பதில் எதுவும் சொல்ல வேண்டாம்
பதிலுக்கு என்னைப் பார்க்கவும்
வேண்டாம்
உன்னைத் தீண்டும் போது
பதிலுக்குப் பதில்
என்னைத் தொட்டுவிடத் தேவையில்லை
பார்வையில் பட்டோ
படாமலோ
அருகிருந்தால் போதும்
என்னை நனைக்கும்
நீரின் ஈரம்
எதற்கும் பதிலாக இல்லை
- தேவதச்சன்
நீங்கள்
கவிதை வாசிக்கும் பழக்கம் உள்ளவரா ? இல்லையென்றாலும் பரவாயில்லை , ஒரு
முறை தேவதச்சனின் கவிதைகளைப் படித்துப் பாருங்கள் . உங்கள் தினசரி
வாழ்க்கையை சுவை மிக்கதாக மாற்றும் வல்லமை அவரது கவிதைகளுக்கு உண்டு .ஒரு
நாள் முழுவதும் வாசிப்பதின் மூலம் கிடைக்கும் அனுபவத்தை அவரது ஒரே ஒரு
கவிதை கொடுத்துவிடும் .
இதுவரை கவிதைகளின் பக்கம் திரும்பியதில்லை .அவ்வப்போது வாசிப்பின்
இடையில் தட்டுப்படும் கவிதைகளை மட்டுமே படிப்பது வழக்கம் .அப்படி வாசித்த
கவிதைகளின் வழியே அறிமுகமானவர் தான் " தேவதச்சன் ( Devathachchan )" . ஏனோ
இவரது கவிதைகளை மட்டும் மிகவும் பிடித்துப் போனது .அவரது கவிதை தொகுப்புகளை
வாங்கி நாளுக்கு ஒரு கவிதை என சுவைத்து வாசிக்கிறேன் . ஆம் , ஒரு நாளுக்கு
ஒரு கவிதை போதும் ,அந்தக் கவிதையின் இனிமை அந்த முழு நாளுக்கும் போதுமானது
.
எஸ் .ராமகிருஷ்ணன் மொழியில் ( வாழ்க்கையை கரும்பைச் சுவைப்பது போல்
சுவைத்து வாழ வேண்டும் ) சொல்வதென்றால் தேவதச்சன் கவிதைகளை கரும்பைப் போல
சுவைத்து வாசிக்க வேண்டும் .
வாழ்வின் எளிய கணங்களை அழகாக ,இனிமையாக
,சுவையாக தனது எளிய கவிதைகளின் வழியே வெளிப்படுத்துகிறார் . " ஜென்
கவிதைகள் போல் அர்த்தம் பொதிந்ததாய் தேவதச்சனின் கவிதைகள் இருக்கின்றன "
என்று எஸ் .ரா ., குறிப்பிடுகிறார் . தினசரி வாழ்வில் நம் கண்ணில் படும் ,
நாம் பயன்படுத்தும் , நாம் கற்பனை செய்யும் பொருள்களின் வாயிலாக தான் சொல்ல
விரும்புவதை சொல்லும் பேரற்புதத்தை தேவதச்சனால் மட்டுமே செய்ய முடியும் .
தேவதச்சனின் கவிதைகள் எல்லைகள் அற்றதாய் இருக்கின்றன . எந்த
வரையறைக்குள்ளும் அவரது கவிதைகள் அடங்குவதில்லை . பிரபஞ்சத்தைப் போலவே
அவரது கவிதைகளின் பரப்பை நம்மால் கண்டறிய முடியாது . பூமியில் இருக்கும்
அனைத்து பொருட்களும் அவரது கவிதைகளின் பகுதிப் பொருட்களாக இருக்கின்றன
.உயிருள்ளவை - உயிரற்றவை ,முக்கியமானவை - முக்கியமற்றவை என்ற பேதமெல்லாம்
இல்லை . உதாரணமாக மைனா ,சூரியன்,நீல பலூன்,இலை,மரம்,பாலிதீன் பை ,கடிகாரம்
,காக்கி நிற டப்பா , முரட்டு லாரி , மீன்,கடற்கன்னிகள், லோயா தீவு ,மலை
,ஜெல்லி மீன் , சைக்கிள் பூட்டு ,பிரபஞ்சத்தின் வெளிபிரகாரம் ,சர்க்கஸ்
கோமாளிகள் ,புகையிலைப் பொட்டலம் , ஓணான் ,இரும்புக் கிராதி ,நீல நிற
இலந்தைப் பழங்கள் , சிறுவண்டுகள் , ஆழத் திமிங்கலம் ,வாலைப் பெண்
,நகப்பூச்சு , கண்ணாடி டம்ளர் , இளம்பெண் துறவி , தேநீர்த் தோழி ,மலர்கள்
,ரகசியக்கல் , அலைபேசி ,டினோசர் ,நகவெட்டி ,புத்தக குவியல்கள் , நிலைவாசல்
,பழச்சாறு , அமரர் ஊர்தி இவையெல்லாம் " ஹேம்ஸ் என்னும் காற்று " என்னும்
தொகுப்பில் இடம் பெற்ற சில வார்த்தைகள் .
தேவதச்சனின் கவிதைகளில் சில சாதாரணமாய் வாசிக்கும் போது ஒன்றும்
புரியாதது போல் தெரியும் . முதல் வரிக்கும் ,அடுத்த வரிக்கும் தொடர்பு
இல்லாதது போல் தெரியும் . ஒரு அழகான செடி இருக்கிறது .செடி என்றாலே அழகு
தான் ;அழகான செடி வேறு உள்ளதா என்ன ? (வண்ணதாசன் மொழி ) அதன் இலை ஒரு வித
அழகு ,கிளை ஒரு வித அழகு ,மொட்டு ஒரு வித அழகு .
எவ்வளவு அழகான செடி என்றாலும் தேன் என்பது மலரில் மட்டுமே இருக்கும் .ஆனால்
தேனை செடியின் எல்லா பகுதிகளிலும் எதிர்பார்ப்பது நம் சமூகத்தின்
மிகப்பெரிய முட்டாள்தனம் . நமக்கு எல்லா விசயத்திலும் ஒரு தொடக்கம் ஒரு
நிறைவுடன் கூடிய முடிவு தேவைப்படுகிறது . தேவதச்சன் கவிதைகளில் இதை
எதிர்பார்க்க முடியாது . நிறைய நல்ல திரைப்படங்கள் தோல்வி அடைவதற்கு இந்த
மனநிலை தான் காரணம் .
கிளிங் என்று
கீழே விழுந்து
உடைகிறது கண்ணாடி டம்ளர்
அழகிய
இளம்பெண் துறவியைப் போல
இருந்த அது
அல்லும் சில்லுமாய்
உடைந்தாலும்
ஒவ்வொரு துண்டாய்
சுத்தம் பண்ணுகையில்
விரல் கீறி
குருதி கொப்புளிக்கும் என்றாலும்
நீர்மையின் அந்தரங்க ரகசியத்தை
போட்டு உடைத்து விட்டது என்றாலும்
இனிமையாகவே இருக்கிறது
ளிங் ஒலி.
ஏனோ நினைவிற்கு வருகிறாள்
என் தேநீர்த்தோழி
- தேவதச்சன்
எஸ் .ஆறுமுகம் எனும் இயற்பெயர் கொண்ட தேவதச்சன் எழுபதுகளில் ( 1970 )
இருந்து எழுதுகிறார் . மிகக் குறைவாகவே எழுதியுள்ளார் .ஆனாலும் அனைத்தும்
அழுத்தமான பதிவுகள் . விளம்பர வெளிச்சத்திலிருந்து ஒதுங்கியே இருக்கிறார் .
அழுத்தமான ,ஆழமான மொழிநடை அவருடையிது . தத்துவத்தில் முனைவர் பட்டம்
பெற்றுள்ளார் . 2011 ஆம் ஆண்டுக்கான விளக்கு விருது அவருக்குக் கிடைத்தது .
அவரது நூல்கள் :
கடைசி டினோசார் :
யாருமற்ற நிழல் :
ஹேம்ஸ் என்னும் காற்று :
இரண்டு சூரியன் :
அனைத்து நூல்களையும் உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது .
அவரது ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு விதமான உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன .
மொத்தக் கவிதைகளிலும் ஒரு கவிதை கூட மற்றொரு கவிதை போல இல்லை .
இலைகள் மலர்கள்
ஒருசில மணிநேரங்களில் வித்தியாசமாகி விடுகின்றன
நீயும் நானும்
சில வருடங்களில்
அதற்குள்
ஒருவருக்கொருவர் அடையாளம் தெரியாமல்
போய்விடுகிறோம்
அடையாளம் தெரியாமல் போகும்
அடையாளத்தில் ஒருவருக்கொருவர்
முகமன் கூறிக்கொள்கிறோம்
நமது புன்னகைகளும் கைகுலுக்கல்களும்
குருடர்கள் இல்லைபோலும் , எப்படியோ
அவற்றிற்கு
எப்போதும்
அடையாளம் தெரிந்தேவிடுகிறது
- தேவதச்சன்
தமிழ் கூறும் நல்லுலகின் ( சுஜாதா மொழி ) ஈடு இணையற்ற கவிஞனாக , கலைஞனாக , அழுத்தமான படைப்பாளியாகவே தேவதச்சன் தெரிகிறார் .
உரிய மீனுக்காக ஒற்றைக்காலில் நிற்கும் கொக்கைப் போல , தேவதச்சனின் புதிய கவிதைகளுக்காக காத்திருக்கிறேன் !
நன்றி - தேவதச்சன் ,உயிர்மை .
மேலும் படிக்க :
மலேசியா வாசுதேவன் - உன்னத குரலோன் !
M.R.ராதாவின் சிறந்த பேச்சு !
...................................................................................................................................................................