Saturday, July 21, 2018

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 5 !

" மனித சமூகத்துக்கு முதலில் மிக வேகமாக, வயித்துக்கு சோறு நிறைவாகக் கிடைக்கிறதா. அடுத்து , ஆணும் பெண்ணும் பாலியல் பசி இல்லாமல், சிக்கல் இல்லாமல் நிறைவாக இருக்கிறார்களா என்பதைப் பார்க்க வேண்டும். இந்த இரண்டையும் ஏற்படுத்தித் தந்துவிட்டு அதன் பிறகு ஒழுக்கத்தை வற்புறுத்தினால் அர்த்தம் உண்டு. வயித்துப் பசி ஒரு கொடூரம். பாலியல் பசி அதைவிடக் கொடூரம் " - கி.ராஜநாராயணன்.

தமிழக சூழலில் பாலியலை, தான் சேகரித்த பாலியல் கதைகளின் வாயிலாக மிகச்சரியாக முன்வைத்த படைப்பாளியாக கி.ராஜநாராயணன் அவர்களைக் கூறலாம்.பாலியலை சார்பில்லாமல் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைத்தவர். இந்த புரிதல் ஏற்பட அவர் சேகரித்த கதைகளும் உதவியிருக்கலாம். யோசித்துப்  பார்த்தோமேயானால் நாட்டில் நிகழும் சமூகக் குற்றங்களுக்கு வயித்துப்பசியும் , பாலியல் பசியும் தான் முக்கிய காரணங்களாக இருப்பதை அறிய முடியும். வயித்துப்பசிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பாலியல் பசிக்கும் கொடுக்க வேண்டும் என்பதையே கி.ரா. தொடர்ந்து பேசி வந்திருக்கிறார். இதையே தான் சிக்மண்ட் பிராய்டும் ,"பாலியலுக்குக்கும் சமூகத்தின் செயல்பாட்டிற்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது " என்று கூறியிருக்கிறார்.

நாகரிகம் என்ற ஒன்று எப்போது மனித சமூகத்தில் தொடங்கியதோ
அப்போதிருந்து தான் பாலியல் சிக்கல்களும் உருவாக ஆரம்பித்தன. பாலுறவில் நிறைய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டதால் ஆண்களும் , பெண்களும் சூழ்நிலை கைதியானார்கள். அப்போதிருந்து தான் மீறல்களும் தொடங்கின. மனித இனத்தை மட்டுமல்ல எந்த இனத்தையும் பாலியலிலிருந்து விலக்கி வைக்க முடியாது. அப்படி இருக்கும் போது பாலியலை ஒரு தீண்டத்தகாத விசயம் போலவே சமூகம் அணுகுகிறது. இந்த மனநிலையை உருவாக்குவதில் மதங்களுக்கு முக்கிய பங்கிருக்கின்றன. பெண்ணடிமைத்தனத்தை , பாலியல் ஒடுக்குமுறையை  படிப்படியாக சேர்த்து அதை கலாச்சாரம் என்று மதங்கள் அழைக்கின்றன. மதங்களின் உதவியுடன் சாதிகளும் பாலியல் சிக்கலை உருவாக்குவதில் முன்னிலை வகிக்கின்றன. சமூக விடுதலையின் பொது எதிரிகள் மதங்களும் , சாதிகளும் தான். பாலியல் விடுதலையே சமூக விடுதலை. அப்படி இருக்கும் போது பாலியலை , பாலியல் விடுதலையைப் பற்றி பேசாமல் சமூக விடுதலை கிடைக்கப் போவதில்லை.

நவீன வாழ்வில் பாலியல் சிக்கல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போவதை பார்க்க முடிகிறது. கடந்த இரண்டு தலைமுறைகளாத் தான் இந்த சிக்கல்கள் மிகவும் அதிகரித்துள்ளன. இப்போதும் கவனித்தோமானால் ஒரு விசயம் நமக்கு விளங்கும். எழுபது வயதைக் கடந்தவர்களின் பேச்சில் இயல்பாகவே பாலியல் இழையோடும்.அதில் நெருடலோ, உறுத்தலோ துளியும் இருக்காது.கணவன்  இருந்தால் கூட கேலி , கிண்டலுக்கு குறைவிருக்காது. அடுத்தடுத்த தலைமுறைகளில் இந்தப் போக்கு மாறிவிட்டது.  எதுவும் இயல்பாக இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது.

காலத்துக்கேற்ற மாற்றம் எல்லாவற்றிலும் நிகழ வேண்டியது அவசியம். கலாச்சாரத்திலும் மாற்றம் நிகழ்ந்தே ஆக வேண்டும். தற்போதைய கலாச்சாரம் என்பது போலியான மதிப்பீடுகளின் கூடாரமாகவே உள்ளது.கலாச்சாரத்தின் கூறுகளான உணவு , உடை , இருப்பிடம் போன்றவற்றில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதற்கெல்லாம் ஒன்றும் சொல்லாத கலாச்சாரம் பெண் சுதந்திரம் , பாலியல் சுதந்திரம் என்று வரும்போது மட்டும் குய்யோ, முய்யோ என்று ஓலமிடுகிறது.சாதி அமைப்பை மதங்களின் உதவியுடன் பேணி பாதுகாப்பதற்கும் , பெண்ணை அடிமைப்படுத்துவதற்கும் கலாச்சாரத்தை மதவாதிகள் ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள்.
2012 ல்  'ஆனந்த விகடன்' இதழில் வந்த பேட்டியில் கி.ரா. சொல்லியிருப்பதை தெரிந்து கொள்வதன் மூலம் கலாச்சாரம் குறித்தான ஒரு புரிதலுக்கு வர முடியும்.

கேள்வி :-
" கட்டுக்கோப்பான கலாச்சாரத்திற்குப் பேர் போன இடைசெவல் மாதிரி ஒரு இந்தியக் கிராமம் ; உலகிலேயே முற்போக்கானதாகச் சொல்லப்படும் பிரெஞ்சு கலாசாரச்  சூழல் நிலவும் பாண்டிச்சேரி மாதிரி ஒரு நகரம் .. இரண்டிலும் நீங்கள் வாழ்ந்திருக்கிறீர்கள் . எந்தக் கலாச்சாரம் உண்மையில் உன்னதமானதாக உங்களுக்குத் தெரிகிறது ?"

 கி.ரா :-
" பிரெஞ்சு கலாசாரம் தான் உன்னதமாத் தெரியுது . இந்தப் பொறப்பு எடுத்த நோக்கம் என்ன? சந்தோசமா வாழனும் . அதுதான் நோக்கம் .சந்தோசமா எப்படி வாழறது ? பறவைகளை மாதிரி மனுஷன் வாழணும் . எந்தக் கட்டுப்பாடும் இல்லாம , அவனவன் நினைச்ச மாதிரி சுதந்திரமா,சந்தோசமா வாழனும் . அதுக்கு எந்தக் கலாச்சாரம் எடம் கொடுக்குது ? இந்தியக் கலாச்சாரம் எடம் கொடுக்கல .அட , விருப்பப்பட்ட ஒரு மனுஷாளோட சேர்ந்து வாழ்ற சுதந்திரம்கூட இங்கே இல்லையே ? ஒரு காலத்துல கிராமங்கள்ல அந்தக் கலாச்சாரம் இருந்துச்சு . விருப்பம்போல வாழலாம் ; புடிக்கலைன்னா அத்துக்கிட்டுப் போய்டலாம் .இன்னொண்ணு சேர்த்துக்கிடலாம் . புள்ளைங்களுக்கும்  தெரியும் . அம்மாதான் நம்மளோட அம்மா ,நம்ம அப்பா இவரு இல்லைங்கிறது . ஊருக்கும் தெரியும் . யாரும் எதையும் தப்பா நெனைக்கிறது இல்லை .சந்தோஷமா இருந்தாங்க .ஆனா ,அந்த மாதிரி கிராமம் எல்லாம் இப்ப குறைஞ்சுக்கிட்டு வருது . நகரத்துக்காரன் எல்லாம் சேர்ந்து கிராமத்தைப் புனிதமாக்கிட்டான் .கட்டுப்பாடு கட்டுப்பாடுனு பேசி வாழ்க்கையையே பொழைப்பா மாத்திக்கிட்டு ஆளாளுக்குப் பைத்தியம் பிடுச்சு அலையுறோம் ."

கேள்வி :-
"அப்படி என்றால் , ஒரு கலாச்சாரத்தை மதிப்பிட பாலியல் சுதந்திரம் தான் அளவுகோலா ? "

கி.ரா :-
" ஆமா ,கலாச்சாரம்னு பேசுனா , மொதல்ல அங்கே இருந்து தானே தொடங்கணும் ? ஒழுக்கம் ,ஒழுக்கம்னு எங்கே கூச்சல் கேட்குதோ ,அங்கேதான் நிறைய ஒழுக்கக்கேடு இருக்கும் . ஒவ்வொருத்தனும் மனுசுக்குள்ள ஆயிரம் தடவை சோரம் போறான் .வெளியே பேசுறது பதிவிரதத்தனம் .சென்னையிலேயே,ரெண்டு மூணு வருசத்துக்கு முன்னாடி நடந்துச்சா இல்லையா ? கம்ப்யூட்டர் கம்பெனியில கக்கூஸு அடைச்சு , குழாயை  உடைச்சப்ப வண்டி வண்டியா ஆணுறைகளை எடுத்த கதை நாடு முழுக்க நாறுச்சா இல்லையா ? அப்ப வெளியே மூடிக்கிட்டு உள்ள வெறியோட அலையுறதுல என்ன இருக்கு ? அட , பச்சப்புள்ளைங்க மேல எவ்வளவு வன்முறை நடக்குது ? என்னடா , இந்தக் கி.ரா. இந்த வயசுல இப்படிப் பேசுறானேனு நெனைக்கக் கூடாது .இந்த வயசுல நான் பொய் பேசக் கூடாது , இல்லையா ?மொதல்ல இங்கே குடும்பம்கிற அமைப்பு உடையணும்னு நெனைக்கிறேன் ."

கேள்வி :-

" இந்தியாவுக்குப் பாலியல் கல்வி வேண்டும் என்று நினைக்கிறீர்களா? "

கி.ரா.:-
" கண்டிப்பா வேணும்னு சொல்றேன். இல்லைன்னா, குட்டிச்சுவராப் போயிடும் . எப்படி வாழணும்னு மொதல்ல நாம கத்துக்கணும் . பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்கணும் . மறைச்சு மறைச்சு வெச்சுதான் பெரிய விசயமாக்கிட்டோம் . பிள்ளைங்க இது ஒரு பெரிய விஷயம்னு நெனைச்சு , அந்த ஞாபகமாகவே அலையுது . நான் கேட்குறேன் ... ஒரு நாள்ல முக்கா நாளு ஒருத்தன் இந்த நெனைப்பாவே திரியுறான்னா , அது சிக்கலா, இல்லையா ? அது அவனோட சிக்கல் மட்டும்தானா .. சமுதாயத்தோட சிக்கலுமா ? கம்ப்யூட்டர் மூலமா மணிக்கணக்கா உறவாடுறானே ,அவனோட ஆழ்மனசுத் தேவை என்ன ? கிராமப்புறங்கள்ல மேல் வயித்துப் பசி , கீழ் வயித்துப் பசினு சொல்வாங்க . ரெண்டு பசியுமே மோசமானது . ஆனா, இங்கே எல்லோருமே மேல் வயித்துப் பசியைத் தீர்க்குறதைப் பத்தி மட்டும்தான் பேசுறோம் . கீழ் வயித்துப் பசியை மறந்துடுறோம் .  "

கேள்வி :-
" இந்த வயதில் காதலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? உங்கள் முதல் காதலை இப்போது நினைவுகூர முடியுமா ? "

கி.ரா :-
"முதல் காதல் ... ஹா ... ஹா ... பசிக்குது . அந்தச் சமயத்துல பக்கத்துல நல்ல சாப்பாடு .உடனே கிடைச்சுட்டா ,அதை ஒரு விசயமா நெனைப்போமா ? அப்படித்தான் இந்தக் காதலும் . கிடைச்சுட்டா , அந்த நேரச் சாப்பாடு . கிடைக்காட்டி , அதுக்குப் பேர் காதல் . கிடைக்கவே கிடைக்காட்டி , அது  அமரக் காதல் , காவியக் காதல் . ஒரு விஷயம் சொல்லலாம் . காதல் ஒரு தடவை மட்டும் வர்றது இல்லை .வந்துக்கிட்டே இருக்குறது . "
இந்தக் கருத்துகளின் மூலம் கி.ரா.வின் பாலியல் குறித்தான தெளிவான புரிதலை அறிந்து கொள்ள முடியும்.

இன்றைய சூழலில் திருமணம் என்பது மிகவும் சிக்கல் வாய்ந்த ஒன்றாக மாறியிருக்கிறது. பரஸ்பர விருப்பம் என்பதைத் தாண்டி சமூக அழுத்தம் என்பது தான் துருத்திக்கொண்டு இருக்கிறது. யார் யாருடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் , எந்த வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் , எந்த வயதுக்காரர் எந்த வயதுக்காரருடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் , திருமணம் செய்து கொள்ளும் ஆணும் , பெண்ணும் எந்த நிலையில் இருக்க வேண்டும் என்று எல்லாவற்றையும் சமூகமே  தீர்மானிப்பதாக உள்ளது. குடும்பம் என்பது இங்கே சமூகத்தின் கூறாகவே உள்ளது. குடும்பம் என்பது சமூகமின்றி தனித்து இயங்காது. ஒன்றுக்கும் பயனில்லாத வெற்று மதிப்பீடுகளையும் , அங்கீகாரத்தையும் நம்பிக்கொண்டு மற்றவர்களுக்காக தன்னை அழித்துக் கொள்ளும் ஒரு அமைப்பு தான் குடும்பம்.  தனிமனித விருப்பங்களுக்கு குடும்பம் என்ற அமைப்பில் துளியும் அனுமதியில்லை. நிர்பந்தங்களால் தன்னையும் , தன்னைச் சார்ந்தோரையும் அழித்துக் கொள்வது தான் குடும்பங்களில் நடக்கிறது. 
எழுத்தாளர், யுவன் சந்திரசேகர் ஒரு பேட்டியில் , " இந்தியாவில் எக்ஸூக்கு(X) மிகப்பொருத்தமான கணவர் , ஒய்யின்(Y) கணவராக இருப்பார். இது காதல் திருமணங்களுக்கும் பொருந்தும் " என்று கூறியிருப்பார். அதாவது யாரும் பொருத்தமான துணையை தேர்ந்தெடுப்பதில்லை என்பதையே அவரது கருத்து வெளிப்படுத்துகிறது. இதன்படி பார்க்கையில் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் முறையில் பெரிய தவறிருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. விட்டுக்கொடுத்து போவது என்ற ஒன்று தான் இந்தியத் திருமணங்களை காப்பாற்றி வருகிறது. குழந்தைகளின் நலனுக்காக எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு வாழ பழகி விடுகிறார்கள். மேலை நாடுகளைப் போல பிடிக்கவில்லை என்றால் பிரிதல் அதாவது விவாகரத்து பெறுதல் என்பது இங்கே எளிதானதாக இல்லை. அங்கே எந்த வயதிலும் சாத்தியம். இங்கே அது சாத்தியமில்லாததால் தான் மீறல்கள் என்பது இந்தியக் குடும்பங்களில் மிகவும் அதிகமாக இருக்கிறது.

இந்திய குடும்பங்களில் ஒரு கெட்ட பழக்கம் உள்ளது. அது குழந்தைகளை பெரியவர்கள் போல நடத்துவது , வயதிற்கு வந்த பெரியவர்களை குழந்தைகள் போல நடத்துவது . இந்த நிலை மாறினாலே போதும் நிறைய மாற்றங்கள் நிகழ ஆரம்பித்துவிடும். தன் வாழ்க்கைத்துணையை தானே தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இந்திய குடும்பங்களில் மறுக்கப்படுகிறது. அதையும் மீறி துணையைத் தேர்ந்தெடுப்பவர்களை சாதி , மதம் , பொருளாதார நிலை போன்ற காரணங்களை முன்வைத்து அவர்களை நிராகரிக்கிறது. நிராகரிப்பதுடன் நின்று விடாமல் சாதிஆணவ படுகொலை வரை போகிறது. இந்தியக் குடும்பங்கள் மானம் , அவமானம் , கௌரவம் , மதிப்பு , மரியாதை போன்றவற்றை கட்டிக்கொண்டு அழுகிறது. எவ்வளவு விலை கொடுத்தாயினும் இவற்றை பாதுகாக்க முயலுகின்றன.  

வயதிற்கு வந்த இருவர் அதாவது இந்தியச் சட்டப்படி 18 வயதைக் கடந்தவர்கள் சேர்ந்து வாழ்வதற்கு எந்தத் தடையும் இல்லை. சமீபத்திய நீதிமன்ற தீர்ப்புகள் இதை மேலும் உறுப்படுத்தியுள்ளன. இந்தியாவில் பெண்ணின் மணவயது என்று 18ம் , ஆணின் மணவயது என்று 21ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. நிலைமை இப்படியிருந்தாலும் கூட ஒரு ஆண் , பெண்ணுடன் சேர்ந்து வாழ 21 வயதுவரை காத்திருக்க வேண்டியதில்லை. ஒரு ஆண் 18 வயதைக் கடந்திருந்தாலே பெண்ணுடன் சேர்ந்து வாழ தகுதியுள்ளவர் ஆகிறார் என்றும் சட்டம் சொல்கிறது. பால்ய விவாகத்தால் உருவான சிக்கல்களை விட தற்போதைய திருமணத்தால் தான் அதிக சிக்கல்கள் உருவாகின்றன. குழந்தை திருமணத்தில் குறைந்த வயதில் திருமணம் முடிப்பது தான் சிக்கல் என்றால் , தற்போதைய அமைப்பில் திருமணம் முடிப்பதே சிக்கலாக உள்ளது.

தன்னுடைய பிள்ளைகளை மருத்துவராகவோ , பொறியாளராகவோ , பணம் கொட்டும் இயந்திரமாகவோ மாற்றுவதை விட முக்கியமானது, அவர்களின் வாழ்க்கைத்துணையை அவர்களே தேர்ந்தெடுக்க அனுமதிப்பது. தற்போதைய இந்தியக் கல்வி முறையில் படித்து வெளியே வருபவர்களில் பெரும்பாலானோருக்கு தங்களைப் பற்றிய சுயபுரிதலே இருப்பதில்லை. சுயபுரிதல் இல்லாத நிலையில் தேர்ந்தெடுக்கப்படும் வாழ்க்கைத்துணையும் பொருத்தமில்லாதவராகவே இருப்பார். பாடத்திட்டத்தை தாண்டிய தேடுதல் உள்ளவர்களால் மட்டுமே தங்களின் சுயத்தை அறிந்துகொள்ள முடியும். ஆனால் அதற்கு கல்விக்கூடங்களும் அனுமதிப்பதில்லை , குடும்பங்களும் அனுமதிப்பதில்லை. மற்றவர்கள் போலவே நாமும் வாழ்ந்தால் போதும், மற்ற எதைப்பற்றியும் கவலையில்லை என்ற மனநிலையே மேலோங்கி இருக்கிறது.


இன்றும் பெரும்பான்மையான திருமணங்களை ஜாதகங்கள் தான் தீர்மானிக்கின்றன. திருமணம் என்பது ஒரு பெரும் ஆடம்பர நிகழ்வாக மாற்றமடைந்திருக்கிறது. அதனால் திருமணம் என்பதே பெரும் செலவு வைக்கும் ஒரு சுமையாக மாறிவிட்டது. பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்குச் செய்யும் பெரும் கடமையாக திருமணங்கள் பார்க்கப்படுகின்றன. திருமணங்கள் எளிமையாக நடத்தப்பட்டாலும் கூட விருப்பத்திற்கு மாறாக நடக்கக்கூடாது. ஆனால் நிலைமை அப்படியில்லை. ஜாதகம் பொருந்தி வந்திருக்கு , குடும்பம் நல்ல குடும்பம் , நல்ல வசதி போன்ற புறக்காரணங்களை வைத்தே திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன. ஒரே சாதியில் திருமணம் செய்யவே இவ்வளவும் பார்க்கப்படுகின்றன. சாதி மறுப்பு திருமணங்களுக்கு இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும். மருத்துவ பரிசோதனை சான்று கேட்டாளாவது ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் யதார்த்தத்தில் மருத்துவ சான்று கேட்பது மரியாதை குறைவாகவே பார்க்கப்படுகிறது.ஜாதகத்தை கேட்பதில் எந்த நியாயமும் இல்லை. ஆனால் கேட்கப்படுகிறது. நாம் இன்னமும் பார்ப்பன அடிமைகள் தான். நாம் என்ன செய்ய வேண்டும் , செய்யக்கூடாது என்பதை இன்னொருவர் தீர்மானிக்கும் வரை நாம் அடிமைகள் தானே. ஒவ்வொரு விசயத்திலும் ஊடுருவியிருக்கும் பார்ப்பன ஆதிக்கத்தை வேரறுக்காதவரை நமக்கெல்லாம் விடிவுகாலம் இல்லை.

18 வயதிற்கு பிறகு தங்களின் பிள்ளைகளை தன்னிச்சையாக இயங்க அனுமதிக்க வேண்டும். ஆனால் அதற்கு முன்பாக வாழ்க்கை குறித்தான புரிதல்களை ஏற்படுத்தியிருக்க வேண்டும். தங்களின் துணையை தானே தேர்ந்தெடுக்கும் சூழலை உருவாக்குவது தான் சமூகத்தின் ஆரோக்கியத்திற்கு உதவும். 
நன்றி - ஆனந்த விகடன்
பேசுவோம்....  

தொடர்புக்கு :
குறி சிற்றிதழ் ,

9/3 , யூசுப் நகர் ,
மாரம்பாடி  சாலை,
வேடசந்தூர் -624710,
திண்டுக்கல் மாவட்டம் .

சந்தாதாரர் ஆக:
குறி தனி இதழ் ரூபாய் .30
பத்து இதழ் சந்தா ரூபாய்.300
சந்தா SBI வங்கி மூலம் செலுத்தலாம்
P.MANIKANDAN
A/C NO. 30677840505.
VEDASANDUR
IFS CODE : SBIN0011941

இதழாசிரியர்  மணிகண்டன் - 9976122445.

இதழ் குறித்த உங்களின் பின்னூட்டங்கள் மற்றும் படைப்புகளை

kurimagazine@gmail.com 

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் .

மேலும் படிக்க :


Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms