Tuesday, October 21, 2014

டாஸ்மாக் அரக்கன் அழியும் நாளே !

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள்  நிரந்தரமாக மூடப்படும் தினமே தமிழ்நாட்டிற்கு உண்மையான தீபாவளி . அதுவரை தீபாவளி என்பது இயந்திர வாழ்விற்கு ஒரு நாள் ஓய்வு தரும் சாதாரண விடுமுறை நாள் அவ்வளவு  தான். 40% மக்கள் குடியால் நேரடியாகவோ ,மறைமுகமாகவோ பாதிக்கப்பட்ட நிலையில் மதுபானக்கடைகள் என்னும் அரக்கன்  வதம் செய்யப்படும் நாளையே தீபாவளியாக கொண்டாடுவது தான் பொருத்தமாக இருக்கும் .

மது ,மனித இனத்தின் தொடக்க காலத்திலிருந்தே மனிதனுடன் பயணித்து வருகிறது . ஆரம்பத்தில் கொண்டாட்டத்தின் பானமாக இருந்த மது, கால ஓட்டத்தில் பலவிதமான மாற்றங்களை அடைந்ததுடன் மட்டுமல்லாமல் தற்போது சமுக அமைப்பை பெருமளவு பாதிக்கும் காரணியாக உருவெடுத்துள்ளது . தமிழகத்தைப் பொருத்தவரை மது முன்பே சீரழிவை ஏற்படுத்தி இருந்தாலும் அரசு மதுபானக் கடைகளான டாஸ்மாக் தெருவுக்கு தெரு திறக்கப்பட்டதன் விளைவாக மிக கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. மதுபானக் கடைகள் தனியார்வசம் இருந்தபோது 2000 கோடி வருமானம் கிடைத்தது. ஆனால் ,தற்போது டாஸ்மாக் கடைகள் மூலம் கிடைக்கும் ஆண்டு வருமானம் 20000 கோடி . ஆட்சி செய்பவர்களே மது விற்பதன் மூலம் கிடைக்கும் வருமானத்திலிருந்து எங்களுக்கு எதுவும் செய்ய வேண்டாம் .


தமிழகம் இரண்டு விசயங்களில் முதலிடம் வகிக்கிறது .இதற்காக  யாரும் பெருமைப்பட வேண்டாம் ; சிறுமை தான் பட வேண்டும் . ஒன்று , சாலை விபத்துகளில் முதலிடம் .இரண்டு , தற்கொலைகளில் முதலிடம் . பெரும்பான்மையான சாலை விபத்துகளுக்கு மதுவும் , அதிவேகமும் தான் முக்கியக் காரணங்களாக இருக்கின்றன . கணிசமான தற்கொலைகளிலும் மது மறைமுக காரணியாக  இருக்கிறது . கள்ளச்சாரயத்தால் இறந்தவர்களைக் காட்டிலும் டாஸ்மாக் மதுவால் இறந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம் . இன்னும் எவ்வளவு சீரழிவுகளைச் சந்திக்கப் போகிறமோ தெரியவில்லை .

அதே நேரத்தில் மதுவிலக்கு என்பது சரியானதும் ,சாத்தியமானதும் அல்ல . இன்னொரு சக மனிதனை பாதிக்காத வகையில் கொண்டாட்டமான தருணங்களில் மது அருந்துவதில் எந்தத் தவறும் இல்லை .ஆதியிலிருந்து மனிதன் இப்படித்தான் இருக்கிறான் . ஆனால் , எப்பாடு பட்டாவது தினமும் மது குடித்தே தீருவது என்பது குடிநோய் .இந்தக் குடிநோய் தான் நம் சமுகத்தை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து கொண்டிருக்கிறது . குடிநோயின் காரணமாக குடிப்பவர் நேரடியாகவும் , குடிநோயாளியின் குடும்பத்தினர்  மறைமுகமாகவும் அழிவைச் சந்திக்கின்றனர் . தற்போது தமிழகத்தில்  பிரச்சனை என்னவென்றால் மது குடிப்பதை வெளிப்படையாக ஊக்கப்படுத்தும் காரணிகள் தான் . அரசு தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகளைத் திறந்து குடிக்காதவனையும் குடிக்க வைக்கிறது ; குடியை மறக்க நினைப்பவனையும் மறக்க விடாமல் செய்கிறது . மது குடிப்பது போன்ற காட்சியும் , காதலும் இல்லாத தமிழ் சினிமாவே எடுக்கப்படுவதில்லை .

கள்ளச்சாராயத்தை ஒழிக்கத்தான் அரசு மதுக்கடைகளை நடத்துகிறது என்று சொன்னால் ஊருக்கு ஒரே ஒரு மதுக்கடையை ஊருக்கு வெளியே மட்டும் திறக்க வேண்டியது தானே . இதில் கொடுமை என்னவென்றால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாதம் இவ்வளவு ரூபாய்க்கு  மதுவை  விற்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்படுவது தான். கள்ளச்சாராயத்தை தடுக்க மதுக்கடைகளை எடுத்து நடத்தியவர்கள் ,நாளை கற்பழிப்பைத் தடுக்க தெருவுக்கு தெரு சிவப்பு விளக்கு பகுதிகளை அமைத்தாலும் அமைப்பார்கள் . எதற்கெடுத்தாலும் "அவனை நிறுத்தச் சொல் நான் நிறுத்துகிறேன் " என்ற பாணியில் மற்ற மாநிலங்களைக் குறை கூறிக் கொண்டே இருக்கும் மதுவிலக்குத் துறை ( எதற்காக இந்தத் துறை ? ) அமைச்சர் அவர்களே , கேரள அரசு, படிப்படியாக மதுவிலக்கைக்  கொண்டு வருவதில் தீவிரமாக இருக்கிறது . தமிழக அரசு என்ன செய்யப் போகிறது ?

கள்ளச்சாராயத்தின் மூலம் நிகழ்ந்த மரணங்களைத் தடுத்தது நல்ல விசயம் தான் .ஆனால் , அரசே விற்கும் நல்லசாராயத்தால் நிகழும் மரணங்கள் மட்டும் ஏன் கண்டுகொள்ளப்படுவதில்லை . நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றம் தானே . ஒவ்வொரு ஊரிலும் ஊருக்கு வெளியே, ஒரே ஒரு கடை மட்டும் திறக்க வேண்டும் ; மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும் . தயவு செய்து மது விற்பதில் விற்பனை இலக்கு நிர்ணயிப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள் . நாங்கள் கேட்பது மதுவிலக்கு அல்ல ; மது கட்டுப்பாடு . குடிநோய் இல்லாத தமிழகத்தை உருவாக்கினால் போதும் . மதுக்கடைகளை யார் நடத்தினாலும் கவலையில்லை .

அரசுக்கு அளவு கடந்த வருமானம் வேண்டுமென்றால் தனியாரிடமிருந்து மதுக்கடைகளை கைப்பற்றி நடத்தியது போல , தமிழகமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் தனியார் பள்ளிகள் ,தனியார் கல்லூரிகள் , தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருந்தகங்களை கைப்பற்றி அரசே நடத்தட்டும் . பணம் , போதும் போதும் என்கிற அளவிற்கு கிடைக்கும் . அதை வைத்து இன்னும் பல விலையில்லாப் பொருட்கள் கொடுத்து விலையில்லா ஒரு வாழ்வைத் தமிழக மக்களுக்கு கொடுக்க முடியும் . மது விற்பதன் மூலம் அரசுக்கு வருமானம் ஈட்டுவதை நிறுத்திக் கொள்ளுங்கள் .

நன்றி - கார்டூனிஸ்ட் பாலா .

மேலும் படிக்க :

மதுவும் மனிதனும் !

கலாச்சார விடுதலையே சமூக விடுதலை !

உணவிற்கான உள்நாட்டுப் போர் ?
....................................................................................................................................................................

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms