ஏறக்குறைய அனைத்து குழந்தைகளின் கைகளிலும் மொபைல் போன்கள் வந்துவிட்டாலும் சைக்கிள் மீதான பிரியம் இன்னமும் அப்படியேதான் இருக்கிறது. முன்பைப் போல இடவசதி இல்லாவிட்டாலும் கூட அடம் பிடித்தாவது சைக்கிள் வாங்கி விடுகிறார்கள், குழந்தைகள். இப்படியான சூழலில் எழுத்தாளர் ராசி அழகப்பன் எழுதிய 'சைக்கிள்' என்ற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் திரைப்படம் தான் 'குரங்கு பெடல் '.
குழந்தைகளையும் சைக்கிளையும் பிரிக்க முடியாது. சைக்கிளுக்கும் குழந்தைகளுக்கும் உள்ள பிணைப்பை 80 களின் காலப் பின்னணியில் அழகியலுடன் சொல்லியிருக்கிறது இத்திரைப்படம். குரங்கு பெடல் என்பதையும், வாடகை சைக்கிள் என்ற நடைமுறையும் இப்போதைய தலைமுறைக்குத் தெரியாது. இத்திரைப்படத்தைக் காணும் போது அவர்களும் தெரிந்து கொள்வார்கள்.
இத்திரைப்படத்தில் சைக்கிளுடன் அப்பாவிற்கு நேர்ந்த அனுபவமும், மகனிற்கு கிடைத்த அனுபவமும் வெவ்வேறானவை. பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுடன் காண வேண்டிய திரைப்படம். அப்படி குழந்தைகளுடன் சேர்ந்து காணும் போது சைக்கிளுடனான தங்களது கடந்த கால நினைவுகளை அசை போட முடியும்.
கதைக்குத் தேவையே இல்லாத , குழந்தைகளும் பார்ப்பார்கள் என்ற குறைந்தபட்ச பொறுப்புணர்வு கூட இல்லாமல் அதீத வன்முறைக் காட்சிகள் இன்றைய திரைப்படங்களில் திணிக்கப்படும் சூழலில், அமைதியான சூழலை அழகாக படம்பிடித்து அனைவரும் ரசித்து பார்க்கும்படி செய்திருக்கிறது இந்த 'குரங்கு பெடல்'.
சைக்கிள் மீதான காதல் நமக்குத் தீர்வதேயில்லை. நாம் வெவ்வேறு வாகனங்களில் பயணித்தாலும் இப்போதும் சைக்கள் வாங்க வேண்டும், சைக்கிள் ஓட்ட வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே தான் இருக்கும். எங்கு இருந்தாலும், என்ன பணி செய்தாலும் தினமும் சைக்கிள் ஓட்டுவதை தவற விடாதவர்கள் இப்போதும் இருக்கிறார்கள். சைக்கிள் ஓட்டுவது உடலுக்கும் இயற்கைக்கும் நல்லது.
இந்தத் திரைப்படத்தைக் காணும் போது இன்னும் நிறைய விசயங்களைச் சேர்த்திருக்கலாமோ என்று கூட தோன்றும். சிறுகதையை திரையனுபவமாக மாற்றியிருப்பதால் அதற்குள்ளாக என்ன செய்ய முடியுமோ அதைச் செய்திருக்கிறார்கள். இலக்கிய படைப்புகள் திரைப்படங்களாவதும், இரண்டு மூன்று பேர் சேர்ந்து திரைக்கதை எழுதுவதும் மிகவும் ஆரோக்கியமான விசயம்.
இன்றைய திரைப்படங்களில் குழந்தைகள் குழந்தைகளாக காட்டப்படுவதில்லை அல்லது குழந்தைகளே இல்லை. இந்தச் சூழலில் குழந்தைகளுக்காக, குழந்தைகளுக்கான திரைப்படத்தை உருவாக்கியிருக்கும் இயக்குநர் கமலக்கண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள். கமலக்கண்ணன் இயக்கிய 'மதுபானக்கடை' திரைப்படத்தை இதுவரை பார்க்காதவர்கள் இப்போதாதவது பார்த்து விடுங்கள்.உங்களுக்கு நல்லதொரு திரையனுபவம் கிடைப்பது உறுதி. இவரது 'வட்டம்' திரைப்படத்தை இன்னும் பார்க்கவில்லை. அடுத்து அதையும் காண வேண்டும்.
நல்ல சிறுகதை, நல்ல ஒளிப்பதிவு, நல்ல இசை, நல்ல இயக்கம் படக்குழுவினருக்கு வாழ்த்துகள் 🎉
மேலும் படிக்க :
அயலி - அசலான தமிழ்மண்ணின் படைப்பு !
0 comments:
Post a Comment