Showing posts with label இசை. Show all posts
Showing posts with label இசை. Show all posts

Monday, December 29, 2025

ஏ.ஆர்.ரஹ்மான் எனும் ரசனைக்காரன் !


ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகே ரஹ்மானின் இசையைக் கேட்கிறேன் ( கேட்கிறேன் என்று சொல்ல முடியாது , ரசிக்கிறேன் என்று தான் சொல்ல முடியும் ). ரஹ்மானை ' ரோஜா ' விலிருந்து கேட்பது தான் வழக்கம்.தற்போதும் அப்படியே. இப்போது 'பாய்ஸ்' போய்க் கொண்டிருக்கிறது. இசையில் படிப்படியாக எவ்வளவு பரிமாணங்கள்.வியப்பாக இருக்கிறது. மாறி வந்த வாழ்க்கை முறையும் , இயக்குநர்களும் காரணம் தான் என்றாலும் அந்த பரிமாணங்களை இசையில் கொண்டு வந்ததில் ரஹ்மானின் பெரும் உழைப்பு இருக்கிறது.


ஆணுக்கும் பெண்ணுக்குமான நெருக்கத்தை மிக நெருக்கமாக இசையில் கொண்டு வந்திருக்கிறார். இருவருக்குமான அன்பை , காதலை , ஊடலை, கூடலை , பிரிவை, மகிழ்ச்சியை ,துயரத்தை , கொண்டாட்டத்தை என அனைத்தையுமே இசையால் கோர்த்திருக்கிறார். ஒரு தனியறையில் காதல் ததும்ப ததும்ப உருக ரஹ்மானின் இசையே ஏற்றது.


ரசனையான பாடல் வரிகள் , அதற்கேற்றவாறு வருடவோ , துள்ளவோ செய்யும் இசை, ஓரளவிற்கு பொருத்தமான கலவையான குரல் என நம்மை வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்கிறார். முன்னெப்போதும் ரஹ்மானின் இசை இந்த அளவிற்கு வசீகரிக்கவில்லை. காரணம் என்னவென்றும் தெரியவில்லை. என்னவாக இருந்தால் என்ன இந்த மார்கழி மாத கூதலுக்கு இதமாக இருக்கிறது ரஹ்மானின் இசை.ஒவ்வொரு திரைப்படத்தின் பாடல்களும் தனி ஆல்பம் போலவே இருக்கின்றன. 


ரசனைக்காரனின் ரசனையை ரசித்திருப்போமாக!

( 2017 )

மேலும் படிக்க :

எஸ்.ஜானகி : தென்னிந்திய திரையிசையின் தனிப்பெரும் தலைவி !

மலேசியா வாசுதேவன் - உன்னத குரலோன் !


Friday, October 3, 2025

சலில் சௌதுரி 100 - மதுரை !

 


27-09-2025 அன்று கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்தில் ஓவியர் ரவி பேலட் மற்றும் அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் பிரபாகர் அவர்களின் ஒருங்கிணைப்பில் இவ்விழா சிறப்பாக நடைபெற்றது. நமது சூழலில் சலில் சௌதுரி என்ற பெயருடன் எப்போதும் நமக்கு நினைவிற்கு வருபவர் இசை விமர்சகர், ஷாஜி . ஷாஜிக்கு சலில் சௌதுரி போல நாம் எல்லோருமே ஏதோ ஒரு இசைக்கலைஞரை மற்ற கலைஞர்களை விட தீவிரமாக கொண்டாடுபவர்களாகவே இருக்கிறோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவர் பிடித்தமானவராக இருப்பார். அந்த வகையில் நான் தீவிரமாக கொண்டாடும் இசைக்கலைஞர், மலேசியா வாசுதேவன் ❤️.


ஷாஜி அவர்களுடனான நட்பின் தொடக்கமே மலேசியா வாசுதேவன் அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக சென்னையில் நடைபெற்ற அவரது இரண்டாவது நூலான ' இசையின் தனிமை ' நூல் பற்றிய கலந்துரையாடல் நிகழ்வுதான் ( 18-09-2010). அப்போதிருந்து இந்த நட்பு தொடர்கிறது. இதற்கும் மலேசியா வாசுதேவன் நிகழ்விற்கு பிறகு சலில் சௌதுரி நிகழ்வில் தான் நேரில் சந்தித்துக் கொள்கிறோம். 15 ஆண்டுகள் இடைவெளி. நிகழ்விற்கு வந்திருப்பதை தெரிவிக்காமல் அரங்கத்தின் நடுவில் அமர்ந்திருந்தாலும் அடையாளம் கண்டுகொண்டு மேடையிலேயே நினைவுகூர்ந்தார்.


நண்பர் புஹாரி ராஜா அவர்களையும் முதன் முதலாக நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. யாரும் அடையாளப்படுத்தாத, யாரும் கண்டுகொள்ள விரும்பாத விளிம்பு நிலை மனிதர்களை தொடர்ந்து தனது ' Buhari Junction YouTube channel ' மூலமாக பதிவு செய்து வருகிறார். சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நாமெல்லாம் நினைக்க மட்டுமே செய்கிறோம். புஹாரி ராஜா போன்றவர்கள் தான் அதை செயல்படுத்துகின்றனர். முன்பே அறிமுகமில்லாத நபராக இருந்தாலும் நான் பேசுவதை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தார். பேச்சின் இடையில் " நீங்க மளிகை கடையில் உட்கார்ந்து இருக்கீங்க, நான் கறிக் கடையில் உட்கார்ந்து இருக்கேன் அவ்வளவு தான் வித்தியாசம்" என்று கூறியது அவரது பெருந்தன்மையை வெளிப்படுத்தியது. மளிகைக் கடையில் இருந்தாலும் தனிப்பட்ட எழுத்து, வாசிப்பு, இசை, சினிமாவுடன் முடிந்துவிடுகிறது. உங்களைப் போல சமூகத்துடன் நேரடி தொடர்பில் இல்லை தோழர். உங்களது பணி மிகப்பெரியது. நீங்கள் நினைத்தபடி எல்லாம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் புஹாரி ராஜா அவர்களே ❤️


பிராபாகர் ஐயா அவர்களின் கலகலப்பான அறிமுக உரையுடன் விழா தொடங்கியது. ஐயா குறிப்பிட்டது போல 'இசை விமர்சகர் ஷாஜி ' என்ற அவதாரத்தை நாங்கள் ரொம்பவே மிஸ் பண்ணுகிறோம். " உங்களுக்காக என்ன வேணா செய்யுங்க எல்லாவற்றையும் ஆதரிக்கிறோம். ஆனால் அப்பப்போ எங்களுக்காக இசை குறித்தும் ஏதாவது எழுதுங்க" என்று ஷாஜி அவர்களை அவரின் இசை எழுத்தின் ரசிகர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.


உண்மையிலேயே எதிர்பார்த்ததை விட அதிகம் பேர் கலந்து கொண்ட நிகழ்வாக இந்நிகழ்வு அமைந்தது. ஷாஜி அவர்களை தூக்கத்தில் எழுப்பி சலில் சௌதுரி குறித்து பேச சொன்னால் கூட மட மடவென பேச ஆரம்பித்து விடுவார் என நினைக்கிறேன். ஷாஜி பேசிய ஒவ்வொரு முறையும் உற்சாக மிகுதியிலேயே பேசினார். சலில் சௌதுரியின் இசை நுணுக்கங்கள் குறித்தும் அவரது வாழ்வு குறித்தும் இன்னும் நெருக்கமாக ஷாஜியின் பேச்சின் ஊடாக தெரிந்து கொள்ள முடிந்தது. 


சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற உஷா ராஜ் அவர்களும் மற்றும் சனில் ஜோசப் அவர்களும் சிறப்பாக பாடி சலில் சௌதுரியின் இசைக்கு பெருமை சேர்த்தனர். விழாக் குழுவில் இருந்த ரவி பேலட் அண்ணன், ஷாஜியின் நெருங்கிய நண்பராக இருந்தும் ஒன்றை மறந்து விட்டார். நிகழ்விற்கான அழைப்பிதழில் இசை விமர்சகர், எழுத்தாளர் & நடிகர் என்று மட்டும் போட்டுவிட்டு, ஷாஜி அவர்கள் பாடுவது போன்ற ஒரு ஒளிப்படத்தையும் போட்டுவிட்டு அவரின் புதிய அவதாரமான பாடகர் என்பதை சேர்க்க மறந்துவிட்டார். ஆம் இசை விமர்சகர் ஷாஜி அவர்களுக்கு பாடவும் தெரியும். சலில் சௌதுரிக்காக எந்த அவதாரத்தையும் எடுக்க ஷாஜி தயாராகவே இருக்கிறார். சலில் சௌதுரி குறித்தான அவரது ஆசைகள் அனைத்தும் நிறைவேறட்டும். 


கலைஞர் நூற்றாண்டு நூலக அரங்கமும் சிறப்பாக இருந்தது. நல்ல ஒலித்தரத்தில் நல்ல இசையைக் கேட்க முடிந்தது. உஷா ராஜ் அவர்கள், இசை மீது தீரா ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். தான் பாடவில்லை என்றாலும் மற்றவர்கள் பாடும் பாடலையும் கூடவே சேர்ந்து வாயசைத்துக் கொண்டிருந்தார். சனில் ஜோசப் அவர்களின் குரலும் கேட்பதற்கு நன்றாக இருந்தது. தங்களது பணிகளுக்கு இடையிலும் ஷாஜிக்காகவும், சலில் சௌதுரிக்காகவும் மதுரை நிகழ்வில் கலந்து கொண்ட இந்த இருவருக்கும் பார்வையாளர்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். 


இசைக்கு எல்லைகள் கிடையாது என்பது இந்த AI காலத்திலும் தொடர்ந்து நிரூபனமாகி வருகிறது. இந்த நிகழ்வில் இதுவரை கேட்காத நிறைய சலில் சௌதுரி அவர்களின் பாடல்களைக் கேட்க முடிந்தது. ' ஓணப் பூவே.. பூவே.. ' என்ற மலையாள பாடல் பாடி முடிக்கப்பட்ட பிறகு முன் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு சிறுவன் மீண்டும் அந்தப் பாடலை ' ஒணப் பூவே .. பூவே.. ' என பாடிக் கொண்டிருந்தான். அதைக் கேட்க மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. இந்த கால குழந்தைகள் காதை ஒரு 'வலி' பண்ணும் அனிருத் பாடல்கள் மட்டுமே கேட்பார்கள் என்ற பிம்பம் உடைந்தது. தவறு நம்மிடமும் இருப்பது போலவே தோன்றுகிறது. நமக்கு பிடித்த இசையை நாம் தொடர்ந்து கேட்கும் போது ஏதோ ஒரு தருணத்தில் அந்த இசையை குழந்தைகளும் கேட்க ஆரம்பிப்பார்கள் என நினைக்கிறேன்.  


ஷாஜி அவர்கள் மீண்டும் மீண்டும் சொன்னது போல சலில் சௌதுரியின் ஒரே டியூனாக இருந்தாலும், வெவ்வேறு இடங்களில் மீண்டும் பயன்படுத்தினாலும் அந்த பாடலும் வெற்றிப் பாடலாக அமைவது தான் சலில்தாவின் திறமைக்கு எடுத்துக்காட்டு. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருமே சலில் சௌதுரி குறித்து கூடுதலாக எதையாவது தெரிந்து கொண்டுதான் அரங்கத்தை விட்டு வெளியேறி இருப்பார்கள். குறைந்தபட்சம் இப்படி ஒரு இசையமைப்பாளர் இந்தியாவில் வாழ்ந்திருக்கிறார் என்றாவது அறிந்திருப்பார்கள். 


நிகழ்வு முடிந்த பிறகு தீவிரமான அரசியல் பேசும் ஓவியங்களை தொடர்ந்து வரையும் ரவி பேலட் அண்ணன் அவர்களையும் முதன் முதலாக நேரில் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. எங்களுக்காக அவர் ஓவியங்கள் வரைந்திருந்தாலும் நேரில் சந்தித்ததில்லை. மிகவும் அக்கறையுடன் விசாரித்தார். அவரது ஒவ்வொரு வார்த்தையிலும் அன்பே நிறைந்திருந்தது. மகிழ்வான தருணம். 


ஷாஜி அவர்களை இவ்வளவு உற்சாக மிகுதியில் இதற்கு முன்பு பார்த்ததில்லை. " தம்பி, நீயே இப்ப தான் இரண்டாவது தடவை நேரில் பார்க்கிறதா சொன்ன. இதுல பல தடவ நேரில் பார்த்த மாதிரி பேசுற" என்று நீங்கள் சொல்வது காதில் விழுகிறது. அவரிடம் பல முறை பேசியதிலிருந்து குறிப்பிடுகிறேன். நமது மனதிற்கு பிடித்தமானவர்களைப் பற்றி பேசும் போது தான் நம்மால் சலிப்பே இல்லாமல் மணிக்கணக்காக பேச முடியும். அப்படித்தான் சலில்தா பற்றி ஷாஜி பேசுகிறார் என நினைக்கிறேன். 


சலில் சௌதுரியின் இசையைப் பற்றி ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் ' சொல்லில் அடங்காத இசை' என்ற ஷாஜி அவர்களின் முதல் புத்தகத் தலைப்பைத் தான் குறிப்பிட வேண்டியிருக்கும். அதனால் தான் சலில்தாவால் மொழிகள் கடந்தும் வெற்றிப்பாடல்களை கொடுக்க முடிந்திருக்கிறது.


" இன்னிசை மட்டும் இல்லையென்றால்... " நம் வாழ்வு இன்னும் சிக்கலாகவே இருக்கும். இசையுடன், கலையுடன் கூடவே இயற்கையுடன் இந்த வாழ்வை வாழ்ந்து முடிப்போமாக ! 


அந்த சனிக்கிழமை மாலையை சிறப்பானதாக மாற்றிய அனைவருக்கும் நன்றி 🙏 


#SalilChowdhury 

#salilchowdhury100


மேலும் படிக்க :

மலேசியா வாசுதேவன் - உன்னத குரலோன் !

CHAT WITH CHEN - அலெக்ஸ் - நேர்காணல் ❤️



Friday, September 12, 2025

Chat With Chen - அலெக்ஸ் - நேர்காணல் ❤️

 


Chat With Chen ரொம்பவே விரும்பி பார்க்கும் ஒரு நிகழ்ச்சி. பங்கு பெறும் ஒவ்வொருவரையும் அவர்களின் மனம் திறந்து பேச வைக்கிறார், ஷாஜி. மனம் சோர்வாக இருக்கும் போது Chat With Chen தொடரில் இருக்கும் ஏதேனும் ஓர் நேர்காணலைக் காண்பது வழக்கம். அதனாலேயே முழுவதும் பார்க்க வாய்ப்பிருந்தாலும் இன்னும் பலரின் நேர்காணல்கள் பார்க்கப்படாமலே இருக்கின்றன. இடையில் எப்பவாவது ஒரு புது நேர்காணலை காண்பது வழக்கம். அப்படி உடனே பார்த்தது தான் அலெக்ஸ் அவர்களின் நேர்காணல்.


நாம் எல்லோருக்குமே இசை பிடிக்கும். அது எந்த மாதிரியான இசை என்பது மட்டும் தான் வித்தியாசம். இசையை, இசைக்கலைஞர்களை அங்கத உணர்வோடு அலெக்ஸ் அணுகும் விதம் தான் எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. இசையை அங்கத உணர்வோடு அணுகியவர்கள்  சமீபத்தில் நம் சூழலில் இல்லை. நம்மில் பெரும்பாலானோர்களுக்கு டைமிங் காமெடி ரொம்பவே பிடிக்கும். இசையுடன் டைமிங் காமெடியும் கலந்தால் இன்னும் சுவாரசியம் தானே. அந்த இடத்தில் தான் அலெக்ஸ் ஜெயிக்கிறார். 


நம்மில் பெரும்பாலானோர், நமக்கு பிடித்த வேலையைச் செய்வதில்லை அல்லது அப்படி பிடித்த வேலையைச் செய்ய முயற்சிப்பதும் இல்லை. பிழைப்பிற்காக கிடைத்த வேலையைச் செய்பவர்களே அதிகம். கிடைத்த வேலையைச் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் போது ஏதோ ஒரு காலகட்டத்தில் நமக்கும் தோன்றியிருக்கும், " இந்த வேலையை விட்டுவிட்டு நமக்கு பிடித்த வேலையைச் செய்ய வேண்டும்" என்று. ஆனால் அதற்கு முக்கியத்துவம் தராமல் பிழைப்பிற்கான வேலையை தொடர்ந்து செய்பவர்களே அதிகம். பிடித்த வேலையை செய்வதற்காக கிடைத்த வேலையை விட்டவர் தான், அலெக்ஸ். இவரைப் போல உலகெங்கும் உதாரணங்கள் நிறைய உள்ளன. 


Prime Video -ல் வெளியான அவரது ' Alex in Wonderland ' அற்புதமான நிகழ்ச்சி. தமிழ் திரையிசை ரசிகர்கள் அனைவரும் ரசித்து பார்த்த நிகழ்ச்சி. இசை விமர்சகர் ஷாஜிக்கு பிறகு மலேசியா வாசுதேவன் அவர்களை பொதுவெளியில் முன்னிலைபடுத்திய நிகழ்ச்சியாக அது அமைந்தது. அதற்கு காரணம் நம்மை போல் அவரும் ஷாஜியின் ' மலேசியா வாசுதேவன் மகத்தான திரைப்பாடகன்' கட்டுரையை படித்ததின் பிறகான பாதிப்பில் தான் இதைச் செய்திருக்கிறார் என்பது இந்த நேர்காணல் மூலமாக தெரிய வருகிறது. அலெக்ஸ் பங்கு பெற்றதாக சொல்லும் ஷாஜி அவர்கள் ஒருங்கிணைத்த மலேசியா வாசுதேவன் நிகழ்வில் பங்கேற்கும் வாய்ப்பு சென்னையில் இருந்த போது எனக்கும் அமைந்தது. அது ஒரு அற்புதமான நிகழ்வு. 


ஒவ்வொரு மனிதரின் வாழ்வும்,  கேட்கும் நமக்கு கதை தான். கதை கேட்பது என்பது நமக்கு சலிப்பதேயில்லை. அதனால் தான் இத்தகைய நேர்காணல்கள் நம்மை ஈர்க்கின்றன. அலெக்ஸ் பற்றி நமக்குத் தெரியாத நிறைய விசயங்களை இந்த நேர்காணல் மூலமாக நாம் தெரிந்து கொள்ளலாம். அலெக்ஸ் இந்த இடத்தை அடைவதற்கு நிறைய உழைத்திருக்கிறார். நிறைய பயிற்சிகள் செய்திருக்கிறார். எத்தனையோ நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உழைப்பில் உருவாகும் எத்தனையோ  திரைப்படங்கள் நமக்கு சலிப்பைத்  தருகின்றன. தனிமனிதனாக 2 , 3 மணி நேரம் நமக்கு சலிப்பில்லாமல் ஒரு  நிகழ்ச்சியைக் கொண்டு செல்வது ரொம்பவே பெரிய விசயம். 


Amazon நிறுவனத்தின் Prime Video இவரது புதிய மேடை நிகழ்ச்சியான '  Alexperience ' நிகழ்ச்சியை வாங்க மறுத்த சூழலில் மற்ற இடங்களிலும் முயற்சி செய்தும் பலனளிக்காததால் தானே ஒரு பதிய OTT தளத்தை உருவாக்கி அதில் இந்த Alexperience நிகழ்ச்சியை கடந்த செப்டம்பர் 5-ம் தேதி வெளியிட்டு இருக்கிறார். அந்த OTT ன் பெயர் ANBA TV. இதுவும் ரொம்பவே பெரிய விசயம். இதிலும் அலெக்ஸிற்கு வெற்றி கிடைக்கட்டும்.


மொத்தத்தில் நல்லதொரு நேர்காணல் ❤️

மேலும் படிக்க :

நான் உங்கள் வீட்டு பிள்ளை - பூவை செங்குட்டுவன் !

மனிதர்கள் - குற்றமுடைய நெஞ்சு குறுகுறுக்கும் !

Tuesday, April 26, 2016

எஸ்.ஜானகி : தென்னிந்திய திரையிசையின் தனிப்பெரும் தலைவி !


தமிழ் கூறும் நல்லுலகம் எந்தக் கலைஞரையும் அவர் வாழ்கின்ற காலத்தில் கொண்டாடியதில்லை. அதற்கு எஸ்.ஜானகியும் விதிவிலக்கில்லை. ஆனாலும் எஸ்.ஜானகியைக் கொண்டாட நமக்கு இன்னமும் வாய்ப்பிருக்கிறது. 1957 ஆம் ஆண்டிலிருந்து எஸ்.ஜானகி தமிழ் மொழியில் பாடிவருகிறார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, சிங்களம், வங்காளம், சமஸ்கிருதம், ஒரியா, குஜராத்தி, ஆங்கிலம், கொங்கனி, துளு, சவுராஷ்டிரம், ஜெர்மன், படுகா, பஞ்சாபி ஆகிய 17 மொழிகளில் 20,000 கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கிறார். தற்போது அதிக எண்ணிக்கையில் பாடவில்லையென்றாலும் 77 வயதிலும் ஒருவரால் குரல் நடுக்கமில்லாமல் பாட முடிவதென்பதே பெரிய சாதனை தான்.

1958-ல் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் இசையமைப்பில் வெளிவந்த ‘ கொஞ்சும் சலங்கை ’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ சிங்கார வேலனே தேவா... ’ என்ற பாடல் தமிழில் அவரது முதல் வெற்றிப்பாடலாக அமைந்தது. பி.சுசீலா , பி.லீலா பொன்றவர்களால் சரிவர பாடமுடியாமல் போன இப்பாடலைச் சிறப்பாக பாடி வெற்றிபெற்றாலும் தமிழ் திரையுலகம், எஸ்.ஜானகியை அந்த காலகட்டத்தில் அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. எப்பவாவது ரிரு பாடல்களைப் பாட வைத்தது. ஆனால் அதே காலகட்டத்தில் மலையாளத்திலும், கன்னடத்திலும்,தெலுங்கிலும் பாட அதிக வாய்ப்புகள் கிடைத்தன. தமிழில் பாட கிடைத்த சொற்ப வாய்ப்புகளையும் இன்றும் ரசித்து  கேட்கப்படும் வெற்றிப்பாடல்களாக மாற்றினார். உதாரணமாக ஜல் ஜல் எனும் சலங்கையொலி...( பாசம் ), தூக்கமும் உன் கண்களை தழுவட்டுமே..( ஆலயமணி ), பாடாத பாட்டெல்லாம்...( வீரத்திருமகன் ), அழக்கும் மலருக்கும்...( நெஞ்சம் மறப்பதில்லை ) சித்திரமே சொல்லடி....( வெண்ணிற ஆடை ), ராதைக்கேற்ற கண்ணனோ...( சுமைதாங்கி ), உலகம் உலகம்...( உலகம் சுற்றும் வாலிபன் ), காற்றுக்கென்ன வேலி...( அவர்கள் ), மலரே குறிஞ்சி மலரே...( டாக்டர் சிவா ) இன்னும் பல பாடல்களைச் சொல்ல முடியும். இருந்தாலும் இளையராஜாவின் வருகைக்குப் பிறகுதான் எஸ்.ஜானகி தமிழ்த்திரையிசையின் தவிர்க்க முடியாத ஆளுமையாக மாறிப்போனார்.


சிஸ்லா ஸ்ரீராமமூர்த்தி ஜானகி எனும் முழுப்பெயர் கொண்ட எஸ்.ஜானகி 1938ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி அன்றைய சென்னை மாகாணத்திற்குட்பட்ட குண்டூர் ( தற்போது ஆந்திரா ) மாவட்டத்திலுள்ள பல்லேபட்லா என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார். மூன்று வயதிலேயே இசை கற்க ஆரம்பித்து பத்து வயது வரை கற்றார். பின்பு தனது உறவினரின் பரிந்துரையால் சென்னைக்கு இடம்மாறினார். ஏவிம் ஸ்டுடியோவில் குழுப்பாடகியாக பாடும் வாய்ப்பு கிடைத்தது. 1957ல் டி.சலபதிராவ் இசையமைப்பில் ‘ விதியின் விளையாட்டு ’ என்ற திரைப்படத்திற்காக தனது முதல் பாடலை எஸ்.ஜானகி பாடினார். ஆனால் இத்திரைப்படம் வெளிவரவில்லை. 

எஸ்.ஜானகியின் குரல் தனித்துவமானது. பின்னணி பாடகியான பிறகு இசைக்கான எந்தப்பயிற்சியையும் ஜானகி எடுத்துக்கொள்ளவில்லை. தனது உள்ளுணர்வாலும், தனிப்பட்ட முயற்சியினாலும் எந்த மொழிப்பாடலாக இருந்தாலும் அம்மொழிக்கேவுரிய தன்மைகளுடன் அம்மொழியின் வட்டார வழக்கையும் சேர்த்தே தனது குரலில் வெளிப்படுத்தினார். இந்தத் திறமையினாலேயே ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளிலும் ஒரே நேரத்தில் சிறந்த பாடகியாக இருந்ததோடு மட்டுமல்லாமல் காலத்தால் அழிக்க முடியாத பல வெற்றிப்பாடல்களையும் அம்மொழிகளில் கொடுத்தார். இப்போதும் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு இசைரசிகர்கள் ஜானகியை எங்களுக்கானவர் என உரிமை கொண்டாடுகின்றனர் ;யாரும் விட்டுக்கொடுக்கத் தயாராகயில்லை. இதைவிட ஒரு கலைஞருக்கு பெரிய அங்கிகாரம் தேவையில்லை. தென்னிந்திய திரையிசைப் பாடகிகளில் எஸ்.ஜானகிக்கு முன்பும் பின்பும் இவரைப்போல் எவருமில்லை.. “ ஜானகி பாடும்போது ஆழமான ஒரு உணர்ச்சிப்பெருக்கை நான் அடைந்தேன் என்று சொல்லலாம்.அது ஒரு பாடகி பாடுவது போலவே இருக்கவில்லை; அந்தப்பாடலின் நாயகி பாடுவது போலவே எப்போதும் ஒலித்தது. பலமொழி திரைப்பாடல்களிலும் பலவகை இசைகளிலும் என்னுடைய அறிதல் விரிந்த பிறகு எஸ்.ஜானகிதான் தென்னிந்திய திரைப்பாடகிகளில் முதன்மையான உணர்ச்சி வெளிப்பாட்டுத்திறன் கொண்ட பாடகி என்பதை உறுதிபடுத்திக் கொண்டேன் “ என்று எஸ்.ஜானகி பற்றி எழுதிய முக்கியமான கட்டுரையில் இசைவிமர்சகர் ஷாஜி குறிப்பிட்டுள்ளார்.


இளையராஜாவின் ஆரவாரமான வரவு தமிழ்திரையிசையில் ஒரு பெரும் பாய்ச்சலையே உருவாக்கியது. எல்லாத்தரப்பு மக்களையும் இளையராஜாவின் திரையிசை சென்றடைந்தது. இன்றும் மற்ற இசையமைப்பாளர்களின் இசையை விடவும் மீண்டும் மீண்டும் கேட்கப்படும் இசையாகவும், கேட்டாலும் சலிக்காத இசையாகவும் இளையராஜாவின் இசையே இருக்கிறது. நாட்டார் இசையை, திரையிசையாக மாற்றிய மாபெரும் சாதனை இளையராஜாவினுடையது. இளையராஜா மேற்கத்திய இசையை வைத்து நிறைய கலப்புகளைச் செய்தார். ஒரு கிராமியப்பாடலுக்கும் மேற்கத்திய இசையைப் பயன்படுத்தினார். ஒரு நகரப்பாடலிலும் கிராமிய இசையைக் கொண்டுவந்தார். இரண்டையும் கலந்தும் நிறைய பாடல்களை உருவாக்கியிருக்கிறார்.

இன்றுவரை தமிழ் திரையிசையின் முடிசூடா மன்னனாக இருக்கும் இளையராஜாவின் வெற்றிக்குப் பின்னால் நிறையபேர் இருந்தாலும் எஸ்.ஜானகியின் பெரும் பங்களிப்பை எப்போதும் தவிர்க்க முடியாது. இளையராஜாவின் மாறுபட்ட இசை முயற்சிகளுக்கு உற்ற துணையாக ஜானகியின் பாடும் திறமையே முன் நின்றது. அந்தத் திறமையைக் கண்டடைந்து அதைச் சரியாக பயன்படுத்தியவரும் இளையராஜா தான். கிராமியப் பாடலாக இருந்தாலும், கர்னாடக சங்கீதத்தில் அமைந்த பாடலாக இருந்தாலும் ஜானகி எப்போதுமே இளையராஜா எதிர்பார்த்ததைவிட ஒரு மடங்கு அதிகமாகவே தனது குரலில் பங்களிப்புச் செய்தார். சிக்கலான மெட்டுகளையும் எளிதாகப் பாடினார். ஒரு பாடல் , அத்திரைப்படத்தில் பாடப்படுகின்ற சூழலுக்கு ஏற்றவாறு , திரையில் யார் பாடப் போகிறார் என்பதைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாறு பொருத்தமான உணர்ச்சியை வெளிப்படுத்திப் பாடும் திறமையைப் பெற்ற ஒரே பாடகி எஸ்.ஜானகி தான்.

இளையராஜாவின் முதல் திரைப்படமான ‘ அன்னக்கிளி ’  திரைப்படத்தில் எஸ்.ஜானகி பாடிய ‘ மச்சானைப் பாத்தீங்களா.. ‘ , ‘ அன்னக்கிளி உன்ன தேடுதே... ’ இந்த இரண்டு பாடல்களும் இளையராஜாவைப் பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தன. அதன் பிறகு இந்த இணையைப் பிரிக்க முடியவில்லை. இளையராஜாவின் பெரும்பாலான வெற்றிப்பாடல்களில் எஸ்.ஜானகியின் பங்கும் இருக்கும். இளையராஜாவின் இசையில் அதிகளவில் ஒலித்த பெண்குரலும் எஸ்.ஜானகியினுடையதுதான். இளையராஜா தனது சொந்தக் குரலில் பாடிய ஜோடிப்பாடல்களின் முதன்மைத் தேர்வாக எஸ்.ஜானகி தான் இருந்தார். தனது தனித்திறமையாலேயே எஸ்.ஜானகி அதிகளவு பாடல்களைப் பாடும் வாய்ப்பைப் பெற்றார். குழந்தையின் சிணுங்கல், சிறுவர் சிறுமியின் குரல், கிழவியின் குரல், ஆணின் குரல் என்று பல குரல்களில் பாடியதோடு மட்டுமில்லாமல் மிகவும் பொருத்தமாக பாடியதால் தான், “பல குரல்களில் சிறப்பாகப் பாடும் திறமையுள்ளவர் ” என்று இன்றும் பலராலும் எஸ்.ஜானகி நினைவு கூறப்படுகிறார்.

பாடல்களில் இடம்பெறும் ஹம்மிங்கிலும் நிறைய ஜாலங்களை எஸ்.ஜானகி புரிந்திருக்கிறார். ல, லா வில் ஆரம்பிக்கும் ஹம்மிங் பாடல்களே நிறைய இருக்கின்றன. “ லல்லா லல்லா லல்லா லல்லா ... சின்ன சின்ன வண்ணக்குயில்... (மெளனராகம்), “ லால லால ல ... ஆத்துமேட்டிலே ஒரு பாட்டு கேட்குது...( கிராமத்து அத்தியாயம்),” “லாலலல்லா லாலலல்லா ... எந்தப்பூவிலும் வாசம் உண்டு... (முரட்டுக்காளை) ” என்று சொல்லிக்கொண்டே போகலாம். எஸ்.ஜானகியால் பாடப்பட்ட எந்தவொரு ஹம்மிங்கும் அலாதியான குரலிலேயே ஒலிக்கும். மெல்லிசைப் பாடல்கள் என்றாலும் அவர் பாடிய எல்லா மெல்லிசைப் பாடல்களையும் ஒரே வகைமைக்குள் அடக்க முடியாது. ஒவ்வொரு மெல்லிசைப் பாடலும் ஒவ்வொரு விதமான உணர்வைக் கொடுக்கும் வகையில் பாடப்பட்டிருக்கும். இதே போலவே தான் சோகம், ஜோடி, தனி மற்றும் குழுப்பாடல்களும் தனித்தன்மையுடன் இருக்கும்.எஸ்.ஜானகி பாடிய பாடல்களில் இவரின் குரல் பெரும்பாலும் பின்னணி இசையை மிஞ்சியே ஒலிக்கிறது.

1980களில் வெளிவந்த திரைப்படங்களில் ஒரு பாடலாவது காமரசம் சொட்ட சொட்ட உருவாக்கப்பட்டிருக்கும். இந்தப் பாடல்களில் ஒலிக்கும் பெண் குரல் பெரும்பாலும் எஸ்.ஜானகியினுடையதாகவே இருக்கும். அதிலும் அந்தப்பாடல்களில் வரும் ஹம்மிங்களிலும், கொஞ்சல்களிலும், சிணுங்கல்களிலும் நம்மை கிறங்க வைத்துவிடுவார். “ ஆ..ரீராரிரோ.. கண்ணத் தொறக்கணும் சா..மி... (முந்தானை முடிச்சு)”, “ பொன்மேனி உருகுதே.. என் ஆசை பெருகுதே... (மூன்றாம் பிறை) ”, “ நிலா காயுது ..நேரம் நல்ல நேரம்.., நேத்து ராத்திரி.. யம்மா...(சகலகலா வல்லவன்) ” என்று இன்று கேட்டாலும் சொக்கித்தான் போய்விடுகிறோம். இந்த வகைப்பாடல்களில் ஜானகி அளவிற்கு உணர்வுப்பூர்வமாக வேறு எவராலும் பாடிவிட முடியாது என்பதை உறுதியாகக் கூற முடியும்.

எஸ்.ஜானகி பாடிய பல தனிப்பாடல்கள் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளன. இப்பாடல்கள் மகிழ்ச்சி, சோகம், ஏக்கம், பிரிவு, கொண்டாட்டம் ,ஆசை, தாய்மை எனப் பலவிதமான உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தாலும் என்றென்றும் கேட்கக்கூடிய செவ்வியல் தன்மையைப் பெறுகின்றன. “ காற்றில்..எந்தன் கீதம்...(ஜானி), அன்பே வா அருகிலே...( கிளி பேச்சு கேட்க வா ), மந்திர புன்னகையோ மஞ்சள் நிலவோ...( பூவிழி வாசலிலே ),பட்டுவண்ண ரோசாவாம்...( கன்னிப்பருவத்திலே ), பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா..( நீங்கள் கேட்டவை ), சின்னத் தாயவள் தந்த ராசாவே...( தளபதி), எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்...(குரு), இது ஒரு நிலாக்காலம்...(டிக் டிக் டிக்), ஊருசனம் தூங்கிருச்சு...(மெல்லத் திறந்தது கதவு), புத்தம் புது காலை...(அலைகள் ஓய்வதில்லை), செந்தூரப்பூவே செந்தூரப்பூவே..., மஞ்சள் குளிச்சி..(16 வயதினிலே), வான்மதியே வான்மதியே...(அரண்மைக்கிளி), ஆசை அதிகம் வச்சு...(மறுபடியும்), நெஞ்சினிலே நெஞ்சினிலே...( உயிரே ) இன்னும் பல பாடல்களைக் குறிப்பிட முடியும். இசை மேடைகளில் எஸ்.ஜானகியின் பாடல்களையே மீண்டும் மீண்டும் பாடுகிறார்கள்.

இளையராஜாவின் இசையில் பாடியவர்களில் சிறந்த ஜோடிப் பாடகர்களாக எஸ்.ஜானகியையும், மலேசியா வாசுதேவனையையுமே குறிப்பிட முடியும். “எஸ்.ஜானகிக்கு ஈடு கொடுக்கும் வகையில் மலேசியா வாசுதேவனால் மட்டுமே பாட முடியும்” என்று ஷாஜி குறிப்பிடுகிறார். காலத்தின் விளையாட்டால் குறைவான பாடல்களே இவ்விருவரும் இணைந்து பாடியிருந்தாலும் அவை என்றும் கேட்கக்கூடிய இனிமை உடையவை. பூங்காற்று திரும்புமா..., வெட்டிவேரு வாசம்...( முதல் மரியாதை ) ,கோவில்மணி ஓசைதன்னை..., மலர்களே...( கிழக்கே போகும் ரயில் ), வான் மேகங்களே...( புதிய வார்ப்புகள் ), ஆழக்கடலில் தேடிய முத்து...( சட்டம் என் கையில் ), இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு...( சிகப்பு ரோஜாக்கள் ), கட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனச...( என் ஜீவன் பாடுது ), தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி...( தூரல் நின்னு போச்சு ), ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி....( தர்மயுத்தம் ), பேர் வச்சாலும் வைக்காம போனாலும்...( மைக்கேல் மதன காமராஜன் ) இவர்களிருவரும் இணைந்து பாடிய இன்னும் பல பாடல்களைக் குறிப்பிட முடியும். இவை அனைத்துமே எப்போது கேட்டாலும் சலிக்காதவை. இவர்கள்  பாடிய  எந்தப்பாடலையும்  இன்றைய பாடகர்களால்   நகலெடுத்து  பாடிவிட முடியாது. இவர்களின் குரல்களில் தான் நாம் உண்மையான கிராமத்து வாசனையை உணர முடியும்.


நல்ல திறமையிருந்தும் எஸ்.ஜானகி பாடிய அளவில் குறைந்தபட்ச வாய்ப்பு கூட மலேசிய வாசுதேவனுக்கு கிடைக்கவில்லை.இருந்தும் தமிழ் திரையிசையில் ஒரு தவிர்க்கமுடியாத தனியிடத்தை மலேசியா வாசுதேவன் பெறுகிறார். எல்லா வகையான பாடல்களையும் சிறப்பாக பாடக்கூடிய திறமை இருந்தும் அதிகபட்ச டப்பாங்குத்து பாடல்களை மட்டுமே பாடுவதற்கு தமிழ் திரையிசையுலகம் மலேசியா வாசுதேவனுக்கு வழங்கியுள்ளது. ஆனால்,இன்று டப்பாங்குத்து பாடல்களைத் தாண்டியும் வாசுதேவன்  நினைவு கூறப்படுகிறார் அவரது மற்ற அற்புத பாடல்களுக்காக. இதற்கு அவரது இசையாளுமையே காரணம். தமிழ் சமுகம் கொண்டாடத் தவறிய கலைஞர்களில் மலேசியா வாசுதேவனும் ஒருவர்.

இசைக்கும் மொழிக்கும் எப்போதுமே நெருங்கிய தொடர்பு இருந்து கொண்டே தான் இருக்கிறது. இசையமைப்பாளர் எவ்வளவு தான் உழைத்து சிறப்பான மெட்டை அமைத்தாலும் நல்ல பாடல் வரிகளும், நன்றாக பாடக்கூடியவர்களும் அமையாவிட்டால் அப்பாடல் வெற்றி பெறாது. விதிவிலக்காக சில பாடல்கள் மெட்டுக்காகவும், பாடல் வரிகளுக்காகவும், , சிறப்பான பாடும் முறைக்காகவும் நினைவில் இருக்கலாம். ஆனால் இவை மூன்றுமே சிறப்பாக அமைந்த பாடல்கள் மட்டுமே செவ்வியல் தன்மை கொண்டு காலத்தால் அழியாதிருக்கும். இம்மூன்றில் மெட்டு , பாடல் வரிகளை விட பாடகரின் பாடும் திறமையே அப்பாடலை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

இளையராஜாவிற்கு முன்பு வரை பாடகர்கள் பாடல் வரிகளைப் பாடும்போது மொழியை பிழையில்லாமல் பாடுவதில் கறார் தன்மை இருந்தது. பழைய பாடல்களில் லகரம் (ல,ள,ழ ), னகரம்( ன,ண ), ரகரம்( ர, ற) போன்றவை பெரும்பாலும் திருத்தமாக பாடப்பட்டதாலேயே அவற்றை இன்றும் ரசித்துக் கேட்கிறோம். இளையராஜா இவ்விசயத்தில் போதிய கவனம் செலுத்தவில்லை என்றே தோன்றுகிறது. தனிப்பட்ட முறையில் மொழியில் கவனம் செலுத்தி திருத்தமாக பாட கற்றுக்கொண்ட டி.எம்.எஸ்., ஜானகி ,வாசுதேவன் போன்றவர்கள் மட்டுமே சிறப்பாகப் பாடியிருக்கிறார்கள். நாம் எங்கு சென்றாலும் , எங்கு வாழ்ந்தாலும் இம்மூவரின் குரல்கள் ஏதோ ஒரு விதத்தில் நம் காதுகளை அடைகின்றன. அந்த அளவிற்கு நம்முடன் கலந்துவிட்ட குரல்கள் இவை.எழுத்து மொழியில் ஆங்காங்கே எழுதப்படும் வாசகங்களில் இருக்கும் எழுத்துப்பிழையைச்  சுட்டிக் காட்டுகிறோம். அதே சமயம்  நமது பேச்சு மொழியிலோ , கோடிக்கணக்கானவர்களைச் சென்றடையும் திரையிசைப்பாடல்களிலோ பிழைகளை எந்த பிரக்ஞையும் இல்லாமல் ஏற்றுக் கொள்கிறோம்.முத்தமிழில் ஒன்றான இசைத்தமிழ் திரையிசையுடன் சுருங்கிப்போனது வருத்தமே. கலை என்பது எப்போதுமே மக்களுக்கானது ; மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கக்கூடியது என்று சொல்கிறார்கள். அப்படி இருக்கையில் கலை வடிவத்தில் ஒன்றான இசையும் திரைப்படத்தைச் சார்ந்து இயங்காமல் தன்னிச்சையாக இயங்க வேண்டும்.
   
2013 ஆம் ஆண்டு தனக்குக் கொடுக்கப்பட்ட பத்மபூஷண் விருதை எஸ்.ஜானகி நிராகரித்தார். இதற்கு அவர் சொன்ன காரணம் ,” இது காலம் கடந்த கொடுக்கப்பட்ட விருது. மேலும் என்னை விட சிறந்த தென்னிந்திய கலைஞர்களுக்கே இன்னும் கொடுக்கவில்லை. இப்போதைய நிலையில் பாரத ரத்னா கொடுத்தால் வாங்கிக் கொள்வேன் ”. 55 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்திய திரையிசைக்கு பங்களிப்பு செய்தவரிடம் வேறு என்ன பதிலை எதிர்பார்க்க முடியும். எந்த விருதாக இருந்தாலும் அதை வேண்டாம் என்று சொல்வதற்கு துணிச்சலும் தைரியமும் வேண்டும். 77 வயதிலும் தனது சுயமரியாதையை இழக்காமல் இருக்கும் எஸ்.ஜானகியைக் கொண்டாடுவோம். “ எனது ரசிகர்கள் தான் எனக்குப் பெரிய விருது “ என்று ஜானகி சொன்னது போல ரசிகர்களின் மனங்களில் என்றைக்குமே அவருக்கு இடமிருக்கும். தென்னிந்திய மொழிகள் இருக்கும் வரை இவ்வுலகில் ஜானகியின் குரல் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும்.

குறிப்பு :- இக்கட்டுரை 'காற்றை கவுரப்படுத்தும் குரல் ! - தி இந்து என்ற தலைப்பில் தி இந்து நாளிதழின் இணைப்பிதழான இந்து டாக்கீஸில் வெளிவந்த கட்டுரையின் முழு வடிவம் . 

மேலும் படிக்க :

எக்காலத்திற்குமான கலைஞன் !

மலேசியா வாசுதேவன் - உன்னத குரலோன் !

பட்டுவண்ண ரோசாவாம் ...!
...................................................................................................................................................................



Monday, December 19, 2011

மலேசியா வாசுதேவன் - உன்னத குரலோன் !

உலகெங்கும் வாழும் தமிழர்களின் வாழ்விடங்களில்  கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஒலித்து கொண்டிருக்கும் குரல் மலேசியா வாசுதேவனுடையது .  தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் வாசுதேவனின் குரலும் ஜானகியின்  குரலும் கேட்டுக்கொண்டே இருக்கின்றன . தமிழிசையோடு கலந்துவிட்ட குரல்கள் அவை . வாசுதேவன் பாடிய உயிரோட்டமான  பாடல்கள் , நமக்கு மகிழ்ச்சியையும் ,சோகத்தையும் , மனதிற்கு இதத்தையும் ,கொண்டாட்டத்தையும் , ஆறுதலையும் ,வாழ்வதற்கான நம்பிக்கையையும் தரக்கூடியவை .

மலேசியாவில் பிறந்து வளர்ந்த ஒருவருக்கு தமிழக கிராமிய பாணியிலான பாடும் முறை எப்படி வாய்த்தது ? இளையராஜா முக்கிய காரணமாக இருக்ககூடும் .வாசுதேவன் , வார்த்தை உச்சரிப்பில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார் . எல்லாவிதமான பாடல்களிலும் மிகத் தெளிவான வார்த்தை உச்சரிப்பு . கிராமிய பாடல்களில் கிராமத்தான் போன்ற உச்சரிப்பு அவரது காலத்தில் இவரால் மட்டுமே முடிந்திருக்கிறது . எந்த மாதிரியான படாலாக இருந்தாலும் அதற்கேற்றவாறு தன்னை முற்றிலும் மாற்றிக்கொண்டு அந்தக் குறிப்பிட்ட பாடலுக்கு உயிரோட்டத்தைக் கொடுத்துள்ளார் .

அவர் பாடிய எந்தப்பாடலாக இருந்தாலும் முதல் இரண்டு வார்த்தைகளைக் கவனித்துப் பாருங்கள் . முதல் இரண்டு வார்த்தைகளிலேயே  அந்தப்பாடலுக்குள் நம்மை அழைத்துச் சென்று விடுகிறார் .அதன் பிறகு, பாடல் முடியும் வரை நாம் அந்தக்குரலின் கட்டுப்பாட்டில் தான் இருப்போம் . தெரிந்தோ தெரியாமலோ சினிமாவில் பாடுவதில் சமத்துவத்தைக் கொண்டுவந்தவர் , வாசுதேவன் அவர்கள் . ஆம் , அவர் கதாநாயகர்களுக்கு மட்டும் குரல் கொடுக்கவில்லை , துண்டு துக்கடா வேடங்களில் நடிப்பவர்கள் ,குணச்சித்திர நடிகர்கள் மற்றும்  நகைச்சுவை நடிகர்களின் குரலாகவும் அவரது குரல் ஒலிக்கிறது . அதிகமான திருவிழாப் பாடல்கள் பாடியவர் இவராகத் தான் இருப்பார் . 80 ,90 களில் வெளிவந்த பாடல்களில் கோவில் முன்பு ஒரு குழு ஆடத் தயாரானாலே நாம் முடிவு செய்து விடலாம் அடுத்து ஒலிக்கும் குரல் வாசுதேவன் குரலாகவே இருக்கும் .

நடிகரின் பெயராலோ , இசையமைப்பாளரின் பெயராலோ , படத்தின் பெயராலோ மட்டுமே அவரது அநேக பாடல்கள் கேட்கப்படுகின்றன . மலேசியா வாசுதேவன் பற்றி இசை விமர்சகர் ஷாஜி எழுதிய கட்டுரை அந்தப்போக்கை மாற்றியமைத்தது என்றே சொல்லலாம் . மிகச்சிறப்பாக எழுதப்பட்ட கட்டுரை அது . அந்த ஒரு கட்டுரைக்காக நிறைய உழைத்திருக்கிறார் . அந்தக்கட்டுரை - மலேசியா வாசுதேவன்: மகத்தான திரைப்பாடகன் . எல்லோரும் அவரை மறந்திருந்த வேளையில் வாசுதேவன் பற்றி மிக விரிவாக எழுதப்பட்ட கட்டுரையிது . உயிர்மையில் வெளிவந்த இந்தக்கட்டுரை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது . அவரை முற்றிலுமாக மறந்திருந்த திரையுலகமும் சற்றே திரும்பிப் பார்த்துவிட்டு மீண்டும் முகத்தைத் திரும்பிக்கொண்டது .

ஷாஜி ," இசையின் தனிமை " - என்ற தனது புத்தக கலந்துரையாடல் மூலமாக மலேசியா வாசுதேவனைப் பாராட்டி மகிழ்ந்தார் . அரிதாக அந்த நிகழ்வில் பங்குபெறும் பாக்கியம் எனக்கும் கிடைத்தது . அந்த நிகழ்வு பற்றி நான் ஷாஜிக்கு  எழுதிய மின்னஞ்சலை அவரது வலைப்பதிவில் பிரசுரித்தார் . அந்தப் பதிவு - வாழ்வில் மறக்க முடியாத நிமிடங்கள்  . அன்று பேசிய மலேசியா வாசுதேவன் " புகழ் நிலையற்றது "  என்று கூறினார் . இதற்கு அவரது வாழ்க்கையே மிகச் சிறந்த உதாரணம் .

 2010 டிசம்பர் மாதம் பொதிகை தொலைக்காட்சியில் அவரது பேட்டி ஒளிபரப்பானது . அந்தப் பேட்டியில் பாதியை மட்டுமே பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது .அந்தப் பேட்டியில் அவர்,
" நாம் கலைஞர்களை உருவாக்க வேண்டும் , இளையராஜா என்னை உருவாக்கியதைப்போல, இன்று புதுப் பாடகர்களுக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை , இரண்டு மூன்று பாடல்கள் மட்டுமே பாட வாய்ப்புக் கிடைக்கின்றன. எல்லா வகையான (சோகம் ,தத்துவம் )  பாடல்களைப்  பாட வாய்ப்பு கிடைப்பதில்லை . சோகம் ,தத்துவம் நிறைந்த பாடல்கள் இன்றைய படங்களில் இல்லை . சோகப்பாடல்கள் மட்டுமே மனிதனின் உணர்வுகளை ஊடுருவும் . புதுப் பாடகர்கள் எந்த மொழியில்  பாடினாலும்  வார்த்தைகளை தெளிவாக உச்சரிக்க வேண்டும். இந்த  மாதிரியான  தொலைக்காட்சியில் பேசக் கிடைக்கும் வாய்ப்புகள் எனது ஆதங்கத்தை
வெளிப்படுத்தஉதவுகின்றன. ஒரு பாடல் மட்டும் பாடினால் போதும் என்று
தான் சென்னை வந்தேன் . 5000 பாடல்கள் பாடிவிட்டேன்  இதற்குமேல்  என்ன வேண்டும் " என்று கூறினார் .

20-02-2011 அன்று  மலேசியா வாசுதேவன் மரணமடைந்தபோது கூட பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை . அவரது மரணம் ரசிகன் என்ற முறையில் என்னை மிகவும் பாதித்தது . இவ்வளவு சீக்கிரத்தில் அவருக்கு மரணம் வரும் என்று நான் எதிர்பார்க்க வில்லை. திரையுலகின் அன்பும் , ஆதரவும் அவருக்கு கிடைத்திருந்தால் நிச்சயம் இன்னும் கொஞ்ச நாள் உயிருடன் இருந்திருப்பார் . திரையுலகம் செய்யாததை ஷாஜி செய்தார் .ஷாஜியின் அன்பு அவருக்கு நிச்சயம் ஆறுதலாய் இருந்து இருக்கும் . மலேசியா வாசுதேவன் 
பற்றிய  ஷாஜியின் கட்டுரையின் அதிர்வுகள் இன்னும் என்னுள்  ஒலித்துக்கொண்டே இருக்கின்றன .

ஆனந்த விகடன் இதழில் ஒரு ஓரத்தில் வெறும் ஒரு பக்கத்தில் மட்டுமே மலேசியா வாசுதேவன் மரணம் பற்றிய குறிப்பு இருந்தது . உண்மையில் அவரது மரணத்தை விட அதிகமாக வலித்தது . ஒரு உன்னதமான இசைக்கலைஞனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை  இவ்வளவுதானா ?. இதே ஆனந்த விகடனில் ஒன்னுக்கும் உருப்படாத விசயங்கள்  எல்லாம்  பக்கத்தை நிரப்பும் போது வாசுதேவன் அவர்களுக்காக ஒரு மூனு பக்கம் கூட ஒதுக்க முடியவில்லை .எந்த மாதிரியான உலகத்தில் வாழ்கிறோம் நாம் ? வெறும் வணிகம் மட்டும் தான் வாழ்க்கையா ? மற்ற இதழ்களில் அந்த ஒரு பக்கமும் இடம் பெறவில்லை என்றே நினைக்கிறேன் .

நான் பார்த்த வரையில்  பொதிகை தொலைக்காட்சி மட்டுமே வாசுதேவன் பற்றிய சிறப்பு நிகழ்ச்சியை இரவு 10 . 15 க்கு என்றும் இனிமை பகுதியில் ஒளிபரப்பியது . ஆனால் , அவரது பாடல்களால் பயன் பெரும் அனைவரும் அவரை மறந்து விட்டனர் . அவரது இறப்பை விட வருத்தமான விசயம் ,
 இறந்த பின்பும் அவரை  புறக்கணிக்கும் இந்த உலகம் தான் .

வரலாற்றில் , தனித்துவம் மிக்கவர்களுக்கு எப்போது  முக்கியத்துவம் 
கொடுத்துள்ளோம் ? அவர்கள் வாழ்ந்த  காலத்திற்கு பிறகு தான் அவர்களைக்  கொண்டாடி வந்துள்ளோம்  . வாசுதேவன் அவர்களின் மரணச் செய்தியைக் கேட்ட போது எனக்கு மகாகவி பாரதி தான் நினைவுக்கு வந்தார் . அவரை எப்படிப்  புறக்கணித்தார்களோ , அது போலவே வாசுதேவன் அவர்களையும் புறக்கணித்து உள்ளோம் . இன்று எப்படிப்  பாரதியை இந்த உலகம் கொண்டடுதோ , அதுபோலவே  நாளை வாசுதேவன் அவர்களையும் இந்த உலகம் கொண்டாடத்தான் போகிறது .

பூங்காற்று திரும்பத் தான் போகிறது . அதை நாம் பார்க்கத்தான் போகிறோம் . எனக்கு தெரிந்த வரையில் தமிழ் மண்ணோடு கலந்துவிட்ட  இரண்டு  ஆண்  குரல்கள் ஒன்று T.M.சவுந்தர்ராஜன்,  இன்னொன்று மலேசியா வாசுதேவன் .தமிழ், இயல் , இசை , நாடகம்  என்னும்  மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது . 
இசைத்தமிழில் இவர்கள் இருவருக்கும் நிச்சயம் இடம் இருக்கும் . காலத்தால் அழிக்க முடியாத குரல்கள் . இவர்களுக்கு யாருமே மாற்று இல்லை .  மரணம், வாசுதேவன் அவர்களின் உடலுக்குத்தான் .   
அவரது பாடல்களுக்கு இல்லை .

கலைஞனுக்கு என்றுமே அழிவில்லை !

அவர்கள் ஏதோ ஒரு வடிவத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள் ! 

மேலும் படிக்க :


எக்காலத்திற்குமான கலைஞன் !  

முகப்பு பக்கம் 
..................................................................................................................................................................... 

Saturday, November 27, 2010

இசை - உயிரின் ஓசை


 "இசையாலே வசமாக இதயம் எது " என்பது போல இசைக்கு மயங்காதவர் என்று ஏறக்குறைய எவரும் இல்லை. மனிதனின் தனிமை மிகக்கொடியது . அந்த தனிமையை மறக்க வைப்பது இசை. இன்றைய இயந்திர உலகில் தனிமை என்பது பல நேரங்களில் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது . படிப்பு காரணமாக , வேலை காரணமாக , வேறு ஊர்களில் ,வேறு நாடுகளில், தனியாக வாழ்ந்து தான் ஆக வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். எல்லா இடத்திலும், நம் தோழனாய் , ஆசானாய் , கவலை நீக்கியாக , தனிமை நீக்கியாக , நம் உற்சாகத்தை குறைய விடாமல் பார்த்து கொள்வதில் இசைக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.


           முதன் முதலில் மனிதன் கேட்ட இசை (இசை என்பதை விட சத்தம் எனலாம் ) எதுவாக இருக்கும் ? காற்று காரணமாக தாவரங்கள் எழுப்பும் சத்தம், பறவைகளின் கீச்சுக் குரல்கள் , பல்வேறு வகையான விலங்குகளின் உறுமல்கள் , மழை பெய்யும் போது உருவாகும் சத்தம் , அருவியின் ஓசை என்று ஏதாவது ஒன்றாக இருக்கலாம் . ஒரு வகையில் இசையும் இயற்கையின் வடிவம் தான் . பிறகு , கையில் கிடைக்கும் பொருள்களை வைத்து ஏதாவது ஒரு சத்தத்தை உருவாக்க முற்பட்டு இருப்பான். பரிணாம வளர்ச்சியின் காரணமாக , பின்பு ,இசைக்கருவிகள் உருவாக்கப்பட்டு இருக்கலாம் . எப்படி இருந்தாலும் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தவே இசையை பயன்படுத்தி வந்திருக்கிறோம். இன்று கூட நம் வீடுகளில் கல்யாணம் , காதுகுத்து போன்ற நிகழ்வுகளின்போது , கோவில் விழாக்களின் போது , விளையாட்டுப் போட்டிகளின் போது என்று நம் உற்சாகத்தை , கொண்டாட்டத்தை வெளிப்படுத்தவே இசையை பெரிதும் பயன்படுத்துகிறோம்.


             அரசாட்சி காலத்தில் அரசர்கள் மட்டுமே அதிகம் இசை கேட்பவராகவும் , இசையை வளர்ப்பவராகவும் இருந்து உள்ளனர் .பின்பு , தெருக்கூத்துகளிலும் , நாடகங்களிலும் பயன்படுத்தி வந்த இசையை பாடல்கள் வடிவில் எல்லோருக்கும் சென்றடையும்படி செய்ததில் திரைப்படங்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. தற்பொழுது பாடல் தான் இசையின் வடிவமாக உள்ளது . அந்தந்த நாட்டுக்கும் , கலாச்சாரத்திற்க்கும் ஏற்ற வகையில் பல்வேறு வகையான பாடல்கள் கேட்கப்படுகின்றன. இந்தியாவை பொருத்தவரையில் திரைப்பாடல்கள் தான் அதிகம் கேட்கப்படுகின்றன.


          இசைக்கு மொழி தேவை இல்லை . உயிரோட்டமுள்ள இசை கண்டங்களை கடந்து பயணிக்கும் . ஆனால் , தாய்மொழியில் உருவான பாடல்களை கேட்கும்போது பாடல்வரிகளையும் சேர்த்தே கவனிக்கிறோம், நல்லவரிகள் இல்லாத பாடல்களை கேட்க மனம் இடம் தருவதில்லை அந்தப்பாடலில் நல்ல இசை இருந்தாலும் கூட. வேறு மொழிப்பாடல்களைக் கேட்கும்போது நாம் பாடல்வரிகளைக் கருத்தில் கொள்வதில்லை. அந்தப்பாடல் நமக்கு ஏற்ப்படுத்திய தாக்கம் மட்டுமே நம்மால் உணரப்படும் . நாடககலையில் இருந்து தமிழ்சினிமா தோன்றியதால் ஆரம்பகால தமிழ் பாடல்களில் நாடகத்தனம் சற்று அதிகமாகவே இருக்கும். பின்பு , நாடகத்தனம் கொஞ்சம் கொஞ்சமாக விலகியது. நான் பழைய பாடல்களை விரும்பியதற்கு ஒரே காரணம் "பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் நெருப்பு போன்ற பாடல்வரிகள் ".

           நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்ததால் , எனது சிறுவயதில் அதிகளவு MGR பாடல்களைக் கேட்டு வளர்ந்தேன். ரேடியோ , டேப் ரெக்கார்டர் போன்றவை மட்டுமே பயன்பாட்டில் இருந்தன . அதுவும் வசதியான வீடுகளில் மட்டுமே இருக்கும் . அப்பொழுதெல்லாம் கல்யாணம் , காதுகுத்து போன்ற குடும்ப நிகழ்வுகள் , கோவில் திருவிழாக்களில் மட்டுமே அதிகளவு பாடல்களைக் கேட்க முடிந்தது. அப்பொழுது கேட்ட பாடல்களின் நினைவுகள் இன்றும் உள்ளன. நாங்கள், பெரும்பாலும் MGR பாடல்களைக் கேட்கக்கூடிய வாய்ப்புதான் அதிகம். ஒரு சில பாடல்களின் வரிகள் மிகவும் நன்றாக இருக்கும் . அந்த பாடல் வரிகளை யார் எழுதியது என்று பார்த்தால் அது பட்டுக்கோட்டையார் எழுதிய பாடலாகத்தான் இருக்கும் . வயது கூட கூட பட்டுகோட்டையார் பாடல்களைத் தேடித் தேடி கேட்க ஆரம்பித்தேன் . இன்றும்  தேடல் தொடர்கிறது .


           அந்த தேடலில் எனக்குத் தென்பட்டவர்கள்தான் , கண்ணதாசன் ,வாலி, C .S .ஜெயராமன் ,A .M .ராஜா ,K.V.மகாதேவன்,திருச்சி லோகநாதன் , P .B .ஸ்ரீநிவாஸ் , T.R.மகாலிங்கம் , K.B.சுந்தராம்பாள் ,S.வரலட்சுமி ,T.M.சௌந்தரராஜன் , S .ஜானகி , சங்கர் -கணேஷ் , மலேசியா வாசுதேவன், சொர்ணலதா  போன்றவர்கள் . இவர்களது பாடல்களையும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். முதலில் பாடல்கள் கேட்கும்போது அது அந்த படத்தின் நாயகன் பாடியதாகவே நினைத்துக்கொள்வேன் , பிறகு தான் தெரிந்தது , பாடுவது வேறு ஒருவர் , நாயகன் வாய் மட்டுமே அசைக்கிறார் என்று . இவ்வாறு இருந்த எனது தேடலில் கடந்த இரண்டு மாதமாக ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது. அது இசை விமர்சகர் திரு. ஷாஜியின் அறிமுகம் . நான் பாடல்கள் கேட்க்கும் விதமே தற்பொழுது மாறிவிட்டது. அந்த பாதிப்பை நீங்களும் உணர இந்த blog இல் http://www.musicshaji.blogspot.com   இசை தொடர்பான கட்டுரைகளைப் படியுங்கள் . மலேசியா வாசுதேவன் பற்றிய கட்டுரை இப்பொழுதும்   என்னுள் அதிர்வுகளை ஏற்ப்படுத்திக்கொண்டே இருக்கின்றது  .


             வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் சோதனைகள் ,கவலைகள் , கஷ்டங்கள் , துன்பங்கள் ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் அதிலிருந்து மீள உதவுவது இசையும் , புத்தகமும்தான் . நான் தனிமையில் இருக்கும் போதெல்லாம் எனது தனிமையை மறக்க வைப்பது இசைதான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான ரசனை உள்ளது .ஆனால் , ஏறக்குறைய எல்லா வயது மனிதர்களும் பாடல்கள் கேட்பதில் ஆர்வம் உள்ளவர்களாகவே இருக்கின்றனர் . சென்னையில் பெரும்பாலனோர் காதுகளில் Head Phone தவறாமல் இருக்கிறது. செல்போன் நிறுவனங்களின் குறிப்பிட்ட வருவாய் பாடல்களை நம்பியே உள்ளது . எப்படி இருந்தாலும், உயிரோட்டமுள்ள பாடல்கள் மட்டுமே காலங்களைக் கடந்து வாழ்கின்றன . நல்ல இசை, நல்ல பாடும் திறமை ஒரு பாடலுக்கு உயிர் கொடுக்கின்றன சில நேரங்களில் பாடல் வரிகளும் முக்கியத்துவம் பெருகின்றன.


          இசை ஒரு கடல் , மூழ்க மூழ்கவே முத்துக்கள் கிடைக்கும் . நல்ல தேடல் நமக்குப் பல்வேறு விதமான அனுபவங்களைத் தருகின்றன. நமக்கு மகிழ்ச்சியைத் தருகின்ற எல்லா விதமான பாடல்களையும் கேட்ப்போம் .

வாழ்க்கையை அனுபவிப்போம்.. !

உயிரின் ஓசை பூமியெங்கும் கேட்கட்டும் ...!  
..........................................................

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms