Saturday, January 10, 2015

என்ன செய்யப் போறீங்க மிஸ்டர்.மோடி ?


தூய்மை இந்தியா .கழிவு மேலாண்மையில்(Waste management) கவனம் செலுத்தாமல் சுத்தத்தைப் பற்றி பேசுவது  எவ்வளவு அபத்தம்.எளிதில் மட்காத குப்பைகளான பிளாஸ்டிக் ,எலக்ட்ரானிக் கழிவுகளை பிரித்தாலே போதும் மற்ற குப்பைகள் ( காய்கறி கழிவுகள், காகிதங்கள், இறந்த உடல்கள் ,etc) மட்குண்ணிகளால் (decomposers) ஒரு சில மாதங்களில் சிதைக்கப்பட்டு மண்ணிற்கு உரமாகிவிடும். இதிலும் ஒரு சிக்கல் என்னவென்றால் மண் எங்கே ? நகரத்தையும் ,கிராமத் தெருக்களையும் கான்கிரிட்டால் மூடிவிட்டோம். அப்புறம் நிலத்தடி நீர் கீழே போய்விட்டது. குப்பை அப்படியே கிடக்கிறது என்ற புலம்பல் தான் மிச்சம்.

 பூமியின் கதாநாயகர்கள் இந்த மட்குண்ணிகள் தான். இந்த மட்குண்ணிகள் இல்லாத பூமியை ஒரு நொடி கூட கற்பனை செய்ய முடியவில்லை. எளிதில் மட்கும் குப்பைகளையும் மட்காத குப்பைகளையும் தனியாக பிரித்து மறுசுழற்சி செய்தாலே பாதி இந்தியா சுத்தமாகி விடும்.

இயற்கையில் கழிவு என்பதே இல்லை. மனிதர்கள் தான் கழிவு என்பதை உருவாக்கி அதை சுத்தப்படுத்த வேறு மெனக்கெடுகிறோம். இயற்கையை நாம் ஒன்றும் காப்பாற்ற வேண்டியதில்லை. தன்னைக் காத்துக் கொள்ளும் பேராற்றல் இயற்கையிடம் இருக்கிறது. இயற்கை மீது நாம் கை வைக்காமல் ( மணல் அள்ளுதல், மலையைக் குடைதல், காடுகளை அழித்தல் ,ஆலைக் கழிவுகளை கலத்தல் etc ) இருந்தாலே போதும்.

எந்த உயிரினமும் தனது தேவைக்கு மீறிய எதையும் இயற்கையிடமிருந்து பெற முயல்வதில்லை மனிதனைத் தவிர. ஒரு பக்கம் பெருநிறுவனங்கள் மூலம் பலநூறு ஆண்டுகளாக சேர்த்துவைக்கப்பட்ட இயற்கையின் வளங்களை கொள்ளையடிக்க  அனுமதியளித்துவிட்டு மறுபக்கம் சுத்தத்தைப் பற்றி பேசுகிறார்கள். இயற்கையைப் பற்றிய எந்தப் புரிதலும் இல்லாதவர்கள் தான் இங்கு ஆட்சி செய்கிறார்கள் ,சட்டம் இயற்றுகிறார்கள்,திரைப்படங்கள் எடுக்கிறார்கள் , பாடத்திட்டம் வகுக்கிறார்கள் etc..

மட்கும் குப்பைகளை உரமாகவோ, உயிரி வாயு (bio gas )வாகவோ மாற்றும் வகையில் திட்டம் செயல்படுத்த வேண்டும் . Bio gas plant அமைக்க மானியம் கொடுக்கலாம் அல்லது ஒவ்வொரு தெருவிலும் அரசே bio gas plant அமைக்கலாம். இதன் மூலம் அதிகப்படியான குப்பைகளை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த முடியும். மட்காத குப்பைகளை தனியே பிரித்து மறுசுழற்சிக்கு அனுப்பலாம். ஒவ்வொரு வார்டிலும் ஒரு மையம் அமைத்து பிளாஸ்டிக் பொருட்களை கிலோ கணக்கில் மக்களிடமிருந்து பெற்று அதற்கு பணமும் கொடுக்கலாம்.

நேற்றைய குப்பையையும் இன்றைய குப்பையையும் சுத்தமாக்குவதுடன் தொழிற்சாலைகளில் உருவாகிக் கொண்டிருக்கும் நாளைய குப்பைகளை குறைப்பதற்கும் கடுமையான நடவடிக்கைகள் தேவை. தெருவுல இருக்கிறது மட்டும் தான் கழிவா , ஆண்டு தோறும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகையாக பெற்று அனைத்து விதமான நீர் நிலைகளையும் சிதைத்துக் கொண்டிருக்கும் பெருநிறுவனங்கள் வெளியேற்றுவதெல்லாம் கழிவு இல்லையா. அதைப் பற்றி யாரும் வாயே திறக்க மாட்டேங்கிறீங்க. ஆளாளுக்கு தெருவுல நின்னே போஸ் கொடுக்கிறீங்க போஸு .

எல்லோருக்குமான சுத்தமான , சுகாதாரமான கழிப்பிடங்களை  உறுதி செய்வதுடன் மனிதக் கழிவுகளை கையாள்வதில் மனிதர்களை பயன்படுத்துவதை முற்றிலுமாக தடுத்து ஆக்கப்பூர்வமான முறைகளை செயல்படுத்த வேண்டும்.

போலி விளம்பரத்தால் பிரதமர் ஆனது போல போலி விளம்பரத்தால் இந்தியாவை சுத்தம் செய்து விடலாம் என நினைக்கிறீர்களா மிஸ்டர்.மோடி ?

தற்போது மோடி பிரதமராக இருப்பதற்கு காங்கிரஸ் மீதான நீண்டகால வெறுப்பும் , மாற்றத்தை விரும்பிய மக்களின் மனநிலையும் தான் முக்கிய காரணம் .அதை விளம்பரங்கள் உதவியுடன் மோடி தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்.

மருந்துவிலை கட்டுப்பாட்டு கொள்கை நீக்கம் , ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்  முடக்கம் , மரபணுமாற்றம் செய்த பயிர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் , பாதுகாப்பு குறைபாடு மற்றும் மக்களுக்கு வீண் அலைச்சலைத் தரும் ஆதார் திட்டம் மீண்டும் செயல்படுத்தல் என்று மோடி அரசு மக்களுக்கு பல சோதனைகளை செய்து வருகிறது . இன்னும் மக்களுக்கு என்னென்ன காத்திருக்கிறதோ தெரியவில்லை . யார் ஆட்சி செய்தாலும் பெருநிறுவனங்களுக்கு, மக்களை விட நிறைய சலுகைகள் கிடைக்கும் என்பது பொது விதியாய் போனது .சாதாரண  மக்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் மிகவும் குறைந்தபட்ச சலுகைகள் கூட பறிக்கப்படுவது வருத்தத்தைத் தருகிறது .

சர்க்கரை வியாதி இந்தியாவின் தேச வியாதியாக மாறி வருகிறது . புற்றுநோய் கால் பதிக்காத ஊரே இல்லை என்ற நிலை மாறி , கால் பதிக்காத வீடே இல்லை என்ற நிலையை நோக்கிச் செல்கிறது . இதற்கு இந்திய அரசு என்ன பதில் வைத்திருக்கிறது ? அனைவருக்குமான மருத்துவ வசதியை உறுதி செய்யவேண்டிய கட்டாயம் இந்திய அரசுக்கு இருக்கிறது . அமர்த்தியா   சென் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இது பற்றி குறிப்பிட்டு இருந்தார் .

மன்மோகன் சிங் சோனியாவின் பொம்மையாக இருந்தது போல , மோடி இந்துத்துவா சக்திகளின் பொம்மையாக இருக்கிறார் . எல்லாப் பிரச்சனைகளுக்கும் மன்மோகன் போலவே மோடியும் வாயை மூடியே இருக்கிறார் . இந்துத்துவா சக்திகள் பாரதிய ஜனதா கட்சியின் பெரும்பான்மை ஆட்சியை  தவறாகப் பயன்படுத்துகின்றன . இந்துத்துவா சக்திகளின் செயல்பாடுகள் இந்திய ஒருமைப்பாட்டை சிதைக்கும் வகையிலும் , பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் இருக்கின்றன . இந்திய ஜனநாயக நாட்டின் பிரதமரான நீங்கள்  என்ன செய்யப் போறீங்க மிஸ்டர்.மோடி ?

மேலும் படிக்க :

காந்தி அழுகிறார் ! புத்தர் சிரிக்கிறார் !

சிரிப்பு வருது ! சிரிப்பு வருது !

கட்சி அரசியலை வேரறுப்போம் !

..................................................................................................................................................................


Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms