'இயற்கையோடு இயைந்த உற்பத்தி முறைதான் இயற்கை ஆதார வளங்களை சிதைக்காது’ என்று சொன்னவர் தான் ஜே.சி.குமரப்பா. தொழிற்புரட்சி என்ற பெயரில் இயற்கையை அழித்துவிட்டு தான் இப்போதெல்லாம் உற்பத்தியே தொடங்குகிறது. குறைந்த தொழிலாளர்களைக் கொண்டு அதிக உற்பத்தி என்பது செல்வம் ஒரே இடத்தில் குவியவே வழிவகுக்கும் என்று அப்போதே சொல்லியிருக்கிறார். அது தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
காந்திய பொருளாதாரம் என்பது கீழிருந்து மேல்நோக்கிய வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. தற்போதைய வளர்ச்சி என்று சொல்லப்படுவது இதற்கு அப்படியே எதிரானதாக இருக்கிறது. எல்லோரையும் உள்ளடக்கிய சூழலைப் பாதிக்காத மிகச்சிறந்த பொருளாதார மாதிரியை ஜே.சி.குமரப்பா உருவாக்கினார். ஆனால் இந்த மாதிரியை இதுவரை பதவியில் இருந்த எந்த அரசும் கண்டுகொள்ளவில்லை. முன் எப்போதையும் விட ஜே.சி.குமரப்பாவின் பொருளாதார மாதிரிக்கான தேவை தற்போது தான் அதிகமாக இருக்கிறது. இனிவரும் அரசுகளாவது ஜே.சி.குமரப்பாவின் பொருளாதார மாதிரியை செயல்படுத்த முன்வர வேண்டும். தேர்தல் அறிக்கையில் இந்த விசயம் இடம்பெறும் வகையில் அரசியல் கட்சிகளுக்கு நாம் நெருக்கடி கொடுக்க வேண்டும்.
ஜே.சி.குமரப்பா மாதிரி ஏன் தேவை என்பதற்கு ஒரு சின்ன உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் தற்போதைய பிளாஸ்டிக் தடையால் நிறைய குறு முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இயற்கையோடு இயைந்த தொழிலில் அவர்கள் முதலீடு செய்திருந்தால் இந்த பாதிப்பு உருவாகியிருக்காது. இது முதலீட்டாளர்களின் தவறு என்பதை விட அரசின் தவறு என்பது தான் பொருத்தமாக இருக்கும். சிறியதே அழகு என்பது தான் குமரப்பாவின் பொருளாதார மாதிரி.
விவசாயத்துறையிலும் குமரப்பாவின் சித்தாந்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இன்று விவசாயம் இந்த அளவிற்கு மோசமான நிலையை அடைந்திருக்காது. தன்னிறைவு வேளாண்மைக்கு தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து குமரப்பா கூறி வந்தார். ஆனால் தொடர்ந்து அதிக தண்ணீர் தேவைப்படும் பணப்பயிர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததன் விளைவைத் தான் தற்போது அனுபவித்து வருகிறோம். இப்போதும் விவசாயத்தை மீட்பதற்கு குமரப்பாவின் விவசாய சிந்தனைகளே தேவை. தன்னிறைவு வேளாண்மை மட்டுமே விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்றும்.
" அறம் சாராத பொருளாதார அமைப்பு மனசாட்சிக்கு விரோதமானது. மனிதன் வெறும் பணம் திரட்டும் யந்திரமல்ல. அறமற்ற பொருளாதாரம் உயிரற்ற உடல்தான் " என்றார்,ஜே.சி.குமரப்பா. அறமற்ற பொருளாதாரம் தான் நம் காலத்தின் மிகப்பெரிய எதிரி.
" முன்னேற்றம் என்பது இயற்கையில் பொதிந்துள்ள அறிவையும், உண்மையையும் தேடி உணர்ந்து, மனிதருடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இயற்கையை உபயோகிப்பது " என்பதுதான் ஜே.சி.குமரப்பாவின் நிலைப்பாடு.
ஜே.சி.குமரப்பாவின் பொருளாதார, விவசாய சிந்தனைகளே இன்றைக்கு தேவை.
ஆம். ஜே.சி.குமரப்பா ஒரு மறக்கப்பட்ட தீர்க்கதரிசி !
மேலும் படிக்க :
நாகரீகக் கோமாளி என்.எஸ்.கிருஷ்ணன்!
மலேசியா வாசுதேவன் - உன்னத குரலோன் !


3:41:00 PM
மானிடன்



0 comments:
Post a Comment