Saturday, January 22, 2011

கண்ணீர் துளி - மனிதத்தின் சுவாசம்

கண்ணீர் சிந்தாத மனிதன் என்று பூமியில் யாரும் இல்லை . நம்  வாழ்க்கைப்  பயணத்தின் தொடக்கம் முதல் முடிவு வரை  பல்வேறு சூழ்நிலைகளில் நம் கண்களிலிருந்து கண்ணீர் துளிகள் சிந்துகின்றன . சிறு பிள்ளைகள் தாங்கள் கேட்டது கிடைப்பதற்காக அழுகின்றன. காரியம் சாதித்து கொள்வதற்காக ஒரு சில பெண்கள் கண்ணீரைப் பயன்படுதுகின்றனர் . அப்பா அடிக்கும் போது பிள்ளைகள் அழுகின்றன .தாங்க முடியாத இழப்புகள் நம்மை கதறி அழச்செய்கின்றன . இழப்புகள் என்பவை மனிதனாக இருக்கலாம் , மனித உறவாகவும் இருக்கலாம் .கண்ணில் விழும் சிறு தூசியும் நம்மை கலங்க வைக்கிறது . நாம் நினைத்ததை அடைய முடியவில்லை என்ற ஆற்றாம்மை நம்மை துடிக்க வைக்கிறது . குருஞ்சிப் பூ  மலர்வதை போல எப்போதாவது
கண்ணீர் நமது அதிகபட்ச மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது . அது ஏன் ? ஆஸ்கார் விருது வாங்கும் போது மட்டும் ஏறக்குறைய எல்லா நடிகைகளும் கண்களிலும் கண்ணீர் வருகிறது . உழைப்பின் பயன் !

 நீண்ட நாள் பிரிந்திருந்த இரு உறவுகள் சந்திக்கும் போது வார்த்தைகளுக்குப் பதில் கண்ணீர் தான் முதலில் வருகிறது . நம் இனம் நம் கண் முன்னே அழிந்த போதும் நம்மால் கதறி அழ மட்டுமே முடிந்தது தாங்க முடியாத வேதனை . இந்திய அரசியல்வாதிகள் கட்சியை வளர்க்கவும் , குடும்பத்தை வளர்க்கவும் மட்டுமே போராடுகின்றனர் .ராகுல் காந்தியும் கட்சியை வளர்க்க மட்டுமே முயற்சிக்கிறார் . ஜாதி மத பேதங்களுக்கு மத்தியில் கட்சி சார்ந்த பேதமும் நம்மிடம் அதிகம் உள்ளது . பேதங்கள் களையப்பட வேண்டும் . மக்கள் நலன் சார்ந்த அரசியல் உருவாக கடுமையாக உழைக்க வேண்டிய காலகட்டம் இது . நல்லது யார் செய்தாலும் பாராட்டுவோம் , தப்பு யார் செய்தாலும் தட்டி கேட்ப்போம் . எங்களின் ஏமாளித்தனத்தைப் பார்த்து சிரிக்கும் உங்கள் பேனர்கள் வேண்டாம் . எங்கள் அழுகையை நிறுத்துங்கள் இல்லாவிடில் காலம் உங்களை அழவைக்கும் .

 உடல் அல்லது மனம் சார்ந்த தாங்கமுடியாத வலி தான் நம்மை அதிகம் கண்ணீர் சிந்த வைக்கிறது . எத்தனையோ வகையில் நாம் கண்ணீர் சிந்தினாலும் அதை இரண்டு வகையில் பிரிக்கலாம் . ஒன்று நமக்காக அழுவது , இன்னொன்று மற்றவர்களுக்காக அழுவது . கண்ணீர் துளிகள் நம் துன்பத்தைக் கரைக்கின்றன . காலம், நமது எல்லாவிதமான துன்பங்களையும் துயரங்களையும்  துடைத்து விடுகிறது . தற்காலிக ஆறுதல் கண்ணீர் மட்டுமே , நமது கண்ணீரும், நமக்காக மற்றவர்கள் சிந்தும் கண்ணீரும் . எதற்கும் கலங்காத மனம் வேண்டும் . அன்பிற்காக நாம் கலங்கியே தீர வேண்டும் .

 ஊடகங்களின் புண்ணியத்தால்  இன்று பரவலாக ஒரு வியாதி பரவி வருகிறது . யாருக்காகவும் எதற்காகவும் கலங்கக் கூடாது என்ற மாயை உருவாகி உள்ளது . மற்றவர்கள் தப்பாக நினைப்பார்கள் என்ற காரணத்திற்காக அழுவதற்கு மிகவும் யோசிக்கிறோம்  . அழுவது உணர்ச்சி சார்ந்த விசயம் . எந்த உணர்ச்சியையும் அதிகமாக கட்டுப்படுத்தும் போது பின்விளைவுகள் பெரிதாக இருக்கும் . முடிந்த வரை அழுகையை கட்டுப்படுத்தாதீர்கள் . அழுவது நல்லது நம் கண்களுக்கும் , நம் மனதிற்கும் . கண்களில் உள்ள அழுக்குகள் வெளியேற கண்ணீர் தேவை . நம் மனதின் அழுக்குகளும் , உடலின் வலிகளும் வெளியேறவும் கண்ணீர் தேவை .

கடந்த முப்பது நாட்களுக்குள் இரு முறை அழுதேன் . இரு முறையும் படம் பார்க்கும் போது அழுதேன் . படம் பார்க்கும் போது அழுவது கோழைத்தனம் என்ற மனப்பாங்கு நம்மை மிகவும் அழுத்திவைத்திருக்கிறது . அழ வேண்டும் என்று தோன்றினால் அழ வேண்டியது தானே , அது எப்போது என்றால் என்ன ?.கடந்த மாதம் நானும் என் நண்பனும் அம்பத்தூர் ராக்கி திரையரங்கத்தில் " நந்தலாலா " படம் பார்த்தோம்  . படத்தின் முடிவு காட்சியில் இருவரும் அழுது விட்டோம் . ஆனால் படம் பார்க்கும் போது அவன் அழுதது தெரியாது. வெளியில் வந்ததும்  "படத்திற்கு கூட்டி வந்து  ரொம்ப நாளைக்கு அப்புறம் என்னை அழ வச்சுட்ட "  என்று சொன்னான் . நண்பனின் பெற்றோரிடம்  நாங்கள் படம் பார்க்கும் அழுததை அவன் சொன்னான் . "இத்தன வயசுக்கப்புறம் படம் பார்த்து அழுதேன்னு சொல்றீங்க என்ன காதல் படமா" என்று நண்பனின் அப்பா கேட்டார் . "இல்லை அன்பையும் பாசத்தையும் பற்றிய படம் " என்றோம். "அப்ப அழ வேண்டியது  தான்" என்று அப்பா சொன்னார் . "அழ வைக்கிற மாதிரி எல்லாம் தமிழில் படம் வருதா. முன்னாடியே தெரிஞ்சிருந்தா நானும் படத்திற்கு வந்திருப்பேன் "என்று அம்மா சொன்னார் . அன்பு நம்மை அழ வைத்து விடுகிறது .

 இரண்டாவது முறை நான் அழுதது " அங்காடி தெரு " படம் பார்த்த போது . படம் வெளிவந்த போது பார்க்க முடியவில்லை . திருட்டு DVD , இணையத்தில் பார்த்து நான் திருடனாகவும் மாறவில்லை . ஜனவரி 1 அன்று கலைஞர் தொலைக்காட்சியில் தான் பார்த்தேன் . படம் பாதி முடிந்த போது எனக்குள் எந்த பாதிப்பும் இல்லை . யாரும் யோசிக்காத கதைக்களம் என்று மட்டும் நினைதேன் . ஆனால் , படம் முடிந்த பிறகு தாங்க முடியாத வலி ஏற்பட்டது . கண்களிலிருந்து கண்ணீர் துளிகள் சிந்தின . சாதாரணமான  மனிதர்களின்  வாழ்க்கையை படம் உணர்த்தியது .

 கடந்த வாரம் தொலைக்காட்சியில் ஒரு விபத்து பற்றிய செய்தி  ஒளிபரப்பாகிக்  கொண்டிருந்தது . அறுபது வயதுடைய எங்கள் பெரியம்மா சொன்னார் " முன்பெல்லாம் துயர சம்பவங்களைப் பார்க்கும் போது அழுகை வரும் , இப்போ மறத்துப்போச்சு" . இது தான் இன்றைய நிலை . அளவுக்கு அதிகமான துன்பங்களையும் , துயரங்களையும் ஊடகங்களில் பார்த்து பார்த்து நம் மனம் மறத்துப் போய்க்கொண்டே இருக்கிறது . யாருக்கு எது நடந்தால் என்ன ? எனக்கு என் வாழ்க்கை மட்டுமே முக்கியம் என்ற மனப்பாங்கு அதிகரித்து விட்டது . இது காட்டு விலங்குகளுக்குப் பொருந்தும் . சமூக விலங்கான நமக்கு நம் நலனைப் போல மற்றவர் நலனும் முக்கியம் . அதனால் தான் நாம் மற்றவர்களுக்கு எதைச் செய்கிறோமோ அது தான் நமக்கு திரும்பி வருகிறது . நாம் மற்றவர்களுக்குச் செய்வது நல்லதாகவே இருக்கட்டும் . நமக்கும் நல்லதே திரும்பி வரட்டும் .

கண்ணீர் துளிகளால்  மனிதம் உயிருடன் இருக்கட்டும் !

மனசு மறத்துப்போகாமல் இருக்க கண்ணீர் சிந்துங்கள் !

கண்ணீர் நல்லது !

மேலும் படிக்க :



..............................................

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms