Showing posts with label வாழ்க்கை. Show all posts
Showing posts with label வாழ்க்கை. Show all posts

Wednesday, September 24, 2025

Stress Buster - மன அழுத்தத்திலிருந்து விடுபட !


நவீன வாழ்வு நாள்தோறும் நெருக்கடிகளைக் கொடுத்துக்கொண்டே தான் இருக்கிறது. நாம் சந்திக்க நேரும் நெருக்கடிகளை தவிர்க்க முடியாது. ஆனால் அவற்றிலிருந்து விரைவாக வெளியேறலாம். எந்த நெருக்கடிக்கான தீர்வும் அந்த நெருக்கடிக்குள் இருப்பதில்லை. அந்த நெருக்கடிக்கு வெளியிலிருந்து அணுகுவதன் மூலமே அந்த நெருக்கடியைக் கடக்க முடியும். எந்த ஒன்று நெருக்கடியிலிருந்து நம்மை வெளியே கொண்டு வந்து அந்த நெருக்கடியை கடக்க உதவுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 


எல்லாவித நெருக்கடிகளையும் ஒரே மாதிரியாக நம்மால் கடக்க முடியாது. எதுவெல்லாம் நெருக்கடியிலிருந்து நம்மை வெளியேற உதவுகிறதோ அதுவே அதிகம் நினைவில் இருக்கும் ,அதுவே அதிகம் கொண்டாடப்படவும் செய்யும். இயற்கை ஒரு மாபெரும் ' Stress Buster ' ஆக இருக்கிறது. இயற்கையை நெருக்கமாக கவனிப்பதன் மூலமே இந்த வாழ்வு தரும் அழுத்தத்திலிருந்து வெளியேறலாம். நாம் செல்லும் பாதையின் ஊடாக கடந்து செல்லும் ஒரு பறவையின் நிழலுக்கு கூட நம் மனநிலையை மாற்றும் வல்லமை இருக்கிறது. இயற்கையின் ஒவ்வொரு செயல்பாடும் கவனிக்க வேண்டியதே. மழை ஒரு கொண்டாட்ட மனநிலையை எல்லோருக்கும் கொடுக்கிறது. மனதை சாந்தப்படுத்துகிறது. மழை பெய்யும் நேரத்தில் ஏதாவது செய்ய மிகவும் பிடிக்கிறது. மழைக்கு முந்தைய மனநிலையும் பிந்தைய மனநிலையும் வேறு வேறாகவே இருக்கின்றது. மழை மட்டுமல்ல , சூரியன் ,நிலவு , வானம் , மலை,மரம் ,செடி,கொடி,பூ ,காய் ,கனி , பறவைகள் ,விலங்குகள் என இயற்கையின் ஒவ்வொன்றுமே தனித்துவத்துடன் இயங்குகின்றன. இதை கவனிப்பதன் மூலமே நமக்கான சமாதானங்களைப் பெற முடியும்.


இயற்கைக்கு அடுத்ததாக கலை இருக்கிறது. பாடல்கள் கேட்டல் ,புத்தகம் வாசித்தல் ,எழுதுதல், திரைப்படங்கள், பயணங்கள் என ஏதோ ஒன்றை செய்வதன் மூலம் நமக்கான நெருக்கடிகளை விரட்ட முடியும். இதுவும் கடந்து போகும் என்பது எல்லாவற்றுக்கும் பொருந்தக்கூடியது தான். கடந்த போக எது துணை புரிகிறது என்று பார்க்க வேண்டும். இன்றைய சூழலில் இளையராஜாவும் ,வடிவேலுவும் இல்லையென்றால் நமக்கு பைத்தியமே பிடித்துவிடும். அந்த அளவிற்கு இந்த இருவரும் தமிழ் சமூகத்தை ஆக்கிரமித்துள்ளனர். தினசரி வாழ்க்கையின் ஊடாக நமக்கு பிடித்தமான ஒன்றைச் செய்யவும் நேரம் ஒதுக்க வேண்டியது அவசியமாகிறது. பொழுதுபோக்கு என வகைப்படுத்தினாலும் அதைச் செய்யும் போது நமக்கு மகிழ்ச்சி உண்டாக வேண்டும். அதானால் தான் ஆக்கப்பூர்வமான பொழுதுபோக்கை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவது முக்கியமானதாகிறது. 


மனம் விட்டு பேசுவதன் மூலமும் நெருக்கடியை கடக்கலாம். இன்றைய சூழலில் சரியான புரிதல் இல்லாதவர்களிடம் மனம் விட்டு பேசுவது மேலும் நெருக்கடியையே உருவாக்குகிறது. இன்னொரு மனிதரின் மனக்குறைகளை கேட்பதற்கு கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறோம். மிகவும் சிறிய காரணங்களுக்காக நிகழும் தற்கொலைகள் அதிகரித்துள்ளன. அதுவும் குழந்தைகளைக் கொன்றுவிட்டு தாங்களும் சாவது என்பது அதிகரித்து வருகிறது. அவர்கள் வாழ்வதற்கான நம்பிக்கையை நாம் கொடுக்கவில்லை. சமூகம் என்ற அமைப்பில் நிகழும் தற்கொலைகளுக்கு நாமும் மறைமுக காரணம் தான்.எல்லா மனிதர்களும் வாழ்வதற்கான நம்பிக்கையை சமூகம் கொடுக்க வேண்டும். மனித மனம் விசித்திரமானது தான். எப்போது எப்படி நினைக்கும் என்று தெரியாது தான். தற்கொலைகள் எங்குமே தான் நிகழ்கின்றன. ஆனால் தற்கொலைக்கான காரணங்கள் ஆராயபட வேண்டியவை, விவாதிக்கப்பட வேண்டியவை. எந்தச் சூழலிலும் அந்த எண்ணம் வராத வாழ்க்கையை வழி நடத்துவது தான் முக்கியமானதாகிறது. மரணம் எல்லோருக்கும் பொதுவென்றாலும் அது தானாய் நிகழ வேண்டும். 


இயற்கையையும், கலையையும் கொண்டாடுவதன் மூலமே வாழ்க்கையையும் கொண்டாட முடியும் !


மேலும் படிக்க:

பாலியல் சுரண்டல்கள் ஒழியட்டும் !

மனிதம் பரவட்டும் !


Monday, June 30, 2014

ரிமோட் கன்ரோல் வாழ்க்கை !

ரிமோட் கன்ரோல் செயல்பாடு மனித வாழ்வில் பெரும் பாதிப்பை உண்டு பண்ணியுள்ளது . இந்தப் பாதிப்பு நாம் உணரா வண்ணம் நிகழ்ந்துள்ளது. ரிமோட் கன்ரோலைப் பயன்படுத்தாமலே   தொலைக்காட்சி பார்த்தோம், கார் ஓட்டினோம் , வீட்டில் வாழ்ந்தோம் இன்னும் பல வேலைகள் செய்தோம் . அப்போதும் ஒரு வாழ்க்கை வாழ்ந்தோம் . ரிமோட் கன்ரோலைப் பல்வேறு விதங்களில் பயன்படுத்திக் கொண்டும் ஒரு வாழ்க்கை வாழ்கிறோம் .என்ன வித்தியாசம் ?

நாம் இயக்க நினைக்கும் பொருட்களை தொலைவிலிருந்தே உடனடியாக இயக்க ரிமோட் கன்ரோல் பயன்படுகிறது. நமது நேரத்தை மிச்சப்படுத்திய ஒரு கண்டுபிடிப்பாக இருந்தாலும் ஒரு விதத்தில் நம்மை சோம்பேறியாகவும் மாற்றிவிட்டது . விசயம் அதுவல்ல. இந்த ரிமோட் கன்ரோல் செயல்பாடு நம் வாழ்வை எவ்வாறு பாதித்துள்ளது என்பது சற்றே அதிர்ச்சி தரும் விசயம்.

நாம் பயன்படுத்தும் பலவிதமான ரிமோட்களில் அதிகம் பயன்படுத்தப்படுவது தொலைக்காட்சி ரிமோட் தான். தொலைக்காட்சி ரிமோட்டால் சண்டை வராத வீடுகளே இல்லை. ரிமோட் என்ன செய்கிறது ,நாம் அமுக்கிய பட்டனுக்கு உரிய வேலையை எந்தக் கேள்வியும் கேட்காமல் செய்து முடிக்கிறது. ரிமோட்டின் இந்த கேள்வி கேட்காத தன்மை நமக்கு மிகவும் பிடித்திருககிறது. பொதுவாகவே  தனது செயல் குறித்து மற்றவர்கள் கேள்வி கேட்பதை மனிதன் விரும்புவதில்லை. ஆகவே நமக்கு ரிமோட் மிகவும் பிடித்த பொருளாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை . இதில் பிரச்சனை எங்கு ஆரம்பிக்கிறது என்றால் ரிமோட் கன்ட்ரோல் மூலம் பொருட்கள் இயங்குவது போல் சக மனிதர்களும் எந்தக் கேள்வியும் கேட்காமல் தன் சொல்படி இயங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறபோதுதான்.

 தான் சொல்லும் வேலையைச் செய்யாதவர்கள் மீது எரிந்து விழுகிறோம் . தான் கொடுத்த வேலை குறித்து கேள்விகள்  கேட்பதும் பிடிப்பதில்லை. தான் சொல்லும் வேலையை எந்தக் கேள்வியும் கேட்காமல் மற்றவர்கள் செய்து முடிக்க வேண்டும் என்ற மனநிலை சமூகத்தின் அனைத்து தளத்திலும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது . அரசுகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், குடும்பங்கள் அனைத்திலும் இந்த ரிமோட் கன்ரோல் மனநிலை பெருகியுள்ளது. குறிப்பாக குடும்பங்களில் கணவன் மனைவியையோ அல்லது மனைவி கணவனையோ ரிமோட் போல இயக்க நினைப்பதாலேயே நிறைய பிரச்சனைகள் வெடிக்கின்றன.

இந்த ரிமோட் கன்ரோல் மனநிலை நம்மை நாமே அழித்துக் கொள்ள மிகச் சிறந்த வழி . " தி கிரேட் டிக்டேட்டர் " திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் சார்லி சாப்ளின் மேடையில் பேசும் பேச்சு , நாம் இயந்திரத்திற்கு எவ்வளவு மரியாதை தர வேண்டும் ,மனிதர்களுக்கு எவ்வளவு மரியாதை தர வேண்டும் என்பதை மிக தெளிவாக எடுத்துக் கூறியது . இயந்திரங்கள் எப்போதும் இயந்திரங்களே , அவற்றுக்கு மனிதத்தன்மை கிடையாது . எப்போதும் மனிதனை இயந்திரத்தோடு ஒப்பீடு செய்யக்கூடாது . சாப்ளின் தனது " மாடர்ன் டைம்ஸ் " திரைப்படத்தில் இயந்திரங்களின் செயல்பாட்டை அழுத்தமாக பகடி செய்திருப்பார் . ஒவ்வொரு நொடியும் இயந்திரங்களுடனே வாழ வேண்டிய சூழலில் நமது மனதிலும் இயந்திரத்தன்மை அதிகரித்தபடியே இருக்கிறது . மனிதத்தன்மை குறைய குறைய மனித இனத்திற்கு அழிவு தான் .

ரிமோட் கன்ரோல் மனநிலையையும் ,இயந்திரத்தன்மையையும் தொலைவில் வைப்போம் .மனிதத்தன்மையை மனதில் வைப்போம் !

மேலும் படிக்க :

மெதுவான எளிய வாழ்க்கை !

வாழ்க்கை ஒரு போராட்டம் !
............................................................

Wednesday, December 14, 2011

மெதுவான எளிய வாழ்க்கை !

வாழ்க்கை எளிதானது அல்ல . ஆனால் ,எளிய வாழ்க்கை என்பது அழகானது ,ஆனந்தமானது ,அன்பானது ,நிறைவானது . ஆடம்பரமிக்க ,பரப்பான ,வேகமான வாழ்கையை நோக்கியே நாம் தள்ளப்படுகிறோம் . எலிக்கதை ஒன்று சொல்வார்கள் " ஒரு ஊருல ஆயிரக்கணக்கான எலிகள் ஒரு தெருவில் வேகமாக ஓடிக்கொண்டிருந்தன .அந்தத் தெருவுல இருந்த வீட்டிலிருந்து ஒரு எலி எட்டிப்பார்த்து "எல்லோரும் எங்க போறீங்க " என்று கேட்டது .அதுக்கு தெருவுல போன ஒரு எலி, " எனக்குத் தெரியாது .எல்லோரும் போறாங்க நானும் போறேன் " என்று சொல்லிவிட்டு தொடர்ந்து ஓடியது . அந்தக்கூட்டத்தில் அந்த வீட்டு எலியும் சேர்ந்து கொண்டது " . அந்த வீட்டு எலியின் மனநிலையில் தான் நாம் இருக்கிறோம் .

பெரும்பாலான நேரங்களில் நம்முடைய வாழ்க்கை நம் கைகளில் இல்லை . சமூக அங்கீகாரம் தான் பெரிதாக பார்க்கப்படுகிறது .புகழ் மிக்க வாழ்க்கை எல்லோருக்கும் சாத்தியமில்லை . புரிந்துகொள்ளும் மனநிலை நமக்கில்லை . எந்நேரமும் பாதுகாப்பு வளையத்துக்குள் பவனி வரும் புகழ் மிக்க மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் இழப்பவை  ஏராளம் . சாதாரண மனிதர்களைப் போல அவர்களால் சுதந்திரமாக நடமாட முடியாது . புகழின் அளவைப் பொருத்து அவர்களுக்கு மனநெருக்கடி இருக்கும் .இந்த மனநெருக்கடியை சமாளிப்பவர்கள் புத்திசாலிகள் .எந்தத் தனி மனிதனையும் கடவுளாகவோ ,தலைவனாகவோ கொண்டாடக்கூடாது . நம் வாழ்க்கைக்கு நாம் மட்டுமே தலைவர்கள் ,கடவுள்கள் .

எல்லோருக்கும் ஒரே ஒரு வாழ்க்கை தான் . பணக்காரர்களுக்கும் ஒரு வாழ்க்கை தான் .புகழ் மிக்கவர்களுக்கும் ஒரு வாழக்கை தான் . ஏழைகளுக்கும் ஒரு வாழ்க்கை தான் . எல்லோருடைய வாழ்க்கையும் மரணத்தின் முன் சமம் . பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட வாழ்க்கை தான் எல்லோருக்கும் . உயிரினங்களின் பிறப்பு என்பது ஒரு மலர் மலர்வது போல எங்கும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது . கிராமத்தில் வசிப்பவர்கள் , விதவிதமாக நிகழும் மரணங்களை  மிக நெருக்கமாக நேரடியாக உணருகிறார்கள் கூடவே வாழ்வின் நிலையாமையையும் . மரணம் காற்றைப்போல எங்கும் நிறைந்திருக்கிறது .

எளிய மனிதர்களையும் ,எளிய வாழ்க்கையையும் கவனத்தில் கொள்ளாமல் ஓடிக்கொண்டே இருக்கிறோம் . சமூகத்தின் கீழ்மட்டத்தில் இருக்கும் மனிதர்களின் வாழ்க்கை அவ்வளவு அழகானது , மகிழ்ச்சியானது . சரி ,சுற்றுப்புறத்தை மறந்து நீங்கள் கடைசியாக எப்போது வாய்விட்டு சத்தம் போட்டு சிரித்தீர்கள் ? யோசிக்கிறோம் . ஆனால் , அவர்களுக்கு இது தினமும் சாத்தியம் . சிரிக்க மறந்து இயந்திரம் போலவே வாழ்கிறோம் . நாலு பேர் ,நாலு பேர் என்று சதா புலம்பிக்கொண்டு நமக்காக வாழாமல் நாலு பேர் முன்னாடி பேர் வாங்கவே வாழ்கிறோம் .

எளிய மனிதர்கள் ,எளிய மனிதர்களோடு வெகு எளிதில் நெருக்கமாகி விடுகிறார்கள் .பிச்சைக்காரர்கள் ,பிளாட்பாரவாசிகள் ,குப்பை பொருக்குபவர்கள் ,வீட்டுவேலை செய்பவர்கள் ,கூலித் தொழிலாளிகள்  இவர்களின் வாழ்க்கையை கவனித்துப் பாருங்கள் உண்மை புரியும் .நாம் ,சக மனிதர்களிடம் நாலு வார்த்தைகள் பேசுவதற்குக் கூட  எப்போதும் தயங்கிக் கொண்டே இருக்கிறோம் . இன்றைய நிலையில்  தினமும் சந்திக்கும் மனிதர்களிடம் நாலு வார்த்தைகள் பேசுவது தான் நாம் செய்யும் பெரிய  சேவை .இயல்பாக பேசுவதற்கும் ,சிரிப்பதற்கும் கூட யோசிப்பது கொண்டே இருப்பது என்ன மாதிரியான வாழ்க்கை ?

மூன்று தலைமுறைகளுக்கு மேல் யாரும் தொடர்ந்து பணக்காரனாகவோ  ஏழையாகவோ  இருந்ததில்லை . ஒரு சிலரைத் தவிர இது எல்லோருக்கும் பொருந்தும் .வாழ்வின் நிலையாமையை உணராமல்  சமூக அங்கீகாரம் ,சமூக அங்கீகாரம் என்று சொல்லிக்கொண்டு தெரிந்தோ தெரியாமலோ நிறைய பணம் ,சொந்த வாகனம் ,சொந்த வீடு என்று சேர்க்கவே விரும்புகிறோம் . சமூகத்தின் எந்த மட்டத்தில் வாழ்ந்தாலும் நமக்கான நிம்மதிக்கும்  ,மகிழ்ச்சிக்கும் நாம் மட்டுமே காரணம் .

எளிய வாழ்க்கை பற்றிச் சிந்திப்பவர்களுக்கு சமூகம் கொடுக்கும் பட்டம் ,தோல்வி அடைந்தவன் ,பணம் சேர்க்க வக்கில்லாதவன் , ஆடத் தெரியாதவன் (ஆடத் தெரியாதவனுக்குத் தான் தெரு கோணல் !) .தனது உழைப்பின் மூலம் தனக்குத் தேவையான உணவைத் தானே தேடி உண்ணும் எல்லா உயிரினங்களும் ( மனிதர்களும் )  வெற்றியாளர்கள் தான் . பணத்தை வைத்து வெற்றி தோல்வியை நிர்ணயிக்க வேண்டாம் .

சுய புலம்பல் :
மெதுவான வாழ்க்கை வாழவே விரும்புகிறேன் . எந்நேரமும் வேகமாகவும் பரபரப்பாகவும் இருப்பது பிடிக்கவில்லை .பெரும்பாலும்  நடந்து செல்லவே விரும்புகிறேன் ,தேவைபட்டால் மட்டும் வாகனத்தின் உதவியை நாடுகிறேன் . டவுன் பஸில் போகவே பிடிக்கிறது . ஒரு குறிப்பிட்ட சாதனைக்காக ,வெற்றிக்காக வாழ்க்கையை இழக்காமல் ஒவ்வொரு நாளாக வாழ விரும்புகிறேன் .

இந்த சிந்தனை இப்படியே தொடருமா ? அல்லது காலம் எனது சிந்தனையை மாற்றியமைக்குமா ? தெரியாது . எப்படி இருந்தாலும் காலத்தின் விளையாட்டை விடாமல் ரசிக்கிறேன் .யாராலும் ஆற்றமுடியாத அத்தனை துயரங்களையும் ஆற்றும் வல்லமை காலத்திற்கு மட்டுமே உண்டு . வருடங்கள் ஓடுகின்றன . ஆனால் ,காலம் மாறவில்லை . பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பும்  ஒரு நிமிடத்திற்கு அறுபது நொடிகள் தான் இன்றும் ஒரு நிமிடத்திற்கு அறுபது நொடிகள் தான் . மின்சாரமோ ,கான்கிரிட் வீடோ , நல்ல சாலையோ ,வாகனமோ,துரித உணவோ , சோப்போ ,பற்பசையோ ,அரிசி உணவோ  இல்லாமல் இயற்கையையும் தனது உழைப்பையும் மட்டுமே நம்பி வாழ்ந்த நம் முன்னோர்களின் ஒவ்வொரு நாளும் இருபத்து நான்கு மணி நேரங்களிலானது . இன்றைய நமது வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் அதே இருபத்து நான்கு மணி நேரங்களிலானது தானே . 

அடுத்த நொடி இந்த உலகம் தரப்போகின்ற அற்புதங்களும் ஆச்சரியங்களும் ஏராளம் !

மேலும் படிக்க :

உண்மையான கொண்டாட்டம் ! 

கண்ணீர் துளி - மனிதத்தின் சுவாசம் 

எது நிரந்தரம் ? 

வாழ்க்கை ஒரு போராட்டம் ! 
......................................................................................................................................................................   

Thursday, December 1, 2011

உண்மையான கொண்டாட்டம் !

குழந்தைகளின் உலகம் மிகவும் அழகானது ,மிகவும் அற்புதமானது ,மிகவும் ஆனந்தமானது ,மிகவும் கொண்டாட்டமானது . இதை உணராத மனநிலையில் நாம் இருக்கிறோம் . குழந்தைகளின் தினசரி வாழ்வில் நிறைய அன்பும் ,நிறைய பிணைப்பும் , கொஞ்சம் சண்டையும் கலந்திருக்கின்றன . குழந்தைகளை குழந்தைகளாக வளர நாம் அனுமதிப்பதே இல்லை . நான்கு வயதிற்குள் , தனக்கு வேண்டியதை தானே செய்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் .

அறிவியல் என்ன சொல்கிறது என்றால் , குழந்தையின் 14 வயது வரை நம் கைகள் அவர்களைத் தொட்டுக்கொண்டே இருக்க வேண்டும் . அப்போது தான் அந்தக் குழந்தை தனக்காக இவர் இருக்கிறார் என்று உணரும் .இல்லாவிட்டால்  தனக்காக யாரும் இல்லை என்று உணர்த்து அதற்கேற்றவாறு  நடந்து கொள்ளும் . அப்புறம் " எம்புள்ளை என் மேல பாசமாவே இல்லை " னு புலம்புவதால் ஒன்றும் நடக்காது .

" தொடுதல் " - ஒரு அற்புதமான நிகழ்வு . நெருக்கமானவர்கள் சந்திக்கும் போது தொட்டுக்கொண்டே பேசுங்கள் . தொடுதல் ,உங்களில் நிறைய மாற்றத்தை ஏற்படுத்தும் . குழந்தைகள் நம்மிடமிருந்து அதிக தொடுதலையும் ,அதிக நெருக்கத்தையும் எதிர்பார்க்கிறார்கள் . இதை செய்யாதே ,அதை செய்யாதே என்று நாளும் நம்மிடம் திட்டு வாங்கிக் கொண்டே இருக்கிறார்கள் ."பேசாமல் உட்கார்ந்து டிவி பார் " - என்று பணிக்கப்படுகிறார்கள் . அப்படி டிவி பார்க்கும் குழந்தை , ' நல்லபிள்ளை ' என்று பெயர் வாங்குகிறது .என்ன கொடுமை இது ? " எண்ணிலடங்காத விளையாட்டுகளால் நிரம்பியது தான் அவர்களின் உலகம் "  என்று எப்போது உணரப்போகிறோம் . 

"மண்ணுல விளையாடாதே! " என்று தடுத்து மண்ணோடு உருவாகும்  நெருக்கத்தைப்  பறிக்கிறோம் . இன்று , நகரங்களில் மண்ணைப் பார்ப்பதே அரிதிலும் அரிதாகிவிட்டது .எங்கெங்கு காணினும் கான்கிரிட் .வண்ணதாசன் சொன்னது போல " கையிலும் ,காலிலும் மண் படாத வாழ்க்கை ,ஒரு வாழ்க்கையா ? ".  செருப்பைத்  துறந்து ஒரு முறை மண்ணில் நடந்து பாருங்கள் ,ஒரு முறை மண்ணை கைகளால் அள்ளுங்கள் ,ஒரு முறை மண்ணில் உங்கள் கால்களைப் புதைத்து அமருங்கள் .மண் உங்களோடு பேசுவதை உணர முடியும் . நான் குறிப்பிட்டது ,கடல் மணலையோ அல்லது நம் புண்ணியவான்கள் எச்சி துப்பி வைத்திருக்கும் மண்ணையோ அல்ல .

" குழந்தைகள் மண்ணோடு விளையாடும் போது அவர்களின்  நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரிக்கிறது "- என்று புதிய ஆய்வு ஒன்று அறிவிக்கிறது . இனி மேலாவது குழந்தைகளை மண்ணோடு விளையாட அனுமதிப்பார்களா ? மண்ணில் விளையாட சொல்வதற்குக்கூட யாரோ ஒருவர் ஆய்வு நடத்த வேண்டியுள்ளது .எனது குழந்தைப் பருவத்தில் மழை பெய்து முடிந்த ஒவ்வொரு அடுத்தநாளும் அவ்வளவு அற்புதமானது . மழைநீர் ஓடிய தடம் அவ்வளவு அழகாக இருக்கும் .விதவிதமான நிறங்களாலான மண் துகள்கள் கலந்த ஈரமண்ணிலேயே கழியும் எங்களது காலையும் ,மாலையும் .  கொட்டாங்குச்சியில் ஈரமண்ணை நிரப்பி இட்லி சுட்டு விளையாடிய நாட்கள் இன்றும் பசுமையாக இருக்கின்றன . இன்றும் மழை பெய்கிறது , மழை நீர் ஓடுகிறது ,கொட்டாங்குச்சியும் இருக்கிறது .ஆனால் , நிறங்களாலான மண் துகள்களையும் ,இட்லி சுடும் குழந்தைகளையும் காணவில்லை .காரணம் , சிமென்ட் சாலை .

" கேள்வி கேட்பது " - மிகவும் அவசியாமான செயல் . குழந்தைகள் மட்டும் கேள்விகள் கேட்க அனுமதிக்கப்படுவதில்லை . குழந்தைகள் ,அபத்தமான , வேடிக்கையான , கற்பனையான ,எதார்த்தமான மற்றும் அறிவான கேள்விகளுக்குச்  சொந்தக்காரர்கள் .அவர்களின் சில கேள்விகளுக்கு மட்டுமே பதில்கள் கிடைக்கின்றன , பல கேள்விகளுக்கான பதில்கள் , அதன் எளிமையாலும் ,கடினத்தாலும் , நேரமின்மை என்று காட்டிக்கொள்வதாலும்  வீட்டிலும் ,பள்ளியிலும் மறுக்கப்படுகின்றன . தொடர்ந்து கேள்விகள் கேட்கும் குழந்தையே ஆரோக்கியமானது , உலகைப்  புரிந்து கொள்வதின் ஆரம்பமே கேள்விகள் என்று நாம் உணர வேண்டும் .      

பழைய கருப்பு வெள்ளைத் திரைப்படங்களில் குழந்தைகள் குழந்தைகளாக காட்டப்பட்டார்கள் .அவர்களுக்கென்று அவர்களுடைய பாணியில் தனிப்பாடல்கள் இருந்தன . நிறைய திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களாக குழந்தைகள் இருந்தனர் . அவர்களைச் சுற்றியே கதை நகர்ந்தது .இன்றைய திரைப்படங்கள் , குழந்தைகளைக் குழந்தைகளாக காட்டுவதில்லை , குழந்தைகளுக்கென்று தனிப்பாடல்கள் இல்லை,
குழந்தைகளை அபத்தமான நகைச்சுவைக்கு மட்டுமே பயன்படுத்துகின்றன .

டிவி பார்க்கவும் , கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் கேம்ஸ் விளையாடவும் மட்டுமே அனுமதிக்காமல் மண்ணிலும் மற்ற குழந்தைகளுடனும் விளையாட அனுமதிக்க வேண்டும் . இயற்கையை ரசிக்கவும் , இயற்கையின் மாறுதல்களைப்  புரிந்து கொள்ளவும் கற்றுத்தர வேண்டும் . மூன்று வயதிலேயே  படி! படி! என்று அதட்டாமல் வேண்டிய மட்டும் விளையாட அனுமதிக்க வேண்டும் . விளையாட துணை கிடைக்காத போது நாமே துணையாக மாறி அவர்களுடன் விளையாட வேண்டும் .

சமீபத்தில் ஒரு 5 வயது குழந்தை பாடிய பாடல் :

தக்காளி தக்காளி
எப்ப கல்யாணம்
நேத்து மத்தியானம்
யாரு வந்தாரு
ஐயர் வந்தாரு
என்னா கேட்டாரு
மோர் கேட்டாரு
என்னா மோர்
விச மோர்
என்னா விசம்
பாம்பு விசம்
என்னா பாம்பு
மலைப்பாம்பு
என்னா மலை
அண்ணாமலை !

14 வயது வரை அவர்கள் குழந்தைகள் தான் என்பதை நாம் உணர வேண்டும் . குழந்தைகளைத் தொடர்ந்து கவனித்துக்கொண்டே இருங்கள் ,நாம் கற்றுக்கொள்வதற்கு நிறைய விசயங்கள் கிடைக்கும் .நமது கொண்டாட்டமெல்லாம் கொண்டாட்டமே இல்லை .

ரரின்றா பிரகர்சா ( Rarindra Prakarsa ) , இயற்கையான சூழ்நிலையில் எடுத்த குழந்தைகளின் அற்புதமான படங்களைப் பார்க்க - http://photo.net/photodb/member-photos?user_id=2231437

குழந்தைகளின் கொண்டாட்டமே  உண்மையான கொண்டாட்டம் !

நன்றி - http://photo.net/
  
மேலும் படிக்க :

காங்கிரஸை அழிப்போம் ! 

நாமெல்லாம் குற்றவாளிகளே ! 
................................................................................................................................................................

Monday, July 25, 2011

வாழ்க்கை ஒரு போராட்டம் !

போராட்டத்தைச் சந்திக்காத எந்த உயிரும் பூமியில் வாழ முடியாது . நாம் பிறந்தது முதல் இறப்பது வரை போராட்டம் இருந்துகொண்டே தான் இருக்கிறது . ஏன் நாம் பிறப்பதே ஒரு போராட்டம் தானே . லட்சக்கணக்கான விந்தணுக்களுடன் சண்டையிட்டு , போராடி தான் நமக்கான இருப்பை , பிறப்பை உறுதி செய்துள்ளோம் .போராட்டத்தில் பிறந்து , போராட்டத்தில் வளர்ந்து , போராட்டத்தில் மடிவது தான் நம் வாழ்க்கை . நாம் இன்று போராட்டமே  இல்லாத வாழ்க்கையை மட்டுமே வாழ நினைக்கிறோம் . இது எப்போதும் சாத்தியமில்லை . பிறப்பதற்கே  லட்சக்கணக்கான அணுக்களை வென்ற நம்மால் வாழ்வதற்கான  போராட்டத்தில் வெல்ல முடியாதா என்ன ?!

வீதியில் நின்று போராடுவதும் , நாட்டுக்காக போராடுவதும் மட்டும் போராட்டம்   அல்ல . உயிர் வாழ்வதற்கான போராட்டம் தான் உண்மையான போராட்டம் . இது எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும் .கடந்த வாரம் Discovery யில் ஒரு நிகழ்வை ஒளிபரப்பினார்கள் . அலாஸ்காவில் வாழும் பனிக்கரடிகளையும் , சாலமன் மீன்களைப் பற்றிய ஒளிபரப்பு அது . பனி காலம் முடிந்த நிலையில் தங்களுக்கு வேண்டிய ( பிடித்தமான ) உணவைப்பெற நதிக்கரைக்கு வருகின்றன கரடிகள் . சாலமன் மீன்கள் , கரடிகள் இருக்கும் இந்த நதிப்பகுதியைக் கடந்தால் தான் தங்களது இனப்பெருக்கத்தை நடத்த முடியும் . இல்லையென்றால் கரடிகளுக்கு உணவாக வேண்டியது தான் . 

ஒரே நதிக்கரை இரண்டு இனங்களின் வாழ்க்கைப் போராட்டம் . கரடிகள் வருகின்றன மீன்களைப் பிடிக்கின்றன , பனிக்காலத்திற்கு வேண்டிய கொழுப்பைச் சேமிக்கின்றன . குட்டிகளுடன் வரும் பெண் கரடிகள் , குட்டிகளை ஒளித்து வைத்துவிட்டு ஆண் கரடிகள் இல்லாத இடத்தில் சாலமன் மீன்களை தனக்காகவும் , தன் குட்டிகளுக்காகவும் வேட்டையாடுகின்றன . ஆண் கரடி பார்த்து விட்டால் உறவுக்கு கட்டாயப் படுத்தும் . இடையுறாக இருக்கும் குட்டிகளையும் கொன்று விடும் . அதனால் பெண் கரடிகள், மிகவும் எச்சரிக்கையாக  இருக்க வேண்டிய காலகட்டம் இது . கரடிகளிடமிருந்து தப்பித்த சாலமன் மீன்கள் உகந்த இடத்திற்குச் சென்று  தங்கள் இனப்பெருக்கதைச் செய்கின்றன . பெண் மீன், தன் வால் பகுதியால் பள்ளம் தோண்டி  முட்டையிடுகிறது . ஆண் மீன், முட்டைகளின்  மீது  விந்துவைப் பீய்ச்சி அடிக்கிறது . உரிமையில்லாத மற்றொரு ஆண் மீனும் முட்டைகளின்  மீது விந்துவைப் பீய்ச்சி அடிக்கிறது . கொஞ்ச காலம் அடை காக்கும் பெண் மீன் பிறகு இறந்து விடுகிறது . பிறகு முட்டைகளிலிருந்து குஞ்சுகள் பிறந்து தங்கள் போராட்டத்தைத் தொடருகின்றன .

வாழ்க்கையில் நேர்மையாக இருக்க முயல்வதும் ஒரு போராட்டம் தான் . நேர்மையாக இல்லாமல் இருப்பதும் ஒரு போராட்டம் தான் . ஏனென்றால் எல்லா நேரங்களிலும் நேர்மையாக இருப்பதற்கான சூழலும் , எல்லா நேரங்களிலும் நேர்மையாக இல்லாமல் இருப்பதற்க்கான சூழலும் யாருக்கும் அமைவதில்லை .தங்கள் கொள்கைகளை நிலைநிறுத்திக்கொள்ள போராட வேண்டிய கட்டாயம் இருக்கிறது . அதற்கான பலன்கள் நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும் அவர்கள் மட்டுமே அடைவர் . உண்மைக்காக , நீதிக்காக , நேர்மைக்காக , உரிமைக்காக,மண்ணுக்காக  என்று நாம் போராட வேண்டியுள்ளது .

சமீபத்தில் இங்கிலாந்தில் 11 வயதில் கடத்தப்பட்டு ஒருவனிடம்  16 ஆண்டுகளாக செக்ஸ் அடிமையாக இருந்து மீட்கப்பட்ட  பெண்ணிடம் , "எப்படி இவ்வளவு கொடுமைகளையும் சகித்து கொண்டீர்கள் ? " என்று கேட்டதற்கு " எப்படியாவது உயிர் பிழைக்க வேண்டும் என்ற நினைப்பு தான் காரணம் . அவ்வப்போது நான் இருக்கும் கொடுமையான சூழ்நிலையை மறந்து விடுவேன் " என்று கூறினார் . இத்தனைக்கும் சரியான உணவு கிடையாது . 14 வயதிலேயே தனது பிரசவத்தை  தானே பார்த்துக்கொண்ட கொடுமை வேறு . தன் குழந்தை தனக்கு மிகவும் ஆறுதலாக இருந்ததாகவும் குறிப்பிட்டார் . மறதி தான் ,நம் வாழ்கையின் பெரும் துயர்களை மறக்கச் செய்கிறது .எத்தனையோ போராட்டங்கள் இருந்தாலும் உயிர் வாழ்வதற்கான போராட்டம் ,மற்ற அனைத்து போராட்டங்களையும் வென்று விடுகிறது .

நல்லதை நினைத்தே போராடுவோம் !



முகப்பு 


...............................................................................................

Monday, July 4, 2011

அற்புதங்களும் ஆச்சரியங்களும் !

எண்ணிலடங்காத அற்புதங்களும் ஆச்சரியங்களும் நிறைந்தது தான் நம் வாழ்க்கை . ஒவ்வொரு நொடியும் அற்புதம் தான் . நம் வாழ்க்கை, மீண்டும் சந்திக்க முடியாத நிமிடங்களில் அடங்கியிருக்கிறது . ஆனால் , இதை எல்லா நேரங்களிலும் உணர முடியாத நிலையில் தான் நம் பயணம் இருக்கிறது . நம்மைச்சுற்றி தினமும் அற்புதங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. சமீபத்திய ஆச்சரியம் பத்மநாபசாமி கோவில் .

அனந்த பத்மநாபசாமி கோவில் , கேரளாவில் புகழ்பெற்ற விஷ்ணு கோவில் .இது , விஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் ஒன்று . இதுவரை இந்தக் கோவிலைப்பற்றி தெரியாதவர்கள் கூட இப்போது தெரிந்து கொண்டிருப்பர் . புதையலைத் தேடி அலையும் பல கௌ-பாய் படங்கள் பார்த்திருப்போம் . அதையெல்லாம் மிஞ்சும் வகையில் இருக்கிறது இந்தக்கோவிலின் பாதாளப் புதையல் . அள்ள அள்ள தங்கம் . ஓரே வாரத்தில் உலகின் பணக்கார கடவுளான திருப்பதி பாலாஜியின் சொத்து மதிப்பை மிஞ்சி விட்டார் இந்த பத்மநாபசாமி.
அந்தப் பாதாள அறையில் இறுதி 8 இடங்களுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது  . இன்னும் எவ்வளவு அதிசயங்கள் வெளியே வருமோ ? தெரியாது . 
இன்றும் தஞ்சை பெரிய கோவிலின் அதிசயங்கள்  தொடர்ந்து கொண்டிருக்கின்றன . நம் முன்னோர்களின் திறமையைக் கண்டு ஒவ்வொரு நாளும் பெருமை கொள்கிறோம் . எந்தவிதமான தொழில்நுட்ப வசதியும் இல்லாத  காலகட்டத்தில் அவர்களால் இவ்வளவையும் செய்ய முடிந்திருக்கிறது . வாழ்க்கையைக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர் . அடுத்த வாரமே இன்னொரு கோவில் முதலிடத்தைப் பிடித்தாலும் பிடிக்கலாம் .

வரலாறு மிகவும் சுவாரசியமானது . நாம் இன்று பயன்படுத்தும் அநேக பொருட்கள்  கடந்த 100 வருடங்களுக்குள் கண்டுபிடிக்கப் பட்டவையாக இருக்கும் . அடுத்த 100 வருடங்கள் கழித்து இவை கண்டிப்பாக இருக்காது . ஆனால் , ஒரு சில பொருட்கள் காலம் கடந்தும் தனக்கான இடத்தைப் பெற்றுக்கொள்ளும் . அந்தப் பொருட்களின் நீட்சி தான் வரலாறாக மாறுகிறதோ என்னவோ ! . மண்ணோடு மண்ணாக கலந்துவிட்ட பொருட்களுக்கு வரலாறு இல்லை . 

நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும்  கொண்டாடப்பட வேண்டியது . ஆனால் , நமக்கு அந்த கொண்டாட்ட மனநிலை தொடர்ந்து வாய்ப்பதில்லை . நம் நாகரீக வாழ்க்கையில் தொடர்ந்து கொண்டாட்ட மனநிலையில் இருப்பது மிகவும் கடினம் . நாகரீகம் தோன்றாத காலத்தில் இந்த கொண்டாட்ட மனநிலை அதிகமாக இருந்து இருக்கும் . நாகரீகம் தோன்றியவுடன் பிரிவினைகள் அதிகமாகி விட்டன . வலுத்தவன் மட்டுமே எல்லா நலன்களையும் பெற்றான் . மன்னர் ஆட்சிக்காலத்தில் மன்னர்களுக்கு மட்டுமே அதிகபட்ச சுதந்திரம் இருந்தது . ஜனநாயக ஆட்சியில் மக்களாகிய நமக்குத்தான் அதிக உரிமை இருக்க வேண்டும் . ஆனால் , உண்மையில் நிலைமை  அப்படியில்லை . இன்றும் ஏறக்குறைய மன்னராட்சி போலவே இருக்கிறது நம் ஜனநாயகம் . ஒருவேளை இது மன்னராட்சியின் நீட்சியாக இருக்குமோ !

நம் வாழ்க்கை ஆச்சரியங்கள் நிறைந்தது . நம் சற்றும் எதிர்பாராத சூழ்நிலையில்  நமக்குப்பிடித்த விசயம் நிகழும் போது நம் மனம் துள்ளிக் குதிக்கிறது . உதாரணமாக, அசாதாரண சூழ்நிலையில்  நமக்கு மிகவும் பிடித்த , நீண்ட நாட்களாக கேட்க வேண்டும் என்று எண்ணிய ஒரு பாடல் ஒலிக்கும் போது நம்மை அறியாமலேயே நாம் கொண்டாட்ட மனநிலைக்கு இடம் பெயர்ந்து  விடுகிறோம் . வாழ்க்கை ஒரு முறை தான் . அதனால் , முடிந்த அளவுக்கு  வாழ்க்கையைக் கொண்டாடுவோம்.

அடுத்த நொடி இந்த உலகம் தரப்போகின்ற  அற்புதங்களும் ஆச்சரியங்களும் ஏராளம் !

மேலும் படிக்க  :



..........................................

Monday, March 14, 2011

பணம் மட்டும் தான் வெற்றியின் அளவீடா ?

இன்று , ஒரு மனிதனின் வெற்றியும் தோல்வியும் பணத்தை வைத்தே அளவிடப்படுகின்றன . பண்ட மாற்று முறைக்கு மாற்றாக உருவாக்கப்பட்டது தான் பணம் . பண்ட மாற்றுமுறையில் ஓரளவிற்கு எல்லோருக்கும் எல்லாம் கிடைத்தது . ஒரு குறிப்பிட்ட பண்டம் மற்றும் உற்பத்தி செய்தால் போதும் . அதை வைத்து மற்ற பொருட்களை வாங்கி விடலாம் . ஆனால், அதற்காக அந்த குறிப்பிட்ட பண்டத்தை மட்டுமே அவர்கள் அளவுக்கு அதிகமாக சேர்த்து வைக்க வில்லை , பதுக்கவில்லை .இன்று பணம் என்ற ஒன்றை வைத்துதான் நாம் எல்லாவற்றையும் வாங்குகிறோம் . இந்தப் பணத்தை நாம் பெற கடுமையாக உழைக்க வேண்டும் . ஒரு குறிப்பிட்ட பண்டத்தை
 விளைவித்தாலோ , உருவாக்கினாலோ அதை விற்று பணமாக மாற்றி தான் நாம் வேறு பொருள் வாங்க முடியும் . பண்டத்தை அதிக நாள் சேர்த்து வைக்காத நாம் பணத்தை மட்டும்  அதிகளவு , அதிகநாள்  சேர்த்து வைப்பது எதற்காக ?

பணம் எல்லோருக்கும்  தேவை தான் . தேவையில்லை என்று சொல்ல முடியாது . இன்று , நாம் எந்த காரணத்திற்காக  அதிகமான பணத்தைச்  செலவு செய்கிறோம் , ஒன்று மருத்துவம் சார்ந்த செலவு , இன்னொன்று  கல்விக்கான செலவு . சரியான உணவு பழக்கம்  மற்றும் சரியான புரிதல் இருந்தால் மருத்துவத்துக்கும் கல்விக்கும் ஆகும் செலவை குறைக்க முடியும் . உயிர் வாழத்தேவையான உணவுக்காக கூட நாம் அதிக பணம் செலவழிப்பதில்லை .இதையெல்லாம் விட இன்று வீண் ஆடம்பரங்களுக்குத் தான் அதிகம் செலவு செய்கிறோம் . நாம் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை , நம்மை சுற்றி பலவேறு விதங்களில் சுற்றி வரும் விளம்பரங்கள் எளிதாக கொள்ளை அடிக்கின்றன . விளம்பரங்களில் வரும் பொருட்களை வாங்குவதற்காக மடாகவோ , கழுதையாகவோ உழைக்க ஆரம்பித்து விடுகிறோம் . அடுத்தடுத்து  நம் கண்ணில் படும் விளம்பரங்கள் நம்மை மாடகவே மாற்றி விடுகின்றன . மனிதனாக பிறந்து , மாடாக வாழ ஆரம்பித்து விட்டோம் .


நமது உண்மையான  , நிலையான மகிழ்ச்சிக்கு வீண் ஆடம்பரங்கள் என்றுமே துணை புரிந்ததில்லை . நம் மனதை இளகுவாக்குவதும் , வாழ்க்கை என்பதே கொண்டாடபடுவதற்குத் தான் என்று உணர்த்துவதும் பயணங்கள் தான் . ஆனால் , நம் வாழ் நாளில் பயணத்துக்காக என்று எவ்வளவு செலவழிக்கிறோம் ? . மிகவும் குறைந்த அளவு தான் . நம்மைப்  பொருத்தவரை பயணங்களுக்கு ஆகும் செலவு வெட்டிச் செலவு . ஆனால் , பயணங்கள் அற்புதமானவை . பல்வேறு விதமான மனிதர்கள்  ,பழக்க வழக்கங்கள் , இயற்கையின் அற்புதங்கள் , நினைவுச் சின்னங்கள்  என்று நாம் பயணங்களின் மூலம் அறிந்து கொள்வது ஏராளம் . ஆக மொத்தம் நாம் வாழ அளவான பணம் இருந்தால் போதும்  . அளவான பணம் மட்டும் இருந்தால் கவலைகள் குறையும் , நிம்மதி பெருகும் .  அதே சமயம் , அளவான பணம் மட்டுமாவது இருக்குமாறு   பார்த்துக் கொள்ள வேண்டும் . அதில் கொஞ்சம் பயணங்களுக்காக பயன்படட்டும் . அதிகமாக சம்பாதிக்கும் பணத்தை பயணங்களுக்காகச்   செலவழியுங்கள் .

ஒருவன் , எவ்வளவு கெட்டவனாக இருந்தாலும் , எவ்வளவு கெட்ட பழக்கங்கள் இருந்தாலும் அவனிடம் பணம் மட்டும் இருந்தால் இவை அனைத்தும் மறைந்து கொள்கின்றன . அவன் , நம் சமூகத்தின் உயர்ந்த மனிதனாக கருதப்படுகிறான் . " பணம் பந்தியிலே ....! குணம் குப்பையிலே ...!" . பணமில்லாதவன் நிலைமை சொல்லித் தெரிய வேண்டியதில்லை . பணம் சம்பாதிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும் . பதுக்காமல் செலவழிக்கவும் தெரியவேண்டும் . வாழ்க்கையில் பாதிக்கும் மேற்ப்பட்ட நாட்களை பணத்தைச் சேர்ப்பதிலேயே தொலைத்து விடுகிறோம் .

நம் வாழ்க்கை முடியும்போது எவ்வளவு சேர்த்து வைத்தோம் என்று இருக்கக் கூடாது .

எவ்வளவு வாழ்ந்தோம்  என்று தான் இருக்க வேண்டும் ..!

வாழ்க்கை கொண்டாடுவதற்கே..!

மேலும் படிக்க :




 ...............................................

Saturday, January 22, 2011

கண்ணீர் துளி - மனிதத்தின் சுவாசம்

கண்ணீர் சிந்தாத மனிதன் என்று பூமியில் யாரும் இல்லை . நம்  வாழ்க்கைப்  பயணத்தின் தொடக்கம் முதல் முடிவு வரை  பல்வேறு சூழ்நிலைகளில் நம் கண்களிலிருந்து கண்ணீர் துளிகள் சிந்துகின்றன . சிறு பிள்ளைகள் தாங்கள் கேட்டது கிடைப்பதற்காக அழுகின்றன. காரியம் சாதித்து கொள்வதற்காக ஒரு சில பெண்கள் கண்ணீரைப் பயன்படுதுகின்றனர் . அப்பா அடிக்கும் போது பிள்ளைகள் அழுகின்றன .தாங்க முடியாத இழப்புகள் நம்மை கதறி அழச்செய்கின்றன . இழப்புகள் என்பவை மனிதனாக இருக்கலாம் , மனித உறவாகவும் இருக்கலாம் .கண்ணில் விழும் சிறு தூசியும் நம்மை கலங்க வைக்கிறது . நாம் நினைத்ததை அடைய முடியவில்லை என்ற ஆற்றாம்மை நம்மை துடிக்க வைக்கிறது . குருஞ்சிப் பூ  மலர்வதை போல எப்போதாவது
கண்ணீர் நமது அதிகபட்ச மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது . அது ஏன் ? ஆஸ்கார் விருது வாங்கும் போது மட்டும் ஏறக்குறைய எல்லா நடிகைகளும் கண்களிலும் கண்ணீர் வருகிறது . உழைப்பின் பயன் !

 நீண்ட நாள் பிரிந்திருந்த இரு உறவுகள் சந்திக்கும் போது வார்த்தைகளுக்குப் பதில் கண்ணீர் தான் முதலில் வருகிறது . நம் இனம் நம் கண் முன்னே அழிந்த போதும் நம்மால் கதறி அழ மட்டுமே முடிந்தது தாங்க முடியாத வேதனை . இந்திய அரசியல்வாதிகள் கட்சியை வளர்க்கவும் , குடும்பத்தை வளர்க்கவும் மட்டுமே போராடுகின்றனர் .ராகுல் காந்தியும் கட்சியை வளர்க்க மட்டுமே முயற்சிக்கிறார் . ஜாதி மத பேதங்களுக்கு மத்தியில் கட்சி சார்ந்த பேதமும் நம்மிடம் அதிகம் உள்ளது . பேதங்கள் களையப்பட வேண்டும் . மக்கள் நலன் சார்ந்த அரசியல் உருவாக கடுமையாக உழைக்க வேண்டிய காலகட்டம் இது . நல்லது யார் செய்தாலும் பாராட்டுவோம் , தப்பு யார் செய்தாலும் தட்டி கேட்ப்போம் . எங்களின் ஏமாளித்தனத்தைப் பார்த்து சிரிக்கும் உங்கள் பேனர்கள் வேண்டாம் . எங்கள் அழுகையை நிறுத்துங்கள் இல்லாவிடில் காலம் உங்களை அழவைக்கும் .

 உடல் அல்லது மனம் சார்ந்த தாங்கமுடியாத வலி தான் நம்மை அதிகம் கண்ணீர் சிந்த வைக்கிறது . எத்தனையோ வகையில் நாம் கண்ணீர் சிந்தினாலும் அதை இரண்டு வகையில் பிரிக்கலாம் . ஒன்று நமக்காக அழுவது , இன்னொன்று மற்றவர்களுக்காக அழுவது . கண்ணீர் துளிகள் நம் துன்பத்தைக் கரைக்கின்றன . காலம், நமது எல்லாவிதமான துன்பங்களையும் துயரங்களையும்  துடைத்து விடுகிறது . தற்காலிக ஆறுதல் கண்ணீர் மட்டுமே , நமது கண்ணீரும், நமக்காக மற்றவர்கள் சிந்தும் கண்ணீரும் . எதற்கும் கலங்காத மனம் வேண்டும் . அன்பிற்காக நாம் கலங்கியே தீர வேண்டும் .

 ஊடகங்களின் புண்ணியத்தால்  இன்று பரவலாக ஒரு வியாதி பரவி வருகிறது . யாருக்காகவும் எதற்காகவும் கலங்கக் கூடாது என்ற மாயை உருவாகி உள்ளது . மற்றவர்கள் தப்பாக நினைப்பார்கள் என்ற காரணத்திற்காக அழுவதற்கு மிகவும் யோசிக்கிறோம்  . அழுவது உணர்ச்சி சார்ந்த விசயம் . எந்த உணர்ச்சியையும் அதிகமாக கட்டுப்படுத்தும் போது பின்விளைவுகள் பெரிதாக இருக்கும் . முடிந்த வரை அழுகையை கட்டுப்படுத்தாதீர்கள் . அழுவது நல்லது நம் கண்களுக்கும் , நம் மனதிற்கும் . கண்களில் உள்ள அழுக்குகள் வெளியேற கண்ணீர் தேவை . நம் மனதின் அழுக்குகளும் , உடலின் வலிகளும் வெளியேறவும் கண்ணீர் தேவை .

கடந்த முப்பது நாட்களுக்குள் இரு முறை அழுதேன் . இரு முறையும் படம் பார்க்கும் போது அழுதேன் . படம் பார்க்கும் போது அழுவது கோழைத்தனம் என்ற மனப்பாங்கு நம்மை மிகவும் அழுத்திவைத்திருக்கிறது . அழ வேண்டும் என்று தோன்றினால் அழ வேண்டியது தானே , அது எப்போது என்றால் என்ன ?.கடந்த மாதம் நானும் என் நண்பனும் அம்பத்தூர் ராக்கி திரையரங்கத்தில் " நந்தலாலா " படம் பார்த்தோம்  . படத்தின் முடிவு காட்சியில் இருவரும் அழுது விட்டோம் . ஆனால் படம் பார்க்கும் போது அவன் அழுதது தெரியாது. வெளியில் வந்ததும்  "படத்திற்கு கூட்டி வந்து  ரொம்ப நாளைக்கு அப்புறம் என்னை அழ வச்சுட்ட "  என்று சொன்னான் . நண்பனின் பெற்றோரிடம்  நாங்கள் படம் பார்க்கும் அழுததை அவன் சொன்னான் . "இத்தன வயசுக்கப்புறம் படம் பார்த்து அழுதேன்னு சொல்றீங்க என்ன காதல் படமா" என்று நண்பனின் அப்பா கேட்டார் . "இல்லை அன்பையும் பாசத்தையும் பற்றிய படம் " என்றோம். "அப்ப அழ வேண்டியது  தான்" என்று அப்பா சொன்னார் . "அழ வைக்கிற மாதிரி எல்லாம் தமிழில் படம் வருதா. முன்னாடியே தெரிஞ்சிருந்தா நானும் படத்திற்கு வந்திருப்பேன் "என்று அம்மா சொன்னார் . அன்பு நம்மை அழ வைத்து விடுகிறது .

 இரண்டாவது முறை நான் அழுதது " அங்காடி தெரு " படம் பார்த்த போது . படம் வெளிவந்த போது பார்க்க முடியவில்லை . திருட்டு DVD , இணையத்தில் பார்த்து நான் திருடனாகவும் மாறவில்லை . ஜனவரி 1 அன்று கலைஞர் தொலைக்காட்சியில் தான் பார்த்தேன் . படம் பாதி முடிந்த போது எனக்குள் எந்த பாதிப்பும் இல்லை . யாரும் யோசிக்காத கதைக்களம் என்று மட்டும் நினைதேன் . ஆனால் , படம் முடிந்த பிறகு தாங்க முடியாத வலி ஏற்பட்டது . கண்களிலிருந்து கண்ணீர் துளிகள் சிந்தின . சாதாரணமான  மனிதர்களின்  வாழ்க்கையை படம் உணர்த்தியது .

 கடந்த வாரம் தொலைக்காட்சியில் ஒரு விபத்து பற்றிய செய்தி  ஒளிபரப்பாகிக்  கொண்டிருந்தது . அறுபது வயதுடைய எங்கள் பெரியம்மா சொன்னார் " முன்பெல்லாம் துயர சம்பவங்களைப் பார்க்கும் போது அழுகை வரும் , இப்போ மறத்துப்போச்சு" . இது தான் இன்றைய நிலை . அளவுக்கு அதிகமான துன்பங்களையும் , துயரங்களையும் ஊடகங்களில் பார்த்து பார்த்து நம் மனம் மறத்துப் போய்க்கொண்டே இருக்கிறது . யாருக்கு எது நடந்தால் என்ன ? எனக்கு என் வாழ்க்கை மட்டுமே முக்கியம் என்ற மனப்பாங்கு அதிகரித்து விட்டது . இது காட்டு விலங்குகளுக்குப் பொருந்தும் . சமூக விலங்கான நமக்கு நம் நலனைப் போல மற்றவர் நலனும் முக்கியம் . அதனால் தான் நாம் மற்றவர்களுக்கு எதைச் செய்கிறோமோ அது தான் நமக்கு திரும்பி வருகிறது . நாம் மற்றவர்களுக்குச் செய்வது நல்லதாகவே இருக்கட்டும் . நமக்கும் நல்லதே திரும்பி வரட்டும் .

கண்ணீர் துளிகளால்  மனிதம் உயிருடன் இருக்கட்டும் !

மனசு மறத்துப்போகாமல் இருக்க கண்ணீர் சிந்துங்கள் !

கண்ணீர் நல்லது !

மேலும் படிக்க :



..............................................

Tuesday, October 19, 2010

நாமெல்லாம் யார் ?

நாமெல்லாம் யார் ? அகதிகள். ஆம் , நாமெல்லாம் பஞ்சம் பிழைக்க வந்தவர்கள். ஆப்பிரிக்காவிலிருந்து கிளம்பி வாழ வழி தேடி நாடோடிகளாக திரிந்து , கால மாற்றத்தால் பல்வேறு இன, மொழி, மத , ஜாதி பேதங்களுடன் நம் வரலாற்றை மறந்து நமக்குள்ளே பகைமையுடன் வாழ்பவர்கள் தானே நாம். இன்று நம்மால் இந்து , முஸ்லீம் , கிறித்துவன், பவுத்தன்.... என்று பிரித்து உணரப்படும் எல்லோருக்கும் ஒரே மூதாதையன் , ஆப்பிரிக்கன்.

            ஒரு வேளை நம் எல்லோருக்கும் போதுமான உணவும் , உறைவிடமும் , பாதுகாப்பும் இருந்திருந்தால் நாம் ஆப்பிரிக்காவைத் தாண்டி இருக்க மாட்டோம் . மனித இனமும் பூமியெங்கும் பரவி இருக்காது. இனப்பெருக்கத்தின் காரணமாக மனித இனம் ஒரே இடத்தில் வாழ முடியாத சூழல் உண்டானது . உணவுக்காகவும் , இடத்துக்காகவும் , பாதுகாப்புக்காகவும் வேறு இடம் தேடி ஓட ஆரம்பித்த காரணத்தால் இன்று பல்வேறு பேதங்களுடன் வாழ்ந்து  கொண்டிருக்கிறோம்.

              இன்று, நமக்குள்ளே (மனிதர்களுக்குள்ளே) எத்தனை போராட்டங்கள் ,
உரிமைக்கான போராட்டம் ,நாடுகளின்எல்லைகளுக்கான போராட்டம் , தண்ணீருக்கான போராட்டம் என்று ஏகப்பட்ட போராட்டங்கள். என்று ஓயுமோ இத்தகைய போராட்டங்கள்...!?

               இன்றும், பிழைப்புக்காக சொந்த ஊரை விட்டு இடம் பெயர்ந்து நாடோடிகளாக பெரிய நகரங்களில், வெளிநாடுகளில் திரிந்து கொண்டிருக்கிறோம். நாமெல்லாம் நாடோடிகள் தான். பேதங்களை மறப்போம் , மனிதனாக வாழ்வோம் . மத்தவர்களை வாழவிடுவோம்.

வாழ்க்கை வாழ்வதற்கே !!!
.......................................

Tuesday, July 20, 2010

எது நிரந்தரம் ?

வாழ்க்கை எப்பொழுதும் அழகானது. அந்த அழகான வாழ்க்கையில் எதுவுமே நிலையானது இல்லை. நித்தமும் மாறிக்கொண்டே இருக்கின்றது. இவ்வாறு மாறுகின்ற உலகில் மாறாமல் இருப்பது எது?. "அன்பு" மட்டுமே உலகில் மாறாமல் இருகின்றது.அன்பில் கிடைக்கும் சக்திக்கு நிகரான மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை . அன்பு என்ற அந்த அற்புத மருந்து தான் இந்த உலகை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது . அந்த அன்பின் அளவு என்று குறைகிறதோ அன்று இந்த உலகம் அழிந்துவிடும் .

"தாயிற் சிறந்த கோவிலுமில்லை , தந்தை சொல்மிக்க மந்திரமில்லை ".ஆம் ,தாயை விடச் சிறந்த கோவில் இல்லை , ஏனெனில் அன்பின் பிறப்பிடம் தாய்தான் . உலகில் வாழும் எந்த ஜீவராசியாக இருந்தாலும் அன்னை இல்லாமல் உருவாக முடியாது . நாம் முதன் முதலில் தாயிடம் இருந்துதான் அன்பைப் பெறுகிறோம் . தாயின் அன்புக்கு ஈடு இணை இந்த உலகில் எதுவுமில்லை . நம் வாழ்க்கையில் ஆயிரம் உறவுகள் வரலாம் , போகலாம் . ஆனால் , என்றென்றும் நிலையான அன்பு தாயிடம் இருந்து மட்டுமே கிடைக்கும் . எந்த ஒரு சூழ்நிலையிலும் தன பிள்ளையை விட்டுக்கொடுக்காமல் வாழும் நடமாடும் தெய்வம்தான் " அன்னை " .


அன்பு ஓர் உணர்வு எனச் சொல்வது தவறு . அன்பு என்பது இறைவனின் முகம் .இறைவனை , அன்பின் மூலமே காண முடியும் . " அளவற்ற அருளாளனும் ,நிகரற்ற அன்புடையோருமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் " எனத் துவங்கும் குர் ஆன்-னும் , " அன்பே சிவம் சிவமே அன்பு " எனும் சிவவாக்கியமும் , " எளியவர்களுக்கு அன்பு செய்கிறவர்கள் எனக்கே அதைச் செய்கிறார்கள் " என்ற பைபிளின் வாசகமும் , இறைவனின் முகம் அன்பு என்பதற்கான ஆதாரங்கள் .


அன்புக்கு நோயைக் குணமாக்கும் சக்தி உண்டு . பல ஆராயச்சிகளுக்குப்பின் , " அன்புக்கு நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் உண்டு " என ஆதாரப்பூர்வமாக அறிவிக்கிறது , உடல் மன மருத்துவத் துறை ( Mind Body Medicine Department ). அன்னையின் முத்தம் , தோழியின் கைக்ர்ப்பு , மற்றவர்களின் அன்பு நிறைந்த வார்த்தைகள் , இதையெல்லாம் விட ஒரு குழந்தையின் பாசக்குரல் நம்முள் நல்ல மாற்றங்களை ஏற்ப்படுத்துகிறது . அந்த மாற்றம் தான் அன்பின் மருத்துவ குணம் . அதனால்தான் எத்தனை சண்டைகள் இருந்தாலும் ஒரு குழந்தை இருக்கும் வீடு எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறது .


இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் அன்பைக் கொடுப்பதற்கும் , அன்பைப் பெறுவதற்கும் நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டே இருகின்றோம். அன்பைப் பணத்தால் வாங்க முடியாது . அது , தகுதியானவர்களுக்கு இலவசமாக கொடுக்கப்படுகிறது . அன்பு , கொடுக்கக் கொடுக்கக் கூடும் , அது என்றும் குறைவதில்லை . அன்பு குறையுமிடத்தில் தான் தவறுகள் பெரிதாகத் தெரிகின்றன . இன்று , மனிதன் இயற்கையின் மீது வைக்கும் அன்பு குறைந்து விட்டது . அதனால் தான் இன்று , சுனாமி , சூறாவளி ,புயல் எல்லாம் அதிகரித்து விட்டது .  அன்பு உள்ளவரை மட்டுமே இந்த பூமி இயங்கும் . பண, மத, அதிகார, இன பேதங்களை மறந்து அன்பு செய்வோம் வாருங்கள்.

சக மனிதனை மனிதனாய் மதிப்போம் !  உயர்வோம். !.

அன்பு ஒன்று மட்டுமே உலகை வாழவைக்கும் !
............................................

Saturday, January 17, 2009

வாழ்க்கை ஒரு சுற்றுலா

                                       
வாழ்க்கை ஒரு சுற்றுலா. சுற்றுலா வந்த இடத்தில் சுற்றுலாவைக் கொண்டாடாமல் கவலைப்  படுவது எதற்காக ?. எதற்கும் கவலை வேண்டாம். உங்கள் மனதுக்குச்  சரி என்று பட்டதைச்  செய்யுங்கள்.
                
                   வாழ்க்கை ஒரு முறை தான் அதை உங்கள் விருப்பப்படி வாழுங்களேன்! . பயம் இல்லை , கண்ணீர் இல்லை , கவலைகள் இல்லை , மகிழ்ச்சியாய் இருங்கள் மற்றவர்களையும் மகிழ்ச்சிப்படுத்துங்கள்..............

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms