Sunday, July 23, 2023

வடகிழக்கு மாநிலங்களை காப்போம் !

 


இன்று வரை இயற்கை வளங்கள் சிதைவடையாமல் இருக்கும் வடகிழக்கு மாநிலங்களை பிரிவினைவாத பாஜகவிடமிருந்து காப்பாற்ற வேண்டும். பாஜக, கால் பதித்திருக்கும் ஒவ்வொரு இடத்திலும் மக்களிடையே பிரிவினைவாதத்தையும் வெறுப்பையுமே வளர்த்திருக்கிறது. மணிப்பூர் வன்முறைக்கும் இதுவே காரணம். 


பாஜக இருக்கும் இடத்தில் முதலாளிகள் மட்டுமே வளர்ந்திருக்கிறார்கள், மக்களின் வாழ்க்கைத்தரம் எல்லா இடங்களிலும் குறைந்திருக்கிறது. ஒட்டு மொத்த இந்திய மக்களின் வளர்ச்சி குறித்து ஒருபோதும் பாஜக  சிந்தித்ததில்லை.  பார்ப்பனியம், தனது ஆதாயத்திற்காக எந்த எல்லைக்கும் போகும், எதையும் செய்யத் தயங்காது. பாஜகவின் நிலைப்பாடும் இதுதான். வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் பிரிவினைவாதத்தை வளர்த்து சூழ்ச்சி செய்து ஆட்சியைக் கைபற்றியிருக்கிறது. 


பாஜக எந்த இடத்தில் நுழைந்தாலும் அங்கிருக்கும் சிறுபான்மையினர்தான் அவர்களின் இலக்கு. அந்தச் சிறுபான்மையினர் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவராகவோ, குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்தவராகவோ , குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவராகவோ இருக்கலாம். அங்கிருக்கும் பெரும்பான்மையினர் மத்தியில் அந்தச் சிறுபான்மையினர் மீது தொடர்ந்து அவதூறுகளையும், வெறுப்புகளையும் வளர்த்து வன்முறையைத் தூண்டி தனக்கு வேண்டியதை சாதித்து கொள்வதுதான் பாஜகவின் செயல்திட்டம். 2002ல் இனப்படுகொலை நடந்த பிறகு பாஜக குஜராத்திலிருந்து தூக்கி எறியப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை. ஏனெனில் பாஜக, பெரும்பான்மையினரை மட்டுமே ஆதரிக்கும். பெரும்பான்மையினரின் செயல்களை நியாயப்படுத்தும். பெரும்பான்மையினரில் இருக்கும் குற்றவாளிகளுக்கும் பதவிகள் கொடுத்து அழகு பார்க்கும். அடுத்து மணிப்பூர் என்ன ஆகுமோ ? தெரியவில்லை.


வடகிழக்கு மாநிலங்களில் இன்று வரை பழங்குடியின மக்களால் காப்பாற்றப்பட்டு வந்து இயற்கை வளங்களின் நிலை இனி என்ன ஆகுமோ என்பதே பெரும் கவலையாக இருக்கிறது. இதைப் பற்றி பாஜக 1% கூட சிந்திக்கப் போவதில்லை. அனைத்து இயற்கை வளங்களையும் அள்ளி கார்ப்பரேட் நிறுவனங்கள் கையில் அடிமாட்டு விலைக்கு கொடுத்துவிட்டு வேடிக்கை மட்டுமே பார்க்கும். 


தாங்கள் இந்திய அளவில் சிறுபான்மையினமாக இருப்பதால் உருவான தாழ்வு மனப்பான்மையை மறைக்க இந்து ,இந்துத்துவா என்று சொல்லி பெரும்பான்மையினர் முதுகில் ஏறி சவாரி செய்கிறார்கள், பார்ப்பனர்கள். இதை  உணராதவரையில் இந்திய நாட்டிற்கு, இந்திய மக்களுக்கு விடிவுகாலமே இல்லை. நாம் சமநிலைப்படுத்தவில்லை என்றால் இயற்கை அனைத்தையும் சமநிலைப்படுத்தும். 


பார்ப்பனியம் - RSS - பாஜக ஆதிக்கம் செலுத்தும் வரை இந்தியா எல்லோருக்குமானதாக இருக்காது. இந்தியா என்ன உங்கப்பன் வீட்டு சொத்தா ? இந்தியா, இந்தியர்கள் அனைவருக்கும் சொந்தம். பிரிவினைவாத, மதவாத, இனவாத, சாதிவாத, கார்ப்பரேட்வாத , சமத்துவத்திற்கு எதிரான சக்திகளை வீழ்த்தி எல்லோருக்குமான இந்தியாவை கட்டமைப்போம்.


பார்ப்பனியம் வீழும் இடத்திலிருந்தே புதிய இந்தியா தோன்ற முடியும் ! 


மேலும் படிக்க:


டெல்லி எரிகிறது !


Saturday, July 15, 2023

தக்காளியும் விவசாயியும் பின்னே கார்ப்பரேட்களும் !


தக்காளியும் வெங்காயமும் வருடத்திற்கு ஒரு முறையோ இரு முறையோ தான் உற்பத்தி குறையும் போது கிலோ 100 ரூபாயைத் தாண்டுகிறது. உற்பத்தி அதிகமாகும் போது தானாகவே குறைந்துவிடுகிறது.சில சமயங்களில் விலை கிடைக்காமல் கிழே கொட்டும் நிலையும் ஏற்படுகிறது. அப்போதெல்லாம் அவர்களுக்காக யாரும் கவலைப்படுவதில்லை. இப்போதைய விலையேற்றமும் 1000-ல் ஒரு விவசாயிக்கு பலன் கொடுக்கலாம்.


இந்திய நாட்டில் விவசாயியாக வாழ்வது பெரும் சவால். தமிழ்நாட்டைப் பொருத்தவரை பால் வருமானம் என்ற ஒன்று இருப்பதால்தான் விவசாயிகள் நிலத்தையே உழுகின்றனர். இல்லையென்றால் பாதி நிலங்கள் தரிசாக மாறியிருக்கும். தற்போது மாட்டுத் தீவனங்களின் விலையேற்றத்தால் பால் வருமானமும் குறைய ஆரம்பித்துவிட்டது. இலவச மின்சாரம் மற்றும் மானியங்கள் கொடுக்கப்பட்டாலும் விவசாயிகளின் வாழ்வு இன்னமும் மேம்படவில்லை. மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வது தீர்வாக சொன்னாலும் இது எல்லோருக்கும் சாத்தியமானதாக இல்லை.


இன்றைய தொடு திரை வாழ்விலும் " உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது " என்பது மட்டும் மாறவேயில்லை. எல்லா உழைப்பிற்கும் விலை இருக்கிறது. விவசாயிகளின் உழைப்பிற்கும் விலை இருக்கிறது. ஆனால் பெரும்பாலான நேரங்களில் விவசாயிகளின் உழைப்பிற்கு விலையே கிடைப்பதில்லை. ஏதோ இந்த விலையேற்றம் தற்போது தக்காளி, சின்ன வெங்காயம் அறுவடை செய்யும் விவசாயிகளுக்கு கொஞ்சம் நம்பிக்கையை அளிக்கலாம் அவ்வளவு தான்.


தற்போதைய காலநிலை மாற்றத்தால் முதல் பாதிப்பைச் சந்திப்பவர்கள் விவசாயிகள்தான். விளைச்சலின் போது பெய்ய வேண்டிய மழை பெய்வதில்லை. அறுவடையின் போது பெய்யும் மழை அனைத்தையும் அழித்துவிட்டு போய்விடுகிறது. சமீப ஆண்டுகளில் அனைத்து விதமான விவசாய பயிர்களுக்கும் மிக அதிக அளவிலான ரசாயன உரங்களும் , பூச்சிக்கொல்லி மருந்துகளும் பயன்படுத்தப்படுகின்றன.ஒரு புறம் இது ஒட்டு மொத்த சமூகத்தின் உடல்நிலையை கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கிறது. மறுபுறம் இதற்கான செலவுகளும் விவசாயிகளைப் பாதிக்கின்றன. இயற்கை விவசாயம் குறித்தான புரிதல்களும் பயன்பாடுகளும் அதிகரிக்க வேண்டும். 


விவசாயிகளும் பணப்பயிர்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல் உணவுப்பயர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். தங்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை தாங்களே விளைவித்துக்கொண்டு மீதியை விற்க வேண்டும். அப்படி செய்தால் விவசாயிகளுக்கும் பலன் கிடைக்கும். சந்தையில் தேவை குறைவதால் மக்களுக்கும் பலன் கிடைக்கும். இதைப் படிப்படியாகவாவது தொடங்க வேண்டும்.   


'100 நாள் வேலையால் விவசாயம் பாதிக்கிறது' என்பது ஏற்புடையதல்ல. 100நாள் வேலை வந்த பிறகுதான் விவசாய கூலிகளின் தினசரி கூலி உயர்ந்திருக்கிறது. " அப்போதெல்லாம் சோத்த மட்டும் போட்டோம் நாளெல்லாம் பாடுபட்டாங்க. இப்ப சம்பளம் எல்லாம் கேட்கிறாங்க " என்ற‌ நிலபிரபுத்துவ மனநிலை தான் 100 நாள் வேலையை குறை கூறுவதற்கு காரணம்.  


'மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்' என்ற 100 நாள் வேலைத்திட்டம் நிச்சயமாக முந்தைய காங்கிரஸ் அரசின் சாதனைதான். இன்றும் கடைக்கோடி மக்களையும் நேரடியாக சென்று சேரும் ஒரே மத்திய அரசின் திட்டம் இது மட்டும்தான். எல்லோராலும் கைவிடப்பட்டவர்களை , முதியவர்களை இந்த திட்டம் தான் சோறு போட்டு காப்பாற்றுகிறது. மற்றவர்களுக்கு இது உபரி வருமானம். இந்த பணம் முழுவதும் உள்ளூர் சந்தையிலேயே செலவிடப்படுவதால் உள்ளூர் பொருளாதாரத்தைக் காப்பாற்றும் திட்டமாகவும் இதனைப் பார்க்கலாம். இந்தத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும்.


100நாள் வேலையால் விவசாயிகள் பாதிக்காமல் இருக்க உள்ளாட்சி அமைப்புகள் களத்தில் இறங்க வேண்டும். வெகு சில இடங்களில் 100நாள் வேலைத்திட்டம் விவசாயிகளுடன் இணைந்து செயல்பாட்டில் உள்ளது. விவசாயிகள் உள்ளாட்சி அமைப்பில் தங்களுக்கு தேவையான ஆட்களை பதிவு செய்தால் 100 நாள் வேலை செய்பவர்கள் அங்கே அனுப்பப்படுவார்கள். இது தமிழ்நாடு முழுவதும் செயல்பாட்டிற்கு வந்தால் '100நாள் வேலையால் விவசாயம் பாதிக்கிறது ' என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.


விவசாய விளைபொருட்களின் ( காய்களிகள், பழங்கள், அரிசி, பருப்பு, எண்ணெய்... ) உற்பத்தி குறையும் போது விலை கூடும். உற்பத்தி அதிகமாகும் போது விலை தானாகவே குறைந்துவிடும். ஆனால் ஊடகங்களில் எப்போதும் இவைதான் பெரிதுபடுத்தப்படுகின்றன. இதே சூழலில் ஏறினால் இறங்காத பொருட்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்கள்தான். இவை பற்றி யாரும் வாய் திறப்பதில்லை. இரண்டு ஆண்டுகளை கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய விவசாய பொருட்களின் விலைகளுக்கும், தற்போதைய விவசாய விளைபொருட்களின் விலைகளுக்கும் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் பெரிய வித்தியாசம் இருக்காது. அதே போல இரண்டு ஆண்டுகளில் ஏற்றம் மட்டுமே கொண்டிருக்கும் கார்ப்பரேட் நிறுவன தயாரிப்புகளைக் கவனியுங்கள். எதற்காக நாம் அதிகம் செலவு செய்கிறோம் என்பது தெளிவாகும்.


சோப்புகள், பற்பசை, டீத்தூள், நேப்கீன்கள், மருந்து, மாத்திரைகள், பெட்ரோல், டீசல், எரிவாயு, கார், பைக், கட்டுமான பொருட்கள் என்று பலவும் அதிக விலையேற்றத்தை சந்தித்து இருக்கின்றன. இவற்றை எல்லாம் சத்தமே இல்லாமல் வாங்கி பயன்படுத்தி வருகிறோம். காரணம் இவை தொடர்ந்து விளம்பரங்கள் செய்யப்படுதன் மூலமாக நமது மூளையில் ஏற்றப்பட்டுள்ளன. அதனால் இந்தப் பொருட்களின் விளையேற்றத்தை நாம் கண்டுகொள்வதில்லை. நமது வாழவின் ஒவ்வொரு நிமிடமும் கார்ப்பரேட் நிறுவனங்களால் பணமாக மாற்றப்படுகிறது. 


விவசாயமும், விவசாய விலை பொருட்களின் விற்பனையும் எளிய மக்களின் கைகளில் இருக்கும் வரை மட்டுமே உற்பத்தி சார்ந்த ஏற்ற இறக்கங்கள் பொருட்கள் விலையில் எதிரொலிக்கும். என்று இவை அனைத்தும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கைகளுக்குப் போகிறதோ அன்றிலிருந்து எதற்கும் ஏற்றம் மட்டுமே இருக்கும். இறக்கம் என்பதே இருக்காது. உற்பத்தியே அதிகரித்தாலும் விற்பனை விலை குறையாது. இந்த நிலை உருவாகாமல் தடுக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் தள்ளிப் போடலாம். எல்லாம் நம் கைகளில் தான்.


மேலும் படிக்க :

உணவிற்கான உள்நாட்டுப் போர் ?

Saturday, April 1, 2023

மனிதரில் இத்தனை நிறங்களா !


1978 ஆம் ஆண்டு  தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத திரைப்படமான 'அவள் அப்படித்தான்' திரைப்படத்துடன்    தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்த திரைப்படம் தான் ' மனிதரில் இத்தனை நிறங்களா !' . 'அவள் அப்படித்தான் ' திரைப்படமே கடந்த சில ஆண்டுகளாகத்தான்  கொண்டாடப்படுகிறது. இதுவரை 'அவள் அப்படித்தான் ' பார்க்காதவர்கள் பார்த்து விடுங்கள். 


கடந்த டிசம்பர் மாதத்தின் கடைசி  வாரத்தில் ஒரு காலை வேளையில்  கே டிவியில் 'மனிதரில் இத்தனை நிறங்களா! ' திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. இது வரை பார்க்காத திரைப்படமாக இருக்கிறதே என்று நானும் இணையரும் வேலைக்கு கிளம்பிக்கொண்டே பாரத்துக்கொண்டிருந்தோம். திரைப்படத்தின் இறுதிக்காட்சியையும் விடுபட்ட காட்சிகளையும் இரவு வீடு வந்த பிறகு யுடியூப்பில் தேடிப் பாரத்தாச்சு. ரசிக்கும்படியாகவே இருந்தது.


'அவள் அப்படித்தான்' போல இந்தத் திரைப்படமும்  பெண் கதாப்பாத்திரத்தைப் , பெண்ணுடலை மையப்படுத்திய திரைப்படம்தான். அதில் ஸ்ரீபிரியா, இதில் ஸ்ரீதேவி. கமலின் ரசிகனல்ல. கமலின் திரைப்படங்கள் பிடிக்காது. ஆனால் இந்தத் திரைப்படத்தில் நடித்திருக்கும் கமலைப் பிடித்திருக்கிறது. அதிலும் இத்திரைப்படத்தில் அவர் பாடியிருக்கும்  ' மாமா மனசு இன்னைக்கு நல்லாலே...' என்ற பாடலும் அருமை. கேட்க நன்றாக இருக்கிறது. பல முறை கேட்டாச்சு.   கமலின்  குரலும் பிடித்துப் போனதே என ஆச்சரியமாகத்தான் இருந்தது. இத்திரைப்படம் போல கமலை அடக்கி வாசிக்க வைக்கும் திரைப்படங்கள் அமைந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். ஆனால் அவரும் நாயகத்துதிபாடலுக்கு பலியாகிவிட்டார். அவர் திரைப்படங்களில் பேசிய அரசியலும் ஏற்புடையதல்ல.


இந்தத் திரைப்படத்தில் கமல், ஸ்ரீதேவியின் உடன்பிறவா அண்ணனாக நடித்திருக்கிறார். நமக்கெல்லாம் இது புதிது.  ஸ்ரீதேவிக்கு ஜோடி, தெலுங்கு நடிகர் முரளி மோகன். கமலின் ஜோடி, சத்யப்ரியா. இந்த இருவருக்கும் இடையிலான காட்சிகள் அவ்வளவு அந்நியோன்யமாக இருக்கிறது. இவர்கள் இருவருக்கும் இடையிலான உரையாடல்கள் இனிமை. ஸ்ரீதேவி எப்போதும் போல அவரது பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார். ஸ்ரீதேவியின் குரல் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. இந்த குரலுக்காகவே   ஸ்ரீதேவி நடித்த மற்ற  திரைப்படங்களையும் பார்க்க வேண்டும் போலவே.


மனோரமா, அட்டகாசமான நடிப்பு. 'She Ruled the Screen' என்று சொல்லலாம். இவர் வரும் காட்சிகளில் நாம் இவரை மட்டுமே கவனிப்போம். அந்த அளவிற்கு தனது நடிப்பால் திரையை ஆக்கிரமித்து இருக்கிறார். கே.ஏ.தங்கவேலு, மிகவும் பிடித்த நகைச்சுவை நடிகர். பேசுகின்ற பேச்சிலேயே நம்மை சிரிக்க வைப்பவர். தனித்துவமான கலைஞர். இவருடன் சுருளி ராஜன். சுருளிராஜனின் டைமிங் வசனங்கள் அட்டகாசம். கே.ஏ.தங்கவேலுவும், சுருளிராஜனும் வரும் காட்சிகள் அவ்வளவு ரகளை.


திரைப்படத்தின் இசை நன்றாக இருக்கிறதே என்று தேடி பார்த்தால், ஷியாம் அவர்களின் இசை. மலையாளத்தில் பெரு வெற்றி பெற்ற தமிழ் இசையமைப்பாளர். இந்த திரைப்படம் வேண்டுமானால் நமக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் இந்தப் பாடலை நம்மில் பெரும்பாலானோர் பார்த்திருப்போம் அல்லது கேட்டிருப்போம். அந்தப்பாடல் 'மழை தருமோ என் மேகம்...'. இந்தப்பாடலை தொலைக்காட்சியில் பார்க்கும் போதெல்லாம்  "ஸ்ரீதேவி இருக்காங்க, ஆனால் இந்த நடிகரை பார்த்ததில்லையே" என்று தோன்றும்.  பாடலை ரசித்துவிட்டு  இதுவும் இளையராஜா பாட்டுதான் போல என்று கடந்து போயிருப்போம். ஆனால் இந்தப் பாடலைக் கொடுத்தவர், ஷியாம். குறிப்பிடத்தக்க மற்றொரு பாடல் எஸ்.ஜானகி பாடிய ' பொன்னே பூமியடி...' . கமல் பாடிய பாடலிலும் பின்னணி இசை அருமை. 


கிராம பஞ்சாயத்தை டேமேஜ் செய்யும் ஒரு காட்சியும் இருக்கிறது. நியாய குரலை முதலில் யார் எழுப்புவது என்பதுதான் இங்கு பிரச்சனை. முதல் குரல் ஒலித்தால் அதற்கு ஆதரவாக பல பக்கங்களிலிருந்து குரல்கள் ஒலிக்க ஆரம்பிக்கும். விதவை மறுமணத்தை ஆதரிக்கும் காட்சி இடம்பெறுகிறது. அறிஞர் அண்ணா, திரைக்கதை எழுதி வெளியான 'காதல் ஜோதி' என்ற திரைப்படத்திலும் விதவை மறுமணம் குறித்த காட்சியுண்டு. ' உன் மேல கொண்ட ஆச...' என்ற பிரபல பாடலும் உண்டு.திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியான இந்நிகழ்வு 80களுக்குப் பிறகு மாறிவிடுகிறது. 


குறிப்பாக எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில்தான் நிறைய பிற்போக்குத்தனங்கள் மீண்டும் திரையை நிறைக்க ஆரம்பித்தன என நினைக்கிறேன். இது தானாக நடந்ததா ? அல்லது திமுகவை எதிர்ப்பது என்பது திராவிட பெரியாரிய கருத்துகளை எதிர்ப்பதாக மாறிப்போனதா? என்று தெரியவில்லை. பண்ணையார்கள் வில்லன்களாக சித்தரித்த காலம் போய் கதாநாயகர்களே பண்ணையாய்களாக மாறியதும் ஆண்டான்- அடிமை மனநிலையை மீண்டும் நிலைநிறுத்தியதும் இந்த காலகட்டம் தான். 


திராவிட இயக்கத்தின் பாதிப்பு தொடர்ந்து தமிழ் சினிமாவில் இருந்துகொண்டேதான் இருக்கிறது. முன்பு மிகவும் அழுத்தமான பாடல்கள் மூலமாக சமத்துவ கருத்துகள் பரப்பப்பட்டன. பின்பு ஒரு சில காட்சிகள் , ஒரு சில வசனங்கள் என சுருங்கிப்போய்விட்டது. முழுநீள திராவிட சினிமா என்பது மிகவும் குறைவு. சமீப ஆண்டுகளில் பல்வேறு கோணங்களிலிருந்து சமத்துவத்தை முன்வைக்கும் திரைப்படங்கள் வெளிவர ஆரம்பித்திருப்பது நல்ல விசயம்.


'மனிதரில் இத்தனை நிறங்களா!' திரைப்படம் முழுவதும் கூர்மையான வசனங்கள் நிரம்பியிருக்கின்றன. இத்திரைப்படம் தமிழ் சினிமா மீதான பார்வையை மாற்றியிருக்கிறது. திரைப்படத்தின் படத்தொகுப்பில் ஏதும் பிரச்சனையா ? என்று தெரியவில்லை.‌ ஒரு சில காட்சிகள் தொடர்ச்சியாக இல்லை. 


கோவி.இளங்கோவன் அவர்கள் எழுதிய ' அக்னி ரோஜா ' என்ற நாவலைத் தழுவி இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆர்.சி.சக்தி இயக்கிய இத்திரைப்படத்தை யுடியூபில் காணலாம்.


மேலும் படிக்க :

அவள் அப்படித்தான்! 

உதிரிப்பூக்கள் !

அனல் மேலே பனித்துளி - காத்திரமான படைப்பு ❤️

பெண்ணுடல் மீது இந்த சமூகம் ஏற்றி வைத்திருக்கும் அத்தனை அறைகலன்களையும் (ஃபர்னிச்சர்களையும்) உடைத்து எறிந்திருக்கிறது, இத்திரைப்படம். மிகவும் தைரியமான, முதிர்ச்சியான உருவாக்கம். ஒரு திரைப்படம் பார்த்த உணர்வே இல்லை. அந்தச் சூழலுக்குள் நாம் இருப்பது போன்ற மனநிலையை உருவானது. கதாப்பாத்திரங்கள் மிகவும் நம்பிக்கையளிக்கின்றன. தமிழ் சினிமாவின் முகம் மாற ஆரம்பித்துவிட்டது. இப்படியான சினிமாக்கள்தான் இன்றைய தேவை. 


ஒட்டு மொத்த மனித இனத்திற்குமே எதிரி, 'ஆதிக்கம்'. அந்த ஆதிக்கத்துடன் அதிகாரமும் இணையும்போது அது மேலும் பலம்பெற்று விடுகிறது. நமது சமூக சூழலில் எளிய மக்கள் அதிலும் பெண்கள்  அதிகாரத்துடன் கூடிய ஆதிக்கத்தை எதிர்த்து போராடுவது மிகவும் சவாலான விசயம். ஆனால் பெண்கள் துணிந்துவிட்டால் எல்லாம் தூள் தூளாகிவிடும். 


ஒவ்வொரு காட்சியும் மிகவும் கவனமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.  எந்த இடத்திலும் பொதுப்புத்திக்கு மதிப்பு கொடுக்காமல் அறத்தின் பக்கம் நிற்கிறது, திரைப்படம். பெண் மீதும், பெண்ணுடல் மீதும், பெண் அணியும் ஆடைமீதும் ஏற்றி வைத்திருக்கும் தேவையற்ற சுமைகளை இறக்க வேண்டும் என இத்திரைப்படம் பேசுகிறது.


 நமது குடும்ப அமைப்பு மிகவும் பிற்போக்கானதாகவே இருக்கிறது. குடும்ப அமைப்பில் முற்போக்கான மாற்றங்கள் நிகழ்வதற்கு பதிலாக மேலும் பின்னோக்கியே மக்களைத் தள்ளி வருகின்றன, காட்சி ஊடகங்கள். அதிலும் தொலைக்காட்சித் தொடர்கள் மிகவும் கொடூரம். மற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் பெண்களை பொருளாகவே அணுகுகின்றன. சமத்துவம் சுத்தமாக இல்லாத இடம், சின்னத்திரை. பெரிய திரை நாயகத்துதிபாடலில் சிக்கித்தவிக்கிறது. சமத்துவம் என்பது பெரிய திரையிலும் இல்லை. மிகவும் அரிதாகவே 'அனல் மேலே பனித்துளி ' போன்ற மாற்றத்தை வலியுறுத்தும் திரைப்படங்கள் வெளியாகின்றன. 


ஆன்ட்ரியா மிகவும் கச்சிதமான தேர்வு. ஓட்டு மொத்த திரைப்படத்தையும் தாங்கி நிற்கிறார். அவர்,  உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமும் அதைக் காட்சிப்படுத்திய விதமும் சிறப்பு. கதாநாயகன் கதாப்பாத்திரம் நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அதிலும் அந்த வீட்டு ஓனர் கதாப்பாத்திரம்,அல்டிமேட்.  'சுளுந்தீ ' நாவல் எழுத்தாளர், அண்ணன் முத்தநாகு   ஆன்ட்ரியாவின் அப்பாவாக வருகிறார். கதை நடக்கும் இடங்கள் மற்றும் அந்தத் திருமண சடங்குகள் போன்றவற்றில் இயக்குநருக்கு உதவியிருப்பார் என நினைக்கிறேன். பாடலாசிரியர் உமாதேவியின் 'நான் இங்கே' பாடல் பொருத்தமான காட்சிகளுடன் திரையில் விரிகிறது.


சோனி லிவ் தளத்தில் காணக்கிடைக்கிறது. வாய்ப்புள்ளவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும். 


Very Bold Attempt 👍

Matured Making 💪

Salute to the Director And Team 👏


மேலும் படிக்க :

நட்சத்திரம் நகர்கிறது - மாற்றத்தின் முதல் அடி !

JANA GANA MANA - பாசிச எதிர்ப்பு சினிமா !


Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms