Friday, April 8, 2011

சூரியன் - உலக சக்திகளின் மையம்

சூரியன் இல்லாத உலகத்தை நம்மால் கற்பனை செய்யவே முடியாது . உலக சக்திகளின் பிறப்பிடம் சூரியன் தான் . சூரிய ஒளி பூமியை வந்தடைய 8 நிமிடங்கள்  20 வினாடிகள் ஆகின்றன . இந்த ஒளியிலிருந்து தான் தாவரங்கள் ஒளிச்சேர்க்கை மூலம் உணவு தயாரிக்கின்றன . ஒளிச்சேர்க்கை மட்டும் நின்று விட்டால் நம் பூமியில் உயிரினங்கள் வாழவே முடியாது . எல்லா உயிரினங்களுக்கும் தேவையான ஆற்றலின் மூல வடிவம் ஒளிச்சேர்க்கை தான் . உயிரினங்களுக்கு தேவையான உணவும் , ஆற்றலும் தாவரங்களையே சார்ந்தே உள்ளன . ஏன் நாம் சுவாசிக்க தேவைப்படும் ஆக்சிஜன் தாவரங்களில் இருந்தே கிடைக்கிறது . சூரிய ஆற்றல் , பூமியின் அனைத்து உயிர்களின் ஆதார ஆற்றல் ஆகும்.. மேலும் பூமியின் காலநிலை மற்றும் வானிலை ஆகியவையும் சூரியனை சார்ந்தே உள்ளன. 


சூரியனை பற்றி சிந்திக்கும் மனநிலை நமக்கு இல்லை . இயந்திர வாழ்க்கை நம்மை இயற்கையிடமிருந்து பிரித்துக் கொண்டே இருக்கிறது . பொருள் அழிவதைப் பற்றியும் , பொருள் சேர்ப்பதைப் பற்றியும் கவலைப் படவே நமக்கு நேரம் போதவில்லை . நம கண் முன்னாலே இயற்கை அழிவதை நாம் கவனத்தில் கொள்வதில்லை . இயற்கை இல்லாமல் ஒரு நிமிட வாழ்க்கை கூட சாத்தியமில்லை . சூரியனிடமிருந்து  நாம் கற்றுக்கொள்ள நிறைய விசயங்கள் இருக்கின்றன . 

பூமியின்  எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும்  நம அன்றாட வாழ்க்கை, சூரிய உதயத்திலிருந்து தான் தொடங்குகிறது . சூரிய மறைவின் போது ஏறக்குறைய நம்முடைய அன்றாட வாழ்க்கை முடிவுக்கு வருகிறது . ஆனால் , நாம் பணத்திற்காக சூரியன் மறைந்த பிறகும் உழைக்கிறோம் . ஒரு நிமிடம் நம முன்னோர்களை நினைத்து பாருங்கள் . மின் விளக்கோ மற்ற எந்தவிதமான மின்சார சாதனங்களோ கண்டுபிடிக்கப்படாத சூழ்நிலையில் அவர்களின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் . சூரிய ஒளியில் தங்கள் இயக்கத்தை தொடங்கி சூரியன் மறைவின் போது தங்கள் இயக்கத்தை நிறுத்தி , ஓய்வெடுத்து  அமைதியான வாழ்க்கை வாழ்ந்தார்கள் . அதனால் தான் ஆரோக்கியமான வாழ்க்கையை அவர்களால் வாழ முடிந்தது .

சிந்தித்து பார்க்கும் போது நம வாழ்க்கையை மின் சாதனங்கள் பிடுங்கி கொண்டு விட்டது போல் தோன்றுகிறது  . இன்று ,மின் சாதனங்கள் இல்லாத  நம் அன்றாட வாழ்க்கையை கற்பனை கூட செய்ய முடியாது . எல்லோரும் மின்சாரத்தின்  அடிமைகளாக மாறி விட்டோம் . மின்சாதனங்கள் தான் நம் வாழ்கையை இயக்குவது போல நினைத்துக் கொண்டு அவைகளுடனே வாழ்கிறோம் தினமும் . மின் சாதனங்களின் மூலம் எல்லா நேரங்களிலும் நிலையான மகிழ்ச்சியையோ , அமைதியையோ  நம்மால் எப்போதுமே பெற முடியாது . காரணம் , அவை இயங்க எப்போதும் மின்சாரம் தேவை . 

சரி சூரியனுக்கு வருவோம் . சூரியஒளி பட்டுக் கொண்டே இருக்கும் தண்ணீர் தான் நம் உடலுக்கு நல்லது . நம் உடலுக்கு மட்டுமல்ல எல்லா உயிரினங்களுக்கும் அது தான் நல்லது . விலங்குகள் சூரியஒளி படும் தண்ணீரை  மட்டுமே அருந்துகின்றன . அதனால் தான் நம் முன்னோர்கள் , கேணி ,குளம் , ஏரி போன்றவற்றை சூரியஒளி படும் வகையிலேயே அமைத்திருந்தனர் . அவர்களுக்கு வயிறு  சம்பந்தப்பட்ட எந்தப் பிரச்சனையும் ஏற்ப்படவில்லை . அவர்களால் நீண்ட நாள் ஆரோக்கியமுடன் வாழ முடிந்தது . இன்று , பல்வேறு  விதமான சுத்திகரிப்பு முறைகளைப் பயன்படுத்தி சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகிறோம் . ஆனாலும் , நம் ஆரோக்கியம் என்பது மருத்துவமனையை நம்பியே உள்ளது . சூரியன் மிகவும் விசித்திரமானவர் . பூமியின் வெப்ப மண்டல பகுதியைச் சேர்ந்தவர்கள் , அதிக வெப்பத்தால் பாதிக்கப் படுகின்றனர் . குளிர் மண்டலப் பகுதிகளை சேர்ந்தவர்கள் , வெப்பம் இல்லாததால்  பாதிக்கப் படுகின்றனர் . மழை பெய்யவும் சூரியன் தான் காரணம் , சூரிய வெப்பத்தால் தான் நீர் ஆவியாகி  மேகத்துடன் இணைந்து மழையாக பெய்கிறது .நிலவுக்கு ஒளி சூரியனிடமிருந்து தான் கிடைக்கிறது . எவ்வளவு சுவாரசியம் பாருங்கள் . சூரியன் ஒரே இடத்தில்  இருக்கிறது . பூமி , சூரியனைச் சுற்றுகிறது . பூமியை நிலவு சுற்றுகிறது . சூரிய ஒளிக்கு எதிராக நிலவின் ஒளி குளுமையாக இருக்கிறது . இப்படி எல்லாத்துக்கும்  சூரியன் காரணமாக இருப்பதால் தான் கிரேக்கர்கள் சூரியனை கடவுளாக வழிபட்டார்களோ என்னவோ ! 

ஆங்கில கவிஞர் ஷெல்லி, " சூரியஒளி படும்  அனைத்து பொருள்களும் அழகாக இருக்கின்றன " என்று குறிப்பிட்டார் . நம்மில் எத்தனை பேருக்கு சூரிய உதயத்தையும் , சூரிய மறைவையும் பார்க்கும் பழக்கம் இருக்கிறது . ஏறக்குறைய எல்லோரும் மறந்து விட்டோம் . அதை கன்னியாகுமரியில் மட்டுமே பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டோம் . கிராமங்களில் இருப்பவர்களுக்கு சூரியனைப் பார்ப்பது இப்பொழுதும் சாத்தியம் . ஆனால் , நகரங்களில் அன்னாந்து பார்த்தால் விதவிதமான கட்டிடங்கள்  மட்டுமே தெரிகின்றன . நகரத்தில் வாழ்ந்த போதிலும் சூரிய உதயத்தையும் , மறைவையும் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றவர்கள் , கொடுத்து வைத்தவர்கள் . 

வானத்தை பார்த்துக்கொண்டே இருப்பதே ஒரு வகை தியானம் போன்றது தான் . சூரியன் ,சூரிய வெளிச்சம் , விதவிதமான வண்ணங்கள் , ஓடும் மேகங்கள் , மேகங்கள் நமக்கு உணர்த்தும் பல்வேறு வடிவங்கள் , நிலவு , நட்சத்திரங்கள் என்று வானம் நமக்கு அளிக்கும் விசயங்கள் ஏராளம் . இன்றைய  குழந்தைகள் நட்சத்திரங்களை பார்க்கும் வாய்ப்பை வெகுவாக இழந்து விட்டனர் . எப்பொழுதெல்லாம் மனம் அமைதி இல்லாமல் இருக்கிறதோ அப்பொழுது வானத்தைப் பாருங்கள் அமைதி கிடைக்கும் . இயற்கையின் ஒரு வடிவமான வானம் மட்டுமே நமக்கு இவ்வளவு தரும் போது இயற்கையோடு இணைந்து நம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் எவ்வளவு நன்றாக  இருக்கும் !  

எங்கு இருந்தாலும் வானத்தையும் ,  சூரியனையும் ( காலை 8 மணிக்கு முன் , மாலை 5 .45 கு பின் )   பார்க்க மறக்காதீர்கள் !       

சூரியன், உலக சக்திகள் மற்றும் உலக இயக்கத்தின் மையம் !

கடவுள் இல்லை என்று யாரும் சொல்ல வேண்டாம் . நம் கண்ணால் பார்க்கக் கூடிய ஒரு கடவுள்  "சூரியன் "..! 


மேலும் படிக்க :
 


........................................... 

1 comments:

Shakthiprabha (Prabha Sridhar) said...

நன்றிங்க...வலைச்சரத்தில் தங்கள் பதிவை அறிமுகப்படுத்தியிருந்தனர். அருமையான விளக்கமும் விளக்கப் படமும். ...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms