Saturday, November 26, 2016

ஐநூறும் ஆயிரமும் !இந்தியர்களுக்கு கடந்த இரண்டு வார காலமாக  வட்டச் செய்தி , மாவட்டச் செய்தி , தேசிய செய்தி , உலக செய்தி, இணையச் செய்தி என எல்லாமே 500 ,1000 மட்டும் தான். டிரம்ப் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டது கூட பத்தோடு பதினொன்னாவது செய்தியாகக் கூட அறியப்படவில்லை.

இந்த 500ம் , 1000மும் செல்லாது என அறிவித்த உடனேயே பயமும் குற்ற உணர்ச்சியும் நம்மை தொற்றிக் கொண்டன. நாம் உழைத்துச் சம்பாதித்த பணமாக இருந்தாலும் மிகுந்த தயக்கத்துடனே வெளியே எடுக்கிறோம். பெரு நகரங்களை விட சிறு நகரங்களில் 500 ,1000 ஓரளவிற்கு எல்லா இடங்களிலும் வாங்கப்படுகிறது. வேறு வழியில்லை . 100 ரூபாய் தாள்கள் கிடைப்பது தான் கடினமாக இருக்கிறது.  மக்கள் இன்னமும் இன்னல்களைச் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.பணத்தை மாற்றும் பணியில் சரியான திட்டமிடல் இல்லாததால் மனித உழைப்பும் , காலமும் வீணடிக்கப்படுகிறது. இதையெல்லாம் இந்த அறிவிப்பு ஈடு செய்யுமா ? தெரியவில்லை.இந்த நடவடிக்கை ஓரே ஒரு இந்தியச் சாமானியனின் முகத்திலாவது புன்னகையை வரவழைக்குமா ? மௌனத்துடன் காலம் சுழன்று கொண்டே இருக்கிறது.  

பொதுவாகவே சேமிப்பு பழக்கம் அதிகமுள்ளவர்களாக நாம் இருக்கிறோம். சிறுவாடு காசு என்ற பெயரில் ஆயிரங்களிலிருந்து இலட்சங்கள் வரை நம் வீடுகளில் இருப்பது இயல்பு. அதை மாற்றுவது கூட எளிதாக இல்லை.  எனக்குத் தெரிந்து தற்போதைய தலைமுறை தான் சேமிப்புப் பழக்கம் குறைவாகவோ அல்லது சேமிப்பு பழக்கம் இல்லாத தலைமுறையாகவோ இருக்கிறது.

ஊழலுக்கு எதிராகவும் , பெரும் பணக்காரர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய கடன் குறித்தும் , பெரும் பணக்காரர்களுக்கு கொடுக்கப்படும் வரி சலுகைகள் குறித்தும், அரசு நிறுவனங்கள் சலுகை விலையில் விற்கப்படுவது குறித்தும் , முக்கிய துறைகளில் கூட அந்நிய முதலீட்டை அளவிற்கு அதிகமாக அதிகரிப்பது குறித்தும் கேள்விகள் கேட்கும் நடுத்தர வர்க்கம் தான் கட்டம் கட்டப்படுவதாகத் தெரிகிறது.

எப்படிப் பார்த்தாலும் இந்த அறிவிப்பு மோடி அரசின் சர்வாதிகார மனநிலையையே வெளிப்படுத்துகிறது. இந்த அறிவிப்பு ஜனநாயகத்திற்கு எதிரானது தான். இதுவரையிலான மோடி அரசின் செயல்பாடுகளால் மக்களின் பணம் தான் பல விதங்களில் அரசிற்கு சென்றடைந்துள்ளது. 11 ரூபாய் பாலிசி , 330 பாலிசி , பெட்ரோல் , டீசல் , எரிவாயு மானியம், தூய்மை இந்தியா திட்டத்திற்கு கூடுதல் வரி என பல உதாரணங்களைச் சொல்லலாம்.
இன்று வரை தோல்வியடைந்த திட்டமாக இருக்கும்  'தூய்மை இந்தியா ' திட்டத்தின் சின்னம் வேறு புதிய ரூபாய் நோட்டுகளில் அச்சிடப்பட்டுள்ளது.
இவ்வளவிற்குப் பிறகும் பணம் வாங்கிக் கொண்டு  ஓட்டுப் போட்டால் நமக்கெல்லாம் சொரனையே இல்லை என்று தான் அர்த்தம் !

அரசு, செல்லாது என அறிவித்து 19 நாட்கள் ஆகியும் கூலித் தொழிலாளர்களுக்கு சம்பளமாக இன்னமும் 1000,500 தான் வழங்கப்படுகிறது.  அமைப்பு  சாரா  தொழிலாளர்களாக இருந்தாலும் சரி , அமைப்பு சார்ந்த ஆலைத் தொழிலாளர்களாக இருந்தாலும் சரி சம்பளமாக 500, 1000 தான் கொடுக்கப்படுகிறது.

விடுமுறை எடுத்து பணத்தை மாற்றலாம் என்றாலும் எந்த வங்கியிலும் பணமில்லை , பணமில்லை எனறே சொல்கிறார்கள். ஒரு நாள் விடுமுறை என்பதே அவர்களுக்கு பெரும் இழப்பு தான். அப்படி எடுத்த விடுப்பும் பயன் தரவில்லை என்றால் என்ன செய்வார்கள் ?

அரசு செல்லாது என அறிவித்த பிறகும் அங்கீகாரம் பெற்ற தனியார் ஆலைகள் 1000,500 சம்பளமாக வழங்குவது சட்டப்படி குற்றம் என தெரிந்திருந்தும் எந்த தைரியத்தில் தொழிலாளர்களுக்கு வழங்குகிறார்கள் ?இந்தியாவில் இருக்கும் எந்தச் சட்டமும் அதிகாரத்தில் இருப்பவர்களையும் , பணம் படைத்தவர்களையும் ஒன்றும் செய்யாது என்பது மீண்டும் மீண்டும் நிருபிக்கப்படுகிறது !

ஜனவரிக்குப்  பிறகு என்ன நடக்கப் போகிறது? என்பதைப் பொறுத்து தான் இந்த பிடிவாதமான நடவடிக்கையின் பலன் என்னவென்று தெரியும் . சாதாரண மக்களுக்கு பயன் தரும் ஒரே ஒரு திட்டமானது நிறைவேற்றப்பட வேண்டும் . எல்லோருக்கும் மருத்துவம் , எல்லோருக்கும் கல்வி . இவையே இந்தியாவின் தேவை . இந்த இரண்டும் தான் எல்லாவிதமான மக்களுக்கும் பெரும் செலவு வைப்பதாக இருக்கிறது . இந்த இரண்டு தேவைகளையும் அரசு கவனித்துக் கொண்டால் மக்கள்,பெருமளவில் பணத்தைச் சேர்க்க வேண்டிய தேவை இருக்காது .

மேலும் படிக்க :

என்ன செய்யப் போறீங்க மிஸ்டர்.மோடி ? 

சிரிப்பு வருது ! சிரிப்பு வருது ! 

ஓட்டு வங்கி அரசியலை ஒழித்துக்கட்டுவோம் ! 
..................................................................................................................................................

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms