக்கொண்டனர் .சேர்க்கை நேரம் என்பதால்  அவர் படித்த கல்லூரி அவரது பழைய புகைப்படங்களை தேடி எடுத்து செய்திதாள்களில் தினமும் பிரசுரித்தது . விகடன் எங்களது பழைய மாணவ பத்திரிக்கையாளர் என்று சொல்லிக்கொண்டது . பேஸ்புக்கில் இருப்பவர்கள் எனது நண்பனின் நண்பன் ,அலெக்ஸ் பால் மேனன் என்றனர் . இவ்வாறு அவரை வைத்து நிறைய பேர் புகழ் அடைந்தனர் . அலெக்ஸ் பால் மேனன் குறித்து இவ்வளவு செய்திகளை சேகரித்தவர்கள் , அவரை காப்பதற்காக உயிரிழந்த பாதுகாவலர்கள்  பற்றி இவ்வளவு செய்திகளை ஏன் சேகரிக்கவில்லை ?

இங்கு நாம் கவனிக்க வேண்டியது , ஒரு மாவட்ட ஆட்சியர் அதாவது ஒரு உயர் அரசு அதிகாரி கடத்தப்பட்டுள்ளார் .அலெக்ஸ் பால் மேனன் இடத்தில் யார் இருந்திருந்தாலும் கடத்தப்பட்டு தான் இருப்பார்கள் . மாவோயிஸ்ட்டுகளின் நோக்கம் அலெக்ஸ் பால் மேனன் அவர்களைக் கடத்துவது அல்ல . அவர்களின் நோக்கம் ஒரு மாவட்ட ஆட்சியரைக் கடத்துவது .ஏன் ஒரு மாவட்ட ஆட்சியரைக் கடத்த வேண்டும் ? தொடர்ந்து அரசு அதிகாரிகளும் , சுற்றுலாப் பயணிகளும் கடத்தப்படுவதற்கு என்ன காரணம் ? மீண்டும் இதுபோல் நடக்காமல் இருக்க என்ன செய்யலாம் ? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை தேடாமல் ஒட்டு மொத்த ஊடகங்களும் மையம் கொண்ட ஒரு புள்ளி " அலெக்ஸ் பால் மேனன் " . அலெக்ஸ் பால் மேனன் பற்றிய தகவல்களைப் பரப்பவே நேரம் எடுத்துக்கொண்டனர் . அவரை வைத்து 12  நாட்களுக்கு தொழில் செய்தனர் அவ்வளவுதான் .

அரசியல் தொழில் செய்பவர்களின் அத்துமீறல்கள் தான் அனைத்திற்கும் காரணம் . இயற்கையைப் பற்றியோ , பல நூற்றாண்டுகளாக இயற்கையை நம்பி வாழும் மக்களைப் பற்றியோ எந்த புரிதலும் , கவலையும் இல்லாமல் நாடெங்கும் பரவியிருக்கும் கனிம வளங்களை பணம் பண்ணுபவர்களுக்கு பிடுங்கி கொடுக்கும் வேலையை மிகத் தெளிவாக செய்து வருகின்றனர் , அரசியல் தொழில் செய்பவர்கள் . அதனால் , இரு வகையான இனங்கள் பாதிக்கப்படுகின்றன . ஒன்று கேள்வி கேட்கத் தெரியாத விலங்கினம் ( வன விலங்குகள் மற்றும் உயிரினங்கள் ) , மற்றொன்று கேள்வி கேட்கத் தெரிந்த விலங்கினம் ( மனிதர்கள் ).

புலி ,சிறுத்தை , யானை ,காட்டெருமை போன்ற விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதற்கு காரணம் , நாம் மட்டுமே . காடுகளின் பரப்பளவு குறைவதால் தான் அவை ஊருக்குள் வருகின்றன . தமிழ்நாட்டில், வால்பாறைப் பகுதியில் அவ்வப்போது சிறுத்தையோ ,யானையோ வருவதற்கு காரணம் , மலையின் உச்சிப் பகுதியில் நிறைய மரங்கள் வெட்டப்பட்டு தேயிலை எஸ்டேட்களாக மாற்றப்படுவது தான் .நாம் சிறுத்தைகளின் இடத்தைப் பிடிக்கும் போது சிறுத்தை நம் இடத்தை நோக்கி வர உந்தப்படுகிறது .சிறுத்தைகளைக்   குற்றம் சொல்வதில் நியாயம் இல்லை . இந்த பூமியில் வாழ நமக்கு எவ்வளவு உரிமை உள்ளதோ அதே அளவு உரிமை சிறுத்தைக்கும் மற்ற உயிரினங்களுக்கும் உண்டு . பூமி எல்லோருக்கும் சொந்தம் .

கேள்வி கேட்கும் விலங்குகளாக பழங்குடியின மக்கள் , மாவோயிஸ்ட்டுகள் இருக்கிறார்கள் . அவர்களுக்கான நீதி மறுக்கப்படும் போது ஆயுதத்தைக் கையில் எடுக்கிறார்கள் . ஆயுதம் என்றவுடன் 5000 மையில் தூரம்  அணுகுண்டுகளைக் தூக்கி சென்று தாக்கும் அக்னி-5 என்று நினைத்துக்கொள்ளக் கூடாது . வருகிற வருவாயில் அதிக பணத்தை ராணுவத்திற்காக செலவழித்த பிறகும் ஆயுதம் போதவில்லை என்று சொல்லும் இந்திய அரசையும் நீங்கள் நினைத்துக்கொள்ளக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன் . மாவோயிஸ்ட்டுகளின் நோக்கம் சுவிஸ் வங்கியில் பணம் சேர்ப்பது அல்ல என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் . மக்களின் உதவியுடன் மக்களுக்காகவே போராடுகின்றனர் , அவர்களின் போராடும் முறை தான் தவறு .

நாட்டில் வாழும் உரிமை உள்ளவர்கள் ( பொதுமக்கள் ) தங்கள் கோரிக்கைகள்  நிறைவேற சாலை மறியலோ ,உண்ணாவிரதமோ செய்து அரசுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர் . உரிமை மறுக்கப்பட்டவர்கள் ( மாவோயிஸ்ட்டுகள் ) அரசு அதிகாரிகளைக் கடத்தி தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு இயந்திரத்தைத் தூண்டுகின்றனர் . கடந்த நான்கு மாதங்களில் நிறைய அரசு அதிகாரிகள் நாடெங்கிலும் கடத்தி விடுவிக்கப்பட்டுள்ளனர் , யாரும் கொல்லப்படவில்லை , கடத்தலை தடுத்தவர்கள் மட்டுமே கொல்லப்பட்டனர் . யாரையும் கொல்வது குற்றம் தான் . ஆனால் ,மக்களைக் காக்கிறோம் என்ற பெயரில் அரசின் முதல் அடியே கொலை தான் .அந்த கொலைக்கு பெயர்  " என்கவுன்டர் " ," பசுமை வேட்டை " . அரசின் நடவடிக்கைகளால் நாடெங்கிலும் பாதிக்கப்பட்டுள்ள சாதாரண மக்களின் எண்ணிக்கை ஏராளம் . சொந்த மக்களை ஒடுக்குவதில் இலங்கையும் இந்தியாவும் ஒன்று தான் போல . தங்களை யாரும் எந்தக் கேள்வியையும் கேட்கக் கூடாது என்று தான் உலகெங்கிலும் உள்ள அதிகார வர்க்கம் நினைக்கிறது .இதில் சீனா , இலங்கை , அமெரிக்கா ,இந்தியா என்ற பேதமெல்லாம் இல்லை . இந்த விசயத்தில் எல்லா நாடுகளும் ஒன்று தான் .

அரசிடம் நேர்மை என்பதே இல்லை . ஏனெனில் அதன் அங்கத்தினருக்கு நேர்மை என்பது அவசியமில்லை . வெட்கமே இல்லாமல் எப்படியெல்லாம் மக்கள் பணத்தை மக்களுக்கு பயன்படுத்தாமல் சுகபோகமாக வாழலாம் என்பது மட்டுமே முக்கியம் . மற்றதெல்லாம் அவசியமில்லை . மாவோயிஸ்ட்டுகளிடம் நேர்மை இருக்கிறது ,வீரப்பனிடமும் நேர்மை இருந்தது . வீரப்பன் இருக்கும் வரை , அவர் இருப்பதாக சொல்லப்படும் அனைத்து வனப்பகுதிகளும் வன அதிகாரிகள் இல்லாமலேயே மிகவும் பாதுகாப்பாக இருந்தன .அவர் இறந்த பிறகு நிலைமை தலைகீழ் . அவர் இருந்த பகுதிகளில் தற்போது வனம் பாதிக்கப்பட்டுள்ளது . இதே போல் தான் உலகெங்கிலும் , எங்கெல்லாம் போராட்டக்குழுக்கள் உள்ளனவோ அங்கெல்லாம் வனம் காக்கப்படுகிறது என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது .

வனம் காக்கப்படுவது தான் அரசுகளுக்கு பிடிக்கவில்லை . ஒவ்வொரு நிறுவனத்திற்கு ஒவ்வொரு  மாநிலமாக விலை பேசி வருகிறார்கள் . அதற்குத்  தடையாக இருப்பவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் . நியாயமான முறையில் உண்ணாவிரதம் இருந்தாலும் ( கூடங்குளம் ) கண்டுகொள்வதில்லை . ஆயுதம் எடுத்தாலும் கண்டுகொள்வதில்லை . எங்கள் உரிமைகளுக்காக வேறு எப்படித் தான் நாங்கள் போராடுவது ? 

பணம் சம்பாதிப்பதை நோக்கமாக கொண்டே நிறைய ஊடகங்கள் இயங்குகின்றன . அவை , மக்கள் மத்தியில் ஒரு மாய உலகை காட்சிக்கு வைக்கின்றன . உண்மைகள் அனைத்தும் லாவகமாக மறைக்கப்படுகின்றன . தொடர்ந்து மக்களை சுயநலம் மிக்கவர்களாக மாற்றுகின்றன . எந்த விசயத்திலும் மக்கள் ஒன்று கூடாமல் இருப்பதற்கு தேவையான அனைத்தும் ஊடகங்கள் மூலம் செய்யப்படுகின்றன .

அரசின் கட்டுப்பாட்டில் இருந்து ஊடகங்கள் வெளியே வர வேண்டும் . கடவுளே ( இருக்காரா? இல்லையா ?)  உண்மையான  நேர்மையான ஊடகம் எது என்று எனக்கு அடையாளம் காட்டு .... ஐயோ கரன்ட் போச்சே !!!  


மேலும் படிக்க :

சமூகத்தின் மீது விழுந்த அதிகாரத்தின் அடி !
....................................................................................................................................................................

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms