Friday, November 25, 2011

நாமெல்லாம் குற்றவாளிகளே !

நாம் வாழும் இந்தப்  பூமி, கோடிக்கணக்கான உயிரினங்களுக்குச் சொந்தமானது . ஆனால் , விலங்கினங்களில் ஒன்றான மனிதன் ,தனக்கு மட்டுமே சொந்தமானது என்று கருதுகிறான் . இந்த ஒரு விலங்குக்கூட்டம்
( மனிதர்கள் ) வாழ்வதற்கு மற்ற அனைத்து  உயிரினங்களையும்  பாதிக்கிறது .பாதிப்பு எதுவும் வந்தாலும் ,தான் மட்டுமே பாதிக்கப்படுவதாக கருதுகிறான் ,மற்ற உயிரினங்களைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை .பூமியில்  வாழும் சகமனிதர்கள் பற்றியும் கவலையில்லை .இதுல , தான் மட்டுமே ஆறறிவு உள்ள மிருகம் என்ற பெருமை வேறு .

 மற்ற உயிரினங்களைச் சாராமல் எந்த உயிராலும் பூமியில் வாழ முடியாது .மனிதன் ,மற்ற உயிரினங்களை விட உயர்ந்தவன் அல்ல .அவன் இயற்கையின் ஒரு பகுதி மட்டுமே .மற்ற உயிரினங்கள் இருக்கும் வரை தான் மனிதனாலும் வாழ முடியும் . செடி ,கொடிகள் ,மரங்கள் சூரிய சக்தியிலிருந்து உணவு தயாரிக்கிறது . இந்தத் தாவரங்களைச் சார்ந்து சிறிய பூச்சிகள் முதல் விலங்கினங்கள் வரை வாழ்கின்றன . தாவரங்களோ ,விலங்குகளோ இறந்து விட்டால் ,இவற்றை மண்ணோடு மண்ணாக மட்கச் செய்யும் பணியில் கோடிக்கணக்கான நுண்ணுயிரிகள் (மட்க்குண்ணிகள்)  ஈடு பட்டுள்ளன . மட்கிப் போனவை , தாவரங்களின் வளர்ச்சிக்கு பெரிதும் பயன்படுகின்றன . இயற்கையில் கழிவு என்பதே இல்லை .

மனிதனுக்கு வியாதி வந்தால் ,மருத்துவரிடம் போகிறான் . மரம் ,செடி ,கொடிகள்,பூச்சிகள் ,விலங்குகள் ,நுண்ணுயிரிகள் , இவற்றுக்கு வியாதி வந்தால் யாரிடம் போகும் . உடலில் குறைபாடுள்ள மனிதர்களுக்காக நாம் கவலைப்படுகிறோம் . ஆனால் ,மற்ற உயிரினங்களில் உள்ள குறைப்பாடுகளைக்  கவனிக்க யார் இருக்கிறார்கள் .இயற்கை மட்டுமே இருக்கிறது .மற்ற உயிரினங்கள் அனைத்தும் இயற்கையை முழுமையாக நம்புகின்றன . தங்களின் குறைப்பாடுகள் பற்றியோ ,இழப்புகள் பற்றியோ அவற்றுக்கு எப்போதுமே கவலைகள் இல்லை .தங்களை இயற்கையின் ஒரு பகுதியாகவே உணர்கின்றன .மனிதன் மட்டும் இயற்கையை நம்புவதில்லை .

எந்த உயிரினமும் ,தங்கள் தேவைக்கு மீறிய எதையும்  இயற்கையிடம் இருந்து பெறுவதில்லை . தாவரங்கள், தங்கள் தேவைக்கு மேல் உணவு தயாரிப்பதில்லை .அவை ,என்றோ பிறக்கப்போகும் தனது சந்ததிக்கு இப்போதே  எதையும் சேமிப்பதில்லை . விலங்குகள் (ஊனுண்ணிகள் ), தங்களின் பசிக்கு மட்டுமே வேட்டையாடுகின்றன . நாளைக்கு என்ன நடக்குமோ என்று பயந்து பயந்து பொருளைச் சேர்க்கும் பழக்கம் அவற்றுக்கு இல்லை . இன்றைய உணவைக் கொடுத்த இயற்கை ,நாளைய உணவையும் கொடுக்கும் என்ற நம்பிக்கை மனிதனைத் தவிர எல்லா உயிரினங்களுக்கும் இருக்கிறது .

மனிதன் எப்போதும் இயற்கைக்கு விரோதமாக செயல்படுவதில் ஆர்வம் கொண்டவனாகவே இருக்கிறான் . இத்தகைய போக்கினால் அவன் சந்திக்கும் துன்பங்கள் ஏராளாம் . ஆனாலும் அவனது குணம் மாறவே இல்லை .ஆறாம் அறிவு என்னும் தலைக்கனம் அவனை ஆட்டி வைக்கிறது . இயற்கையின் உதவியில்லாமல் எல்லாவற்றையும் சாதித்து விடலாம் என்று நம்புகிறான் .இது எப்போதும் சாத்தியமில்லை . மனிதனால் இயற்கையை மீறி எதையும் செய்ய முடியாது .வெற்றி பெறுவது போல காட்டிக்கொண்டு தினமும் இயற்கையிடம் தோற்றுக் கொண்டே தான் இருக்கிறான் .

பூச்சிக்கொல்லிகள் ,உரம் ,பிளாஸ்டிக் ,மின் கழிவுகள் ,தொழிற்ச்சாலைக்   கழிவுகள்... இவையெல்லாம் சேர்ந்து நிலம் ,நீர்,காற்று என்று அனைத்தையும் பாதிக்கின்றன . நிலம் ,நீர் ,காற்று என்று எது மாசுபட்டாலும் தனக்கு ஏற்ப்படக்கூடிய பாதிப்புகள் பற்றி மட்டுமே சிந்திக்கிறான் . மாசுப்பாடுகளால் பாதிக்கப்படும் நுண்ணுயிரிகள், பூச்சிகள் ,மரம் ,செடி ,கொடிகள்,பறவைகள் , விலங்குகள் பற்றி எந்தக் கவலையும் இல்லை .மனிதனும் ஒரு சாதாரண உயிரினம் தான் .இதை உணர்ந்தாலே நம்முடைய பாதிப் பிரச்சனைகள் தீர்ந்துவிடும் . இயற்கைக்கு  எதிராக செயல்படும் வரை ,இயற்கையை நம்பாத வரை நாமெல்லாம்  குற்றவாளிகளே !

மற்ற உயிரினங்கள் ,எதை வேண்டுமானாலும் இழப்பதற்கும் ,பெறுவதற்கும்
தயாராகவே இருக்கின்றன . இது இருந்தால் தான் வாழ முடியும் என்ற நிபந்தனை எதுவும் இல்லை . மூன்று வேளையும் சாப்பிட வேண்டிய கட்டாயமும் இல்லை . பசிக்கும் போது மட்டுமே உணவு தேடும் . விலங்குகள் ,குறிப்பிட்ட வயது வரை மட்டுமே தங்கள் குட்டிகளுக்கு ஆதரவு தருகின்றன .அதற்குமேல் அவற்றுக்கு ஆதரவும் தருவதில்லை ,அவற்றிடம் எதையும்   எதிர்பார்ப்பதுமில்லை . எல்லாவற்றையும் இயற்கைக்கு கொடுத்து விட்டு ,தனக்குத் தேவையானதை மட்டுமே இயற்கையிடமிருந்து பெற்றுக் கொள்கின்றன .

மனிதனால் வளர்க்கப்படும் விலங்குகள் ,மனிதனை விட உயர்ந்ததாகவே மதிக்கப்படுகின்றன . சில இடங்களில் பசுவின் சிறுநீர் புனிதமானதாக கருதப்படுகிறது .பசுவின் சாணம் எருவாகவும் ,எருவாட்டியாகவும் பயன்படுகிறது . மனிதக் கழிவு ???  பூமியில் இதுவரை எத்தனையோ உயிரினங்கள் தோன்றி , வாழ்ந்து அழிந்துவிட்டன .எதிர்காலத்தில் இதில் மனிதனும் இடம் பிடிக்கலாம் .

மனிதர்களே இல்லாத பூமி கம்பீரமாக சுழலக் கூடும் !மேலும் படிக்க :

நீரின்றி அமையாது உலகு ! 

வேடந்தாங்கலில் ஒரு நாள் !  
............................................................ 

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான பதிவு. நல்வாழ்த்துக்கள். நன்றி.

Tamil Stories Blogspot said...

thanks for the info

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms