தமிழ்நாட்டில் இப்படியான பகுத்தறிவு கருத்துகளை முன்வைத்து திரைப்படங்கள் எடுப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். ஆனால் எடுக்கமாட்டார்கள். கடந்த ஓராண்டாக பார்ப்பன ஆதிக்கத்தை கேள்விக்கு உட்படுத்தும் வகையில் வடக்கிலிருக்கும் அரசியல்வாதிகள் தொடர்ந்து பேசி வருகிறார்கள். இந்தச் சூழலில் இப்படியானதொரு திரைப்படம் வெளிவந்திருக்கிறது.
19ம் நூற்றாண்டில் பம்பாய் நகரத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி இந்த 'மகராஜ்' திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. பகுத்தறிவு மற்றும் சீர்திருத்த கருத்துகளை யார் சொன்னாலும் நாம் வரவேற்க வேண்டும். குஜராத்தில் பிறந்த கர்சன்தாஸ் எனும் பிராமணர், பகுத்தறிவு கருத்துகளை அங்கே அந்த காலகட்டத்தில் முன் வைத்திருக்கிறார். அதனால் இன்னல்களையும் சந்தித்திருக்கிறார். எல்லோரையும் சமமாக நடத்தும் எவரும் ( பிராமணராக இருந்தாலும் ) பார்ப்பனர் அல்ல. பிறப்பால், தான் மற்றவர்களை விட உயர்ந்தவர் என நினைக்கும் ஒவ்வொருவரும் ( பிராமணராக இல்லாவிட்டாலும் )பார்ப்பனர் தான். பிறப்பால் அனைவரும் சமமே.
பக்தியின் பெயரால் நடக்கும் கொடுமைகள் இன்றும் குறைந்தபாடில்லை. அப்படி பக்தியை துணையாக வைத்துக் கொண்டு மக்களை முட்டாளாக்கி குளிர்காய்ந்த மகராஜ் எனும் ஒரு மடத்தைச் சேர்ந்த சாமியாரின் அயோக்கியத்தனத்தை தோலுரித்து காட்டும் திரைப்படம் தான் இது. கடவுளுக்கும் பக்தருக்கும் இடையில் சாமியாரோ ,வேறு யாருமோ தேவையில்லை. கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கடவுளை மட்டுமே வழிபட வேண்டும். கடவுள் பேரைச் சொல்லி ஏமாற்றும் கூட்டத்துடன் எப்போதும் சேரக்கூடாது.
தற்போதைய காலம் என்பது ஜக்கி, நித்தியானந்தா, ரவிசங்கர், பாபா ராம்தேவ், பால் தினகரன் போன்ற கார்ப்பரேட் சாமியார்களின் காலமாக இருக்கிறது. இவர்கள் எவரையும் நம்பக்கூடாது. இவர்கள் இல்லாமல் இந்தியா முழுவதும் விதவிதமான ஆதீனங்கள், அமைப்புகள் இருக்கின்றன. இவர்களும் ஏமாற்றுக்காரர்கள் தான். எந்த மதமாக இருந்தாலும் எந்தக் கடவுளாக இருந்தாலும் கடவுளுக்கும் மக்களுக்கும் இடையில் யாரும் தேவையில்லை. கடவுளே தேவையில்லை என்பது தனியாக விவாதிக்க வேண்டியது. கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கடவுளை மட்டுமே நம்புங்கள்.
ஒரே நேர்கோட்டில் கதையை சொல்லி முடித்திருக்கிறார்கள். " ஆளும் வர்க்கத்தின் பலம் அரசு இயந்திரங்களான நிர்வாகம், சட்டம், அதிகாரம் முதலிய அரசு இயந்திரங்களை இயக்குவதில் மட்டும் அல்ல பண்பாட்டுத் தளத்திலும் பத்திரமாக இருக்கிறது. எனவே ஆளும் வர்க்கத்தை எதிர்த்துப் போராட வேண்டியவர்கள் பண்பாட்டுத் தளத்திலும் போராட வேண்டியிருக்கிறது" - என்ற கிராம்சியின் கூற்றுக்கிணங்க இந்திய மக்களின் பண்பாட்டுத் தளத்திலும் இறங்கி போராடினால் மட்டுமே இந்த பாசிச, மக்கள் விரோத,மதவாத பாஜக அரசை அதிகாரத்திலிருந்து தூக்கியெறிய முடியும். இந்து என்பது வேறு இந்துத்துவம் என்பது வேறு என்பதை இந்திய மக்கள் உணரும் போது பாஜக அதிகாரத்தில் இருக்காது.
விதவிதமான வடிவங்களில் மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் அதிகளவில் பிற்போக்குத் தனங்கள் பரப்பப்படும் பாலிவுட் சினிமாவிலிருந்து இப்படியானதொரு திரைப்படம் வந்திருப்பது ஆச்சரியம் தான். இயக்குநர் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். பிற்போக்குத் தனங்கள் ஒழிந்து போகட்டும். எல்லா மதங்களிலும் சாமியார்களின் ஆதிக்கம் அழியட்டும். சமத்துவம் பரவட்டும்.
மேலும் படிக்க :
FANDRY - மனதிற்கு நெருக்கமான படைப்பு !
0 comments:
Post a Comment