Monday, December 3, 2018

இதிலென்ன இருக்கு பேசுவோம் -7 !காமம் என்ற வார்த்தையே இங்கு தவறாகத்தான் பார்க்கப்படுகிறது , தவறாகத்தான் புரிந்து கொள்ளப்படுகிறது. ஒதுக்கி ஒதுக்கியே காமத்தை இயல்பில்லாத ஒன்றாக நினைக்கப் பழகி விட்டோம். மற்ற உயிரினங்களில் எப்படியோ தெரியாது. ஆனால் மனித இனத்தில் காமம் முக்கிய பங்கு வகிக்கிறது. காமமே நம்மை வழிநடத்துகிறது.மனித இனத்தில் பெண் இல்லாத உலகமும் சாத்தியமில்லை , ஆண் இல்லாத உலகமும் சாத்தியமில்லை.அதே போல காமம் இல்லாத மனித இனமும் சாத்தியமில்லை.

காமத்தைப் பொறுத்தவரை எல்லா மனிதர்களும் சமமில்லை என்று தான் சொல்ல வேண்டியுள்ளது. கைரேகை போலவே ஒவ்வொருவரின் காமமும் தனித்துவமானது. அதுவே புரிந்து கொள்வதில் சிக்கலாகவும் மாறிவிடுகிறது. குழந்தைகளாக இருக்கும்போது பாலின பேதமில்லாமல் விளையாடுகிறோம். பாலுறுப்புகள் மூலம் ஆண் ,பெண் என்ற பேதம் தெரிய வருகிறது. பல்வேறுவிதமான விளையாட்டுகளின் ஊடே அப்பா -அம்மா விளையாட்டும் விளையாடப்படுகிறது. நான்கைந்து வயதுகளில் அந்த விளையாட்டு யாரோ ஒருவர் மூலம் எப்படியோ அறிமுகமாகிவிடுகிறது. ஒருத்தரை ஒருத்தர் கட்டிப்பிடிப்பது தான் நடக்கும். அதுவும் பெரியவர்கள் கவனத்திற்கு வந்த பிறகு நாலு சாத்து சாத்தி திருத்தப்படும். அப்புறம் குறிப்பிட்ட வயதிற்கு பிறகு பெண்களை ஆண்களுடன் விளையாட விடமாட்டார்கள். பதினான்கு ,பதினைந்து வயதுகளில் பாலியல் தொடர்பான சந்தேகங்கள் எழும்.நண்பர்களின் மூலம் பலான புத்தகங்கள் , பலான படங்கள் அறிமுகம் ஆனாலும் ஒரு தெளிவும் இருக்காது. குழந்தை எப்படி உருவாகிறது , எதன் வழி பிறக்கிறது என்பதேயே தாமதமாகத் தான் அறிந்து கொள்ள முடிந்தது. நிறைய தமிழ்த் திரைப்படங்கள் பெண்களின் கழுத்தில் முத்தம் வைத்தால் குழந்தை பிறக்கும் என்பது போன்ற பிம்பத்தையே உருவாக்கி வைத்திருந்தன. கதாநாயகனும் , கதாநாயகியும் கட்டிப்பிடிப்பதைக் கூட பொய்யென்று நம்பினோம். ரெண்டு பேரையும் தனித்தனியாக படமெடுத்து அப்புறம் இணைச்சு விட்டு கட்டிப்பிடிப்பது போல காண்பிக்கிறாங்க என்றே நினைத்தோம். இன்றைய ஆன்ட்ராய்டு வாழக்கையில் அந்த அளவிற்கு நிலமையில்லையென்றாலும் கூட பதின்பருவத்தினர் சரியாக வழிநடத்தப்படுவதில்லை. இருபாலர் பள்ளிகளில் படித்தவர்கள் எதிர் பாலினம் மீதான ஈர்ப்பை கொஞ்சம் நெருக்கமாகவே உணர்ந்திருப்பார்கள். பல்வேறு வகுப்புகளில் உடன்படித்த நம்மை வசீகரித்த பெண்களின்/ ஆண்களின் நினைவுகளில் இன்றும் நம்முள் நிச்சயம் இருக்கும். கிரஷ் (Crush) என்று சொல்வது எல்லா காலகட்டங்களிலும் எல்லோருக்கும் இருக்கும். காதல் கூட வராமல் போகலாம் கிரஷ் வராமல் போகவே போகாது.

பள்ளிப்படிப்பு முழுமையும் அரசுப்பள்ளி . ஒன்றாவதிலிருந்து ஐந்தாவது வரை இருபாலர் பள்ளி. ஆறிலிருந்து பனிரெண்டு வரை ஆண்கள் பள்ளி என்றாலும் பதினொன்று , பனிரெண்டாவதில் மட்டும் இருபாலர் பள்ளியாக அப்போது செயல்பட்டது. பெண்கள் பள்ளியில் இடவசதி பத்தாததால் பதினொன்றாவதும் , பனிரெண்டாவதும் ஆண்கள் பள்ளியில் செயல்பட்டது . இந்த காரணத்திற்காக பெண்களை அடுத்து படிக்க வைக்காதவர்களும் இருந்தார்கள். இதே காரணத்திற்காக வேறு பள்ளிக்கு தங்களின் பெண் பிள்ளைகளை மாற்றியவர்களும் இருந்தார்கள். ஒரே அறையில் மாணவர்களும் ,மாணவிகளும் நூறு பேர் நெருக்கியடித்துக் கொண்டு படித்தாலும் பள்ளியில் இருக்கும் போது மாணவ மாணவிகள் பேசிக்கொண்டதில்லை. ஓய்வு நேரத்தில் மாணவர்கள் ஒரு மரத்தடியிலும் , மாணவிகள் ஒரு மரத்தடியிலும் அமர்ந்திருப்பார்கள். வேதியியல் ஆசிரியர் , யாராவது ரெண்டு பசங்களைக் கூப்பிட்டு, " போய் பொண்ணுங்கள வரச்சொல்லுங்க " என்று சொல்லுவார். நாங்க போய் அவர்களின் முகம் பார்த்து சொல்வதற்கு பதிலாக மரத்தைப் பார்த்து கெமிஸ்ட்ரி சார் வரச்சொன்னார் என்று சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் வந்து விடுவோம். இப்படியான சூழல் தான் அப்போது நிலவியது.

இதுவரையிலான நமது வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட காலகட்டம் எந்தக்காலத்திலும் மறக்க முடியாத பொன்னான நினைவுகளைக் கொடுத்திருக்கும். எனது வாழ்க்கையில் அப்படியான காலகட்டம் இளங்கலை கல்லூரிக் காலம் தான். அதனுடன் எதனையும் பதிலீடு செய்ய முடியாது. கிராமத்து மாணவர்களுக்கு இயல்பிலேயே இருக்கக்கூடிய பயத்தை , தயக்கத்தை பெருமளவு உடைத்தது அந்த கல்லூரி வாழ்க்கை தான். இப்போதும் பயமும் தயக்கமும் இருக்கிறது தான் என்றாலும் அப்போதிருந்த அளவிற்கு இல்லை. பெண்களைப் பற்றி புரிந்து கொள்ள ஆரம்பித்ததும், ஏன் பேச ஆரம்பித்ததே அப்போது தான் என்று தான் சொல்ல வேண்டும். அது ஒரு கிறித்துவ கல்லூரி அங்கு பெண்களுடன் பேச எந்த தடையும் இல்லை. எப்போதும் எந்த இடத்திலும் பெண்களுடன் பேச முடியும்.கல்லூரி சென்ற முதல் நாளே வகுப்பறையில் பெண்கள் ஆண்கள் கலந்து தான் உட்காரவே வைக்கப்பட்டோம். பெண்களையும் ,பெண்களின் உணர்வுகளையும் மதிக்கக் கற்றுக்கொண்டதும் அப்போது தான்.

வகுப்பறையில் மாணவர்கள் , பெண்கள் பெஞ்சில் பெண்களுடன் அமர்ந்திருந்தாலும் வகுப்பெடுக்க வரும் விரிவுரையாளர்கள் மாறி உட்காரச் சொல்ல மாட்டார்கள். பாலின சமத்துவம் கல்லூரி எங்கும் இருந்தது. முழு சுதந்திரமும் இருந்தது. அதே நேரத்தில் எல்லைக்கோட்டைத் தாண்டாதவாறு கண்காணிக்கப்பட்டோம். நாங்களும் அதற்கேற்றவாறு நடந்து கொண்டோம். ஜூனியர் சீனியர் என்ற பேதமெல்லாம் பெரும்பாலும் இருந்ததில்லை. நண்பர்கள் எல்லோரும் மரத்தடியில் வட்டமாக அமர்ந்து மதிய உணவை பகிர்ந்து உண்போம். கல்லூரிக்குச் செல்லும் வரை எந்த மேடையும் ஏறாமல் இருந்த எனது மேடை பயத்தை போக்கியது அந்த கல்லூரிக் காலம் தான். எழுதுவதற்கும் அப்போதே ஊக்குவிக்கப்பட்டேன். நான்கு குழுவாக பிரிந்து விளையாடும் விளையாட்டு போட்டிகள் அனைத்திலும் பங்கு பெற்றேன். ஒவ்வொருவருக்கும் தங்களது திறமையை வளர்த்துக்கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டது. அவ்வப்போது கலந்தாய்வுகளும் நடக்கும். ஓசை காளிதாசன் ஒருமுறை கல்லூரிக்கு வந்திருந்த போது தான் புல்வெளிக்காடுகளின் முக்கியத்துவத்தை தெரிந்துகொள்ள முடிந்தது. வருடத்திற்கு ஒரு முறை அதுவும் ஒரு நாள் என்று மூன்று முறை தான் கல்லூரி பயணம் சென்றோம். அவ்வளவு அற்புதமான நாட்கள் அவை.

எங்கள் துறை மட்டுமல்லாமல் மற்ற துறைகளில் படிப்பவர்களும் பெருமளவில் நண்பர்களாக இருந்தார்கள். எல்லாத்துறை ஆசிரியர்களும் எல்லோருக்கும் ஏதோ ஒரு விதத்தில் அறிமுகமாகி விடுவார்கள். கல்லூரி முழுவதும் நட்பூக்கள் தான். இப்படி அந்தக் கல்லூரிக் காலம் குறித்து பேசிக்கொண்டே போகலாம். அந்தக் காலம் ஒருபோதும் திரும்பிவிடப் போவதில்லை. ஆனால் அந்த நினைவுகள் என்றும் மனதை விட்டு அகலாது. அதன் பிறகு முதுகலை படிப்பு தமிழகத்தின் பெரும்பாலான கல்லூரிகள் போலவே ஆண் -பெண் பேசுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் பேசிக் கொள்வோம் என்றாலும் இயல்பாக சுதந்திரமாக பேசிக் கொள்ளும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. எதிர் பாலினத்தை அதாவது ஆண்களை பெண்களும் , பெண்களை ஆண்களும் புரிந்து கொள்வதில், புரிந்து கொள்ள முயற்சிப்பதில் தான் எல்லாமும் இருக்கிறது.

பெண்கள் அறிமுகம் ஆகும் போது அவர்களுடன் உரையாடவே அதிகம் விரும்பியிருக்கிறேன். அவர்களை நேரில் பார்த்து தான் ஆக வேண்டும் என்றெல்லாம் யோசித்ததில்லை. நாம் சொல்வதை கேட்பதற்கு ஒரு ஆள் இருந்தால் போதும் என்று தான் தோன்றும். அதிலும் எதிர் பாலினமாக இருக்கும் போது இயல்பாகவே நமக்கு ஒரு ஈர்ப்பு உருவாகிவிடும். இப்படியான நட்பே அவ்வப்போது வந்து போய்க்கொண்டு தான் இருக்கிறது. ஏதோ ஒரு காரணத்தால் உரையாடல் தொடங்கும் , வளரும் அப்புறம் முடிந்துவிடும். அதன் பிறகு அவர்களை ஒருபோதும் தொந்தரவு செய்ததில்லை. பெரும்பாலும் எந்த பெண்ணாக இருந்தாலும் ஒரு ஆணிடம் நம்பிக்கை ஏற்படாமல் எந்த தகவலையும் பகிர மாட்டார்கள். ஏன் பேசவே முன்வர மாட்டார்கள். கவனமாக தவிர்த்து விடுவார்கள். தங்களுக்கு பிடிக்காத எதையும் எந்த எதிர்வினையும் ஆற்றாமல் தவிர்த்து விடுவதை பெண்களின் வலிமையான ஆயுதம். இதை சரியாக பயன்படுத்தினால் யாராலும் பெண்ணை நெருங்க முடியாது. பெண்களின் இயல்புகளை ஆண்களும் ஆண்களின் இயல்புகளை பெண்களும் புரிந்து கொள்ளாமல் இங்கு எதுவும் மாறாது. எவ்வளவு படித்திருந்தாலும் , எவ்வளவு பெரிய வேலை பார்த்தாலும் ,எவ்வளவு சம்பாதித்தாலும் ஒரு பயனும் இல்லை. பெண்களின் இயல்புகளை புரிந்து கொள்ள ஆண்களால் 'முயற்சி' மட்டுமே செய்ய முடியும் என்றாலும் அதையும் பெரும்பான்மையான ஆண்கள் செய்வதில்லை என்பது தான் பிரச்சனையே. ஆனால் ஆண்களின் உளவியலை பெண்கள் எளிதாக புரிந்து கொள்கிறார்கள்.

காமத்திற்கும் எதிர் பாலினத்தை புரிந்து கொள்வதற்கும் தொடர்பிருக்கிறதா ? நிச்சயம் தொடர்பிருக்கிறது.கல்லூரிக் காலங்களில் சைட் அடிக்கும் போது கூட பத்தாவது வரை படிக்கும் மாணவிகளை சைட் அடிக்கக்கூடாது என்று தீர்மானித்து இருந்தோம். பதினொன்னாவது , பனிரெண்டாவது படிக்கும் மாணவிகளை அவர்கள் அணியும் ரிப்பனின் நிறத்தைக் கொண்டு கண்டறிந்து சைட் அடித்தவர்கள் தான் நாங்கள். அப்படி இருக்கும் போது அவர்கள் எங்களுடன் பேச முயற்சித்தால் அதை கவனமாக தவிர்த்தோம். அதே நேரம் கல்லூரி மாணவிகள் என்றால் பேசத் தயாராகவே இருந்தோம். பெண்களை பெண்களாகவே பார்க்க பிடிக்கும். பேதங்கள் எப்போதும் பார்த்ததில்லை. நாம் எல்லாவற்றையும் மிகைப்படுத்துவதால் தான் இயல்பாக இருக்காமல் நடிக்கப் பழகிக் கொள்கிறோம்.

சமூக மதிப்பீடுகள் என்ற பெயரில் நிறைய அழுத்தங்கள் மனிதர்களுக்கு கொடுக்கப்படுகின்றன. குடும்பம் என்ற அமைப்பு தான் அதிக அழுத்தத்தைக் கொடுக்கிறது. பாலின சமத்துவத்தை குழந்தைப் பருவத்திலிருந்தே பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டும். 14 வயது வரை ஆண்பிள்ளைகளையும் , பெண்பிள்ளைகளையும் குழந்தைகளாகவே நடத்தி அவர்களுக்கு எதிரான வன்முறைகளிலிருந்து அவர்களை காக்க வேண்டியது நம் கடமையாகும். மற்ற வன்முறைகளை விடவும் குழந்தைக்களுக்கு எதிரான வன்முறைகள் நம்மை நிம்மதியிழக்கச் செய்கின்றன. கல்வியின் மூலமே எல்லா குழந்தைகளையும் சென்றடைய முடியும் என்றாலும் ஒரு சில கல்விக்கூடங்களில் பணிபுரியம் சில அயோக்கியர்களால் அங்கேயும் குழந்தைகள் மீதான வன்முறை நிகழ்கிறது. 14 வயதிற்கு பிறகு உடலில் நடக்கும் மாற்றங்களை தெளிய வைப்பதன் மூலம் எதிர் பாலினம் மீதான அதீத ஈர்ப்பு கட்டுப்படுத்தப்படும். தவறான பாதையில் செல்வதும் தடுக்கப்படும். எதிர் பாலினத்திடம் ஏமாறாமலும் இருக்க முடியும். ரெண்டும்கெட்டான் பருவத்தை சிக்கலில்லாமல் தாண்டவும் முடியும். பெண்களுக்கும் ,ஆண்களுக்கும் தனித்தனியே பள்ளிகள் , கல்லூரிகள் நடத்துவது தான் கொடுமையென்றால் இருபாலர் பள்ளிகள் ,கல்லூரிகளில் இருபாலரும் பேசிக்கொள்ளக்கூடாது என்று சொல்லுவது கொடுமையிலும் கொடுமை. பாலியல் கல்வி கொடுக்கப்பட வேண்டியதன் அவசியம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது.

ஆண்களையும் , பெண்களையும் குழந்தைப்பருவத்திலிருந்தே பிரித்தே வளர்த்து , படிக்க வைத்து, வேலைக்கும் அனுப்பிவிட்டு, கல்யாணம் என்று வரும்போது மட்டும் எதிர் பாலினத்தை தேர்வு செய்து ஒரு அறைக்குள் தள்ளி 'போங்க போய் மகிழ்ச்சியாக வாழுங்க' என்று அனுப்பி வைக்கிறார்கள். நட்பு வட்டத்தைப் பொறுத்தும் ,அவர்களின் சுய தேடலை பொருத்துமே எதிர் பாலினம் மீதான புரிதல் உருவாகும். புத்தக வாசிப்பு எதிர் பாலினம் மீதான நிறைய மனமாற்றங்களை நம்முள் ஏற்படுத்துகிறது. திரைப்படம் இன்னொரு சக்தி வாய்ந்த வழிவகையாக இருந்தாலும் தமிழ் திரைப்படங்கள் எதிர் பாலினம் மீதான தவறான புரிதலையே கட்டமைக்கின்றன. அதே நேரத்தில் உலகெங்கும் எடுக்கப்படும் நிறைய திரைப்படங்கள் நமது போலியான சமூக மதிப்பீடுகளை அடித்து நொறுக்குகின்றன. உலகத்திரைப்படங்கள் பார்க்காத வரை கற்பு , ஒருவனுக்கு ஒருத்தி,ஏதோ ஒரு காரணத்தால் பெண்களைத் தனிமைப்படுத்துவது, பெண் ,ஆண் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்பது போன்ற போலியான ஏற்பில்லாத கற்பிதங்களே நிரம்பியிருந்தன. அந்த மனநிலையிலிருந்து வெளியேறி ஒரு பொதுத்தளத்திலிருந்து ஆண்-பெண் உறவுகளை பார்க்க வைத்தது உலகத் திரைப்படங்கள் தான். கலையே மனிதர்களை மேம்படுத்தும், மனிதத்தை பரவச் செய்யும்.அதிலும் காட்சி ஊடகமே மிக வலிமையானதாகவும் அதிகம்பேரைச் சென்றடைவதாகவும் இருக்கிறது.

பெண்களை போகப் பொருளாக கட்டமைத்ததில் காட்சி ஊடகங்களின் பங்கு தான் முதன்மையானது. அதிலும் பெண்களின் மார்பகங்களை கவர்ச்சியின் உச்சமாக நிறுவியதும் அதே காட்சி ஊடகங்கள் தான். இயல்பாகவே ஒரு ஆண், பெண்ணை பார்க்கும் அவளது மாரபகத்தையும் பார்க்கவே செய்வான். மார்பகத்தை பாரக்காமல் கண்ணை மட்டும் பார்த்து பேசுபவர்கள் ஒன்றும் உத்தமர்கள் அல்ல. அதே நேரத்தில் மார்பகத்தை மட்டும் பார்த்துக்கொண்டே பேசுவதும் சரியான மனநிலையல்ல. மார்பகமும் ஒரு பாலியல் உறுப்புதான். ஒரு பெண் கருவுறுதலுக்கு தயாராக இருக்கிறாள் என்பதை ஆணிற்கு தெரிவிக்கும் சமிக்கையாகவே மார்பகங்கள் இருக்கின்றன. கலவியின் போது சுகத்தை அதிகப்படுத்தவும் , குழந்தை பிறந்த பிறகு பாலூட்டவும் பெண்களின் மார்பகங்கள் உதவுகின்றன. அதனால் இனவிருத்தியையே முதன்மையானதாக கருதும் இயற்கையின் விதிப்படி ஆண்கள் பெண்களின் மார்பகங்களை பார்க்கவே செய்வார்கள். பெண்களின் பின்புறத்தைப் பாரக்கவும் அதே இயற்கை தான் காரணமாக இருந்திருக்கிறது. நான்கு கால் விலங்கினமாக இருக்கும் போது பின்புறம் உப்பி சிவந்திருப்பதை பார்ப்பதன் மூலமே பெண் விலங்கு இனப்பெருக்கத்திற்கு தயாராக இருக்கிறது என்பதை ஆண் விலங்கு அறிந்து கொள்ளும். அதன் எச்சமே இன்றும் ஆண்கள் பெண்களின் பின்புறத்தைப் பார்ப்பதற்கு காரணமாக இருக்கிறது. மற்றபடி பெண்களின் மார்பகங்களையும் ,பின்புறத்தையும் கவர்ச்சி பொருளாக்கி காசு பார்ப்பது வணிகமாகிப் போய்விட்டது.

இயல்பாகவே ஆண்களும் பெண்களும் எதிர்பாலினத்தை ரசிப்பதையும் ,எதிர்பாலினத்தால் ரசிக்கப்படுவதையும் எப்போதுமே விரும்பக்கூடியவர்களாகத் தான் இருக்கிறார்கள் எந்த வயதிலும். விதிவிலக்குகள் (LGBT ) இருக்கின்றன. யோசித்து பாருங்கள் எதிர் பாலினம் இல்லையென்றால் உலகம் எப்படி இருக்கும் என்று. ரொம்பக் கொடூரமாக இருக்கும். ஒரு பேருந்தில் ஏறும் போது அந்தப் பேருந்தில் பெண்களே இல்லாமல் இருந்தால் ஏற்படும் மனநிலையை நினைத்துப் பாருங்கள். ஏதோ கொஞ்சம் தூரம் பயணிக்கப் போகிறோம். அங்கே பார்க்கும் பெண்களே மறுபடி சந்திப்போமா தெரியாது. ஆனால் மனம் அங்கே பெண்களின் இருப்பை விரும்புகிறது. அங்கே மட்டுமல்ல எங்கேயும் எதிர்பாலினத்தின் இருப்பு அவசியமாகிறது. முகநூலை எடுத்துக் கொள்ளுங்கள். வெறும் ஆண்நண்பர்களை மட்டும் சேர்த்திருக்கும் ஆண்களையோ , வெறும் பெண் நண்பர்களை மட்டும் சேர்த்திருக்கும் பெண்களையோ பார்த்திருக்கிறீர்களா ? பார்த்திருக்கவே மாட்டோம். நமது இருப்பை நியாயப்படுத்துவது எதிர்பாலினத்தின் இருப்பு தான்.

பெண் பொருளாக பார்க்கப்படுவதற்கு ஆண்களின் உளவியலும் காரணமாக இருக்கிறது. ஒரு பெண்ணிற்கு ஒரு ஆணை பார்த்தவுடனேயே அவன் மீது மோகம் வந்து விடாது. முடிந்தால் இன்னொரு முறை திரும்பிப் பார்ப்பார். அவ்வளவுதான். தொடர்ந்து பேசிப்பழகி நம்பிக்கை ஏற்பட்டவுடன் தான் மோகமும் வரும். அதையும் இந்தியச் சூழலில் வெளிப்படுத்த முடியாது. அதே நேரத்தில் ஒரு ஆணிற்கு பெண்ணை பார்த்தவுடனேயே மோகம் வந்துவிடும். பெண் என்று இல்லை பெண் போன்ற உருவமே அவனுக்கு கிளர்ச்சியை உண்டாக்கும். பெரும்பாலும் பெண்களை பார்ப்பதிலிருந்து தங்கள் கண்களை அவ்வளவு எளிதாக ஆண்களால் விலக்கிக்கொள்ள முடியாது. இது எல்லா வயது ஆண்களுக்குமே பொருந்தும். மற்ற ஆண்களை விட தான் எந்த விதத்தில் உசத்தி என்பதை வெளிப்படுத்தவே ஒவ்வொரு ஆணும் அதிகம் மெனக்கெடுகிறான் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். ஆண்களின் இந்த மனநிலையை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்தி உலகமயமாக்கல் மூலம் பணம் பண்ணுவதில் பன்னாட்டு நிறுவனங்கள் கருத்தாக செயல்படுகின்றன. ஆண்கள் பயன்படுத்தும் பொருள் கூட பெண்களின் மூலமே அறிமுகப்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் பெண்களையும் பொருளாகவே இருக்கும்படி செய்து பணமீட்டுகிறார்கள்.

பெண்கள் தங்களின் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை பயன்படுத்தும் அழகு சாதனங்களின் எண்ணிக்கையும் அதன் வணிகமும் மிகவும் பெரியது. தற்போது ஆண்களையும் சுவீகரிக்கத் தொடங்கியிருக்கிறது இந்தத் துறை. இதுவும் ஒரு அடிமைத்தனம் தான். இந்த அடிமைத்தனத்திலிருந்தும் பெண்கள் வெளியேற வேண்டும். ஆண்களும் தான். ஆண்கள் மற்றும் பெண்களின் உளவியல் எல்லா பெருநிறுவனங்கள் கையிலும் இருக்கின்றன. அதை அடிப்படையாகக் கொண்டே பெரும்பாலன பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன, விளம்பரப்படுத்தப்படுகின்றன , விற்கப்படுகின்றன. எப்படியிருந்தாலும் நாம் அழகு தான் என்ற மனநிலை எப்போதும் நமக்கு இருக்க வேண்டும். எப்போதும் எந்த வயதிலும் அழகாகத் தெரிய வேண்டும் என்பதையே மனித மனமும் விரும்புகிறது. அப்படி விரும்புவதில் தவறில்லை. ஆனால் அதற்காக கொடுக்கப்படும் கவனமும் ,நேரமும் ,பணமும் தனிப்பட்ட வாழ்க்கையை அதிகமும் பாதிக்கவே செய்கிறது.

இயற்கையும் பெண்ணும் ஒன்று தான். இயற்கையை ரசிப்பது போலவே பெண்களையும் ரசிக்கலாம். ஒவ்வொரு பெண்ணிற்கும் தனித்துவமான வாசனை இருக்கிறது. அந்த வாசனையை ஆண் உணரும் போது பித்துபிடித்தவன் போலாகி விடுகிறான். அதிலும் அவர்கள் சூடியிருக்கும் மலரின் மணமோடு , உடலின் வாசனையும் சேரும் போது கிறக்கமே உருவாகிவிடும். இதுவரை உலகெங்கிலும் தயாரிக்கப்பட்ட அனைத்துவிதமான வாசனைத் திரவியங்களும் பெண்ணின் உடலின் வாசனையின் முன்பு தோற்றுத்தான் போகும். ஆண்களுக்கும் அப்படியான உடலின் வாசனை இருக்குமென்றே நினைக்கிறேன். அந்த வாசனையின் குணத்தைப் பற்றி பெண்கள் தான் சொல்ல வேண்டும். இயற்கையைக் கொண்டாடுவது போலவே பெண்களையும் கொண்டாடலாம். இயற்கைக்கும் பெண்களுக்கும் மிக நெருங்கிய தொடர்பிருக்கிறது. இயற்கை இல்லாமல் இந்த பூமியில்லை. பெண் இல்லாமல் மனித இனமில்லை. ஆனாலும் இயற்கைக்கு உரிய மரியாதையையும் , பெண்ணிற்கு உரிய மரியாதையையும் மனித இனம் கொடுப்பதேயில்லை. நாள்தோறும் கொடுமைகளையே கொடுத்து வருகிறது. எவ்வளவு இன்னல்களைச் சந்தித்தாலும் ஒரு நாள் இயற்கை மீண்டு எழும். அதே போல பெண்ணும் மீண்டு எழுவாள். தன்னைத்தானே சமநிலைப்படுத்திக் கொள்ளும் சக்தி இயற்கைக்கும் இருக்கிறது , பெண்ணிற்கும் இருக்கிறது.

காதல் என்பதும் இங்கே கொஞ்சம் அதிகமாகவே புனிதப்படுத்தப்பட்டுள்ளது. எந்தவிதமான காதலாக இருந்தாலும் ஒருநாள் காமத்தில் கலந்தே ஆக வேண்டும். காதல் என்ற உணர்வு தரும் களிப்பை அனுபவிக்க வேண்டியது தான். அதற்காக காதலை புனிதப்படுத்த வேண்டியதில்லை. பலரும் காதலிடம் தங்களை முழுதாக ஒப்புக்கொடுப்பதில்லை. அப்படி முழுதாக ஒப்புக் கொடுத்தவர்கள் அந்தக் காதல் மீது எந்தவித அழுத்தமும் இல்லாமல் இருப்பார்கள். அந்தக் காதலால் சேர்ந்திருந்தாலோ பிரிந்திருந்தாலோ எந்த மாற்றமும் இருக்காது. அகமும் புறமும் சந்திக்கும் இடமாகவே காதலும் , காமமும் இருக்கிறது. ஒட்டுமொத்த பெண்களின் உருவமாகவே தன் காதலியை காதலனும் , ஒட்டுமொத்த ஆண்களின் உருவமாகவே காதலனை காதலியும் பார்க்கிறார்கள். "நீ எனக்கு மட்டும் தான் " என்ற மனநிலை காதலர்களிடம் சற்று அதிகமாகவே இருக்கிறது. காதலி இன்னொரு ஆணுடனோ , காதலன் இன்னொரு பெண்ணுடனோ பேசிச் சிரிப்பது கூட பொறுத்துக் கொள்ள முடியாததாக இருக்கிறது. இது கூட இல்லைனா அப்புறம் என்ன காதல் என்றாலும் கூட பிரிவு என்று வரும்போது அதிக அழுத்தத்தை ,நெருக்கடியை இம்மனநிலை கொடுக்கிறது. ஒரு நேரத்தில் ஒருவரைத் தான் காதலிக்கணுமா ? பலரைக் காதலித்தால் என்ன தவறு என்ற மனநிலை அதிகரித்து வரும் இன்றைய சூழலில் காதலையும் அதன் அடிப்படைவாதத்திடமிருந்து , புனிதத்தன்மையிடமிருந்து காப்பாற்ற வேண்டிய கடமையிருக்கிறது.

உலகெங்குமே பரவலாக கொண்டாப்படும் எந்த ஒரு படைப்பிலுமே காமம் தான் முதலிடம் பெறுகிறது. இது ஒரு நல்ல சிறுகதை , இது ஒரு நல்ல நாவல் ,இது ஒரு நல்ல திரைப்படம் என அறிமுகமாகும் அனைத்திலுமே காமமே ஓங்கி இருக்கிறது. இதிலிருந்து மனித மனதிற்கு எப்போதுமே காமம் பிடித்தமான ஒன்றாகவே இருக்கிறது என்பதை அறிய முடிகிறது. தமிழ் திரையிசைப் பாடல்களில் கருப்பு வெள்ளை காலங்களிலிருந்தே காமம் தூக்கலான பாடல்கள் தொடர்ந்து இடம்பெற்று வந்திருக்கின்றன. 70 களுக்கு முந்தைய பாடல்களைப் புரிந்து கொள்ளும் போது எவ்வளவு அருமையாக, பூடகமாக காமச்சுவையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என வியக்கத் தோன்றும்.வயது வந்தவர்களுக்கே அப்பாடல்கள் புரியும். 80களுக்கு பிறகான பாடல்களில் காதலன் காதலியை உறவிற்கு அழைப்பது போலவும் , அதற்கு காதலி திருமணத்தைக் காரணம் காட்டி மறுப்பது போலவுமே நிறைய எழுதப்பட்டிருக்கின்றன. அதிலும் ஒரு சுவை இருந்தது. 2000 க்கு பிறகான பாடல்களில் நேரடியான வரிகளில் எழுத ஆரம்பித்த பிறகு பாடல்களில் காமச்சுவை குறைந்துவிட்டது. இப்படி காமம் என்பது எப்போதும் நம்மைச் சூழ்ந்தேதான் இருந்து வருகிறது. முத்தக்காட்சி , படுக்கையறை காட்சிக்காக திரைப்படங்கள் கவனம் பெறுவதும் இதனால் தான்.

நம் வாழ்க்கையில் நாம் காமத்தைச் சந்தித்தே ஆக வேண்டும். யாரும் தப்பிக்க முடியாது. காமம் சார்ந்த நமது கற்பனைகளுக்கு எல்லையே கிடையாது. நடைமுறையில் எப்போதும் சாத்தியமில்லாததைக் கூட மனம் கற்பனையில் கண்டு களிப்புறும். காமத்தின் மீதான நம்பிக்கையில் தான் ' ஒரு கல்யாணம் பண்ணி வச்சுட்டா எல்லாம் சரியாகி விடும் ' என்ற மனநிலை. ஒரு விதத்தில் அது உண்மையும் கூட. காமத்திற்கு தங்களை ஒப்புக்கொடுத்தவர்களை காமம் மேலும் நெருக்கமடையவே செய்யும். பாலுறவு சரியாக நடைபெற்று வரும் தம்பதிகளிடையே சச்சரவுகள் சற்று குறைவாகவே இருக்கும். ஒரு குடும்பத்தின் ஆரோக்கியமும் , சமூகத்தின் ஆரோக்கியமும் காமத்தையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. சமூகத்தின் எந்த மட்டத்தில் பாலியல் சுதந்திரம் அதிகம் இருக்கிறதோ அவர்களே இந்த வாழ்வு தரும் அனைத்துவிதமான அழுத்தங்களிலிருந்தும் விடுபட்டு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதை அறிய முடியும். சமூகத்தின் உயர் மட்டத்தில் இருப்பவருக்கும் பிரச்சனையில்லை , கீழே இருப்பவருக்கும் பிரச்சனையில்லை நமக்குத் தான் பிரச்சனை என்றே பொது சமூகம் யோசிக்கிறது. நாம் நாகரிகம் என்று சொல்லிக்கொள்ளும் விசயங்கள் இன்னும் சென்றடையாத பழங்குடியின மக்களின் வாழ்வியலில் இது தான் காமம் என்பதை அறியாமலேயே காமத்தைக் கொண்டாடுகிறார்கள், கூடவே வாழ்க்கையையும். காமத்திற்கும் குற்றங்களுக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. சரியாக கிடைக்காத காமமே குற்றத்தை நோக்கித் தள்ளுகிறது. ஒரு சமூகம் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றால் அங்கே காமமும் சரியாக இருக்கிறது என்பதே மறைமுக அர்த்தம்.

இயற்கையின்படி , அறிவியலின்படி பாலுறவு கொள்ள விரும்பும் இருவரும் வயதிற்கு வந்திருக்க வேண்டும், இருவருக்கும் அதில் விருப்பம் இருக்க வேண்டும் என்பது மட்டும் தான். நாகரிக வாழ்வில் இது சாத்தியமில்லை. ஆனால் இன்றும் பல பழங்குடியினங்களில் இது சாத்தியம் தான். பல ஆயிரம் ஆண்டுகளாக மனித இனம் இப்படித்தான் இருந்திருக்கிறது. பாலியல் ஒழுக்கம் என்ற ஒன்று உருவான பிறகு தான் அதிகப்படியான சிக்கல்களும் உருவாகின. மனித இனம் குழுவாக வாழ்ந்த வரை, சொத்து பொதுவில் இருந்தவரை, குழந்தைகளை வளரப்பது குழுவின் கடமையாக இருந்தவரை பாலியல் சுதந்திரத்தில் எந்தச் சிக்கலும் உருவாகவில்லை. குடும்பமாக ,தனிச்சொத்தாக ,குழந்தை வளர்ப்பு குடும்பத்தின் கடமையாக ,குறிப்பாக தாயின் கடமையாக மாறிப்போனதால் பாலியல் சுதந்திரமும் கட்டுப்படுத்தப்பட்டது. இதை மீறும் போது பிரச்சனைகள் உருவாகின்றன.அனைத்து குழந்தைகளையும் அரசே தத்தெடுக்க முன்வந்தால் நிறைய பெண்களும் , ஆண்களும் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பத்தை விட்டு வெளியே வந்து விடுவார்கள். குழந்தைகளுக்காகத்தான் நிறைய குடும்பங்கள் தங்களைத் தாங்களே சாமாதனமும் ,சமரசமும் செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றன.

"இந்தியர்கள் எப்படி தங்கள் ஆடையைக் கூட முழுதாகக் களையாமல் உறவு கொள்கிறார்கள் " என ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தியாவைச் சுற்றிப் பார்த்த ஒரு ஆங்கிலேயர் சொன்னாராம். இன்றும் இந்த நிலையில் பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்காது என்றே நினைக்க வேண்டியிருக்கிறது. ஆணிற்கும் பெண்ணிற்குமான தனியிடம் என்பது இந்தியச் சூழலில் மிகவும் குறைவு. குடும்பத்தில் என்றாலும் வெளிநாடுகளைப் போல குழந்தைகள் தனியறைகளில் படுக்க வைக்கப்படுவதில்லை. ஆதலால் பாலுறவு என்பதே இருவருக்கும் விருப்பம் இருந்தாலும் குழந்தைகள் அனுமதித்தால் மட்டுமே நிகழக்கூடிய ஒன்றாக இருக்கிறது . அதிலும் குழந்தை பிறந்த பிறகு , குழந்தை வளர வளர குழந்தையைக் காரணம் காட்டி பாலுறவு மறுக்கப்படுவதும் நடக்கிறது. வயதிற்கும்
காமத்திற்கும் தொடர்பிருக்கிறது என்றாலும் உடல் காமத்தைத் தேடும் வரை காமத்தை உடலுக்கு அளிக்க வேண்டியதும் அவசியமாகிறது. தங்களுக்கு வேண்டிய காமம் குறித்து தம்பதிகளே தங்களுக்குள் வெளிப்படையாக பேசிக்கொள்வதில்லை. அன்பைப் போல , காதலைப் போல காமத்திலும் கொடுத்துப் பெறுதலே இன்பம், பேரின்பம். காதலில் கூட தனது விருப்பங்களை பேச இடம் கொடுக்கப்படுகிறது. பெரும்பாலும் காமத்தில் அப்படி இடம் கொடுக்கப்படுவதில்லை. 'ஆர்கசம் ' என்ற வார்த்தையே அறியாமல் பாலுறவில் ஈடுபடுபவர்கள் அதிகம் உள்ள நாடு தான் இந்தியா. ஆனால் இதற்கு மாறாக முந்தைய இந்தியாவில் வாழ்ந்தவர்கள் காமத்தை அவ்வளவு கொண்டாடி இருக்கிறார்கள். எவ்வளவு விதவிதமான நிலைகளில் அமைந்த சிற்பங்களை வடித்துவிட்டு போயிருக்கிறார்கள். காமம் அசிங்கம் என நம் முன்னோர்கள் நினைத்திருந்தால் தங்களின் வழிபாட்டுத் தளங்களில் இப்படி வடித்திருக்க மாட்டார்களே. அதுமட்டுமில்லாமல் வெளிப்படையாக குறி வழிபாட்டை உருவாக்கி அதை எல்லோரையும் வழிபட வைத்திருப்பதன் மூலம் எந்த அளவிற்கு காமத்தைக் கொண்டாடியிருக்கிறார்கள் என்பதை அறியலாம்.

காமத்திற்கு சரியான வடிகால் இல்லாமல் இருப்பது குற்றத்தில் போய் முடிகிறது. அதனால் தான் காமம் கிடைக்கச் சாத்தியமில்லா பதின்பருவத்திலேயே ஏதேனும் கலையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது நல்ல பலனை அளிக்கும் என்கிறார்கள். உரிய துணை கிடைக்கும் வரை உற்ற துணையாக கலையையே துணையாகக் கொள்வது நல்ல பலனை அளிக்கும். ஏனென்றால் காமம் தலைக்கேறிய நிலையில் மனிதர்கள் என்ன செய்வார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. சரியாக முறைப்படுத்தப்படாத காமமே இன்னொருவர் மீது நிகழ்த்தப்படும் குற்றத்திற்கு காரணமாக இருக்கிறது. பிரெஞ்சுத் திரைப்படங்கள் காமத்தின் ஊடாக காமத்தின் பல்வேறு சிக்கல்களை பல்வேறு கோணங்களில் பேசி வருகின்றன. பிரெஞ்சுத் திரைப்படங்களை தொடர்ந்து பார்த்து வரும் ஒருவர் தானாகவே காமத்தைக் கொண்டாட ஆரம்பித்து விடுவார், கூடவே வாழ்க்கையையும். ஆம், காமத்தைக் கொண்டாடாமல் வாழ்க்கையைக் கொண்டாடவே முடியாது!

பொறுப்பு துறப்பு :
ஒரு ஆணின் அரைகுறை மனநிலையில் எழுதப்பட்ட பதிவிது. ஏராளமான தர்க்கப்பிழைகள் இருக்கின்றன. முன்பே சொன்னது போலவே விவாதத்தை முன்னெடுப்பது தான் இந்தத் தொடரின் நோக்கமே தவிர யாருக்கும் எதையும் போதிப்பதல்ல. மற்றபடி கடுமையான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

பாலியல்  பேசுவோம்....  

தொடர்புக்கு :
குறி சிற்றிதழ் ,

9/3 , யூசுப் நகர் ,
மாரம்பாடி  சாலை,
வேடசந்தூர் -624710,
திண்டுக்கல் மாவட்டம் .

சந்தாதாரர் ஆக:
குறி தனி இதழ் ரூபாய் .30
பத்து இதழ் சந்தா ரூபாய்.300
சந்தா SBI வங்கி மூலம் செலுத்தலாம்
P.MANIKANDAN
A/C NO. 30677840505.
VEDASANDUR
IFS CODE : SBIN0011941

இதழாசிரியர்  மணிகண்டன் - 9976122445.

இதழ் குறித்த உங்களின் பின்னூட்டங்கள் மற்றும் படைப்புகளை

kurimagazine@gmail.com 

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் .

மேலும் படிக்க :


   

Monday, September 3, 2018

இதிலென்ன இருக்கு பேசுவோம் -6 !

'ஒருவனுக்கு ஒருத்தி ' என்பது ஒரு போலியான கற்பிதம். சமூகத்தில் நிகழும் பல்வேறு விதமான பாலியல் சிக்கல்களுக்கு இந்த சித்தாந்தமும் ஒரு முக்கியமான காரணம். இதனாலும் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். 'ஒருவனுக்கு ஒருத்தி ' என்று சொல்லி பெண்களை கட்டுப்படுத்தும் சமூகம் ஆண்களை எதுவும் சொல்வதில்லை. ஆணிற்கும் , பெண்ணிற்கும் மறைமுக கட்டுபாட்டையும் , நெருக்கடியையும், சுதந்திரமின்மையையும் இந்த 'ஒருவனுக்கு ஒருத்தி ' என்பது உருவாக்குகிறது.
திருமணம் என்பதே, இனி இந்த ஆணும் இந்த பெண்ணும் 'ஒருவனுக்கு ஒருத்தி'யாக வாழப் போகிறார்கள் என்பதை எல்லோருக்கும் அறிவிக்கும் ஒரு நிகழ்வாகவே இருக்கிறது.அதன் பிறகு மீறல் நிகழாமல் இருக்கும் வகையில் அவர்களை  சமூகம் கண்காணிக்கிறது. ஆனாலும் அங்கே மீறல்கள் நிகழ்கின்றன. மனப்பொருத்தம் இல்லாதவர்கள் சேர்ந்து வாழவே முடியாது. ஆனால் யதார்த்தத்தில் பெரும்பாலும் தங்களை தாங்களே ஏமாற்றிக் கொண்டு 'ஒருவனுக்கு ஒருத்தி'யாக வாழ்வதே நடக்கிறது. பெற்றோர்களால் நிச்சயக்கப்படும் திருமணங்கள் பெரும்பாலும் புறக்காரணங்களை வைத்தே நிர்ணயிக்கப்படுகின்றன.திருமணத்திற்கு பிறகு புரிதல்களால் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொள்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள். மற்றவர்கள் நிர்பந்தத்தால் சிக்கித் தவிக்கிறார்கள். நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் தான் இப்படி என்றால் காதலிலும் , காதல் திருமணங்களிலும் இந்த  'ஒருவனுக்கு ஒருத்தி ' என்ற மனநிலை பாதிப்பை உருவாக்குகிறது.இது  காதலித்தவரையே கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற மனநிலையை உருவாக்குகிறது. காதலிப்பதே கல்யாணம் பண்ணுவதற்கு தான் என்றே பலரும் நினைக்கிறார்கள். ஒரு மனிதரின் சுயரூபம் எப்போது வெளிப்படும் என்று சொல்ல முடியாது. காதலிப்பவர் நமக்கு பொருந்தமாட்டார் என உணர்ந்த பிறகும் கல்யாணம் செய்து கொள்வது முட்டாள்தனம்.

எந்த உறவாக இருந்தாலும் ஆதிக்கம் செலுத்தப்படும் உறவு ஆரோக்கியமான உறவாக இருக்காது. பொதுவாகவே ஏதோ ஒரு காரணத்தின் பேரில் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தவே மனித மனம் விரும்புகிறது. இந்த ஆதிக்க மனநிலை மட்டும் இல்லாமல் இருந்தால் மனிதர்களுக்குள் இவ்வளவு சண்டைகள் , சச்சரவுகள் இருக்காது.ஆனால் அவ்வளவு எளிதாக ஆதிக்க மனநிலையைக் கைவிட மனித இனம் தயாராக இல்லை. அன்பின் பெயரால் ' நான் உன் மீது அன்பு வைத்திருக்கிறேன். அதனால் எனக்கு நீ அடங்கி போ ' என்று ஆதிக்கம் செலுத்துவதும் வன்முறை தான். இந்த வன்முறை காதலிலும் , குடும்பங்களிலும் அதிகம் இருக்கிறது. குடும்பம் என்ற அமைப்பே இந்த வன்முறையால் தான் பலவீனமாகிறது. காதலாக இருந்தாலும் , குடும்பமாக இருந்நாலும் ஒருவர் மீது ஒருவர் ஆதிக்கம் செலுத்துவதைக் கைவிட வேண்டும். 

ஒவ்வொரு மனிதரும் தன்னை ஒரு சுதந்திரமான மனிதராக உணர்ந்து வாழ எந்த அமைப்பு உதவுகிறதோ அதுவே சரியான அமைப்பாகும்.
நாம் ஒருவர் மீது செலுத்தும் அன்பைவிட அவருக்கு கொடுக்கும் மரியாதையே முக்கியமானது என்கிறார்கள். அது முற்றிலும் உண்மை. ஒரு காதல் வெற்றி பெறுவதற்கும் , ஒரு திருமணம் வெற்றி பெறுவதற்கும் இந்த பரஸ்பர மரியாதை அவசியமாகிறது. இந்த இரண்டின் மீது நம்பிக்கை இல்லாதவர்களின் தேர்வாக  'சேர்ந்து வாழ்தல் ( Living Together)' இருக்கிறது. பிடித்திருந்தால் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் சேர்ந்து வாழ்வோம் தேவைப்பட்டால் திருமணமும் செய்து கொள்ளலாம் , பிடிக்காவிட்டால் எப்போது வேண்டுமானாலும் விலகி விடலாம். ஆனால் தங்களின் பிள்ளைகள் இப்படியான வாழ்க்கை முறையைத் தேர்வு செய்ய இந்தியக் குடும்பங்கள் அனுமதிப்பதில்லை. அரிதாகவே சில குடும்பங்கள் அனுமதிக்கின்றன. 'சேர்ந்து வாழ்தல் ' வாழ்க்கை முறையை கடைபிடிப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஒவ்வொருவரையும் பலருடன் வாழச் சொல்வதற்காக  'ஒருவனுக்கு ஒருத்தி ' என்ற சித்தாந்தம் தவறு என்று சொல்லவில்லை. தங்களுக்கு பிடித்தவருடன் வாழ இந்த கற்பிதம் அனுமதிக்கவில்லை என்பது தான் இங்கே பிரச்சனை. மேற்கத்திய நாடுகளில் எந்த முறையில் திருமணம் செய்தாலும் , சேர்ந்து வாழ்ந்தாலும் பிடிக்கவில்லை என்றால் பிரிதல் என்பது எந்த வயதிலும் சாத்தியமாகிறது.அதே போல எந்த வயதிலும் இன்னொரு இணையை தேடிக்கொள்ள முடிகிறது. அதை சமூகமும் அனுமதிக்கிறது. இங்கே பிரிதல் கூட கொஞ்சம் மெனக்கெட்டால் சாத்தியம். மறுதுணையை தேர்வு செய்வது ஆணிற்கு மிக எளிதாக இருக்கிறது எந்த வயதிலும். அதே நேரம் பெண்ணிற்கு மறுதுணையை தேர்வு செய்வது என்பது எந்த வயதிலும் எளிதாக இல்லை.அதிலும் பலருக்கு  சாத்தியமேயில்லை. இப்படி ஆண் , பெண் உறவில் பல பாதிப்புகளை உருவாக்குவதால் தான் ' ஒருவனுக்கு ஒருத்தி ' என்ற மனநிலை தவறானது கூற வேண்டியுள்ளது. மற்றபடி பிடித்திருந்து ஆயுள் முழுவதும் ஒருவனுக்கு ஒருத்தியாக வாழ்வதில் எந்தப் பிழையும் இல்லை.  

'கற்பு ' என்பது பெண்ணடிமையின் குறியீடாக இருக்கிறது. ஆணின் கற்பு பற்றி சமூகத்தின் எந்த அமைப்பும் கேள்வி கேட்பதில்லை. ஆனால் பெண்ணின் கற்பு பற்றி சகலமும் கேள்வி கேட்கிறது. ஒரு பெண்ணையே இன்னொரு பெண்ணின் கற்பு குறித்து பேச வைக்கிறது. ஒரு பெண் கல்யாணத்திற்கு முன்போ அல்லது பின்போ மற்ற ஆண்களுடன் உறவு கொள்ளாமல் இருப்பதையே கற்பு என்கிறார்கள். இதையே ஆணுக்கு வரையறுப்பதில்லை.ஒரு குடும்பத்தின் மானம் , கௌரவம் , மரியாதை, லொட்டு , லொசுக்கு என எல்லாம் பெண்ணின் கற்பில் தான் உள்ளது என நம்பவைக்கப்பட்டுள்ளது. இதற்கு வரலாற்றிலிருந்தும் தரவுகள் தருகிறார்கள். அதே நேரம் ஆண் கற்பில்லாமல் நடந்து கொண்டார்கள் என்பதற்கும் வரலாற்று தரவுகள் இருக்கின்றன. இதிலிருந்து பெண்ணை அடிமைப்படுத்துவதற்கு தான் கற்பு என்பது பயன்படுகிறது என்பதை அறிய முடியும்.

எல்லாவற்றையும் ஆணிற்கும் , பெண்ணிற்கும் பொதுவில் வைக்கும் போது கற்பையும் பொதுவில் வைப்பது தானே நியாயமாக இருக்கும். ஆணிற்கு கற்பு தேவையில்லை என்றால் அதே கற்பு பெண்ணிற்கும் தேவையில்லை. அவரவர் உடல் அவரவருக்கே சொந்தம் . அதில் இன்னொரு மனிதர் தலையிட எந்த உரிமையும் இல்லை. 'என் உடல், என் உரிமை ' என்று சொல்வதற்கு எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஒவ்வொரு மனிதரும் தன் வாழ்நாள் முழுவதும் தூக்கி அலைவது அந்த உடலைத் தான். என்ன உணவு உண்ண வேண்டும் , எந்த ஆடை உடுத்த வேண்டும் , என்ன வேலை செய்ய வேண்டும் , எப்போது எழுந்திருக்க வேண்டும் , எப்போது தூங்க வேண்டும் , யாருடன் உறவு கொள்ள வேண்டும் என தன் உடல் மீதான இறுதி முடிவு எடுப்பவர் அந்த மனிதர் தான். எவ்வளவு நெருங்கிய சொந்தமாக இருந்தாலும் மற்ற மனிதர்களெல்லாம் பார்வையாளர்கள் தான்.

விதவை , கைம்பெண் என விதவிதமான பெயர்களில் பெண்களின் மீதான ஒடுக்குமுறை தான் இந்தியாவெங்கும் உள்ளது. இன்று வரை விதவை மறுமணங்களின் எண்ணிக்கை நம்பிக்கை அளிக்கும் வகையில் உயரவில்லை. ஆணிற்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லை. ' இன்னொருத்தன் தொட்டவள எப்படி கல்யாணம் செய்து கொள்வது ' என்பது தான் பெண்ணை உடலாகவே பார்த்து பழக்கப்பட்ட ஆண்களின் மனநிலை. ஆண் என்று வரும்போது ' இன்னொருத்தி தொட்டவன எப்படி கல்யாணம் செய்து கொள்வது ' என்று கேட்கும் உரிமை பெண்களிடம் இல்லை. இப்படி பலவற்றிலும் கற்பு என்று அடையாளப்படுத்துவதன் பாதிப்புகள் உள்ளன. கற்பு உண்டென்றால் இருவருக்கும் உண்டு , இல்லையென்றால் இருவருக்கும் இல்லை என்பது தான் சரியாக இருக்கும்.

'தாய்மை' என்பது இங்கே மிகவும் அதிகமாக புனிதப்படுத்தப்பட்டுள்ளது. தாய்மையில் புனிதப்படுத்த எதுவும் இல்லை. அது ஒரு உயிரினச் செயல்பாடு. உலகிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் தாய்மை உண்டு. மனித இனம் தான் அதிலும் தமிழினம் தான் தாய்மை குறித்து அதிகம் பெருமிதம் கொள்வது போல் தெரிகிறது. எல்லா உயிரினங்களுமே தங்களின் அடுத்த தலைமுறையை வளர்த்தெடுக்க அதிகம் மெனக்கெடவே செய்கின்றன. விலங்குகள் , பறவைகள் என எல்லாவற்றிலும் நடப்பது இது தான். தனது குட்டிகளுக்கோ , குஞ்சுகளுக்கோ எப்படியாவது இரையைத் தேடிக் கொடுத்து வளர்த்து விடுகின்றன. அவற்றுக்கு ஏதேனும் ஆபத்து நேரும் போது தங்களின் உயிரைக் கொடுத்தாவது காப்பாற்ற முயற்சி செய்கின்றன. இவற்றை விடவா மனித இனத்தில் தாய்மை செய்து விடுகிறது. அதே விலங்குகள் , பறவைகள் தங்களின் குட்டிகள் , குஞ்சுகள் பெரிதானவுடன் அதாவது அவை தானாக இரையைத் தேட கற்றுக்கொண்ட பிறகு அவற்றை விரட்டி விடுகின்றன. இந்திய , தமிழ் சமூகத்தில் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆனவுடன் மேற்கத்திய நாடுகளைப் போல தனித்து இயங்க அனுமதிப்பதில்லை.இந்தியக் குடும்பங்கள் அவர்களை அதிகமான கற்பனை மற்றும் எதிர்பார்ப்புகளுடன் பொத்தி பொத்தி வளர்க்கின்றன. குழந்தைகளை வளர்ப்பதை முதலீடு போலவே நினைத்துச் செயல்படுகிறார்கள்.இந்த மனநிலை மாறாதவரை இந்திய சமூகம் முன்னேற்றமடையாது.

தாய்மை என்பதும் பெண்ணை பலவீனப்படுத்தும் ஒரு செயல் தான். ஒரு பக்கம் தாய்மை , தெய்வம் , கடவுள் என்று சொல்லிக்கொண்டே இன்னொரு பக்கம் யாரோ ஒருவருக்கு தாயாக இருக்கிற அல்லது எதிர்காலத்தில் தாயாகப் போகிற பெண்கள் மீது தொடர்ச்சியான வன்முறைகளை ஏவிக்கொண்டே இருக்கிறது ஆணாதிக்க சமூகம். தாய்மை , தாய்மை என்று சொல்லியே பெண்களின் சுதந்திரத்தையும் , தனித்துவத்தையும் அழித்து சிறைக்குள் பூட்டி விடுகின்றனர்.
குழந்தைகள் பிறப்பதற்கு ஆண் , பெண் இருவருமே தான் காரணம். ஆனால் இங்கே குழந்தைகள் பெண்களின் உடைமைகளாகவே பார்க்கப்படுகின்றனர். குழந்தைகள் வளர்ப்பில் ஆண்களின் முக்கியத்துவம் தட்டிக்கழிக்கப்படுகிறது. குழந்தைகள் என்றாலே பெண்கள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது பொது விதியாகிப் போனது. தாய்மை உணர்வை அடையாத அதாவது ஏதோ ஒரு காரணத்தால் குழந்தை பெற்றுக்கொள்ளாத பெண்கள் படும் பாடுகள் இன்றும் சற்றும் குறையவில்லை. சமுதாயத்தின் அனைத்து மட்டங்களிலும் இதே நிலை தான்.

குழந்தை பிறப்பதற்கு ஆண் , பெண் இருவரது உடலும் ஒத்துழைக்க வேண்டும். யாராவது ஒருவர் உடலில் குறைபாடு இருந்தாலும் பெண் தான் குற்றவாளியாக்கப்படுகிறார். நாளுக்கு நாள் குழந்தையின்மை என்பது பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. கல்யாண வயது , வேலைச்சூழல் , உணவு , ஜீன்கள் எனப் பலவும் குழந்தையின்மைக்கு காரணங்களாக இருக்கின்றன. குழந்தையின்மையை நீக்குவதற்கான சிகிச்சை என்பது பெரும் வணிகமாக மாறியுள்ளது. எப்படியாவது குடும்பத்திற்கு ஒரு வாரிசு வேண்டும் என்று ஒவ்வொரு குடும்பமும் நினைக்கிறது. சமூக அழுத்தமும் முக்கிய காரணம். இதை வைத்து அழகாக காசு பார்க்கிறார்கள். திருமணமானவரைப் பார்த்து 'உங்களுக்கு எத்தனை குழந்தைகள் ?' என்று கேட்பதே  வன்முறை என்கிறார்கள் , மனநல மருத்துவர்கள். குழந்தையின்மை அந்த அளவிற்கு மனிதர்களை முடக்கிப்போடும் வல்லமை உடையது. உயிரினங்களின் பிறவிப்பயனே இனப்பெருக்கம் என இருக்கும் போது அதற்காக மெனக்கெடுவதில் தவறில்லை. ஆனால் அதற்காக அவர்களை குற்றவாளிகளாக்கி அழகு பார்க்கக்கூடாது.

தாய்மை என்ற பெயரில் பெண்களை ஒடுக்கும் இன்னொரு விசயம் குழந்தைகள் இருந்தால் மறுமணம் செய்ய அனுமதிக்காதது. ஏதோ ஒரு காரணத்தால் கணவனை இழந்தோ அல்லது பிரிந்தோ வாழும் பெண்களை மறுமணம் செய்ய நம் சமூகம் விடுவதில்லை. குழந்தைகளுக்காக மறுமணம் செய்யாமல் அவர்களுக்காகவே அந்தப் பெண் தனியாகவே உழைத்து ஓடாய் தேய்ந்து போக வேண்டும். அப்படி அவர்களை வளர்த்து கரை சேர்த்தால் ஒற்றை ஆளாய் எல்லாம் செய்து முடித்து விட்டாள் என்று உச்சி முகரும். ஆனால் அவளது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தோ , விருப்பு , வெறுப்புகள் குறித்தோ இந்த சமூகத்திற்கு எந்தக் கவலையும் இல்லை. மற்றவர்களிடம் தியாகி பட்டம் வாங்குவதற்காக தன்னை அழித்துக் கொள்வது தான் இதில் நடக்கிறது. இதை தெரிந்து கொள்ளவோ , சரியான விதத்தில் அணுகவோ ஆண் சமூகம் தயாராகயில்லை. ஒரு விதவையை , கணவரை பிரிந்தவரை மறுமணம் செய்வது என்பது புரட்சி என்று மட்டுமே ஆண்களின் மனதில் பதிந்துள்ளது. தாய்மை உணர்வு இருக்க வேண்டியது அவசியம். ஆனால் அதை புனிதப்படுத்த வேண்டியதில்லை. இதை முதலில் பெண்கள் உணர வேண்டும்.

ஆண் , பெண் சமத்துவம் நிகழ பொருளாதார சமத்துவம் ஏற்பட வேண்டியது அவசியமாகிறது. அப்படியே அமைய வாய்ப்பு இருந்தாலும் அந்த சமத்துவத்தை தர இந்திய குடும்பங்களும் , ஆண்களும் தயாராகயில்லை. வாசிப்பு பழக்கம் உள்ளவர்கள் பெரும்பாலும் பெண்களுக்கு மரியாதை தருகிறவர்களாக இருக்கிறார்கள். வாசிப்பு பழக்கம் மட்டுமே ஒருவரை சுத்தப்படுத்தி விடாது என்பதற்கும் உதாரணங்கள் உள்ளன. தற்போதைய சூழலில் இலக்கியத்தின் உச்சத்தில் இருப்பவர்களாக சொல்லப்படுபவர்கள் கூட பெண் சுதந்திரத்திற்கு எதிரானவர்களாக  இருக்கிறார்கள். பொதுமக்களை உள்ளடக்கிய தொடர்ச்சியான செயல்பாடுகள் மூலம் தான் சிறிய அளவிலான  மாற்றங்களையாவது சமூகத்தில் உருவாக்க முடியும். வாசிப்பு அதற்கு முதல்படியாக இருக்கும் என நம்பலாம். வாசிப்பை பெரிய அளவில் கொண்டு போக வேண்டிய கடமை தற்போதைய தலைமுறைக்கு இருக்கிறது.காட்சி ஊடகங்கள் அதாவது சினிமா , தொலைகாட்சி மூலமாக மக்களைச் சென்றடைவது எளிது. ஆனால் இங்கே சினிமாவும் , தொலைக்காட்சியும் ஆணாதிக்கத்தையும் , மூடநம்பிக்கைகளையும் தண்ணீர் ஊற்றி வளர்த்து வருகின்றன. அப்புறம் எங்கே சமத்துவத்தையும் , சமூக நீதியையும் பேசப் போகின்றன. பெரிய அளவிளான இயக்கங்கள் உருவாக வேணடும். உருவாகும் என நம்புவோமாக..!

பாலியல்  பேசுவோம்....  

தொடர்புக்கு :
குறி சிற்றிதழ் ,

9/3 , யூசுப் நகர் ,
மாரம்பாடி  சாலை,
வேடசந்தூர் -624710,
திண்டுக்கல் மாவட்டம் .

சந்தாதாரர் ஆக:
குறி தனி இதழ் ரூபாய் .30
பத்து இதழ் சந்தா ரூபாய்.300
சந்தா SBI வங்கி மூலம் செலுத்தலாம்
P.MANIKANDAN
A/C NO. 30677840505.
VEDASANDUR
IFS CODE : SBIN0011941

இதழாசிரியர்  மணிகண்டன் - 9976122445.

இதழ் குறித்த உங்களின் பின்னூட்டங்கள் மற்றும் படைப்புகளை

kurimagazine@gmail.com 

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் .

மேலும் படிக்க :

   

Saturday, July 21, 2018

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 5 !

" மனித சமூகத்துக்கு முதலில் மிக வேகமாக, வயித்துக்கு சோறு நிறைவாகக் கிடைக்கிறதா. அடுத்து , ஆணும் பெண்ணும் பாலியல் பசி இல்லாமல், சிக்கல் இல்லாமல் நிறைவாக இருக்கிறார்களா என்பதைப் பார்க்க வேண்டும். இந்த இரண்டையும் ஏற்படுத்தித் தந்துவிட்டு அதன் பிறகு ஒழுக்கத்தை வற்புறுத்தினால் அர்த்தம் உண்டு. வயித்துப் பசி ஒரு கொடூரம். பாலியல் பசி அதைவிடக் கொடூரம் " - கி.ராஜநாராயணன்.

தமிழக சூழலில் பாலியலை, தான் சேகரித்த பாலியல் கதைகளின் வாயிலாக மிகச்சரியாக முன்வைத்த படைப்பாளியாக கி.ராஜநாராயணன் அவர்களைக் கூறலாம்.பாலியலை சார்பில்லாமல் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைத்தவர். இந்த புரிதல் ஏற்பட அவர் சேகரித்த கதைகளும் உதவியிருக்கலாம். யோசித்துப்  பார்த்தோமேயானால் நாட்டில் நிகழும் சமூகக் குற்றங்களுக்கு வயித்துப்பசியும் , பாலியல் பசியும் தான் முக்கிய காரணங்களாக இருப்பதை அறிய முடியும். வயித்துப்பசிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பாலியல் பசிக்கும் கொடுக்க வேண்டும் என்பதையே கி.ரா. தொடர்ந்து பேசி வந்திருக்கிறார். இதையே தான் சிக்மண்ட் பிராய்டும் ,"பாலியலுக்குக்கும் சமூகத்தின் செயல்பாட்டிற்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது " என்று கூறியிருக்கிறார்.

நாகரிகம் என்ற ஒன்று எப்போது மனித சமூகத்தில் தொடங்கியதோ
அப்போதிருந்து தான் பாலியல் சிக்கல்களும் உருவாக ஆரம்பித்தன. பாலுறவில் நிறைய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டதால் ஆண்களும் , பெண்களும் சூழ்நிலை கைதியானார்கள். அப்போதிருந்து தான் மீறல்களும் தொடங்கின. மனித இனத்தை மட்டுமல்ல எந்த இனத்தையும் பாலியலிலிருந்து விலக்கி வைக்க முடியாது. அப்படி இருக்கும் போது பாலியலை ஒரு தீண்டத்தகாத விசயம் போலவே சமூகம் அணுகுகிறது. இந்த மனநிலையை உருவாக்குவதில் மதங்களுக்கு முக்கிய பங்கிருக்கின்றன. பெண்ணடிமைத்தனத்தை , பாலியல் ஒடுக்குமுறையை  படிப்படியாக சேர்த்து அதை கலாச்சாரம் என்று மதங்கள் அழைக்கின்றன. மதங்களின் உதவியுடன் சாதிகளும் பாலியல் சிக்கலை உருவாக்குவதில் முன்னிலை வகிக்கின்றன. சமூக விடுதலையின் பொது எதிரிகள் மதங்களும் , சாதிகளும் தான். பாலியல் விடுதலையே சமூக விடுதலை. அப்படி இருக்கும் போது பாலியலை , பாலியல் விடுதலையைப் பற்றி பேசாமல் சமூக விடுதலை கிடைக்கப் போவதில்லை.

நவீன வாழ்வில் பாலியல் சிக்கல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போவதை பார்க்க முடிகிறது. கடந்த இரண்டு தலைமுறைகளாத் தான் இந்த சிக்கல்கள் மிகவும் அதிகரித்துள்ளன. இப்போதும் கவனித்தோமானால் ஒரு விசயம் நமக்கு விளங்கும். எழுபது வயதைக் கடந்தவர்களின் பேச்சில் இயல்பாகவே பாலியல் இழையோடும்.அதில் நெருடலோ, உறுத்தலோ துளியும் இருக்காது.கணவன்  இருந்தால் கூட கேலி , கிண்டலுக்கு குறைவிருக்காது. அடுத்தடுத்த தலைமுறைகளில் இந்தப் போக்கு மாறிவிட்டது.  எதுவும் இயல்பாக இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது.

காலத்துக்கேற்ற மாற்றம் எல்லாவற்றிலும் நிகழ வேண்டியது அவசியம். கலாச்சாரத்திலும் மாற்றம் நிகழ்ந்தே ஆக வேண்டும். தற்போதைய கலாச்சாரம் என்பது போலியான மதிப்பீடுகளின் கூடாரமாகவே உள்ளது.கலாச்சாரத்தின் கூறுகளான உணவு , உடை , இருப்பிடம் போன்றவற்றில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதற்கெல்லாம் ஒன்றும் சொல்லாத கலாச்சாரம் பெண் சுதந்திரம் , பாலியல் சுதந்திரம் என்று வரும்போது மட்டும் குய்யோ, முய்யோ என்று ஓலமிடுகிறது.சாதி அமைப்பை மதங்களின் உதவியுடன் பேணி பாதுகாப்பதற்கும் , பெண்ணை அடிமைப்படுத்துவதற்கும் கலாச்சாரத்தை மதவாதிகள் ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள்.
2012 ல்  'ஆனந்த விகடன்' இதழில் வந்த பேட்டியில் கி.ரா. சொல்லியிருப்பதை தெரிந்து கொள்வதன் மூலம் கலாச்சாரம் குறித்தான ஒரு புரிதலுக்கு வர முடியும்.

கேள்வி :-
" கட்டுக்கோப்பான கலாச்சாரத்திற்குப் பேர் போன இடைசெவல் மாதிரி ஒரு இந்தியக் கிராமம் ; உலகிலேயே முற்போக்கானதாகச் சொல்லப்படும் பிரெஞ்சு கலாசாரச்  சூழல் நிலவும் பாண்டிச்சேரி மாதிரி ஒரு நகரம் .. இரண்டிலும் நீங்கள் வாழ்ந்திருக்கிறீர்கள் . எந்தக் கலாச்சாரம் உண்மையில் உன்னதமானதாக உங்களுக்குத் தெரிகிறது ?"

 கி.ரா :-
" பிரெஞ்சு கலாசாரம் தான் உன்னதமாத் தெரியுது . இந்தப் பொறப்பு எடுத்த நோக்கம் என்ன? சந்தோசமா வாழனும் . அதுதான் நோக்கம் .சந்தோசமா எப்படி வாழறது ? பறவைகளை மாதிரி மனுஷன் வாழணும் . எந்தக் கட்டுப்பாடும் இல்லாம , அவனவன் நினைச்ச மாதிரி சுதந்திரமா,சந்தோசமா வாழனும் . அதுக்கு எந்தக் கலாச்சாரம் எடம் கொடுக்குது ? இந்தியக் கலாச்சாரம் எடம் கொடுக்கல .அட , விருப்பப்பட்ட ஒரு மனுஷாளோட சேர்ந்து வாழ்ற சுதந்திரம்கூட இங்கே இல்லையே ? ஒரு காலத்துல கிராமங்கள்ல அந்தக் கலாச்சாரம் இருந்துச்சு . விருப்பம்போல வாழலாம் ; புடிக்கலைன்னா அத்துக்கிட்டுப் போய்டலாம் .இன்னொண்ணு சேர்த்துக்கிடலாம் . புள்ளைங்களுக்கும்  தெரியும் . அம்மாதான் நம்மளோட அம்மா ,நம்ம அப்பா இவரு இல்லைங்கிறது . ஊருக்கும் தெரியும் . யாரும் எதையும் தப்பா நெனைக்கிறது இல்லை .சந்தோஷமா இருந்தாங்க .ஆனா ,அந்த மாதிரி கிராமம் எல்லாம் இப்ப குறைஞ்சுக்கிட்டு வருது . நகரத்துக்காரன் எல்லாம் சேர்ந்து கிராமத்தைப் புனிதமாக்கிட்டான் .கட்டுப்பாடு கட்டுப்பாடுனு பேசி வாழ்க்கையையே பொழைப்பா மாத்திக்கிட்டு ஆளாளுக்குப் பைத்தியம் பிடுச்சு அலையுறோம் ."

கேள்வி :-
"அப்படி என்றால் , ஒரு கலாச்சாரத்தை மதிப்பிட பாலியல் சுதந்திரம் தான் அளவுகோலா ? "

கி.ரா :-
" ஆமா ,கலாச்சாரம்னு பேசுனா , மொதல்ல அங்கே இருந்து தானே தொடங்கணும் ? ஒழுக்கம் ,ஒழுக்கம்னு எங்கே கூச்சல் கேட்குதோ ,அங்கேதான் நிறைய ஒழுக்கக்கேடு இருக்கும் . ஒவ்வொருத்தனும் மனுசுக்குள்ள ஆயிரம் தடவை சோரம் போறான் .வெளியே பேசுறது பதிவிரதத்தனம் .சென்னையிலேயே,ரெண்டு மூணு வருசத்துக்கு முன்னாடி நடந்துச்சா இல்லையா ? கம்ப்யூட்டர் கம்பெனியில கக்கூஸு அடைச்சு , குழாயை  உடைச்சப்ப வண்டி வண்டியா ஆணுறைகளை எடுத்த கதை நாடு முழுக்க நாறுச்சா இல்லையா ? அப்ப வெளியே மூடிக்கிட்டு உள்ள வெறியோட அலையுறதுல என்ன இருக்கு ? அட , பச்சப்புள்ளைங்க மேல எவ்வளவு வன்முறை நடக்குது ? என்னடா , இந்தக் கி.ரா. இந்த வயசுல இப்படிப் பேசுறானேனு நெனைக்கக் கூடாது .இந்த வயசுல நான் பொய் பேசக் கூடாது , இல்லையா ?மொதல்ல இங்கே குடும்பம்கிற அமைப்பு உடையணும்னு நெனைக்கிறேன் ."

கேள்வி :-

" இந்தியாவுக்குப் பாலியல் கல்வி வேண்டும் என்று நினைக்கிறீர்களா? "

கி.ரா.:-
" கண்டிப்பா வேணும்னு சொல்றேன். இல்லைன்னா, குட்டிச்சுவராப் போயிடும் . எப்படி வாழணும்னு மொதல்ல நாம கத்துக்கணும் . பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்கணும் . மறைச்சு மறைச்சு வெச்சுதான் பெரிய விசயமாக்கிட்டோம் . பிள்ளைங்க இது ஒரு பெரிய விஷயம்னு நெனைச்சு , அந்த ஞாபகமாகவே அலையுது . நான் கேட்குறேன் ... ஒரு நாள்ல முக்கா நாளு ஒருத்தன் இந்த நெனைப்பாவே திரியுறான்னா , அது சிக்கலா, இல்லையா ? அது அவனோட சிக்கல் மட்டும்தானா .. சமுதாயத்தோட சிக்கலுமா ? கம்ப்யூட்டர் மூலமா மணிக்கணக்கா உறவாடுறானே ,அவனோட ஆழ்மனசுத் தேவை என்ன ? கிராமப்புறங்கள்ல மேல் வயித்துப் பசி , கீழ் வயித்துப் பசினு சொல்வாங்க . ரெண்டு பசியுமே மோசமானது . ஆனா, இங்கே எல்லோருமே மேல் வயித்துப் பசியைத் தீர்க்குறதைப் பத்தி மட்டும்தான் பேசுறோம் . கீழ் வயித்துப் பசியை மறந்துடுறோம் .  "

கேள்வி :-
" இந்த வயதில் காதலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? உங்கள் முதல் காதலை இப்போது நினைவுகூர முடியுமா ? "

கி.ரா :-
"முதல் காதல் ... ஹா ... ஹா ... பசிக்குது . அந்தச் சமயத்துல பக்கத்துல நல்ல சாப்பாடு .உடனே கிடைச்சுட்டா ,அதை ஒரு விசயமா நெனைப்போமா ? அப்படித்தான் இந்தக் காதலும் . கிடைச்சுட்டா , அந்த நேரச் சாப்பாடு . கிடைக்காட்டி , அதுக்குப் பேர் காதல் . கிடைக்கவே கிடைக்காட்டி , அது  அமரக் காதல் , காவியக் காதல் . ஒரு விஷயம் சொல்லலாம் . காதல் ஒரு தடவை மட்டும் வர்றது இல்லை .வந்துக்கிட்டே இருக்குறது . "
இந்தக் கருத்துகளின் மூலம் கி.ரா.வின் பாலியல் குறித்தான தெளிவான புரிதலை அறிந்து கொள்ள முடியும்.

இன்றைய சூழலில் திருமணம் என்பது மிகவும் சிக்கல் வாய்ந்த ஒன்றாக மாறியிருக்கிறது. பரஸ்பர விருப்பம் என்பதைத் தாண்டி சமூக அழுத்தம் என்பது தான் துருத்திக்கொண்டு இருக்கிறது. யார் யாருடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் , எந்த வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் , எந்த வயதுக்காரர் எந்த வயதுக்காரருடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் , திருமணம் செய்து கொள்ளும் ஆணும் , பெண்ணும் எந்த நிலையில் இருக்க வேண்டும் என்று எல்லாவற்றையும் சமூகமே  தீர்மானிப்பதாக உள்ளது. குடும்பம் என்பது இங்கே சமூகத்தின் கூறாகவே உள்ளது. குடும்பம் என்பது சமூகமின்றி தனித்து இயங்காது. ஒன்றுக்கும் பயனில்லாத வெற்று மதிப்பீடுகளையும் , அங்கீகாரத்தையும் நம்பிக்கொண்டு மற்றவர்களுக்காக தன்னை அழித்துக் கொள்ளும் ஒரு அமைப்பு தான் குடும்பம்.  தனிமனித விருப்பங்களுக்கு குடும்பம் என்ற அமைப்பில் துளியும் அனுமதியில்லை. நிர்பந்தங்களால் தன்னையும் , தன்னைச் சார்ந்தோரையும் அழித்துக் கொள்வது தான் குடும்பங்களில் நடக்கிறது. 
எழுத்தாளர், யுவன் சந்திரசேகர் ஒரு பேட்டியில் , " இந்தியாவில் எக்ஸூக்கு(X) மிகப்பொருத்தமான கணவர் , ஒய்யின்(Y) கணவராக இருப்பார். இது காதல் திருமணங்களுக்கும் பொருந்தும் " என்று கூறியிருப்பார். அதாவது யாரும் பொருத்தமான துணையை தேர்ந்தெடுப்பதில்லை என்பதையே அவரது கருத்து வெளிப்படுத்துகிறது. இதன்படி பார்க்கையில் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் முறையில் பெரிய தவறிருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. விட்டுக்கொடுத்து போவது என்ற ஒன்று தான் இந்தியத் திருமணங்களை காப்பாற்றி வருகிறது. குழந்தைகளின் நலனுக்காக எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு வாழ பழகி விடுகிறார்கள். மேலை நாடுகளைப் போல பிடிக்கவில்லை என்றால் பிரிதல் அதாவது விவாகரத்து பெறுதல் என்பது இங்கே எளிதானதாக இல்லை. அங்கே எந்த வயதிலும் சாத்தியம். இங்கே அது சாத்தியமில்லாததால் தான் மீறல்கள் என்பது இந்தியக் குடும்பங்களில் மிகவும் அதிகமாக இருக்கிறது.

இந்திய குடும்பங்களில் ஒரு கெட்ட பழக்கம் உள்ளது. அது குழந்தைகளை பெரியவர்கள் போல நடத்துவது , வயதிற்கு வந்த பெரியவர்களை குழந்தைகள் போல நடத்துவது . இந்த நிலை மாறினாலே போதும் நிறைய மாற்றங்கள் நிகழ ஆரம்பித்துவிடும். தன் வாழ்க்கைத்துணையை தானே தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இந்திய குடும்பங்களில் மறுக்கப்படுகிறது. அதையும் மீறி துணையைத் தேர்ந்தெடுப்பவர்களை சாதி , மதம் , பொருளாதார நிலை போன்ற காரணங்களை முன்வைத்து அவர்களை நிராகரிக்கிறது. நிராகரிப்பதுடன் நின்று விடாமல் சாதிஆணவ படுகொலை வரை போகிறது. இந்தியக் குடும்பங்கள் மானம் , அவமானம் , கௌரவம் , மதிப்பு , மரியாதை போன்றவற்றை கட்டிக்கொண்டு அழுகிறது. எவ்வளவு விலை கொடுத்தாயினும் இவற்றை பாதுகாக்க முயலுகின்றன.  

வயதிற்கு வந்த இருவர் அதாவது இந்தியச் சட்டப்படி 18 வயதைக் கடந்தவர்கள் சேர்ந்து வாழ்வதற்கு எந்தத் தடையும் இல்லை. சமீபத்திய நீதிமன்ற தீர்ப்புகள் இதை மேலும் உறுப்படுத்தியுள்ளன. இந்தியாவில் பெண்ணின் மணவயது என்று 18ம் , ஆணின் மணவயது என்று 21ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. நிலைமை இப்படியிருந்தாலும் கூட ஒரு ஆண் , பெண்ணுடன் சேர்ந்து வாழ 21 வயதுவரை காத்திருக்க வேண்டியதில்லை. ஒரு ஆண் 18 வயதைக் கடந்திருந்தாலே பெண்ணுடன் சேர்ந்து வாழ தகுதியுள்ளவர் ஆகிறார் என்றும் சட்டம் சொல்கிறது. பால்ய விவாகத்தால் உருவான சிக்கல்களை விட தற்போதைய திருமணத்தால் தான் அதிக சிக்கல்கள் உருவாகின்றன. குழந்தை திருமணத்தில் குறைந்த வயதில் திருமணம் முடிப்பது தான் சிக்கல் என்றால் , தற்போதைய அமைப்பில் திருமணம் முடிப்பதே சிக்கலாக உள்ளது.

தன்னுடைய பிள்ளைகளை மருத்துவராகவோ , பொறியாளராகவோ , பணம் கொட்டும் இயந்திரமாகவோ மாற்றுவதை விட முக்கியமானது, அவர்களின் வாழ்க்கைத்துணையை அவர்களே தேர்ந்தெடுக்க அனுமதிப்பது. தற்போதைய இந்தியக் கல்வி முறையில் படித்து வெளியே வருபவர்களில் பெரும்பாலானோருக்கு தங்களைப் பற்றிய சுயபுரிதலே இருப்பதில்லை. சுயபுரிதல் இல்லாத நிலையில் தேர்ந்தெடுக்கப்படும் வாழ்க்கைத்துணையும் பொருத்தமில்லாதவராகவே இருப்பார். பாடத்திட்டத்தை தாண்டிய தேடுதல் உள்ளவர்களால் மட்டுமே தங்களின் சுயத்தை அறிந்துகொள்ள முடியும். ஆனால் அதற்கு கல்விக்கூடங்களும் அனுமதிப்பதில்லை , குடும்பங்களும் அனுமதிப்பதில்லை. மற்றவர்கள் போலவே நாமும் வாழ்ந்தால் போதும், மற்ற எதைப்பற்றியும் கவலையில்லை என்ற மனநிலையே மேலோங்கி இருக்கிறது.


இன்றும் பெரும்பான்மையான திருமணங்களை ஜாதகங்கள் தான் தீர்மானிக்கின்றன. திருமணம் என்பது ஒரு பெரும் ஆடம்பர நிகழ்வாக மாற்றமடைந்திருக்கிறது. அதனால் திருமணம் என்பதே பெரும் செலவு வைக்கும் ஒரு சுமையாக மாறிவிட்டது. பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்குச் செய்யும் பெரும் கடமையாக திருமணங்கள் பார்க்கப்படுகின்றன. திருமணங்கள் எளிமையாக நடத்தப்பட்டாலும் கூட விருப்பத்திற்கு மாறாக நடக்கக்கூடாது. ஆனால் நிலைமை அப்படியில்லை. ஜாதகம் பொருந்தி வந்திருக்கு , குடும்பம் நல்ல குடும்பம் , நல்ல வசதி போன்ற புறக்காரணங்களை வைத்தே திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன. ஒரே சாதியில் திருமணம் செய்யவே இவ்வளவும் பார்க்கப்படுகின்றன. சாதி மறுப்பு திருமணங்களுக்கு இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும். மருத்துவ பரிசோதனை சான்று கேட்டாளாவது ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் யதார்த்தத்தில் மருத்துவ சான்று கேட்பது மரியாதை குறைவாகவே பார்க்கப்படுகிறது.ஜாதகத்தை கேட்பதில் எந்த நியாயமும் இல்லை. ஆனால் கேட்கப்படுகிறது. நாம் இன்னமும் பார்ப்பன அடிமைகள் தான். நாம் என்ன செய்ய வேண்டும் , செய்யக்கூடாது என்பதை இன்னொருவர் தீர்மானிக்கும் வரை நாம் அடிமைகள் தானே. ஒவ்வொரு விசயத்திலும் ஊடுருவியிருக்கும் பார்ப்பன ஆதிக்கத்தை வேரறுக்காதவரை நமக்கெல்லாம் விடிவுகாலம் இல்லை.

18 வயதிற்கு பிறகு தங்களின் பிள்ளைகளை தன்னிச்சையாக இயங்க அனுமதிக்க வேண்டும். ஆனால் அதற்கு முன்பாக வாழ்க்கை குறித்தான புரிதல்களை ஏற்படுத்தியிருக்க வேண்டும். தங்களின் துணையை தானே தேர்ந்தெடுக்கும் சூழலை உருவாக்குவது தான் சமூகத்தின் ஆரோக்கியத்திற்கு உதவும். 
நன்றி - ஆனந்த விகடன்
பேசுவோம்....  

தொடர்புக்கு :
குறி சிற்றிதழ் ,

9/3 , யூசுப் நகர் ,
மாரம்பாடி  சாலை,
வேடசந்தூர் -624710,
திண்டுக்கல் மாவட்டம் .

சந்தாதாரர் ஆக:
குறி தனி இதழ் ரூபாய் .30
பத்து இதழ் சந்தா ரூபாய்.300
சந்தா SBI வங்கி மூலம் செலுத்தலாம்
P.MANIKANDAN
A/C NO. 30677840505.
VEDASANDUR
IFS CODE : SBIN0011941

இதழாசிரியர்  மணிகண்டன் - 9976122445.

இதழ் குறித்த உங்களின் பின்னூட்டங்கள் மற்றும் படைப்புகளை

kurimagazine@gmail.com 

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் .

மேலும் படிக்க :


Tuesday, February 13, 2018

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 !

மனித வாழ்வில் இந்த பதினான்கு வயதிலிருந்து இருபது வரையிலான பதின் பருவம் (டீன் ஏஜ் ) என்பது எப்போதும் புதிர் நிரம்பியதாகவே இருக்கிறது. சுய சந்தேகங்கள் அதிகமாக தோன்றுகின்றன.  உடலளவிலும், மனதளவிலும் நிறைய மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த மாற்றங்களைப் புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு செயல்பட குடும்பங்களும் தயாராக இல்லை , சமூகமும் தயாராக இல்லை. ஆனால் அவர்களைப் பற்றி ஆயிரத்தெட்டு குறைகள் சொல்ல மட்டும் எப்போதும் தயாராக இருக்கின்றன குடும்பங்களும் , சமூகமும். பெரும்பாலும் இந்த வயதுகளில் தான் நல்ல பழக்கங்கள் , தீய பழக்கங்கள் என வரையறை செய்பவை குடிகொள்கின்றன.பிற்காலத்தில் இந்த பழக்கங்கள் அவ்வளவு எளிதாக விட்டு விலகுவதில்லை. அதனால் தான் இந்த பருவம் முக்கியமானதாகிறது. 

உடலளவில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஹார்மோன்கள் எனப்படும் ரசாயனங்கள் காரணமாக இருக்கின்றன. நமது உடலிலேயே உற்பத்தியாகும் இந்த ரசாயனங்கள் மனித உடலின் பல்வேறு விதமான செயல்களைக் கட்டுப்படுத்துகின்றன. பசி , தூக்கம் போன்ற சின்ன வேலைகள் முதல் இனப்பெருக்கம் போன்ற பெரிய வேலைகள் வரை ஒழுங்காக நடைபெறுவதற்கு சரியான அளவில் ஹார்மோன்கள் சுரப்பது அவசியமாகிறது. உலகின் மிகப்பெரிய தொழிற்சாலை என்று மனித உடலைச் சொல்கிறார்கள். இது முற்றிலும் உண்மை.இன்று வரை இந்த மனித உடலின் ஒழுங்குபடுத்தப்பட்ட சீரான,  தொடர்ச்சியான இயக்கம் என்பது நமக்கு ஆச்சரியத்தையே தான் தருகிறது.

ஹார்மோன்கள் உதவியில்லாமல் மனித உடல் வளர்ச்சியைப் பெறாது. பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து சுரக்கப்படும் ஹார்மோன்கள் வயதிற்கு வந்த பிறகு (Growth Hormone ) மனித உடலின் வளர்ச்சியைத் தூண்டுகிறது. பதின் பருவத்தில் தான் அதிகப்படியான வளர்ச்சி ஆணிலும் , பெண்ணிலும் நிகழ்கிறது. அதனால் தான் பதின் பருவத்திற்கு முன் பார்த்த ஒருவரை , பதின் பருவத்திற்கு பின் பார்க்கும் போது அதற்குள் இவ்வளவு வளர்ந்து விட்டாரா ? என்று தோன்றும். அந்த அளவிற்கு அதிகப்படியான வளர்ச்சி இந்த பருவத்தில் தான் நிகழ்கிறது.வயதிற்கு வந்த பின் பதின் பருவ பெண்ணின் உயரம் அதிகரிக்கிறது , மார்பகங்கள் வளர ஆரம்பிக்கின்றன, இடுப்பு பகுதியில் கொஞ்சம் சதை வளருகிறது , அக்குல் மற்றும் பிறப்புறுப்பில் முடி வளர ஆரம்பிக்கிறது. பதின் பருவ ஆணின் உயரம் அதிகரிக்கிறது , உடல் எடை அதிகரிக்கிறது , முகம் , மார்பு , அக்குல் மற்றும் பிறப்புறுப்பில் முடி வளர ஆரம்பிக்கிறது, குரல் உடைந்து கடின குரலாக மாறுகிறது. 

உடல் வளர்ச்சியடைந்தாலும் உள்ளத்தாலும் 'தான் ஒரு பெண் ' ,' தான் ஒரு ஆண் ' என உணர வைக்கவும் ஹார்மோன்கள் தான் தேவையாய் இருக்கின்றன.  இந்த ஹார்மோன்கள் தான் பால் ஹார்மோன்கள் என அழைக்கப்படுகின்றன. டெஸ்டோஸ்டீரான் ஆண்பால் ஹார்மோன். இந்த ஹார்மோன் மற்றும் சில துணை ஹார்மோன்கள் சரியான அளவில் சுரந்து கொண்டே இருந்தால் தான் ஆண் , ஆணாக இருக்க முடியும் . ஈஸ்ட்ரோஜன் என்பது பெண்பால் ஹார்மோன். கருமுட்டை வளர்ச்சி ,மாதவிடாய் சுழற்சி போன்றவை சரியாக நடைபெற இந்த ஹார்மோன் அவசியமாகிறது.

பதின் பருவத்தில் தான் மாற்றுபாலினத்தவர்களின் அடையாளம் வெளியே தெரிகிறது. இன்று வரை மாற்றுப்பாலினத்தவர்களைக் குடும்பங்களும் , சமூகமும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன. வானத்திலிருந்து குதித்த  அந்நியர்கள் போலவே அவர்கள் நடத்தப்படுகிறார்கள்.நம்மைப் போலவே ஒரு பெண்ணிற்கும் , ஒரு ஆணிற்கும் பிறந்தவர்கள் தான் அவர்களும் என்பதை நம்மில் பெரும்பாலானோர் உணருவதில்லை. குரோமோசோம் குறைப்பாட்டால் அவர்களுக்கு பால் குறைபாடு ஏற்படுகிறது. அதாவது உடல் (பாலுறுப்புகள் உட்பட ) ஆணைப் போல இருந்தாலும் மனமும் உணர்ச்சிகளும் பெண்ணாகவே உணரச் செய்யும். அப்படி உணருபவரை திருநங்கை என்கிறோம். மீதி இருக்கும் வாழ்க்கையை வாழ்ந்து முடிக்க அவர் பெண்ணாக மாறுவது தான் சரியான தீர்வாக இருக்கிறது.  மிகுந்த போராட்டத்திற்கு பிறகே அறுவை சிகிச்சை மூலம் உடலளவிலும் பெண்ணாக மாறுகிறார்கள். அறுவை சிகிச்சையும் அதன் பிறகான ஒரு ஆண்டும் மிகவும் வலி நிறைந்ததாக இருக்கிறது. தொடர்ந்து பெண்பால் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜனை ஊசிகள் மூலம் எடுத்துக் கொள்வதன் மூலமே தொடர்ந்து பெண்ணாக உணர முடியும். இதே நிலை தான் திருநம்பிகளுக்கும். அதாவது உடலளவில் பெண்ணாக இருப்பார்கள் ,  மனமும் , உணர்ச்சிகளும் ஆணைப் போல இருக்கும். இவர்களுக்கும் அறுவை சிகிச்சை தான் தீர்வு. இவர்கள் அறுவை சிகிச்சைக்கு பிறகு ஆண்பால் ஹார்மோனான டெஸ்டோஸ்டீரானை ஊசிகள் மூலம் எடுத்துக்கொள்ள வேண்டிய சூழல் உருவாகிறது. மாற்றுப் பாலினத்தவர்களுக்கு இவை எல்லாமே பெரும் செலவு வைக்கக்கூடியவை. குடும்பங்களும் கைவிட்ட சூழலில் பணம் திரட்டுவது பெரும் போராட்டம்.

உடலில் ஏற்படும் மற்ற எந்தவிதமான குறைபாட்டையும் ஏற்றுக்கொள்ளும் குடும்பங்கள் , பால் குறைபாட்டை மட்டும் ஏற்றுக்கொள்வதில்லை. குடும்பம் ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தாலும் உறவுகளும் , சமூகம் அப்படி இருக்க அனுமதிப்பதில்லை. பால் குறைபாட்டின் காரணமாக மாற்றுப்பாலினத்தவர்களாக மாறியவர்களை குடும்பங்கள் கைவிடாமல் இருந்தாலே போதும் , நம்மால் ஒரு திருநங்கை , திருநம்பியைக் கூட தெருவில் பார்க்க முடியாது. குடும்பங்களும், சமூகமும் ஒதுக்கிய நிலையில் வேறு வழியில்லாமல் தான் யாசகம் பெறுவதையும் , பாலியல் தொழிலையும் செய்கிறார்கள். அவர்களின் வாழ்வில் பல தன்னார்வ அமைப்புகள் மூலம் சின்ன சின்ன முன்னேற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அவர்கள் கேலியாக பார்க்கப்படுவதற்கு முக்கிய காரணமாக சினிமா தான் இருக்கிறது.தொடர்ந்து அவர்களை தரக்குறைவாகவே சித்தரித்து வருகிறது. பள்ளி பருவத்தின் இறுதியிலும் , கல்லூரி பருவத்தின் தொடக்கத்திலும் தான் இந்த பால் குறைபாடு வெளியே தெரிகிறது. இதை கல்விக்கூடங்கள் சரியான விதத்தில் அணுக வேண்டும். அப்படி அணுகுவதன் மூலம் அவர்களின் அச்சத்தையும் , தயக்கத்தையும் , பயத்தையும் போக்க முடியும். குடும்பங்களும் அவர்களை கைவிடாமல் இருக்க வேண்டும்.குறைந்தபட்சம் தங்கள் வீட்டில் சேர்த்துக் கொள்ளா விட்டாலும் அவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளை தொடர்ந்து செய்ய முன்வர வேண்டும்.  மாற்றுப்பாலினத்தவர்களின் வாழ்க்கை மேம்பட அரசும் இன்னும் பெரிய அளவில் நலத்திட்டங்கள் அறிவிக்க வேண்டும். இவையெல்லாம் சரியாக நடந்தால் எந்த திருநங்கையும்(நம்பியும்) நம்மிடம் யாசகம் கேட்க வரமாட்டார்கள். அப்படி நடக்காதவரை நம்மை நோக்கித் தான் வருவார்கள். நீங்கள் உதவுங்கள் , உதவாமல் போங்கள். அது உங்கள் விருப்பம். ஆனால் அவர்களை உங்களுக்கு நிகராக மதியுங்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் கேலி செய்ய அனுமதிக்காதீர்கள். ' இவங்க பாடு தான். ஜாலியான பாடு ' என்று போகிற போக்கில் சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் அவர்களின் வாழ்க்கை நாம் நினைப்பதை விடவும் மிகவும் வலி நிறைந்தது. தங்களால் பிள்ளை பெற்றுக்கொள்ள முடியாது என்பது அவர்களின் வாழ்நாள் சோகம்.

பதின் பருவம் சிக்கலானது தான். பார்பதற்கு ஜாலியான வாழ்க்கை போல தோன்றினாலும் இந்த இளமை பருவம் மற்றவர்களிடம் யதார்த்தமாக கேட்க முடியாத கேள்விகளுடனே தான் கடந்து போகிறது. இந்த லட்சணத்தில் தான் நமது சமூக அமைப்பு இருக்கிறது. முதலில் வயதிற்கு வந்த பிறகு தங்களை பெரியவர்களாக கற்பனை செய்து கொள்வார்கள். அந்த அளவிற்கு மரியாதையையும் எதிர்பார்ப்பார்கள். பெரும்பாலான குடும்பங்களில் இந்த மரியாதை கலந்த அந்தஸ்து பிள்ளைகளுக்கு கொடுக்கப்படுவதில்லை. வயதிற்கு வந்த பிறகும் சிறு குழந்தை போல தான் சொல்வதைத் தான் அவர்கள் கேட்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். முதல் சிக்கல் அங்கு தான் உருவாகிறது. அடுத்ததாக பால் ஹார்மோன்கள் தங்கள் வேலையைக் காட்ட ஆரம்பிக்கின்றன. தங்களின் உயரம் , நிறம் , உருவம், தலைமுடி , முகம் குறித்த சிந்தனைகளும் , கவலைகளும் அதிகரிக்கின்றன. ஆண்களும் , பெண்களும் மிக அதிகமாக கண்ணாடியைப் பார்க்கும் பருவம், பதின் பருவம் தான்.

பருவ வயதை அடைந்தவுடன் ஆண்களில் சுரக்கும் பால் ஹார்மோனான டெஸ்டோஸ்டீரான் உடலில் கலந்தவுடன் தன்னை ஆணாக உணர ஆரம்பிப்பார்கள். எதிர் பாலினமான பெண்கள் மீது ஈர்ப்பு உண்டாகும். அவர்கள் தன்னை கவனிக்க வைக்க எதை எதையோ செய்யத் தோன்றும். தன் உடலைப் பற்றி அறிந்து கொள்ளவும் , எதிர்பாலினத்தின் உடலைப் பற்றி அறிந்து கொள்ளவும் ஆர்வம் கூடும். எப்படி குழந்தைகள் பிறக்கிறார்கள் என்ற கேள்வி ஆணிற்கும் , பெண்ணிற்கும் இந்த பருவத்தில் தான் தோன்றும். விந்து வெளியேற்றம் என்பது தான் இந்த பருவத்தில் ஆண்களின் பெரும் கவலையாக இருக்கிறது. ஏன் வருது ? எதுக்கு வருது ? அதுவும் வெள்ளையாக வருது ? அடிக்கடி வெளியேறினா பெரிய பிரச்சனைனு தொ(ல்)லைக்காட்சியில வேற ஒரு பெருசு பேசிப் பேசியே தொல்லை பண்ணுது ? என்று விந்து வெளியேற்றம் தொடர்பான கேள்விகளும் , அச்சமும் நீண்டுகொண்டே தான் போகிறது.  'விந்து என்பது எச்சில் மாதிரி , கண்ணீர் மாதிரி , வியர்வை மாதிரி ஆண் உடல் சுரக்கும் ஒரு நீர்மம் அவ்வளவு தான் ' என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஒரு சராசரி ஆணின் உடலில் ஒரு நாளுக்கு 200 மில்லியன் விந்தணுக்கள் உற்பத்தியாகின்றன.குறிப்பிட்ட அளவில் விந்து நீரும் சுரக்கிறது. இவற்றை தொடர்ந்து தேக்கி வைக்க முடியாததால் வெளியேறிக்கொண்டே இருக்கிறது. இதனால் எந்தப் பாதிப்பும் இல்லை.

பால் ஹார்மோனால் காமம் உடலில் பரவ ஆரம்பிக்கும். கலவி பற்றி அறிந்து கொண்ட பிறகு அதை செய்து பார்க்க உடலும் மனமும் ஏங்கும். ஆனால் அந்தப் பருவத்தில் அதற்கான பக்குவம் இருக்காது. எந்த வயதிலும் எப்படிப் பார்த்தாலும் காமத்திற்கு வடிகால் தேவை. நாம் வடிகாலை ஏற்படுத்தாவிட்டால் அதுவே ஏதோ ஒரு வகையில் ஏற்படுத்திக் கொள்ளும். எளிதான வடிகாலாக சுய இன்பம் இருக்கிறது. ஆண்களின் திருமண வயது கூடிக்கொண்டே போகும் இன்றைய காலகட்டத்தில் சுய இன்பம் தீங்கற்ற காம வடிகாலாக இருக்கிறது. இதனால் மற்றவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. பாலியல் கதைகள் படிப்பதாலும் , பாலியல் காணொளிகளைக் காண்பதாலும் காம உணர்வுகள் அதிகரிக்குமே தவிர குறையாது. ஆனால் சுய இன்பம் மூலம் காம உணர்வுகள் குறையும். நடைமுறையில் சுய இன்பம் என்பது ஒரு பெரும் குற்றமாகவே பார்க்கப்படுகிறது. அதனால் குற்ற உணர்ச்சியுடனே தான் சுய இன்பத்தில் ஈடுபடுகிறார்கள். பாலியல் வேட்கை ஏற்படும் போது சுய இன்பம் செய்வதில் எந்த தவறும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் சரியான இடைவெளியில் ஆண்களின் உடலிலிருந்து விந்து சரியான முறையில் வெளியேறிக்கொண்டே இருந்தால் அவர்களால் சமூகத்திற்கு பெரிய அளவில் தீங்குகள் நேராது.

பதின் பருவ பெண்ணின் முதல் பிரச்சனையாக மாதவிடாய் இருக்கிறது.சுற்றி இருக்கும் பெண்களால் ஓரளவு புரிதல் உருவாகிறது.பாலியல் கல்வி இல்லாத சூழலில் முழுமையான புரிதலுக்கு புத்தகங்களும், சரியான காணொளிகளும் தான் உதவி. அடுத்த சந்தேகம் தங்களின் மார்பகங்கள் குறித்து உருவாகிறது. அறிவியல் படி மார்பகங்கள் இருந்தால் பெண் என்று அடையாளம் காணவும் , குழந்தை பிறப்பின் போது பால் உற்பத்தி நடைபெற்று குழந்தைக்கு புகட்டவும் , கலவியின் போது பாலியல் நாட்டத்தை அதிகப்படுத்தவும் செய்கின்றன. மற்றபடி மார்பகங்களின் அளவிற்கும் அவற்றின் செயல்பாடுகளும் எந்தத் தொடர்பும் இல்லை. அடுத்து தங்களை அழகுபடுத்திக் கொள்ள அதிகம் மெனக்கெடுவார்கள். தங்களை யாரெல்லாம் கவனிக்கிறார்கள் என்று அவர்களுக்கு தெரியாமலேயே நோட்டம் விடுவார்கள். வீடுகளில் அர்த்தமேயில்லாமல் சண்டையிடுவார்கள். பெண்களின் காம உணர்வுகள் குறித்தும் , அவர்களின் காம வடிகால் குறித்தும் , அவர்களின் சுய இன்பம் குறித்தும் தெரியவில்லை. பொதுவெளியில் என்றில்லை எழுத்தில் கூட பெண்களின் காம உணர்வுகள் பற்றி எழுத இன்னமும் முழுமையான சுதந்திரம் கிடைக்கவில்லை என்று தான் தோன்றுகிறது. பாலியல் துன்புறுத்தல்கள் அடுத்த பிரச்சனையாக இருக்கிறது. லேசாகத் தொடுவது , தட்டுவது , தடவுவதிலிருந்து பாலுறுப்புகளைத் தீண்டுவது வரை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் யாரோ ஒரு மனிதனால் ஏதோ ஒரு அளவிற்கு கிட்டதட்ட எல்லா பெண்களுமே பாலியல் துன்புறுத்தலைச் சந்தித்தவர்களே என்கிறார்கள். ஆனால் இதைப் பற்றிய எச்சரிக்கையும் , விழிப்புணர்வும் இன்னமும் அந்த வயதில் நிறைய பெண்களுக்கு கிடைப்பதில்லை. சமீபத்தில் கூட மீ டூ ஹேஷ்டேக் ( #MeToo ) மிக வேகமாக உலகெங்கும் பரவியது நினைவில் இருக்கலாம். இதையெல்லாம் கடந்து தான் பெண்கள் நம்முடன் வாழ்ந்து வருகிறார்கள்.

பதின் பருவத்தில் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்களாக பெண்களும் , ஆண்களும் இருக்கிறார்கள். சிறிய தோல்வியை , ஏமாற்றத்தைக்கூட தாங்கிக் கொள்ள அல்லது அதைக் கடந்து போக பழக்கப்படவில்லை. இந்த மனநிலை தான் பள்ளித் தேர்வில் ஏற்படும் தோல்வியைக்கூட தாங்கிக்கொள்ள முடியாமல் ஒரு சிலரை தற்கொலை வரை கொண்டு போகிறது. தற்போது நிலைமை கொஞ்சம் மாறி இருக்கிறது. அடுத்தடுத்து தேர்வுகள் நடத்தப்படுவதால் முன்பு போல விபரீதங்கள் நிகழ்வதில்லை. குழந்தையாக இருக்கும் போதே ஏமாற்றத்தையும் , தோல்வியையும் பழக்கப்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.ஆனால் நமது குடும்பங்கள் குழந்தைகளை அப்படி பழக்கப்படுத்துவதில்லை. அவர்கள் கேட்டதையெல வாங்கிக் கொடுத்தே பழக்குகிறார்கள். ஏமாற்றம் என்பதை அறியாமலேயே வளருகிறார்கள். அப்படி பழக்கப்படாத மனம் தான் தன்னையும் வருத்திக்கொண்டு அடுத்தவரையும் பழிவாங்கும் மனநிலையை உருவாக்குகிறது. இந்த மனநிலை தான் இன்னொரு மனிதரைப் பாதிக்கும் குற்றத்தில் போய் முடிய வைக்கிறது. குழந்தைகளை  மனவலிமை பெற்றவர்களாக,  எத்தகைய துன்பங்களையும் தாங்குபவர்களாக,  மற்றவர்களின் வாழ்க்கையைப் பாதிக்காதவர்களாக வளர்க்க முயற்சிக்க வேண்டும். அவர்களுக்குப் புரிதல்களை உருவாக்க பெற்றோர்களும் , ஆசிரியர்களும் தோழமை உணர்வுடன் நடந்து கொள்வது அவசியமாகிறது.

எதையெல்லாம் செய்யக்கூடாது என்று சொல்கிறார்களோ அதையெல்லாம் செய்து பார்க்கும் ஆர்வம் இந்த பதின் பருவத்தில் தான் அதிகமாக இருக்கிறது. இந்தக் காரணத்தால் தான் புகைப்பழக்கமும் , மதுப்பழக்கமும் உள் நுழைகின்றன. இவற்றில் புகைப்பழக்கத்தை விட மதுப்பழக்கம் தான் நிறைய பேர்களின் வாழ்வை சீரழிவிற்கு கொண்டு வருகிறது. புகைப்பழக்கத்தை நிறைய பேர்களால் எளிதில் விட முடிகிறது. அதே நேரத்தில் மதுப்பழக்கத்தை அப்படி விட முடிவதில்லை. அதனால் தான் இந்தப் பருவத்தில்  அவர்களின் மனநிலைக்கு ஏற்றவாறான சரியான வழிகாட்டல்கள் தேவைப்படுகின்றன. ' ஆண்களிடம் பேசக்கூடாது ' என்று சொல்லியே பெண்களை வளர்ப்பதால் ஆண்களிடம் பேசிப் பார்க்கும் ஆர்வம் இந்த பருவத்தில் பெண்களுக்கு அதிகரிக்கிறது. இந்த நேரத்தில் ஒரு ஆணே அவளிடம் வந்து பேசும் போது , அவன் பேசுவது பிடித்துப் போனால் தொடர்ந்து அவனிடம் பேசிக்கொண்டே இருக்க விரும்புகிறார்கள். இதைக் காதலென்று தவறாகப் புரிந்து கொள்கிறார்கள் பதின் பருவ பெண்களும் , ஆண்களும்.
எதிர்பாலின ஈர்ப்பை காதலென்று மிகத்தப்பாக புரிந்து கொள்ளும் பருவமாக பதின் பருவம் இருக்கிறது. பாலியல் ஈர்ப்பை காதலென்று நம்ப வைக்கும் வேலையை தமிழ் சினிமா ஆண்டாண்டு காலமாக செய்து வருகிறது. இந்த பருவத்தில் வருவது காதலே அல்ல, வெறும் ஈர்ப்பு தான். ஆனால் இதை அவர்களிடம் சொல்லக்கூட யாரும் தயாராக இல்லை. இந்த வயதில் இப்படித்தான் தோன்றும் இது காதல் அல்ல என்று அவர்களிடம் தெளிவாக சொல்லிவிட்டாலே போதுமே , ஈர்ப்பை காலென்று நம்ப மாட்டார்களே. இந்த புரிதலை குடும்பங்களும் , கல்விக்கூடங்களும் தான் உருவாக்க வேண்டும். முதலில் இதைப்பற்றி பேசவே அவர்களை அனுமதிப்பதில்லை.அப்புறம் எப்படி புரிதலை உருவாக்குவது ? இந்த வயதுகளில் காதலி அல்லது காதலனுடன் வீட்டை விட்டு ஓடுவது இன்னமும் குறைந்தபாடில்லை. நமது சமூக அமைப்பிலேயே தவறிருக்கிறது.   

இந்த பருவத்தை கடந்த பிறகு தான் நாமா இப்படியெல்லாம் நடந்து கொண்டோம் என்று தோன்றும். என்ன செய்வது ? யாராக இருந்தாலும் அந்த பருவத்தின் குழப்பங்களையும் , சந்தேகங்களையும் , கேள்விகளையும் கடந்து தான் வரவேண்டியுள்ளது.முந்தைய காலத்தில் பாலிய விவாகம் என்று ஒன்று நடைமுறையில் இருந்தது. சமூக பொருளாதார காரணங்களின்படி வேண்டுமானால் குழந்தை திருமணம் தவறானதாக இருக்கலாம். இயற்கையின் நியதிபடி வயது வந்த இருவர் சேர்ந்து வாழ்வதில் தவறில்லை . வயதிற்கு வந்த உடனேயே அருகிலேயே துணை இருப்பதால் காமத்தை அடக்கியாள வேண்டிய கட்டாயம் அப்போது இல்லை. காமத்திற்கான வடிகாலை வேறு வழிகளில் அடைய வேண்டிய நிர்பந்தமும் இல்லை. அதனால் குழந்தைகள் மீதான துன்புறுத்தல்களும் அப்போது அவ்வளவாக இல்லை என்கிறார்கள் , உளவியல் நிபுணர்கள்.

நாகரிக சமூகம் என்று சொல்லி குழந்தை திருமணம்  என்பதை நீக்கி விட்டோம்.மிகவும் நல்லது தான்.இன்றைய குழந்தைகள் அந்த வயதில் உடலளவிலோ , மனதளவிலோ முதிர்ச்சியாக இருப்பதில்லை. ஆனால் அதற்கு பதிலாக எதையும் அங்கே வைக்கவில்லை. இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் , '' ஒரு இடத்திலிருந்து ஒன்றை எடுக்கும் போதே அதற்கு பதிலாக எதை வைக்க வேண்டும் என்பதையும் முடிவு செய்ய வேண்டும் '' என்று சொன்னதாகச் சொல்கிறார்கள். இதை எல்லா இடத்திலும் பொருத்திப் பார்க்க முடியும். அரசியலில் கூட ஒரு குறிப்பிட்ட கட்சி, ஆட்சிக்கு வரக்கூடாது என்று முடிவெடுக்கும் போதே யார் வரவேண்டும் என்பதையும் சேர்த்தே முடிவெடுக்க வேண்டியது அவசியம்.

குழந்தை திருமணம் தடை செய்யப்பட்ட பிறகு 18 வயதானவர்களை மேஜர் என வகைப்படுத்துகிறோம்.தன் வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது என சட்டம் சொல்கிறது. ஆனால் அவர்களுக்கு அந்த உரிமையை சமூகம் கொடுப்பதில்லை. ஆண்கள் , பெண்கள் இந்த இரண்டு பிரிவுகளில் பெண்களில் பெரும்பாலானோருக்கு விரைவில் திருமணம் நடந்துவிடுகிறது. அந்த திருமணம் விருப்பப்பட்டோ , நிர்பந்தத்தாலோ நடக்கிறது. அதே நேரத்தில் ஆண்கள் , திருமணத்திற்காக வயதிற்கு வந்ததிலிருந்து பத்து, பதினைந்து ஆண்டுகளோ அல்லது அதற்கு மேலோ காத்திருக்க வேண்டியுள்ளது. அதுவரை அவன் காமத்தை கட்டுப்படுத்த வேண்டுமா ?  அல்லது எந்த வழியிலாவது பெற்று கொள்ளலாமா ? என்று எதுவும் சொல்லித்தரப்படுவதில்லை. பொத்தாம் பொதுவாக விளையாட்டுகளிலும் , கலைகளிலும் ஆர்வத்தைச் செலுத்துவதன் மூலம் தொடர்ச்சியான பாலியல் எண்ணங்களிலிருந்து விடுபடலாம் என்று மட்டும் சொல்கிறார்கள். இப்படியாக பதின் பருவம் கடந்து போகிறது...

பேசுவோம்...

தொடர்புக்கு :
குறி சிற்றிதழ் ,

9/3 , யூசுப் நகர் ,
மாரம்பாடி  சாலை,
வேடசந்தூர் -624710,
திண்டுக்கல் மாவட்டம் .

சந்தாதாரர் ஆக:
குறி தனி இதழ் ரூபாய் .20 
பத்து இதழ் சந்தா ரூபாய்.200
சந்தா SBI வங்கி மூலம் செலுத்தலாம்
P.MANIKANDAN
A/C NO. 30677840505.
VEDASANDUR
IFS CODE : SBIN0011941

இதழாசிரியர்  மணிகண்டன் - 9976122445.

இதழ் குறித்த உங்களின் பின்னூட்டங்கள் மற்றும் படைப்புகளை

kurimagazine@gmail.com 

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் .

மேலும் படிக்க :
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms