Saturday, February 11, 2017

கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குப் பொன்னான வாய்ப்பு !

மத்தியிலும் சரி , மாநிலத்திலும் சரி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மகத்தான வாய்ப்பை காலம் வழங்கியிருக்கிறது. அதற்கு முதலில் முதன்மையான இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் வேறுபாடுகளை பேசித்தீர்த்து ஒன்றிணைய வேண்டும். ஒரே கட்சியாக கட்சியின் கொள்கைகளை பரப்புரை செய்ய வேண்டும். மற்ற அரசியல் கட்சிகளை விட தாங்கள் எந்த விதத்தில் வேறுபடுகிறோம் என்பதை மக்களுக்குத் தெளிவாக புரிய வைக்க வேண்டும். மக்களுக்கான எல்லாப் போராட்டங்களிலும் கம்யூனிஸ இயக்கங்களே முன்னிருக்கின்றன என்பதை மக்கள் உணரும்படி செய்ய வேண்டும்.

மத்தியில் காங்கிரஸ் மீது நம்பிக்கையிழந்து தான் மக்கள், இந்துத்துவா கட்சி என்று தெரிந்தே தான் பாஜகவிற்கு வாக்களித்தார்கள்.மோடியின் குஜராத் மாடல் விளமபரமும் ஒரு காரணம். ஆனால் இனிமேல் அதிகாரத்தைக் கைபற்ற வாய்ப்பே பெறப்போவதில்லை என்ற மனநிலையில் தான் பாஜகவின் மோடி அரசின் செயல்பாடு இருக்கிறது. குஜராத் என்ற மாநிலம் குறித்து தற்போது ஒரு தகவலும் வெளியே வருவதில்லை. இந்நிலையில் காங்கிரஸ் , பாஜக இந்த இருகட்சிகளுக்கும் மாற்று எதுவும் தேசிய அளவில் புதிதாக உருவாகவில்லை ( ஆம்ஆத்மி இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும் ). இந்த இருகட்சிகளையும் தவிர்த்து தேசிய அளவில் பல மாநிலங்களில் கிளைகள் உள்ளதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் தான் உள்ளன. இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மக்களுக்காகத்தான் உழைக்கிறார்கள்.ஆனால் இதுவரை மக்களை நெருங்கிச் செல்லவேயில்லை. இப்போதாவது நெருங்கிச் செல்ல வேண்டும். தேசிய அளவில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுக்க வேண்டும்.

அடுத்த மாற்றாக இருக்கக்கூடிய மாநிலக் கட்சிகளும் வலுவில்லாமல் இருக்கின்றன. பெரும்பாலான மாநிலங்களில் மாநிலக்கட்சிகளில் உட்கட்சிபூசல் அதிகமாக உள்ளது. உதாரணம் , தமிழ்நாடு , உத்திரபிரதேசம் etc. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மிகப்பெரிய அரசியல் வெற்றிடம் இருக்கிறது. இதை கம்யூனிஸ்ட் கட்சிகள் நிரப்பினால் மக்கள் பயனடைவார்கள். இதை அம்பேத்கரின் வார்த்தைகள் மூலமாகவே நிறைவேற்ற முயலலாம். கற்பி , ஒன்றுசேர் , புரட்சி செய். மக்களை நெருங்கிச் செல்ல வேண்டும். மக்களை வாசிக்கப் பழக்க வேண்டும். பெரியாரையும் , அம்பேத்கரையும், மார்க்ஸையும் கொண்டு சேர்க்க வேண்டும். இந்திய மக்கள், மத்திய , மாநில அரச பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக்கூடிய ஆட்சியை கம்யூனிஸ்ட் கட்சிகளால் தர முடியும். ஆனால் இது எளிதல்ல. மிகக்கடுமையாக உழைத்தால் மட்டுமே சாத்தியம்.
தமிழகத்தில் கம்யூனிஸ இயக்கங்களுக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லாத நிலையில் கடுமையாக உழைத்தால் வெற்றி சாத்தியம் தான். சமீபத்திய மெரினா போராட்டம் , மாணவர்களின் , மக்களின் கம்யூனிஸ ஆதரவு மனநிலையை அப்பட்டமாக வெளிப்படுத்தியது. அதற்கு முதலில் இந்த இரு இயக்கங்களும் ஒன்றிணைய வேண்டும். ஒரே சின்னத்தில் போட்டியிட வேண்டும். சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.திரைப்படங்களில் கடைசியாக 'சிவப்பு மல்லி ' திரைப்படத்தில் கம்யூனிஸக் கொடியை பார்த்ததாக ஞாபகம்.

தமிழகத்தில் கம்யூனிஸ ஆட்சி என நினைக்கும் போதே மனம் மகிழ்கிறது. இது நடக்குமா ? என்று தெரியவில்லை. நடந்தால் நன்றாக இருக்கும்.

எல்லாம் தோழர்களின் கையில் !
மீதி காலத்தின் கையில் !
மேலும் படிக்க :

கட்சி அரசியலை வேரறுப்போம் !

ஓட்டு வங்கி அரசியலை ஒழித்துக்கட்டுவோம் !

..................................................................................................................................................................


பணமதிப்பு நீக்கம் - மறைமுக தனியார்மயம் !இந்தியர்களுக்கு கடந்த ஒரு மாத காலமாக தேசிய செய்தி , மாநில செய்தி , மாவட்ட செய்தி , வட்ட செய்தி , கிராம செய்தி என எல்லாமே ஒரே செய்தி 500 மற்றும் 1000 மட்டும் தான். தமிழகத்தின் முதல்வர் இறந்தது பற்றிய செய்திகள் ஒரு நாளுடனும் , மாநிலத் தலைநகரான சென்னையைத் தாக்கிய வார்தா புயல் பற்றிய செய்திகள் இரண்டு நாட்களுடனும் முடிந்துவிட்டது. பணமதிப்பு நீக்கம் பற்றிய கூச்சல் ,குழப்பங்கள் இன்னும் முடியவில்லை. அடித்தட்டு மக்களும் ,நடுத்தர மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயம் ,தொழில், சேவை என நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் ஸ்தம்பித்து நிற்கிறது. 35 நாட்களுக்குப் பிறகும் எந்த மாற்றமும் நிகழாத நிலையில் 50 நாட்களில் எல்லாம் சரியாகிவிடும் என்று மோடி மீண்டும் மீண்டும் சொல்கிறார்.

பொதுவாகவே சேமிப்பு பழக்கம் அதிகமுள்ளவர்களாக நாம் இருக்கிறோம். சிறுவாடு காசு என்ற பெயரில் ஆயிரங்களிலிருந்து இலட்சங்கள் வரை நம் வீடுகளில் இருப்பது இயல்பு. அதை மாற்றுவது கூட எளிதாக இல்லைஎனக்குத் தெரிந்து தற்போதைய தலைமுறை தான் சேமிப்புப் பழக்கம் குறைவாகவோ அல்லது சேமிப்பு பழக்கம் இல்லாத தலைமுறையாகவோ இருக்கிறது. ஊழலுக்கு எதிராகவும் , பெரும் பணக்காரர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய கடன் குறித்தும் , பெரும் பணக்காரர்களுக்கு கொடுக்கப்படும் வரி சலுகைகள் குறித்தும், அரசு நிறுவனங்கள் சலுகை விலையில் விற்கப்படுவது குறித்தும் , முக்கிய துறைகளில் கூட அந்நிய முதலீட்டை அளவிற்கு அதிகமாக அதிகரிப்பது குறித்தும் கேள்விகள் கேட்கும் நடுத்தர வர்க்கம் தான் கட்டம் கட்டப்படுவதாகத் தெரிகிறது.

ஒரு ஜனநாயக நாட்டில் சாதக ,பாதகங்களை ஆராயாமல் திடீரென ஒரு முடிவை அறிவிப்பது ஜனநாயாகத்திற்கு விரோதமானது. ஆள்பவர்களின் சர்வாதிகார மனநிலையையே இது வெளிப்படுத்துகிறது. சரியான திட்டமிடல் இல்லாததால் உழைத்துச் சேர்த்தப் பணத்தைக் கூட வங்கிகளிலிருந்து எடுக்க முடியாமல் இன்று வரை பாமர மக்கள் தவிக்கின்றனர். வங்கிக் கிளைகளில் ,  ஏடிம் மையங்களில் மணிக்கணக்கில் , நாள்கணக்கில் காவல்காரர்களின் அடக்குமுறைகளையும் தாண்டி வரிசையில், வெயிலில் நின்றாலும் 2000 மோ, 2500 யோ தான் கிடைகிறது. இப்படி , மக்கள் இதுவரை வங்கிகளில் போட்ட பணத்தையே இன்னும் எடுக்க முடியவில்லை. இதில்  பணமில்லா பரிவர்த்தனைக்கு மாறச் சொல்லி நெருக்கடி கொடுக்கிறார்கள். ஆலைகள், கூலித் தொழிலாளர்களுக்கு அவசரம் அவசரமாக வங்கிக் கணக்குகளை தொடங்கி ஊதியத்தை அந்தக் கணக்குகளில் செலுத்தி அவர்களை வங்கிகளில் காத்திருக்க வைக்கின்றனர். இதே ஆலைகள், அரசு செல்லாது என அறிவித்த பிறகும் கடந்த நவம்பர் மாத ஊதியமாக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளையே கொடுத்தார்கள். டிசம்பர் மாதமும் ஒரு சில ஆலைகள் செல்லாது என அறிவித்த நோட்டுகளை வழங்குகின்றன. மீதி ஆலைகள் வங்கிகளில் செலுத்துகின்றன. அமைப்பு சார்ந்த தொழிலாளர்களின் நிலைமையே இப்படி என்றால் அமைப்பு சாரா தொழிலாளர்களின் நிலைமை இதைவிட மோசம்.

பணமில்லா பரிவர்த்தனைக்கு தேவையான கட்டுமானங்களை உருவாக்காமல் எல்லோரையும் பணமில்லா பரிவர்த்தனைக்கு மாறச் சொல்வது, முட்டாள்தனம். இந்த உயர் பணநீக்க நடவடிக்கைக்குப் பிறகு வெளிவந்து கொண்டிருக்கும் பணப் பரிவர்த்தனை தொடர்பான விளம்பரங்களை சாதாரணமாக கவனித்தாலே தெரியும். ஏறக்குறைய அனைத்துமே தனியார் விளம்பரங்கள் . அரசு வங்கி ஏடிம் மையங்களை விட , தனியார் வங்கி ஏடிம் மையங்களில் தொடர்ச்சியாக பணம் நிரப்பப்படுவதன் பின்னணி என்ன ? மோடி அரசின் இந்த நடவடிக்கைகளால் அதிகம் பயனடையப் போவது தனியார் நிறுவனங்கள் தான். இந்த நடவடிக்கைக்குப் பின்னால் பெரிய அளவிலான வணிக நோக்கம் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. அடுத்ததாக பணமில்லா பரிவர்த்தனையைத் தீவிரமாக அமல்படுத்துவதற்கு அதிக அளவிலான பாயிண்ட் ஆப் சேல் இயந்திரங்கள் தேவை . இன்னும் பல கோடி மக்களுக்கு வங்கிக் கணக்குகளே இல்லை. வங்கிக் கணக்கு இருந்தாலும் ஏடிம் கார்டு இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகம். கிரடிட் கார்டுகள், ஏடிம் கார்டுகள் , பாயிண்ட் ஆப் சேல் இயந்திரங்கள் இல்லாத நிலையில் எப்படி பணமில்லா பரிவர்த்தனைக்கு மாறுவது ?

தற்போதைய சூழலில் பழைய 500, 1000 நோட்டுகளைப் போலவே தயாரிக்கப்பட்ட கள்ளப்பணம் ஒழிந்துவிடும். ஆனால், புதிய 500,2000 நோட்டுகளை போலவே புதிதாக கள்ளப்பணம் தயாரிக்கப்பட்டுவிடும். கருப்புப்பணம் ஒழிந்த மாதிரியே தெரியவில்லை. பலவிதமான நூதன முறைகளில் பெரும்பான்மையான கருப்புப்பணம் மாற்றப்பட்டுவிட்டது. கள்ளப்பணம் , கருப்புப்பணம் இரண்டையும் கட்டுப்படுத்த பணமில்லா பரிவர்த்தனையே ஓரளவிற்கு சரியான தீர்வாக அமையும். ஆனால் அதை சரியான முறையில் அமல்படுத்த வேண்டும். இந்த பணமில்லா பரிவர்த்தனையால் எல்லோரையும் வருமான வரி உச்ச வரம்பிற்குள் கொண்டு வந்துவிட முடியும். இந்தியா போன்ற ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் உடனடியாக எதையும் செயல்படுத்திவிட முடியாது. இது எதைப் பற்றியும் ஆட்சியில் இருப்பவர்கள் சிந்தித்த மாதிரியே தெரியவில்லை.

கருப்புப்பணத்தை ஒழிக்க ஒரே இரவில் 500 ,1000 செல்லாது என அறிவித்த மத்திய அரசால் ஒரே இரவில், மக்களின் வாழ்வாதாரத்தையே சூறையாடும் கல்விக் கொள்ளையையும் , மருத்துவக் கொள்ளையையும் முடிவிற்கு கொண்டு வந்திவிட முடியுமா ? அனைத்து கல்விக்கூடங்களையும் , அனைத்து மருத்துவமனைகளையும் அரசுடைமையாக்கி அனைத்து மக்களுக்கும் சேவையளிக்க முடியுமா ? பணமில்லாததால் ஒரு இந்தியனுக்கு கிடைக்க வேண்டிய கல்வி கிடைக்காமல் போகக்கூடாது. பணமில்லாததால் ஒரு இந்தியனுக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ வசதி கிடைக்காமல் போகக்கூடாது. அப்படி ஒரு நிலையை உருவாக்குங்கள். அதற்காக எவ்வளவு இன்னல்களையும் சந்திக்க இந்தியர்களான நாங்கள் தயாராக இருக்கிறோம். இது சாத்தியமா ?  அப்படி ஒரு நிலை வந்தால் எங்களுக்கு செல்வத்தைப் பணமாகவோ, நகையாகவோ, நிலமாகவோ சேர்த்து வைக்க வேண்டிய தேவை இருக்காது. சம்பாதிக்கும் பணத்தை அன்றாட செலவுகள் போக மீதியை அரசுக்கே செலுத்தி விடுகிறோம்.

எப்படிப் பார்த்தாலும் பணமதிப்பு நீக்க நடவடிக்கையாலும், பணமில்லா பரிவர்த்தனை நெருக்கடியாலும் சாமானிய மக்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையே கேள்விக்குறியாகியுள்ளது. பெருமளவில் வேலையிழப்புகள் உருவாகி வருகின்றன. மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளால் ஒரே ஒரு சாமானியனின் முகத்திலாவது புன்னகையை வரவழைக்க முடியுமா ?
வினை விதைத்தவன் வினை அறுப்பான் !   

குறி சிற்றிதழில் வெளிவந்த எளிய கட்டுரை .


தொடர்புக்கு :

குறி சிற்றிதழ் ,
கச்சேரி  பள்ளி எதிரில்   ,
சந்தை சாலை ,
வேடசந்தூர் -624710,
திண்டுக்கல் மாவட்டம் .

சந்தாதாரர் ஆக:
குறி தனி இதழ் ரூபாய் .20 
பத்து இதழ் சந்தா ரூபாய்.200
சந்தா SBI வங்கி மூலம் செலுத்தலாம்
P.MANIKANDAN
A/C NO. 30677840505.
VEDASANDUR
IFS CODE : SBIN0011941

இதழாசிரியர்  மணிகண்டன் - 9976122445.

இதழ் குறித்த உங்களின் பின்னூட்டங்கள் மற்றும் படைப்புகளை

kurimagazine@gmail.com 

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் .

மேலும் படிக்க :...................................................................................................................................................................Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms