Monday, July 25, 2011

வாழ்க்கை ஒரு போராட்டம் !

போராட்டத்தைச் சந்திக்காத எந்த உயிரும் பூமியில் வாழ முடியாது . நாம் பிறந்தது முதல் இறப்பது வரை போராட்டம் இருந்துகொண்டே தான் இருக்கிறது . ஏன் நாம் பிறப்பதே ஒரு போராட்டம் தானே . லட்சக்கணக்கான விந்தணுக்களுடன் சண்டையிட்டு , போராடி தான் நமக்கான இருப்பை , பிறப்பை உறுதி செய்துள்ளோம் .போராட்டத்தில் பிறந்து , போராட்டத்தில் வளர்ந்து , போராட்டத்தில் மடிவது தான் நம் வாழ்க்கை . நாம் இன்று போராட்டமே  இல்லாத வாழ்க்கையை மட்டுமே வாழ நினைக்கிறோம் . இது எப்போதும் சாத்தியமில்லை . பிறப்பதற்கே  லட்சக்கணக்கான அணுக்களை வென்ற நம்மால் வாழ்வதற்கான  போராட்டத்தில் வெல்ல முடியாதா என்ன ?!

வீதியில் நின்று போராடுவதும் , நாட்டுக்காக போராடுவதும் மட்டும் போராட்டம்   அல்ல . உயிர் வாழ்வதற்கான போராட்டம் தான் உண்மையான போராட்டம் . இது எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும் .கடந்த வாரம் Discovery யில் ஒரு நிகழ்வை ஒளிபரப்பினார்கள் . அலாஸ்காவில் வாழும் பனிக்கரடிகளையும் , சாலமன் மீன்களைப் பற்றிய ஒளிபரப்பு அது . பனி காலம் முடிந்த நிலையில் தங்களுக்கு வேண்டிய ( பிடித்தமான ) உணவைப்பெற நதிக்கரைக்கு வருகின்றன கரடிகள் . சாலமன் மீன்கள் , கரடிகள் இருக்கும் இந்த நதிப்பகுதியைக் கடந்தால் தான் தங்களது இனப்பெருக்கத்தை நடத்த முடியும் . இல்லையென்றால் கரடிகளுக்கு உணவாக வேண்டியது தான் . 

ஒரே நதிக்கரை இரண்டு இனங்களின் வாழ்க்கைப் போராட்டம் . கரடிகள் வருகின்றன மீன்களைப் பிடிக்கின்றன , பனிக்காலத்திற்கு வேண்டிய கொழுப்பைச் சேமிக்கின்றன . குட்டிகளுடன் வரும் பெண் கரடிகள் , குட்டிகளை ஒளித்து வைத்துவிட்டு ஆண் கரடிகள் இல்லாத இடத்தில் சாலமன் மீன்களை தனக்காகவும் , தன் குட்டிகளுக்காகவும் வேட்டையாடுகின்றன . ஆண் கரடி பார்த்து விட்டால் உறவுக்கு கட்டாயப் படுத்தும் . இடையுறாக இருக்கும் குட்டிகளையும் கொன்று விடும் . அதனால் பெண் கரடிகள், மிகவும் எச்சரிக்கையாக  இருக்க வேண்டிய காலகட்டம் இது . கரடிகளிடமிருந்து தப்பித்த சாலமன் மீன்கள் உகந்த இடத்திற்குச் சென்று  தங்கள் இனப்பெருக்கதைச் செய்கின்றன . பெண் மீன், தன் வால் பகுதியால் பள்ளம் தோண்டி  முட்டையிடுகிறது . ஆண் மீன், முட்டைகளின்  மீது  விந்துவைப் பீய்ச்சி அடிக்கிறது . உரிமையில்லாத மற்றொரு ஆண் மீனும் முட்டைகளின்  மீது விந்துவைப் பீய்ச்சி அடிக்கிறது . கொஞ்ச காலம் அடை காக்கும் பெண் மீன் பிறகு இறந்து விடுகிறது . பிறகு முட்டைகளிலிருந்து குஞ்சுகள் பிறந்து தங்கள் போராட்டத்தைத் தொடருகின்றன .

வாழ்க்கையில் நேர்மையாக இருக்க முயல்வதும் ஒரு போராட்டம் தான் . நேர்மையாக இல்லாமல் இருப்பதும் ஒரு போராட்டம் தான் . ஏனென்றால் எல்லா நேரங்களிலும் நேர்மையாக இருப்பதற்கான சூழலும் , எல்லா நேரங்களிலும் நேர்மையாக இல்லாமல் இருப்பதற்க்கான சூழலும் யாருக்கும் அமைவதில்லை .தங்கள் கொள்கைகளை நிலைநிறுத்திக்கொள்ள போராட வேண்டிய கட்டாயம் இருக்கிறது . அதற்கான பலன்கள் நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும் அவர்கள் மட்டுமே அடைவர் . உண்மைக்காக , நீதிக்காக , நேர்மைக்காக , உரிமைக்காக,மண்ணுக்காக  என்று நாம் போராட வேண்டியுள்ளது .

சமீபத்தில் இங்கிலாந்தில் 11 வயதில் கடத்தப்பட்டு ஒருவனிடம்  16 ஆண்டுகளாக செக்ஸ் அடிமையாக இருந்து மீட்கப்பட்ட  பெண்ணிடம் , "எப்படி இவ்வளவு கொடுமைகளையும் சகித்து கொண்டீர்கள் ? " என்று கேட்டதற்கு " எப்படியாவது உயிர் பிழைக்க வேண்டும் என்ற நினைப்பு தான் காரணம் . அவ்வப்போது நான் இருக்கும் கொடுமையான சூழ்நிலையை மறந்து விடுவேன் " என்று கூறினார் . இத்தனைக்கும் சரியான உணவு கிடையாது . 14 வயதிலேயே தனது பிரசவத்தை  தானே பார்த்துக்கொண்ட கொடுமை வேறு . தன் குழந்தை தனக்கு மிகவும் ஆறுதலாக இருந்ததாகவும் குறிப்பிட்டார் . மறதி தான் ,நம் வாழ்கையின் பெரும் துயர்களை மறக்கச் செய்கிறது .எத்தனையோ போராட்டங்கள் இருந்தாலும் உயிர் வாழ்வதற்கான போராட்டம் ,மற்ற அனைத்து போராட்டங்களையும் வென்று விடுகிறது .

நல்லதை நினைத்தே போராடுவோம் !முகப்பு 


...............................................................................................

Monday, July 11, 2011

இன்று தெற்கு சூடான் , நாளை தமிழ் ஈழம் ...!

ஜூலை 9 ஆம் நாள் தெற்கு சூடான் தனி நாடாக உதயமாகியுள்ளது . 50 ஆண்டு காலப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது . யாரும் யாரையும் அதிக காலம் அடக்கியாள முடியாது . எங்கெல்லாம் உரிமைகள் மறுக்கப்படுகிறதோ அங்கெல்லாம் போராட்டம் வெடிக்கும் என்பது வரலாறு . இதற்கு தெற்கு சூடானும் விதிவிலக்கல்ல,  தமிழ் ஈழமும் விதிவிலக்கல்ல . சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க தெற்கு சூடான் கொடுத்த விலை "20 இலட்சம் மனித உயிர்களும் 50 வருட நிம்மதியும் ". தங்கம் , வைரம் போன்ற கனிம வளங்களும் , விவசாயம் செய்வதற்கு மிகச்சிறந்த சூழ்நிலையும் தெற்கு சூடானுக்கு கிடைத்துள்ளது . புதிய ஆட்சியாளர்கள் கையில் உள்ளது தெற்கு சூடானின் எதிர்காலம். 

மனிதனால் மனிதன் கொல்லப்படுவதை வேடிக்கை பார்க்கும் அனைவரும் துரோகிகள் தான் . இந்த துரோகிகள் பட்டியலில் அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளும் வரும் . இலங்கை ஒரு எண்ணெய் வளம் மிக்க நாடாக இருந்திருந்தால் அமெரிக்காவின் நிலையே வேறுவிதமாக இருந்திருக்கும் . நம் இனம் அழிக்கப்படுவதை வேடிக்கை பார்த்த தமிழர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நாமெல்லாம் இனத்துரோகிகள் . நமக்கெல்லாம் மன்னிப்பே கிடையாது .

ஈழத்தின் இன்றைய நிலை மிகவும் கொடியது . போரை விட போருக்குப் பிறகான வாழ்க்கை தான் மிகக் கொடியது என்பது வரலாறு .ஈழப் போரில் இறந்த மாவீரர்களை விட அதிக துன்பங்களை இன்று எஞ்சியிருக்கும் நம் இனம் சந்திக்கிறது . மண்,உடைமை , உரிமை ,உறவுகள் , உறுப்புகள் , மானம் , சுதந்திரம்,என்று அனைத்தையும் இழந்து இனி இழப்பதற்க்கு எதுவுமில்லை என்ற நிலையில் தான் இருக்கிறது நம் இனம் . தினமும் துன்பங்களும் துயரங்களும் மட்டுமே மிஞ்சி இருக்கிறது . சொந்த மண்ணில்  எந்தவித உரிமைகளும் இல்லாமல் வாழ்வது மிகவும் கொடுமை . இந்நிலை நிச்சயம் மாறும் .

இந்தச்சூழ்நிலையில் ஒரே ஆறுதல் தற்போதைய தமிழக அரசின் செயல்பாடுகள் . ராஜபக்சேவை கூண்டில் ஏற்றவும் , இலங்கை மீது பொருளாதாரத் தடை கொண்டுவரவும் கொண்டுவரப்பட்ட தீர்மானம் சிறந்த ஒன்று . ஈழத்தில் மட்டுமல்லாமல் தமிழகத்தில் வாழ்ந்து வரும் நம் இனம் இதுவரை சிந்திய கண்ணீரும் துடைக்கப்பட இருப்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி .தமிழகத்தில் உள்ள  ஈழத் தமிழர்கள் அனைவருக்கும் இனி அனைத்து  உரிமைகளும் கிடைக்கும் . மேற்கத்திய நாடுகள் நம் நலனில் அக்கறை கொண்டிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது . அனைத்து நாடுகளின் கவனத்தையும்
நாம் பெற வேண்டும் .

மனிதனால் மனிதன் கொல்லப்படுவதை தடுக்கவே  முடியாதா ? மனிதன் என்று அடுத்தவன் உடைமைக்காக சண்டை போட ஆரம்பித்தானோ அன்றே மனிதனால் மனிதன் இறப்பது நிகழ்ந்து இருக்க வேண்டும் . காடுகளில் வாழ்ந்த போது அடுத்த மனிதன் வேட்டையாடிய உணவைப் பறிக்கவும் , அடுத்தவனின் பெண் துணையைப் அடையவும் , பிறகு மன்னராட்சி காலங்களில் மற்ற நாடுகளின் செல்வங்களைக் கொள்ளையடிக்கவும் , நாட்டை விரிவு படுத்தவும் , தன் பலத்தை நிருப்பிக்கவும் என்று மனிதனால் மனிதன் கொல்லப்படுவது தொடர்ந்து கொண்டே வந்தது . இன்றைய இயந்திர வாழ்க்கையில் நம் மனமும் கல்லாகிப் போனது . சக மனிதன் கொல்லப்படுவது இன்று மிகவும் சாதாரணம் . நம்மை ஆளும் உலக அரசுகளும் , ஊடகங்களும் மனிதனால் மனிதன் கொல்லப்படுவதை தடுக்கவே இல்லை . மாறாக இன்றும் போர் என்ற பெயரில் நிறைய மனிதர்கள் கொல்லப்படுகிறார்கள் . தீவிரவாதிகள் தங்களின் பலத்தைக் காட்ட பயன்படுத்துவது மனித உயிர்களைத்தான் . மனித உயிர்கள் மட்டுமல்ல மற்ற உயிரினங்களும் கொல்லப்படுவது நம் வாழும் பூமிக்கு நல்லதல்ல . நம் பூமி எல்லோருக்கும் சொந்தம் !

மனித இனம் என்பதிலிருந்து பிரிந்த இனங்களின் எண்ணிக்கை மிக அதிகம் . வாழும் சூழ்நிலை  , உணவு, கலாச்சாரம் , பண்பாடு ,மதம் , முக்கியமாக மொழி இவற்றை மையமாக வைத்து பல்வேறு மனித இனங்கள் இன்று எஞ்சியிருக்கின்றன . பல இனங்கள் அழிந்து விட்டன . நாம் எல்லோரும் ஆப்பிரிக்காவில்  இருந்து பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் என்பதை மறந்து விடக்கூடாது . இன்று எஞ்சியிருக்கும்
இனங்களில் ஒன்று தமிழினம் ( முன்பு , திராவிட இனம் ). இந்த இனம் தமிழ் மொழி பேசும் ஆனால் தமிழினம் கொல்லப்படுவதை வேடிக்கை பார்க்கும் . அழிக்க முடியாத களங்கம்  இது . ஆனாலும்  "வலுத்தது நிலைக்கும்" என்பது போல இன்றும் நிலைத்து நிற்கிறது . இனியும் நிற்கும் . 

சாம்பலில் இருந்து பீனிக்ஸ் பறவை உயிர்த்து எழுமாமே அது போல நம் தமிழ் ஈழமும் உயிர்த்து எழும் . எத்தனை முறை அழித்தாலும் மீண்டும் மீண்டும் எழும் . காலத்தை நான் மிகவும் நேசிக்கிறேன் . காரணம் ,
காலம்தான் நம் வாழ்க்கையின் ஆற்ற முடியாத அத்தனை துயரங்களையும் , ரணங்களையும் ஆற்றுகிறது .நமது துயரையும் நிச்சயம் ஆற்றும் . யாரும் யாரையும் நீண்ட காலம் அடக்கியாள முடியாது .

தமிழக சட்டமன்றத்தில் தமிழ் ஈழம் மலர தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் .இலங்கையில் ஈழம் அமைய  வாக்கெடுப்பு நடத்த தமிழக அரசு குரல் கொடுக்க வேண்டும் . ஈழம் அமைவதில் மிகவும் கொஞ்சப் பேருக்கு விருப்பம் இல்லை . அவர்கள் பல்வேறு விதமான காரணம் சொல்கிறார்கள் . அதை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை . கூட்டுக்குடும்பம் நல்லது தான் அதனால் அனைவரும் நலமாக இருக்கும்வரை . நலன்கள் பாதிக்கப்படும் போது தனிக்குடும்பமே சிறந்தது . இது குடும்பத்துக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் பொருந்தும் .

இலங்கையில் அழிக்கப்பட்டது தமிழினம் மட்டும் அல்ல , மனித இனமும் தான் என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்த வேண்டும் . இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின்
ஆதரவையும் பெற வேண்டும் . ஒட்டுமொத்த உலகமும் தமிழ் ஈழம் அமைய குரல் கொடுக்கும் வகையில் நம் செயல்பாடுகள் அமைய வேண்டும் .வாக்கெடுப்பு நடத்த வேண்டும் . தமிழ் ஈழம் மலர வேண்டும் .

ஈழத்தில் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் நாள் தொலைவில் இல்லை !


மேலும் படிக்க:

 முகப்பு 

 காங்கிரஸை அழிப்போம் !
...............................

Monday, July 4, 2011

அற்புதங்களும் ஆச்சரியங்களும் !

எண்ணிலடங்காத அற்புதங்களும் ஆச்சரியங்களும் நிறைந்தது தான் நம் வாழ்க்கை . ஒவ்வொரு நொடியும் அற்புதம் தான் . நம் வாழ்க்கை, மீண்டும் சந்திக்க முடியாத நிமிடங்களில் அடங்கியிருக்கிறது . ஆனால் , இதை எல்லா நேரங்களிலும் உணர முடியாத நிலையில் தான் நம் பயணம் இருக்கிறது . நம்மைச்சுற்றி தினமும் அற்புதங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. சமீபத்திய ஆச்சரியம் பத்மநாபசாமி கோவில் .

அனந்த பத்மநாபசாமி கோவில் , கேரளாவில் புகழ்பெற்ற விஷ்ணு கோவில் .இது , விஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் ஒன்று . இதுவரை இந்தக் கோவிலைப்பற்றி தெரியாதவர்கள் கூட இப்போது தெரிந்து கொண்டிருப்பர் . புதையலைத் தேடி அலையும் பல கௌ-பாய் படங்கள் பார்த்திருப்போம் . அதையெல்லாம் மிஞ்சும் வகையில் இருக்கிறது இந்தக்கோவிலின் பாதாளப் புதையல் . அள்ள அள்ள தங்கம் . ஓரே வாரத்தில் உலகின் பணக்கார கடவுளான திருப்பதி பாலாஜியின் சொத்து மதிப்பை மிஞ்சி விட்டார் இந்த பத்மநாபசாமி.
அந்தப் பாதாள அறையில் இறுதி 8 இடங்களுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது  . இன்னும் எவ்வளவு அதிசயங்கள் வெளியே வருமோ ? தெரியாது . 
இன்றும் தஞ்சை பெரிய கோவிலின் அதிசயங்கள்  தொடர்ந்து கொண்டிருக்கின்றன . நம் முன்னோர்களின் திறமையைக் கண்டு ஒவ்வொரு நாளும் பெருமை கொள்கிறோம் . எந்தவிதமான தொழில்நுட்ப வசதியும் இல்லாத  காலகட்டத்தில் அவர்களால் இவ்வளவையும் செய்ய முடிந்திருக்கிறது . வாழ்க்கையைக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர் . அடுத்த வாரமே இன்னொரு கோவில் முதலிடத்தைப் பிடித்தாலும் பிடிக்கலாம் .

வரலாறு மிகவும் சுவாரசியமானது . நாம் இன்று பயன்படுத்தும் அநேக பொருட்கள்  கடந்த 100 வருடங்களுக்குள் கண்டுபிடிக்கப் பட்டவையாக இருக்கும் . அடுத்த 100 வருடங்கள் கழித்து இவை கண்டிப்பாக இருக்காது . ஆனால் , ஒரு சில பொருட்கள் காலம் கடந்தும் தனக்கான இடத்தைப் பெற்றுக்கொள்ளும் . அந்தப் பொருட்களின் நீட்சி தான் வரலாறாக மாறுகிறதோ என்னவோ ! . மண்ணோடு மண்ணாக கலந்துவிட்ட பொருட்களுக்கு வரலாறு இல்லை . 

நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும்  கொண்டாடப்பட வேண்டியது . ஆனால் , நமக்கு அந்த கொண்டாட்ட மனநிலை தொடர்ந்து வாய்ப்பதில்லை . நம் நாகரீக வாழ்க்கையில் தொடர்ந்து கொண்டாட்ட மனநிலையில் இருப்பது மிகவும் கடினம் . நாகரீகம் தோன்றாத காலத்தில் இந்த கொண்டாட்ட மனநிலை அதிகமாக இருந்து இருக்கும் . நாகரீகம் தோன்றியவுடன் பிரிவினைகள் அதிகமாகி விட்டன . வலுத்தவன் மட்டுமே எல்லா நலன்களையும் பெற்றான் . மன்னர் ஆட்சிக்காலத்தில் மன்னர்களுக்கு மட்டுமே அதிகபட்ச சுதந்திரம் இருந்தது . ஜனநாயக ஆட்சியில் மக்களாகிய நமக்குத்தான் அதிக உரிமை இருக்க வேண்டும் . ஆனால் , உண்மையில் நிலைமை  அப்படியில்லை . இன்றும் ஏறக்குறைய மன்னராட்சி போலவே இருக்கிறது நம் ஜனநாயகம் . ஒருவேளை இது மன்னராட்சியின் நீட்சியாக இருக்குமோ !

நம் வாழ்க்கை ஆச்சரியங்கள் நிறைந்தது . நம் சற்றும் எதிர்பாராத சூழ்நிலையில்  நமக்குப்பிடித்த விசயம் நிகழும் போது நம் மனம் துள்ளிக் குதிக்கிறது . உதாரணமாக, அசாதாரண சூழ்நிலையில்  நமக்கு மிகவும் பிடித்த , நீண்ட நாட்களாக கேட்க வேண்டும் என்று எண்ணிய ஒரு பாடல் ஒலிக்கும் போது நம்மை அறியாமலேயே நாம் கொண்டாட்ட மனநிலைக்கு இடம் பெயர்ந்து  விடுகிறோம் . வாழ்க்கை ஒரு முறை தான் . அதனால் , முடிந்த அளவுக்கு  வாழ்க்கையைக் கொண்டாடுவோம்.

அடுத்த நொடி இந்த உலகம் தரப்போகின்ற  அற்புதங்களும் ஆச்சரியங்களும் ஏராளம் !

மேலும் படிக்க  :..........................................

ஜூலை 2011 - 823 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்பது பொய் !

இந்த ஜூலை ( 2011 ) மாதத்தில் 5 வெள்ளி , 5 சனி , 5 ஞாயிறு கிழமைகள் வருகின்றன .இது , 823  ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் வரும் என்பது சுத்தப் பொய் . ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு  பிறகும் இவ்வாறு வருகிறது . இதே மாதிரியான ஜூலை 2005 ஆம் ஆண்டு வந்தது , அடுத்து  ஜூலை 2016 ஆம் ஆண்டு இதே போன்ற ஜூலை வரவுள்ளது . பொதுவாக எந்த மாதத்தில் 31 நாட்கள் வருகின்றனவோ அந்த மாதத்தில் அடுத்தடுத்த 3 நாட்கள் 5 முறை  வரும் . இதில் எந்த அதிசயமும் இல்லை .

ஜூலை 2005 :ஜூலை 2016 :


நாட்காட்டி 2011 :


உதாரணமாக 2011 நாட்காட்டியைப் பாருங்கள் . எந்த மாதத்தில் எல்லாம் 31 நாட்கள் இருக்கின்றதோ அந்த மாதத்தில் அடுத்தடுத்த 3 நாட்கள் 5 முறை வருவதைக் காணமுடியும் .

மேலும் படிக்க :

முகப்பு 

................................................

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms