Showing posts with label பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். Show all posts
Showing posts with label பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். Show all posts

Thursday, October 31, 2019

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - அறந்தை நாராயணன்!



ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு முன்பு  நாளிதழிலோ, வார இதழிலோ பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய ஒரு துணுக்கு செய்தியை வாசிக்க நேர்ந்தது. அந்த துணுக்கின் கீழே " அறந்தை நாராயணன் எழுதிய 'பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ' எனும் நூலிலிருந்து " என்று போட்டிருந்தது. அன்றிலிருந்து தொடங்கிய தேடல் இப்போது தான் முடிவிற்கு வந்திருக்கிறது. அந்த அளவிற்கு அந்த துணுக்குச் செய்தியில் ஒரு வசீகரம் இருந்தது. எப்படியாவது இந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டும் என்ற தேடல் தொடங்கியது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தான் எனது முதல் வழிகாட்டி. என்னையறியாமலேயே எனக்குள் பொதுவுடமை கருத்துக்களை அவரது பாடல்கள் மூலம் விதைத்தவர்.

இந்த புத்தகத்திற்கான தேடலில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய எவ்வளவோ புத்தகங்கள் கண்ணில்பட்டன, அவற்றில் பலவும் வாங்கப்பட்டன.ஆனால் எதுவும் ஈர்க்கவில்லை. இதனால் அறந்தை நாராயணன் எழுதிய புத்தகத்திற்கான தேடல் முடிவடையவேயில்லை. எந்த புத்தக கடைக்குச் சென்றாலும் , எந்த புத்தகத் திருவிழாவிற்குச் சென்றாலும் கண்கள் முதலில் இந்தப் புத்தகத்தைத் தான் முதலில் தேடும். இந்தப் புத்தகம் ஒரு சாகித்ய அகாதமி வெளியீடு என்பதால் புத்தகத்திருவிழாவில் ஆர்வத்துடன் நுழையும் இடமாக சாகித்ய அகாதமி அரங்கே இதுவரை இருந்திருக்கிறது. இந்நிலை இனி மாறக்கூடும்.

சமீபத்தில் தோழர் யமுனா ராஜேந்திரன் எழுதிய பதிவொன்றில் அறந்தை நாராயணனின் அறச்சீற்றம் பற்றி குறிப்பிட்டு இருந்தார். எதற்கும் மீண்டும் ஒரு முறை அறந்தை நாராயணன் பற்றி தேடிப்பார்ப்போம் என்று இணையத்தில் தேடிய போது CommonFolks இணையதளத்தில் அறந்தை நாராயணனின் மூன்று நூல்கள் விற்பனைக்கு இருந்தன. அதில் இத்தனை ஆண்டுகளாக தேடிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய புத்தகமும் இருந்தது. மற்ற இரண்டு நூல்களுக்கு அட்டைப்படங்கள் இருந்தன. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நூலிற்கு அட்டைப்படம் கூட இல்லை. எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று உடனடியாக மூன்று புத்தகங்களையும் ( மற்ற இரண்டு நூல்கள் , நாகரீகக் கோமாளி என்.எஸ்.கிருஷ்ணன், மேடையில் பேசலாம் வாருங்கள் ) வாங்குவதற்கு பணம் செலுத்தினேன். இரண்டு நூல்கள் மட்டுமே உள்ளன அவற்றை உங்களுக்கு அனுப்புகிறோம் என்று குறுஞ்செய்தி வந்தது. இம்முறையும் கிடைக்காது போல என நினைத்திருக்கும் போது மற்றொரு குறுஞ்செய்தி வந்தது. 'மேடையில் பேசலாம் வாருங்கள்' புத்தகம் மட்டும் இல்லை என்று. மனம் பெருமகிழ்ச்சி அடைந்தது.

மழை பெய்து ஓய்ந்திருந்த ஒரு மதிய வேளையில் புத்தகங்கள் அடங்கிய பொட்டலம் கைக்கு வந்து சேர்ந்தது. மிகுந்து ஆர்வத்துடன் பிரித்து இந்தப் புத்தகத்தின் அட்டையை மட்டும் நெடுநேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். 15 ஆண்டுகளுக்கும் மேலான தேடல் அல்லவா ? பிறகு ஒரே மூச்சில் இந்தப் புத்தகத்தை வாசித்து முடித்தேன். ஒரே மூச்சில் வாசித்து முடித்த மூன்றாவது புத்தகம் இது என நினைக்கிறேன். முந்தைய இரு நூல்கள் , ' எம்.ஆர்.ராதாவின் சிறைச்சாலை சிந்தனைகள்', ' நளினி ஜமீலா - ஒரு பாலியல் தொழிலாளியின் கதை ' . அறந்தை நாராயணனின் இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போது இப்படியொரு புத்தகத்தை வாசிப்பதற்கு இன்னும் பத்தாண்டுகள் கூட காத்திருக்கலாம் என்ற மனநிலையே உருவானது. அந்த அளவிற்கு அறந்தை நாராயணனின் எழுத்து நடை அமைந்திருந்தது. இவரின் அனைத்து புத்தகங்களையும் வாசிக்க ஆவல் பெருகுகிறது. ஒரு வாசகரை இப்படி உணரச்செய்வது சாதாரண விசயம் அல்ல. ஆனால் அறந்தை நாராயணன் இப்படி உணர வைக்கிறார். இந்தப் புத்தகம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் வரலாற்றை மட்டும் சொல்லவில்லை, கூடவே இடதுசாரி இயக்கங்களின் வரலாற்றையும் கூறிச் செல்கிறது. துல்லியமான தரவுகளுடன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் வரலாறும், இடதுசாரி இயக்கங்களின் வரலாறும் நம் கண் முன்னே விரிகிறது.

இடதுசாரி இயக்கத் தலைவர்கள் பற்றிய நிறைய குறிப்புகள் இந்நூலில் உள்ளன. தஞ்சாவூர் பகுதியில் இடதுசாரி இயக்கங்கள் செழித்து வளர்ந்ததற்கான காரணங்கள் விளக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களுக்கும், இடதுசாரி இயக்கங்களுக்கும் உள்ள தொடர்பு விளக்கப்படுகிறது. ஒவ்வொரு பாடல் உருவாவதற்கு காரணமான பின்னணி அழகாக விவரிக்கப்படுகிறது. தேவையான இடங்களில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களை மிகவும் நெருக்கமாக உணரச் செய்கிறது, இப்புத்தகம். பெரும் உழைப்பைக் கொடுத்தே இந்நூலை எழுதியிருக்கிறார், அறந்தை நாராயணன். மக்கள் கவிஞருக்கு உரிய மரியாதையை இந்நூல் செய்திருக்கிறது.

மண்ணில் வாழ்ந்தது 29 ஆண்டுகள் தானென்றாலும், எழுதிய பாடல்கள் குறைவென்றாலும் காலத்தால் அவ்வளவு எளிதாக அழிக்க முடியாத பாடல்களை எழுதிச் சென்றிருக்கிறார், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். இவருக்கு பிறகு தமிழ் திரையிசைப் பாடலாசிரியர்களில் இடதுசாரி சிந்தனையுடையவர்கள் யாரும் இல்லை என்றே சொல்ல வேண்டியுள்ளது. திராவிட மண் என்று பெருமை பேசும் தமிழகத்தில் திராவிட திரையிசைப் பாடலாசிரியரே இன்னும் உருவாகவில்லை. அப்புறம் எங்கே இடதுசாரி பாடலாசிரியர் பற்றி சிந்திப்பது. மக்கள் கவிஞரை நேசிப்பவர்கள் , இடதுசாரி சிந்தனையுடையவர்கள் தவறவிடவே கூடாத புத்தகமிது. வாய்ப்புள்ளவர்கள் வாசியுங்கள். 96 பக்கங்கள் உடைய இப்புத்தகத்தின் விலை ₹50.

இந்தப் புத்தகம் இவ்வளவு நாளாக கிடைக்காமல் போனதற்கு அச்சில் இல்லாதது தான் காரணம். முதற்பதிப்பு 1998 ஆம் வந்துள்ளது. அதன் பிறகு இரண்டாம் பதிப்பு கடந்த ஆண்டு (2018) தான் வெளிவந்திருக்கிறது. அதனால் தான் இப்போது கிடைத்திருக்கிறது.

மேலும் படிக்க :

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்



Saturday, March 26, 2016

உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம் !


1956 ஆம் ஆண்டு வெளிவந்த பாசவலை திரைப்படம் , பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களுக்கு பெரும் புகழைத் தேடித் தந்தது . இத்திரைப்படத்தில் 5 பாடல்களை பட்டுக்கோட்டையார் எழுதினார் . அதில் இந்தப் பாடலும் ( உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம்...)  ஒன்று. இந்தப் பாடலில் இடம்பெற்ற வரிகளைப் பார்த்துவிட்டு வயதான ஒருவர் தான்  எழுதியிருப்பார் என்றே எல்லோரும் நினைத்தனர். ஆனால் இப்பாடல் வெளிவந்த போது கல்யாணசுந்தரத்தின் வயது 26 தான் . இளவயதிலேயே அவர் செய்த வேலைகளும் அதிகம் ,சந்தித்த சோதனைகளும் அதிகம் . இந்த அனுபவமே அவரது பாடல் வரிகளில் தத்துவக் கருத்துகள் நிரம்பியிருக்கக் காரணம் .  

அந்தப் பாடல் :



பாடல் வரிகள் :

 குட்டிஆடு தப்பிவந்தா குள்ளநரிக்குச் சொந்தம்!
குள்ளநரி மாட்டிக்கிட்டா கொறவனுக்குச் சொந்தம்!
தட்டுக்கெட்ட மனிதர்கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்!
சட்டப்படி பார்க்கப்போனா எட்டடிதான் சொந்தம்
உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம்
உலகத்துக் கெதுதான் சொந்தமடா! - (உனக்கு

மனக்கிறுக்கால் நீ உளறுவதாலே
வந்தலாபம் மதிமந்தமடா -(உனக்கு

கூட்டுலே குஞ்சு பறக்க நினைத்தால்
குருவியின் சொந்தம் தீருமடா
ஆட்டுலே குட்டி ஊட்டு மறந்தால்
அதோட சொந்தம் மாறுமடா! – காலை
நீட்டியே வைத்து நெருப்பிடும் போது
நேசம் பாசம் பொருளாசைக் கெல்லாம்
காட்டிய ஒருபிடி வாய்க் கரிசியிலே
கணக்குத் தீர்ததிடும் சொந்தமடா (உனக்கு

பாபச் சரக்குகளைப் பணத்தாலே மூடிவைத்து
பாசாங்கு வேலைசெய்த பகல்வேஷக் காரர்களும்
ஆபத்தில் சிக்கி அழிந்தார்க ளானாலும்
அடுத்தடுத்து வந்தவரும் அவர்களுக்குத் தம்பியடா!

அவருவந்தார் இவருவந்தார் ஆடினார் _ முடிவில்
எவருக்குமே தெரியாம ஓடினார் _ மனதில்
இருந்ததெல்லாம் மறந்து கண்ணை மூடினார்அவரு
செவருவச்சுக் காத்தாலும் செல்வமெல்லாம் சேர்த்தாலும்
செத்தபின்னே அத்தனைக்கும் சொந்தக்காரன் யாரு? _ நீ
துணிவிருந்தாக் கூறு! _ ரொம்ப எளியவரும் பெரியவரும்
எங்கே போனார் பாரு! _ அவர் எங்கே போனார் பாரு!     – அவரு

பொம்பளை எத்தனை? ஆம்பிளை எத்தனை?
பொறந்த தெத்தனை? எறந்த தெத்தனை?
வம்பிலே மாட்டிப் போன தெத்தனை?
மானக் கேடாய் ஆன தெத்தனை?
மூச்சு நின்னா முடிஞ்சுதடி சொந்தம்
அடியே முத்துக்கண்ணு _ இதில்
எத்தனை எத்தனை ஆனந்தம்! ஆனந்தம்!               (உனக்கு


 வல்லிய வரிகள் !

நன்றி : http://www.pattukkottaiyar.com/site/

மேலும் படிக்க :

இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் பெருங் கூட்டிருக்குது !

இருக்கும் பொழுதை ரசிக்கணும் !

போட்டுகிட்டா ரெண்டுபேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி !
...................................................................................................................................................................

Saturday, March 14, 2015

போட்டுகிட்டா ரெண்டுபேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி !


ஒலகம் புதுசா மாறும் போது பழைய மொறையை மாத்திக்கணும்
போட்டுகிட்டா ரெண்டுபேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி

இந்த வரிகளுடன் கூடிய பாடலை ,1960 ஆம் ஆண்டு  கே,வி.மகாதேவன் இசையமைப்பில் வெளிவந்த 'வீரக்கனல் ' திரைப்படத்திற்காக பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதியுள்ளார் .இந்தப் பாடலை  எல்.ஆர். ஈஸ்வரியும் ,எஸ்,சி .கிருஷ்ணனும் பாடியுள்ளனர் .

இந்தப் பாடலைப் பார்க்க :-  http://www.pattukkottaiyar.com/site/?p=452

தாலி குறித்து நிறைய சர்ச்சைகள் கிளம்பியுள்ளன . மேலே குறிப்பிட்ட இரண்டு வரிகள் தான் தீர்வு . பெண்களைப் பார்த்து என்னென்ன கேள்விகள் கேட்கிறோமோ ,அதே கேள்விகளை ஆண்களைப் பார்த்துக் கேட்கும்போது தான்  ஆண் -பெண் சமத்துவம் நிகழும் .

தாலி அணிவதும் அணியாமல் இருப்பதும் தனிமனித சுதந்திரம் . நிறைய திருமணங்களின் போது மோதிரம் மாற்றிக் கொள்ளப்படுகிறது . அந்த மோதிரங்களைக் கழற்றி வைப்பார்களா ? அல்லது எப்போதும் அணிந்தே இருப்பார்களா ? என்று தெரியவில்லை .ஆனாலும் மணமுடிக்கும் இருவருமே மோதிரம் அணிகிறார்கள் .அப்படிப் பார்த்தால் இந்து சமய முறையில் மணமுடிக்கும் போதும் இருவருமே தாலி அணிந்து கொள்வது தானே நியாயமாக இருக்கும் . பெண்களை ஒடுக்குவது மட்டும் தான் இந்து கலச்சாரமா ?

ஒலகம் புதுசா மாறும் போது பழைய மொறையை மாத்திக்கணும்
போட்டுகிட்டா ரெண்டுபேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி.....

மேலும் படிக்க :

போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் !

கலாச்சார விடுதலையே சமூக விடுதலை !

எது கலாசாரம் - கி.ரா...!
...................................................................................................................................................................

Monday, September 23, 2013

சின்னக்குட்டி நாத்தனா..!


மக்களோடு மக்களாக மக்களின் கவிஞராக வாழ்ந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மக்களின் பாடலான நாட்டுப்புறப் பாடல்களையும் எழுதியுள்ளார் .இவர் நிறைய நாட்டுப்புறப் பாடல்கள் எழுதி இருந்தாலும் இந்தப் பாடல் பெரும்புகழ் பெற்ற பாடலாக இருக்கிறது . 1957 ஆம் ஆண்டு வெளிவந்த "ஆரவல்லி"  என்ற திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம்பெற்றுள்ளது .தனித்துவமாக பாடும் திறமையுள்ள  திருச்சி லோகநாதன் இந்தப்பாடலைப் பாடியுள்ளார்.

அந்தப்பாடல் :

பாடல் வரிகள் :



சின்னக்குட்டி நாத்தனா
சில்லறைய மாத்துனா
குன்னக்குடி போறவண்டியில்
குடும்பம் பூரா ஏத்துனா!
குளிரடிக்கிற குழந்தைமேலே
துணியப்போடடுப் போத்துனா
குவாக்குவான்னு கத்தினதாலே
முதுகிலரெண்டு சாத்துனா
கிலுகிலுப்பயக் கையில்கொடுத்து
அழுதபிள்ளையைத் தேத்துனா (சின்ன…)


பன்னப்பட்டிக் கிராமத்திலே
பழையசோறு தின்னுக்கிட்டா
பங்காளிவீட்டுச் சிங்காரத்தோட
பழையகதையும் பேசிக்கிட்டா (சின்ன…)

கண்ணுக்குட்டிய மல்லுக்கட்டியே
கயித்தப்போட்டுப் பிடிச்சுக்கிட்டா
மண்ணுக்கட்டியால் மாங்காஅடிச்சு
வாயில போட்டுக் கடிச்சுக்கிட்டா! (சின்ன…)

நன்றி :  http://www.pattukkottaiyar.com/site/ .


மேலும் படிக்க :

 உன்னைக்கண்டு நானாட என்னைக்கண்டு நீயாட ...! 

இருக்கும் பொழுதை ரசிக்கணும் !

..................................................................................................................................................................

Tuesday, November 13, 2012

உன்னைக்கண்டு நானாட என்னைக்கண்டு நீயாட ...!

 நாம் முன்தீர்மானம் செய்யும் அனைத்தையும் தவிடுபொடியாக்கி அசுர வேகத்தில் சுழல்கிறது,காலம் . எதைப்பற்றியும் கவனம் கொள்ளாமல் ஓடிக்கொண்டே இருக்கிறோம் . மனிதன் சமூகமாக வாழ ஆரம்பித்த காலத்திலிருந்தே விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன . பண்டிகைகள் சமூக வாழ்வின் ஓர் அங்கம் . வேலை நிமித்தமாக பிரிந்து இருக்கும் மனிதர்களை ஒன்று சேர்க்க பண்டிகைகள் உதவுகின்றன . முன் எப்போதையும் விட தற்போது ,செய்யும்  வேலை காரணமாக மனிதர்கள் பல்வேறு இடங்களில் சிதறிக் கிடக்கிறார்கள் . அவர்களை ஒன்று சேர்க்க , ஒரு நாலாவது தங்களது இயந்திர வாழ்க்கையிலிருந்து விடுபட பண்டிகைகள் உதவுகின்றன .

 தீபாவளி பண்டிகை கொண்டாடுவது குறித்து தற்போது பலவிதமான கருத்துகள் உருவாகியுள்ளன . சுற்றுச்சூழல் சார்ந்து சிந்திக்க ஆரம்பித்திருப்பது மிகநல்ல விசயம் . ஆனால் ஒரே நாளில் நம் பட்டாசு கொளுத்துவதை நிறுத்திவிட முடியாது . பட்டாசு தொழிலை நம்பி லட்சக்கணக்கான மக்கள் வாழ்கிறார்கள் .யாரும் விருப்பப்பட்டு வெடிமருந்துடன் கழியும் பட்டாசு செய்யும் வேலைக்குச் செல்லவில்லை . உயிர் பிழைத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் தான் பட்டாசு செய்யும் வேலைக்குச் செல்கின்றனர் . அவர்களுக்கு மாற்று வழி தேட வழி செய்துவிட்டு பட்டாசு கொளுத்துவதை நிறுத்த முயல வேண்டும் . உரிய பாதுகாப்பு இல்லாத பட்டாசு ஆலைகளை செயல்பட அனுமதி அளிக்கக்கூடாது .

பிளாஸ்டிக் போலத்தான் பட்டாசும் பல வருடங்கள் அதோ இதோ என்கிறார்கள் எதுவும் நடந்தபாடில்லை . முன்பைவிட பிளாஸ்டிக்கும் ,பட்டாசும் அதிகமாகத் தான் மக்கள் பயன்படுத்துகிறார்கள் . தற்போது கிராமங்களில் நடக்கும் குடும்ப விழாக்களில் கூட  பட்டாசுகள் பயன்படுத்தப்படுகின்றன . ஊடகங்கள் மூலம் மோசமான பழக்கங்களையே மக்களுக்குப் போதிக்கிறோம் . ஊடகங்கள் மூலம் நாம் நினைக்கும் அனைத்து மாற்றங்களையும் சமூகத்தில் கொண்டு வர முடியும் . அனைத்தும் வணிகமாகி விட்ட இன்றைய சூழலில் ஊடகங்கள் வருமானம் வராத எதையும் செய்யப்போவதில்லை . பிளாஸ்டிக்கின் தீமைகள் குறித்துப் பேசும் நம்மில் எத்தனைபேர் கடைக்குப் பொருட்கள் வாங்க பை எடுத்துக்கொண்டு போகிறோம் . பட்டாசின் தீமைகள் குறித்துப்பேசும் எத்தனைபேர் பட்டாசு வெடிக்காமல் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை . யாராக இருந்தாலும் முடிந்தவரை பிளாஸ்டிக்கையும் ,பட்டாசையும் பயன்படுத்துவதை தவிர்க்கலாம் .முடியாதபோது குறைவாக பயன்படுத்தலாம் .

எப்படிப் பார்த்தாலும் பண்டிகைகள் நம் சமூக வாழ்வின் வரம் . பண்டிகைகள் காரணமாக விதவிதமான பொருட்கள் விற்பதன் மூலம் பயனடையும் மக்களின் எண்ணிக்கை மிக அதிகம் . பண்டிகைகளை தவிர்க்க வேண்டியதில்லை . காலத்துக்கேற்ற மாற்றத்தைச் சந்திக்காத எதுவும் நிலைப்பதில்லை . காலத்திற்கு ஏற்ற மாற்றத்துடன் பண்டிகைகளைக் கூடிக் கொண்டாடுவோம் .

தீபாவளி குறித்து எத்தனையோ பாடல்கள் இருக்கின்றன . A.M.ராஜாவின் இசையமைப்பில் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த " கல்யாண பரிசு " திரைப்படத்தில் இடம்பெற்ற "உன்னைக்கண்டு நானாட என்னைக்கண்டு நீயாட.." பாடல் தீபாவளிப் பாடல்களில் ஒன்று . பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடலிது . இப்படாலை P .சுசீலா பாடியுள்ளார் .

அந்தப்பாடல் :


பாடல்வரிகள் :

உன்னைக்கண்டு நானாட என்னைக்கண்டு நீயாட
உல்லாசம் பொங்கும் இன்பத் தீபாவளி
ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாகக் கலந்து
உறவாடும் நேரமடா _ ஆ… உறவாடும் நேரமடா

கன்னத்தில் ஒண்ணே ஒண்ணு கடனாகத் தாடா
கண்ணுக்குள் விளையாடும் கலையே நீவாடா -கன்ன
எண்ணத்தில் உனக்காக இடம்நான் தருவேன்
எனக்கு இனி நீ என்னென்ன தருவாய்?
வல்லமை சேர நல்லவ னாக
வளர்ந்தாலே போதுமடா… வளர்ந்தாலே போதுமடா

சித்திரைப் பூப்போல சிதறும் மத்தாப்பு
தீயேதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு!
முத்திரைப் பசும்பொன்னே ஏனிந்தச் சிரிப்பு?
முகமோ? மலரோ? இது என்ன ரசிப்பு!
மின்னொளி வீசும் உன்எழில் கண்டால்
வேறென்ன வேணுமடா? _  வேறென்ன வேணுமடா? (உன்னை…

 எனக்குப்பிடித்த இன்னொரு தீபாவளிப் பாடல் " வா வா வசந்தமே ... " . 1982 ஆம் ஆண்டு வெளிவந்த புதுக்கவிதை திரைப்படத்தில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது . மலேசியா வாசுதேவன் இப்பாடலை அற்புதமாகப் பாடியிருப்பார் .


மேலும் படிக்க :

இருக்கும் பொழுதை ரசிக்கணும் !

பட்டுவண்ண ரோசாவாம் ...!
 
...........................................................................................................................

Tuesday, June 26, 2012

வாடிக்கை மறந்ததும் ஏனோ?


தமிழின் தலைசிறந்த பாடகர்களில் ஒருவரான A.M.ராஜாவின் இசையமைப்பில்  1959 ஆம் ஆண்டு வெளிவந்த " கல்யாண பரிசு " என்ற மாபெரும் வெற்றிப்படத்தில் இந்தப்பாடல் இடம்பெற்றுள்ளது . கல்யாண பரிசு , இயக்குனர் ஸ்ரீதரின் முதல் படம் .இந்தப்படத்தில் இடம்பெற்ற தங்கவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் இன்று வரை ரசிக்கப்படுகின்றன .காதல் ரசம் சொட்ட சொட்ட இந்தப்பாடலை எழுதியுள்ளார்,பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் . இவரே இந்தப் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் எழுதியிருக்கிறார் . A.M.ராஜாவும் சுசீலாவும் இந்தப்பாடலைப் பாடியுள்ளனர் . பாடும் திறமையுள்ள இசையமைப்பாளர்களில் A.M.ராஜாவே முதன்மையானவர் .சிறப்பான முறையில் பாடப்பட்ட பாடலிது . 



ஆண் : வாடிக்கை மறந்ததும் ஏனோ? _ என்னை
வாட்டிட ஆசை தானோ? _ பல
கோடி மலரழகை மூடிவைத்து மனதைக்
கொள்ளை யடிப்பதும் ஏனோ? (வாடிக்கை…)

பெண் : வாடிக்கை மறந்திடுவேனோ? _ என்னை
வாட்டிடும் கேள்விகள் ஏனோ? _ புது
மங்கைஎந்தன் மனதில் பொங்கிவரும் நினைவில் மாற்றம் சொல்வதும் ஏனோ? (வாடிக்கை…)

ஆண் : அந்தி நேரத்தின் ஆனந்தக் காற்றும்
அன்பு மணக்கும் தேன்சுவைப் பாட்டும்
அமுத விருந்தும் மறந்து போனால்
உலகம் வாழ்வதும் ஏது? _ பல
உயிர்கள் மகிழ்வதும் ஏது? _ நெஞ்சில்
இனித்திடும் உறவை இன்பமெனும் உணர்வைத்
தனித்துப் பெற முடியாது

பெண் : அந்தி நேரம் போனதால்
ஆசை மறந்தே போகுமா?
அன்புக் கரங்கள் சேரும்போது
வம்பு வார்த்தைகள் ஏனோ?
இன்ப வேகம் தானோ? (வாடிக்கை…)

ஆண் : காந்தமோ இது கண்ணொளி தானோ?
காதல் நதியில் நீந்திடும் மீனோ?
கருத்தை யறிந்தும் நாணம் ஏனோ?

பெண் : பொறுமை இழந்திட லாமோ? _ பெரும்
புரட்சியில் இறங்கி லாமோ? _ நான்
கருங்கல்லுச் சிலையோ? காதலெனக் கில்லையோ?
வரம்பு மீறுதல் முறையோ?

இருவர் : சைக்கிளும் ஓடமண் மேலே _ இரு
சக்கரம் சுழல்வது போலே _ அணை
தாண்டிவரும் சுகமும், தூண்டிவிடும் முகமும்
சேர்ந்ததே உறவாலே

இந்தப்பாடல் , பட்டுக்கோட்டையாரின் மற்றுமொரு சிறந்த காதல் பாடலுக்கு உதாரணம் ." இனித்திடும் உறவை இன்பமெனும் உணர்வைத் தனித்துப் பெற முடியாது" ,"அந்தி நேரம் போனதால் ஆசை மறந்தே போகுமா? " ,"காந்தமோ இது கண்ணொளி தானோ? காதல் நதியில் நீந்திடும் மீனோ? ","நான்
கருங்கல்லுச் சிலையோ? காதலெனக் கில்லையோ? வரம்பு மீறுதல் முறையோ? " என்னே அழகான  வரிகள் !

சேர்ந்ததே உறவாலே...!

நன்றி :  http://www.pattukkottaiyar.com/site/ .

மேலும் படிக்க :

என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே ! 

உனக்காக எல்லாம் உனக்காக ..!
......................................................................................................................................................................

Thursday, May 31, 2012

இருக்கும் பொழுதை ரசிக்கணும் !


K.V.ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் , T.R.ராஜகோபால் இசையமைப்பில் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த " கண் திறந்தது " என்ற திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம்பெற்றுள்ளது .பட்டுக்கோட்டையாரின் எழுத்து வண்ணத்தில் உருவான இன்னுமொரு சிறந்த பாடலிது .

அந்தப் பாடல் :


பாடல் வரிகள் :

ஒருகுறையும் செய்யாமே
ஒலகத்திலே யாருமில்லே _ அப்படி
உத்தமனாய் வாழந்தவனை _ இந்த ஒலகம்
ஒதைக்காம விட்டதில்லை…

இருக்கும் பொழுதை ரசிக்கணும் _ அட
இன்பமாகக் கழிக்கணும்
எதிலும் துணிஞ்சு இறங்கணும் _ நீ
ஏங்கி எதுக்குத் துடிக்கணும்? (இருக்…)

நாளை நாளை என்று பொன்னான
நாளைக் கெடுப்பவன் குருடன்
நடந்து போனதை நெனச்சு ஒடம்பு
நலிஞ்சு போறவன் மடையன் _ சுத்த மடையன்
நம்மைப்போல கெடச்சதைத் தின்னு
நெனச்சதைச் செய்யிறவன் மனுஷன் (இருக்…)

ஆடி ஓடிப் பொருளைத் தேடி…
அவனும் திங்காமே பதுக்கி வைப்பான்…
அதிலே இதிலே பணத்தைச் சேத்து
வெளியிடப் பயந்து மறச்சு வைப்பான்;
அண்ணன் தம்பி பொண்டாட்டி புள்ளை
ஆருக்கும் சொல்லாமப் பொதச்சு வைப்பான்;
ஆகக் கடைசியில் குழியைத் தோண்டி
அவனையும் ஒருத்தன் பொதச்சு வைப்பான் _ ஆமா
பொதச்சு வைப்பான் (இருக்…)

நல்ல வழியிலே வாழ நெனச்சு
நாயா அலையாதே _ அது இந்த நாளில் முடியாதே
நரியைப் போலே எலியைப் போலே
நடக்கத் தெரிஞ்சுக்கணும் _ தம்பி
உடம்பு அழுக்கு; உடையும் அழுக்கு!
உள்ளம் அழுக்குங்க _ அதுலேதான் உலகம் கிடக்குங்க _ இது
உமக்கும் எமக்கும் கழுதைக்கும் தெரியும்
ஒண்ணும் சுத்தமில்லை _ உள்ளதைச்
சொன்னாக் குத்தமில்லை… (இருக்…)

அட ஆமாங்க  "இருக்கும் பொழுதை ரசிக்கணும் , இன்பமாகக் கழிக்கணும் "!

நன்றி :  http://www.pattukkottaiyar.com/site/ .

மேலும் படிக்க :

திண்ணைப் பேச்சு வீரரிடம் !  

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா ...!  

...................................................................................................................................................................

Wednesday, February 29, 2012

உனக்காக எல்லாம் உனக்காக ..!

தலைமுறைகள் கடந்து ரசிக்கப்படும் பாடல்களாக இருப்பவை சந்திரபாபுவின் பாடல்கள் .அவரது பாடும் தொனியும் ஆடும் நடனமும் அலாதியானது .அந்த வரிசையில் " உனக்காக எல்லாம் உனக்காக.." பாடலுக்கு தனி இடம் உண்டு . விசுவநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில் 1957 ஆம் ஆண்டு வெளிவந்த " புதையல் " என்ற திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம்பெற்றுள்ளது . இந்தப்பாடலை எழுதியவர் , பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் . பொதுவுடைமை பாடல்கள் மட்டுமல்ல அற்புதமான காதல் பாடல்களையும் எழுதியவர் தான் பட்டுக்கோட்டையார் .

அந்தப்பாடல் :



பாடல் வரிகள் :

உனக்காக எல்லாம் உனக்காக _ இந்த
உடலும் உயிரும் ஒட்டியிருப்பதும் உனக்காக

எதுக்காக கண்ணே எதுக்காக? _ நீ
எப்பவும் இப்படி எட்டியிருப்பது எதுக்காக?
கண்ணுக்குள்ளேவந்து கலகம்செய்வதும் எதுக்காக? _ மெள்ளக்
காதுக்குள்ளே உந்தன் கருத்தைச் சொல்லிடு முடிவாக ( உனக்காக…)

பள்ளியிலே இன்னுமொருதரம் படிக்கணுமா? _ இல்லே
பயித்தியமாய்ப் பாடியாடி நடிக்கணுமா?
துள்ளிவரும் காவேரியில் குதிக்கணுமா? _ சொல்லு
சோறுதண்ணி வேறுஏதுமில்லாமெக் கெடக்கணுமா?

இலங்கை நகரத்திலே இன்பவல்லி நீயிருந்தால்
இந்துமகா சமுத்திரத்தைஇங்கேருந்தே தாண்டிடுவேன்;
மேகம்போலே வானவீதியிலே நின்னு மிதந்திடுவேன் _ இடி
மின்னல்மழை புயலானாலும் துணிஞ்சு இறங்கிடுவேன் (உனக்காக…)

என்னே காதல் ததும்பும் வரிகள் !

நன்றி : http://www.pattukkottaiyar.com/site/ .

மேலும் படிக்க :

ராக் அண்ட் ரோல் - சந்திரபாபு நடனம் 

இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் பெருங் கூட்டிருக்குது ! 
.................................................................................................................................................................... 

Sunday, January 29, 2012

ராக் அண்ட் ரோல் - சந்திரபாபு நடனம்

1940 ஆண்டுவாக்கில் அமெரிக்காவில் தோன்றிய இசை வடிவம் தான் ராக் அண்ட் ரோல் ( Rock & Roll or Rock 'n' Roll ) . ஆப்பிரிக்க இசையும் அமெரிக்க இசையும் கலந்து தான் " ராக் அண்ட் ரோல் " உருவானதாக சொல்லப்படுகிறது . இந்த இசை வடிவத்தில் முதலில் பியானோ அல்லது  சாக்ஸபோன் முதன்மை இசைக்கருவியாக பயன்படுத்தப்பட்டுள்ளது . பிறகு கிட்டார் முதன்மை இசைக்கருவியாக பயன்படுத்தப்பட்டது .1960 குப்  பிறகு தான் இந்த இசை வடிவம் பெரிய அளவில் புகழ் பெற்றதாம் . 

1958 ஆம் ஆண்டு வெளிவந்த பதிபக்தி என்ற திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம் பெற்றுள்ளது . விஸ்வநாதன் ராமமூர்த்தி இந்தப்படத்திற்கு இசை அமைத்துள்ளனர் . இந்தப்பாடலை எஸ் .சண்முகசுந்தரம்  மற்றும் ஆர் .கணேஷ் ஆகியோர் பாடியுள்ளனர் . சந்திரபாபு இந்தப்பாடலுக்கு சிறப்பாக நடனம் ஆடியிருக்கிறார் . என்னை ஆச்சரியப்படுத்திய விசயம் , இந்தப் பாடலை எழுதியிருப்பவர் , பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்பது தான் . 

 பாடல்  வரிகள் : 

1-வது ஆள் : ஒன்… அண்ட்டூ… அண்ட்த்ரீ… அண்ட்போர்
2-வது ஆள் : தைதைதை… தை… தை… தை… தை… தை
1-வது ஆள் : ராக் ராக் ராக் ராக் அண்ட் ரோல்
ஷேக் ஷேக் ஷேக் ஷேக் அண்ட் ரோல் (ராக்…
இங்கிலீஷ் டேன்ஸ் ஒன் அண்ட் டூ அண்ட்
இண்டியன் டேன்ஸ் தை… தை… தை… தை…
சைனா டேன்ஸ் சிங் சாங் சிங் சாங்
பர்மா டேன்ஸ் டிங் டாங் டிங் டாங்
லேடி டேன்ஸ் ஜோடி டேன்ஸ்
பாடி பியூட்டிகள் பப்ளி சிட்டிகள்
பாடி ஆடிடும் டேன்ஸ்!

2-வது ஆள் : ஆடினார் அன்றே ஆடினார்
தில்லை அம்பலத்தே நின்று
அரகரனாம் திருநடன சபேசன்
ஆடினார் அன்றோ!
அண்டம் குலுங்கிடத் தொண்டர் நடுங்கிட
நந்தி மத்தளம் எங்கும் முழங்கிட
அரங்கினில் ஆடினார் (அன்றே…)

1-வது ஆள் : ஸார்… ஸார்… ஸார்… டோண்டு ஒரி ஸார்
பார்… பார்… பார்… வேலைகளைப் பார்
பாய்… பாய்… பாய்… படேபடே பாய்
ரார்… டீடி… ராட்டி… டா
கொம்பிலே பழம்பழுத்துத் தொங்குறதும் கலை!
லவ்வுலே மனம்மயங்கிப் பொங்குறதும் கலை!
வீதியிலே கர்ணம்போட்டு ஆடுறதும் கலை!
மேடையிலே குந்திக்கிட்டுப் பாடுறதும்…
கலை… கலை… கலை!

2-வது ஆள் : கோபியர் கூடவே காவினி லாடிடும்
குறும்புக்காரன் கோபலன் நந்தபாலன்
குழலோசை கேட்காத குறைசெய்த காது
குறைந்தென்ன வளர்ந்தென்ன
ஒன்றுக்கும் உதவாது!

1-வது ஆள் : ராக் ராக் ராக் அண்ட் ரோல்
ஷேக் ஷேக் ஷேக் அண்ட் ரோல்

" கொம்பிலே பழம்பழுத்துத் தொங்குறதும் கலை!  லவ்வுலே  மனம்மயங்கிப் பொங்குறதும் கலை!  வீதியிலே கர்ணம்போட்டு ஆடுறதும் கலை!
மேடையிலே குந்திக்கிட்டுப் பாடுறதும்…கலை… கலை… கலை! " என்ன அருமையான வரிகள் .

நன்றி : http://www.pattukkottaiyar.com/site/ .

மேலும் படிக்க :

திண்ணைப் பேச்சு வீரரிடம் !

என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே ! 
..................................................................................................................................................................

Saturday, December 24, 2011

என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே !

பட்டுக்கோட்டை  கல்யாணசுந்தரம்  , பொதுவுடைமை கருத்துக்களை மையமாக கொண்ட பாடல்களை மட்டும் எழுதவில்லை . கற்பனை வளம் ததும்பக் கூடிய நிறைய பாடல்களை எழுதியுள்ளார் . அவற்றில் ஒரு துளி தான் இந்தப்பாடல் . நிலவை  எத்தனையோ பேர் எத்தனையோ விதமாக வர்ணனை செய்துள்ளனர் . இந்தப் பாடலில்  பட்டுக்கோட்டையார் , நிலவை தன் காதலியின் சகோதரியாக கற்பனை செய்து , காதலியை கேலி செய்வதுடன் நிலவையும் கேலி செய்து அற்புதமாக எழுதியுள்ளார் . 1960 ஆம் ஆண்டு வெளிவந்த " எல்லோரும் இந்நாட்டு மன்னர் " என்ற திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம்பெற்றுள்ளது . T.M.செளந்தர்ராஜன்  , இந்தப் பாடலை சிறப்பாக பாடியுள்ளார் .

பாடல் வரிகள் :

என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே _ நீ
இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே? (என்…)


கண்விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே _ உன்னைக்
காவல்காக்கும் தோழியரோ வெண்ணிலாவே? (கண்…)

கன்னத்தில் காயமென்ன வெண்ணிலாவே? _ உன்
காதலன்தான் கிள்ளியதோ வெண்ணிலாவே (என்…)

கள்ளமில்லா என்னிதயம் வெண்ணிலாவே _ ஒரு
கள்ளியிடம் இருக்குதடி வெண்ணிலாவே _ அந்த
வல்லிதனை நீயறிவாய் வெண்ணிலாவே _ அதை
வாங்கிவந்து தந்துவிடு வெண்ணிலாவே! (என்…)

கெஞ்சினால் தரமாட்டாள் வெண்ணிலாவே…
கெஞ்சினால் தரமாட்டாள் வெண்ணிலாவே _ நீ
கேட்காமல் பறித்துவிடு வெண்ணிலாவே
அஞ்சிடத் தேவையில்லை வெண்ணிலாவே _ இது
அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே _ இது (அவள்…)

என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே _ நீ
இளையவளா மூத்தவளா
இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே?
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே?

நிலவே
இப்போதாவது சொல்
நீ  இளையவளா மூத்தவளா ?!

நன்றி : http://www.pattukkottaiyar.com/site/ .

மேலும் படிக்க :

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ! 

மட்டமான பேச்சு ! 

ஆறறிவில் ஓரறிவு அவுட்டு ! 
 ...................................................................................................................................................................  

Thursday, December 22, 2011

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு !

" உள்ளத்திலே ஒரு கள்ளமில்லாமல் ஊருக்குள்ளே பல பேதங்கொள்ளாமல் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ; ஒற்றுமை நீங்கிடில் தாழ்வு . உண்மை தெரிந்தால் தன்னை உணர்ந்தால் ஓடி மறைந்திடும் மடமை " என்று சொல்கிறார் ,பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் .1960 ஆம் ஆண்டு வெளிவந்த "  ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு " என்ற திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம் பெற்றுள்ளது . சக மனிதர்களைச் சாராமல் யாராலும் வாழ முடியாது . நாம் சாப்பிடும் ஒரு வேளை உணவில் எத்தனையோ மனிதர்களின் பங்களிப்பு இருக்கிறது . 

 அந்தப் பாடல் :


பாடல் வரிகள் :

பெண் : ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
ஆண் : ஒற்றுமை நீங்கிடில் தாழ்வு (ஒன்று…)

இருவர் : உள்ளத்திலே ஒரு கள்ளமில்லாமல்
ஊருக்குள்ளே பல பேதங்கொள்ளாமல் (ஒன்று…)

பெண் : ஜாதிகள் யாவும் ஒன்றாக மாறும்
தேதியில் தோன்றும் பெருமை

ஆண் : சண்டைகள் தீர்ந்தே மனிதர்கள் சேர்ந்தால்
தாரணியில் அது புதுமை (ஜாதிகள்…)

இருவர் : உண்மை தெரிந்தால் தன்னை உணர்ந்தால்
ஓடி மறைந்திடும் மடமை (ஒன்று…)

பெண் : நேசமும் அன்பும் நிலையாக வேண்டும்
நேர்வழி வேண்டும் உறவில்

ஆண் : பேசிடும் அன்பு செயல் முறையானால்
பேரின்பம் வேறெது உலகில்?

இருவர் : காணா வளமும் மாறா நலமும்
கண்டிடலாம் அன்பு நிலையில் (ஒன்று…)

உண்மை தெரிந்தால் தன்னை உணர்ந்தால் ஓடி மறைந்திடும் மடமை !

நன்றி : http://www.pattukkottaiyar.com/site/மற்றும்  கிருபாகரன் .

மேலும் படிக்க :

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா ...! 

ஆறறிவில் ஓரறிவு அவுட்டு ! 

திண்ணைப் பேச்சு வீரரிடம் ! 

...................................................................................................................................................................... 

Friday, December 16, 2011

பொறக்கும் போது பொறந்த குணம் !

மனிதன் பிறக்கும்போது பிறந்த குணங்கள் காலப்போக்கில் எப்படி மாறிவிடுகின்றன என்பதை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இந்தப்பாடல் மூலம் உணர்த்துகிறார் . "சக்கரவர்த்தி திருமகள் " என்ற படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் பாடி ,MGR வாயசைப்பது போல அமைந்த பாடலிது . மக்களின் அறியாமை  இருளை நீக்குவதற்காகவே நிறையப்  பாடல்களை  எழுதியுள்ளார் , பட்டுக்கோட்டையார் . அதில் இந்தப்பாடலும் ஒன்று .

 அந்தப்பாடல் :
                                        
திரைப்படத்தில் -  http://www.pattukkottaiyar.com/site/?p=477

 
 பாடல் வரிகள் :
உறங்கையிலே பானைகளை
உருட்டுவது பூனைக்குணம் _ காண்பதற்கே
உருப்படியாய் இருப்பதையும்
கெடுப்பதுவே குரங்குக் குணம் _ ஆற்றில்
இறங்குவோரைக் கொன்று
இரையாக்கல் முதலைக்குணம் _ ஆனால்
இத்தனையும் மனிதரிடம் மொத்தமாய் வாழுதடா
பொறக்கும்போது பொறந்த குணம்
போகப் போக மாறுது _ எல்லாம்
இருக்கும்போது பிரிந்த குணம்
இறக்கும்போது சேருது  - மனிதன் (பொறக்…)


பட்டப்பகல் திருடர்களைப்
பட்டாடைகள் மறைக்குது _ ஒரு
பஞ்சையைத்தான் எல்லாஞ்சேர்ந்து
திருடனென்றே உதைக்குது -மனிதன் (பொறக்…)

காலநிலையெ மறந்து சிலது
கம்பையும் கொம்பையும் நீட்டுது _ புலியின்
கடுங்கோபம் தெரிஞ்சிருந்தும்
வாலைப்புடிச்சி ஆட்டுது _ வாழ்வின்
கணக்குப் புரியாம ஒண்ணு
காசைத்தேடிப் பூட்டுது _ ஆனால்
காதோரம் நரைச்ச முடி
கதை முடிவைக் காட்டுது -மனிதன் (பொறக்…)

புரளிகட்டிப் பொருளைத் தட்டும் சந்தை _ பச்சைப்
புளுகை விற்றுச் சலுகை பெற்ற மந்தை _ இதில்
போலிகளும் காலிகளும் பொம்மலாட்டம்
ஆடுகின்ற விந்தை சொன்னால் நிந்தை    -இதில்
உப்புக்கல்லை வைரமென்று சொன்னால் _ நம்பி
ஒப்புக் கொள்ளும் மூடருக்கு முன்னால் _ நாம்
உளறி என்ன? கதறி என்ன? ஒன்றுமே நடக்கவில்லை
தோழா _ ரொம்ப நாளா!1 (பொறக்…)

"எல்லாம் இருக்கும்போது பிரிந்த குணம் இறக்கும்போது சேருது", "பட்டப்பகல் திருடர்களைப் பட்டாடைகள் மறைக்குது ", "காலநிலையெ மறந்து சிலது
கம்பையும் கொம்பையும் நீட்டுது ", "வாழ்வின் கணக்குப் புரியாம ஒண்ணு
காசைத்தேடிப் பூட்டுது" , "இதில் போலிகளும் காலிகளும் பொம்மலாட்டம்
ஆடுகின்ற விந்தை சொன்னால் நிந்தை " -அருமையான வரிகள் .

நமது குணங்கள் பற்றி சிந்திப்போமாக !

நன்றி : http://www.pattukkottaiyar.com/site/மற்றும்  கிருபாகரன் .

மேலும் படிக்க :

மெதுவான எளிய வாழ்க்கை ! 

பட்டுக்கோட்டையார் பாடல்கள் !

....................................................................................................................................................................

Thursday, December 1, 2011

மட்டமான பேச்சு !

மட்டமான பேச்சைப் பேசுவதில் என்றும் முதலிடம் வகிப்பது நம் அரசியல்வாதிகள் தான் .எந்த மாதிரியான பிரச்சனையாக இருந்தாலும் அவர்களின் பேச்சு மட்டமானதாகவே உள்ளது . சில விதிவிலக்குகள் இருக்கலாம் .ஏதாவது ஒரு அரசியல்வாதியை எடுத்துக்கொள்ளுங்கள் , அவர் அரசியலுக்கு வந்தது முதல் இன்று வரை பேசிய பேச்சைக் கேட்டுப் பாருங்கள் . அவரது  பேச்சு எதற்கும் பயன்படாது போனது புரியும் .

அரசியல்வாதிகள் தவிர்த்து , நம்மைச் சுற்றி எப்போதும் வெட்டிப்பேச்சு பேச ஆட்கள் இருந்துகொண்டே இருக்கிறார்கள் . அவர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் . இல்லாவிட்டால்  " மட்டமான பேச்சு அவர்கள் வாயைக் கெடுப்பதுடன் ,நம் காதையும் கெடுக்கும் " என்று சொல்கிறார் , பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் . 1965 ஆம் ஆண்டு வெளிவந்த " மகனே கேள் " என்ற திரைப்படத்திற்காக இந்தப் பாடலை எழுதியுள்ளார் . A .L . ராகவனும் , ஜிக்கியும் இந்தப்பாடலைப் பாடியுள்ளனர் .

அந்தப் பாடல் :




பாடல் வரிகள் :

மட்டமான பேச்சு _ தன்
வாயைக் கெடுக்குதுங்க _ அது
வெட்டித்தனமாக் கேக்கிறவங்க
காதையும் கெடுக்குதுங்க (மட்ட… )

சந்திலும் பொந்திலும் வாதம் _ அதால்
தலைவலி மருந்துக்கு லாபம் _ அந்த
ஜாடையிலே சில கேடிகள் செய்வது
சட்டையின் பைகளைக் கெடுக்குதுங்க (மட்ட…)

கும்பல் சேர்த்து வம்பு வளர்த்து
குடும்பத்தைக் கலைக்குதுங்க _ பெருங்
குழப்பமாக்கியே சண்டைகள் மூட்டி
பொழப்பையும் கெடுக்குதுங்க

புரளியும் வதந்தியும் மூட்டி _ ஒரு
பொய்யை நூறாகக் கூட்டி _ கரும்
பூதமென்றும் சிறு பேய்களென்றும் _ பல
பாதையில் மூளையைக் கெடுக்குதுங்க (மட்ட…)

அறையில் வளர்ந்து வெளியில் பறந்து
அவதிப் படுத்துதுங்க _ ஊரை
அவதிப் படுத்துதுங்க _ அது
அரசியல் வரைக்கும் நாக்கை நீட்டியே
அமைதியைக் கெடுக்குதுங்க

பாழும் பொய்யென்று காட்டி _ உடல்
மாயக் கூடென்று கூட்டி _ உயர்
வானத்திலே பரலோகத்தைப் பாரென
மனதையும் அறிவையும் கெடுக்குதுங்க (மட்ட…)

 "சந்திலும் பொந்திலும் வாதம் _ அதால் தலைவலி மருந்துக்கு லாபம் ", "கும்பல் சேர்த்து வம்பு வளர்த்து குடும்பத்தைக் கலைக்குதுங்க","அறையில் வளர்ந்து வெளியில் பறந்து அவதிப் படுத்துதுங்க","வானத்திலே பரலோகத்தைப் பாரென
மனதையும் அறிவையும் கெடுக்குதுங்க" - எவ்வளவு அழுத்தமான வரிகள் .

குடும்பத்தைக் கெடுக்கவும் ,ஊரைக் கெடுக்கவும் ,நாட்டைக் கெடுக்கவும் ,உங்களின் நேரத்தை விழுங்கவும்  நிறையபேர் அலைகிறார்கள் . உசாராக இருங்கள் !

காதப் பொத்திக்கிங்க !

நன்றி : http://www.pattukkottaiyar.com/site/ மற்றும்  கிருபாகரன் .

மேலும் படிக்க :

திண்ணைப் பேச்சு வீரரிடம் ! 

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா ...! 
 ................................................................................................................................................................
 

Sunday, November 27, 2011

ஆறறிவில் ஓரறிவு அவுட்டு !

சுய சிந்தனையே இல்லாமல் மற்றவர்கள் சொல்வதை அப்படியே நம்புபவர்களுக்கும் , மூட நம்பிக்கைகளை நம்புபவர்களுக்கும், " ஆறறிவில் ஓரறிவு அவுட்டு ! " என்று சொல்கிறார் ,பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் . 1965 ஆம் ஆண்டு வெளிவந்த " மகனே கேள் " என்ற திரைப்படத்திற்காக இந்தப் பாடலை எழுதினார் .

அந்தப் பாடல் :    



பாடல் வரிகள் :

ஆறறிவில் ஓரறிவு அவுட்டு _ சிலருக்கு
ஆறறிவில் ஓரறிவு அவுட்டு _ இருக்கும்
ஐந்தறிவும் நிலைக்குமுன்னா
அதுவுங்கூட டவுட்டு  (ஆறறி…)


அடக்கமில்லாப் பெண்கள் சிலர்
நடக்கும் எடக்கு நடையிலும்
ஆதிகாலப் பண்பைக் காறறல
பறக்க விடும் உடையிலும் (ஆறறி…)

தன்ரேகை தெரியாத
பொய்ரேகைக் காரரிடம்
கைரேகை பார்க்கவரும் முறையிலும் _ அவன்
கண்டதுபோல் சொல்லுவதை
நம்பிவிடும் வகையிலும் (ஆறறி…)

ஏமாறும் மனத்திலும் ஆமாஞ்சாமிக் கருத்திலும்
எந்த நாளும் திருந்தாத மூடத்தனத்திலும்
சோம்பேறி சுகத்திலும் துடைநடுங்கும் குணத்திலும்
சொந்த நிலையை மறந்துதிரியும் ஈனப் பேச்சிலும்
சிந்திக்காத இடங்களிலும்
தெண்டச்சோத்து மடங்களிலும் (ஆறறி…)


 " தன்ரேகை தெரியாத பொய்ரேகைக் காரரிடம் " ," ஏமாறும் மனத்திலும் ஆமாஞ்சாமிக் கருத்திலும் எந்த நாளும் திருந்தாத மூடத்தனத்திலும் "," சோம்பேறி சுகத்திலும் துடைநடுங்கும் குணத்திலும் " , எவ்வளவு வலிமையான வரிகள் .

நமக்கு ஆறு அறிவா ? ஐந்து அறிவா ?

நன்றி : http://www.pattukkottaiyar.com/site/மற்றும்  கிருபாகரன் .


மேலும் படிக்க :

நாமெல்லாம் குற்றவாளிகளே ! 

திண்ணைப் பேச்சு வீரரிடம் ! 

......................................................................................................................

Monday, November 21, 2011

திண்ணைப் பேச்சு வீரரிடம் !

திண்ணை ,இதை நாம்  மறந்து ரொம்ப நாளாகிவிட்டது .இந்தப்பாடல் திண்ணையைப் பற்றிச் சொல்லவில்லை . வெட்டிக்கதைகள் பேசி நம் நேரத்தை வீணடிக்கும் ,வாய்ச்சொல்லில் மட்டுமே வீரர்களாக இருக்கும் வீணர்கள் பற்றி இந்தப் பாடலில் குறிப்பிடுகிறார் ,பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் .பதிபக்தி என்ற திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம் பெற்றது .

திண்ணை ,இன்று இல்லை . ஆனால் , அதிக எண்ணிக்கையில் ,பல்வேறு விதமான இடங்களில் திண்ணைப் பேச்சு வீரர்கள் இன்றும் இருக்கிறார்கள் . இன்றைய சூழ்நிலையில்  தொ(ல்)லைக்காட்சியில் தான் திண்ணைப் பேச்சு வீரர்கள் அதிகம் தோன்றுகிறார்கள் . ராசிபலன் சொல்பவர்,அதிர்ஷ்டகல் விற்பவர், யந்திரம் விற்பவர் ,ரியல் எஸ்டேட் விளம்பரங்களில்  பேசுபவர்கள் (சின்னத்திரை நடிகர்கள், நாடகத்தில் நடிகிறார்களோ இல்லையோ தவறாமல் ரியல் எஸ்டேட் விளம்பரங்களில் நடிக்கிறார்கள் ), டெலி பிராண்ட் விளம்பரங்களில் பேசுபவர்கள் ,ஏழு நாட்களில் வெள்ளையாகி விடலாம் என்று விளம்பரம் போடுபவர்கள் என்று தொ(ல்)லைக்காட்சியில் தோன்றும்  திண்ணைப் பேச்சு வீரர்களின் எண்ணிக்கை அதிகம் .

மேடையில்  அரசியல்வாதிகள் பேசும் போலியான பேச்சு , ஆன்மீகவாதிகள்  பேசும் பேச்சு ,தற்போதைய பிரதமர் பேசும் பேச்சு இவையெல்லாம் எதற்கும் உதவாத திண்ணைப் பேச்சில் அடக்கம் .இவர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் பட்டுக்கோட்டையார்  அன்றே பாட்டு எழுதியிருக்கிறார் .

அந்தப்பாடல் : 


பாடல் வரிகள் : 


தர்மமென்பார் நீதியென்பார் தரமென்பார்
சரித்திரத்தைச் சான்று சொல்வார்
தாயன்புப் பெட்டகத்தைச் சந்தியிலே எறிந்துவிட்டுத்
தன்மான வீரரென்பார்
மர்மமாய்ச் சதிபுரிவார் வாய்பேசா அபலைகளின்
வாழ்வுக்கு நஞ்சுவைப்பார்
கர்மவினை யென்பார் பிரம்மனெழுத் தென்பார்
கடவுள்மேல் குற்றமென்பார்


இந்தத் _ திண்ணைப் பேச்சு வீரரிடம் _ ஒரு
கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி _ நாம
ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி
எந்நாளும் உலகில் ஏமாற்றும் வழிகள்
இல்லாத நன்னாளை உண்டாக்கணும் _ இந்தத் (திண்ணை…)

பொதுநலம் பேசும் புண்ணியவான்களின்
போக்கினில் அனேக வித்தியாசம்
புதுப்புது வகையில் புலம்புவதெல்லாம்
புவியை மயக்கும் வெளிவேஷம் _ அந்தப்
பொல்லாத மனிதர் சொல்லாமல் திருந்த
நல்லோரை எல்லோரும் கொண்டாடணும் _ இந்தத் (திண்ணை…)

கடவுள் இருப்பதும் இல்லை என்பதும் சபைக்கு உதவாத வெறும் பேச்சு
கஞ்சிக் கில்லாதார் கவலை நீங்கவே
கருதவேண்டியதை மறந்தாச்சு _ பழங்
கதைகளைப் பேசி காலம் வீணாச்சு;
கையாலே முன்னேற்றம் கண்டாகணும் _ இந்தத் (திண்ணை…)

நாடி தளர்ந்தவங்க ஆடி நடப்பவங்க
நல்லவங்க கெட்டவங்க நம்பமுடி யாதவங்க
பாடி கனத்தவங்க தாடி வளர்த்தவங்க
பலபல வேலைகளில் பங்கெடுத்துக் கொண்டவங்க
படிப்பவங்க வீடு புடிப்பவங்க
பொடிப்பசங்க பெரும் போக்கிரிங்க
இன்னும் _ பொம்பளைங்க ஆம்பளைங்க
அத்தனை பேரையும்வச்சு மாடாஇழுக்கிறோம் வேகமா;
நம்ம வாழ்க்கை கெடக்குது ரோட்டோரமா
வண்டியை உருட்டி வறுமையை வெரட்டி
உண்டாலும் காய்ந்தாலும் ஒன்றாகணும் _ இந்தத் (திண்ணை…)

 எவ்வளவு அருமையான வரிகள் !"பொதுநலம் பேசும் புண்ணியவான்களின்
போக்கினில் அனேக வித்தியாசம்", "புதுப்புது வகையில் புலம்புவதெல்லாம்
புவியை மயக்கும் வெளிவேஷம் "," கடவுள் இருப்பதும் இல்லை என்பதும்  சபைக்கு உதவாத வெறும் பேச்சு ".

எந்நாளும் உலகில் ஏமாற்றும் வழிகள் இல்லாத நன்னாளை உண்டாக்கணும் !

நன்றி : http://www.pattukkottaiyar.com/site/மற்றும்  கிருபாகரன் .


மேலும் படிக்க :

நாமெல்லாம் யார் ?

............................................................................

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms