மக்களையும் மக்களுக்கான அரசியலையும் காட்சிகளின் வழியே மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் , இயக்குநர் , நாகராஜ் மஞ்சுளே. ஒவ்வொரு காட்சியிலும் சமூகத்தின் முகம் அப்பட்டமாக காட்டப்படுகிறது. முதல் பாதியில் காட்டப்படும் காதல் காட்சிகள் அவ்வளவு அழகியலுடன் படம்பிடிக்கப்பட்டுள்ளன. அதிலும் ஸ்லோமோஷன் காட்சிகள் தனித்து நிற்கின்றன. காதல் காட்சிகளை எவ்வளவு முறை திரைகளில் பார்த்தாலும் நமக்கு திகட்டுவதேயில்லை. இத்திரைப்படத்தின் காதல் காட்சிகளும் அப்படி தான். பார்த்துக் கொண்டே இருக்கலாம். கதாநாயகி ரிங்கு , இந்தத் திரைப்படத்தில் பெரிய பங்களிப்பை செய்திருக்கிறார். அவரது உடல்மொழியும் அற்புதம். பாடல்களும் ரசிக்கும்படியாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
காதலுக்கு எதிரான சாதிய வெறி அழுத்தமாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. காதலுக்கு எதிர்ப்பு தெரிவியுங்கள் ;வீட்டை விட்டு துரத்துங்கள். பரவாயில்லை. ஆனால் சாதி மாறி காதலித்ததால் எவ்வளவு காலம் ஆனாலும் அவர்களை கொன்றால் தான் வெறி அடங்கும் என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இதுபோன்ற திரைப்படங்கள் சாதியத்திற்கு எதிராக எதிர்மறையில் இருந்தே குரல் கொடுக்கிறது. அப்படியில்லாமல் சாதிய படிநிலைகளைத் தாண்டி காதல் செய்பவர்களை இரு குடும்பமும் ஏற்றுக்கொள்ளும் வகையில் நேர்மறையில் காட்சிப்படுத்தப்படும் படங்களுக்கும் தேவையிருக்கிறது.
காதல் என்பது இயல்பான ஒன்று , அந்தக் காதலுக்கு சாதி தடையில்லை என்பதை பொருத்தமான காட்சிகளின் மூலம் வெளிப்படுத்தலாம். ஒருவருக்கு இரண்டு பெண்பிள்ளைகள் என்று வைத்துக் கொள்வோம். அதில் ஒரு பெண்ணுக்கு பெற்றோர் பார்த்து சொந்த சாதிக்குள் மணமுடித்து வைக்கின்றனர். ஆனால் அந்தப் பெண் கொடுமைப்படுத்தப்படுவது போலவும் , மற்றொரு பெண் காதலித்து சாதி மாறி திருமணம் செய்து கொண்டு நன்றாக இருப்பது போலவும் காட்சிப்படுத்தினால் ஒரு நேர்மறையான மனமாற்றம் நிகழுமே.
சாதிவெறியை முன்னிலைப்படுத்தும் திரைப்படங்கள் இப்போதும் எடுக்கப்படும் சூழலில் சாதிவெறிக்கு எதிரான படங்களின் தேவையும் அதிகரித்திருக்கிறது. அந்த வகையில் இந்த சாய்ராட் முக்கியத்துவம் பெறுகிறது. சகமனிதனை மனிதனாக மதிக்க கற்றுத் தருவது தான் கலையின் தேவை. கலைஞர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள் இதை மனதில் கொள்ள வேண்டும்.
கலை மக்களுக்கானது. அழகியல் மட்டும் கலை அல்ல . அழகியலுடன் அரசியலும் பேசும் கலை தான் முழுமையானது. சாய்ராட் ஒரு முழுமையான கலைப்படைப்பு.
காதல் என்பது சலிக்காத ஒன்று. இதுவரை எத்தனையோ விதமான காதலைத் திரையில் பார்த்திருப்போம். மீண்டும் திரையில் காதலைப் பார்க்கும் போதும் நாம் சலிப்படைவதேயில்லை. அதிலும் இத்திரைப்படத்தில் காதல் காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கும் விதம் அற்புதம். கதாநாயகி ரிங்குவின் முகபாவங்களும் , வசனங்கள் உச்சரிக்கும் விதமும் அவ்வளவு அழகு. ரிங்குவின் நடிப்பு இத்திரைப்படத்திற்கு பெரிய பலம்.
ஒவ்வொரு காட்சியிலும் சமூக ஏற்றத்தாழ்வுகள் அப்பட்டமாக படம்பிடிக்கப்பட்டுள்ளன.காதல் வீட்டில் தெரிந்த பிறகு கடைசிவரை ஒருவிதமான பதைபதைப்பு இருந்து கொண்டே இருக்கிறது. படத்தின் இறுதிக்காட்சியில் அந்தக் குழந்தையை பக்கத்து வீட்டுக்கார பெண் அழைத்துச் செல்லும் போதே படத்தின் முடிவு தெரிந்து விடுகிறது. வீட்டின் வாசலில் போடப்பட்ட முழுமைடையாத கோலத்தைப் போல அவர்களின் வாழ்வும் முழுமை பெறவில்லை.
நமது இந்திய தேசத்தில் படிப்பறிவு சதவீதம் அதிகரித்து கொண்டிருக்கும் விதத்தில் சாதியப்பாகுபாடுகள் குறையவில்லை. பல்வேறுவிதமான அதிகாரங்கள் மக்களைக் கட்டுப்படுத்தும் தேசத்தில் போராட்டங்களின் மூலமும் , கலையின் மூலமுமே நமது எதிப்பை வெளிப்படுத்த முடியும். நாகராஜ் மஞ்சுளே , சாதியத்தின் மீதான கோபத்தை , எதிப்பை வலுவாக திரைமொழியில் பதிவு செய்திருக்கிறார்.
சாதியம் ஒழியட்டும். சகமனிதனை மனிதனாக மதிப்பதை நோக்கி நம் சமூகம் நகர்வதற்கான ஒரு படியை இத்திரைப்படம் எடுத்து வைத்திருக்கிறது.
மேலும் படிக்க :


11:22:00 PM
மானிடன்



0 comments:
Post a Comment